Alaikadal 8

அலைகடல் – 8

தெள்ளிய நீரோட்டம் பல தடைகள் தாண்டி கடலைச் சேர்வது போல் ஆரவ்வின் கட்சி ஆளும் கட்சியால் ஏற்பட்ட பல்வேறு தடைகளைக் கடந்து இறுதியாக தேர்தலில் போட்டியிடும் தகுதியைப் பெற்றேவிட்டது.

அதனைக் கொண்டாடும் வகையில் கட்சியின் தொடக்க அறிமுக விழாவிற்காக மிகப்பெரிய திடலில் பொதுக்கூட்டம் நடத்தும் ஏற்பாடு கிட்டதட்ட முடியும் தருவாயில் இருக்க அதனை நேரில் பார்வையிட சென்றுக்கொண்டிருந்தான் ஆரவ்.

முன்னே மற்றும் பின்னே மற்றவர்கள் கவனத்தை கவராத வகையில் அவனின் பாதுகாப்புகாக தனியார் செக்யூரிட்டிகள் தொடர்ந்தனர்.

காரை லாவகமாக சென்னை ட்ராபிக்கில் செலுத்தியவன் அருகில் அமர்ந்திருந்த செயலாளரிடம், “வினோத்… எவ்ளோ செலவானாலும் சரி பொதுக்கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தாலும் அதெல்லாம் பத்தாது. எனக்கு செக்யூரிட்டி ஏற்பாடு பண்ணுன அதே ஏஜென்சில ஒரு நூறு பேரை அன்னக்கி செக்யூரிட்டி கார்ட்டா போட சொல்லு. அவங்க மக்களை மட்டும் இல்லை போலீசையும் கண்காணிக்கணும். எதாச்சும் தப்பா இருந்தா உடனே அப்புறபடுத்துர மாதிரி இருக்கனும்”

“ஓகே சார். எல்லாமே நான் பாத்துக்குறேன். அப்புறம் சார்… உங்களுக்கு செக்யூரிட்டி போட்டாலும் நீங்களும் கொஞ்சம் எலக்க்ஷன் முடியுற வரை கவனமா இருங்க. ஏன்னா அர்ஜுன் உங்க மேல கொலைவெறில சுத்துறதா நியூஸ் வந்திருக்கு. இதுவரை கட்சி ஆரம்பிக்க தொந்தரவு குடுத்தானே தவிர உங்களை ஒன்னும் பண்ணலை. ஆனா இனியும் அப்படி இருப்பான்னு சொல்ல முடியாது”

“யாஹ் எனக்கு தெரியும்… சில்லி பாய் ஆரம்பத்துல இருந்தே ரொம்பதான் துள்ளிட்டு இருக்கான். அவனை கண்காணிக்கவும் ஆள் இருக்கு அவன் என்ன பண்ணுனாலும் எனக்கு சுடசுட நியூஸ் வந்துரும். டோன்ட் வொர்ரி அபௌட் மீ” என்றான் அலட்சியமாய்.

அலட்சியம் என்றும் ஆபத்துதான். அதிலும் எதிரி யார் என முன்னமே தெரிந்தும் கொள்ளும் அலட்சியம், நம் கண்ணை நாமே குத்திக்கொள்வதற்கு சமம்.

எந்த நேரத்தில் எதிரியானவன் பலம் கொண்டு எகிறி அடிப்பான் என்று தெரியவே தெரியாது. ஆரவ் எதிரியை அலட்சியமாய் எடைபோட, அர்ஜுன் கண்ணி வைத்து காத்திருந்தான். அது கண்ணி வைத்தவனிடம் வெடிக்காமல் கன்னியவளை வெடிக்க வைத்தது விதியின் செயலின்றி வேறென்ன?

ஒரு வழியாக அந்த ஆண்டின் கோடைவிடுமுறையும் ஆரம்பமாக சூரியனுடன் போட்டி போட்டுக்கொண்டு களத்தில் இறங்கிய தேர்தல் பிரச்சாரத்திலும் அனல் பறந்தது.

ஐந்தாண்டுக்கு முன் செய்த பிரசாரத்தை விட வாக்குறுதிகளும் இலவசங்களும் பன்மடங்கு அதிகரித்திருக்க இதற்கு காரணம் ஆரவ் என்று சொல்லவும் வேண்டுமோ?

அவனோ இவர்களின் பிரசாரத்தைக் கண்டுக்கொள்ளாமல் தன் படப்பிடிப்பை முடித்து நாளை நடக்கும் பொதுகூட்டத்தில் பேச வேண்டியதை டீபாவில் பரப்பி வைத்து பார்த்துக்கொண்டிருந்தான். அவனிற்கு என்னமோ இதுவும் படத்தில் பேசும் வசனமாகவே தெரிய சுவாரசியமின்றி சோம்பலாய் சாய்ந்தான்.

அவன் வெறுமனே இருப்பதைக் கண்டு வினோத், “சார்… என்னாச்சு இதெல்லாம் நல்லலையா?” என வினவ

“ச்ச ச்ச அப்படி இல்லை பட் இத்தனையும் நான் சொன்னா கண்டிப்பா முடிக்கிறதுக்குள்ள பாதி பேர் காணாம போயிருவாங்க” என்றான் சிரியாமல்.

“சார்…” வினோத் பாவமாய் பார்க்க

“ஹாஹா… வினோத் நாளைக்கு நடக்குற கூட்டம் அதிகபட்சம் ஒன்னரை இல்ல ரெண்டு மணிநேரம்தான் நடக்கணும். ஜஸ்ட் கட்சி பேர் அதோட சின்னம் கூடவே எதுக்காகன்னு சொல்லிட்டு போனா போதும்”

“சார் அப்போ உங்க ஸ்பீச்”

“ஹ்ம்ம் என்ன சொல்லலாம்… நான் உங்களுக்கு இதை செய்வேன் அதை தருவேன்னுலாம் நானே முடிவு பண்ணி உங்க மேல திணிக்க விரும்பலை. உங்களுக்கு என்ன வேணுமோ, எது இல்லையோ அதை தெரியப்படுத்தினால் நியாயமான கோரிக்கையா இருந்தா கண்டிப்பா நான் அதை நிறைவேற்றுவேன். நடிப்புக்கு கொடுத்த ஆதரவை நிஜத்துக்கும் குடுப்பீங்கன்னு நம்புறேன் லவ் யூ ஆல் மக்களே” என்றவாறு இருகையையும் குவித்து பறக்கும் முத்தத்தை பறக்கவிட

திகைத்துப்போய் பார்த்திருந்தான் வினோத்.

அவன் முகத்தருகே சொடக்கு போட்டவன், “என்ன வினோத் இப்படி பார்த்தா எப்படி ஓகே வா”

“ஓகே வா… சூப்பர் சார் ஒரு நிமிசத்துல ஒட்டு மொத்த உள்ளத்தையும் கொள்ளை கொள்ள போறீங்க” என்றவன் திடீரென எதையோ நினைத்து சிரிக்க

கேள்வியாய் பார்த்த ஆரவ்விடம், “சார் நாளைக்கு நீங்க இதை சொன்னதும் இதுவரை பிரசாரம் பண்ணுனவங்க நிலைமையை நினைச்சி பார்த்தேன் ஹாஹா சார் பேஸ்தடிச்சு நிக்க போறாங்க பாருங்களேன்” என

“அதுதானே எனக்கும் வேணும்” என்றான் மர்ம புன்னகையுடன்.

இதற்கிடையில் தான் செயல்படுத்தும் அனைத்து முயற்சிகளும் சொல்லிவைத்தது போல் தோல்வியைத் தழுவ சந்தேகத்தின் பேரில் தன்னைச் சுற்றி கண்காணித்தான் அர்ஜுன். வீட்டின் வெளியே ஆங்காங்கே புதிதாக ஆட்களின் நடமாட்டம் இருக்க ஒரு சில முகத்தை வெளியே செல்லும் இடங்களிலும் பார்க்க நேர்ந்தது.

ஆக தான் அவனைக் கண்காணிப்பது போல் பலமடங்கு அவனும் தன்னை கண்காணிக்கிறான் என்ற உண்மையைக் கண்டுபிடித்தவன் கூடவே போனில் பேசுவதும் ஒட்டுக் கேட்கபடுகிறதோ என்ற சந்தேகத்தின் பேரில் தன்னுடைய போன் மற்றும் சிம்மை புதிதாக மாற்றினான்.

அன்றைய இரவில் நாளை எப்படியேனும் ஆரவ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதை தடுக்க ஏன் தேர்தலில் கலந்துகொள்வதையே தடுக்கும் நோக்கில் அவனை கடத்தும் திட்டத்தைத் தீட்டினான்.

ஒருவேளை அவனிற்கு இருக்கும் பலத்த பாதுகாப்பில் அம்முயற்சி தோல்வியில் முடிந்தால் அவனைக் கொன்றுவிடும் மாற்று திட்டமும் உண்டு.

மனிதன் போட்டியில் வெற்றிபெற இரு வழிகளை தேர்ந்தெடுக்கலாம். ஒன்று விடாமுயற்சி மற்றொன்று தனக்கு நிகரான அல்லது தன்னைக்காட்டிலும் வலிமையான போட்டியாளரை நீக்குதல் மூலம்.
முதலில் உள்ளதை ஆரவ் தேர்ந்தெடுக்க பிரிதொன்றை அர்ஜுன் தேர்ந்தெடுத்தான். வெற்றி யாரை தேர்ந்தெடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
**************************************

மறுநாள் காலை பூவேந்தன் ஓய்வாக அமர்ந்து தாயிடம் எதையோ சொல்லிக்கொண்டிருந்த தமக்கையை அவள் மறுக்க மறுக்க வெளியே இழுத்து வந்தவன் காத்திருந்த தன் நண்பர்களிடம், “விக்கி வரவரைக்கும் அக்கா எங்க டீம். இப்போ விளையாடலாம் வாங்க” என

“பூ இருடா கொஞ்ச நேரம் கழிச்சு வரேன் ப்ளீஸ்”

“அதேதான் பூமா நானும் சொல்றேன் கொஞ்ச நேரம் ப்ளீஸ்” என்றான் அதிகாராமாய்.

“அட இவன் ஒருத்தன்” என சலித்தவாறு தேமே என அங்கும் இங்கும் சென்ற பந்தை தட்டிவிட அவளிற்கு இவர்களின் விளையாட்டைப் பார்க்கச் சிரிப்பாய் இருந்தது. கால்பந்து என்று பெயர் வைத்து கைபந்து கூடைபந்து என அனைத்தும் கலந்துகட்டி விளையாடி கால்பந்துதான் என சாதித்தனர் அனைவரும்.

இங்கு ஆரவ் உற்சாகத்தோடு காரைக்கிளப்ப எப்போதும் அருகில் இருக்கும் வினோத் ஆரவ் சொற்படி பொதுக்கூட்டத்திற்கு தேவையானவற்றை ஒருங்கிணைக்க முன்பே திடலுக்கு சென்றுவிட்டான்.

முன்னும் பின்னும் வாகனம் தகுந்த பாதுகாப்போடு சென்றுமே மக்கள் நடமாட்டம் குறைந்த அந்த பெரியதலைகளின் பகுதியை கடக்கும்முன் எங்கிருந்தோ வந்த நான்கு வாகனம் இவர்களை முற்றுகையிட அதில் இருந்து இருபதுக்கும் மேற்பட்டோர் சுற்றி வளைத்தனர்.

ஆரவ்வை இறங்காமல் உள்ளேயே இருக்கும்படி கூறிய பாதுகாவலர்கள் தங்களால் முடிந்த அளவு வந்தவர்களை புரட்டி போட அடிதாங்காமல் அங்காங்கே சிதறினர் அதையும் மீறி ஆரவ்வின் காரை அடித்து நொறுக்க நெருங்க பொறுமை இழந்து தன்னிடம் இருந்த லைசென்ஸ் துப்பாக்கியை எடுத்தவன் கண்ணாடியை இறக்கி தாறுமாறாய் பாதத்தில் சுட வந்தவர்கள் ஓடி குனிந்து நிமிடத்தில் தாங்கள் வந்த வாகனத்தில் மறைந்தே விட்டனர்.

சற்றுமுன்பு உற்சாகத்துடன் இருந்த முகத்தில் தற்போது கன்னாபின்னாவென்று கடுப்பு குடியேறியிருந்தது. ஒட்டுமொத்தமாய் அதனை கையில் சிக்கிய காரிடம் இறக்கி புயலென பறந்தான் ஆரவ்.

இத்தனை நேரமும் சொந்த வீட்டின் பின்புற வழியாக வெளியேறி தனக்கென ஏற்பாடு செய்திருந்த புதிய காரில் புறப்பட்டு தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்ததிருந்த அர்ஜுன் ஒரு சீழ்க்கையொலியுடன் பின்தொடர்ந்தான். அவனின் சீழ்க்கையொலிக்கான அர்த்தம் அடுத்த சில நொடிகளில் தெரிந்தது.

நடுரோட்டில் முன்னே செல்லும் லாரியைக் கண்டு ஆரவ் பிரேக் அழுத்த அதுவோ நிற்காமல் அதே நூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்ல ஸ்டியரிங்கை உடைத்து அருகே வந்த கிளைசாலையில் திருப்பினான் ஆரவ்.

அவனிற்கு தெரிந்துவிட்டது. எப்படியோ அந்த கலவரத்தில் பிரேக்கை கட் செய்து விட்டிருந்தனர். தற்போது யோசிக்கையில் அந்த கலவரமே பிரேக்கை கட் செய்யதானோ என தோன்ற ஓங்கி ஸ்டியரிங்கிலே குத்தினான் ஆரவ்.

கூடவே பதட்டப்படாமல் நிதானத்தோடு வேகத்தைக் குறைத்து ஹான்ட் பிரேக் பிடிக்க வேண்டும் என்றெண்ணி தவறான பாதையில் திரும்பியதால் கால் செய்த பின்னால் இருக்கும் பாதுகாவலரிடம் பிரச்சனையைச் சொல்ல அவர் பதறி

“நீங்க எப்படியாவது இப்போ போயிட்டு இருக்குற சாலை முடிவு வந்ததும் வலப்பக்கம் திரும்புங்க சார் அங்க சாலை கட்டுறதுக்காக மணல் கொட்டி வச்சிருக்காங்க கார் ஸ்பீட் குறைஞ்சிரும்” என்று விட்டு “சாரி சார் எப்படி பண்ணுனாங்கன்னே தெரியல” என்றார் சங்கடத்துடன்

“யூ **** இதுக்கு பரவால்லைன்னு சொல்லனுமா? இதுக்கா உங்களை பாதுகாப்புக்கு வச்சிருக்கேன் யூஸ்லெஸ் பெல்லொஸ்” பல்லை கடித்து திட்ட

இவன் வந்துக்கொண்டிருந்த சாலையில் பத்தடி தூரத்தில் குறுக்கே ஒரு பந்து பாய்ந்தது. அதனை எடுக்க வேகத்தோடு பூவேந்தன் சாலையைக் கடக்க

“ஒஹ் காட்” அவனின் கால் அன்னிச்சையாக வேகத்தை குறைக்க இல்லாத பிரேக்கை அழுத்த

“ஷிட்… இது வேற” என்றவன் அச்சிறுவன் பந்தினை எடுத்து நாலடி எடுத்து வைக்க இவன் போய் விடுவான் என்றெண்ணி ஓரமாக செல்ல ஆனால் அவனின் கணிப்பை தவறாக்கி இவனின் காரையும் பின்னால் வரும் பாதுகாவலரின் காரையும் பார்த்து அவன் பின்னே ஓடினான். வேகத்தை குறைக்க முடியாத வண்டியும் பின்னால் வந்தவனை இடித்து வீசியது.

பந்து ரோட்டைத் தாண்டியதும் ஓடிவந்த பூங்குழலியின் கண்ணில் கார் கண்ணாடி இறக்கியே இருந்ததால் ஆரவ் தெரிய வண்டியை நிறுத்தச்சொல்லும் முன் கண் முன்னே நடந்த விபத்தில் அவளின் சப்தநாடியும் ஒடுங்க பதறிப்போய் தம்பியை மடியில் கிடத்தியவள் தன் துப்பட்டாவினால் அடிபட்ட இடத்தை கட்டிப்போட்டபடி

“குட்டா இங்க பாரேன்… வலிக்குதாடா ஏதாச்சும் பேசு குட்டா எனக்கு பயமாயிருக்கு. உனக்கு ஒன்னும் ஆகாது… ஆகாது. யாராச்சும் ஆம்புலன்ஸ் கூப்பிடுங்க ப்ளீஸ்” என கதறிவிட்டாள்.

அமைதியாய் இருந்த அவ்விடம் இரத்தவெள்ளத்தில் இருந்த பூவேந்தனால் பரபரப்பாகியது. செய்தி கேள்விப்பட்டு வீட்டிலிருந்த சாந்தாவும் ஓடிவர தலை மூக்கில் இருந்து வெளியேறி மகளின் உடைமுழுதும் நனைந்திருந்த மகனின் உதிரத்தைக் கண்டு இதயத்தைப் பிடித்தவாறு மயங்கிச்சரிந்தார்.

பின்தொடர்ந்து வந்த அர்ஜுன் தன் புத்தம்புதிய காரை நிறுத்தி உதவி புரிய அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தாய் மகன் இருவருமே அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து என்றதும் விசாரிக்க வந்த ஏரியா காவலர், “யார் இதை பண்ணுனதுன்னு தெரியுமாம்மா வண்டி நம்…” எனும்போதே

“ஆரவ்… ஆக்டர் ஆரவ்தான் இப்படி பண்ணுனது” என்றாள் கண்களில் வழிந்த கண்ணீரை அழுந்த துடைத்து ஒரு தீவிர பாவத்தில்.

“என்ன? என்னம்மா சொன்ன ஆரவ்வா?”

“ஆமா ஆமா ஆமா. ஆரவ்தான் போங்க போய் அரஸ்ட் பண்ணுங்க” என கீறிச்சிட்டாள்.

“அவங்க இப்போ கூட்டத்துல கலந்துகிட்டு இருப்பாரு. என்னமா இடிச்சவன் பணம் குடுத்து இப்படி சொல்ல சொன்னானா? உண்மைய சொல்லு இல்லனா உன்னைதான் பிடிச்சி உள்ள போடுவாங்க. நான் போயிட்டு நாளைக்கு வரேன் அடுத்து யாரைச் சொல்லலாம்ன்னு யோசிச்சு வை ஆளப்பாரு” திட்டிவிட்டு அவர் சென்றுவிட

நடந்தது அப்படியே மேடையில் அமர்ந்திருந்த ஆரவ்வின் காதுக்குச் சென்றது.

சற்று யோசித்து வினோத்தை அருகில் அழைத்தவன் மெதுவே, “அர்ஜுன் அங்கதான் இருக்கான் என்ன நடந்தாலும் சரி இந்த விஷயம் வெளிய கசியக்கூடாது. பார்த்துக்கோ அண்ட் அந்த காரை கலர்ல இருந்து நம்பர் பிளேட் வரை கம்ப்ளீட்டா மாத்திரு” என
ஆமோதிப்பாய் தலையசைத்துச் சென்றான் வினோத்.

மருத்துவர் ஐசியூ வில் இருந்து வெளிவர, “டாக்டர் அம்மாக்கு என்னாச்சு? தம்பி இப்போ எப்படி இருக்கான்?”

“ரெண்டு பேர் கண்டிஷன்னும் இப்போ அபாய கட்டத்துலதான் இருக்கு. எது சொல்லணும்னாலும் குறைஞ்சது மூணு நாள் சென்றால்தான் சொல்லமுடியும்”

“டாக்டர்… அம்மா அம்மாக்கு…”

“உங்க அம்மாக்கு மாசிவ் ஹார்ட் அட்டாக். அதுவும் ஏற்கனவே இதயம் ரொம்ப பலவீனமா இருந்திருக்கு எப்படி பார்க்காம விட்டீங்க. கண்டிப்பா அடிக்கடி வலிச்சிருக்கும் ஏன் முன்னாடியே ட்ரீட்மென்ட் எடுக்கலை” என அவர் கேள்விகளால் துளைத்தெடுக்க

“இல்லை அப்படிலாம் வலிச்ச…” எறிய குரல் நலிந்தது. ஒருவேளை வலித்திருக்குமோ நம்மிடம் சொல்லவில்லையோ என்றெண்ணி கலக்கத்தில் தொப்பென இருக்கையில் விழுந்தாள்.

அதன் பிறகு டாக்டரிடம் பேசியது பணம் கட்டியது போக இதர தேவைகளையெல்லாம் அர்ஜுனே கவனித்துக்கொண்டான் மனதில் வேறுவகையான திட்டத்துடன்.