Kadhal 22

காலையில் சூரியன் தன் பணியை செவ்வனே தொடங்கி இருக்க சித்தார்த்தோ தன்னறைக்குள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.

முதல் நாள் இரவு மேக்னா அவனிடம் தொலைபேசியில் கட்டளையிடுவது போல ஆணைகளைப் பிறப்பித்து இருக்க வெகு நேரமாக அதைப் பற்றியே சிந்தித்து கொண்டிருந்தவன் பொழுது புலரும் நேரமே தன்னை மறந்து கண்ணயர்ந்திருந்தான்.

தானாக உருவாக்கிய இந்த சிக்கலில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் சிந்தித்து கொண்டிருந்தவன் நாளை அவளை நேரில் சந்தித்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று எண்ணி இருக்க மறுபுறம் மேக்னாவோ சித்தார்த்தின் பதிலுக்காக இரவு முழுவதும் உறங்காமல் தன் கையில் இருந்த தொலைபேசியையே வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தாள்.

அவளது சிறை அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த வார்டன் பெண்மணியோ அவளைப் பலமுறை அழைத்துக் கொண்டே இருக்க அவளோ அவரை சிறிதும் சட்டை செய்யாமல் இரவு எந்த நிலையில் அமர்ந்திருந்தாலோ அதே நிலையில் அப்படியே அமர்ந்திருந்தாள்.

“மேக்னா! என்னம்மா ஆச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்க? நேற்று ராத்திரியில் இருந்து அந்த போனையே பார்த்துட்டு இருக்க யாராவது பார்த்தால் பெரிய பிரச்சினை ஆகிடும் மேக்னா தயவுசெய்து அதை கீழே வைம்மா நீ அந்த போனை என் கிட்ட தரலேனாலும் பரவாயில்லை இப்படியே பார்த்துட்டு இருக்காதேம்மா மேக்னா அப்புறம் காலத்திற்கும் நீ வெளியே போக முடியாது” அந்த வார்டன் பெண்மணி இறுதியாக கூறிய வசனத்தைக் கேட்டு கண்கள் இரண்டும் கோபத்தில் சிவக்க அவரை திரும்பி பார்த்தவள் மெல்ல எழுந்து அவர் முன்னால் வந்து நின்றாள்.

“என்ன சொன்னீங்க?”

“அது…அது…வந்து…”

“என்ன சொன்னீங்கன்னு கேட்டேன்” மேக்னாவின் அதட்டலில் தூக்கி வாரிப் போட அவளை நிமிர்ந்து பார்த்தவர்

“போ…போனை நீங்க வைத்துட்டு இரு…க்குறதைப் பார்த்தால் பி…ரச்..சினை ஆகிடும்னு…” தட்டுத் தடுமாறி பேச

சீற்றத்துடன் தன் முன்னால் இருந்த கம்பியை இறுக பற்றிக் கொண்டவள்
“நான் நினைத்ததை செய்து முடிப்பேன் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் அதற்கு எனக்கு துணையாக இருக்கத்தான் உங்களை வைத்து இருக்கேன் அதை மறந்துட்டு எனக்கு அட்வைஸ் பண்ணுறேன்னு ஏதாவது உளறிட்டு இருந்தீங்கன்னா!” அவரை மேலிருந்து கீழாக பார்த்த வண்ணம் கூற

“இ…இல்லை மேக்னா நா…நான் எதுவும் சொ…ல்லல” அவளின் பார்வையில் இருந்த உக்கிரத் தன்மையில் முதுகுத்தண்டு சில்லிட அவசரமாக தான் கூறியதை மறுத்து கூறி இருந்தார் அந்த வார்டன் பெண்மணி.

“இன்னும் என்ன? கிளம்புங்க இங்கே இருந்து” மறுபடியும் மேக்னா அதட்டலாக கூற அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தவர் வேகமாக அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றார்.

“நான் நினைத்தது நடக்கணும் நடந்தே தீரணும்” தன் முன்னால் இருந்த கம்பியை இறுக பற்றிக் கொண்டு உறுதியாக அவள் கூறிக்கொண்டிருக்க அதை அறியாதோ சித்தார்த்தோ நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.

“சித்! டேய்! சித்தார்த்” கனவில் யாரோ தன்னை உலுக்கி எழுப்புவது போல இருக்கவே மெல்ல தன் கண்களை திறந்து பார்த்தவன்

தன்னருகில் ஜெஸ்ஸி அமர்ந்திருப்பதைப் போல இருக்கவும்
“அட கடவுளே! கனவில் கூட இந்த பிசாசு தானா?” தன்னை மறந்து புலம்பியபடி மீண்டும் உறங்கப் போக

‘அடப் பாவி! நான் உனக்கு பிசாசா? பண்ணுறதை எல்லாம் பண்ணிட்டு என்னையா பிசாசுன்னு சொல்லுற? இருடா உன்னை கவனிக்கிறேன்’ மனதிற்குள் அவனை கறுவிக் கொண்டே தன் கையில் இருந்த லத்தியால் அவனது பாதங்களில் ஓங்கி அடித்து வைத்தாள்.

“அம்மா!” வலி தாளாமல் கத்திக் கொண்டே எழுந்து அமர்ந்த சித்தார்த் சுற்றிலும் திரும்பி பார்க்க அவன் முன்னால் ஜெஸ்ஸி இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவனை முறைத்து பார்த்து கொண்டு நின்றாள்.

“ஜெஸ்ஸி ம்மா! எப்போம்மா வந்த?” கண்களை கசக்கி கொண்டே எழுந்து அமர்ந்த படி சித்தார்த் கேட்க

“டேய்! டேய்! சும்மா நடிக்காதேடா என்னைப் பார்த்தா உனக்கு பிசாசு மாதிரியாடா இருக்கு?” பதிலுக்கு ஜெஸ்ஸி அவனை முறைத்து பார்த்து கொண்டு நின்றாள்.

“நான் உன்னை பிசாசுன்னா சொன்னேன்? அப்படி சொல்ல வாய்ப்பே இல்லை ஜெஸ்ஸி ம்மா பிசாசு உன்னை விட கொஞ்சம் சாஃப்டா நடந்துக்கும்”

“ஏய்!”

“ஹேய்! கூல் கூல் ஆமா என்ன இந்த காலங்கார்த்தாலேயே ரெடி ஆகி வந்து இருக்க?”

“எது காலங்கார்த்தாலேயேவா? எருமை! எருமை! நேரத்தைப் பாரு பத்து மணி ஆகப் போகுது”

“என்ன பத்து மணியா?” தன் அருகில் இருந்த தொலைபேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தவன்

“அய்யோ! கடவுளே!” தன் தலையில் தட்டிக் கொண்டு

“ஜெஸ்ஸி நீ ஹாலில் உட்கார்ந்து சூடாக ஒரு கப் காஃபி சாப்பிடு அதற்குள்ள நான் ரெடி ஆகிட்டு வர்றேன்” என்றவாறே அவசர அவசரமாக குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

“என்னம்மா ஜெஸ்ஸி அவன் எழுந்துட்டானா?” யசோதா ஆவி பறக்க காஃபி டம்ளரை ஜெஸ்ஸியின் புறம் நீட்டிய படி கேட்கவும்

புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டவள்
“பின்ன நான் போய் அவனை எழுப்பாமல் வந்துடுவேனா? போலீஸ் டெக்னிக் எவ்வளவு இருக்கு!” தன் சட்டைக் காலரை உயர்த்தி விட்ட படியே கூற

“ஓகே ஜெஸ்ஸி நான் ரெடி வா போகலாம் கையில் என்ன காஃபி? ஓஹ்! எனக்கா? சரி கொடு கொடு” மின்னல் போல அவள் முன்னால் வந்து நின்றவன் அவளது கையில் இருந்த டம்ளரை வாங்கி காஃபியை மடமடவென பருகி விட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறி செல்ல அவளோ பேயறைந்தாற் போல தன் கையில் இருந்த வெற்று டம்ளரையே பார்த்து கொண்டு நின்றாள்.

மறுபுறம் யசோதா
“டேய்! சித்தார்த் அந்த காஃபி ஜெஸ்ஸிக்காக போட்டதுடா” என்று சொல்ல சொல்ல அவனோ அவர் பேச்சை கவனிக்காமலேயே அங்கிருந்து சென்றிருந்தான்.

‘இப்போ இங்கே என்ன நடந்தது? சித்தார்த் ரெடி ஆகுறேன்னு சொல்லி வாஷ்ரூம் போனான் நான் ஹாலுக்கு வந்தேன் ஆன்ட்டி காஃபி கொடுத்தாங்க திடீர்னு டம்ளர் காலி ஆகிடுச்சா?’ சிந்தனையுடன் தன் கையில் இருந்த டம்ளரை அவள் கவிழ்த்து பார்க்கவும் அதேநேரம் வெளியே சித்தார்த் பைக் ஹார்னை அடிக்கவும் சரியாக இருந்தது.

“ஜெஸ்ஸி லேட் ஆகுது சீக்கிரம் வா” சித்தார்த் சத்தமிட்டு அழைக்க

‘அடப்பாவி! ஒரு மணி நேரம் என்னை காக்க வைத்துட்டு இப்போ ஐந்து நிமிஷத்துக்கு இந்த அலப்பறையா?’ மனதிற்குள் அவனை வறுத்தெடுத்துக் கொண்டே

“வர்றேன்” பதிலுக்கு அவளும் சத்தமிட்ட படியே வெளியே வந்து தன் ஸ்கூட்டரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

“போகலாமா ஜெஸ்ஸி?” அவனது கேள்வியில் ஜெஸ்ஸி கோபமாக அவனைப் பார்க்க பயப்படுவது போல அவளை பார்த்து பாசாங்கு செய்தவன் புன்னகையுடன் தன் வண்டியை ஸ்டார்ட் செய்ய அவனது செய்கையைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவளும் தன் வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

போகும் வழி முழுவதும் மேக்னா தன்னிடம் இரவு பேசியதை பற்றி ஜெஸ்ஸியிடம் சொல்வதா? வேண்டாமா? என்ற சிந்தனையூடே சித்தார்த் சென்று கொண்டிருந்தான்.

பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு ஜெஸ்ஸி முன்னால் செல்ல சித்தார்த் சிறிது இடைவெளி விட்டு அவளை பின் தொடர்ந்து சென்றான்.

“மேக்னா கிட்ட என்ன கேட்குறதுன்னு ரெடி ஆகிட்ட தானே சித்? அப்புறம் அங்கே வந்து சும்மா முழிச்சுட்டு நிற்காதே சரியா?” தன் பாட்டில் பேசிக் கொண்டே சென்றவள் தன் கேள்விக்கு சித்தார்த்திடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே குழப்பத்துடன் திரும்பி பார்க்க அங்கே அவனோ அவளை விட்டு நான்கு, ஐந்து அடி பின்னால் பெரும் சிந்தனை வயப்பட்டவனாக நடந்து வந்து கொண்டிருந்தான்.

“சித்தார்த்!” ஜெஸ்ஸியின் அழைப்பில் கேள்வியாக அவளை நிமிர்ந்து பார்த்தவன்

“என்ன ஆச்சு ஜெஸ்ஸி?” என்று கேட்க அவளோ அவனது அந்த மாற்றத்தை பார்த்து முற்றிலும் குழப்பமடைந்து போனாள்.

“என்ன ஆச்சு சித்தார்த் உனக்கு? வீட்டில் இருந்து வரும் போது நல்லா தானே இருந்த இப்போ திடீர்னு ஏதோ யோசனையில் இருக்குற மாதிரி இருக்கு என்னடா ஆச்சு?”

“ஜெஸ்ஸி நான் உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”

“என்ன? சொல்லு!”

“அது நேற்று இரவு எனக்கு மேக்னா போன் பண்ணி இருந்தா” முதல் நாள் இரவு மேக்னா தன்னிடம் கூறியவற்றை எல்லாம் ஒன்று விடாமல் சித்தார்த் கூறி இருக்க அவளோ கை முஷ்டி இறுக அவனைப் பார்த்து கொண்டு நின்றாள்.

“ஏன்டா நீ உண்மையிலேயே போலீஸ் தானா? ஒரு குற்றவாளி உன்னை மிரட்டி இருக்கா அப்போவே அவளை உண்டு இல்லைன்னு பண்ணாமல் இங்கே அவளுக்கு உதவி செய்ய வந்து இருக்க ஏன்டா இவ்வளவு பொறுமை உனக்கு?”

“இல்லை ஜெஸ்ஸி அவ நைட் அப்படி பேசும் போது நானும் அவசரப்பட்டு இந்த கேஸை எடுத்துட்டோமோன்னு தான் நினைத்தேன் ஆனா கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அவ பக்கம் கொஞ்சம் நியாயம் இருக்குற மாதிரியும் இருக்கு தானே? இன்னைக்கு அதை பற்றியும் பேசலாம்னு தான் வந்தேன்”

“அய்யோ! கடவுளே! இப்படி ஒரு நல்லவனை ஏன் தான் அந்த கடவுள் படைத்தாரோ? வா போகலாம்” தன் தலையில் அடித்துக் கொண்டே ஜெஸ்ஸி முன்னே செல்ல சித்தார்த் அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.

மேக்னாவை அழைத்து வரும்படி சொல்லிட்டு அவர்கள் இருவரும் காத்து நிற்க அவளும் தான் நினைத்தது நடக்கப் போகிறது என்ற ஆவலுடன் அவர்களை பார்ப்பதற்காக விரைந்து வந்து சேர்ந்தாள்.

“ரொம்ப நன்றி இன்ஸ்பெக்டர் ஸார்! எனக்கு உதவி பண்ண முன் வந்ததற்கு” முதல் நாள் இரவு எதுவுமே நடவாது போல இயல்பாக இரு கரம் கூப்பி புன்னகையுடன் மேக்னா சித்தார்த்தைப் பார்த்து கூற

“என்ன பண்ணுறது சித்துக்கு ரொம்ப நல்ல மனசு அது தான் நீ பண்ண தப்பை எல்லாம் மறந்து நீ செய்யாத தப்பிற்காக உன்னை காப்பாற்ற வந்து இருக்கான்” பதிலுக்கு ஜெஸ்ஸியும் புன்னகையுடன் அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டே கூறினாள்.

“ஜெஸ்ஸி!” சித்தார்த் சற்று கண்டிப்பாக அவளை பார்க்க

அவளோ கோபத்துடன் அவனை முறைத்து பார்த்து
“வெளியே வா உனக்கு இருக்கு” என்று விட்டு
மேக்னாவின் புறம் திரும்பி

“சரி மேக்னா எங்களுக்கு ஒரு சந்தேகம் அந்த தனபாலன் இன்னும் சாகலேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டாள்.

“அது அன்னைக்கு இன்ஸ்பெக்டர் ஸார் என்னை வந்து சந்தித்து பேசிட்டு போனாங்க இல்லையா அன்னைக்கு இங்கே இருக்கும் இன்னொரு வார்டன் தனபாலன் கூட பேசியதை நான் கேட்டேன் அப்போ தான் எனக்கே தெரியும் அதற்கு அப்புறமாக தான் நான் ஸாருக்கு போன் பண்ணி பேசுனேன்”

“ஓஹ்! அந்த வார்டன் யாரு? அதாவது தனபாலன் கூட பேசுனதாக சொன்ன அந்த வார்டன் யாரு?”

“கிரிஜா”

“சரி இந்த கேஸ் முடிந்து தீர்ப்பு கொடுக்கப்பட்ட கேஸ் அது தெரியும் தானே?”

“ஆமா”

“திரும்ப இதை ரீ ஓபன் பண்ணணும்னா ஸ்ட்ராங் எவிடன்ஸ் வேணும் அது…”

“தெரியும்”

“எப்படி?” ஜெஸ்ஸி வியப்பாக அவளைப் பார்க்க

சித்தார்த்தின் புறம் தன் பார்வையை திருப்பியவள்
“இன்ஸ்பெக்டர் ஸார் தான் நேற்று சொன்னாங்க” என்று கூறினாள்.

“அதெல்லாம் போகட்டும் மேக்னா உங்களைப் பற்றி கண்காணிக்குறதாக இருந்தால் அந்த தனபாலன் சென்னையில் தான் இருக்கணும்னு இல்லை தானே? அந்த தனபாலனுக்கு சென்னையை தவிர்த்து வேறு எங்காவது தெரிந்த ஆளுங்க இருக்காங்களா?”
சித்தார்த்தின் கேள்விக்கு ஆமோதிப்பாக தலை அசைத்த மேக்னா

“அவர் அரசியல் கட்சி கூட்டங்களுக்காக அடிக்கடி நிறைய ஊர்களுக்கு போய் வர்றது உண்டு அங்கே அவருக்கு எப்படியும் தெரிந்த ஆளுங்க இருப்பாங்க தான்” என்று கூறவும்

“கிட்டத்தட்ட எத்தனை ஊர்களுக்கு அவர் அப்படி போய் வந்து இருப்பாரு?” மீண்டும் தன் அடுத்த கேள்வியை அவன் கேட்டான்.

“எப்படியும் ஒரு இருபது, முப்பது ஊர்களுக்கு மேல் போய் இருப்பாரு”

“அவ்வளவா? அவ்வளவு இடத்திலும் போய் விசாரித்து பார்ப்பதற்கு இடையில் எல்லாம் முடிந்துடுமே”

“ஆனால் அவங்க எல்லாம் தனபாலனுக்கு உண்மையாக ஆதரவாக இருந்த ஆளுங்க இல்லை”

“என்ன? அப்போ அந்த தனபாலனுக்கு உண்மையாகவே உதவி பண்ண ஆளுங்களே இல்லையா?” ஜெஸ்ஸி சந்தேகமாக கேட்கவும்

மறுப்பாக தலை அசைத்தவள்
“அந்த தனபாலன் எந்த ஊருக்கு போனாலும் சரி, என்ன தப்பு பண்ணாலும் அவனுக்கு ஆதரவு கொடுக்கும் ஒரே ஆளு சுதர்சன் வெளி உலகிற்கு அவங்க பெரிதாக பழக்கம் இல்லாதவங்க மாதிரி தான் தங்களை காட்டிக் கொள்ளுவாங்க ஆனா அவங்க இரண்டு பேருக்கு உள்ளேயும் எந்த ஒளிவு, மறைவும் இல்லை இன்னும் சொல்லப்போனால் பிசினஸ் லாஸ் ஆன நேரம் எல்லாம் தனபாலனுக்கு அந்த சுதர்சன் தான் உதவி பண்ணாரு” என்று கூற

“அப்போ அந்த சுதர்சனை பிடித்தால் தனபாலனைப் பிடிக்கலாம் இல்லையா? அவனை பிடித்தால் மேக்னாவை வெளியே எடுக்குறது சுலபம் இல்லையா?” சித்தார்த் கேள்வியாக ஜெஸ்ஸியை நோக்கினான்.

“எல்லாம் சரிதான் ஆனா ஏ.சி யை எப்படி சமாளிக்குறது? ஏற்கனவே அவரு இந்த கேஸைப் பற்றி விசாரிக்க வந்ததற்கே நம்மளை மிரட்டி வைத்தவரு ஆச்சே!”

“ஏ.சி.பி மணிவேல் ஸாரா?” மேக்னா புன்னகை முகமாக கேள்வியுடன் சித்தார்த்தை நோக்க

அவனோ
“உங்களுக்கு அவரைத் தெரியுமா?” வியப்பாக அவளைப் பார்த்து வினவினான்.

“தனபாலன் கிட்ட அடிக்கடி வந்து பணம் வாங்கிட்டு போவாரே அதனால தெரியும் அப்போ உங்களை மிரட்ட வைத்ததும் அந்த சுதர்சன் வேலையாகத் தான் இருக்கும் என்னை நேரடியாக எதுவும் பண்ண முடியாதுன்னு தெரிந்து தான் அந்த சுதர்சன் இத்தனை வேலைகளைப் பண்ணுறான் முதல்ல அந்த தனபாலனுக்கு ஒரு முடிவு கட்டுறேன் அதற்கு அப்புறம் அந்த சுதர்சனை ஒரு வழி பண்ணுறேன்”

“மேடம்! எக்ஸ்கியுஸ் மீ நீங்க பேசிட்டு இருக்குறது போலீஸ் ஆபிஸர்ஸ் முன்னாடி அதை மறந்துடாதீங்க” ஜெஸ்ஸி அவசரமாக தங்கள் இருவரையும் காட்டிக் கூற

புன்னகையுடன் அவளை நிமிர்ந்து பார்த்தவள்
“நீங்க செய்ய வேண்டிய கடமையை சரியாக செய்து இருந்தால் இன்னைக்கு நான் இங்கே இப்படி இருக்க வேண்டிய அவசியம் இருந்து இருக்காது தானே!” கேள்வியாக அவர்களை நோக்கினாள்.

“ம்ம்ம்ம்! பரவாயில்லையே நீங்க யாரையும் பார்த்து பயந்து போற ஆளு இல்லைன்னு சித் சொன்னான் இன்னைக்கு நானே அதைப் பார்த்துட்டேன் ஆனா இந்த தைரியம் எல்லா இடத்திற்கும் சரி வராது மிஸ்.மேக்னா” ஜெஸ்ஸியின் கூற்றில் அவளை பார்த்து விரக்தியாக புன்னகைத்தவள்

“அது என்னவோ உண்மைதான் இந்த தைரியத்தினால் தான் நான் இங்கே இருக்க வேண்டிய நிலைமை வந்து இருக்கு” என்று கூற சித்தார்த் சிறிது சங்கடமாக பெண்கள் இருவரையும் திரும்பி பார்த்த வண்ணம் நின்றான்.

சில மணித்துளிகள் அவர்கள் மூவருக்கும் இடையில் கனத்த அமைதி நிலவியது.

“சரி மேக்னா நாங்க ஏதாவது க்ளூ கிடைக்குதான்னு ட்ரை பண்ணுறோம் அது வரைக்கும் நீங்க எதுவும் அவசரப்பட்டு பண்ணிடாதீங்க சரியா?” சித்தார்த்தின் கேள்விக்கு சரியென்று தலை அசைத்தவள்

“நான் உங்க கிட்ட இருந்து எனக்கு சாதகமான பதிலை எதிர்பார்த்து காத்திருப்பேன் ஸார்” என்று கூறவும் அவளைப் பார்த்து சரியென்று விட்டு அவர்கள் இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

“சித்தார்த் நீ என்னடா பண்ணி இருக்க?”

“ஏன் நான் என்ன பண்ணேன்?”

“வெளியே நீ என் கிட்ட சொன்னது ஒண்ணு இங்கே பண்ணுணது ஒண்ணு”

“அப்படி இல்லை ஜெஸ்ஸி மேக்னா கிட்ட அதைப்பற்றி பேசலாம்னு நினைத்தேன் ஆனா அவளைப் பார்த்ததும் அது மறந்து போச்சு”

“அய்யோ! கடவுளே! சரி அடுத்து என்ன சித் பண்ணுறது சொல்லு? அந்த சுதர்சனைப் போய் சந்திக்க முடியுமா?”

“அதற்கு வாய்ப்பே இல்லை ஏற்கனவே நான் போய் அந்த ஆளை பார்த்ததற்கே எப்போ வேணும்னாலும் ஏ.சி கிட்ட இருந்து கால் வரலாம்” சித்தார்த் சொல்லி முடிக்கவும் அவனது தொலைபேசிக்கு ஏ.சி.பி மணிவேலிடம் இருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

புன்னகையுடன் தன் போனை எடுத்து ஜெஸ்ஸியின் புறம் காட்டியவன் சற்று தள்ளி சென்று நின்று அந்த அழைப்பை எடுத்துக் கொள்ள மறுமுனையில் அவன் எதிர்பார்த்தது போலவே ஏ.சி.பி மணிவேல் கோபமாக சத்தமிட்டு கத்தத் தொடங்கினார்.

புன்னகை முகமாக அவரது கோபமான கேள்விகளுக்கு எல்லாம் சமாளிப்பது போல பதில் கூறியவன் நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டே ஜெஸ்ஸி நின்று கொண்டிருந்த புறமாக நகர்ந்து சென்றான்.

“என்னாச்சு சித்தார்த்? ஏ.சி என்ன சொன்னாரு?”

“இந்த கேஸைப் பற்றி இனி விசாரித்தால் நம்மளை சஸ்பெண்ட் பண்ணிடுவாராம்”

“என்னடா இது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை மாதிரி ஏதாவது பிரச்சினை வந்துட்டே இருக்கு”

“டோண்ட் வொர்ரி டியர் ஜெஸ்ஸி! இந்த ஏ.சியை சமாளிப்பது என் வேலை நீ இந்த கேஸ் சம்பந்தமாக ஏதாவது ஒரு க்ளூ மேக்னாவிற்கு சாதகமாக இருக்குதான்னு பாரு”

“சரி டா சித்! அப்போ நான் ஸ்டேஷனுக்கு கிளம்புறேன் நீயும் பத்திரமாக போ வழியில் மேக்னாவைப் பற்றியே யோசித்துட்டு போகாதே!” ஜெஸ்ஸி நக்கலாக அவனது தோளில் தட்டி கூறி விட்டு செல்ல அவனும் புன்னகையுடன் தன் பைக்கில் ஏறிக்கொண்டு தன் ஸ்டேஷனை நோக்கி புறப்பட்டான்.

ஏ.சி யிடம் சென்று இந்த கேஸைப் பற்றி உதவி கேட்பது சாத்தியமில்லை என்று தெரிந்த பின் இனி யாரிடம் சென்று இதற்காக உதவி கேட்பது என்ற சிந்தனையூடே தன் ஸ்டேஷனுக்குள் நுழைந்து கொண்டவன் அங்கே அவனது மேஜையில் கிடந்த ஒரு அழைப்பிதழை எடுத்து பார்த்தான்.

போலீஸ் டிரெயினிங்கில் இருந்த அவனது பட்ஜ்ச் நண்பர்கள் எல்லோருக்கும் வருடாந்த பார்ட்டிக்கான அழைப்பாக அது வந்திருந்தது.

அதில் சிறப்பு விருந்தினராக இருந்தவர் அவர்கள் பட்ஜ்சின் தலைமை காவலராக இருந்தவர் மட்டுமல்ல தற்போதைய சென்னையின் டி.சி.பி எட்வர்ட்.

அவரது பெயரை படித்து பார்த்ததுமே சித்தார்த்தின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.

அவர் அவனது பயிற்சி காலத்தில் மட்டுமல்ல சென்னையில் வெளியே எங்கே அவனை சந்தித்தாலும் அவனோடு அத்தனை நெருக்கமாக பேசிக் கொள்வார் ஒரு நெருங்கிய நண்பனாகவே அவர் சித்தார்த்தை கவனித்து கொள்வதுண்டு.

ஒரு பெரிய குழப்பத்திற்கு தீர்வு கிடைத்து விட்ட சந்தோஷத்தில்
“யுரேக்கா!” என்றவாறே தன் கையில் இருந்த அழைப்பிதழை தூக்கி போட்டு பிடித்த படியே தன் இருக்கையில் வாகாக சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

ஏ.சி மணிவேலினால் மேக்னாவின் வழக்கில் ஏற்பட இருக்கும் தடங்கல்களை தடுக்க டி.சி எட்வர்ட் தான் சரியென்று புரிந்து கொண்ட சித்தார்த் தன் அடுத்த கட்டத் திட்டத்தை வெகு மும்முரமாக தீட்டத் தொடங்கினான்…..