Thulabaaram 1

துலாபாரம்

ஜன்னலோர இருக்கையிலிருந்து கீழே எட்டிப் பார்த்தாள் ஷன்மதி. மேகங்களுக்கிடையில் சிறு புள்ளிகளாய் கான்க்ரீட் காடு. பிளைட் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது. மனதுக்குள் படபடப்பு. இந்திய மண்ணை மிதித்து பதினைந்து வருடங்கள் கழிந்து விட்ட நிலையில், தனியாக தான் மேற்கொண்டிருக்கும் இந்த பயணம் அவளுக்குள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நான்கு நாட்கள் முன்பு அவளை அழைத்தவனை நம்பி தமிழக மண்ணை மிதிக்க தயாராகி வந்துவிட்டாள்.

“பாட்டி சீரியஸா இருக்காங்க. உன்னை பார்க்கனும்ன்னு நினைக்கறாங்க. இஷ்டமிருந்தா வா. அட்ரெஸ் டெக்ஸ்ட் பண்ணி விடறேன்.”

மொட்டையான அழைப்பு. தலையும் இல்லாமல் காலும் இல்லாமல் இதென்ன என்று குழம்பினாள். யாரென்று தெரியவில்லை. நிஜமாகவே தன்னைத் தான் அழைத்தானா? எண்ணை பார்த்தாள். இந்தியாவிலிருந்து வந்திருந்தது. மெனக்கெட்டு யாரும் ஐஎஸ்டி கால் செய்யப் போவது இல்லை. அப்படியே செய்தாலும், ராங் கால் செய்ய வேண்டும் என்று நினைப்பார்களா என்ன? ஆனால் காரணமே இல்லாமல் எதற்காக இப்படி ஒரு மொட்டை அழைப்பு?

“ஹெலோ! மே ஐ நோ ஹூம் யூ ஆர்?” என்று கேட்க, மறுபுறம் நிசப்தமானது.

“ஹெலோ… ஹெலோ…” என்று மீண்டும் அழைக்க, கனைத்துக் கொண்டவன்,

“நீ ஷன்மதி தான?”

“எஸ்”

“தாட்சாயினி உன் அப்பாவை பெத்தவ தான?”

முரட்டுத்தனமாக ஒலித்த அந்த குரலில் எரிச்சலானவள்,

“ம்ம்ம் எஸ்!”

“அவங்க தான் சீரியசா இருக்காங்க. எத்தனையோ முறை உன் அப்பாக்கு விஷயத்தை சொல்லியாச்சு. வரலை. வயசான மனுஷி. கடைசியா உன்னையாவது பாக்கணும்ன்னு நினைக்கறாங்க. முடிஞ்சா வந்து பாரேன்னு மென்மையா நான் சொல்லலாம். ஆனா எனக்கிருக்க கோபத்துக்கு இழுத்து வெச்சு ரெண்டு அறை விட்டு உன்னை கூட்டிட்டு வரணும் போல இருக்கு. என்ன மனுஷங்க நீங்க? அவ பெத்து கஷ்டப்பட்டு உன் அப்பாவை  வளக்கலைன்னா, இந்நேரத்துக்கு நீ அந்த சிலிக்கான் சிட்டில குப்பை கொட்டிட்டு இருப்பியா? நன்றி கெட்ட ஜென்மங்க.”

‘நன்றி கெட்ட ஜென்மங்க’ என்ற வார்த்தை அவளுக்குள் சுருக்கென்று எதையோ குத்தி சென்றது. படபடவென பட்டாசாக அவன் பொரிய, ‘ஒரு வார்த்தை கேட்டதுக்கு இத்தனை பெரிய செண்டன்ஸா? கஷ்டம்.’ என்று நினைத்துக் கொண்டவள், “பாட்டி எங்க இருக்காங்க?” என்று சின்ன குரலில் கேட்டாள்.

பாட்டியை அவளுக்கு லேசாக நினைவிருக்கிறது. புகை மூட்டமான நினைவுகள். ஞாபகவெளியில் தூசித் தட்டி பார்த்தாள். கொஞ்சமாய் ஏதோ புள்ளியாய் நினைவில் வந்தாள் அவளுடைய பாட்டி. பழைய பருத்திப் புடவையை இழுத்து சொருகிக் கொண்டு, ஷன்மதியின் கைப் பற்றி அழைத்து போனது நினைவிலாடியது. அத்தனை அழகு அவர். பளீரென்ற வெண்மை நிறம். பச்சை நரம்புகளோடிய கைகள். சிறுவயதில் மேலே துருத்திக் கொண்டிருந்த நரம்புகளை அழுத்தி பார்த்து விளையாடியது எல்லாம் நினைவில்!

“ஏன் பாட்டி உனக்கு மட்டும் இப்படி இருக்கு? எனக்கு இல்ல?” அவரது நரம்புகளை காட்டிக் கேட்டு இருக்கிறாள்.

“நீ சின்ன புள்ள சாமி. பெரியவளானா உனக்கும் இப்படி ஆகும்.” என்று கூறிது எங்கோ ஒலிப்பது போல இருந்தது.

ஆனால் இத்தனை நாட்களில் பாட்டியை பற்றி நினைத்ததில்லை.

வீட்டில் பேச்சு வந்ததும் இல்லை. தாயோ தந்தையோ பாட்டியை பற்றி பேசிப் பார்த்ததில்லை.

அவள் ஒரே மகள். ராமமூர்த்திக்கும் ராகவிக்கும் பிறந்தவள்.

ஷன்மதி ராமமூர்த்தி.

ராகவி பிறப்பிலேயே அமெரிக்கர். அவரது தாய் தந்தை என்று அனைவரும் மூன்று தலைமுறையாக அமெரிக்காவில் இருப்பவர்கள். அமெரிக்க பிரஜையாக இருந்தவரைத் திருமணம் செய்து கொண்டு ராமமூர்த்தியும் அமெரிக்க பிரஜையானார்.

இவர்களது திருமணம் கூட ஸ்டேட்ஸ்ஸில் நடந்ததாக சொன்னார்கள். ஒன்பது வயது வரை இந்தியா சென்று வந்தது நினைவில் இருக்கிறது. ஆனால் அதற்கு பின் குறைந்து, பின் நின்று விட்டது.

ஏன் என்று கேட்கும் வயதில்லை ஷன்மதிக்கு. ஆனால் சிறு வயதில் தாட்சா பாட்டி அடிக்கடி நினைவுக்கு வருவாள்.

தீபமேற்றி சுவாமியை வணங்கும் போது அவர் சொல்லி தந்த திருப்புகழ் நினைவுக்கு வரும். அபிராமி அந்தாதியை மனப்பாடம் செய்தது போல ஒப்பிக்கும் அந்த கணீரென்ற குரல் நினைவுக்கு வரும். இப்போதும் அவளை அறியாமல், ‘கலையாத கல்வியும் குறையாத வயதும், ஓர் கபடு வராத நட்பும்…’ என்று ஆரம்பித்து முடிப்பது பழக்கமாகிவிட்டது.

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

கலிபோர்னியாவின் சன்னிவேலில் இவர்களது ஜாகை. சிலிக்கான் சிட்டி. மிக அவசரமாக டெர்ரா பைட் வேகத்தில் பறக்கும் நகரம். அங்கு குப்பை கொட்டுவதற்கு ஏதுவாக மாறிப் போனார் ராமமூர்த்தி. ஷன்மதி, ஃப்ரீமொன்ட்டில் பள்ளிப் படிப்பும், டீ அன்ஸாவில் கல்லூரி படிப்பும் என முழுவதுமாக அமெரிக்கவாசியாகி போனாள்.

ராகவியும் ராமமூர்த்தியும் மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர்.

ராகவியின் உறவுகள் அத்தனையும் இங்குதான். அவருக்கு இந்தியா மேல் பெரிய பிடிப்பெல்லாம் இல்லை. அவருக்கு தாய்நாடு யூஎஸ். தாய் வீடு சன்னிவேல். அதைத்தாண்டி அவரும் யோசிக்கவில்லை. ராமமூர்த்தியும் அப்படியே.

ஷன்மதிக்கும் சிறு வயதில் பாட்டியை பற்றிய எண்ணம் தோன்றுவதுண்டு. ஆனால் நாளாக நாளாக அவற்றை மறந்து படிப்பில் ஆழ்ந்து விட்டாள்.

இப்போது இளநிலை கணினி அறிவியல் முடித்து, சர்பிகேட் கோர்ஸ் ஒன்றை செய்து கொண்டிருந்தாள், மேனேஜ்மெண்ட்டில்.

அவைதான் நினைவில் இருந்தது. பாட்டி மனதின் எங்கோ ஒரு மூலைக்கு சென்றிருந்தாள்.

“பாட்டி எங்க இருக்காங்கன்னு கூட உனக்கு தெரியல. டோன்ட் யூ பீல் அஷேம்ட் ஆப் யுவர்செல்ப்? எப்படி இப்படி இருக்கீங்க? பெத்து கஷ்டப்பட்டு வளத்து ஆளாக்கி ரத்தத்தை கொடுத்து இஞ்சினியரிங் படிக்க வக்க உன் அப்பாவுக்கு தன்னோட அம்மா வேணும். ஆனா இப்ப உன் பாட்டி எங்க இருக்கான்னு கூட உனக்கு தெரியாதுல்ல. ச்சே… டிஸ்கஸ்டிங்.”

வெப்பம் சன்னிவேல் வரை வீசியது.

“ஆக்சுவலி, ப்ளீஸ் அண்டர்ஸ்டான்ட் மை சிச்சுவேஷன். பாட்டியை பத்தி அப்பாவோ அம்மாவோ பேசினதில்ல. எனக்கு தெரிஞ்சு இருந்தா விட்டிருக்க மாட்டேன். பாட்டிக்கு என்னாச்சுன்னு சொல்லுங்க. நான் வரேன்.” சமாதானக் கொடியை பறக்க விட்டாலும் அவன் அவ்வளவு எளிதில் சமாதானம் ஆகிவிடவில்லை.

“ரொம்ப சீரியஸா இருக்காங்க. டாக்டர் இன்னும் ஒரு மாசமோ ரெண்டு மாசமோ, நல்லா பாத்துக்கங்கன்னு சொல்லிட்டார். வீட்ல  இருக்காங்க. அவங்க எப்பவும் ஜெபிக்கற பேரெல்லாம் ராமமூர்த்தி ஷன்மதி தான். உன் அப்பாகிட்ட நாலு தடவை கூப்பிட்டு சொன்னேன். வரேன்னு சொல்லாம பணம் எவ்வளவு வேணும்ன்னு கேக்கறார். இங்க உங்க பணத்துக்காக யாரும் தவம் கிடக்கல. எங்க கிட்ட தேவைக்கு மேல இருக்கு. ஆனா பாட்டியோட தவத்துக்கு நாங்க என்ன பரிகாரம் பண்ண முடியும்?”

அவன் கேட்கும் கேள்வியெல்லாம் நியாயம் தானே?

ஆனால் ஏன் தாயும் தந்தையும் பாட்டியை தவிர்க்க வேண்டும்?

இத்தனை வருடமாக ஏன் இந்தியாவை நினைக்காமல் இருக்க வேண்டும்? அவளுக்கு தெரியவில்லை. தெரியாமல் அவள் எதையும் சொல்லிவிட முடியாது.

“ஐ கேன் அண்டர்ஸ்டேன்ட். நீங்க அட்ரெஸ் டெக்ஸ்ட் பண்ணி விடுங்க. நான் இங்க விசா அன்ட் டிக்கட் ப்ராசஸ் பாக்கறேன்.” என்று முடித்தாள்.

“எவ்வளவு நாள்ல வர முடியும் ஷன்மதி?” கொஞ்சம் இறங்கி வந்து கேட்டான்.

“விசா ப்ராசஸ் த்ரீ டேஸ் ஆகும். ஈ விசா . ரஷ் டெலிவரில போட்டு அப்ளை பண்ணிண்டா சீக்கிரம் வந்துடும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துட பாக்கறேன்.” என்றாள்.

“ஓகே. பைன். பாட்டி கிட்ட நீ வர்ற அன்னைக்கு சொல்லிக்கறேன். முன்னாடியே சொல்லிட்டா ரொம்ப பரபரப்பாகிடுவாங்க. உன்னால வர முடியலன்னா ஏமாத்தமா போய்டும்.”

“ம்ம். ஓகே…” என்றவள், நினைவு வந்தவளாக, “நீங்க யார்?” என்று கேட்க, அதற்குள்ளாக வைத்து விட்டிருந்தான்.

தோளை குலுக்கிக் கொண்டாள் ஷன்மதி.

சென்னை அண்ணா விமான நிலையத்தில் அத்தனை செயல்முறைகளையும் முடித்து விட்டு வெளியே வந்து ஆழ்ந்து சுவாசித்தாள்.

தந்தை மண். ஒரு வகையில் தாயின் மண்ணும் கூட. ராகவியின் தலைமுறைகள் எல்லாம் இந்தியர்கள்.

இந்தியா செல்கிறேன் என்று சொன்னபோது மின்னலான அதிர்ச்சி வந்து போனது அவளது தந்தையின் கண்களில்.

“ஏன் திடீர்ன்னு?” என்று கேட்டார்.

“பாட்டியை பாக்க போறேன் டேடி…”

“உனக்கு யார் சொன்னா?” அவரது கண்களில் சீற்றம் தெரிந்தது. ஆனால் ரொம்பவும் ஷன்மதியை பிடித்து வைக்கவும் முடியாது. சிறு வயது முதல் அமெரிக்க வாழ்க்கை முறையை வாழும் பெண். சுதந்திர விரும்பி. யாரும் வலுகட்டாயமாக ஒன்றை செய்ய வைக்க முடியாது. அவளாக உணர்ந்தால் தான் செய்வாள்.

“யார்ன்னு தெரியல. அங்க இருந்து போன் வந்தது. உங்களுக்கும் பண்ணாங்களாமாம்.” என்று அவரது முகத்தை பார்த்தாள்.

அவரது முகம் இருண்டது.

“ஏன் டேடி? ஏன் பாக்கல?” சட்டென அவள் கேட்டு விட, ராமமூர்த்திக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

“தோனல மதி.” என்று ஒரு விதமான குரலில் கூற, ‘ப்ச்’ என்று தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

யாரையும் வற்புறுத்தி வார்த்தைகளை பிடுங்குவது அவளுக்கு பிடிக்காத ஒன்று. அமெரிக்க வாழ்க்கை கற்றுக் கொடுத்த சில நல்ல குணங்களுள் ஒன்று. எதிரில் உள்ளவனின் சுதந்திரத்தை மதிக்க கற்றுக் கொடுத்தது.

அவர் அதற்கும் மேல் பேசவில்லை. அமைதியாக விட்டுவிட்டார். ராகவி  முகத்தை தூக்கி வைத்தபடி இருந்தார். ஒற்றைப் பெண். சொல்பேச்சு கேளாமல் தானாக தனியாக செல்கிறாளே என்று இருந்தது அவருக்கு.

“ஜஸ்ட் ஒன் வீக் மம்மி. பாட்டியை பாத்துட்டு வந்துடுவேன். ரிட்டர்ன் டிக்கட்ஸ் புக் பண்ணிட்டேன். டோன்ட் வொர்ரி.” என்று தாடையைப் பிடித்துக் கொஞ்சி விட்டுத்தான் ப்ளைட் ஏறினாள்.

சிறு வயதில் கைப்பிடித்து கதை பேசியபடி நடந்த பாட்டியை பார்க்க போகிறோம் என்ற ஆனந்தம் உள்ளுக்குள் பரவியிருந்தது.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவளை அழைத்தான் அவன்.

“வந்தாச்சா ஷன்மதி?”

“ம்ம்… பத்து நிமிஷமாச்சு.”

“வந்துடுவல்ல. ப்ராப்ளம் ஒன்னுமில்லையே?” என்று கேட்க,

“நோ ப்ராப்ஸ். ஒரு ஹாப் அன் அவர் வெய்ட் பண்ணுங்க. இண்டியன் சிம் வாங்கிட்டு உங்களுக்கு கால் பண்றேன்.”

“உனக்கு கடை எங்க இருக்குன்னு தெரியுமா?” என்று கேட்க,

“சுத்தி பாக்கறேன். எங்கயாவது கிடைக்கும்.” என்று சுலபமாக சொல்லி விட, அவன் அமைதியானான்.

“நான் வந்து இருக்கணுமோ?” கேள்வியாய் கேட்க,

“ப்ச்… அதெல்லாம் ஒரு விஷயமில்ல. எனக்கு இது புதுசு இல்ல. தனியா நிறைய கண்ட்ரி ட்ராவல் பண்ணிருக்கேன். கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க.” என்று வைத்து விட்டாள்.

தோளில் தாங்கிக் கொண்டிருந்த, தான் கொண்டு வந்த ஒற்றை பையோடு விமான நிலைய வளாகத்திலிருந்து வெளியே வந்தவள், பத்து நிமிடத்தில் இந்திய சிம்மை வாங்கி, அதை ஆக்டிவேட் செய்திருந்தாள்.

பதினைந்து வருடங்கள் கழிந்து அவளது சொந்த மண்ணை மிதிக்கிறாள். வாகனப் புகை எரிச்சலாக இருந்தது. கண்கள் எரிந்தது. வெயில் சுள்ளென்று ஊசியாக குத்தியது. சுற்றிலும் அழுக்கு. ஒரு பக்கம் முகத்தை சுளிக்க வைக்க பார்த்தாலும், இதுதானே தன்னுடைய மண் என்று தோன்றியது.

தாய் அழுக்காக இருக்கிறாள் என்பதற்காக அவளை தன்னுடைய தாய் இல்லையென்று சொல்லிவிட முடியுமா?

இவள் தன் தாய்!

நினைத்துக் கொண்ட போது மெல்லிய புன்முறுவல் மலர்ந்தது அந்த பெரிய கண்களில்.

அந்த கண்களை கறுப்புக் கண்ணாடி கொண்டு மறைத்தவள், ரோட்டோரமாக இருந்த அந்த தேநீர் கடையில், “அண்ணா ஒரு டீ” என்று கூற, அங்கிருந்தவர்கள் அவளை வித்தியாசமாக பார்த்தனர்.

பார்த்தாலே தெரிகிறது, மேட் இன் சம் பாரின் கண்ட்ரி என. அப்படியொரு அழகியை அவர்கள் கண்டிருக்க மாட்டார்களாகக் கூட இருக்கலாம். அத்தனை வெண்மையாக, பளிங்காக, கூடவே அத்தனை அழகாக இருந்தவளை விட்டு அவர்களால் கண்களை எடுக்க முடியவில்லை.

அலட்டிக்கொள்ளாமல் டீயை வாங்கிக் குடித்த ஷன்மதி, முன்னரே ஃபாரக்ஸில் மாற்றி வைத்திருந்த இந்திய ரூபாயை எடுத்துக் கொடுத்தாள்.

ஷன்மதிக்கு இதெல்லாம் பழக்கம் தான். எந்த நாட்டிற்கு வேண்டுமானலும் துணிந்து செல்வாள். அத்தனையும் தனியே எதிர்கொண்டு விடுவாள். மிகுந்த தைரியம் உண்டு. எதற்காகவும் அச்சபட்டதில்லை. மிகவும் தெளிவானவள்.

டீயை குடித்து வேகமாக நடையை எட்டிப் போட்டாள். மெட்ரோ ஸ்டேஷனை அடைந்து சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு டிக்கட் எடுத்து ரயிலில் ஏறி அமர்ந்தாள். கூட்டம் அதிகமில்லை. சொற்பமானவர்களே இருந்தனர்.

மெட்ரோ ரயில் சுத்தமாக இருந்தது.

ஆச்சரியமாக பார்த்தபடி அமர்ந்திருந்தாள். ஒன்பது வயதில் அவள் பார்த்த சென்னை அல்ல இது. வெகுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. எங்கும் கூட்டம், எதிலும் கூட்டம். ட்ராபிக் அள்ளியது. ஆனால் அந்த ட்ராபிக்கிலிருந்து தப்பி இது போல அமைதியாக பயணிப்பதும் ஒரு சுகம்.

தனியாக பயணிப்பது என்பது ஷன்மதிக்கு புதிதல்ல. எப்போதும் தனிமை தான். தாயும் தந்தையும் ஆபீஸ் சென்றுவிட்டால் இவள் தனிமையில் தான் பொழுதை கழிக்க வேண்டும். நண்பர்கள் குழாம் என்பதெல்லாம் பெரிதாக இல்லை. லாடினோ, மெக்சிக்கன், ஆசியன், அமெரிக்கன் என்று கலவையான சமூகம் அது.

படித்த பள்ளியும் கூட ஸ்பானிஷ் முறையிலான பள்ளி. அங்கு படிப்பை விட மற்ற செயல்பாடுகளுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். படிப்பை பற்றி பெரிதாக கவலைக் கொள்ளாத பள்ளி என்பதால் ஹை ஸ்கூலுக்கு அருகிலிருக்கும் மற்ற பள்ளிகளுக்கு மாணவர்கள் இடம் பெயர்வது பெரிதாகவே நடக்கும் ஃப்ரீமொன்ட்டில்.

அதிலும் வெள்ளை அமெரிக்கர்களுக்கு கலவையான சமூகத்தை கண்டால் எப்போதும் இளக்காரம். அதிலும் ஆசியர்களை கண்டால் கொஞ்சம் அதிகமாகவே எரிச்சல் படுவார்கள். அவர்களிடையே போட்டிப் போட்டுக் கொண்டு மேலே வரவேண்டும் என்றால் அறிவு மட்டும் போதாது. புத்திசாலித்தனமும் கூடவே நிறைய தைரியமும் வேண்டும்.

சிறு வயது முதலே இப்படியான சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டு பழகியதாலோ, பாட்டியின் தைரியமும் துணிச்சலும் நேரடியாக தன்னை வந்தடைந்ததாலோ, ஷன்மதியிடம் எப்போதும் அந்த தெளிவிருக்கும்.

மணியை பார்த்தாள். பதினொன்றாக இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. பதினொன்ரைக்கு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்ப்ரெஸ்.

அங்கிருந்தவாறே இங்கு ஒரு ட்ராவல் ஏஜென்ஸியிடம் பேசி, பதிவு செய்திருந்தாள். அத்தனையும் விரல் நுனியில்.

வர சொன்ன அவன் எப்படி வருவாய் என்றெல்லாம் கேட்கவில்லை. ஷன்மதியும் அதைப் பற்றி கவலைப்படவில்லை.

சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தது மெட்ரோ. டோக்கனை செலுத்தி விட்டு ரயில் நிலையத்தை அடைந்தாள்.

எங்கும் மனிதத் தலைகள்.

தாட்சாவின் கைகளை பிடித்தபடி ஒரு முறை ஏதோவொரு ரயில் நிலையத்தில் நின்றிருந்தது ஞாபக இடுக்கில் எங்கோ ஒளிந்திருந்தது.

“ஏன் பாட்டி இங்கயே எறங்கறோம்?”

“இல்ல சாமி. இதுக்கு மேல ரயில் இல்ல. பஸ்ல தான் சேலம் போகணும்.”

“இல்லையே பாட்டி. நம்ம கூட வந்தவங்க எல்லாம் சேலம் போறதா சொன்னாங்க”

“அவங்க அடுத்த ஸ்டேஷன்ல இறங்குவாங்களா இருக்கும் சாமி.” என்று கைப்பிடித்து அழைத்து போனவரின் வார்த்தைகளுக்கு பின்னால், அவரிடம் பணமில்லை என்பது இப்போது புரிந்தது.

அப்போதெல்லாம் ரயில் கட்டணத்தை விட பேருந்து கட்டணம் குறைவு என்பதால், பாதி வழி வரை ரயிலில் வந்துவிட்டு, பின் பேருந்துக்கு மாறுவதும் வழக்கம்.

அப்போதே தந்தை யூஎஸ்ஸில் இருந்தவர் தானே? பின் எதற்காக தாட்சா பாட்டி பணத்திற்கு சிரமப்பட்டிருக்க வேண்டும்?

கேள்வி எழுந்தாலும், அதை கேட்பது நாகரிகமாக இருக்குமா?

வெஸ்ட் கோஸ்ட் பிளாட்பார்மில் காத்துக் கொண்டிருந்தது. நடையை வேகமாக எட்டிப் போட்டாள்.

அந்த ட்ராவல் ஏஜென்சியிடம் செக்கன்ட் ஏசியில் பதிவு செய்ய கூறியிருந்தாள்.

பெட்டியை கண்டுபிடித்து ஏறுவதற்குள் கொஞ்சம் மூச்சு வாங்கியது. அவளது பகுதியில் இன்னும் இருவர், வயதான தம்பதியர் இருந்தனர். அந்த தாத்தாவுக்கு ஒரு என்பது வயதிருக்கலாம். பாட்டிக்கு அதைவிட குறைவாக இருக்கலாம். அத்தனை அனுசரணையாக பாட்டிக்காக டீ ஆற்றிக் கொடுத்ததை பார்த்தபோது ஆசையாக இருந்தது.

இந்த வயதில், இது போன்ற அனுசரணையோடு வாழவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

தாட்சா பாட்டி சிங்கிள் மதராக தனது இரண்டு குழந்தைகளை வளர்த்தார் என்று தெரியும். அவரது சிறு வயதிலேயே தாத்தா இறந்து விட்டார் என்பதையும் கூறியிருக்கிறார். அவருக்கு இது போன்ற அனுசரணைகள் எப்படி வாய்த்திருக்கும்?

அவர்களை பார்த்து மெலிதாக புன்னகைத்தவள், தன்னுடைய சுமையை இறக்கி வைத்து விட்டு, செல்பேசியை எடுத்துப் பார்த்தாள். இந்தியன் சிம் ஆக்டிவேட் ஆகியிருந்தது.

அவனை அழைத்தாள்.

“ஹெலோ…”

“நான் ஷன்மதி. இதுதான் இண்டியன் நம்பர்.”

“ஓகே. இப்ப எங்க இருக்க? என்னோட ப்ரென்ட் கிட்ட சொல்லிருக்கேன். உனக்கு கார் அரேஞ்ச் பண்ணி தருவான் ஷன்மதி.” கொஞ்சம் பொறுப்பாக கூறினான். ஆனால் இந்த பொறுப்பு முன்னமே வந்திருக்க வேண்டியதாயிற்றே. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படவில்லை ஷன்மதி.

“நான் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்ப்ரெஸ்ல ஏறி உக்காந்துட்டேன். இண்டியன் டைம் படி, ம்ம்ம்… அஞ்சு மணிக்கு சேலம் வந்துடுவேன். அங்கருந்து எப்படி வர்றதுன்னு மட்டும் ரூட் மேப் கொடுத்துடுங்க போதும்.” என்று கூற, அவன் பதட்டமடைந்தான்.

“இதெல்லாம் அதிகப் பிரசங்கித்தனம். என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா என்ன குறைஞ்சு போய்ட போறியா? ஒத்தை பொம்பளையா ட்ரைன் ஏறி வரப் போறியா?” எண்ணெயிலிட்ட கடுகாக பொரிய,

“யூஎஸ் லேர்ந்தும் ஒத்தை பொம்பளையாத்தான் தான் வந்தேன். அதை விட இது பெரிய விஷயமா?”

“ஆமா பெரிய விஷயம் தான். இங்க பொண்ணுங்களுக்கு எவ்வளவு சேப்டின்னு உனக்கு தெரியாது. நடுவுல எதாச்சும் ஆனாக்கா உன்னை பெத்தவங்களுக்கு யார் பதில் சொல்வா? அறிவிருக்கா ஷன்மதி? இப்படிதான் செய்வியா?”

விடாமல் அவன் அர்ச்சிக்க, இவள் அமைதியாக கேட்டுக் கொண்டாள். அவன் முடித்தவுடன்,

“கார்ல தனியா அவ்வளவு தூரம் வர்றது சேப்டி இல்ல. அதான் செகன்ட் ஏசில ரிசர்வ் பண்ணி தர சொன்னேன், ட்ராவல் ஏஜென்சில.” என்று அவள் கூறவும், அவன் அமைதியானான். “அதுவும் இல்லாம நான் ட்ராவல் பண்றது எல்லாம் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட். கூட்டமிருக்கற இடங்கள் தான். நான் சின்ன குழந்தையில்ல. எனக்கும் சேப்டி மெஷர்ஸ் தெரியும். எந்த கண்ட்ரி போனாலும் நான் இப்படித்தான். எனிவேஸ் தேங்க்ஸ் பார் யூர் கைன்ட்னஸ்.” என்று கூற மறுபக்கம் ஆழ்ந்த மௌனம்.

“சாரி. உன்னை ரிசீவ் பண்ண நான் வந்திருக்கனும்.”

“நான் எக்ஸ்பெக்ட் பண்ணல. எனக்கு இதெல்லாம் பழக்கம் தான்…” என்றவள், அவனுடைய பெயரை இன்னமும் சொல்லவில்லை என்பதை நினைவில் கொண்டு, “ஆக்சுவலா நீங்க யாருன்னே இன்னும் சொல்லலை. திடீர்ன்னு உங்க வீட்டுக்கு வந்தன்னா யார் சொல்லி வந்தன்னு கேட்டா என்ன பதில் சொல்றது?” என்று சின்ன சிரிப்புடன் அவள் கேட்க, அதை கேட்டவனும் மெலிதாக நகைத்தான்.

“அதுவும் வாலிட் பாயின்ட் தான். என்னோட சிஸ்டர் கேட்டாலும் கேப்பா.”

“உங்க சிஸ்டர்னா எனக்கு என்னவாறது?”

“உன்னோட அத்தை பொண்ணு” என்று அவன் மீண்டும் மென்மையாக நகைத்தான்.

“சரளா அத்தை?!”

“ம்ம்ம்ம்”

“அப்படீன்னா நீங்க சரளா அத்தையோட பையனா?” ஒருவிதமான சந்தோஷ ஆர்ப்பரிப்பு அவளது குரலில். அதை உள்வாங்கியவன்,

“ம்ம்… எஸ்” என்று கூற, தெரிந்தவர்களை ரொம்ப நாள் கழித்து சந்திக்கப் போகும் மகிழ்ச்சி அவளுக்குள்!

“சோ… உங்க பேர்… உங்க பேர்…” என்று பரபரப்பாக ஞாபக பெட்டகத்தை தேடினாள். மறுபுறம் அவனுக்கு ஏமாற்றமாக இருந்ததோ?! அமைதியாக கேட்டபடி இருந்தான்.

“நான் சொல்லட்டா?” என்று அவன் கேட்க,

“ப்ச்… இருங்க… நானே யோசிக்கறேன்…”

“பாட்டியவே உன்னால நினைவு வெச்சுக்க முடியல. நான்லாம் எம்மாத்திரம் ஷன்மதி?”

“சென்டிமென்ட்ட புழியறீங்க” சிரித்தாள் ஷன்மதி.

“ம்ம்… எஸ், உன்னால கண்டுபிடிக்க முடியாது. நானே சொல்லிடறேன். என் பேர் சூர்யா. ஒரே சிஸ்டர், யாழினி. போதுமா?” என்று கேட்க,

“எஸ்… இப்ப ஞாபகத்துக்கு வந்தாச்சு. ஹவ் இஸ் ஷீ? ரொம்ப குட்டியா பார்த்து இருக்கேன்.”

“அப்ப நீயும் ரொம்ப குட்டி தான். மெழுகு பொம்மை மாதிரி இருப்ப. நாங்கல்லாம் ஜப்பான் பொம்மைன்னு கிண்டல் பண்ணுவோம்…” சிரித்தான்.

“இஸ் இட்? ஞாபகம் வெச்சுட்டு இருக்கீங்களா? ஹவ் ஸ்வீட்”

“ம்ம்… எனக்கு எதுவும் மறக்காது. நீங்க எல்லாம் அப்படி இல்ல.”

“திரும்பவும் இந்த விஷயத்தை பேச வேண்டாமே சூர்யா.” இயல்பாக அவனை பெயர் கொண்டு அழைத்துக் கூற,

“ஓகே… சேலம் வர்றதுக்கு முன்ன எனக்கு கால் பண்ணும்மா. நான் வந்து பிக் அப் பண்ணிக்கறேன்.” என்று கூற,

“நோ தேங்க்ஸ். நீங்க சொல்லுங்க. நான் வந்துக்கறேன்.”

“இதுவரைக்கும் வந்ததுக்கே நான் உன் அத்தைகிட்ட எத்தனை வாங்கிக் கட்ட போறேன்னு தெரியல. தயவு பண்ணும்மா தாயே! அப்படி எதாவது பண்ணி வெச்சுடாத. சோத்துல வெஷம் வெச்சுடுவாங்க உன் அத்தை. ஆசை அண்ணனோட பொண்ணை கூப்பிட்டு வர்றதை விட என்னடா வெட்டி முறிக்கற வேலை பார்த்தேன்னு கேப்பாங்க. எனக்கு தேவையா இது?” ஆற்றாமை தாளாமல் அவன் புலம்ப, ஷன்மதி சிரித்தாள்.

இன்னும் சிலவற்றை பேசிவிட்டு அவன் வைத்தபோது மனம் இலகுவாக இருந்தது.

சில்லென்ற ஏசி காற்று முகத்தை இதமாக தீண்டியது.

அவளறியாமல் உறக்கம் அவளைத் தீண்ட, மெல்ல கண் மூடினாள்.

கனவிலும் ஏதே நினைவுகள். தாட்சா பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு சேலம் மார்க்கட்டில் அலைந்தது நினைவுக்கு வந்தது.

‘வர்றேன் பாட்டி… உன்ன பாக்க…’ அவளையும் அறியாமல் முனகினாள்.

‘மதி தங்கம்… ஷன்மதி…’ சேலத்தில் புலம்பினார் தாட்சாயினி.