Oviyam 22

வேகமாக வீட்டிற்குள் வந்த அர்ச்சனா செழியனும் மாதவியும் ஹாலில் இருப்பதைப் பார்த்துவிட்டு மாதவியிடம் வந்தாள். அவர்கள் இருவரும் அப்போதுதான் மாதவியின் வீட்டிலிருந்து திரும்பி இருந்தார்கள். கற்பகமும் அங்கேதான் அமர்ந்திருந்தார்.”ஏன் அண்ணி இப்படிப் பண்ணினீங்க?”

“என்ன அர்ச்சனா?” மாதவி கேட்டுக் கொண்டிருக்கும் போதே அர்ச்சனாவின் கண்கள் குளமாகிப் போனது.

“ஐயையோ! என்ன ஆச்சு அர்ச்சனா?”

“நீங்க எதுவும் பேசாதீங்க அண்ணி. நினைச்சதைச் சாதிச்சிட்டீங்க இல்லை?”

“என்ன சொல்றே அர்ச்சனா? எனக்குப் புரியலை.”

“அருணைப் பார்த்து… இல்லையில்லை… உங்கத் தம்பியைப் பார்த்துட்டு வர்றேன். அப்படிச் சொன்னாத்தானே கரெக்டா இருக்கும்?” கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்தபடி பேசிக் கொண்டிருந்தாள் இளையவள். மாதவிக்குப் பாவமாகிப் போனது.

“எங்கக்காக்குப் பிடிக்கலைன்னா நீ எனக்கு வேணாம்னு அவன் வாயாலேயே சொல்லிட்டான். நீங்க சொல்ல வெச்சுட்டீங்க.” அர்ச்சனாவின் குற்றச்சாட்டில் மாதவி திடுக்கிட்டுப் போனாள். அருணிடம் அவள் எதுவுமே பேசவில்லையே!?

“ஏன் அண்ணி? இந்தா இருக்கிற அண்ணன் மேலே நீங்க எவ்வளவு உயிரா இருக்கீங்க? இதே அண்ணா ஒரு விஷயத்துக்காக உங்கக்கிட்ட அர்ச்சனாக்கு ஓகே ன்னு சொன்னாத்தான் எனக்கும் ஓகே ன்னு உங்கக்கிட்டச் சொன்னா உங்களுக்கு எவ்வளவு வலிக்கும்? அப்போ… இந்த மனுஷனுக்கு நாம அவ்வளவு தானான்னு உங்களுக்குத் தோணாது? வலிக்காது? அந்த வலியை ஏன் எனக்குக் குடுக்குறீங்க?” சொல்லிவிட்டு மாடியேறப் போனவளைத் தடுத்தது செழியனின் குரல்.

“அர்ச்சனா!” நின்றபடியே திரும்பிப் பார்த்தாள் பெண்.

“இங்க வந்து உக்காரு.”

“பரவாயில்லை… சொல்லுங்க.”

“இங்க வந்து உக்காரப் போறியா இல்லையா?” அந்த அதட்டல் வேலை செய்ய சோஃபாவில் வந்து அமர்ந்தாள் இளையவள். முகத்தில் கோபம் ஜொலித்தது.

“நீ இப்போப் பேசினதுக்கும் மாதவிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.”

“நீங்க எப்பத்தான் அண்ணியை விட்டுக் கொடுத்துருக்கீங்க?”

“நான் எதுக்கு எம் பொண்டாட்டியை விட்டுக் கொடுக்கணும்?”

“அங்க ஒருத்தன் அப்படித்தானே நடந்துக்கிறான்?”

“அது உன்னோட பிரச்சனை. சுத்தி இருக்கிறவங்க மாதவியை மட்டுமே சப்போர்ட் பண்ணுறாங்கன்னா அதுக்கு என்னக் காரணம்னு யோசி. நீ எங்க தவறு பண்ணுறேன்னு கண்டுபிடி. உன்னை நீயே திருத்து. அதை விட்டுட்டு எல்லாத்துக்கும் மாதவியைக் குத்தம் சொல்லாதே.” இப்போது அர்ச்சனாவின் தலைத் தானாகக் குனிந்தது. கற்பகம் எதுவும் பேசவில்லை. ஆனால் மாதவி தவித்துப் போனாள்.

“இன்னைக்கு டைனிங் டேபிள்ல வச்சு அப்பா, அண்ணன் இருக்கோங்கிற மரியாதையே இல்லாம உன்னோட லவ்வை அவ்வளவு தைரியமாச் சொல்றே. இதே மாதிரி மாதவி வீட்டுல மாதவி சொல்லி இருந்திருந்தா நீ இப்போச் சொல்லுற அதே அருண் மாதவியை அக்கான்னும் பார்க்காமக் கொலையே பண்ணி இருப்பான். அது தெரியுமா உனக்கு?”

“போதும் டாக்டர்… விடுங்க.”

“நீ சும்மா இரு மாதவி. அவ ஒன்னும் சின்னப் பொண்ணு கிடையாது. வாழ்க்கைன்னா என்னன்னு அவளுக்கும் தெரியணும்.‌ இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே படபடன்னு பேசிக்கிட்டு இருக்கப்போறா?” கணவனின் பேச்சில் நியாயம் இருந்ததால் மாதவி அதன்பிறகு எதுவும் பேசவில்லை.

“நீங்களும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டவர் தானேன்னு சொன்னே. ஆமா… இல்லேங்கலை. நீ கேட்டது நியாயம் எங்கிறதாலதான் நான் அதுக்கப்புறமா எதுவும் பேசலை. சம்பந்தப்பட்டது மாதவியோட தம்பி. அதாலதான் மாதவியும் பேசினா. இல்லைன்னா அப்பாக்கு முன்னாடி அவ வாயைத் தொறக்க மாட்டா. அது இத்தனை நாள்ல உனக்கே புரிஞ்சிருக்கும்.” அர்ச்சனா மௌனமாகவே இருந்தாள்.

“உனக்குப் பிடிச்சிருந்தா… அப்பா அம்மா சம்மதிச்சா, நீ ஆசைப்பட்டவனையே கட்டிக்கோ. ஆனா… நீ போகப்போற வீட்டுக்கு நீ சரியான ஆள்தானான்னு ஒரு முறை நல்லா யோசிச்சுக்கோ. அண்ணி தடுக்கிறா, அண்ணி வேணாங்குறான்னு குற்றப்பத்திரிகை படிக்காம அண்ணி எதுக்காக வேணாங்கிறான்னு யோசிச்சியா?” மயான அமைதி அப்போது அங்கே நிலவியது.

“அழகான பொண்ணு, வசதியான வீடு, டாக்டருக்குப் படிக்கிறா… இத்தனை இருந்தும் அண்ணி வேணாங்கிறான்னா… என்னக் காரணம்னு சிந்திக்க மாட்டியா? இதையெல்லாம் தாண்டி வாழ்க்கைங்கிறது வேற அர்ச்சனா. அம்மா மாதிரி அத்தை இருக்க மாட்டாங்க. இதேமாதிரி அங்கேயும் நடந்துக்கிட்டா அருணோட அம்மா சும்மாப் பார்த்துக்கிட்டு இருக்கமாட்டாங்க.”

“அத்தை எப்பவுமே என்னோட பாசமாத்தான் இருப்பாங்க.”

“இருப்பாங்க… எப்போ? அர்ச்சனா அவங்க பொண்ணோட நாத்தனார் எங்கிறப்போ மட்டும்தான். அதே அர்ச்சனா அருணோட பொண்டாட்டி எங்கிறப்போ அவங்க முகம் வேற மாதிரி இருக்கும். அவங்களுக்கும் அவங்க மருமகள் பத்தி நிறைய எதிர்பார்ப்பு இருக்குமில்லை?”

“அது மட்டுமில்லைங்க. ரெண்டு பேருக்கும் மூக்குக்கு மேலக் கோபம் வருது. பொறுமையே இல்லை.‌ யாராவது ஒருத்தர் விட்டுக் குடுக்கணும் இல்லை? இப்படியே மல்லுக்கு நின்னா எத்தனை நாளைக்கு இது தாக்குப்பிடிக்கும். நான் இதையெல்லாம் யோசிச்சேன் அர்ச்சனா. தப்பா இருந்தா அண்ணியை மன்னிச்சிடு.”

“இல்லை… அது…” மேலே என்னப் பேசுவதென்றுப் புரியாமல் இளையவள் மாடியை நோக்கிப் போய்விட்டாள்.

“மாதவி நீ வந்து சாப்பிடும்மா.”
“இல்லை அத்தை… நான் அப்புறமாச் சாப்பிடுறேன்.” சொல்லிவிட்டு மாதவியும் மேலே போய் விட்டாள். அம்மாவும் மகனும் பார்வைகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.

***
அதேவேளை…

அந்த ஃபாக்டரி அன்றைக்குப் படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காரணம் அவர்களுக்குக் கிடைத்திருந்த வெளிநாட்டு ஆர்டர். முதலாளி கருணாகரன் கூட அன்று மிகவும் மகிழ்ச்சியாகவே நடமாடிக் கொண்டிருந்தார்.

நல்ல மனநிலையில் இருந்ததாலோ என்னவோ, தன்னைப் பார்க்க ‘அருண்’ என்ற பையன் எந்த வித அப்பாயின்மென்ட்டும் இல்லாமல் சந்திக்க வந்திருக்கிறான் என்ற தகவல் கிடைத்த போதும் அவர் கோபப்படவில்லை. அமைதியாகவே தலையாட்டினார்.

ஒரு பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு உள்ளே வர அனுமதி கிடைத்தபோது அருண் ஒரு படபடப்புடனேயே உள்ளே போனான்.
எதிரே கம்பீரமாக கருணாகரன் அமர்ந்திருந்தார். மாதவிக்குக் கல்யாணம் ஆகி இருந்த இந்த இடைப்பட்ட காலத்தில் அருண் கருணாகரனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசியது கிடையாது. இதுநாள் வரை கருணாகரன் மாதவியின் மாமனார், அவ்வளவு தான். ஆனால் இன்று நிலைமை வேறு.

உள்ளே வந்த அருண் கருணாகரனுக்கு ‘குட் மார்னிங்’ சொன்னான். பதிலுக்கு அவரும் சொல்லிவிட்டு இருக்கையைக் காட்டினார். வேறு வழியிருக்கவில்லை, அமர்ந்து கொண்டான்.

“நான் அருண்…”

“அதான் தெரியுமே, செழியனோட மச்சினன்.”

“நான் அந்த அறிமுகத்தோட இப்போ உங்களைப் பார்க்க வரலை அங்கிள்.”

“ஓ…‌ சொல்லுங்க. வேலை கேட்டு வர வாய்ப்பில்லை. ஏன்னாத் தம்பி டாக்டர்னு எனக்குத் தெரியும்.” பேசிய அந்தக் குரலைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தான் அருண். கேலி கிண்டல் எதுவும் இருக்கவில்லை. நிதானமாகக் தான் பேசிக் கொண்டிருந்தார்.

“இப்போ இன்டர்ன் பண்ணிக்கிட்டு இருக்கேன். இன்னும் ஒரு வருஷத்துல சம்பாதிக்க ஆரம்பிச்சிடுவேன்.”

“நல்லது தம்பி… இதையெல்லாம் எதுக்கு இப்போ எங்கிட்டச் சொல்றீங்க?” நிதானமாக அவர் கேட்க இப்போது அருண் கொஞ்சம் திணறினான். மனிதர் தன்னை ஆழம் பார்க்கிறார் என்று நன்றாகவே புரிந்தது.

“நான் எதுக்காக இங்க வந்து இதையெல்லாம் உங்கக்கிட்டப் பேசுறேன்னு உங்களுக்கு நல்லாவேத் தெரியும். இருந்தாலும் நீங்க அதை என் வாயால கேக்கணும்னு ஆசைப்படுறீங்க. பரவாயில்லை… நானும் உங்கப் பொண்ணு அர்ச்சனாவும் லவ் பண்ணுறோம் அங்கிள். கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்.” தெளிவாக அருண் சொன்னபோது கருணாகரனின் பார்வையில் ஒரு மெச்சுதல் வந்து போனது. நாடியை லேசாகத் தடவிக் கொண்டார்.

“யாரைக் கேட்டு முடிவு பண்ணினீங்க?” இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல அருண் தாமதிக்கவில்லை.‌ அவன் முகத்தில் புன்முறுவல் ஒன்று வந்து உட்கார்ந்து கொண்டது. அக்காவைப் போலத் தம்பியும் பார்க்க லட்சணமாகத்தான் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டார் கருணாகரன்.

“இந்தக் கேள்வியை என்னைப் பார்த்துக் கேக்குற உரிமை இன்னும் உங்களுக்கு வரலை.‌ இதே கேள்வியை உங்க பொண்ணைப் பார்த்துக் கேட்டா அதுக்கு என்ன பதில் வரும்னு உங்களுக்குத் தெரியும் அங்கிள். அதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.”

“கேக்க உரிமை இல்லைன்னா எதுக்கு இப்போ எங்கிட்ட வந்து பேசி என்னோட நேரத்தை வீணடிக்குறீங்க?”

“இதைப்பத்தி இப்போ உங்ககிட்ட வந்து பேசுற ஐடியா எனக்கு இருக்கலை. ஆனா உங்கப் பொண்ணோட பொறுமையைப் பத்தித்தான் உங்களுக்கு நல்லாத் தெரியுமே?”

“……………..”

“இவ்வளவு காலமும் அப்பா அக்காவோட தயவுலதான் வாழ்ந்திருக்கேன். படிப்பு இப்போத்தான் முடிஞ்சிருக்கு. நல்ல இடத்துல ஜாயின் பண்ணி சம்பாதிக்கணும். அக்காக்கு குழந்தைப் பொறக்கப் போகுது. அப்பாக்கு இனியும் எந்தக் கஷ்டத்தையும் குடுக்காம அக்காக்கு எல்லாமே நான் தான் இனிப் பண்ணணும். அத்தானோடப் பேசி சரியான கைடன்ஸோட மேலே படிக்கணும். நிறையவே சம்பாதிக்கணும். அப்போத்தான் நீங்க உங்கப் பொண்ணுக்குக் குடுத்திருக்கிற வாழ்க்கையில பாதியையாவது என்னால குடுக்க முடியும். இதுக்கெல்லாம் குறைஞ்சது ஒரு அஞ்சு வருஷமாவது தேவைப்படும். அப்போ அர்ச்சனாவும் இன்டர்ன் ஆரம்பிச்சிருப்பா. அந்த டைம்ல உங்கக்கிட்ட வந்து பொண்ணுக் கேக்கலாம்னு நினைச்சிருந்தேன். ஆனா அதுக்குள்ள அர்ச்சனா அவசரப்பட்டுட்டா.”

“………………..”

“நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன். உங்க டைமை எனக்காக ஒதுக்கினதுக்கு ரொம்பத் தான்க்ஸ் அங்கிள்.” சொல்லிவிட்டுக் கொஞ்சமும் தாமதிக்காமல் சட்டென்று வெளியே போய்விட்டான் அருண். கருணாகரன் முகத்தில் மெல்லிய கோடாய் ஒரு புன்னகை தோன்றியது. ஏதோ ஞாபகம் வந்தவர் போல மனைவியை அழைத்தார்.

“ஏம்மா உம்பொண்ணு எங்க? காலேஜ் கிளம்பிட்டாளா?”

“இல்லைங்க… செழியனோட மல்லுக்கு நின்னுட்டு ரூமுக்குள்ள போய்ப் புகுந்தவதான். அந்தப் பையனோடவும் ஏதோ சண்டைப் போட்டிருப்பாப் போல. அழுதுக்கிட்டே இருக்கா.”

“ம்…”

“ஏங்க?”

“அங்க அர்ச்சனாவோட சண்டைப் போட்டுட்டு இங்க எங்கிட்ட வந்து அவ்வளவு தைரியமாப் பொண்ணு கேக்குறான் பொடியன்.”

“என்ன!?”

“விடு… என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம். நாம பார்க்கப் பொறந்ததுங்க எல்லாம் என்னமா நம்மளையே எதிர்க்குதுங்க!”

“அது சரிதான்.” தம்பதிகள் அத்தோடு பேச்சை முடித்துக் கொண்டார்கள்.

0-0-0-0-0-0-0

இரண்டு நாட்கள் வீடு சற்றே அமைதியாக இருந்தது. வார இறுதி நாட்கள் என்பதால் அர்ச்சனா வீட்டில் தான் இருந்தாள்.‌ மாதவியால் ஹாஸ்பிடல் போக முடியவில்லை. அடிக்கடி சோர்வாக உணர்ந்தாள்.‌ வாந்தி மயக்கம் எதுவும் இருக்கவில்லை.‌ ஆனாலும் அவளால் முடியவில்லை.

செழியன் வழமை போல அவன் பணியில் தொலைந்து போயிருந்தான். ஆனால் முகத்தில் அடிக்கடி ஒரு சிந்தனை வந்து உட்கார்ந்து கொள்ளும். அது சாதாரண சிந்தனை போல கற்பகத்திற்குத் தோன்றவில்லை. தீவிர சிந்தனை. ஆனால் அதைக் கவனிக்கும் நிலையில் மாதவி இருக்கவில்லை. சதா கட்டிலில் சாய்ந்த படியே அவள் பொழுதுகள் கழிந்தன.

ஞாயிறு காலை. பத்து மணி போல எல்லோரும் காலை உணவிற்காக டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தார்கள். மாதவியால் பெரிதாக எதையும் உண்ண முடியவில்லை. இருந்தும் கணவனின் வற்புறுத்தலில் வந்து உட்கார்ந்திருந்தாள்.

“அம்மா…”

“சொல்லு செழியா.”

“நம்ம வீட்டுக்கு நாலு தெரு தள்ளி ஒரு ஆலமரம் இருக்கில்ல?”

“ஆமா… அதுக்கென்ன?”

“அதுக்குப் பக்கத்துல ஒரு பழைய வீடு இருக்கில்லை?”

“ஆமா…”

“அந்த வீடு விலைக்கு வருதும்மா.”

“ஓ…” கற்பகம் இப்போது கருணாகரனைப் பார்த்தார். மனிதர் எதுவும் பேசாமல் அமைதியாக உண்பதிலேயே இருந்தார்.

“அந்த வீட்டை நான் வாங்கலாம்னு யோசிக்கிறேம்மா.”

“ஓ… நல்லதுதான். மாதவிக்குப் பிடிச்சிருக்கா?” மாமியார் மருமகளைப் பார்க்க அவள் திருதிருவென விழித்தாள்.

“என்னப்பா? மாதவிக்கிட்ட நீ எதுவும் சொல்லலையா?”

“இல்லைம்மா… விஷயம் ஊர்ஜிதம் ஆனதும் எல்லார்கிட்டயும் சொல்லிக்கலாம்னு நினைச்சேன்.”

“ஓ… ஏங்க? நீங்க என்ன சொல்லுறீங்க?”

“நல்ல விஷயம் தானே? விலை படிஞ்சா வாங்குறது ஒன்னும் தப்பில்லை.”

“நான் வாங்குறதோட நிறுத்தலைப்பா. மாதவியும் நானும் அந்த வீட்டுக்கே போயிடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.” நிதானமாகச் சொன்னான் இளஞ்செழியன். எல்லோர் முகத்திலும் அதிர்ச்சி பாவம் என்றால் மாதவி மலைத்தே போனாள்!

“டாக்டர்!”

“உங்கிட்ட நான் அபிப்பிராயம் கேக்கலை மாதவி. என்னோட முடிவைச் சொல்றேன். அமைதியா இரு.”

“என்னடா செழியா பேச்சு இது? அவ என்ன உன் வீட்டு வேலைக்காரியா? மாதவிக்கிட்ட டிஸ்கஸ் பண்ணாம இதை நீ பண்ணினதே தப்பு. இதுல அவளை அதட்டுறே?”

“இந்த வீட்டு வேலைக்காரிக்குக் கூட இதை விட ஜாஸ்தியா மரியாதை இந்த வீட்டுல கிடைக்குதும்மா. அதால தான் இந்த முடிவே.”

“செழியா!?”

“இத்தனை நாளும் அப்பா மட்டும் தான் மாதவியை ஏதோ வேண்டாத பொருள் மாதிரிப் பார்த்தாங்க.” செழியனின் வார்த்தைகளில் கருணாகரன் திடுக்கிட்டுப் போனார்.

“ஆனா இப்போ அராச்சனாவும் மாதவியை எடுத்தெறிஞ்சு பேச ஆரம்பிச்சுட்டா. இதுவே மினிஸ்டர் வீட்டுல இருந்தோ, இல்லை அப்பாவோட பிஸினஸ் சொசைட்டியில இருந்தோ பொண்ணு எடுத்திருந்தா நீங்க எல்லாம் இப்படி நடந்திருப்பீங்களா?”

“செழியா! என்னப்பா பேசுற நீ?”

“நான் உங்களைத் தப்பா எதுவும் சொல்லலைம்மா. ஏன்னா எனக்காக மாதவியை செலெக்ட் பண்ணினதே நீங்க தானே? இல்லைன்னா நான் இன்னைக்கு இவ்வளவு சந்தோஷமா வாழ முடியுமா?”

“எல்லாம் சரிதான்பா…” செழியனிடம் பேசினாலும் கண்கள் கணவரையும் மகளையும் குத்திக் குதறியது.

“போதும்மா… என்னோட பொண்டாட்டியை இந்த வீட்டுல எல்லாரும் மதிக்காதது போதும். இனிமேலும் அவ இங்க இருந்தா நிலைமை இன்னும் மோசமாகும். பிரச்சனை வரும்.”

“அதுக்காக வேற வீட்டுக்குப் போகணுமாப்பா?”

“உங்களுக்குப் பக்கத்துலேயே இருக்கணும்னு தான் இந்த வீட்டைப் பழைய வீடுன்னாலும் பரவாயில்லைன்னு பார்த்தேன். இல்லைன்னா செழியனோட பொண்டாட்டி இருக்கவேண்டிய வீடு அது இல்லை.” இதை மகன் சொல்லும் போது அப்பாவின் முகத்தில் ஒரு கேலிப் புன்னகை வந்து போனது. நான் பெற்று, பார்த்துப் பார்த்து வளர்த்தது என்னிடமே பெருமை பேசுகிறது என்று நினைத்திருப்பார் போலும். இருந்தாலும் அவர் எதுவும் வாய்திறந்து பேசவில்லை.

அர்ச்சனா மூச்சு விடக்கூட மறந்து அமர்ந்திருந்தாள். ஏதோ குற்றம் செய்துவிட்ட பாவம் அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. கை தானாகச் சாப்பாட்டை அளைந்தது.

“என்னோட பிடிவாதத்தால தான் இந்தக் கல்யாணமே நடந்துச்சு. இப்படி நிறையச் சங்கடங்கள் வரும்னு தான் மாதவி விலகி விலகிப் போனா. ஆனா இப்போ அதுவே இங்க இருக்கிறவங்களுக்கு வாய்க்கு அவலாப் போச்சு.
ஆசைப்பட்டுக் கட்டிக்கிட்டா மட்டும் பத்தாதும்மா.‌ ஆசைப்பட்டுக் கட்டிக்கிட்டவளைக் கடைசி வரை நல்லா வச்சிருக்கணும்னு நான் நினைக்கிறேன்.” அத்தோடு பேச்சு முடிந்தது என்பது போல செழியன் எழுந்து போய்விட்டான். மாதவி மருண்டு போய் உட்கார்ந்திருந்தாள்.

அன்று பின்னேரமே மாதவியையும் அம்மாவையும் அழைத்துக் கொண்டு அந்த ஆலமரத்தடி வீட்டிற்கு வந்திருந்தான் இளஞ்செழியன்.
இவர்கள் வந்து சிறிது நேரத்திலெல்லாம் மாதவி வீட்டிலிருந்தும் வந்து சேர்ந்தார்கள். செழியன் தான் அவர்களை வரச் சொல்லி இருந்தான்
மாப்பிள்ளைப் புதிதாக வீடு வாங்கப் போகிறார் என்பதில் அவர்களுக்கு ரொம்பவே சந்தோஷம்.
பிரச்சனையின் ஆரம்பப் புள்ளி அவர்களுக்குத் தெரியாததால் மகிழ்ந்து போனார்கள். ஆனால் அருணுக்கு லேசாக மணியடித்தது.

வீடு நல்ல விசாலமாகப் பழைய அமைப்பில் இருந்தது. பாத்ரூமை மட்டும் கொஞ்சம் செப்பனிட்டுக் கொண்டால் போதும் என்று மாப்பிள்ளையும் மாமனாரும் பேசிக் கொண்டார்கள்.

அம்மாவும் மகளும் இன்னுமொரு புறம் பேசிக்கொண்டிருக்க அருண் கற்பகத்தைத் தேடி வந்தான். வாசல் புறமாக ஏதோ பண்ணிக் கொண்டிருந்தார் கற்பகம்.

“அத்தை…” அருணுக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. இருந்தாலும் பேசித்தானே ஆகவேண்டும்.

“சொல்லு அருண்.” சாதாரணமாகச் சொன்னாலும் அந்தக் குரலில் ஏதோ குறைவது போல இருந்தது அருணுக்கு.

“சாரி அத்தை.”
“எதுக்கு அருண்?”

“நான்… நான் உங்கக்கிட்ட ஆரம்பத்துலேயே பேசி இருக்கணும்.”

“அது உனக்கு இப்பத்தான் தோணுதா?”

“அத்தை… இந்த அளவுக்குப் போகும்னு நான் எதிர்பார்க்கலை.”

“வீட்டுல வேற யாருக்காவது தெரியுமா?”

“இல்லை…”

“நல்லது… இப்போதைக்குத் தெரிய வேணாம்.”

“அத்தை?”

“எதுக்கு அவங்களையும் வீணாக் கலவரப் படுத்தணும் அருண்?”

“எம்மேல கோபமா இருக்கீங்களா அத்தை?”

“எல்லார் மேலயும் கோபம் வருது அருண். இந்த செழியன் பார்க்குற வேலையைப் பார்த்தியா? வீடு வாங்குறது சரி… ஆனா இங்கயே குடி வரப்போறானாம்.”

“நான் அத்தான்கிட்டப் பேசுறேன் அத்தை.”

“யாரு பேசினாலும் கேக்க மாட்டான். அவன் முடிவெடுத்தா எடுத்தது தான்.” அருணுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.

“அத்தை… நான் ஒதுங்கிப் போக எவ்வளவோ முயற்சி பண்ணினேன்.”

“நான் உன்னை மட்டும் தப்புச் சொல்ல மாட்டேன் அருண்.
அர்ச்சனாவைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். நான் பெத்தது ரெண்டுக்கும் எங்க இருந்துதான் இவ்வளவு பிடிவாதம் வந்துச்சோ?”

“இருந்தாலும்… என்னோட நிலைமை தெரிஞ்சு நான் விலகி இருக்கணும் அத்தை.”

“ஃபாக்டரிக்குப் போயிருந்தியா?”

“ம்…”

“கொஞ்சம் அவசரப்பட்டுட்டியோ?”

“இல்லை… எனக்கு அப்படித் தோணலை அத்தை.”

“ம்…”

“அங்கிளுக்கு எதுவோ தெரிஞ்சிருக்கு. அதான் அர்ச்சனா வாயைப் புடுங்கி இருக்காங்க. இந்த அவசரக் குடுக்கையும் போட்டு உடைச்சிருக்கு.”

“ம்… அர்ச்சனா பேசப்போக அதுக்கு மாதவி பதில் சொல்லன்னு பெரிய குழப்பமே ஆகிப் போச்சு.”

“அத்தான் சொன்னாங்க.”

“அதையும் மாதவிதான் சொன்னான்னு இவ சத்தம் போட இந்த வீட்டுல யாரும் எம் பொண்டாட்டியை மதிக்கிறதில்லைன்னு இவன் வீடு வாங்கக் கிளம்பிட்டான். இதுக்கு நடுவுல என் தலைதான் உருளுது அருண்.”

“நான் பேசுறேன் அத்தை. நீங்கக் கவலைப்படாதீங்க.”

“ம்ஹூம்… அவன் முடிவெடுத்துட்டான். இனி யாரு சொன்னாலும் கேக்க மாட்டான் அருண்.”

“அர்ச்சனா எங்க அத்தை?”

“வீட்டுல தான் இருக்கா. ரெண்டு நாளா ஒரே அழுகை. ஒழுங்காச் சாப்பிடலை. யார் கூடவும் பேசவும் இல்லை.”

“நானும் ஃபோன் பண்ணினேன் அத்தை. ஆன்சர் பண்ணவே இல்லை.”

“ம்… உம்மேல கோபமா இருக்கான்னு நினைக்கிறேன். அருண்… நான் ஒன்னு கேட்டாத் தப்பா எடுத்துக்க மாட்டியே?”

“கேளுங்க அத்தை.”

“நீ உண்மையாவே அர்ச்சனாவை நேசிக்கிறியா?”

“அத்தை… என்ன கேள்வி இது?”

“எனக்கு இப்போ இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும் அருண். சொல்லு… மாதவி மாதிரி ஒரு பொண்ணோட தம்பிக்கு அர்ச்சனா மாதிரி ஒரு பொண்ணைப் பிடிக்குமா? அதை அந்தப் பையனோட வீட்டுல ஏத்துப்பாங்களா?”

“ஏன்? அர்ச்சனாக்கு என்னக் குறை? அவளை எங்க வீட்டுல எல்லாருக்குமே பிடிக்கும். என்ன… கொஞ்சம் கோபப்படுவா, சட்டு சட்டுன்னு பேசிடுவா. ஏன்? அதே தவறை நான் பண்ணலையா?”

“ம்… அப்போ இனிமே அவளைத் திட்டாத அருண். செல்லமா வளர்ந்துட்டா. பொறுமை எங்கிறது மருந்துக்கும் கிடையாது. ஆனா நீ சொல்லித் திருத்து… கேட்டுக்குவா. ஆனா உன்னோட நிராகரிப்பை அவளால தாங்க முடியலை. எம் பொண்ணு இத்தனை காலத்துல இவ்வளவு வருத்தப்பட்டு நான் பார்த்ததில்லை.” பேசிக் கொண்டிருக்கும்போதே கற்பகத்தின் கண்கள் கலங்கிவிட்டன.

“அத்தை… சாரி. ஏதோ ஒரு கோபத்துல அர்ச்சனாக்கிட்டக் கத்திட்டேன். இனிப் பார்த்து நடந்துக்கிறேன் அத்தை.”

“சரி விடு. விளக்கு எடுத்துக்கிட்டு வரணும். வா அருண், வீடு வரைக்கும் போய்ட்டு வரலாம்.” மருமகனோடு வெளியே வந்தவர்,

“செழியா… விளக்கும், கோலப் பொடியும் எடுத்துக்கிட்டு வந்தர்றோம்.” என்று சத்தமாகக் குரல் கொடுத்துவிட்டு பொடி நடையாக வீடு வந்து சேர்ந்தார்.

“அத்தை… அங்கிள்?”

“இல்லையில்லை… வெளியே போயிட்டார். மாடில தான் இருப்பா, போய் பேசு.” சொல்லிவிட்டு கற்பகம் ஸ்டோர் ரூமிற்குள் போகும் போதே அர்ச்சனா பெருங்குரலெடுத்துக் கத்துவது கேட்டது.

“இப்போ நீ எதுக்கு இங்க வந்தே?” கற்பகம் காதுகள் இரண்டையும் கைகளால் பொத்தியபடி ஸ்டோர் ரூம் கதவை மூடிக்கொண்டார். முகத்தில் அத்தனை கவலைத் தெரிந்தது.

“வெளியே போ அருண்! எதுக்கு இங்க வந்திருக்கே? உங்கக்கா பர்மிஷன் குடுத்துட்டாங்களா? பரவாயில்லை… போனாப் போகுது… அந்த லூசைப் போய் பார்த்துட்டு வான்னு சொன்னாங்களா?”

“அர்ச்சனா… ப்ளீஸ்…”

“நீ எதுவும் பேசாதே! முதல்ல இங்க இருந்து போ.”

“அர்ச்சனா!”

“போன்னு சொல்றேன் இல்லை. மாதவி பிச்சைப் போட்டுத்தான் அருண் எனக்குக் கிடைப்பான்னா அந்த அருண் எனக்குத் தேவையில்லை.” பேசிய படியே ரூமிற்குள் போய் கதவைச் சாத்திக் கொள்ளப் போனவளைத் தடுத்தவன் அவளை இழுத்து அணைத்து அவள் வாயடைத்திருந்தான்.

ஒரு சில கணங்கள் போராடி அவனை உதறப் பார்த்தவள் அது முடியாமற் போகவும் நீயே கதியென்று அவனோடு இணைந்து கொண்டாள். அருண் அவளை இன்னும் தனக்குள் புதைத்துக் கொண்டான்.

“ஸாரிடா செல்லம்.” அவன் மார்பில் கண்மூடி அமைதியாக இருந்தவள் அந்த வார்த்தைகளில் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள். அருணிற்கும் கண்கள் கலங்கிப் போனது.

“ஏய்! அர்ச்சனா… இங்கப்பாரு. அழாதடி.”

“உனக்கு என்னை விட உங்கக்காதான் பெரிசு இல்லை அருண்?” கேவல்களுக்கு இடையே வார்த்தைகள் வந்தது.

“இல்லைடா… எனக்கு நீதான் முக்கியம். மத்தவங்க எல்லாம் அப்புறம்தான் போதுமா?”

“பொய் சொல்லாதே. அது எங்கண்ணாக்கு. பார்த்தியா? பொண்டாட்டியை ஒரு வார்த்தை சொல்லிட்டேனாம். வீட்டையே மாத்துறார். அதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்டா.”

“சரி… இனிமே உன்னை யாராவது ஏதாவது சொன்னா அதுக்கப்புறம் பாரு. இந்த அருண் என்னப் பண்ணுறான்னு.”

“ஆமா… கிழிச்சே நீ…”

“அப்படி இல்லைடி அர்ச்சனா. மாதவியைப் பத்தி இன்னும் உனக்குச் சரியாத் தெரியலைடி. உன்னோட அருணுக்காக அவ எவ்வளவு பண்ணி இருக்காத் தெரியுமா? நைட் டியூட்டி போனா சாலரி ஜாஸ்தியா வரும்னு எனக்காக நைட் டியூட்டி பார்த்தவடி அவ.”

“ம்…” அப்போதும் அவள் குரல் இறங்கி வரவில்லை.

“அதுக்கெல்லாம் நாம திரும்ப நிறையப் பண்ணணும்டி.”

“சரி… எம்பேர்ல இருக்கிற ப்ராப்பர்ட்டி ஒன்னை அண்ணி பேருக்கு மாத்திக் குடுத்துடலாம்.”

“ஏன்டீ!? நாளைக்கு எனக்கும் இப்படி ஏதாவது குடுத்துத்தான் கணக்கை நேர் பண்ணுவியா?”

“டேய்!”

“பின்ன நான் என்னப் பேசுறேன், நீ என்ன சொல்லுறே?”

“……………..”

“இன்னைக்கு நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு நான் ஒரு டாக்டர்னு உங்கப்பா முன்னாடி போய் நிக்குறேன்னா அதுக்கு அவளும் ஒரு காரணம்.”

“அப்பாவைப் பார்த்தியா அருண்?”

“ம்… உன்கிட்ட சண்டைப் போட்டுட்டு நேரா ஃபாக்டரிக்குத் தான் போனேன்.”

“அப்படியா?”

“ம்…”

“என்ன சொன்னார்?”

“அவர் என்னத்தைச் சொல்ல? நான்தான் சொன்னேன். ஒரு அஞ்சு வருஷம் டைம் குடுங்க. அதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சிட்டு உங்கப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னேன்.”

“ஓ… எங்கிட்ட அவ்வளவு கத்திட்டு அங்கப் போய் எங்கப்பாக்கிட்டப் பொண்ணுக் கேப்பியா?”

“எம் பொண்டாட்டிக்கிட்டக் கத்தாம ரோட்டுல போறவக்கிட்டயா கத்த முடியும்?”

“ஓ… கத்தித்தான் பாரேன். உன்னோட கண்ணை நோண்டிர்றேன்.” அவனிடம் அதீத உரிமை எடுத்துக் கொண்டவளின் தலையை மெதுவாக நீவிக் கொடுத்தான் அருண்.

“அர்ச்சனா…”

“ம்…”

“நீ இன்னும் சின்னப் பொண்ணு இல்லைடா. இப்படிக் கோபப்படுறது, சட்டுன்னு வாய்க்கு வந்ததைப் பேசுறது இதையெல்லாம் படிப்படியாக் குறைச்சுக்கணும், புரியுதா?”

“ம்…”

“நானும் உன்னை மாதிரியே பிஹேவ் பண்ணுறேன். நாம ரெண்டு பேருமே இனி நம்மைக் கொஞ்சம் திருத்திக்கணும்.”

“ம்…”

“நான் கோபப்படும் போது நீ எனக்குப் பொறுமையா எடுத்துச் சொல்லணும், புரியுதா?”

“ம்…”

“மாதவி பாவம்டி. அவளைத் திட்டாத. இந்த அருண் மொத்தமா உனக்குத்தான்.‌ நீயாப் பார்த்து எங்கம்மா அப்பாக்கும், மாதவிக்கும் கொஞ்சமா விட்டுக் குடுத்தாத்தான் உண்டு. இல்லைன்னா அதுவும் இல்லை.”

“நிஜமாவா?”

“ம்…”

“சரி… அதை அப்போ இன்னொரு முறை நான் நம்புற மாதிரி ஏதாவது பண்ணி நிரூபி.” அவள் எங்கே வருகிறாள் என்று புரிந்தவன், அவள் முகத்தை நிமிர்த்தி அவன் மொத்தமாக அவளுக்குத்தான் என்று நிதானமாக நிரூபித்தான்.

“இப்போ நம்புறியா?”

“ம்…”

“கிளம்பு… அத்தைக் கீழே காத்துக்கிட்டு இருப்பாங்க. லேட்டாகுது.”

“அம்மாவோட வந்தியா?!”

“ம்…”

“ஐயையோ!” இருவரும் படியில் இறங்கி வந்து கொண்டிருக்க கற்பகம் கையில் விளக்கோடு கீழே நின்றிருந்தார். அம்மாவைக் காணவும் அருணின் கையைச் சட்டென்று விட்டவள் நல்ல பெண் போல பவ்வியமாக இறக்கி வந்தாள்.

error: Content is protected !!