ஆனந்த பைரவி part 10
காலையில் தான் கண் விழித்தாள் பைரவி. பெயின் கில்லரையும் தாண்டி வலி தெரிந்தது.
கமலாக்கா ‘வலிக்குதா பாப்பா‘ என்று ஒரு நூறு முறையாவது கேட்டிருப்பார். நடந்தது அத்தனையும் ஏதோ கனவு போல் இருந்தது பைரவிக்கு.
ஆனந்தைக் கண்ட மாத்திரத்தில் லியமையும் மறந்து அவனிடம் போனது மட்டும் தான் நினைவில் இருந்தது. பின்னால் வந்த வாகனத்தையோ அது தன்னை மோதியதையோ எவ்வளவு நினைவு கூர்ந்தாலும் பிடிபடவில்லை. அமைதியாக இருந்தாள். கனுலா (canular) இன்னும் கையிலேயே இருந்தது.
ஒரு ஏழு மணி வாக்கில் லியம் வந்துவிட்டான்.
“குட் மார்னிங் பைரவி, இப்ப எப்படி இருக்கு?”
“ம்… குட் மார்னிங். கொஞ்சம் பெயின் இருக்கு லியம். எப்ப டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க?”
“சீஃபை பாத்துட்டு தான் வர்ரேன். மிஸ்டர்.ஆனந்தன் ஃபுல் செக்கப் ஒன்னு பண்ணச் சொல்லி இருக்காராம். அது முடிஞ்சதும் தான் விடுவாங்க போல“
“அதெல்லாம் எதுக்கு? ஐ ஆம் ஆல்ரைட் லியம்“
“அதை நீ மிஸ்டர்.ஆனந்தன் கிட்ட சொல்லிரு.” கமலாக்கா பாத்ரூம் போக, அதை கவனித்தவள்…
“நீ ஆனந்தைப் பாத்தியா?”
“ம்…”
“ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”
“நீ இப்படி அடிபட்டு வந்து படுத்துக் கிடப்ப… நான் அப்படியே துள்ளிக் குதிக்கனுமா?”
பக்கென்று சிரித்தவள்…
“ரொம்ப சீனைப் போடாதே, இந்த சீரியஸ் லுக் உனக்கு செட் ஆகவே இல்லை.”
மௌனமாய் அவளைப் பார்த்திருந்தவன்… ஃபோனை எடுத்து யாருக்கோ மெஸேஜ் அனுப்பினான். கமலாக்கா பாத்ரூமில் இருந்து வர அவரை வீட்டிற்குப் போய் குளித்து விட்டு பைரவிக்கு மத்தியானம் சாப்பாடு கொண்டு வருமாறு பைரவி மூலம் தெரிவிக்கவே… அவர் தயங்கவும் அது வரை தான் துணை இருப்பதாக கூறி வெளியே இருந்த ட்ரைவருடன் அனுப்பி வைத்து விட்டுத்தான் அமர்ந்தான்.
ஏதோ சிந்தனையோடே அமர்ந்திருந்தவனை தொல்லை செய்யாமல் தானும் மௌனமாய் இருந்தாள் பைரவி.
“பைரவி“
“ம்…”
“கொஞ்சம் இருந்துக்கோ, இதோ வந்துடறேன்“.
“ம்… சரிப்பா“
கைகளில் வலி தெரியவே மெதுவாய் கட்டிலில் சாய்ந்து கண்மூடிக் கொண்டாள். மூடிய கண்களுக்குள் ஆனந்த்.
அரவிந்தன் அண்ணாவோடு ஏதோ பேசியபடி வாய்விட்டுச் சிரித்த ஆனந்த். முதல் முதலாய் ஏளனப் பார்வையோடு எதிரே நின்ற ஆனந்த். ஆத்மநாதன் அங்கிளோடு லாப் பற்றி அலசி ஆராய்ந்த ஆனந்த். புருவங்களை நெறித்து கோபமாய்ப் பார்த்த ஆனந்த்.
ஆனந்த்… ஆனந்த்… ஆனந்த்…!
சர்வமும் அவனாகிப் போக தன்னிலை மறந்து அமர்ந்திருந்தாள்.
கதவு திறக்கும் ஒலி கேட்கவே, லியம் வருவதை உணர்ந்தவள் கண்களைத் திறக்காமலேயே…
“லியம், எனக்கு ஆனந்தைப் பார்க்கனும் போல இருக்கு. இந்தச் செக்கப்பெல்லாம் ஒன்னும் வேணாம். என்னை ரிசோட்டுக்கு கூட்டிட்டு போறியா?”
சற்று நேரம் பதிலுக்காக பொறுத்திருந்தவள் லியம் பேசாமல் போகவே கண்களைத் திறந்தாள்.
மூடியிருந்த கதவின் மேல் சாய்ந்தபடி அவளையே பார்த்திருந்தான் ஆனந்த்!
உறைந்து போனாள் பைரவி. எதிர்பார்க்கவே இல்லை. விழி எடுக்காமல் அவனையே பார்த்திருக்க… பார்வைகள் மோதிக் கொண்டன.
கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த அந்த ஒற்றை சோஃபாவில் அமர்ந்தவன்…
“இப்போ எப்படி இருக்கு?” என்றான்.
பதில் சொல்லத் தோணாமல் அவள் அப்படியே அமர்ந்திருக்க..
“பெயின் இருக்கா?” என்றான் கொஞ்சம் அழுத்தமாய்.
“லேசா இருக்கு“
“ஒரு ஃபுல் செக்கப் இருக்கு, அது முடிச்சதும் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. இன்னைக்கு நைட்டே வீட்டுக்கு போயிடலாம்“
“நான் நல்லாத்தான் இருக்கேன், அதெல்லாம் ஒன்னும் வேணாம்.”
“இல்லையில்லை, எல்லாத்தையும் பார்க்கிறதுதான் நல்லது” பேசிப் பயனில்லை என அவள் அமைதியாக இருக்க…
“அப்படி என்ன யோசனை? இவ்வளவு கவனக் குறைவா இருக்க.” இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? உன்னைப் பார்த்த மாத்திரத்தில் நான் என் வசம் இல்லை என்று கவிதையா வடிக்க முடியும்.
“பைரவி!” அவன் அழுத்தமாக அழைக்க, நிமிர்ந்து பார்த்தவள்…
“தெரியலை, நான் என்ன பண்ணுறேன்னு எனக்கே தெரியலை. ஆனந்த்துன்னு வந்திட்டா…
அம்மா, அப்பா, வீடு, வாசல், படிப்பு, லியம்… எதுவும் பெரிசா தோணலை. நான் என்ன பண்ணட்டும்?”
“இப்ப நான் என்ன பண்ணனும் பைரவி?”
“ஒன்னும் பண்ண வேணாம். நான் சொல்லி நீங்க பண்ணக் கூடாது. உங்களுக்காத் தோணனும்.”
“ம்… ஆத்மநாதன் அங்கிள் கிட்ட சொல்லி இருக்கேன், வேற ஏற்பாடு பண்ணிக்கச் சொல்லி“
“ம்…” ஒரு பெரு மூச்சோடு எழுந்தவன்…
“டேக் கெயார்” என்றான். அவள் தலை ஆட்டவும் சட்டென்று கிளம்பி விட்டான்.
கண்களில் நீர் கோர்த்தது பைரவிக்கு.
**–**–**–**–**–**
நாட்கள் வேகமாக நகர்ந்தன.
அன்று இரவே பைரவியை டிஸ்சார்ஜ் செய்ய வீட்டுக்கு வந்துவிட்டார்கள். லியமும் கூடவே தங்கியிருந்தான். ட்ரைவரும் இருக்கவே உதவியாக இருந்தது கமலாவிற்கு.
அடுத்த நாள் மதியமே அருந்ததி வந்துவிட்டார். பைரவியின் அப்பா சந்திரனுக்கு அவசரமாக லீவு கிடைக்காததால் தனியாக வந்திருந்தார். லியமின் அறிமுகம் ஏற்கனவே இருந்ததால் எல்லாம் சுமுகமாகவே சென்றது.
ஆனாலும் பைரவிதான் தவித்துப் போனாள். அந்த ஒரு வாரமும் ஆனந்தைப் பார்க்க முடியவில்லை. அதற்கு முன்னரும் அடிக்கடி பார்க்கா விட்டாலும்… இப்போதெல்லாம் மனது அடிக்கடி முரண்டு பிடித்தது.
தன் அன்பை அவன் புரிந்து கொள்ள வில்லையே என்ற ஆதங்கமே அதிகமாக இருந்தது. தான் என்ன எதிர்பார்க்கிறோம் என்றே புரியவில்லை.
கை ஓரளவிற்கு குணமாகி இருக்க அசைக்க முடிந்தது. க்றச்செஸ் (crutches) வைத்து மெதுவாக நடக்கத் துவங்கினாள். விழுந்த இடம் அடர்ந்த புல் தரையாக இருந்ததால் அத்தனை பாதிப்பு இருக்கவில்லை.
அன்று ஹாஸ்பிடல் போக வேண்டிய நாள், செக்கப்பிற்காக. காலையிலேயே பைரவி தயாராகி விட்டாள். அருந்ததியும் புறப்படவே இடைமறித்த லியம்…
“டோன்ட் வொர்ரி ஆன்ட்டி, நான் கூட்டிக்கிட்டு போறேன்.” என்றான்
“இல்லை லியம். நானும் கூட வர்ரேன்“
“ஓ… கமான் ஆன்ட்டி. நீங்க வந்த நாளில் இருந்து ரெஸ்ட்டே எடுக்கலை. நைட்ல கூட ஒழுங்கா தூங்கலை. டேக் ரெஸ்ட். நான் பாத்துக்கறேன்.”
“ஆமா அருந்ததிக்கா. பாப்பாக்குத்தான் இப்போ நல்லா ஆகிடுச்சே. தம்பி பாத்துக்கும், நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க.”
கமலாவும் வற்புறுத்தவே அரை மனதோடு சம்மதித்தார் அருந்ததி.
ஹாஸ்பிடல் போனவர்கள் வேலை சீக்கிரமே முடிந்து விட்டது. கைக்கு இனி ட்ரஸ்ஸிங் தேவையில்லை என்று சொல்லி, பி ஓ பி யை மட்டும் செக் பண்ணினார்கள்.
ஏற்கெனவே ஒரு வாரம் கடந்து விட்டதால் குறைந்தது இன்னும் மூன்று வாரங்களாவது கால் அதிகம் அசையாமல் பார்த்துக் கொள்ள சொன்னார்கள்.
எல்லாம் முடித்துக் கொண்டு கிளம்பவே பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. லியமே காரை ட்ரைவ் பண்ணினான். ஏனோ இன்று ட்ரைவர் தேவையில்லை என்று மறுத்து விட்டான். எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.
மௌனமாக இருந்தாள் பைரவி. சிந்தனை மட்டும் ஆனந்த் வசம். அருந்ததி வந்திருந்ததால் பாட்டி மட்டுமே வந்து போனார். இல்லாவிட்டாலும் அவன் வந்திருப்பானா? ஏதேதோ குழப்பங்கள். கார் சட்டென நிற்கவும் கவனம் கலைந்தவள்…
“என்னாச்சு லியம்?” கேட்டவளைத் திருப்பிப் பார்த்து அழகாய்ப் புன்னகைத்தவன்…
“ஒரு ஸ்வீட் ஸர்பிரைஸ்! என்னோட ஸ்வீட் ஏஞ்சலுக்கு.”
கேள்வியாய் பார்த்தவள் கன்னத்தில் தட்டிவிட்டு காரை விட்டு இறங்கினான் லியம்.
சாலையின் எதிர்ப்புறத்தில் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த கறுப்பு Audi இல் இருந்து ஆனந்தன் இறங்க, அவன் கையிலிருந்த கார் கீ யை வாங்கிக் கொண்டு ஏதோ பேசினான் லியம். ஆனந்தன் அதற்கு ஏதோ பதில் சொல்ல இருவரும் வாய் விட்டு சிரித்தார்கள்.
கறுப்பு Audi இல் லியம் ஏறிப் போய்விட, பைரவி அமர்ந்திருந்த காரை நோக்கி வந்தான் ஆனந்தன்.
பைரவியின் ஆனந்த்…!
*****************
அந்தச் சின்னஞ்சிறு ஐ 10 ஐ முழுவதுமாக நிரப்பிக்கொண்டு ட்ரைவிங் சீட்டில் உட்கார்ந்த ஆனந்தனை விழி எடுக்காமல் பார்த்திருந்தாள் பைரவி.
“குட் மார்னிங் பைரவி” எந்தப் பதிலும் இல்லை.
“குட் மார்னிங் சொன்னா பதிலுக்கு குட் மார்னிங் சொல்லனும்“
“ஆங்… என்ன சொன்னீங்க?” லேசாக சிரித்தவன், காரை ஸ்டார்ட் செய்ய ஆச்சரியமாக பார்த்திருந்தாள்.
“எங்க போறோம்னு கேக்கலையா?” அவனையே ஆழ்ந்து பார்த்தவள் இடம் வலமாக தலை ஆட்ட, மீண்டும் சிரிப்பையே பதிலாகத் தந்தவன் சாலையில் சங்கமித்தான்.
**–**–**–**–**–**
பழைய குற்றாலம் அருவிக்கு சற்று தொலைவில் கார் நின்றது. சற்றுத் தொலைவில் தெரிந்த அருவி கரும் பாறைகளுக்கிடையே பாய்ந்தோடி வந்து வீழ்ந்தது, என்னமோ கருங்கூந்தலில் வைத்த வெள்ளை மல்லிகைச் சரமாய் தோன்றியது.
சுற்றுப் புறமெங்கும் பசுமை… பசுமை மட்டுமே. ஈரக் காற்றும், மூலிகை வாசமும் நாசிக்குள் நுழைந்து ஏதோ மாயம் பண்ணிக் கொண்டிருந்தது.
“என்ன சொன்னாங்க ஹாஸ்பிடல்ல?” அவன் கேட்க… சிந்தை கலைந்தவள்,
“கை ஓ கே வாம். ரொம்ப ஹெவியா ஏதும் பண்ண வேணாமாம். பி ஓ பி செக் பண்ணினாங்க. இன்னொரு த்ரீ வீக்ஸூக்கு கவனமா பாத்துக்க சொன்னாங்க“
“ம்… பெயின் இருக்கா?”
“கொஞ்சம் இருக்கு, பெயின் கில்லர் எடுத்துக்க சொன்னாங்க“
“ம்… கார்ல இப்படி உக்காந்துக்கிட்டு இருக்கிறது கஷ்டமா இருக்கா?”
“இல்லையில்லை” அவசரமாக மறுத்தாள். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன்..
“பேசணும் பைரவி. நிறைய பேசணும். யாருக்கிட்டயும் இதுவரைக்கும் இது சம்பந்தமா எந்த விளக்கமும் குடுக்கலை. நான் தான் முடிவெடுத்தேன். அதையும் மனப்பூர்வமாகத் தான் எடுத்தேன். அதுல எந்த வருத்தமும் துளி அளவு கூட இன்னைக்கு வரைக்கும் எனக்கு இல்லை.”
சற்று நிறுத்தியவன்…
“ஆனா இப்ப நிலமை அப்படி இல்லை. ஒரு பொண்ணு வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வர்றா… என் அன்புக்கு என்ன பதில் சொல்லப் போறேன்னு?” லேசாகச் சிரித்தவன்…
“அது பத்தாததுக்கு ஒரு தடியன் பின்னாலையே கெளம்பி வந்து என் ஃப்ரெண்டை எப்படி நீ இப்படி ட்ரீட் பண்ணலாம் அப்பிடின்னு மிரட்டுறான். என் நிலமை இப்படியாப் போச்சே!”
சிரித்தபடியே அங்கலாய்த்தான். அவனையே பார்த்திருந்த பைரவி முகம் சிவக்க பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.
“வாழ்க்கையில எல்லாமே நிறைவா இருந்தது பைரவி. நல்ல அம்மா அப்பா , கலாட்டா பண்ணுற தங்கை, அன்பான தாத்தா பாட்டி இப்படி எல்லாமே… பெரிய வீட்டுப் பையன் அப்படீங்கறதா? இல்லை இயற்கையாகவே எனக்குள்ள இந்த ஊர் மேல இருந்த பற்றா? எது என்னை இந்த ஊரை விட்டு அசையாம இப்படி கட்டிப் போட்டிருக்குதுன்னு இன்னைக்கு வரைக்கும் எனக்குத் தெரியாது“
“இந்த ஊரைப் பார்த்தா யாருக்குத்தான் ஈர்ப்பு வராது“
“ஆர்த்திக்கு வரலையே!”
“அ… அது…வந்து… அவ எப்பவுமே அப்படித்தான். ரொம்ப நல்ல பொண்ணு. ஆனா இந்த ஒரு விஷயத்துல மட்டும் ரகளை பண்ணுவா. காலேஜ்ல ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஏதாவது ஸ்பெஷல்னா சுத்திப்பாக்க கன்ட்ரி சைட் செலெக்ட் பண்ணினா ரொம்ப கோபப்படுவா. அங்க போய் என்ன ஃபன் பண்ண முடியும்னு. அவ வளர்ந்த விதம் அப்படி, தப்பு சொல்ல முடியாது.”
அவள் பேசி முடித்தும் திரும்பிப் பார்த்து சிரித்தவன்…
“தப்பு சொல்லலை, ஆனா அதே நேரம் ஏத்துக்கவும் முடியலை“
“இல்லை… இப்ப எதுக்கு இந்த சிரிப்பு?” அவள் கேட்கவும், வாய் விட்டு சிரித்தவன்…
“அந்தப் பொண்ணாலே நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையுமே கேள்விக் குறியா இருந்துது. ஆனா அதே பொண்ணை ரெண்டு பேரும் நியாயப் படுத்திக்கிட்டு இருக்கோம்“
“என்னோட அன்பு எவ்வளவு ஆழமானதுன்னு எனக்குத் தெரியும். அது நிறைவேறினாத்தான் உண்மைன்னு யாரு சொன்னா?”
“நிறைவேறாமப் போயிருந்தா…?”
அழகாய் அவனைப் பார்த்து புன்னகைத்தவள்…
“இப்பவும் போல எப்பவுமே எனக்குள்ள இருந்திருக்கும்“
“அப்போதாவது லியமுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்குமா?”
சட்டென அவனைத் திரும்பிப் பார்த்தவள்…
“எப்பவுமே யாருக்குமே அந்த வாய்ப்புக் கிடைச்சிருக்காது” என்றாள் உறுதியாக.
பேச்சுக்களற்ற மௌனம் அங்கு குடியிருக்க…
“பைரவி, வயசு இருபத்தி எட்டை தாண்டிருச்சு. இனி என் வாழ்க்கையிலே காதலெல்லாம் வருமான்னு தெரியலை“
அவன் சற்று நிறுத்த…
‘அட முட்டாளே! அறுபதைத் தாண்டியும் காதலாய் வாழ்பவர்களை வீட்டில் வைத்துக் கொண்டு இவன் என்ன பேசுகிறான்‘அவனை விசித்திரமாய் பார்த்தாள் பைரவி.
“ஆனா… ஆனா பைரவியை இனி விட்டுக் கொடுக்க முடியும்னும் தோணலை. ஐ நீட் சம் டைம் பைரவி. இந்த உணர்வு எனக்குள்ள இன்னும் ஆழமா இறங்கனும். ஆனந்த் அப்படீன்னு வரும்போது நான் நானாக இல்லைன்னு பைரவி சொன்ன மாதிரி நானும் சொல்லனும்.
அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்.”
அவன் பேசப் பேச தலை குனிந்து மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தாள் பைரவி. அவள் புறமிருந்து எந்தப் பதிலும் வராமல் போகவே ஆனந்தன் திரும்பிப் பார்த்தான். கண்களில் உருண்டு திரண்ட இரு மணித்துளிகள் அவள் உள்ளங் கைகளில் பட்டுச் சிதறியது.
“ஹேய் பைரவி! என்னாச்சு? எதுக்கு இப்போ அழற?”
அவள் புறம் திரும்பி அமர்ந்தவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தி…
“என்னாச்சுடா! இப்படி அழுதா நான் என்னண்ணு எடுத்துக்கிறது. நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா?” அவசரமாய் இல்லை எனத் தலை ஆட்டினாள்.
“அப்போ எதுக்கு அழுற?”
“நான் எதுக்கு அழுறேன்னு எனக்கே தெரியாதப்ப உங்ககிட்ட எப்படி சொல்லுவேன்.”
அவள் வியாக்கியானத்தில் ஆச்சர்யப் பட்டவன் வாய் விட்டுச் சிரித்தான்.
“பாவம் எங்கம்மா. சூது வாது தெரியாதவங்க. எப்படித்தான் இப்படி ஒரு மருமகளை வெச்சு சமாளிக்கப் போறாங்களோ?”
அவன் அங்கலாய்க்க… கண்ணீரைத் துடைத்துக் கொண்டே சிரித்தவள்,
“அவங்க, மகனை விட விவரமாத்தான் இருக்காங்க. மகன் சம்மதம் சொல்றதுக்கு முன்னாடியே அவங்க சொல்லிட்டாங்க“
“ஹேய் இது எப்போ நடந்தது?” அவன் ஆச்சரியப்பட… அன்று நடந்தது அத்தனையையும் சொல்லி முடித்தாள்.
“ஓ…! எனக்குத் தெரியாம இவ்வளவு நடந்திருக்கா! ஆக எனக்குத் தான் விவரம் பத்தலையா?”
நமட்டுச் சிரிப்புடன் அவன் கேட்க, ஆமெனத் தலை ஆட்டினாள் பைரவி.
“இங்கப் பாருடா! அம்மணி எனக்கு விவரம் பத்தலைன்னு எவ்வளவு கூலா சொல்லுறாங்க. அப்போ காட்டிட வேண்டியதுதான், நான் எத்தனை விவரமானவன்னு.”
“வந்து ரொம்ப நேரமாச்சு, அம்மா தேடுவாங்க. கிளம்பலாமா?”
அவள் பேச்சை மாற்றுவது புரிந்து, மென்மையாய் சிரித்தவன்…
“ம்… போகலாம்” என்றான்.
இத்தனை வயதுக்கு மேல் தனக்கு காதல் வராது என்று சொல்லிக்கொண்டே காதல் செய்பவனை என்ன சொல்வது!
மீண்டும் அமைதியான பயணம்…
**–**–**–**–**–**
கார் கைமாறிய இடத்திலேயே காத்திருந்தான் லியம். அவன் ரிஸ்ட் வாட்சை திருப்பித் திருப்பி பார்ப்பதிலேயே அவன் பதட்டம் புரிந்தது. காரை ஆனந்தன் நிறுத்தவும் அவசரமாக வந்தவன் Audi இன் கீயை ஆனந்தனிடம் கொடுத்து விட்டு கார்க் கதவைத் திறக்க…
“லியம்” அழைத்தாள் பைரவி.
ஆண்கள் இருவருமே நின்று என்னவென்று பார்க்க… காரை விட்டு சிரமப்பட்டு இறங்கியவள், லியமை தன் அருகே கை நீட்டி அழைத்தாள். ஆச்சரியமாக அவளைப் பார்த்தவன் ஆனந்தனைத் திரும்பிப் பார்க்க… அவன் ‘போ‘ என்பது போல் தலை அசைத்தான்.
தன்னை நெருங்கி வந்த லியமின் வலது கையை பற்றியவள்,
“தாங்க் யூ! தாங்க் யூ வெரி மச்!” என்று சொல்லி பற்றிய அந்தக் கையில் மென்மையாய் முத்தம் வைத்தாள். திடுக்கிட்ட லியம் சட்டென ஆனந்தனைப் பார்க்க…
புன்னகை மாறாத முகத்தோடு பைரவியையே பார்த்திருந்தான் ஆனந்தன்.
பைரவியின் ஆனந்த்!