Alaikadal 9

அலைகடல் – 9

முதற்கட்ட அதிர்ச்சியில் பூங்குழலி உடைந்துபோனது ஓரிரு மணிநேரங்கள் இருக்கலாம். பின் மருத்துவர் மீண்டும் ஒருமுறை பரிசோதிக்க வருகையில் தெளிந்து எழ, அதற்குள் அர்ஜுன் தன் தந்தைக்கும் மாமனுக்கும் நடந்ததை தெரியப்படுத்தி இருந்தான் தன் வேலையைச் சொல்லாமல் ஆர்வ்வின் வேலையை மட்டும்.

“தேங்க்ஸ் சார். சாரி உங்களை கவனிக்கவே இல்லை. உங்க உதவிய என்னால மறக்கவே முடியாது. ஹான் எவ்வளவு பணம் கட்டுனீங்கன்னு சொன்னா உடனே தந்துடறேன்” என்று பூங்குழலி நன்றி நவில

“இருக்கட்டும் ஒன்னும் அவசரமில்லை. முடியும்போது குடுத்தா போதும். நீங்க இப்போ என்ன பண்ணப்போறீங்க? வேற ஏதாவது உதவி வேணுமா?” என

குனிந்து தனது இரத்தம்படிந்த உடையை பார்த்தவள் கண்கள் கலங்கினாலும் சுதாரித்து, “வீடு பக்கத்துலதான் சார். போய் தேவையானதை எடுத்துட்டு வந்துடறேன். அது வரை பார்த்துக்கிட்டா கொஞ்சம் தெம்பா இருக்கும்” தெரியாதவரிடம் இன்னமும் உதவி கேட்கிறோமே என்ற எண்ணத்தில் திணறியபடியே கேட்டாள் பூங்குழலி.

“ஓகே ஓகே நான் பாத்துக்குறேன். வீட்டுல வேற யார்கிட்டயும் சொல்லலையா? சொந்தகாரங்க கிட்டலாம் சொல்லணும்ல” என

“இல்லை வேணாம்… யாரும் இல்லை. சொன்னா சாபம்விட்டு சந்தோசப்படுற ஆளுங்கதான் இருக்காங்க. அவங்களுக்குலாம் சொல்லவே வேண்டாம். உங்களால முடியலன்னா நீங்க போங்க நான் ஒன்னும் தப்பா எடுத்துக்கமாட்டேன்” என்றுவிட்டாள்.

“அப்படியெல்லாம் இல்லை. வாங்க நானே வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். இப்படியே வெளிய போனா எல்லாரும் ஒருமாதிரி பார்ப்பாங்க அதான். உதவிக்கு ஆளுங்க ரெண்டு பேரை வர சொல்லிருக்கேன் அவங்க பாத்துப்பாங்க” என

“உதவிக்குலாம் யாரும்வேணாம் நானே பார்த்துப்பேன்… நான் வரவரைக்கும் நீங்க பார்த்துக்கொண்டால் போதும்” என்றவாறு அவன் பதில் பேசும் முன் கடகடவென்று வெளியேற பின்னோடு வந்து ஆட்டோவில் ஏற்றிய அர்ஜூன் பூங்குழலி மறுக்க மறுக்க பணத்தை ஓட்டுனரிடம் கொடுத்துவிட்டே அகன்றான்.

வீடு வந்ததும் ஆட்டோவிலிருந்து இறங்கி, “அண்ணா ஒரு இருபதுநிமிசம் கழித்து வரமுடியுமா? திரும்ப ஹோச்பிடல் போகணும்” என்றாள்.

அவர் பிறகு வருவதாக கூறி கிளம்பவும் எதிர்வீட்டுப் பெண்மணி சாவியோடு வந்தார்.

“பூவு இப்போ எப்படி இருக்காங்க ரெண்டு பேரும்? வீடு போட்டது போட்டபடி தொறந்து கிடந்ததால பூட்டி வச்சேன். இந்தா சாவி” என

“தேங்க்ஸ் க்கா. இன்னும் ஒண்ணுமே சொல்லலை ரொம்ப பயமா இருக்கு. நல்லா ஆகுன பிறகு சொல்றேன் இப்போ சீக்கிரம் கிளம்பனும்க்கா” என்றவாறு அவரின் பூட்டும் சாவியையும் கொடுக்க

“பயப்படாத… எல்லாம் சரியாகிடும். ஏதாச்சும் உதவி வேணும்ன்னா தயங்காம கேளு. என்னால முடிஞ்சத கண்டிப்பா செய்யுறேன் புரியுதா?” என

“சரிக்கா… என்னால முடியலன்னா உங்ககிட்டதான் கேட்கணும்” மீண்டும் ஒரு நன்றியை கூறிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள்.

பத்து நிமிடத்தில் குளித்து வந்தவள் பணம் அதிகம் தேவைப்படும் என்பதால் வீட்டில் உள்ளதையெல்லாம் புரட்டியதுபோக மீதத்தை வங்கிக்கு சென்று எடுக்கவேண்டியதுதான் என முடிவு செய்தாள்.

தேவையான ஆவணங்களை அலமாரியில் துளாவ கண்ணில் சிக்கியது அன்று காலையில் தாயுடன் பகிர்ந்த இரு கடிதங்கள்.

ஒன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இவள் ஏற்கனவே பதிவு செய்ததால் கோயம்புத்தூருக்கு அழைத்திருந்த நேர்முகத்தேர்வு என்றால் மற்றொன்று கப்பற்படைக்கான எழுத்து தேர்வில் வெற்றிபெற்று அடுத்த நிலை தேர்வான மருத்துவ தேர்விற்கு கொல்கத்தா கப்பற்படை தலைமையகத்தின் அழைப்பாயிருந்தது.

இரண்டும் அடுத்த வாரத்தில் வருவதால் எதில் சேர்வது என்று தாயிடம் அபிப்ராயம் கேட்கையில், “உனக்கு எது வேணுமோ எது பிடிச்சிருக்கோ அதுக்கு போடா… எனக்கென்ன தெரியும் படிப்ப பத்தி” என்றது நியாபகம் வர அதை ஆவேசமாய் தூக்கி எறிந்தாள்.

“எனக்கு நீங்க ரெண்டு பேர்தான் வேணும்மா இப்போ. என்னால முடியலை” என்று கத்தியவள் பின் வாய்மூடி குலுங்க

வாசலில் இருந்து ஆட்டோ ஹார்ன் அடிக்கவும்தான் இது அழுக வேண்டிய நேரமில்லை என்று ஒருவாறு சமாளித்து வீட்டை பூட்டிக்கிளம்பினாள் அவளுக்கான அதிர்ச்சிகளும் துன்பங்களும் அழுகைகளும் இன்னும் ஏராளமாக உள்ளன என்றறியாமல்.

வங்கிக்கு சென்றதில் அவர்களின் ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் மற்றும் பணம் தரும் நடைமுறைகளில் மருத்துவமனைக்கு செல்ல மேலும் அரைமணி நேரம் தாமதமாக அங்கே வாசலில் சற்று பதட்டத்துடன் பூங்குழலிக்காக காத்திருந்த அர்ஜுன் அவள் இறங்கியதும், “இவ்ளோ நேரம் எங்க போன நீ? நீ போனதும் உன் அம்மாவும் தம்பியும் காணோம் அவங்க இருந்த ஐசியூல வேற யாரோ இருக்காங்க. எல்லாம் இந்த ஆரவ் வேலையாதான் இருக்கும். நானே போலீஸ்க்கு கம்ப்ளைன்ட் பண்ணிட்டேன். உனக்காக அதோ அங்க காத்திருக்காங்க வா வந்து உண்மையை சொல்லு” என்று கைப்பிடித்து இழுத்தவாறு படபடத்தான்.

இறுகிய முகத்துடன் அதைக் கேட்டிருந்த பூங்குழலியோ “யார் நீங்க?” என்ற ஒற்றைக் கேள்வியில் அவனை அயர்ந்து போகச் செய்தாள்.

************************************

சிலமணிநேரங்களுக்கு முன்பு…

ஆரவ் கூட்டம் வெற்றிகரமாக முடித்தும் அதைப் பற்றிய நினைவின்றி யோசனையுடன் ஹாலில் அங்கும் இங்கும் நடந்துக்கொண்டிருந்தான்.

வினோத், “சார் எல்லாமே அர்ஜுன் வேலைதான் சார். உங்களை கூட்டத்துக்கு போக விடக்கூடாதுன்னு பிளான் பண்ணிருக்கான். அவங்க நம்பரை மாற்றியதை கவனிக்கலை நம்மாளுங்க” என

“பச்… அவனை என்ன பண்றதுன்னு அப்புறம் பார்த்துக்கலாம் எனக்கு என்னமோ இப்போ அந்தப் பொண்ணை தூண்டிவிட்டு ப்ளே பண்ணப்போறான்னு தோணுது…”

என்றபோதே அவனிற்கு போன் வர எடுத்தவன், “ஹ்ம்ம்… ஓகே… ஹ்ம்ம்” என்றுவிட்டு அணைத்து, “ச்சை…” என்று செல்பேசியை தூக்கி சோபாவில் போட அது ஜம்மென்று குதித்து எழுந்து அடங்கியது. வினோத் ஆரவ்வைச் சற்று கலவரமாகப் பார்க்க

“வினோத் என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது ஆனா என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ. அந்த பொண்ணோட தம்பியும் அம்மாவும் இன்னும் அரைமணி நேரத்துல அந்த ஹோச்பிடல்ல இருக்ககூடாது” என

“சார்…” என்று கூவியேவிட்டான் அதிர்ந்து.

“எஸ்… டூ வாட் ஐ சே. சீக்கிரம்… அந்த பொண்ணு அரைமணி நேரத்துல திரும்ப வந்திருமாம்” என

“சார் வேணாம் சார்… வேற ஏதாவது பண்ணுவோம் அவங்க ஐசியூ ல இருக்காங்க இப்போ கடத்துறது ரொம்ப ரிஸ்க். அவங்க உயிருக்கே ஆபத்தா முடியும் ப்ளீஸ் சார்” என மனசாட்சி சற்று உறுத்தியதால் கெஞ்ச

“ஹ்ம்ம் எனக்கே அட்வைஸ்?” புருவத்தை உயர்த்தி ஏளனமாக வினவியவன் அதற்கான ஏற்பாட்டைத் தானே செய்ய ஆரம்பித்தான்.

அதன்படி கச்சிதமாக தூக்கியும் விட்டான் ஆரவ் ஐசியூவில் இருந்த இருவரையும் கூடுதலாக ஹோச்பிடலில் இவர்கள் இருந்ததற்கான ஆதாரத்தையும்.

வெளியே இருந்த அர்ஜுனை யாரைவிட்டோ அவனின் தந்தை புருஷோத்தமன் மருத்துவமனை வாசலில் இருப்பதாக கூறி ஏய்த்து அவன் சென்றபின் கடத்தியிருந்தனர்.

வாசலில் தந்தை இல்லாததைக் கண்டு மனதிற்குள் மணி அடித்து உள்ளே ஓடிவர அதற்குள் ஐசியூ விலிருந்த இருவரும் மாயமாய் மறைந்திருந்தனர். தான் ஏமாற்றப்பட்டது ஆத்திரத்தைக் கிளப்ப ஓங்கி அங்கிருந்த சுவரில் குத்தினான் அர்ஜுன்.

அதேநேரம் வங்கியில் இருந்து ஆட்டோவில் ஏறியதும் அவர், “உங்க போனை விட்டுட்டு போயிடீங்க போல இந்தாங்கம்மா” என்று ஒரு போனைத்தர

“இல்லைன்னா இது என்னோடது இல்லை. அதை எடுத்துட்டு வர மறந்துட்டேன் சரி பரவால்ல சீக்கிரம் ஹோச்பிடல் போங்கண்ணா”

“யாருதுன்னு தெரியலையே. நான் இப்போதான் பார்க்குறேன்” என்கையில் ஒலியெழுப்பியது அந்த செல்பேசி.

“ஹலோ…” அந்தபக்கம் என்ன பேசியதோ

“ஒரு நிமிசம்… உன் பேரு பூங்குழலியாமா” என

“ஆமாங்கண்ணா” புருவத்தில் யோசனை முடிச்சு விழ பதில் கூறினாள்.

“உங்களுக்குதான் போன் போல” என்றவாறு அவள் கையில் திணித்து ஆட்டோவை எடுக்க கைக்கு கிடைத்த செல்பேசியை மெதுவே தன் காதில் வைத்தாள் பூங்குழலி.

“ஹலோ ஆரவ் ஸ்பீக்கிங். சொல்றதை கவனமா கேளு பூங்குழலி. இப்போ நீ ஹோச்பிடல் போறப்போ போலீஸ் அண்ட் மே பீ மீடியா பீபிள் கூட இருக்கலாம். நடந்த ஆக்சிடென்ட் பத்தி கேட்டா என் பேர் வெளிய வரகூடாது ப்ளட் கொடுக்க வந்தேன்னு சொல்லி அவங்களை கிளப்பணும்” என்றான் அவன்.

“ஹேய் நீ…”

“இன்னும் நான் பேசி முடிக்கலை. நீ சொல்றதை நான் கேட்கனுமான்னா… எஸ் கேட்டுதான் ஆகணும் பிகாஸ் உன்னோட அம்மா அண்ட் தம்பி இப்போ என் கஸ்டடில நம்பலைன்னா அங்க போய் தெரிஞ்சிக்கோ” அத்தோடு பேச்சு முடிந்தததென அழைப்பைத் துண்டிக்க

அதனை உள்வாங்குவதற்குள் மருத்துவமனையும் வந்துவிட்டது. குழப்பத்துடன் இறங்கையிலே அர்ஜுனும் ஆரவ்வின் தகவலை உறுதிப்படுத்தி கைப்பிடித்து இழுக்க உள்ளுக்குள் இறுகியவள் அவனைப் பார்த்து கேட்ட கேள்விதான் ‘யார் நீங்க?’ என்பது.

ஆரவ் கூறியதைப்போல் ப்ளட் கொடுக்க வந்ததாக கூறி உள்ளே செல்ல அர்ஜுன் காச்மூச்சென்று கத்துவதும் போலீஸ் சமாதானம் செய்வதும் காதில் விழுந்தது ஆனால் கருத்தில் பதியவில்லை.

வேகமாக யாரேனும் பின்னால் வருகிறார்களா என்று பார்த்துகொண்டே யாரும் வரவில்லை என்றதும் பழைய இடத்திற்கு ஓட எதிர்பார்த்தபடி அம்மா தம்பி இல்லையென்றதும் துவண்டவள் ஏற்கனவே பார்த்திருந்த மருத்துவரைக் காண அவரின் அறையை நோக்கி பாய்ந்தாள்.

அங்கு அவரின் நெற்றியில் தையலிட்டு கிளம்பிக்கொண்டிருந்தார் மற்றொரு மருத்துவர். அவர் சென்றதும் அவரருகில் சென்றவள், “டாக்டர் அம்மா, தம்பிய இங்கிருந்து கொண்டு போனதால ஒன்னும் ஆகிருக்காதுதானே காப்பாத்திறலாம்ல” என உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வினவ

அவரோ அமைதியாக இருந்தார். அவரின் அமைதி இவளின் வயிற்றினுள் பய பந்தைக் கிளப்பியது. அவரின் தையலிட்ட நெற்றியைப் பார்த்துக்கொண்டே

“உங்களுக்கு தெரியும்தானே? இந்த அடிகூட அதனாலதான் பட்டிருக்கும்ன்னு நினைக்குறேன். நான் யாருகிட்டயும் சொல்லமாட்டேன் என்னை நம்புங்க டாக்டர் ப்ளீஸ். அவங்க எப்படி இருக்காங்கன்னு மட்டும் சொல்லுங்க இப்படியே போயிருறேன் ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கெஞ்ச

“சாரி டு சே திஸ். அவங்க வந்து தூக்குறதை தடுக்க போய்தான் என்னை அடிச்சாங்க. இதை சொல்லவும் முடியலை சொல்லாம இருக்கவும் முடியலை இனியும் உங்க அம்மா தம்பி பிழைப்பாங்கன்னு நீங்க நம்பாதீங்க.”

“வெரி வெரி சாரி என்ன முயற்சி செஞ்சும் என்னால காப்பாத்த முடியலை. ஐசியூல இருக்குற பேசென்ட்க்கு அதுல இருக்குற உபகரணம் ஒவ்வொன்னும் எவ்ளோ முக்கியம்ன்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. எல்லாத்தையும் அட் அ டைம்ல எடுத்துப் போடுறது அவங்களைக் கொலை பண்றதுக்கு சமம். இதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்லை இனி என்னைப் பார்க்க வராதீங்க” என்றுவிட்டு வெளியேறினார்.

டாக்டரின் கூற்று மூளையை அடைந்ததும் அது தன் வேலையை நிறுத்தி ஸ்தம்பித்துதான் போனது. அழவும் தெம்பின்றி நடைப்பிணமாய் கால்போன போக்கில் மருத்துவமனையில் இருந்து வெளிவந்து சாலையில் நடக்க எப்படிச் சரியாக வீடு வந்து சேர்ந்தால் என்று அவளிற்கே தெரியவில்லை. எண்ணங்கள் எட்டு திசையிலும் தறிக்கெட்டு சீறிப்பாய்ந்தது.

‘அவ்வளவுதானா? அம்மா, தம்பி என்று வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவேதானா. இனி அவர்களைப் பார்க்க முடியாதா? பேச முடியாதா? என் குட்டா பூமான்னு கூப்பிட்டு என்னை சுத்தி வரமாட்டானா? எப்படி காலையில் எழுந்ததும் என் மேல கைகால போட்டு தூங்குற அவனைப் பார்க்காமல் இருப்பேன்? எனக்கு இன்னுமா உயிர் போகாம இருக்கு?’

தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தவளின் எதிரில் இருந்த தந்தையின் புகைப்படம் அவரின் இழப்பை பூதாகரமாகக் காட்ட, “அப்பா நீங்க போகும்போதே என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல. இப்படி உயிர்வதை அனுபவிச்சிருக்க மாட்டேனே. அய்யோ எனக்கு நெஞ்செல்லாம் வலிக்குதே” அவரின் செல்ல மகள் வாய்விட்டு கதற இதனை கண்கொண்டு பார்க்கவேண்டாம் என்றுதான் அவரின் உயிர் அன்றே பிரிந்ததோ என்னவோ?

எவ்வளவுநேரம் சென்றதோ வானில் நிலா பவனி வரத்தொடங்க அருகில் இருந்த ஆரவ் கொடுத்த செல்பேசி அலறி தன் இருப்பை உணர்த்தியது.

இருமுறை அடித்து ஓய்ந்து மூன்றாம் முறை பூங்குழலியின் கவனத்தைக் கவர நெஞ்சை கவ்வியிருந்த வலியெல்லாம் அதைக் கண்டதும் வெறியாக உருமாறியது.

எடுத்ததும் அவனைப் பேசவிடாமல், “ச்ச்சி நீயெல்லாம் ஒரு மனுசனா?” ஓட்டு மொத்த வெறுப்பையும் செல்பேசி வழியே கடத்த

அவளின் பேச்சில் சர்ர்ரென்று ஏறிய கோபத்தோடு, “ஏய் என்ன…” எனத் தொடங்க முடிக்கவே விடாமல்

“பேசாத… உன் வண்டவாளத்தை எல்லாம் போலீஸ் மீடியாகிட்ட சொல்லி தண்டவாளத்துல ஏத்தியிருக்கணும். நான் தப்பு பண்ணிட்டேன். உன்னை சும்மா விடுவேன்னு மட்டும் நினைச்சிறாத ஆரவ்”

“ஒஹ் அப்புறம் என்ன பண்ணுவீங்க மேடம்… நீங்க ஊரை கூட்டி சொல்வீங்க அதுவரைக்கும் நான் வேடிக்கை பார்த்துட்டு இருப்பேனா? ஐசியூ ல இருக்குறவங்களை கடத்தவே நான் யோசிக்கல வீட்டுக்குள்ள இருக்குற உன்னை கடத்த எனக்கு எவ்வளவு நேரம் ஆகிறப்போகுது? தேவைப்பட்டா அதையும் செய்வேன்” அலட்சியமாக உரைத்து அப்பட்டமாய் மிரட்டினான்.

அவனின் வார்த்தைகள் நெஞ்சின் வெறியை மட்டுப்படுத்தி அதில் கலக்கத்தை ஊட்ட, “இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப… கண்டிப்பா அனுபவிப்ப” அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைக்க கடகடவென்று இறங்கிய கண்ணீரை அவன் உணர்ந்து விட கூடாதென செல்பேசியை ஓங்கி தரையில் வீச சுக்குநூறாக உடைந்து சிதறியது அது அவளின் மனதினைப்போல்.