அத்தியாயம் நான்கு
‘வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்’
அலெக்ஸா எக்கோ தனது பணியை செய்து கொண்டிருக்க, அதனோடு சேர்ந்து பாடிக் கொண்டே அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி. ஏழரை மணிக்கெல்லாம் கிளம்பியாக வேண்டும். அலுவலகம் ஒன்பது மணிக்குத்தான் என்றாலும், சைட் இன்ஸ்பெக்ஷனை முடித்து விட்டுத்தான் அலுவலகம் செல்ல வேண்டி இருக்கும். சசாங்கன் பாங்காக்கிலிருந்து இரவு தான் ஊர் திரும்பியிருந்தான். முன்பெல்லாம் காலை இன்ஸ்பெக்ஷனை அவன் பார்த்துக் கொள்வான்.
அவன் வர முடியாவிட்டால் மட்டும் தான் இவள்!
ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் சைட் இன்ஸ்பெக்ஷனை அவள் தான் கவனித்துக் கொண்டிருக்கிறாள். இரவு அவளை அழைத்து கூறும் போதே சற்று சுணக்கமாகத்தான் இருந்தது. அலுவலகத்துக்கு எப்படியும் வந்து விடுகிறான். ஆனால் மற்ற வேலைகள் அனைத்தும் அவள் தலையில்!
அவனிடம் மறுக்கவும் முடியவில்லை. ஆனால் எங்கோ தவறு நேருவதாகப் பட்டது அவளுக்கு. நீலாங்கரை பிராஜக்ட்டில் ஒரு ப்ளாட்டோடு இன்னொன்றும் ஸ்வேதா வசம் போன போது அவளது மனம் திக்கென்று இருந்தது. அந்த பிராஜக்ட்டின் லாபத்தில் பாதி அவை!
தெரிந்துதான் கொடுத்தானா… தெரியாமல் செய்கிறானா?
ஏன் என்று தயங்கியபடி கேட்டபோது, “ஸ்வேதா பேர்ல இருந்தா என்ன? என் பேர்ல இருந்தா என்ன ப்ரீத்தி? எல்லாம் ஒண்ணுதான்…” என்றபோது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
காதலிக்கிறான் தான். ஆனால் இது மிக அதிகமாகப்பட்டது அவளுக்கு. அதுவும் திருமணம் என்ற உறவில் இல்லாத போதே இப்படியெல்லாம் செய்வது நிச்சயமாக சரியாக தெரியவில்லை.
“பாஸ்… இது சரியா வருமா?” என்று மிக மிக தயக்கத்தோடு அவள் கேட்க, மெலிதாக சிரித்தவன்,
“பார்த்துக்கலாம்…” என்று முடித்துவிட்டான்.
அதை நினைத்தபோது இப்போதும் மனதுக்குள் ஏதோவொன்று அழுத்தியது.
இதழ்கள் அதன் போக்கில் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
காற்றில் வாங்கும் மூச்சிலும்…
கண்ணி பேசும் பேச்சிலும்…
நெஞ்சமானது, உந்தன் தஞ்சமானது!
உன் தோளில் தானே பூமாலை நானே….
சூடாமல் போனால் வாடதோ மானே…
இதயம் முழுதும் எனது வசம்!
வா வா அன்பே அன்பே…
செல்பேசி அழைத்தது.
ஏதோ புதிய எண்ணாக இருக்க, சற்று தயக்கமாக இருக்க, சற்று நிதானித்து எடுத்தாள், அலெக்ஸாவின் ஒலியை குறைத்தபடி!
“பிரீத்தியாம்மா பேசறது?” அந்த பக்கம், சற்று கட்டையாக ஏதோவொரு ஆண் குரல். மத்திம வயதிருக்கலாம். அவளது ஊகம். ஆனால் இதுவரை அந்த குரலோடு பரிட்சயமில்லை.
“ஆமாங்க… நீங்க யார்?”
“மோகன் பொண்ணு ப்ரீத்தி தானம்மா?”
“ஆமாங்க… நீங்க யாருங்க?”
“ஏம்மா… உங்கப்பா, ரூபாய் அஞ்சு லட்சம் வாங்கி ரெண்டு வருஷமாகுது… இப்ப அசலோட வட்டியும் சேர்த்தா, எட்டரை லட்சம். அசலும் வரல… வட்டியும் வரல… கேட்டா எதாவது சாக்கு போக்கு சொல்லிக்கிட்டே இருக்கான். என் பொண்ணு அப்படி சம்பாதிக்கறா, இப்படி சம்பாதிக்கறான்னு சொல்றான். ஆனா இன்னும் திருப்பல. என்னம்மா நினைச்சுட்டு இருக்கீங்க?”
கறாரான குரலில் அந்த பக்கம் சற்று மிரட்டல் தொனியில் கேட்க, பகீரென்றது பிரீத்திக்கு!
“நீங்க யாருங்க பேசறது? அதை முதல்ல சொல்லுங்க…” எச்சிலை விழுங்கியபடி கேட்டாள் ப்ரீத்தி.
“நடேசன்… வட்டிக் கடை நடேசன்னு சொன்னா தெரியும்…” விட்டேத்தியான குரலில் அவர் கூறினார். மறுபுறம் பேசுவது பெண்ணாக இருந்தால், பொதுவாக வருமே, ஒரு அலட்சியம், அதே அலட்சியம் தான் அவரது குரலில். கண்டிப்பாக பணிந்தாக வேண்டிய நிலையில் இருப்பவள் என்பதை அழுந்த கூறியது அவரது தொனி.
இது என்ன புதிய பூதம் என்று தான் அவளுக்கு தோன்றியது.
சந்திரமோகன், ஊரை சுற்றி கடன் வாங்கி வைத்திருந்தார் தான். ஆனால் அவை அனைத்தையும் ஒருவாராக அடைத்து விட்டாளே! இனியும் என்ன? அதிலும் அவையெல்லாம் இவ்வளவு பெரிய பணம் இல்லையே!
“என்னங்க நீங்க? யார்கிட்ட குடுத்தீங்க நீங்க?” எரிச்சலாக கேட்டாள்.
“நில புரோக்கர் சந்திரமோகன் பொண்ணுதானே மா நீ?” பதிலுக்கு எகிறினார்.
“ஆமாங்க… ஆனா நீங்க யாருன்னு கூட எனக்கு தெரியாது… திடீருன்னு அஞ்சு லட்சம் குடு… பத்து லட்சம் குடுன்னு கேட்டா…”
“மா… பாத்து பேசு. வாங்கும் போது நல்லா இருக்கா? பணத்தை திருப்பிக் குடுன்னா உங்கப்பனும் குடுக்க மாட்டேங்க்றான். நீயும் இப்படி கேக்கற?”
கோபமாக அவர் கேட்க, சற்று நிதானித்தாள் ப்ரீத்தி.
“நீங்க யாருன்னு எனக்கு தெரியல. ஆனா எங்க அப்பாவுக்கு கடன் குடுத்ததா சொல்றீங்க. எப்ப குடுத்தீங்க… அதை முதல்ல சொல்லுங்க…”
“ரெண்டு வருஷம் முன்னாடி, ஒரு இடம் வருது. வாங்கிப் போட்டா நல்ல விலைக்குப் போகும்ன்னு சொன்னான். அஞ்சு லட்சம் குடுத்தேன். பத்திரமும் இன்னமும் பதிவாகல… பணமும் என் கைக்கு வரல. சும்மா இல்லம்மா. நான் காசுல கறாரா இருப்பேன். மூணு வட்டிக்கு பணம் குடுத்துட்டு இருக்கேன். எனக்கு இடமும் வேணாம், ஒரு புண்ணாக்கும் வேணாம். பணத்தை வட்டியோட திருப்பிக் குடு…”
சூடு தெறித்தது அவரது குரலில்.
ஒருவாறாக பிரச்சனை புரிந்தது அவளுக்கு. இடம் வாங்க வேண்டி பணம் கொடுத்திருக்கிறார் இவர். இடமும் கிடைக்கவில்லை. பணமும் திரும்பக் கொடுக்கப்படவில்லை. ஆனால் இவையெல்லாம் தன்னைக் கேட்டு நடந்ததா? பல்லைக் கடித்துக் கொண்டாள்.
“நீங்க சொல்றது புரியுது….” என்று நிறுத்தியவள், “ஆனா, பணத்தை என்னை கேட்டுட்டு தான் குடுத்தீங்களா?” தைரியத்தை கூட்டிக் கொண்டு இவள் கேட்க,
“என்னம்மா நினைச்சுட்டு இருக்க? அப்பன் ஒரு பிராடுன்னா, நீயும் இன்னொரு பிராடா இருக்க?” அவர் கோபத்தில் எகிற ஆரம்பிக்க,
“சார்… பொறுமையா கேளுங்க…” என்று அமைதியான குரலில் கூறியவள், “என்னை கேட்டுட்டு எங்கப்பாகிட்ட நீங்க பணத்தைக் குடுக்கல. அது உங்க வியாபார விஷயம். இதை நீங்க என் அப்பாகிட்ட தான் கேக்கணும். அதை விட்டுட்டு என்கிட்ட வந்து கேட்டா, நான் என்ன பண்ண முடியும்?” நிதானமாக அவரிடம் கூற,
“சரியில்ல மா. என்னைப் பத்தி தெரியாது உனக்கு… நான் வேற மாதிரி…”
“ஆமா சர். உங்களை யாருன்னே எனக்கு தெரியாது. நீங்க யார்கிட்ட குடுத்தீங்களோ… அவர் கிட்ட கேட்டுக்கங்க…” என்றவள், “இதுக்காக இனிமே என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க…” என்று கூறியவள், சற்று இடைவெளி விட்டு, இணைப்பைத் தூண்டித்தாள்.
மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
இப்போதுதான் சற்று அமைதியாக போய் கொண்டிருக்கிறது என்று ஆசுவாசப்பட்டால், இப்போது புதிதாக இன்னொன்று!
காயத்ரிக்கு அடுத்த செமெஸ்டர் பீஸ் கட்டியாக வேண்டும். அதற்காக ஆபீஸில் அட்வான்ஸ் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அடுத்த இடி!
ஐம்பதாயிரத்துக்கே அட்வான்ஸ் வாங்கினால் தான் என்ற நிலையில் எட்டரை லட்சத்துக்கு எங்கே போவது?
சிரிப்பதா அழுவதா?
வியாபாரம் செய்து கடனை அடை என்று தகப்பனிடம் கூறிவிடலாம். ஆனால் அதற்கான பின்விளைவுகளையும் ப்ரீத்தி தான் சந்திக்க வேண்டும்.
வியாபாரம் செய்யவும் பணம் கொடு என்று கேட்பார். கேட்டு கேட்டு பழகி விட்டார். அன்னையும் தன்னால் முடிந்தளவு நகையை கழட்டி கொடுத்து பழக்கி விட்டார். அது இல்லாத போது சீதாலக்ஷ்மியின் அண்ணனிடம் கேட்டும் கூட வாங்கித் தந்திருக்கிறார்.
அத்தைக்கு விஷயம் தெரியும் வரை, அவர்களது வாரிசுகள் தலை தூக்கிய வரை, மொத்தமாக உறவு முறியும் வரை மாமனும் செய்திருக்கிறார்.
இப்போதெல்லாம் இரு குடும்பங்களுக்குள் போக்குவரத்தே மிகவும் குறைவாகி விட்டது.
அத்தை தன்னுடைய மகனுக்கு கூட, பிரீத்தியை பெண் கேட்கவில்லை. மீண்டும் ஒட்டிக் கொள்வார்களோ என்ற பயம் தான்.
இப்படி அத்தனை வழிகளும் அடைபட்ட பின் தான் சந்திரமோகன் சற்று அடங்கி இருந்தார்.
அதாவது அடங்கி இருப்பதாக தான் நினைத்துக் கொண்டிருந்தது எவ்வளவு தவறு என்பதை உணர்ந்து, அதே கோபத்தோடு தந்தையை அழைத்தாள்.
எடுத்த எடுப்பிலேயே, “சொல்லுடா குட்டிம்மா…” என்று தேனொழுக அழைக்கும் போதே பற்றிக் கொண்டு வந்தது.
“வட்டிக் கடை நடேசன் கிட்ட பணம் வாங்கி இருந்தீங்களா?” சூடாக கேட்க, அந்தப்பக்கம் அவளது தந்தை சற்று ஜெர்க்கானார்.
“நடேசன் கிட்டயா? அந்த ஓமக்குச்சி நடேசன் கிட்டாயா?” என்று புரியாததை போல கேட்க, அவளால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
முகம் ஜிவுஜிவு என்று சிவக்க,
“ஹூம்ம்… ஆமா…” என்று கூற,
“நானா? இல்லம்மா….” என்று ஒரெடியாக மறுத்தவர், “யாருடா குட்டி அப்படி உன்கிட்ட சொன்னது?” என்று கேட்க,
“ஹூம்ம் அவரே கூப்பிட்டார்….” என்று நிறுத்தியவள், “ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க. உண்மைய சொல்லுங்க…” என்றவளுக்கு அவளையும் அறியாமல் குரல் உயர்ந்தது.
“அதாவது குட்டி…” என்று இழுக்க,
“இழுக்காதீங்க. சொல்லுங்க…” கடுப்பானாள்.
“ஒரு நல்ல ஐட்டம் வந்துதுன்னு நினைச்சு அவர்கிட்ட பணம் வாங்கி அக்ரீமெண்ட் போட்டேன்டா. பாவி பசங்க பணத்தை வாங்கிட்டு, பொறம்போக்க காட்டிட்டானுங்க. ரெஜிஸ்டர் ஆபீஸ்ல வெச்சுதான் விஷயமே தெரிஞ்சுது. நானும் பணத்தை திருப்பிக் கொடுடான்னு கேட்டுப் பாத்துட்டேன். குடுக்க மாட்டேங்க்றானுங்க கண்ணு…” என்று அப்பாவித்தனமாக கூற, அவளுக்கு தலையை அடித்துக் கொள்ளத்தான் தோன்றியது.
“ஏன்… தாய் பத்திரத்தை பாக்காம கூடத்தான் பணத்தை குடுப்பீங்களா?” என்றவளுக்கு கோபம் பற்றிக் கொண்டு வந்தது.
“காட்டுன பத்திரம் எல்லாம் பக்காவா தான் இருந்துதுடா…” என்றவர் பொய் கூறவில்லை என்று புரிந்தது. கண்டிப்பாக ஏமாந்து இருக்கிறார். அவர்கள் ஏமாற்றியதை போல நடேசனை இவரால் ஏமாற்ற முடியவில்லை. இவருக்கு ஏமாற்றத் தெரிந்தால் தான் தொழில்களில் ஜெயித்து இருப்பாரே! மிகவும் சிரமப்பட்டு முதலீட்டை சேகரித்து ஏதாவது தொழிலில் போடுவார், நண்பர்களை நம்பி ஏமாந்து விட்டு வருவார். இது எப்போதுமான வழக்கம் தானே?
“எவ்வளவு குடுத்தீங்க அவனுங்களுக்கு?”
“மூணு…”
“மீதிய என்ன பண்ணீங்க?” கடுகு போட்டால் பொரிந்து விடுமளவு சூடு தெறித்தது அவளது குரலில்.
“உங்கம்மாவுக்கு வெறும் கழுத்தா இருக்குனு…” என்று தயங்கியவர், “அந்த பணத்துல தான் மூணு பவுன்ல செயின் எடுத்தேன் பாப்பா…” என்று கூற, அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
‘ரொம்பத் தேவை…’ என்று கடுப்படிக்கத் தோன்றினாலும் செய்ய முடியவில்லை. ஏதோ பெற்றவளுக்கு சிறு சந்தோஷம்!
“அப்புறம்?”
“கொஞ்சம் சில்ற கடனை எல்லாம் அடைச்சேன் பாப்பா…” என்றபோது அவரது குரலில் தவறு செய்த உணர்வு.
“கடவுளே… கடனை வாங்கி கடனை அடைப்பீங்களா?” அவளது பொறுமை காற்றில் பறந்து விடும் போல இருந்தது.
“அப்படி இல்ல பாப்பா… அந்த இடம் சரியா முடிஞ்சிருந்தா பிரச்சனை இருந்திருக்காது…”
“அதான் முடியலையே! இப்ப எட்டரை லட்சம் கணக்கு சொல்றார் அந்த நடேசன்…”
“அவன் கிட்ட நான் பேசுறேன் பாப்பா…” அவசரமாக கூறினார்.
“எதையோ பேசித்…” என்று ஆரம்பித்தவள், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “பேசுங்க… என்கிட்ட எதுவும் இல்ல. தயவு பண்ணி புரிஞ்சுக்கங்க…” என்று தணிந்த குரலில் கூறிவிட்டு தொடர்பை தூண்டித்தாள்.
இன்னும் எத்தனை நாளுக்குத்தான் இந்த போராட்டம்? ஏன் தனக்கு மட்டும் இப்படியான போராட்டம்? தன்னை நினைத்தே சுய பச்சாதாபம் கொள்வது போல தோன்றியது.
தலையை அவசரமாக சிலுப்பித் தன்னுடைய எண்ணப் போக்கை மாற்ற முனைந்தாள்.
அவளுக்கு சற்றும் பிடிக்காதது, இந்த சுயப் பச்சாதாபம்!
‘மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்…’
அலெக்ஸா மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருக்க, மென்புன்னகை மலர்ந்தது அவளது இதழ்களில். தலையை வாரி, உச்சியை விட்டு சற்று கீழிறக்கி எப்போதும் போல, டாப் நாட் போட்டு, புருவத்துக்கிடையில் குட்டி கறுப்புப் பொட்டை ஒட்டினாள்.
‘இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ
குழம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ’
கொஞ்சம் கொஞ்சமாக தன்னியல்புக்கு வந்தவள், பாடலை மீண்டும் முணுமுணுக்கத் துவங்கினாள்.
அவளுக்கு இளையராஜா மிகப் பிரியம். எந்தவொரு சூழ்நிலையிலும் அவரது இசையோடு லயித்து விட்டால், எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் அவளால் கடந்து வந்துவிட முடியும். பிரச்சனைகளோடு அவள் லயிக்காத தன்மையை அந்த இசை அவளுக்கு வழங்குவதாகப் படும். புறவுலகோடு ஒட்டியும் ஒட்டாத நிலை. அதோடு ஒட்டினால் தானே, சுகம், துக்கம், கடன், அப்பா, அம்மா, வேலை, அதனோடு சேர்ந்து வரும் இடைஞ்சல்கள் எல்லாம்! ஒட்டாவிட்டால்? அப்படியாகப்பட்ட லூப்ரிகேஷன் தான் ராஜாவின் இசை!
இப்போதுள்ள புதிய பாடல்களும் பிடிக்கும் என்றாலும், எல்லா 90ஸ் கிட்ஸை போல ராஜா, ரொம்பவும் ஸ்பெஷல் அவளுக்கு!