Mayavan 18

மாயவனின் மயிலிறகே 18

அபிஜித் இப்படி ஒரு சூழலை சந்திப்போம் என நினைத்திருக்க மாட்டான். மறைவிடத்தில் இருந்து வெளிவந்தத் தந்தையைக் கண்டு அதிர்ச்சியானவன் நேரம் போகப் போக அவரது முழியைக் கண்டு சிரிப்பை அடக்க முடியாமல் மறுபக்கம் திரும்பி நின்றுக் கொண்டான்.

“ஓ.கே ஃபிரண்ட் நாம நாளைக்கு விளையாடலாம். ஆனா நீங்கதான் அவுட்டு” என பாப்பு கூற, அபிஜித் திரும்பியிருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டவர் தொண்டையை செறுமியவாறு, “க்க்கும்… இனி இப்படி ஒளிஞ்சு விளையாடக் கூடாதுன்னு சொல்லத்தான் வந்தேன். நான் கீழ போறேன்.” என வாய் கூறினாலும், “நாளைக்கு யாரும் இல்லாதப்ப விளையாடலாம்” என சைகை செய்ய அதைப் புரிந்து கொண்டவள் சரிசரியென தலையசைத்தாள்.

அவர் சென்றபின், “ஹை சாக்லேட்… எனக்கா” என்றவாறு அவன் கையில் இருந்து வாங்க முற்பட அவளிடம் தந்தவன், “இது எத்தனை நாளா நடக்குது” என கேட்க,

சாக்லெட் அப்பியிருந்த விரலை சுவைத்தவாறு, “எது?” என கேட்டாள்.

“அதான் ஒளிஞ்சு விளையாடறது”

“அது மூனு நாளா விளையாடறோம்”

“நீ இங்க வந்தே நாலு நாள்தான் ஆகுது!” என்றான் ஆச்சர்யமாய்

“ம்” என்றவாறு சாக்லெட்டை சுவைபார்க்க, ‘அதுசரி’ என நினைத்தவன் தன் தந்தையின் இந்த பரிமாணத்தில் வியந்துதான் போனான்.

சிறுவயதில் அவருடன் விளையாண்டதெல்லாம் இன்னும் பசுமையாக நினைவிருக்க அமைதியாய் அதை அசைபோடலானான் ஒருவித ஏக்கத்தோடு.

மாலை ஜனனி கல்லூரியிலிருந்து வந்ததும், “என்னண்ணா உங்க பாப்புவ பாக்காம இருக்க முடியலயா” என வம்பிழுக்க, “வாலு… அதெல்லாம் இல்ல, ஐயா இனி தேனி கலெக்டர்” எனக் கூற, இவனுக்கு இங்கேயே மாற்றல் கிடைத்துவிட்டது இனி இங்குதான் இருப்பான் என்றதும் வீடே ஜனனியால் அல்லோகலப்பட்டது.

ஜனனி முன்பு போல தள்ளி நிற்காமல் இயல்பாய் அவனுடன் பழக அவனும் முன்பிருந்த ஒட்டாத தன்மையெல்லாம் இல்லாமல் இயல்பாய் பொருந்தி போனான்.

தாயிடம் கூட சில வார்த்தைகள் பேசவும் செய்தான். ஆனால் அந்த நெருக்கம் தாய் தந்தையிடம் இன்னும் வரவில்லை. விரைவில் அதுவும் நடக்கும் என உறுதியாய் நினைத்த காயத்ரி வானைத் தொட்ட சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தார்.

இதையெல்லாம் அமைதியாய் கவனித்துக் கொண்டிருந்தார் ரவிச்சந்திரன். இப்பொழுதுதான் வீடு முழுமையான ஒரு திருப்தி. அவரால் அனைத்தும் முடியுமென்றாலும் தான் விழும்போது தாங்க மகன் உடன் இருக்கிறான் என்ற பலம் வார்த்தைகளால் கூற முடியாது. ஒரு தந்தையால் மட்டுமே உணரக்கூடியது.

அடுத்த மூன்று நாளில் திருவிழா கலைகட்டியது. தினமும் ஏதாவது விசேஷம் இருக்க ஜனனியும் பாப்புவும் சக்கரம் கட்டாத குறையாக கோவிலிலேயே பலிகிடந்தனர். நேரத்திற்கு சாப்பிட கூட யாராவது தேடித்தான் செல்ல வேண்டியிருந்தது. யார் இந்த பெண் என கேட்டவர்களுக்கு, “என் சொந்தக்கார பொண்ணு” என காயத்ரி கூறிவிட்டார்.

யாரென்றே தெரியாத ஒரு பெண்ணை ஒரு குடும்பமே இந்தளவு ஏற்றுக் கொள்ள முடியுமா? அந்த வகையில் பாப்பு மேஜிக்தான் செய்தாள்.

ஏன்? இங்கு வந்த அன்றைக்கு மிகவும் தயக்கத்துடன்தான் உள்ளே வந்தாள். அதுவும் முதல் முறை காயத்ரியின் பின்னிருந்து ரவிச்சந்திரனை எட்டி பார்த்த போது அவரது மீசையும் அவரது தோற்றமும் இவளை சற்று மிரளதான் வைத்தது.

அவரும் புதரிலிருந்து எட்டி பார்க்கும் முயல்குட்டியைப் போல் துறுதுறு கண்களுடன் தன்னை பார்க்கும் பெண்ணை பார்த்தவுடன் தன்னையும் அறியாமல் ஏதோ வேறொரு எண்ணங்கள்.

ஆனால் அவள் தன்னை பார்த்து மிரளுவதைப் பார்த்து, ‘ தான் என்ன அவ்வளவு கொடூரமாகவா இருக்கிறோம்’ என யாரும் அறியாமல் தன் அறையின் ஆளுயரக் கண்ணாடியை ஒருமணிநேரம் பாடுபடுத்தியது வேறு கதை.

அன்றைய பொழுது அப்படியே சடுகுடு ஆட, நடுஇரவில் தாகம் எடுக்கவே தன் அறையில் தண்ணீர் தீர்ந்து போனதால் சமையலறைக்கு வந்திருந்தார் ரவிசந்திரன். சற்று தூரத்திலேயே ஏதோ சத்தம் கேட்க இந்நேரத்தில் யார் இங்கே என யோசித்தவாறே சென்றவர் கண்டது அங்கு கையில் ஐஸ்க்ரீம் டப்பாவுடன் நின்றிருந்த பாப்புவை. அவளது கோலிக்குண்டு விழிகள் யாராவது வருகிறார்களா என ஒரு சுற்று சுழல சட்டென தன்னை மறைத்துக்கொண்டவர் சுவாரசியமாக அவளது செய்கைகளை பார்த்திருந்தார்.

அபிஜித் சிறுவயதில் இங்கு இருந்த வரையும் சரி, சிறுபிள்ளையில் ஜனனியும் சரி அவர்களிடம் ஒரு பக்குவமான அணுகுமுறையே இருக்கும். இதுபோன்ற சிறுபிள்ளைத்தனங்களை செய்ததில்லை. அதனால் வேடிக்கையாக பார்த்திருந்தார்.

ஐஸ்க்ரீம் டப்பாவை திறக்க முயல, அவளால் முடியவில்லை. அவள் திணறுவதைப் பார்த்தவர் உதவ எண்ணி லைட்டைப் போட, இவரைக் கண்டதும் பதறி ‘ஐயோ திட்டுவாங்களோ!’ என பயந்து நின்றவளைக் கண்டதும் உருகிவிட்டது அவருக்கு.

பயந்தாலும் சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “அது…. அது… இது ஜில்லுனு இருக்கானு பார்க்க வந்தேன். பாத்துட்டேன், இதோ போறேன்” என்றவள் இரங்கல் தெரிவிக்கும் அளவுக்கு சோகத்தைக் கக்கி ஐஸ்க்கிரீமை ஒரு பார்வை பார்த்தவாறே அதை மீண்டும் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கப்போக, ” உங்களுக்கு வேண்டாமா! சரி எனக்கு குடுங்க நான் இத சாப்பிடதான் வந்தேன்” என்றவாறு டப்பாவை வாங்கியவர் அதை அவள் கண்முன்னேயே பிரிக்க, ‘ஐயோ ஐஸ்க்ரீம் போச்சே!’என்னும் பாவனையுடன் நின்றிருந்தாள்.

அவர் இவளை கண்டுகொள்ளாமல் டேபிளில் அமர்ந்து மெதுவாக சுவைபார்க்க இவளுக்கு வந்ததே கோபம் அவர் முன் சென்றவள் , “இது… இது நான்தான் முதல்ல எடுத்தேன் எனக்குதான் ” என சண்டைக்கு நின்றாள்.

“ஆனா உங்களுக்குதான் வேண்டாமே!”

“இ….இல்ல அது சும்மா சொன்னேன்… எனக்கும் வேணும்” என முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு கூற… அவள் கூறிய அழகில் அவருக்கு அவளுடன் பேச்சை தொடர நினைத்தவர், அவளை ஒரு பார்வை பார்த்து, “அப்ப ப்ரண்ட்ஸ்” என கையை நீட்டினார்.

“ஹான் அது எப்படி நீங்க பெரியவங்க” பேச்சு அவரிடம் இருந்தாலும் பார்வை டப்பாவிலேயே இருந்தது.

“ஓ…அப்படினா இது உங்களுக்குக்கு இல்ல. ஃபிரண்டா இல்லாதவங்க கூட நான் ஐஸ்க்ரீம் பகிர்ந்துக்க மாட்டேன்”

“பகிர்…..ந்து ன்னா” கேள்வியாக பார்க்க,

“பகிர்ந்துன்னா? ம்ம்ம்… ஷேர்…ஷேரிங்” என அவளுக்கு புரியும் வகையில் கூற,

“ஓ…ஷேரிங்கா… ஆனாலும் இது சீட்டிங். நான்… நான் இப்பயே அத்தைட்ட சொல்ல போறேன்” என மிரட்டினாள்.

“சொன்னா இனி ஐஸ்க்ரீமே வாங்கி வைக்க மாட்டா அந்த கெழவி”

‘என்னது! அத்தை… கெழவியா!’ எனமுறைத்தாலும் ‘ஐய்யயோ இப்படி வேற ஒன்னு இருக்கோ!’ என எண்ணியவள் வெகு யோசனைக்கு பிறகு, அத்தையை டீலில் விட்டு, “சரி ஃப்ரண்ட்ஸ்” என அவரது ஒப்பந்தத்தை வழிமொழிந்தாள்.

அங்கு ஆரம்பித்த இந்த அண்டர்க்ரௌண்ட் வேலை இன்று வரை தொடர்கிறது. நடுஇரவு சாப்பிடும் திருட்டு தீனியை காலையில் யாரும் பார்ப்பதற்கு முன் வாங்கி நிரப்பி விடுவார் ரவிசந்திரன் அதனால் இன்றுவரை காயத்ரியால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் அவளை அறிந்த அபிஜித்தோ நடுஇரவில் திருட்டு ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை கண்டுபிடித்து, உடல்நலம் கெட்டுவிட்டால் என நினைத்து அவள் சாப்பிட்ட நாளெல்லாம் நடுஇரவில் சுடுதண்ணீர் வைத்துக் குடிக்க வைத்தது வேறு கதை.

அபிஜித்தும் பாப்புவைப் பற்றி தான் அறிந்த உண்மையை இதுவரை யாரிடமும் கூறவில்லை. அவள் இப்படி இருக்கும் சூழ்நிலையில் இது தேவையில்லாத சிக்கலை உருவாக்கும் என எண்ணினானோ என்னவோ கூறாமல் விட்டுவிட்டான்.

ஒரு மாதம் சென்றிருந்தது. அபிஜித்திற்கு பாப்புவின் மேல் ஆழியளவு நேசம் பொங்கி இளமை உணர்ச்சிகள் அவ்வப்போது தாறுமாறாக ஏறினாலும் “ஜித்து” என அவள் அவன்முன் வந்தால் அள்ளியணைக்க ஆசை வருவதில்லை. மாறாக சேயை சீராட்டும் தாயாக மாறிவிடுகிறான்.

காலம் எப்போதும் ஒன்று போல் இருப்பதில்லை. ரோலர்கோஸ்டர் பயணம் போல உயர்ந்து, தாழ்ந்து, சிரித்து, சிலிர்த்து , கோபமாகி, கொஞ்சம் பயந்து என வாழ்க்கையை மடைமாற்றிக் கொண்டே இருக்கும்.

பாப்பு இன்றும் வழக்கம்போல கண்ணாமூச்சி ஆட எப்போதும் விளையாடும் அறையை மாற்றி அவசரத்தில் அங்கிருந்த மற்றொரு அறைக்குள் புகுந்து கொண்டாள் . ரவிசந்திரனும் எப்போதும் அவள் ஒளியும் அறையில் தேடி பார்க்க அப்போது பக்கத்து அறையில் இருந்து ஏதோ உடையும் சத்தம் கேட்டது.

‘அந்த அறைக்குள் யாரும் செல்ல மாட்டார்களே! என்னவாக இருக்கும்’ என சென்று பார்க்க அங்கு ஒரு போட்டோ சில்லுசில்லாய் உடைந்து இருந்தது. அதன் அருகில் பாப்பு விழுந்திருந்தாள்.

அது அவரது தங்கையின் அறை! உடைந்தது தங்கையின் போட்டோ!

போட்டோ உடைந்ததில் சற்று அதிர்ந்தாலும் பாப்புவின் நிலை கண்டு பதறி அருகில் சென்றவர், “பூக்குட்டி…பூக்குட்டி” (ஆம்!அவர் அவளை பூக்குட்டி எனதான் அழைப்பது) என அழைக்க அவள் எழவேயில்லை. உடனே விரைந்து செயல்பட்டவர் அவளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைச் செல்ல வீடே பரபரப்பானது. காயத்ரி உடன் செல்ல, வயதின் காரணமாக முதியவர்கள் பொறுத்து வரும்படி கூறி சென்றனர். அபிஜித்தும் ஓடிவந்துவிட்டான்.

அவள் அறையின் உள்ளே சிகிச்சையில் இருக்க அபிஜித் மற்றவர்களை துளைத்தெடுத்து விட்டான், “அவளை பாக்காம என்ன வேலை இத்தன பேருக்கு. எப்படி இது நடந்தது. ” என கேட்க, “தெரியலபா உங்கப்பதான் அவள தூக்கிட்டு வந்தாங்க.” என காயத்ரி கையை பிசைந்தபடி தவிப்புடன் கூறினார்.

உடனே தந்தையை பார்த்தவன் என்ன நினைத்தானோ ஒன்றும் கேட்காமல் ஒரு இருக்கையில் அமர, அவனருகில் வந்தவர், “பூக்குட்டிக்கு ஒன்னும் ஆகல போட்டோ உடைஞ்சதுல பயந்து மயங்கியிருப்பா நீ கவலைபடாத” என தட்டிக்கொடுத்தார்.

“போட்டோவா…” புரியாமல் பார்க்க,

“அது… உங்கத்தையோட போட்டோ. நான் பாக்கறப்ப போட்டோ உடைஞ்சு கிடக்க பூக்குட்டி பக்கத்துல மயங்கியிருந்தா. அதான் சொல்றேன் அவளுக்கு ஒன்னுமில்ல தைரியமா இரு” தகப்பனாக அவனை தேற்றினார்.

ஆனால் அவனுக்கோ, “அத்தையின் போட்டோ ” என்றதிலேயே, அதிர்வு உண்டானது. முன்பு அடிபட்டபோது பாப்புவை பரிசோதித்த டாக்டரின் அறிவுரை, ஷௌரியாவின் பேச்சு, அத்தையின் போட்டோ, பாப்புவின் மயக்கம் அனைத்தையும் இணைத்து பார்த்தவன் அமைதியாக அமர்ந்துவிட்டான்.

நடக்கவிருப்பதை கணிக்க ஜோதிடராக இருக்க வேண்டி அவசியமில்லை. சூழ்நிலை, மனிதர்களின் எண்ணங்கள், இவற்றை கொண்டே அடுத்து என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அபிஜித்தும் கணித்துவிட்டான்.

ஏதோ ஒரு அழுத்தம் உடல் முழுதும் பரவ ஆரம்பித்தது. தன்னை எதுவோ மூச்சுவிட முடியாத அளவு அழுத்துவது போல தோன்றியது. உடனே, எதற்காக இந்த அழுத்தம்… இல்ல எதாவது நடந்துடும்னு பயப்படறேனா?

‘ஆமா, பாப்புக்கு நினைவு திரும்பி உன்னை விட்டுட்டு போய்டுவாளோன்னு பயப்படற. நோ! நெவர்… எதுக்கு பயம். அவ என்னோட பாப்பு. அவள என்கிட்ட இருந்து யாராலயும் பிரிக்க முடியாது. யார் என்ன நினைச்சாலும் என்னை தாண்டிதான் அவகிட்ட நெருங்க முடியும்’ என்பதை உறுதியாக எண்ணிய பின்பே சற்று அமைதியானான். பிடிவாதம் பிடிவாதம் அப்படி ஒரு பிடிவாதம் அவன் முகத்தில்.

இவன் உறுதி செய்து என்ன செய்ய, உறுதியான பாறையை சில்லு சில்லாக உடைக்க சிறு உளியும் போதுமானதே!

மனதில், பல எண்ணங்கள் அதனால் தவிப்புகள் என முட்டி மோதி அலைந்துகொண்டிருக்க, அதை ஒத்தி வைக்கும் விதமாக அவனது போன் ஒலித்தது. அவனுடைய செயலாளர்தான் இன்னும் ஒரு மணி நேரத்தில் முக்கியமான மீட்டிங் இருக்க அதை நினைவுபடுத்தினார்.

காயத்ரியிடம், தான் செல்ல வேண்டும் எனக் கூறிய அதே நேரம் அறையே விட்டு வெளியே வந்த மருத்துவர், “சாதாரண மயக்கம் போலதான் இருக்கிறது பொருத்து பார்க்கலாம்” எனவும், சாதாரண மயக்கம்தான் என்பதில் சற்று ஆசுவாசமானவன், தான் அவளை ஒருமுறை பார்க்க வேண்டும் என அனுமதி பெற்று அறையினுள் சென்றான்.

அறையினுள் மயக்கத்தில் அவள். சாதாரணமாக தூக்குவது போலதான் இருந்தது அவள் தோற்றம். சற்று முன் நினைத்தவை மனதில் வலம் வர அவள் கையை எடுத்து தன் நெஞ்சோடு வைத்துக் கொண்டவன், “ஹேய் தூங்குமூஞ்சி இப்படி எதாவது செஞ்சு என்னை பயப்படுத்திட்டே இருக்கனுமா? இது சாதாரண மயக்கம்தானா! ஆனா, எனக்கு அப்படி தோணல. யார் போட்டோவ பாத்த நீ? உங்க அம்மாவையா?” என்றவன், அவள் கன்னங்களை ஒரு கையால் அழுத்திப் பிடித்தவாறு, “இங்க பாரு உனக்கு ஞாபகம் வந்தாலும் சரி, வரலனாலும் சரி இங்க எதுவும் மாறப்போறது இல்ல புரியுதா, எதுவும். நீ என்ன விட்டு ஒரு இஞ்ச் கூட நகரவிடமாட்டேன். ஷௌரியா வந்தாலும் ஏன் அந்த கடவுளே வந்தாலும் சரி நீ என்கூடதான்… எனக்குதான். இத எப்பவும் ஞாபகம் வச்சிக்க… என்ன புரிஞ்சுதா என் மாமன் மகளே” என அவள் நெற்றியில் அழுந்த முத்தம் பதித்தவன் எழ, அப்போதுதான் அங்கு அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் அன்னையையும் அவரை ஆதரவாக பிடித்தவாறு நின்றிருந்த தந்தையையும் கண்டான்.

அவர்கள் இவனது பேச்சை கேட்டுவிட்டார்கள் என தெரிந்தாலும் இயல்பாக, “பாத்துக்கோங்க, நான் ஈவ்னிங் வரேன்” என்றவாறு வெளியேறி விட்டான்.

அத்தம்பதியினரோ கேட்ட செய்தியின் அதிர்ச்சியில் சிலையாகி நின்றிருந்தனர்.

என்ன கூறினான் இவன்… இவள், இந்த பாப்பு தன் தம்பியின் மகளா என காயத்ரியும், தங்கையின் மகளா என ரவிசந்திரனும் நினைக்க, கூடவே அவர்கள் எங்கே? என்னவானது அவர்களுக்கு! என ஒரு நடுக்கமும் எழுந்தது.

“என்னங்க இது என்னென்னமோ சொல்லிட்டு போறான். இதெல்லாம் உண்மையா?” என காயத்ரி பரிதவிக்க, “பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லையே” என விளக்கியவர், ‘அதான் பூக்குட்டி முகம் பரிட்சயமானதா தெரிஞ்சதா’ என எண்ணிக்கொண்டார்.

“ஆனா… இவ ஏன் இப்படி… இவ அம்மா அப்பா எங்க”

“ஷ் அமைதியா இரு காயத்ரி” என தேற்றினாலும் அவருக்கும் சிறு கலக்கம் இருக்கத்தான் செய்தது.

காயத்ரி மெல்லஅவரிடமிருந்து விலகியவர் தன் மருமகளின் அருகில் சென்றார். மெல்ல நடுங்கும் கரங்களால் தன் உடன்பிறப்பின் மகளை ஸ்பரிசித்தவர் அருகில் அப்படியே அமர்ந்துவிட்டார்.

அபிஜித் தெளிவான முடிவுடனும், பெரியவர்கள் கலக்கத்துடனும் இருக்க பாப்பு மெல்ல மெல்ல தன் நினைவுகளை, தான் வாழ்ந்த வாழ்க்கையை தன் பெற்றவர்களை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தாள்.