Vanavil vazhkai 14

Vanavil vazhkai 14

வானவில் வாழ்க்கை கதையைப் படித்து தங்கள் கருத்துக்களையும் ஆதரவையும் தந்து கொண்டிருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் பானுமதியின் மனம் நிறைந்த வணக்கங்களும் நன்றிகளும். வானவில் வாழ்க்கை கதையில் இப்போது தான் ஒரு ஹீரோவே என்ட்ரி ஆகியிருக்காரு. இன்னும் அவர்களுக்குள் காதல் வர வேண்டும். அமுதாவின் ஐஎஏஸ் படிப்புக்கான கனவை நிறைவேற்றி, ரெட் லைட் ஏரியா போன்ற பகுதிகளில் விற்கப்படும் பெண்களை மீட்டெடுக்க வேண்டும். யாழினியின் குடும்பத்தைக் கண்டு பிடிக்க வேண்டும். அமுதா வாழ்க்கையை பூஞ்சோலையாக மாற்ற வேண்டும்.யாழினியின் குடும்பத்தை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களைப் பழி வாங்க வேண்டும். பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்க்க வேண்டும். பிறகு நான்கு திருமணங்கள் முடிக்க வேண்டும். அதனால் கதை இனி கொஞ்சம் பெரியதாகவே இருக்கும். தயை கூர்ந்து என்னை மன்னித்து எனக்கு தோள் கொடுத்து அரவணைத்துச் செல்லும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வணக்கங்களும் நன்றிகளும். என்றும் அன்புடன் பானுமதி.

பலராமன், அப்படி கடையில் அனைவர் முன்னும் திட்டியது, யாழினிக்கு அதிர்ச்சியாகி வாயடைத்துப் போனாள். கண்களில் நீர் ததும்ப ,” ஆதித்யாவிடம் நாளைக்கு வாங்க “, என்று கூறிவிட்டு விறுவிறுவென்று மேலே சென்று விட்டாள். அமுதா, தன் அப்பா இன்னும் அப்படியே தான் இருக்கிறார், “ கொஞ்சமும் மாறவில்லை, “ என்று நினைத்து, அவரை எரிப்பது போல் பார்த்து விட்டு, மேலே சென்றாள்.

யாழினி, மேலே போனவள் , தன் அறைக்குள் அடைந்து கொண்டாள். பலராமனின், பேச்சு அவளை நிலைகுலையச் செய்தது. இது நாள் வரை மறந்திருந்த தன் குடும்பத்தை, நினைத்து அழுதாள். பின், ‘ “வெண்பாவிற்கு போன் பண்ணி, எங்கே இருக்கிறாய்?,” என்று கேட்டாள். அவள், ‘ என்னடி குரலில் சுரத்தே இல்லை, என்றாள்.

நான் வீட்டிலே தான் இருக்கேன் என்றாள், வெண்பா. தன் ஹேன்ட் பேக்கை எடுத்துக் கொண்டு, வெளியே வந்தாள். அமுதா, “ சாரிடி, அப்பா, அப்படி உன்னிடம் பேசியதற்கு, நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் “, என்றாள். யாழினி, அவர் கேட்டதில் தப்பு ஒன்றும் இல்லையே, என்றாள்.

அவர் பொண்ணு இல்லையே, நான். “ நான் ஒரு அநாதை தானே, நான் என் லிமிட்டைத் தாண்டியது என் தவறு தான், நான் தான் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்”, என்றாள். அமுதா, நான் வெண்பா வீடு வரைக்கும் போயிட்டு வருகிறேன் என்றாள். அமுதா, எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள்.

இல்லை அமுதா, ‘ எனக்குக் கொஞ்சம் மனசு சரியில்லை , நான் போயிட்டு வருகிறேன், தடுக்காதே”, என்றாள். அதற்கு மேல் அமுதா , அவளைத் தடுக்கவில்லை. யாழினி, கீழே இறங்கி, ஒரு ஆட்டோவைப் பிடித்து, வெண்பா வீட்டிற்குச் சென்றாள். வெண்பா, வெளியே வந்து அவளை அழைத்துக் கொண்டு, உள்ளே சென்றாள்.

வெண்பா அம்மா, வாம்மா! இப்போ தான் உனக்கு வழி தெரிந்ததா? எங்கள் வீட்டுக்கு வர, என்று கேட்டார். அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா. அங்கே வேலை அதிகம் இருந்ததால், வர முடியவில்லை என்றாள். அவளுக்குப் பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தாள், வெண்பா.

அதை, வாங்கிக் குடித்தாள். வெண்பா, அவளைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றாள். வெண்பா,” யாழினியைப் பார்த்து என்ன பிரச்சனைடி?, என்று கேட்டாள். யாழினி, அதிர்ந்து வெண்பா முகத்தைப் பார்த்தாள் ! என்னடி அப்படிப் பார்க்கிறே?, நீ அந்த வீட்டில் எப்படி இருந்தேனு பார்த்தவள் தானே, நான்.

இப்போ, திடீர்னு வந்திருக்கிறே என்றால், ஏதோ ஒன்னு உன்னை அங்கே பாதிச்சிருக்கு, அப்படித் தானே! என்றாள். யாழினியும், நடந்த விவரங்களைக் கூறினாள். விடுடி, அவர் ஏதோ ஒரு வேகத்திலே, சொல்லியிருப்பாரு. இப்போ, அவர் உன்னை நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருப்பார், என்றாள்.

இல்லைடி, இனி நான் அங்கே இருக்க முடியாது. ஒன்னு ஹாஸ்டலில் தங்க வேண்டும், இல்லையென்றால் தனியாக வீடெடுத்துத் தங்க வேண்டும் என்றாள். ஏய் என்னடி ஆச்சு உனக்கு? ஏன் இப்படி எல்லாம் பேசுறே? என்றாள் வெண்பா. அவர் ஏதோ கோபத்தில் பேசிட்டாரு. அதைப் போய் பெரிசு பண்ணிக்கிட்டு இருக்கே என்றாள்.

“ இன்னோரு தடவை இந்த மாதிரிப் பேசினால், என்னால் தாங்க முடியாதுடி”, என்று கூறி அழுதாள். சரி சரி அழுகாதேடி, போய் முகத்தைக் கழுவிட்டு வா, என்று பாத்ரூமிற்குள் அனுப்பி வைத்தாள். அவள் வெளியே வந்தவுடன், சாப்பிடக் கூப்பிட்டுப் போனாள். சாப்பிட்டு முடித்தவுடன், கொஞ்ச நேரம் நான் தூங்கட்டுமாடி, என்று கேட்டாள்.

போய் தூங்குமா, என்றார் வெண்பாவின் அம்மா சாந்தா. அவள் போய், படுத்தவுடன் தன் குடும்பத்தை நினைத்து அழுதவள், அப்படியே தூங்கிப் போனாள். வெண்பா, அப்பா நடராஜனும், அண்ணன் கார்த்தியும் மதியச் சாப்பாட்டிற்கு வந்தார்கள். அவர்களிடம் வெண்பா, யாழினியின் முடிவைப் பற்றிக் கூறினாள்.

இதைக் கேட்ட கார்த்திக்குப் புரையேறிவிட்டது. வெண்பா,” அவன் மண்டையில் தட்டி, இவன் வேறே, ஏதாவது அதிர்ச்சியான தகவல் சொன்னால், புரைக்கேறிடும் என்று கூறித் தண்ணீரைக் குடிக்கக் கொடுத்தாள். அவனும், அதை வாங்கிக் குடித்தான். நீ என்னமா சொன்னே?, என்றார். கார்த்தி, “உடனே யாருக்கோ போன் செய்து, விவரத்தைக் கூறினான்.

“அங்கே, என்ன சொன்னார்களோ, அவன் உடனே அவன் அப்பாவிடம் கொடுத்தான். சொல்லுங்க என்றார் சிதம்பரம்; ம்ம்னு ம் மட்டும் கொட்டிக் கொண்டிருந்தார்; கடைசியில் ம்ம் நீங்க சொன்னபடியே செஞ்சிடுறேன்”, என்று சொல்லி போனை ஆப் செய்து விட்டு; உப் என்று மூச்சு விட்டார்

“என்ன சொன்னாங்க? என்று மூவரும் கேட்க, இப்போ யார் பாதுகாப்பில் இருக்கிறாளோ, அங்கேயே தான் தங்க வேண்டுமாம், மற்ற இடத்தில் பாதுகாப்பு இல்லையாம், நம் வீட்டில் கூட பாதுகாப்பு இல்லையாம்”, என்று கூறினார். அப்பா, ‘ அவள் எழுந்தவுடன் கேட்டால், என்ன சொல்வது?’, என்று கேட்டாள் வெண்பா.

அதற்குள், அமுதாவிடம் இருந்து போன் வந்தது. வெண்பாவிடம், அமுதா அழுது கொண்டே யாழினி, சாப்பிட்டாளா?, என்று கேட்டாள். ம்ம் சாப்பிட்டாள் அமுதா. நீ ஏன் அழுகிறே? என்றாள். அவள் இல்லாதது ரொம்ப கஷ்டமாயிருக்கு வெண்பா , என்றாள். அப்பா, எப்படி இருக்கிறார்? என்றாள். அவருக்கென்ன, நல்லாத் தான் இருக்கார், என்றாள்.

போனை ஸ்பீக்கரில் போடு என்றாள். அமுதா, ஸ்பீக்கர் ஆன் செய்தவுடன், யாழினி பேசியதைக் கூறினாள். அவ்வளவு தான் பலராமன், சாப்பிட்ட தட்டிலேயே கையைக் கழுவி விட்டு, காரை எடுத்துக் கொண்டு, கிளம்பும் போது, அமுதாவும் ஏறிக் கொண்டாள். இருவரும் வெண்பா, வீட்டிற்கு வந்தனர்.

அவர்களை வரவேற்று, குடிக்கப் பழச்சாறு கொடுத்து, அமர வைத்துப் பேசினர். நடராஜன், பலராமனிடம், யாழினி வேறு யாருமில்லை. எங்களுக்கு சொந்தம் தான். அது, “ யாழினிக்கே தெரியாது”. இப்போ தான், அவள் குடும்பத்து நபரிடம் பேசினேன். “ அவர்கள், அவள் உங்கள் பாதுகாப்பில் தான் இருக்க வேண்டும், “ என்று கூறினார்கள். இப்போதைக்கு வேறு எந்த விவரமும் நான் சொல்ல முடியாது.

தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள், என்றார் நடராஜன். பரவாயில்லை விடுங்கள். “ஏதோ பலமான காரணம் இருக்கப் போய்த் தானே சொல்ல மறுக்கிறீர்கள்”, என்று கூறினார். நான் யாழினியைப் பார்க்கலாமா என்றார். வெண்பா, அவர்களைக் கூட்டிச் சென்றாள். அவள், அழுதபடி தூங்கியது, பலராமன் நெஞ்சைப் பிசைய, அவள் தலையை வருடினார்.

அடுத்து அவர் செய்த காரியம், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது! யாழினியின் , கைகளைப் பிடித்து தன் கன்னத்தில் மாறி மாறி அடித்துக் கொண்டிருந்தார். அந்த சத்தத்தில் கண் விழித்த, யாழினி பலராமன் செய்ததைப் பார்த்து , மிரண்டு போனாள்.

வாரிச் சுருட்டி எழுந்து அமர்ந்தவள், “அப்பா! என்ன செய்றீங்க. கையை விடுங்க என்றாள்”. அப்பாவை மன்னிச்சிடும்மா. நான், ஏதோ கோபத்திலே பேசிட்டேன்டா. அப்பாவை மன்னிச்சிடுடா, வேணும்னா நீ என்னை இரண்டு அடி கூட அடிச்சிடுடா, ஆனால், அப்பாவை விட்டுட்டு வந்துடாதேடா, என்று அழுதார். வேணும்னா, உன் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன்டா, என்றவுடன், யாழினி வெண்பாவைப் பார்க்க, வெண்பா தலையைக் குனிந்து கொண்டாள்.

சின்னப் பிள்ளை போல், அழுது கொண்டிருந்த பலராமனை, அப்பா நீ என்ன லூசா! என்றாள். எல்லோரும் அதிர்ந்து போய் பார்க்க, “நான் எங்கே போகப் போறேன்?, எதுக்கு இப்படி அழுகிறீங்க?,’ கழுதை கெட்டால் குட்டிச் சுவர்’. இன்னிக்கு இல்லைனா , நாளைக்கு வந்துடப் போறேன், இதுக்குப் போய் அழுவாங்களா? சின்னப் புள்ளைத் தனமாலே இருக்கு “, என்றாள்.

அடிப் பாவி! ‘ நீ காலையிலே அழுதது என்ன! இப்போ பேசுற பேச்சென்ன! ‘ என்று வெண்பா குடும்பத்தினர், அவளை முறைத்து வைத்தனர். யாழினி, முகம் கழுவி வரவும், அனைவரும் காபி, ஸ்நாக்ஸ் முடித்து விட்டு கிளம்பி வந்தனர். யாழினியைப் , பார்த்தவுடன் கடையில் உள்ள பசங்கள் முகத்தில் சிரிப்பு வந்தது.

பலராமன், யாழினிம்மா, நேற்று வந்த புடவைகளுக்கு, இன்னும் பில் போடலைடா. பசங்களை அனுப்பவா, போட்டு அடுக்கிடலாமா என்றார். சரிப்பா, அனுப்புங்க. நான், அதற்குள் விலைப் பட்டியல் ரெடி பண்ணிடுறேன், என்றாள். அமுதா, உள்ளே சென்று வெண்பாவுக்கு போன் செய்தாள். பின், வெளியே வந்து டிவியை ஆன் செய்தாள்.

பசங்க வரவும் பாயை விரித்து புடவைகளைப் போட்டு, பிரித்து அடுக்கினர். இரவுச் சாப்பாடு முடிந்து, கிச்சனை சுத்தம் செய்து விட்டு வந்து படுத்தார்கள். இவை அனைத்தையும், ஆதித்யா கவனித்துக் கொண்டு தான் இருந்தான். பலராமன் படுக்கச் சென்ற போது, ஒரு முகம் தெரியாத நபரிடமிருந்து போன் வந்தது.

இவர் எடுத்துக் காதில் வைத்து ஹலோ என்றார். அந்தப் பக்கத்துப் பேச்சைக் கேட்டு ஆடிப் போனார். அவருக்குக் கோபத்தில், “ஏன் தம்பி இப்படி பண்ணிணீங்க?, அன்னிக்கு தஞ்சாவூரிலேயே என்னிடம் மட்டுமாவது உண்மையைச் சொல்லியிருக்கலாமே என்றார். ம்ம் சூழ்நிலை சரியில்லை. அதனால், சொல்ல முடியவில்லை. பத்திரமா பார்த்துக்கோங்க சார் என்றான்.

கண்டிப்பா தம்பி என்றார். மறுபடி இது போல ஒரு நிலையை உருவாக்கிடாதீங்க என்றான். யாழினியிடம், “நீங்களே சொல்லுங்கள், இந்த மாதிரி டிசைன் வேண்டும் என்று வருபவர்களிடம், பிசினஸ் மாதிரி செய்யச் சொல்லுங்கள்”, என்றான். நல்ல யோசனை தம்பி, ‘ நான் நாளைக்கு இது பற்றி, அவளிடம் பேசுகிறேன் ‘, என்றார். ரொம்ப நன்றி சார் என்றான். ஆமாம், “ பேசியது வேறு யாருமல்ல, யாழினியின் அண்ணன் தெய்வேந்திரன் “, தான்.

மறு நாள் அமுதா, வீட்டைப் பார்த்துக் கொள்ள, யாழினி நேற்று பில் போட்ட புடவைகளை, பசங்களுடன் அடுக்கிக் கொண்டிருந்தாள். அப்பா, ஏன் நம்ம கடைக்கு விளம்பரம் கொடுக்கக் கூடாது. எதிலே அக்கா கொடுக்கப் போறீங்க என்றான் குமரன். ஏன்டா கேட்கிறே?, என்றாள் யாழினி. இல்லைக்கா டீவி விளம்பரம்னா ‘நானே இலவசமா நடிச்சுக் கொடுத்துடுறேன்.’

கடைக்கு விளம்பரமும் ஆச்சு, எனக்கும் நடிப்புக்கு சான்ஸ் கிடைச்சது மாதிரியும் இருக்கு. எப்படி என் ஐடியா! “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்”, எப்படிக்கா இருக்குனு கேட்டான். எல்லாரும் சேர்ந்து காறித் துப்பவும், உங்களுக்கு நான் அழகா இருக்கேனு பொறாமை, என்றான். ஆமா, இவர் பெரிய சூர்யா, அஜித், கார்த்தி. இவரைப் பார்த்து பொறாமைப் படுறாங்க. போடா டேய் போடா என்றனர்.

அனைவரும் சிரித்தனர். அக்கா, எப்படி விளம்பரம் பண்ணப் போறீங்க என்றான் கருணா. பிட் நோட்டீஸ், அப்புறம் பேப்பரில் முதல் பக்கத்துலே பெரிசா கொடுக்கலாம் என்றாள். அப்போ, இந்த டீவியிலே எல்லாம் விளம்பரம் பண்ண மாட்டீங்களா ? என்றான் குமரன். அதுக்கெல்லாம் பணம் அதிகம் வேண்டுமடா என்றார் பலராமன்.

நம்ம கடை இப்போ தானே ஸ்டார்ட் பண்ணியிருக்கோம். அதனாலே இது போதும். வேண்டும் என்றால், அவரவர் போனில் பேஸ்புக், வாட்ஸ்அப்பில் போடுங்கள் என்றாள். சூப்பர் ஐடியாக்கா, உடனே செஞ்ஞிடலாம் என்றனர். அதற்குள், ஆதித்யா வரவும், அவனை உட்கார வைத்துப் பேசினார் பலராமன்.

தம்பி, நான் சொல்றேனு தப்பா எடுத்துக்காதீங்க. “ தாயா இருந்தாலும் பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேறே தானே”, அதனாலே நீங்க சொல்ற டிசைனை செய்து கொடுக்க, வெளியிலே நீங்க எவ்வளவு அமௌன்ட் கொடுப்பீங்களோ, அதிலே ஒரு பர்சன்ட், இரண்டு பர்சன்ட் குறைச்சுக் கொடுங்க என்றார்.

யாழினி, இதைக் கேட்டுக் கொண்டிருந்தவள், என்னப்பா இதெல்லாம் என்றாள்? நீ, சும்மா இரும்மா. சார், பெரிய அளவில் இன்ட்டர் நேசனல் அளவில் பிசினஸ்மேன் ஆச்சே. அதனாலே, அவருக்கு நாம செஞ்சு கொடுத்தோம் என்றால் , அவர் வியாபாரம் நன்றாக நடக்கும். நம்ம வியாபாரம் படுத்து விடும். இவர், வைத்திருக்கும் கடைகள் முழுவதும் ஒன்பது தளம், பத்து தளம் கொண்டது.

அங்கேயே, மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கி விடலாம். அதனால், அவர்கள் மேலும் மேலும் பணக்காரர் ஆகலாம். ஆனால், நம்மைப் போன்ற சிறு வியாபாரிகள் தான் பாதிக்கப்படுவது. இதில், இன்னும் ஒரு விசயம் என்ன என்றால் பெரிய பெரிய கார்ப்பரேட் பினான்ஸ்காரன்கள், மக்கள் ஒரு கடையில் ஏதாவது எலக்ரானிக் பொருட்களை எடுத்த உடனேயே, அவர்களுக்கு ஒரு கார்டு ஒன்னு கொடுத்துடுறாங்க.

அதை வைத்து, இவர்களைப் போன்றவர் கடைகளில் எல்லாப் பொருள்களையும் மொத்தமாக வாங்கி விடுவார்கள். அதனால் தான் நான் இதைப் பிசினஸாப் பார்க்கிறேன். அதனாலே, உங்களுக்கு எதுவும் செய்து தர முடியாது என்று தீர்மானமாகச் சொன்னார். ஆதித்யாவோ, யாழினி கடைக்குள் நுழைந்ததிலிருந்து, அவள் நடை , உடை, சிரிப்பு அனைத்தையும் எதிர்பக்கத்துக் கடையில் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருந்தான்.

இனி அடிக்கடி யாழினியைப் பார்த்துப் பேசி , அவளை அருகே வைத்துப் பார்த்து ரசிக்கலாம். சீக்கிரத்திலேயே அவளிடம் நெருங்கிப் பழகி தன் காதலை சொல்லி விடலாம் என்று நினைத்தவனுக்கு, பலராமன் இப்படிச் சொன்னதும் அவன் அதிர்ந்து விட்டான். அது கொஞ்ச நேரம் தான். அதிலிருந்து மீண்டவன் , ‘அடுத்து என்ன செய்வது? என்று யோசித்தான்.

தன்னுடைய இருபத்தேழு வயது வரை, எத்தனை பெண்களைப் பார்த்திருப்பேன். எத்தனை பெண்கள் என்னிடம் வலிய வந்து என் மேலே விழுந்திருப்பார்கள். அப்போதெல்லாம், வராத காதல் இவளைப் பார்த்ததில் இருந்து, சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் என்ன ஒரு வேதனை. எங்கு பார்த்தாலும் அவள் முகமாகவே தெரியுதே.

இப்போ என்ன சொல்லி இவரை ஒத்துக்க வைப்பது என்று யோசித்தான். கடவுளே முண்டக்கண்ணியம்மா என் காதலை மட்டும் நிறைவேத்திக் கொடு. நான் என் சிவாவை மொட்டை போட வைக்கிறேன் என்று மனதுக்குள் புலம்பினான். ஏதாவது நல்ல ஐடியாவாக் கொடு வீரமாகாளி. நீ மட்டும் நல்ல ஐடியாவைக் கொடுத்துட்டீனா, நான் என் வாசு டார்லிங்கை மொட்டை போடச் சொல்றேன் என்று புலம்பினான்.

டக்கென்று ஒரு ஐடியா தோன்றவும், “சார், இப்படி வேணுமானால் ஒரு அக்கிரிமென்ட் ரெடி பண்ணுவோமா என்றான். எப்படி என்றார் பலராமன்? சார், நான் பக்கா ஜென்டில்மேன் சார். உங்க பொண்ணு டிசைன் பண்ணிக் கொடுக்கிற புடவைகளை, நான் நாட்டில் விற்க மாட்டேன், சார். அவ்வளவையும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துடுறேன். நானே நிறைய ஆர்டரும் பிடிச்சுத் தாரேன், இதை நாளைக்கு ரிஜிஸ்டர் ஆபிசில் பத்திரம் பதிவு பண்ணிடலாம் சார், என்ன சொல்றீங்க? என்றான்.

பலராமன், யோசிக்கத் தொடங்கவும் ஐயோ! கடவுளே நீ தான் என் காதலுக்குத் தூது போகனும்., இவரை ரொம்ப யோசிக்க விடாமல் டக்குனு சாதகமான முடிவெடுக்கச் சொல்லு, என்று மருகினான். யோவ் என்னத்துக்குயா, இப்படி இல்லாத மூளையைப் போட்டு பிச்சுக்கிறே. வருங்கால மாமனாராச்சேனு பார்க்கிறேன். இல்லைனா நடக்கிறதே வேறே.

இப்போவே, என் கை பரபரங்குது. இத்துனூண்டு கடையைக் காப்பாத்த எப்படிலாம் யோசிக்கிறேயா? ஐயோ! இன்னும் யோசிக்கிறானே. மூஞ்சியும் முகரையும் பாரு. நல்லா மலைக் குரங்கு மாதிரி. ஏய்யா! நான் தான் இவ்வளவு கீழிறங்கி வந்துட்டேனே. இன்னும் என்னத்தையா யோசிக்கிறே. இந்நேரம் வேறே ஆளாயிருந்தால் நான் இப்படி பொறுமையா பேசமாட்டேன்.

இந்தப் பாழாப் போன மனசு, உன் மகளைக் கண்டவுடனேயே, என் நெஞ்சுலே பசக்குனு ஒட்டிக்கிட்டாளே. யாழினி, வந்த கஷ்டமர் இவள் டிசைன் செய்த புடவையைப் பார்த்து, யாழினியை வெகுவாகப் பாராட்டிப் பேசி, உடனே ஒரு சிலருக்கு போன் போட்டு வரச் சொன்னார். அவர்களும் வந்து பார்த்துவிட்டு, ஐயோ! எல்லாமே நல்லாயிருக்கே! எதை எடுக்கிறதுனு தெரியலையேனு குழப்பத்தில் இருந்தார்கள்.

யாழினியே, அவர்கள் மேல் புடவையை வைத்து எடுத்து, வைத்து எடுத்துப் பார்த்து, மேடம், இது உங்களுக்கு ரொம்ப சூப்பரா இருக்கு என்று சொல்லி எடுத்துக் கொடுக்க, “இதைக் கவனித்த ஆதித்யாவுக்கோ, அட அட என்ன அழகா அவங்க நிறத்துக்கு ஏத்த மாதிரி , தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறாள் என் பொண்டாட்டி. சூப்பர்டி, ஐ லவ் யூடி பொண்டாட்டினு காதல் பித்தம் தலைக்கேற வாய் விட்டு சொல்லிவிட்டான்.

இவன் சொன்னதைக் கேட்ட பலராமன் , என்னது! யாரைப் பொண்டாட்டினு சொல்றீங்க? என்றார். ஐயோ! வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேனா. டேய் ஆதி உன் நிலைமை இப்படியாடா ஆக வேண்டும். இவ்வளவு நேரம் யோசனை பண்ணிக்கிட்டிருந்த மாமனார், கரெக்டா மகளைப் பொண்டாட்டினு சொல்லும் போதா முழிச்சிக்கனும்.

எவ்வளவோ சமாளிச்சாச்சு. இதையும் சமாளிப்போம்னு வடிவேல் மாதிரி மனசுக்குள்ளே பேசிக்கிட்டு, வெளியிலே ஈஈஈஈஈனு இளிச்சிட்டு, அது ஒன்னும் இல்லை சார். எனக்கு வரப் போற பொண்டாட்டிக்கு, எந்த மாதிரி டிசைனில் புடவை எடுக்கச் சொல்றதுனு யோசிச்சேன் சார்னு சொல்லி ஈஈஈனு இழிச்சு வைச்சான். சரி தம்பி, “ நீங்க சொன்னது மாதிரி, நாளைக்கு ரிஜிஸ்டர் பண்ணிடலாம்”, என்றார்.

அப்பாடியோவ், இப்போ தான் உயிரே வந்தது. சிவா டார்லிங் வாசு டார்லிங் , ஐ ஆம் ஹேப்பி. நம்ம குடும்பத்திலே புது உறவு ஒன்னு வரப் போகுது. தயாரா இருங்கனு சொல்லிக் கொண்டான். அப்புறம், யாழினியிடம், சென்று டிசைன்கள் கேட்டான். அவளோ, உங்களுக்குப் பிடிச்ச டிசைனைச் சொல்லுங்க சார். நான் டிசைன் பண்றேனு சொல்ல, “அவனோ , உங்களுக்குப் பிடித்ததை டிசைன் பண்ணுங்க, என்றான்”.அவள், அவனை வினோதமாகப் பார்க்க, அவன் ஈஈஈ என்று இழித்து வைத்தான்.

வானவில் வளரும்

 

error: Content is protected !!