alaikadal-23

alaikadal-23

அலைகடல் – 23 

விக்ரமாதித்ய போர்க்கப்பல்  

உணவுக்கூடத்தில் வழக்கமான இடத்தில் வந்தமர்ந்த ரியாஸ் எதிர் வரிசையில் இருந்த பூங்குழலியின் வெறுமையான இருக்கையை வெறித்தவாறு உணவருந்திக்கொண்டிருக்க,  அவனையே யோசனையுடன் அவனறியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர் பக்கவாட்டிலிருந்த சபரியும் எதிர் வரிசையில் பவிகாவுடன் அமர்ந்திருந்த ஜான்சியும்.  

இன்று என்றில்லை… கடந்த ஒரு வாரமாகவே இப்படித்தான் ஒருவித யோசனையிலும் சோகத்திலும் சுற்றிக் கொண்டிருக்கிறான். 

சரியாகச் சொல்லப்போனால் கமாண்டரிடம் இருந்து அபிஷேக் வாயிலாக பூங்குழலியின் திருமணம் குறித்த செய்தியை அறிந்த சபரி, அதை இவனிடம் கூறியதில் இருந்து இப்படி மாறிவிட்டான். 

சபரி என்னவென்று எத்தனையோ முறை கேட்டும் வாயைத் திறக்கவே இல்லை. ரியாஸின் அடாவடியைப் பார்த்தே பழகியிருந்த ஜான்சிக்கு கூட அவனின் அமைதி தனியாகத் தெரிந்து எதையோ இழந்த மனநிலையைக் கொடுத்தது.

ரியாஸ் மண்டைக்குள் குடையும் விசயம் பூங்குழலியின் திருமணம்தான். அவன் அறிந்த பூங்குழலி என்றால் நிச்சயமாக அத்தனை கொடுமை செய்திருந்த ஆரவ்வை காதலித்து மணந்திருக்க வாய்ப்பேயில்லை.

அப்படியிருக்க தான் அவசரப்பட்டு பூங்குழலியின் இருப்பிடத்தை ஆரவ்விடம் கூறியதால் மீண்டும் அவனின் மரியாதைக்குரிய பெண்ணின் வாழ்வில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்துவிட்டதா என்ன? இதுதான் அவனின் நிம்மதியின்மைக்கு காரணம். 

அவன் மனநிலை புரியாத ஜான்சியோ பவிகாவிடம், “இன்னக்கி பூங்குழலி மேம் மேரேஜ்ல? அதுவும் சீஃப் மினிஸ்டர் ஆரவ் கூட… வாவ் நம்ம மேம் சோ லக்கி(?) என்ன இனிமேல் அவங்களைப் பார்க்கக்கூட முடியாது போல, திரும்ப இங்கே வர சான்ஸ் இல்லை. நாமளும் ஈஸியா போய் பார்க்கவும் முடியாது” சந்தோஷமாக ஆரம்பித்து இறுதியில் ஏக்கத்துடன் முடித்தாள். முன்பே தெரிந்திருந்தால் திட்டினாலும் பரவாயில்லை என்று நன்றாக பேசியிருக்கலாமே! என்ற கவலையில்.

அதில் எரிச்சலடைந்த ரியாஸ், “ஒரேடியா அப்படி சொல்லவும் முடியாது ஜான்சி. நான் நினைச்சது சரின்னா மேம் கண்டிப்பா இங்கே வருவாங்க” என்றான் இவன். 

“என்னதான் நினைக்கிற? அதையாச்சும் சொல்லு ரியாஸ்” என்று இடையிட்டான் சபரி. 

“அது நான் நினைச்சது சரின்னு தெரிஞ்ச பிறகு சொல்றேன் சார்” இறுகிய குரலில் பதிலளித்தவன் முழுதாக சாப்பிட்டு முடிக்கும் முன்பே தட்டை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

அதுவரை ரியாஸை அவ்வாறு பார்த்திராத மூவரும் செல்லும் அவனையே சிறு அதிர்வுடன் நோக்கிக்கொண்டிருந்தனர்.

************************************

கைகள் கோர்த்து இருவரும் அக்னியை வலம் வந்தபின் அம்மி மிதித்து பூவையின் பொற்பாதங்களைப் பற்றி மெட்டியை அணிவித்தான் ஆரவ்.

அவனுக்கே அவனுக்கான உலகத்தில் ஆரவ் பூங்குழலியுடன் மகிழ்ந்திருக்க, தன் கால் பற்றி மெட்டி அணிவித்தவனை எழவே விடாமல் கீழே தள்ளி மிதிக்கத் தோன்றியது பெண்ணிற்கு.

என்னதான் திருமணம் குறித்து பெரிதாக எதிர்பார்ப்பு இல்லையென்றாலும் தாய் தந்தையின் அந்நியோன்யத்தை பார்த்து வளர்ந்தவளுக்கு அதைப்போல தானும் வாழ வேண்டும் என்ற எண்ணம் ஆரவ் அவளின் வாழ்வில் குறுக்கிடுவதற்கு முன்பு உண்டு. 

குறுக்கிட்ட பின் அத்தனை கனவுகளையும் கலைத்ததும் இல்லாமல் இப்பொழுது பெயருக்கு கணவன் என்றாலும் ஒவ்வொரு அணுவிலும் திமிர், சுயநலம், அகங்காரம் கொண்டவனை கணவனாக மருந்திற்கும் மனதை தீண்டவில்லை. அதை விட அருகில் இல்லாத தாய் தந்தையை எண்ணி ஏங்கித்தவித்தது மனது. 

அதன் பின்னான சடங்கில் எப்பொழுதடா இதெல்லாம் முடியும் என்ற பாவனையில் கடனே என நின்றிருந்தவள் வரவேற்பிற்கு தயாராக மணப்பெண் அறைக்குள் வந்ததும் சட்டமாய் அமர்ந்துவிட்டாள்.

அழகு நிலையப்பெண் உடையை மாற்றுமாறு கூறியும் அவள் அசையாமல் இருக்க ஆரவ்விற்கு செய்தி பறந்தது தர்ஷனாவின் மூலம்.

‘ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டா…’ என்று இதழ் கடையோரம் சிரிப்பில் துடிக்க முனுமுனுத்தவன் அங்கு வெளிஆட்கள் நுழைய தடை என்பதால் இயல்பாக அவனறையில் இருந்து வெளியேறி அவள் இருக்கும் அறைக்குள் நுழைந்தான். பூவேந்தன் மண்டபத்தில் அவன் அழைப்பில் வந்தவர்களோடு பேச்சில் மும்முரமாய் இருந்ததால் இவர்கள் பக்கமே அவன் எட்டிப்பார்க்கவில்லை.

ஆரவ் வந்ததைக் கண்டு தர்ஷனா அங்கிருந்த அழகுநிலையப் பெண்ணை தன்னுடன் அழைத்துச் செல்ல, கதவைப் பூட்டி அதில் கைக்கட்டியவாறு சாய்ந்தவன் ஒற்றை காலை சவுகாரியமாய் ஊன்றி பூங்குழலியை ரசனையாய் வருடினான்.

மேடையில் அமர்ந்திருக்கும் பொழுதே புடவையில் சர்வலட்சணமாய் இருந்தவளை ரசிக்க மனம் விரும்பினாலும் ஓரப்பார்வையிலும் சரி தாலி கட்டியபின் நெற்றியில் திலகமிடும் பொழுதும் சரி பக்கவாட்டு தோற்றமே கண்ணை நிறைத்தது. மெட்டி அணிவிக்கையிலும் சுற்றிலும் ஆட்கள் இருக்க அவனால் முழுமனதோடு பார்க்கவும் முடியவில்லை பாராமல் இருக்கவும் முடியவில்லை.

ஒருமாதிரி திண்டாடித்தவித்தவன் போட்டோ வீடியோவில் ஆசைதீர ரசிப்போம் என்று அரைமனதாய் சமாதானம் செய்த வேளையில்தான் பூங்குழலி தயாராகாமல் அடம்பிடிப்பதாக செய்தி வந்தது. 

அவனை எரிச்சல்படுத்தும் நோக்கத்தோடு பூங்குழலி இதை செய்தால் அது ஆரவ்விற்கு எரிச்சலுக்குப் பதிலாக அவளைக் காணப்போகும் உல்லாச மனநிலையைக் கொடுத்தது. இதோ ஆசைதீர பெண்மையின் வார்ப்பாய் மிளிர்ந்தவளை கண்களின் மூலம் ஈர்த்து இதயத்தை நிரப்பிக்கொண்டிருந்தான்.

‘எள்ளும் கொள்ளும் வெடிக்கும் பூமுகம் புன்னகையை ஏந்திவிட்டால் போதும் ஜென்ம சங்கல்பம் அடைந்த மகிழ்ச்சி எனக்கு கிடைத்துவிடும்’ ஆண் மனம் அதன் ஆசையை வெளிப்படுத்தியது.

கோபம் கொள்வான், கத்துவான் குறைந்தபட்சம் எதையேனும் கேட்பான் என்று எதிர்பார்த்து எங்கேயோ வெறித்துக்கொண்டிருந்தவள் நேரம் கடந்தும் அறை நிசப்தத்தை கலைக்காமல் இருக்க, துணுக்குற்று ஆரவ் புறம் பார்வையை திருப்பினாள் பூங்குழலி.

நொடியில் தன் பார்வையை சாதாரணமாய் மாற்றியவன் புருவத்தை உயர்த்தி, “என்ன மிசஸ் பூங்குழலி என்கிட்ட எதையாச்சும் சொல்லனுமா?” என்று வினவ 

அவனின் மிசஸ் இருக்கும் கோபத்தை பலமாய் விசிறிவிடவே, “ஆமா மிஸ்டர் ஆரவமுதன்… கல்யாணம் முடிந்ததும் என் விருப்பத்துக்கு இருக்கலாம் என்று நீங்க சொன்ன நியாபகம். ரிஷப்ஷன் பத்தி நாம எதுவும் பேசி வைக்கலை… அதனால நான் வீட்டுக்கு போகலாம்ன்னு இருக்கேன்” என்றாள் அலட்சியமாய்.

“ஒஹ்… ஓகே ஓகே நீ கிளம்பு. யாருக்கும் தெரியாம நானே கார் ஏற்பாடு பண்றேன் வீட்டுக்குப் போயிரு. இங்க எப்படி சமாளிக்கணும்ன்னு எனக்கு தெரியும் அண்ட் நீ கவனிச்சியோ இல்லையோ தாலி கட்டியதும் என் பேர் வாயில வருது மரியாதை கூட வருது. தேங்க்ஸ் ஆனா முழு பேர் எனக்கு வேண்டாம். ஆரவ்… ஆரவ் மட்டும்தான் சொல்லணும் அமுதன் கட் பண்ணு” என்று நீண்டதாய் பேச 

அவன் தன்னை கிளம்பச் சொன்னதும் லேசாய் அதிர்ந்தவள் மேலும் பெயர் மரியாதை என்று சொல்லச் சொல்ல ‘நாம் மாறுகிறோமா என்ன?’ என்ற குழப்பம் தோன்றினாலும் ‘போடாங் இது ரொம்ப முக்கியமா’ என்றுதான் கத்த தோன்றியது. இவன் நம்மை திசைதிருப்பி காரியம் சாதிக்க பார்க்கிறான் என்று மூளை தனியாக எடுத்துக்கொடுத்தது.

இருந்தாலும் தான் சென்ற பிறகு இவன் என்ன செய்யப்போகிறான் என்று தெரிய வேண்டியிருக்க பொறுமையை இழுத்துபிடித்து, “எப்படி சமாளிக்கப் போற?” என்றாள் மொட்டையாய்.

“அது எதுக்கு மேடம் உங்களுக்கு? ரிஷப்ஷன் வேணாம் அவ்ளோதானே… அதான் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லிட்டேனே. இது மூலம் என்னை அவமானப்படுத்தலாம்ன்னு கனவுல கோட்டை கட்டியிருந்தா சாரி… மத்தவங்க கேள்வி கேட்காதபடி செய்ய எனக்குத் தெரியும். ஃபார் எக்சாம்பிள் என் மனைவியை காணோம்ன்னு புகார் கொடுக்கலாம்… இல்ல இல்ல அது வேணாம் இவ்ளோ பாதுகாப்பு மீறி எப்படி காணாம போனாங்க என்று கேள்வி வரும்” சிறிது யோசித்து,

“ஹான்… என் மனைவியோட தம்பிய காணோம் என்று சொல்லலாம். அது கொஞ்சம் நம்புற மாதிரி இருக்கும். ரிஷப்ஷன் கேன்சல் அண்ட் ஆல்சோ பர பர பப்ளிசிட்டி! சரிதானே?” பூங்குழலியிடமே தன் யோசனைக்கு ஆலோசனை கேட்டான் ஆரவ்.

அதில் ‘இவன் மிக அபாயகரமானவன்’ என்று எச்சரித்தது பெண் மனம். ‘தன் போக்கில் நடக்க தடைசெய்யவும் இல்லை அதேநேரம் தன்னைக்கொண்டே அச்செயலை தடுக்கவும் செய்கிறான். இப்போது நாம் சென்றால் குட்டாவை கடத்துவேன் என்கிறானா? 

நோ… இனிமேல் இவனிடம் சொல்லிவிட்டு செய்யக்கூடாது. யோசிக்கணும்… மிக மிக நிதானமாய் யோசிக்க வேண்டும். ஒரு இரண்டு நாட்கள் பொறுமையாய் நடப்பை ஆராய்ந்து அவன் எதிர்பாரா நொடியில் பயங்கரமாக அடித்துக்கொள்ளலாம். முக்கியமாக அவன் போற்றி பாதுகாத்து வைத்திருக்கும் பெயர், புகழ் எல்லாம் அதில் அடிப்பட்டே ஆகனும்’ தன் எண்ணத்தில் உழன்றவளை கண்டுக்கொள்ளாமல் வேந்தனுக்கு அழைப்பு விடுத்தான் ஆரவ்.

“வேந்தா… நீ” என்ற இரு வார்த்தை பேசுவதற்குள் அதனைப் பிடுங்கி அணைத்து அவனிடம் தந்தவள், “மிஸ்டர் கொஞ்சம் வெளியே போனா எனக்கு கிளம்ப ஏதுவா இருக்கும்” கையை வாசலை நோக்கி நீட்டியவாறு கூறினாள் பூங்குழலி.

“மிஸ்டர் இல்ல… ஆரவ்… ஒன்லி ஆரவ்” எனும்போதே பாதியில் துண்டிக்கப்பட்டதால் மீண்டும் ஆரவ் செல்பேசிக்கு அழைத்தான் வேந்தன்.

அதை அவள் முன் தூக்கி காட்டியபடி, “எங்கே கிளப்புறீங்க என்று தெரிஞ்சிக்கலாமா? அதுக்கேத்த மாதிரி பிளான் செய்ய ஏதுவா இருக்கும்” என்றான் அவளைப் போலவே. 

“நான் எங்கேயும் கிளம்பல இங்க தான் இருப்பேன் போதுமா… அப்புறம் உன்னை உன் விருப்பபடி எல்லாம் கூப்பிட முடியாது ஆரவமுதன்” என்று இழுத்தவள், “அமுதன் பிடிக்காதோ?” என்று வினவ

அதற்கான பதிலின்றி, “இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கு சீக்கிரம் ரெடியாகப் பார் பூங்குழலி” என்றுவிட்டு கதவைத் திறந்தவனிடம்

“கண்டிப்பா அமுதா… நான் எங்கேயும் ஓடிற மாட்டேன் பயப்படாம போ” என்று சீண்டலாய் மொழிந்தாள் இவள். 

என்னமோ பூங்குழலியால் அவனிடம் அடங்கிப்போகவே முடியவில்லை. தன்னையறியாமலே அவனிற்கு அடங்கிப்போவது போல் தோன்ற அதன் பொருட்டே இந்தச் சீண்டல் எல்லாம்.

ஒருநொடி அவளின் அமுதா என்ற அழைப்பில் சிலிர்த்து அடங்கியவனின் கண்கள் கலங்கினாலும் உதடு நினைத்ததை சாதித்த புன்னகையைச் சிந்த, பின்னாலிருந்து பார்த்த பூங்குழலியின் கண்களில் அது சிக்கவில்லை.

மேடை அலங்காரம் வரவேற்பிற்கு ஏற்றாற்போல் கருநீல மற்றும் வெள்ளை நிற மலர்கள் கொண்டு அலங்கரித்திருக்க, அதற்கு சமமாக வெள்ளை சட்டையின் மேல் கருநீல சூட் உடன் அதே நிற ஃபேண்ட் அணிந்து அட்டகாசமாய் நின்றிருந்தான் ஆரவ். அருகில் கருநீலம் மற்றும் இளநீலம் கலந்திருக்கும் லெஹங்காவை தாவணிபோல் அணிந்து புன்னகையில்லா பூவாய் நின்றிருந்தாள் பூங்குழலி.

பெரிய பெரிய தொழில் அதிபர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் முதலானோர் பரிசு கொடுத்து வாழ்த்தி ஓரிரு நிமிடங்களில் விடைபெற, சில முகங்களைத் தவிர்த்து புதிதாக வந்திருக்கும் திரையுலக பிரபலங்கள் யாரையும் தெரியவில்லை பூங்குழலிக்கு. 

ஏழு வருட கடல்வாசம் பூமியின் பல மாற்றங்களை அவளிற்கு உணர்த்த தவறியிருக்க, அதைத் தெரிந்துக் கொள்வதில் பெரிதாக ஆர்வமும் ஏற்படவில்லை பூங்குழலிக்கு. மீண்டும் போகத்தானே போறோம் என்ற அலட்சியமாய் இருக்கலாம். 

திடீரென்று மண்டபத்தின் நுழைவு வாயிலில் சலசலப்பு ஏற்பட, வினோத் அவசரமாய் மேடையேறி ஆரவ்வின் காதருகே நடப்பதைக் கூறினான். அத்தனை நேரம் இருந்த இதம் மறைந்து ஆரவ்வின் முகம் மாறியது.

முயன்று தன்னை சமாளித்தவன் தலையசைத்தவாறு வினோத்தை அனுப்பிவைத்து தங்களை நோக்கி வரும் உருவத்தை சலனமின்றி பார்த்துக்கொண்டிருந்தான்.

வந்தது ஆரவ்வின் முதல் முக்கிய எதிரியாக இருக்கும் அர்ஜுன்தான். அவனின் ஒரு கை தன் மகன் அபிமன்யுவை தூக்கியிருக்க மற்றொரு கை பூங்கொத்தை பற்றியிருந்தது. அருகில் அவன் மனைவி நிர்மலா பரிசை ஏந்தி பின்னோடு வந்துக்கொண்டிருந்தாள். 

நிர்மலாவின் தந்தை தொழிலதிபர் என்பதால் இம்மாதிரி பெரிய பெரிய விழாக்களில் கலந்துகொள்வது முக்கியமான ஒன்று. அவளிற்கு பிடித்தமான ஒன்றும் கூட. எனவே அர்ஜுன் தான் மட்டும் போய் வருவதாகக் கூறியும் கேட்காமல் மகனுடன் வந்திருந்தாள்.

அவர்கள் தூரத்தில் வருகையில் சரியாக அடையாளம் தெரியாத பூங்குழலிக்கு மேடை ஏறியதும் அர்ஜுனை அறிந்துவிட, மனைவி மகனோடு வந்தாலும் எதிர்பாரா சந்திப்பில் திடுக்கிட்டது அவளின் நெஞ்சம்.

ஆரவ்வும் அர்ஜுனும் சட்டமன்ற கூட்டத்தில் நேருக்கு நேர் பார்ப்பதோடு சரி இதுபோல் விழாக்களில் அர்ஜுன் குடும்பத்தினர் அதிலும் அருள்ஜோதி கலந்துக்கொண்டால் ஆரவ் அங்கு போவதைத் தவிர்த்து தன் சார்பாக வேறொருவரை அனுப்பி வைத்துவிடுவான்.

ஆரவ் கலந்துக்கொள்ளும் திரைப்பட விருது மற்றும் பொதுக்கூட்டத்தில் இவர்களால் வரவும் முடியாது. இவ்வாறு இருவரும் சந்தித்து பேசும் வாய்ப்பு இதுவரை உண்டானதே இல்லை எனலாம்.

அதனால் இவ்வரிய சந்திப்பைத் தலைப்பு செய்தியாக்கிக் கொண்டிருந்தது செய்தி சேனல்கள். ஏற்கனவே திருமணம் மற்றும் வரவேற்பு நேரலையாக ஒளிப்பரப்பிக் கொண்டிருக்க இதையும் அதற்குள் சேர்த்திருந்தனர்.

இதற்காகத்தானே அர்ஜுன் வந்தது. அன்றைய நாளின் கதாநாயகனாய் ஆரவ் கோலோச்ச அதில் சிறிதாய் கல்லெறியவே வந்திருந்தான் இவன். 

நிர்மலா உடனான அவனின் திருமணத்திற்கு ஆரவ் அவன் சார்பாக துணை முதலமைச்சர் வினோத்தை அனுப்பியிருந்ததால் தந்தை, மாமா இருவரும் இன்று அவனை போகவேண்டாம் என்று தடுத்து அவர்களின் உதவியாளரை அனுப்பச் சொல்ல,  அதனை மறுத்து குடும்பத்துடன் வரவேற்பில் கலந்துக்கொண்டான் அர்ஜுன்.

கூடுதலாக ஆரவ் – பூங்குழலியை நேரில் காண வேண்டியிருந்தது. அன்று குடிபோதையில் நடந்துக்கொண்டது தவறென்றாலும் அதற்கான தண்டனையை ஆரவ் மூலம் பெற்றுவிட்டதால் வஞ்சம் அதிகமாக தவறைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. 

ஆனால் இருவரும் காதல் திருமணம் என்றது மட்டும் எங்கோ இடிக்க, அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவே இருவரையும் எடையிட்டான்.

“ஆரவ் அங்கிள் ஹாப்பி மேரேஜ்” தந்தையின் கையில் உள்ள பூங்கொத்தை நீட்டி வாழ்த்திய குழந்தையிடம் முகம் திருப்ப முடியாமல், “தேங்க் யூ ஸ்வீட் பாய்” என்றவாறு நன்றி கூறி வாங்கியவனிடம், “நிஜமாவே லவ் மேரேஜ் தானா?” என்ற கேள்வியைச் சந்தேகமாய் வீசினான் அர்ஜுன்.

பின்னே காதல் கொண்டவர்களின் பார்வை, நடத்தை என்று எதுவும் இருவரிடையே இல்லையே!

பூங்குழலிக்கு அவர்கள் பேசுவது தெரிந்தாலும் மெதுவாக பேசியதால் என்னவென்று சரியாகக் கேட்கவில்லை. 

அர்ஜுனைக் கண்டதும் ஆரவ்வின் சந்திப்பு தன் வாழ்க்கையில் நிகழ்வதற்கு முழுக்க முழுக்க இவனே காரணம் என்ற உண்மை முகத்தில் அறைய, அத்தனை நாளும் ஆரவ் மீது மட்டுமே குறிவைத்திருந்த அவளின் கரைகாணா ஆத்திரத்தில் பாதி அர்ஜுனிடம் பாய்ந்தது அந்த நிமிடம். 

தெரிந்தோ தெரியாமலோ ஆரவ் மீது மட்டுமே இருந்த பூங்குழலியின் குறியை கலைத்து அதன் பாதியை அவனறியாமலே தன் புறம் திருப்பிக்கொண்டான் அர்ஜுன்.

ஆரவ், “அது உனக்கு தேவையில்லாத விஷயம் அர்ஜுன்… உன்னை யாரு முதல்ல இங்க வரச் சொன்னது?” என்று உதட்டை அசைக்காமல் கடித்துத்துப்பினான். அன்றைய அவனின் இனிமையான மனநிலை கெட்டதோடு பூங்குழலி வேறு இப்போது இவர்களை கவனிக்க, இவனைப் பார்த்து என்ன செய்து வைப்பாளோ என்றிருந்தது. 

ஏதேனும் பேசி ரசாபாசம் ஆகிவிட்டால் அதை வேறு சமாளிக்க வேண்டுமே! பூங்குழலி இரு நாட்கள் எந்த பிரச்சனையும் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து அதைக் கடைபிடிப்பது ஆரவ்விற்கு தெரியாதே.

அர்ஜுன், “சும்மாதான் வந்தேன் ஆரவ். வீட்டுல இருக்க போர் அடிச்சது அதான் அப்படியே கொஞ்சம் பப்ளிசிட்டி தேடி இந்தபக்கம் வந்தேன் ஓட்டுமொத்தமா நீயே அனுபவிச்சா எப்படி?” என்றான் கிண்டலாக.

முறைக்க கூட முடியாமல் இழுத்து பிடித்த புன்னகையோடு புகைப்படம் எடுத்து அவனை ஒருவழியாக அனுப்பி வைத்தான் ஆரவ். 

அர்ஜுன் கூறியதை கேட்ட பூங்குழலியோ, ‘அட பப்ளிசிட்டிக்கு பிறந்த பன்னாடைங்களா! ஒருநாள் இல்ல ஒருநாள் ரெண்டு பேருக்கும் சேர்த்தே நான் பண்றேன் பாருங்க பப்ளிசிட்டி’ என்று இருவரையும் சேர்த்து மனதிற்குள் கருவிக்கொண்டாள்.

திருமணத்தின் பொருட்டு சிறிதாக பேட்டி கொடுத்து மதிய உணவை அங்கேயே உண்டு முடித்த கையோடு முன் மாலைப்பொழுதில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர் ஆரவ் – பூங்குழலி அவர்களுடன் வேந்தனும். 

காலையிலிருந்து உண்டான திருமண அலைச்சலால் சுகமான அயர்வில் கண்மூடி காரின் பின்சீட்டில் சாய்ந்திருந்தான் ஆரவ். 

அருகே அத்தனை நேரம் அமைதியாக இருந்த பூங்குழலி முன்புறம் அமர்ந்திருந்த வேந்தனுடன் பேச ஆரம்பித்தாள்.

“டேய் குட்டா… பொய் சொல்றது தப்புதானே அதுவும் முழு பூசணிக்காயும் சோத்துல மறைச்சதும் இல்லாம முழுசா முழுங்கிட்டு இங்க தூங்கிட்டு வராங்க, என்னனு கேட்கமாட்டியா நீ?” என்றாள் விளையாட்டுக்கு சொல்வதைபோல் குத்தலாக.

அதனைக்கேட்டாலும் காதில்விழாத பாவனையில் கண்மூடியிருக்க இதயமோ நேராக இல்லையென்றாலும் ஜாடையாக பேசும் அளவு முன்னேற்றம் அடைந்தவளைக் கண்டு அநியாயத்திற்கு துள்ளியது! 

அவளின் கூற்று உண்மைதான். திருமணத்தன்று தங்களின் காதல் கதையைக் கூறுவதாக இவன் சொன்னதால் இன்று அதைப்பிடித்து கேள்வி கேட்க, 

யோசித்து வைத்திருந்த கதையை கட்டவிழ்த்தான் ஆரவ். 

இருவரும் ஏழு வருடங்கள் முன்பே நண்பர்கள் எனவும் பூங்குழலிக்கு இந்திய கப்பற்படையில் சேர வாய்ப்பு வந்தும் தம்பியைத் தனியே விட மனமின்றி தவிக்க, தான் உதவி புரிந்து பூவேந்தனை கூடவே வைத்துக்கொண்டதாகவும் நாளாக ஆக காதல் மலர்ந்ததாகவும் கூற, கூட்டம் பாராட்டித் தள்ளியது அவனை.

பூவேந்தனை பற்றி இப்பொழுதுதான் ஓரளவு வெளிப்படையாகக் கூறுகிறான் ஆரவ். முன்பு யார் கேட்டாலும் கார்டியன் என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிடுவான்.

அவனின் சுருக்கமான கதையை கேட்ட பூங்குழலிக்கோ சுறுசுறுவென வந்தது. 

மேலே மேலே கேள்வி கேட்பார்கள் அவன் திணறட்டும் என்று ஆவலாக காத்திருந்தால் துரதிர்ஷ்டவசமாக ஒருவரும் அந்த ஓட்டை கதையைக் குடைந்துக் கேள்வி கேட்கவில்லை. 

கடைசியாக இவளிடம் ஓரிரு வார்த்தை பேசி பேட்டியை முடித்துக்கொள்ள அதைத் தாங்கமுடியாமல்தான் இந்த குத்தல் பேச்சு.

தமக்கையின் உணர்வு புரிந்தாலும் எவ்வளவு நாள்தான் தானே இருவருக்கும் இடையில் இடிபடுவது… சேர்வதோ சண்டையிடுவதோ இனி அவர்கள் பாடு என்று தோன்ற, “அதை ஏன் பூமா என்கிட்ட கேட்குற? இனிமேல் பழசை சொல்லி என்னவாகப் போகுதுன்னு அண்ணா நினைச்சிருக்கலாம்… யாருக்கு தெரியும். உன் பக்கத்துல தானே இருக்காங்க நீயே கேளு. இனி நீயாச்சு அண்ணாவாச்சு உங்களுக்கு இடையில என்னை இழுக்காதீங்க” என்று உஷாராக இருவருக்கும் பொதுவாகக் கூறி கழண்டுக்கொண்டான் வேந்தன்.

‘இவனாலதானே நான் மாட்டிக்கிட்டு முழிக்குறேன்! இவன் என்னடான்னா இடையில இழுக்காதேங்குறான் லூசு லூசு… உன்னைச் சொல்லி குற்றம் இல்லை, இப்படி வெகுளியா வளர்த்தேன் பாரு என்னைச் சொல்லணும். அதை அழகா பயன்படுத்தி ஆடுறான் பாரு இவனைச் சொல்லணும்… எப்போதான் உனக்கு அண்ணா கிறுக்கு தீருமோ அப்போதான் நீ உருப்படுவ’ இன்னமும் முடிக்காமல் பாதி வாய்க்குள் மீதி மனதிற்குள் என முனுமுனுக்க முன்புறம் அமர்ந்தவர்களுக்கு கேட்கவில்லை என்றாலும் அருகில் இருப்பவனிற்கு கேட்காமல் இருக்குமா? தானாக இதழ்களில் புன்னகை நெளிந்தது. 

‘திட்டு… உள்ளையே வைத்து புழுங்காம திட்டி திட்டியே உன் கோபத்தை குறைச்சிரு சமுத்திரகுமாரி’ என்று ஆரவ் எண்ணிக்கொண்டான். திட்டினால் மட்டும் தீர்ந்துவிடுமோ பூங்குழலியின் தீக்கோபம்?

இருண்ட வானில் பிறை நிலவு அழகான வளைவுடன் நட்சத்திரங்களோடு விளையாடிக்கொண்டிருக்க பூங்குழலி தனதறைக்குச் சென்று வெகுநேரமாகியும் உள்ளே செல்லாமல் பூவேந்தனுடன் படம் பார்த்துக்கொண்டிருந்தான் ஆரவ். 

வேந்தன் அறைக்கு செல்லுமாறு சொல்லிச் சொல்லிப்பார்த்து சலித்தவன் டிவியை அணைத்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டான். 

காதல் கொண்ட மனதிற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறினாலும் தான் எதிர்பார்ப்பது ஒன்றும் நடக்காது என்று தெரியாதவனா இவன்? 

ஆனால் உள்ளே சென்று எதையேனும் தான் ஆரம்பித்து பதிலுக்கு அவளும் பேசி என்று சண்டையிடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்க, முதல் நாளும் அதுவுமாக சண்டையிட வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் ஒதுங்கியிருந்தான் ஆரவ்.

கூடவே எப்படி அவளின் மனதில் இடம் பிடிப்பது என்ற விடையறியா கேள்வியை மூளை எழுப்ப அதற்கான பதிலை தேடி யோசனையில் மூழ்கினான். 

எப்படி யோசித்தும் சத்தியமாக அவனிற்கு அதற்கான அடியும் தெரியவில்லை நுனியும் துளிக்கூடத் தெரியவில்லை. காதலிப்பது தெரிந்தாலே விலகிவிடும் அபாயம் இருக்க, காதல் சொல்லாமல் காதலிக்க வைப்பது சாத்தியமா? அதுவும் ஒரு மாதத்தில்… மண்டை சூடாகிப்போனது.

இதே எண்ணத்தில் நடுஜாமம் வரை பொழுதை நெட்டித்தள்ளியவன் சத்தமின்றி அறைக்குள் நுழைய, விடிவிளக்கின் மெல்லிய ஒளியில் அறையைத் துழாவினான் ஆரவ்.

சோபாவை கூர்ந்து பார்த்த பார்வை அவள் அங்கில்லை என்றதும் கீழே படுத்திருந்தால் மிதித்துவிட கூடாதே என்று கவனமாகத் தரையைப் பார்த்து அடியெடுத்து வைக்க, தரையும் வெறுமையாக இருந்தது. 

சட்டென்று தேடுதலாக உயர்ந்த பார்வை வட்டத்தில் நால்வர் தாராளமாய் உருளும் படுக்கையின் ஓரத்தில் ஒய்யாரமாக உறங்கிக்கொண்டிருந்த மனைவியின் முதுகுப்புறம் விழ, மனம் பெரிதும் ஆசுவாசமடைந்தது. 

தன் படுக்கையில் தயக்கமின்றி உறங்கிய அவளின் தைரியத்தை எண்ணி வியந்தவன் அவள் முகம் பார்க்கும் ஆசையில் மறுபுறம் வந்து நிற்க, எப்பொழுதும் போல் அவளின் உறங்கும் அழகு கூட வசீகரித்தது.

அவளின் முன்பு ரசிக்கும் தைரியமின்றி அவள் பாராதபோதும் தூங்கும்போதும் ரசிக்கும் தன்னை நினைத்தே புதிதாக இருக்க, லேசான வெட்கத்தில் முகம் முழுக்க சிரிப்போடு அவளின் முகத்திற்கு நேர் கீழே மண்டியிட்டு அமர்ந்தான். 

பல வருடங்களாக நிம்மதின்றி அலைகடலென அலைபாய்ந்த ஆழ்மனம், அவன் அறையில் அவனுக்கே அவனுக்கான உறவாக பூங்குழலி கண்டதும் அடங்கி ஒருவித அமைதியைத் தத்தெடுக்க, வெற்றுத்தரையில் அவள் முகத்தை பார்த்தவாறே மல்லாந்து படுத்தவன் தன் கைகளையேத் தலையணையாக்கி மயக்கத்துடன் தலைசாய்ந்தான் ஆரவ்.

இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்

ஒரு கோடி பூ பூக்கும் வெட்கம் 

ஆண் மனதை மயக்க வந்த சாபம் 

அறிவை மயக்கும் மாய தாகம் 

இவளைப் பார்த்த இன்பம் போதும் 

வாழ்ந்து பார்க்க நெஞ்சம் ஏங்கும்

அலைகடல் ஆர்ப்பரிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!