alaikadal-24

அலைகடல் – 24

விடிகாலை வானம் கரிய நிறத்தில் இருந்து சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம் கலந்த ஆடையை உடுத்த தயாராக, வழக்கமாக ஐந்தரை மணிக்கு எழும் ஆரவ் இரவு தாமதமாக உறங்கியதால் ஆறரை மணி வாக்கில் உறக்கம் கலைந்து விழித்தான். 

அருகே படுக்கை காலியாக இருக்கவும் சுவரில் இருக்கும் கடிகாரத்தில் நேரத்தைக் கண்டவன் தாமதமாக எழுந்ததை எண்ணி சுறுசுறுப்படைந்தான்.

இரவு உறக்கம் வரும்வரை கீழே படுத்து, நடுஜாமத்தை கடந்து தூக்கம் சொக்கிய பிறகே படுக்கையின் மறுஓரத்தை தஞ்சமடைந்திருந்தான்.

இன்று விடுமுறை எடுக்க மலையளவு ஆசை இருந்தாலும் தனக்காகக் காத்திருக்கும் வேலைகளின் நினைவில் அந்த நினைப்பை விரட்டிவிட்டான். 

நேற்று ஒருநாள் விடுமுறை எடுத்ததே பெரிய விஷயம். மற்ற நாட்கள் என்றால் எப்படியோ இன்னமும் மூன்று நாட்களில் சட்டமன்ற கூட்டம் கூடுவதால் மக்களுக்கு ஏற்றவாறு சில பல புதிய திட்டங்கள் இவனிடம் வந்திருக்கிறது. ஒவ்வொன்றையும் பார்த்து சிறப்பாய் இருப்பவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை யாரும் மறுக்க முடியாதபடி பக்காவாக தயாராக்க வேண்டும். 

இதற்கான வேலைகளில் முதலமைச்சர் அலுவலகமே மூழ்கியிருக்க, மனைவியிடம் நேரம் செலவழிப்பது காலையும் மாலை அல்லது இரவாகதான் இருக்கும். 

இருமனம் இணைந்து மணமுடித்திருந்தால் எப்படியோ! இப்போதைக்கு ஒரு மனம் மட்டும் இணைய துடியாய்துடிக்க, அதன்பொருட்டு பொன்னான காலை வேளைகளை அவளுடன் செலவழிக்க ஒதுக்கியிருந்தான். இனி அவனின் ஒவ்வொரு காலை வேளையும் படப்போகும் பாட்டை அறியாமல் உற்சாகத்தில் திளைத்தான் ஆரவ். 

அவசரமாய் பல்லை துலக்கி, முகம் கழுவி பூங்குழலியை தேடிச்சென்றான் அவன். பால்கனி, ஹால், தோட்டம், வேந்தனின் அறை என எங்கும் அவளைக் காணாதிருக்க மொட்டைமாடிக்கு ஓடினான் ஆரவ். 

அங்கும் அவள் இல்லையென்றதும் மெலிதாக பயம் சூழ, ஃபோனை எடுத்து செக்யூரிட்டிக்கு அழைக்க நினைக்கையில் கண்ணில்பட்டது அவள் இருக்கும் இடத்தை சொல்லும் குறுஞ்செய்தி.

ஒருவன் வீடு முழுதும் சல்லடையிட்டு தன்னைத் தேடிக்கொண்டிருக்கிறான் என்றறியாமல் கப்பலில் அணியும் கருப்பு நிற டீசர்ட் ஃபேண்ட் அணிந்து, கூந்தலை தன் ஆஸ்தான கொண்டைக்குள் அடக்கி, உடற்பயிற்சி கூடத்தில் இருக்கும் ஓடுபொறியில் (டிரெட்மில்) மிதமான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தாள் பூங்குழலி. 

அவளின் மூளை, ‘என்ன செய்வது? என்ன செய்வது?’ என்று வெகு தீவிரமாய் யோசித்துக்கொண்டிருந்தது. அதன் விளைவாக நெற்றி சுருங்கியிருக்க செய்யும் உடற்பயிற்சியால் ஆங்காங்கே வியர்வை பூத்து ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. 

எது செய்வதென்றாலும் ஆரவ் பற்றியும் அவன் பழக்கவழக்கங்கள் பற்றியும் ஒரு தெளிவு இல்லாமல் செய்ய முடியாதென்பதால் இன்று ஒருநாள் அதில் கவனம் செலுத்தி, குட்டாவின் வாயைக் கிளறி தனக்கு சாதகமாக ஏதேனும் சிக்குகிறதா? என்று பார்க்க முடிவெடுத்திருந்தாள்.

ஆரவ் வந்திருந்த குறுஞ்செய்தியைப் பார்த்ததும், “ஊப்ஸ்… ஜிம்ல பார்க்க மறந்துட்டேன். நேவி மேடம் பத்தி தெரிஞ்சும் மறந்து அங்கே போய் பார்க்காதது என் தப்புதான்” என்றவாறு ஆர்வத்துடன் அதைத்திறந்து பார்க்க, பூங்குழலியின் எடை அதில் பதிவாகி இருந்தது. 

எடை பார்க்கும் கருவி அவனின் செல்பேசியோடு இணைக்கப்பட்டிருந்ததே அவள் எடை பார்த்ததும் இங்கே குறுந்தகவலை அனுப்பி வைக்கக் காரணம்.

எடையை குறைக்கவோ அதிகரிக்கவோ மட்டுமே அவன் அந்த உடற்பயிற்சி அறையைப் பயன்படுத்துவதால் எடை பார்க்கும் கருவி தினமும் அவனின் மாற்றத்தை காண்பிக்க செல்பேசியோடு இணைக்கப்பட்டிருக்கும். வேண்டிய எடையை அடைந்ததும் உடற்பயிற்சியை நிறுத்தி காற்றாட தோட்டத்தில் ஜாகிங் செய்வதுதான் அவன் வழக்கம். 

அவ்வழக்கத்தை உடைத்து மனைவியுடன் உடற்பயிற்சி செய்யும் ஆசையில் கீழிறங்கிச்சென்றான் ஆரவ். 

சாய்வு நாற்காலியில் கை, கால்களை தளர்த்தி ஓய்வாக அமர்ந்திருந்த பூங்குழலியின் மோனநிலை கதவைத் திறந்து உள்ளே நுழைந்த ஆரவ்வினால் கலைக்கப்பட, சலனமற்ற பார்வையோடு அவனைக்கண்டு அங்கிருந்து எழுந்து செல்ல முயன்றவளின் கால்கள் சட்டென்று ஒலித்த பாடலால் தன் நடையைத் திடுமென தடுத்து நிறுத்தியது.

ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா

பிஇப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா

பிளைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா

வியர்வை உறிஞ்சிய ஆடை மேனியுடன் ஒட்டி சிக்கென்ற மேனியை மேலும் சிக்கென்று காட்ட, அவளின் அழகை கள்ளத்தனமாய் ரசித்தவாறு பிஇப்டி கேஜியில் இருந்து தானும் பாடத்தொடங்கினான்.

அவனின் இந்த திடீர் மாற்றம் பூங்குழலிக்கு சந்தேகத்தை சடுதியில் விதைத்தது. அதுவும் பிஇப்டி கேஜி தாஜ்மஹால் எனப் பாடுகையில் அவன் அவளை மேலிருந்து கீழாக பார்த்த காதல் பார்வை அவளுக்கு காதலை உணர்த்தாமல் வேறெதையோ உணர்த்தியதில் உள்ளுக்குள் திடுக்கிட்டுப் போனாள் பூங்குழலி.

சற்றுநேரம் முன்பே தான் எடை பார்த்திருக்க, ஐம்பது கிலோ நானூறு கிராம் வந்திருந்தது. ஏறிய அந்த நானூறு கிராமை குறைக்கவும் நினைத்திருந்தாள். அப்படியிருக்க, ‘தான் ஐம்பதுகிலோ என்பது இவனிற்கு தெரிகிறதென்றால் தன்னை இன்னும் கண்காணிக்கிறானா இவன்?’ என்ற எண்ணம் உதிக்கவும் அதற்குமேல் அங்கு நிற்காமல் வேகநடையில் வெளியேறினாள் பூங்குழலி.

அவள் தன்னைக் கண்டுகொண்டால் என்று அறிந்தவனோ அவள் எண்ணத்தின் போக்கை அறியாது, ‘என் மனதை உணர்ந்திருப்பாளா? பரவால்லயே… சண்டையிடாமல் அமைதியா போறா! என் விருப்பத்தை சொன்னால் தானே மறுப்ப? இதுபோல் உணர வைத்தால் என்ன செய்வ பூங்குழலி’ மனதில் குதூகலம் பொங்க அதில் ஏற்பட்ட  குஷியோடு மனைவி அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து காற்றில் பரவியிருந்த அவள் வாசத்தை மிச்சமின்றி உள்ளிழுத்தான் ஆரவ். 

இவன் காதல் உணர்ந்து மயங்க, அவள் அதை கண்காணிப்பு என்றுணர்ந்து வெறுக்க, இருவரின் எண்ணமும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பது என்றேனும் சாத்தியமாகுமா?

அன்று ஆரவ் அலுவலகம் சென்றபின் பொதுவாகப் பேசுவதுபோல தம்பியிடம் பேசி, வீட்டை அலசி ஆரவ்வைப் பற்றி பல தகவல்கள் திரட்டியிருந்தாள் பூங்குழலி. 

ஆனாலும் அது அவளுக்கு போதாது என்று தோன்றவே மீண்டும் மதியம் போல் தம்பியிடம், “குட்டா… என்ன இந்த வீட்டுல ஒரு போட்டோ கூட இல்லை. உங்க அண்ணாவோட பேமிலி போட்டோ எதுவும் இல்லையா?” என்று சாதாரணம்போல் கேட்டாள் இவள்.

“நான் இந்த வீட்டுக்கு வரும்போதே இப்படிதான் இருந்துச்சு பூமா. ஆனா அண்ணாவோட அம்மா போட்டோ பாத்திருக்கேன். ஒருநாள் நாங்க ரெண்டு பேரும் நம்ம வீட்டுல இருந்தப்போ நீ என்னை தலைக்குமேல ஒரு போட்டோல தூக்கியிருப்பியே… அந்த போட்டோ பார்த்துட்டு அவரே, ‘என்னையும் எங்கம்மா இப்படி தூக்கியிருக்குற போட்டோ இருக்கு’ என்று சொன்னாங்க. ஆனா கேட்டப்போ எல்லாம் காமிக்கவே இல்லை. நான் ரொம்ப அடம்பிடிச்சி பார்க்கணும்ன்னு சொன்னபிறகு அவங்க அம்மா போட்டோ காமிச்சாங்க… ஹப்பா செம அழகு தெரியுமா” என்றவனிடம் 

“இப்போ அந்த போட்டோ எங்கேடா?” குரலில் பரபரப்பை மறைத்து வினவினாள் பூங்குழலி.

“காமிச்சிட்டு திரும்ப ரூமக்கே கொண்டு போயிட்டாங்க… கஷ்டமா இருக்கும் போல பார்த்தால்” என்றான் தானே ஒரு காரணத்தை கற்பித்துக்கொண்டு. 

“ஒஹ்… சரி சரி” என்றாள் இவள். ஏன் மறைத்து வைத்திருக்கிறான் என்ற காரணத்தை ஊகித்து. வெளியே தெரிந்தால் அருள்ஜோதிக்கு அவரின் மகன் இவன்தானென தெரிந்துவிடுமே! 

ஆனாலும் பெத்த மகனை அடையாளம் தெரியாதா? சிறுவயதிலே பிரிந்திருப்பானோ என்னவோ. அதையும் கண்டுபிடிக்க வேண்டும் என்றெண்ணிக்கொண்டாள்.

அமைதியாய் இருந்தவளிடம், “பூமா… உனக்கு அண்ணாவ பிடிச்சிருக்கா?” என்றான் வேந்தன். தயங்கி தயங்கி என்றாலும் ஒருவழியாய் கேட்கவேண்டியதைக் கேட்டுவிட்டான். 

அதில் பாரமாகிய மனதை காண்பிக்காமல், “என்ன பேச்செல்லாம் பெரிய மனுஷத்தனமா இருக்கு? பிடிக்கலைன்னு சொன்னா சார் என்ன செய்வீங்களாம்?” என்றாள் முயன்று சகஜமாகிய குரலில். 

அதில் கலங்கிப்போன இளையவன், “பூமா… நான்…வந்து அண்ணா” ஆரவ்வின் காதலை சொல்ல வந்தவன், சொன்னால் எப்படி எடுப்பாளோ என்று திக்கித்திணற, பூங்குழலிக்குப் பாவமாய் போய்விட்டது. 

“பச்… சும்மா சொன்னேன்டா. அதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷன்” தலையைக் கலைத்து தட்டிவிட்டு பேச்சை மாற்றி வேந்தனை சமாதானம் செய்தவள் மனதினுள், ‘இப்போதே நாம பேசியதெல்லாம் ஒருவேளை அவனுக்கு தெரிந்தாலும் தெரிந்திருக்கும் பார்ப்போம் என்ன செய்கிறான் என்று. உன்னை இங்கிருந்து கூட்டிச்செல்ல ஒருநொடி போதும்தான். ஆனா நீ இன்னும் படித்து முடிக்காததால பாதுகாப்பா தங்க சரியான இடம் இன்னும் கிடைக்கலை குட்டா…  அப்படி மட்டும் கிடைக்கட்டும் இங்கிருந்து போயிருவோம்’ மனதில் இத்தனை எண்ணங்கள் ஓட வெளியே புன்னகையுடன் பூவேந்தனை பார்த்திருந்தாள். 

சற்றுநேரத்தில் எல்லாம் பூவேந்தன் டான்ஸ் கிளாஸ் சென்றுவிட, அறைக்குச் சென்றவள் அதை தலைகீழாய் போட்டுப் புரட்ட ஆரம்பித்தாள்.

சுவரை ஓட்டியபடி மூன்று அலமாரியிருக்க முதலாவதை திறந்தாள் பூங்குழலி. அதில் அவள் சற்றும் எதிர்பார்க்காத அளவு அவளுக்கு தேவையான புடவை, டீசர்ட், ஃபேண்ட், பாவாடை சட்டை என இதுவரை அவளைப் பார்த்திருந்த ஆடைகளில் அனைத்தையும் வாங்கி குமித்திருந்தான் ஆரவ். 

அவளின் பெட்டியில் பழைய உடைகள் எடுத்து வந்திருந்ததால் இதைத் திறந்து பார்க்கவும் இல்லை. ஏனோ கண்ணைக் கவரும் ஆடைகளில் ஒன்று கூட அவளின் மனதைக் கவராமல் போக, அனைத்தையும் தூக்கி சோபாவில் போட்டவள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உடைகளை அலமாரியில் அடுக்கிக்கொண்டாள். அரைவாசி கூட நிறையாமல் காலியாகவே இருந்து காற்றுவாங்கியது பெரும்பாலான இடம். 

அடுத்து ஆரவ்வின் அலமாரியைக் குடைந்தவள் வெறும் வெள்ளை சட்டையாகவும் அதுபோக கருப்பு ஜீன்ஸ், வீட்டில் போடுவதற்கு முழு ட்ராக் ஃபேண்ட் முதலானவையும் தொங்கிக்கொண்டிருக்க திருமணத்திற்கு போட்டிருந்த இரு உடைகள் மட்டும் பளிச்சென்று தனியாகக் காட்சியளித்தது.

வேறு எதுவும் இல்லாததால் மூன்றாம் அலமாரிக்கு வர, சாவித்துவாரம் இன்றி அதற்கு பதிலாக சிறிய கருப்பு பொட்டு போன்ற ஒன்றும் கூடவே இரும்பு கைப்பிடி சகிதம் வித்தியாசமாக இருந்தது அது. 

பார்த்ததும் அது ஒரு எலெக்ட்ரானிக் அலமாரி என்று தெரிய, தனக்கு தேவையான ஏதோ ஒன்று இதில்தான் இருக்கிறது என்பதை அழுத்தமாய் பதிவு செய்தது உள்ளுணர்வு. 

இதற்கான ரிமோட் கண்டிப்பாக இங்கிருக்காது என்று தெரியும். ஆரவ்வின் புத்திசாலித்தனத்தை பல்வேறு சூழ்நிலையில் கண்டவள் ஆதலால் கண்டிப்பாக அது அவனிடம்தான் இருக்கும் என்று உறுதியாகத் தெரிய, ‘பார்ப்போம்… எத்தனை நாள் இதுக்குள்ள இருக்கிறதை என்கிட்ட இருந்து காப்பாத்துறன்னு’ என்று கருவிக்கொண்டாள் பூங்குழலி. 

அலுவலகத்தில் இருந்து மாலை வீட்டிற்கு செல்ல கிளம்பியவனிற்கு எதிர்பாரா தொழில் சம்பந்த மீட்டிங் நகரவிடாமல் செய்ய, இரவு ஒன்பது மணிக்குதான் வீட்டினுள் நுழைந்தான் ஆரவ்.

வேந்தன் அவனுக்காக ஹாலில் டீவி பார்த்தபடி வழக்கம்போல் காத்திருக்க, மனைவியோ அங்கிருந்து பார்த்தால் தெரியும் டைனிங் டேபிளில் அமர்ந்து கர்மசிரத்தையாய் உண்டுக்கொண்டிருந்தாள். அனைத்தும் உல்டாவாக நடப்பதைப் பார்த்ததும் சிரிப்புதான் வந்தது. 

மேலே போய் உடைமாற்றி வருவதற்குள் பூங்குழலி கிளம்பிவிடுவாள் என்பதால், “வேந்தா… வா சாப்பிடலாம்” என்றவாறு கையைக்கழுவி வந்தமர, கடைசி சப்பாத்தியில் இருந்தாள் பூங்குழலி. 

ஐந்து நிமிடங்களில் முடித்து எழ பார்த்தவளிடம் ஆரவ்வின் கண் அசைவை உணர்ந்து கூடுதலாக ஒரு சப்பாத்தியை அவளின்தட்டில் வைத்தவாறு, “இன்னும் ஒன்னு சாப்பிடு பூமா” என்று உபசரித்தான் பூவேந்தன். 

அவளோ, “டேய்…” என்று கத்தி, “இதுக்குமேல என்னால முடியாது நீயே தின்னு” என்றவாறு அதை தம்பியின் தட்டிலேயே வைத்துவிட்டு செல்ல, திட்டம் தோல்வியைத் தழுவியதில் ஆரவ்விடம் உதடுபிதுக்கி இடம் வலமாய் தலையாட்டியவாறு தமக்கை வைத்த சப்பாத்தியை ஒருவாய் பிய்க்கப்போனான் பூவேந்தன்.

அதற்குள் அவன் கையை தட்டிவிட்டு சப்பாத்தியை பிடுங்கிய ஆரவ் அதைக் கன அக்கறையாய் உண்ணத்துவங்க, இடது கையால் தலையில் அடித்து, “முத்திருச்சு அண்ணா உங்களுக்கு” என்று ஆரவ்விற்கு மட்டும் கேட்குமாறு கூறினான் வேந்தன். அதில் உதட்டோரம் புன்னகையில் துடிக்க கண்டுக்கொள்ளாமல் அன்று சற்று அதிகமாகவே உண்டான் ஆரவ். 

பூங்குழலி அறைக்குள் நுழைந்ததும் நேற்று போல் தாமதிக்காமல் ப்ரெஷ் அப் ஆகி ஏதாவது பேசுவோம் என்றெண்ணி உள்ளே நுழைய, அறை இருந்த கோலத்தைக் கண்டு வாசலிலே பேச்சின்றி நின்றுவிட்டான் அவன்.

ஆசை ஆசையாக வாங்கி அடுக்கிய அத்தனை துணிகளும் சோபாவில் தாறுமாறாக நிரம்பியிருக்க, இடப்பற்றாகுறையால் கீழேயும் பல புடவை, சட்டைகள் விழுந்திருந்தது.

தான் உடைகளை காண்பித்து, அவள் அதற்கு சண்டைக்கு வருவதை விட தானாகவே பார்த்துப் பயன்படுத்தட்டும் என்று கூறாமல் விட்டால் இப்படிதான் தூக்கி வீசுவதா? சட்டென்று கோபம் எட்டிப்பார்த்தாலும் அவளின் நிலையிலிருந்து யோசித்து அதை விரட்டியவன், அப்பொழுதுதான் படுக்கையில் படுக்க தயாரானவளிடம், “பூங்குழலி… எதுக்கு எல்லாத்தையும் இப்படி போட்டு வச்சிருக்க?” என்று பொறுமையாய் வினவினான்.

அவன் பொறுமையை சோதிக்கும் வகையில், “பிடிக்கலை…” என்று ஒற்றை வார்த்தையில் ரத்ன சுருக்கமாய் வந்தது பதில். 

“ஏன்… எல்லாமே நல்லாதானே இருக்கு?” குரல் சிறிது சத்தமாக வந்ததோ என்னமோ!

அதில் சுள்ளென்று, ‘அப்போ நீயே போடு’ என்று பதில் சொல்லத்தோன்றினாலும் அதைக் கூறாமல், “எனக்கு நல்லால” என்றாள் எரிச்சலாய். செய்வதெல்லாம் செய்துவிட்டு தயக்கமின்றி பேசுபவனைப் பார்த்தாலே பற்றிக்கொண்டு வந்தது. 

“அப்போ நீ நல்லா கவனிக்கலை… கண்ணையும் மூளையையும் வைத்துப் பார்க்காம கண்ணையும் மனசையும் திறந்து வைத்துப்பாரு பூங்குழலி. பிடிக்காதது கூட பிடிக்க ஆரம்பிக்கும்” துணிக்கு சொல்வதை போல் இருந்தாலும் அவனிற்கும் சேர்த்துதான் சொன்னான் ஆரவ். 

அதைப் புரியாமல், “என்ன தேவைக்கு? எனக்கு இருப்பதே போதும் புதுசா எதுவும் தேவையில்லை… இதுக்கு மேல பேசி என் மனநிலையை கெடுக்காதீங்க அமுதன்” என்றுவிட்டு படுத்துவிட்டாள்.

அமுதன் என்றுதான் கூப்பிட வேண்டும் என்று மனதில் பலமுறை உருப்போட்டதால் பூங்குழலியின் வாயில் சரளமாய் அமுதன் வந்திருந்தது. 

ஆனால் அவளின் அமுதன் என்ற அழைப்பும் அவளறியாமல் வந்த மரியாதையுமே ஆரவ்வின் புழுங்கிய மனதை அமைதிப்படுத்தப் போதுமானதாக இருக்க, குளித்து உடைமாற்றி அங்கிருந்த தண்ணீரைப் பருகியவன் அவளருகே வழக்கம்போல் நாலடி இடம்விட்டு படுத்தான். 

நாள் முழுதும் இருந்த இனிமை இரவில் ஆட்டம் கண்டாலும் ஓரளவு சுமூகமாவே முடிவடைந்தது அன்றைய தினம்.

அடுத்தநாள் காலையில் எழுந்த ஆரவ்வோ மணியைப் பார்த்ததும் அரக்க பறக்க எழுந்துவிட்டான். பின்னே ஐந்தரை ஆறரை ஆகி இப்போது ஏழு தாண்டி பத்து நிமிடம் சென்றிருந்ததே!

‘வர வர ரொம்ப தூங்குறேன்… சீக்கிரம் எழுந்து அவளுடன் ஜிம்க்கு போக நினைச்சா… ச்ச. இருப்பாளா போயிட்டாளா தெரியலையே. நாளையில் இருந்து அலாரம் வைக்கணும்’ மனம் அதன்போக்கில் கட்டளையிட, ஏறி இறங்கி இருந்த சட்டை ஃபேண்ட்டை சரியாக இழுத்துவிட்டு வெளியே போகப்பார்த்தவன் பல் விலக்காமல் செல்வது ஞாபகம் வர, ‘ஒஹ் மை பூங்குழலி’ என்று முனங்கியவாறு குளியறைக்குள் புகுந்தான் ஆரவ்.

அவன் சென்ற சில நிமிடங்களில் உடற்பயிற்சி முடித்து தன் செல்பேசிக்காக உள்ளே நுழைந்த பூங்குழலிக்கு அதனை எடுத்து செல்கையில் குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்க, நேற்று ஆரவ் பற்றி விசாரிக்கையில் குட்டா சொன்னது நினைவு வந்தது.

“அண்ணா டான்னு எட்டரை மணிக்கெல்லாம் கீழே கதவு பக்கம் இருக்குற ஆபிஸ் ரூம் வந்திருவாங்க தெரியுமா… இத்தனை வருசத்துல ஒருநாள் கூட லேட் ஆகுனதே இல்லை. கான்ஃபிடென்ட்டல், பெர்சனல் அந்த மாதிரி விஷயத்துக்கு இந்த நேரம் ஒதுக்குவாங்க. அப்புறம் ஒன்பது ஒன்பதரைக்கு கிளம்புனா வரதுக்கு ஈவினிங் இல்ல நைட் ஆகிரும்”

அவன் சொன்னதும் யாரின் கவனத்தையும் கவராமல் ஆபிஸ் ரூம் சென்று தேடியும் உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம். 

“டான்னு எட்டரைக்கு கீழே போகலைன்னா என்னாகும்?” சுருங்கிய புருவத்துடன் மெதுவே முனுமுனுத்தவள் தனக்குள் எழுந்த வீபரித யோசனையின் விளைவாக குளியலறையின் வெளிப்புற தாழ்ப்பாளை சத்தமின்றி பூட்டிவிட்டாள். 

பிறகு தான் அமர்வதற்குத் தோதான இடத்தை அறையினுள் துழாவ, சோபாவில் துணிகள் இருந்ததால் குளியறையின் நேர் எதிரே இருந்த கட்டிலிலே ஜம்மென்று அமர்ந்து கைகளை பின்னால் ஊன்றினாள். 

உடல் எடையை கைகள் தாங்க, தொங்கிக்கொண்டிருந்த கால்களை ஒன்றன் மேல் ஒன்றாக போட்டு ஒருவித கிண்டலான புன்னகையுடன் ஆரவ்வின் குரலிற்காக ஆவலுடன் காத்திருந்தாள் பூங்குழலி. 

அலைகடல் ஆர்ப்பரிக்கும்…