Varaaga nathikaraiyoram 2

யோகாவை முடித்த சகோதரிகள் இருவரும், குளிப்பதற்கு தேவையானவற்றை எடுத்து தங்களது தாயை காண அடுப்படிக்கு வர…

அவர்களை பார்த்த சீதா,

“வாங்கடி வாங்க… என்ன உங்க குரங்கு வித்தையெல்லாம் சூரியன்கிட்ட காமிச்சிட்டு வந்தாச்சா.. இந்தாங்க”

என்றவாறு அவர்கள் வழக்கமாக அருந்தும் கேழ்வரகு கூழை ஆளுக்கு ஒரு டம்ளர் குடுக்க, பீறிட்டு வந்த சிரிப்பை கடினப்பட்டு அடக்கிய ருத்ரா, அமைதியாக கூழை பருக தொடங்கினாள்.

(கேழ்வரகில் உடலுக்கு நன்மை தரும் அமினோஅமிலங்களும், கால்சியமும், இரும்புசத்தும், இன்னபிற சத்துக்களும் உள்ளன. இது உடலுக்கு ஒரு நாளிற்கு தேவையான புத்துணர்ச்சியை தரவல்லது.)

 

எதையும் பொருத்துக்கொள்ளும் முத்ரா, தனது யோகாவை குறைகூறினால் மட்டும் பொங்கிவிடுவாள். இப்போது மட்டும் விடவா போகிறாள்.

கையில் இருந்த டம்ளரை அடுப்பு மேடை மீது வைத்தவள், இரு கையையும் இடுப்பில் வைத்தவாறு…

“அம்ம்ம்மா… அது பேரு யோகானு எத்தனைதடவ சொல்றது… திரும்ப திரும்ப கேவலபடுத்துற”

என்று போர்க்கொடி தூக்க.. அவரோ அலட்சியமாக,

“ஆமா… பொல்லாத யோகா… கொஞ்சம் தள்ளுடி அடுப்படி வேலையை மறைச்சிகிட்டு”

என்று கூறிகொண்டே அவளை தள்ளிநிறுத்தி,

“தெய்வம் அத்தையோட தோழி நம்ம வீட்டுக்கு வராங்க, நியாபகம் இருக்கா முத்ரா ?

அதனால, இன்னக்கி 2 பேரும் சீக்கிரம் போய் குளிச்சிட்டுவாங்க”

என்றவாறு அசால்டாக அவளது கோபத்தை தூசு போல் தட்டிவிட்டு தனது வேலையை தொடர்ந்தார் சீதா.

தெய்வம், கருணாகரன் கூடபிறந்த ஒரே தங்கை. அடுத்த தெருவில் தான் வசிக்கிறார்.

இதைக்கேட்டதும் தனது கோபத்தை மறந்த முத்ரா…

“அப்பா நேற்றே சொன்னாரு, எதுக்குமா வராங்க ?”

என்று வினவ,

“யாருக்கு தெரியும் உங்க அப்பா எங்க அதெல்லாம் சொன்னாரு ? வேணும்னா நீயே போய் கேளு”

என்று கூற முத்ராவோ…

“அட போமா.. உன்கிட்டயே சொல்லாதவரா என்கிட்ட சொல்லிரபோறாரு ? சரி நாங்க குளிச்சிட்டு வரோம்”

என்றவாறு தங்களது வீட்டின் பின்புறம், அரை கிலோமீட்டர் தள்ளி ஓடும் வராக நதிக்கு, மூலிகை குளியல்போடி மற்றும்  மஞ்சள் சகிதம் சென்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஓடும் வராக நதி, காசியில் ஓடும் புண்ணிய கங்கைக்கு சமமாக கருதப்படுகிறது. இது சோத்துப்பாறை அணையில் இருந்து பெரியகுளம் வழியாக சென்று வைகை ஆற்றில் கலக்கிறது.

இந்நதியின் கரையில் தான் தேனியிலேயே மிகப்பெரிய கோவிலான ராஜேந்திர சோழீஸ்வரன் கோவிலும் உள்ளது. மூலவர் சிவனாக இருந்தாலும், முருகன் தான் பிரசித்தி பெற்றவர். இங்கு நீராடி முருகனை வணங்கினால், தீராத வியாதியும் தீரும் என்பது ஐதீகம்.

அக்கா தங்கை இருவரும் தண்ணீரில் இறங்கும் முன், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் தெரிந்த இக்கோயில் கோபுரத்தை வணங்கிவிட்டே இறங்கினர்.

விளையாடிக்கொண்டே குளித்து முடித்தவர்கள், இவர்கள் செல்லும் வழியில் யாரும் வரமாட்டார்கள் என்பதால், ஈர உடையை மாற்றாமல் பிழிந்து, வீட்டின் பின்புறம் ருத்ராவின் யோசனையில் கட்டபெற்ற ஒற்றை அறையில், எப்போதும் இருக்கும் சுடிதாரை எடுத்து உடைமாற்றினர்.

வீட்டினுள் ருத்ரா செல்லும் முன் அவளை பிடித்து கொண்ட முத்ரா தனது தமக்கையிடம்,

“ருத்ரா வீட்டிற்கு யாரு வந்திருந்தாலும், என்ன பேசினாலும் கண்டுக்காத… அவங்க அத்தைக்கு பிரண்டு வேற… எப்படி இருப்பாங்க ? நம்ம அத்தை மாதிரியே தான் இருப்பாங்க.. உனக்கு பிடிக்கலைனா பேசாத”

என்று கூறினாள்.

கேட்கமாட்டாள் என்று தெரிந்தாலும் ஒரு நப்பாசையில் கூற, அவள் எதிர்பார்த்த மாதிரியே,

“அது அவங்க நடந்துகொள்வதை பொருத்து இருக்கு“

என்றாள் ருத்ரா.

முத்ரா இவ்வாறு சொல்வதற்கு அழுத்தமான காரணம் அவளது அத்தையின் மீது உள்ள பாசத்தினால் இல்லை ருத்ராவிற்காக தான்.

ருத்ராவிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டென்றால் அது அவளது கோபமே. கட்டுப்பாடில்லாமல் கோபம் பெருகினால் அவள் அதை இரு வழிகளில் காண்பிப்பாள்.

ஒன்று அவளது ரூமிற்கு சென்று கதவடைத்து தொண்டை வற்ற, வீடே அதிரும் அளவிற்கு கத்துவாள் அல்லது வீட்டை விட்டு சற்று தள்ளியிருக்கும் வராகநதிக்கு, பத்தே நிமிடங்களில் நடந்து சென்று, அசுர வேகத்தில் நீரில் மூழ்கி, கோபம் தீரும் மட்டும் நீச்சல் அடிப்பாள்.

இதற்கு பயந்தே வீட்டினர் அவளுக்கு கோபமூட்டும் எந்த காரியத்தையும் இரவு மற்றும் சில அத்தியாவசிய நேரங்களில் செய்யவோ சொல்லவோ மாட்டார்கள்.

இதனை குறைக்க முத்ராவின் யோகாவினாலே முடியவில்லை என்றால் எவ்வளவு வீரியம் என்று பார்த்துகொள்ளுங்கள்.

பெற்றோருக்கோ அவளது இந்த செயல்களை வெளியே தெரியாமல் மறைப்பதில் இருக்கும் கவனம், அதை குறைப்பதில் இருக்கவே இருக்காது.

அந்த மாதிரி சமயங்களில் முத்ராவை கிட்டே கூட அண்ட விடமாட்டாள் ருத்ரா… பயம் எங்கே தங்கையை காயப்படுத்தி விடுவோமோ என்று…

வீட்டினுள் பெண்கள் நுழைகையில் அவர்கள் கண்ட காட்சி இதுதான்.

தெய்வம் அத்தை சோபாவில் அமர்ந்திருக்க, அருகில் அவரது தோழி மற்றும் அவர் கணவர், பக்கத்தில் உள்ள இரு ஒற்றை சோபாவில் இரண்டு ஆண்கள், அவர்களது மகன்களாக இருக்க வேண்டும், கூடவே இவர்களது தந்தையும் நாற்காலியில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்.

இதுவரை எந்த வெளி ஆண்மகன்களையும் வீட்டினுள் பார்க்காத சகோதரிகளுக்கு மனதினுள் எதுவோ நெருடியது.

அதற்கேற்றார் போலத்தான் அத்தை தெய்வத்தின் பேச்சும் இருந்தது.

“அண்ணே, நான் சொன்னேன்ல மெட்ராஸல எனக்கு ஒரு தோழி இருக்கானு அது இவ தான்… பெயர் கல்யாணி, அவங்க இவளோட கணவர் ராஜசேகர், அவங்களுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் ஆகாஷ் அப்புறம் இளையவன் பிரகாஷ்.”

“மூத்தவனுக்கு தான் இப்போ பொண்ணு பாக்குறாங்க, என்கிட்ட நம்ம பக்கம் ஏதாவது நல்ல பொண்ணா இருந்தா கேட்டு பாக்க சொன்னங்க, நம்ம இனம் தான் ணே.. அதான் நான் நம்ம பொண்ணு போட்டோவ காமிச்சேன், அவங்களுக்கும் ரொம்ப பிடிச்சிபோச்சி, உங்ககிட்ட பொண்ணு கேட்க சொன்னாங்க… நான் தான் வாங்க அப்படின்னு சொல்லி கையோடு கூட்டிட்டு வந்துட்டேன்.”

“பிடிச்சிருந்தா சும்மா வாய்வார்த்தையா நிச்சியம் பண்ணிக்கலாம் அண்ணே.”

என்று கூறினார்.

இதை கேட்டதும் அதிர்ந்து நின்ற  தனது பெண்களைப் பார்த்துக்கொண்டே,

“எதுவாயிருந்தாலும் என் பொண்ணு ருத்ரா கிட்ட கேட்டு தான் முடிவு பண்ணனும்… ஏன்னா வாழப்போறது அவதான”

என்று மொழிய,

தெய்வமோ பதறிக்கொண்டு

“அண்ணே அவங்க பொண்ணு கேட்டு வந்தது முத்ராவ, நான் ஒருத்தி கூறுகெட்டத்தனமா பேர் சொல்லாம சொல்லிட்டு இருக்கேன்”

என்று கூற

கருணாகரன் – சீதா தம்பதியினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

முதலில் சுதாரித்தது சீதாதான்…

“ அண்ணீ..”

என்று சிறிது கோபத்துடன் அழைத்தவர்,

“இன்னும் ருத்ராக்கு கல்யாணம் பேசல அதுக்குள்ள எப்படி முத்ராவ கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும் ?”

என்று வினவ.

தெய்வமோ சற்றும் அதனை பொருட்படுத்தாமல், “ அதான் என் மகன் பரசுராம் இருக்கான்ல, அவன ருத்ராக்கு பேசி முடிச்சி, ஆகாஷ்க்கு முத்ராவ கட்டிகுடுத்துருவோம்”

என்று தனது எண்ணத்தை கூறினார்.

ருத்ராவிற்கு கோபம் ஏற ஆரம்பித்தது… ஏனென்றால் அவளிக்கு அத்தை தெய்வம் மற்றும் அவரது மகன் பரசுராமை அறவே பிடிக்காது தந்தை முன் பாசமுகம், தன் முன் அலட்சியமுகம் என இருக்கும் இருவரை கண்டாலே அவள் விலகிவிடுவாள்.

அப்படியும் ஒருநாள் தனியாக இருக்கும் இவளிடம் சென்று, தெய்வம் தன் மகனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்த,

“முதலில் உங்க மகனை ஊர்சுத்தாமல் ஒரு வேலையில் இருக்க சொல்லுங்க, அதுக்கப்புறம் கல்யாணம் பேசலாம்“

என்று ருத்ரா முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டாள்.

இதை கேட்ட தெய்வத்தின் மனம் குரோதத்தில் துடித்தது. மனதிற்குள்

“இருடி இரு…. இவ்வளவு பேசுற உன்னை என் வீட்டிற்கே மருமகளாக்கி, உன்னை நான் பாடாப்படுத்தல, என் பேர் தெய்வம் இல்லடி”

என்று கருவியவர், வெளியே முறைத்துக்கொண்டே சென்றுவிட்டார்.

அவரும் தான் என்ன செய்வார் ? தன் கணவருடன் சேர்ந்து பையனும் உருப்படாமல் சுற்ற, தற்போது அவர் அண்ணனின் தயவில் தான் வாழ்ந்து வருகிறார்.

கருணாகரனிற்கும் தங்கை மீது இயல்பாகவே பாசம் என்பதால், மாதம் மாதம் தவறாமல் பண உதவியோ அல்லது பிற உதவியோ செய்துவிடுவார்.

ஓசியில் வாங்க மனட்சாட்சி உறுத்தியதோ, இல்லை 5 ஏக்கர் நிலம் கண்ணை உறுத்தியதோ, ருத்ராவை தனது அண்ணனிடம் 2 வருடங்களுக்கு முன்பே பொண்ணு கேட்டார்.

ஆனால் தனது மச்சானை போலவே இருக்கும் பரசுராமிற்கு பொண்ணு தர விரும்பாத கருணாகரன்,

“இன்னும் 2 வருடம் போகட்டும், அதற்குள் உன் மகனை ஒழுங்கா இருக்கச்சொல்.”

என்று தங்கை மனம் வருந்தாமல் இருக்க கூறினார்.

இவரும் 2 வருடம் சென்றதும் வெவ்வேறு வழிகளில் முயன்றுக்கொண்டே இருக்கிறார்.

இப்படி பேசிகொண்டிருக்கும் போதே தெய்வம் தன் தோழியை பேசுமாறு கண்ணசைக்க, கல்யாணியும் தன் பங்குக்கு

“தப்பா எடுத்துக்காதீங்க… எங்களுக்கு உங்க சின்ன பொண்ண தான் ரொம்ப பிடிச்சிருந்தது… அத நாங்க தெய்வம் கிட்ட சொன்னதும் அவள்,

“என் பையனுக்கு தான் மூத்த பொண்ணு, அதனால சின்னப்பொண்ண நீங்க பேசிமுடிங்க, ஒரே மேடையில் 2 கல்யாணத்தையும் முடிச்சிரலாம்”

அப்படின்னா, அதான் வந்தோம்”

என்றார்.

அக்கா தங்கை இருவருக்கும் இதை கேட்கையில் எரிச்சலாக இருந்தது. தன் அத்தை போடும் திட்டத்தை தெளிவாக புரிந்து கொண்ட ருத்ரா.. நேரே கல்யாணியிடம் சென்று,

“ஆன்ட்டி.. ஒரு வீட்டுக்கு பொண்ணுகேட்டு வரதுக்கு முன்னாடி, அந்த வீட்டுல இருக்குறவங்க கிட்ட பேசணும்.. நேர்ல முடியலையா போன்லயாவது பேசியிருக்கலாமே… அத விட்டுட்டு கண்டவங்க பேச்ச நம்பி எப்படி வந்தீங்க ? ஒரு வேளை அவங்க பொய் சொல்லியிருந்தா என்ன பண்ணுவீங்க ?”

என்று கேட்டாள். மேலும்,

“சரி அதெல்லாம் வேண்டாம்… பட் நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க,

நீங்க ஒரு வீட்டுக்கு பொண்ணு பார்க்க போறீங்கனு வச்சிக்கோங்க. அங்க அந்த பொண்ணோட அம்மா அப்பா உங்ககிட்ட

“தப்பா எடுத்துக்காதீங்க… எங்களுக்கு உங்க சின்ன பையன தான் பிடிச்சிருக்கு.. பெரிய பையன் கல்யாணம் உறுதியானதும் சொல்லுங்க, நாம 2 கல்யாணத்தையும் ஒரே மேடையில் வச்சிக்கலாம்”

அப்படின்னு சொல்றாங்க… உங்க பதில் என்னவா இருக்கும் ?

சரின்னு சொல்வீங்களா ?”

என்று ஏளனமாக கேட்டாள்.

கல்யாணிக்கு அது சுருக்கென்று மனதில் குத்தியது… இன்னமும் சாகாமல் இருந்த அவரின் மனட்சாட்சி

“உண்மை தானே… இப்போவே இப்படி சொன்னா நம்ம காலத்திற்கு அப்புறம் எப்படி இவங்க ஒற்றுமையா இருப்பாங்க அப்படின்னு தோணுமே”

என்று எடுத்துரைக்க, காலம் கடந்து தெய்வத்தோடு சேர்ந்து தான் செய்த தவறை உணர்ந்தார்.

தெய்வம் இதனை எதிர்பார்க்கவில்லை… மற்றவர்கள் முன் தன்னை “கண்டவள்” என்று கூறியதோடு, தான் போட்ட திட்டத்தையும் தவிடுபொடியாக்கிய ருத்ராவை காண காண அவரது வன்மம் அதிகரித்தது.

இதற்காக அவர் பட்ட கஷ்டம், கொஞ்சமா ? நஞ்சமா ? மூளையை கசக்கி பிழிந்து.. கல்யாணி பொண்ணு பார்க்கிறாள் என்று தெரிந்ததும், முத்ராவின் போட்டோவை மட்டும் காண்பித்து, அவர்களுக்கு மிகவும் பிடித்ததும், கல்யாணியிடம் தனது திட்டத்தை விளக்கினார்.

“இனி ருத்ரா என் காலடியில்”

என்று அவளை பற்றி தெரியாமல் நினைத்து மகிழ…

”எல்லா கனவும் கானல் நீராயிடும் போல இருக்கே”

என்று கையை பிசைந்துக்கொண்டு கல்யாணியை பார்த்தாள்.

கல்யாணியின் கணவர் ராஜசேகரோ, இது எதையும் அறியாமல் கோபத்தோடு எழுந்து,

“வாங்க போகலாம் இதுக்கு மேல இங்க இருக்க தேவையில்லை”

என்றவாறு வாசலை நோக்கி நகர..

கருணாகரன் – சீதா இருவரும்

“ருத்ராவை கண்டிப்பதா ? தெய்வத்தை பார்ப்பதா ? இல்லை கோபத்தோடு செல்பவர்களை சமாதானம் பண்ணுவதா ? அப்படியே பண்ணினாலும் அவர்கள் சொல்வதற்கு நாம் சரி சொல்வது போல் ஆகிவிடுமே”

என்று தவித்து நின்றார்கள்.

இதில் நிம்மதியாய் ஒரு ஜீவனும், பரிதாபமாய் இரு ஜீவனும் பெருமூச்சி விட்டது.

நிம்மதிக்கு சொந்தக்காரி முத்ரா..

“எங்கே நம்மை மாட்டி வைத்துவிடுவார்களோ”

என்று பயந்து போய்விட்டாள். இப்போது தான் அவளிற்கு  மூச்சி சீராக வெளிவந்தது.

பரிதாபமாய் முழித்த இரு ஜீவன் ஆகாஷும் பிரகாஷும் தான். ஆகாஷிற்கு, முத்ராவை போட்டோவில் பார்த்ததும் பிடித்திருந்தது.

“அவளை நேரில் காண ஆவலாய் வந்தால், இனி காணவே முடியாது போலவே”

என்று எண்ணி மனதிற்குள் நொந்துகொண்டான்.

பிரகஷிற்கோ ருத்ராவின் கோபம் மற்றும் அவளது தைரியம் மனதை கவர்ந்தது… அவனுக்கு எப்பொழுதும் தாயின் தோழியான தெய்வத்தை பிடிக்காது.

இங்கு கருணாகரன் ருத்ராவிடம் கேட்க சொல்லியதிலேயே, தெய்வம் கூறியது பொய் என்று அறிந்து கொண்டவனுக்கு, இப்பொழுது இன்னமும் பிடிக்காமல் சென்றது.

 

ருத்ரா தன் தாயை எதிர்த்து பேசியது கோபம்தான் என்றாலும், தங்களின் மேல் தான் தவறென்பதால் பொருத்துக்கொண்டான்.

மேலும் அவளிற்கு பரசுராம் மீது விருப்பமில்லை என்பதும் தெளிவாகிவிட… யாருமறியாமல் நெஞ்சை நீவிவிட்டான் பிரகாஷ்.

அண்ணன் – தம்பி இருவரும் எவ்வாறு பிரச்சனையை சமாளிக்க என்று யோசனை செய்ய, அதற்கு அவகாசமில்லாமல் பெற்றோர் வெளியேறினார்கள்.

“சிறிதுநாள் கழித்து மீண்டும் முயற்சிக்கலாம்… இப்போதைக்கு இதைப்பெரிதாக்க வேண்டாம்”

என்று நினைத்து கொண்டே அமைதியாக தத்தம் மனம் கவர்ந்தவர்களை அவர்கள் அறியாமல், பார்த்து ரசித்துவிட்டே சென்றனர்.