anandha bhairavi 14

anandha bhairavi 14

ஆனந்த பைரவி 14

பைரவி தன் பெற்றோரிடம் வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அருந்ததியை இரண்டு நாட்கள் ஹாஸ்பிடலில் வைத்திருந்தார்கள். ஃபர்ஸ்ட் டிக்ரீ வி ப்ளொக் (First-degree AV Block). பயப்படும் படியாக ஒன்றும் இருக்கவில்லை. வருடாந்திர செக்கப்பில் சி ஜி யில் மெல்லிய வேறுபாடு தென்படவே இந்த ஏற்பாடு.

பைரவி அம்மாவுக்கு ஓய்வு கொடுத்து விட்டு அனைத்து வேலையையும் தன் தலையில் போட்டுக் கொண்டாள். அது அவளுக்குத் தேவையாகவும் இருந்தது

அருந்ததி வீட்டுக்கு வந்த பிறகுதான் சந்திரனுக்கும், பைரவிக்கும் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. வீடும் வழமைக்குத் திரும்பி இருந்தது. இவள் வந்த சேதி அறிந்து லியம் அழைத்துப் பேசி இருந்தான்.

அவன் தற்போது வேலை செய்வது லண்டனில். காரில் வருவதற்கு நான்கு மணித்தியாலங்கள் எடுக்கும் என்பதால் பைரவி தடுத்திருந்தாள். அத்தனை சிரமப்பட்டு வரும் அளவிற்கு இங்கு உதவி தேவையில்லை என லியமை சமாதானப் படுத்தி இருந்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. சந்திரனும் வீட்டில் இருந்ததால் அப்பாவும் மகளும் ஒரு பெரிய ஷொப்பிங் லிஸ்டோடு கிளம்பி இருந்தார்கள்

அப்பா!”

என்னம்மா?”

ரொம்ப நாளா என்னை ஒரு கார் வாங்க சொல்லிக்கிட்டே இருந்தீங்க இல்லையா?”

ம்ஆமா, இப்ப வாங்கிடலாமா பைரவி?”

வாங்கலாம்பா

ஏதாவது செலக்ட் பண்ணி வச்சுருக்கியா பைரவி?”

ஆமாப்பா, Audi, Black கலர்ப்பா. ஆனா மன்த்லி நான் தான் பே பண்ணுவேன்.”

ஏன்மா அப்பா பாத்துக்க மாட்டேனா?”

இல்லைப்பா, இந்த காருக்கு போடுற ஒவ்வொரு பெனியும் என்னோடதா இருக்கணும்ப்பா

அவ்வளவு ஸ்பெஷலாம்மா?”

அப்படியும் வெச்சுக்கலாம்ப்பாஎன்றாள் சிரித்துக்கொண்டே.

பைரவி! அப்பாக்கிட்ட எதுவும் சொல்லணும்னு தோணுதாம்மா?” பைரவி கொஞ்ச நேரம் அமைதி காத்தாள்.

இதுதான் சந்திரன். அவர் என்றைக்குமே பைரவிக்கு ஒரு நல்ல நண்பன். அருந்ததி எவ்வளவு கண்டிப்போ அதற்கு எதிர்மாறாக இருப்பார் சந்திரன்

தன் பெண் மேல் அத்தனை நம்பிக்கை அவருக்கு. இன்று வரை அந்த நம்பிக்கை பொய்த்ததில்லை. பைரவிக்கும் அப்பாவிற்கும் இடையில் எந்த ஒளிவு மறைவும் எப்போதும் இருந்ததில்லை. தன் காதல் தோற்றுப் போனதாலேயே இன்று வரை அவரிடம் எதுவும் சொல்லிக் கொள்ள வில்லை

ஆனால் இனியும் பைரவியால் அப்பாவிடம் எதையும் மறைக்க முடியவில்லை. அவள் முகத்தில் சிந்தனையை பார்த்த சந்திரன் காரை ஓரிடத்தில் நிறுத்த, தன் வாழ்க்கையில் ஆனந்தன் என்ற மனிதனினின் பங்கு எத்தனை ஆழமானது என்று சொல்லி முடித்தாள் பைரவி.

அமைதியாக அவள் சொல்வதை கேட்டிருந்தார் சந்திரன்.

சரிம்மா, இப்ப என்ன பண்ணுறதா முடிவெடுத்திருக்க?”

இங்கேயே ஒரு வேலை தேடிக்கலாம்னு இருக்கேன்ப்பா. லியம் கிட்டயும் சொல்லி இருக்கேன். அவங்க கம்பெனியில கூட சான்ஸஸ் இருக்காம். எப்படியும் கிடைச்சுடும்ப்பா.”

அதுக்கு லண்டனுக்கு போகணுமேம்மா?”

அதிலென்னப்பா இருக்கு, வீக் என்ட் ட்ரெயினை பிடிச்சா ரெண்டரை மணித்தியாலம், வீட்டுக்கு வந்திரலாம்.”

எத்தனை நாளைக்கும்மா?” அந்தக் கேள்வியில் பைரவியின் தலை குனிந்தது

இந்தக் கேள்விக்கு பதில் இப்போதைக்கு உங்கிட்ட இல்லையா பைரவி?” அமைதியாக இருந்தவள் தலை இடம் வலமாக ஆடியது.

**–**–**–**–**–**–**

ஆனந்தன் அன்று கொடி வீட்டிற்கு வந்திருந்தான். கமலா வீட்டின் சாவியை கொடுத்து விட்டுப் போய் இன்றோடு ஒரு மாதம் ஆகியிருந்தது. கட்டடத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் ஓரளவு நிதானப்பட்டு விட்டதால் இன்று கொஞ்சம் மூச்சு விட முடிந்தது

சட்டென்று காரை எடுத்துக்கொண்டு வந்து விட்டான். அந்த வீடு ஆனந்தனின் தாத்தா அவன் பெயரில் எழுதி வைத்த பரம்பரை சொத்து. நினைவு தெரிந்த நாளிலிருந்து அது தனக்கானது என்று தெரிந்ததாலோ என்னவோ ஆனந்தனுக்கு அந்த வீட்டின் மீது பாசம் அதிகம்

தான் சம்பாதிக்க ஆரம்பித்ததிலிருந்து அந்த வீட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக பழமை மாறாமல் மாற்றி அமைத்தான். அத்தனை நவீன வசதிகளும் இருக்கும் அந்தப் பழமை அவனுக்குப் பிடித்தம். அடிக்கடி அந்த வீட்டிற்கு ஓய்வுக்காக ஆனந்தன் வருவதுண்டு.

ஆரம்பத்தில் பாட்டி பைரவிக்கு அந்த வீட்டின் சாவியைக் கொடுத்த போதுஐயோஎன்றிருந்தது. காலப்போக்கில் அவளே தனது வாழ்க்கை என்று ஆனபோது, அதே பாட்டியை தீர்க்கதரிசி என்றுதான் நினைக்கத் தோன்றியது.

வீட்டின் உள்ளே நுழையும் போதே மல்லிகையின் வாசனை மூக்கைத் துளைத்தது. தினமும் தோட்டத்தை பராமரிக்க ஏற்பாடு செய்திருந்தான். அதனால் பசுமையாகவே இருந்தது.

ஆனந்த், அந்த மல்லிகைப் பந்தலுக்கு பக்கத்துல உக்காந்துக்கிட்டு ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சா எனக்கு உலகமே மறந்துரும் தெரியுமா?’

அன்று அவள் சொன்னது இன்றும் காதில் ஒலித்தது. தானே தன் கையால் நட்டு வைத்த செடி. இன்று தன் காதலியால் போற்றப்படுகிறதே என்று புழகாங்கிதப் பட்டிருக்கிறான். தனக்கும் அவளுக்கும் ரசனைகள் ஒத்துப்போனதில் ஆனந்தப் பட்டிருக்கிறான்.

அந்தப் பந்தலருகே உட்கார்ந்து அதைத் தடவிக் கொடுத்தான். ஆழ்ந்து மூச்சை இழுத்தபோது, அன்று வெட்கப்பட்டுக் கொண்டு தன் மார்பில் முகம் புதைத்த அந்தப் பெண்ணின் வாசமே நாசியை நிறைத்தது.

வீட்டைத் திறந்து உள்ளே போனான் ஆனந்தன். வீடு முழுவதும் அவள் விட்டு வைத்த மிச்சங்கள். ஒவ்வொன்றாக நின்று நிதானமாக பார்த்தான். அவன் புத்தக ஷெல்ஃபில் இன்னுமொரு அடுக்கு புதிதாகச் சேர்ந்திருந்தது.

ரூம் கதவைத் திறந்தான் ஆனந்தன். எங்கும் அவள் வாசம். ஒரு கணம் கண்மூடி அந்த நிமிடத்தை அனுபவித்தான்

கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த டேபிளில் சின்னதாய் அவள் படம். ஃப்ரேமிற்குள்! சின்னக் குழந்தை போல நைட் ட்ரெஸ்ஸில் கோணல் மாணலாய் முடியை உயரத் தூக்கிக் கட்டி ஏதோ சில்மிஷம் பண்ணி எடுத்திருந்தாள்

பார்த்த மாத்திரத்தில் ஆனந்தனுக்கு அத்தனையும் மறந்து சிரிப்பு வந்தது. அவள் தனக்குக் கொடுக்க மறுத்த அந்த இதழ்களில் மென்மையாக முத்தமிட்டான் ஆனந்த்!

ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் நான்கைந்து பொட்டுக்கள்அந்தக் கட்டிலில் உட்கார்ந்து தடவிக் கொடுத்த போது அவள் மேனி தொடும் சுகம். அத்தனை வேலைப் பளுவையும் மறந்து அந்தக் கட்டிலில் சாய்ந்து கண் மூடிக்கொண்டான்அந்தத் தலையணையில் முகம் புதைத்த போது அவள் மடி சேர்ந்த சுகம் கிடைக்க அமைதியாய் தூங்கினான் ஆனந்தன்தான் தொலைத்த இந்த ஒரு மாதத் தூக்கத்தையும்.

**–**–**–**–**–**–**

ஹலோ அத்தை

சொல்லு வாசுகி

எப்படி இருக்கீங்க அத்தை?”

எனக்கென்ன நல்லாத்தான் இருக்கேன். உன் பையன் தான் நல்லாவே இல்லை.”

அது தெரிஞ்ச சங்கதிதானே. ஆமா பைரவி ஏதாச்சும் ஃபோன் பண்ணினாளா?”

இல்லையே வாசுகி. போனவ ஒரு தகவலும் சொல்லலை. இவன் தான் கவலைப்படாதீங்க பாட்டி, பைரவி பத்திரமா போய் சேந்துட்டான்னு தகவல் சொன்னான்.” 

ரெண்டு பேரும் பேசிக்கிறாங்களா அத்தை?”

இவன் வீடு தங்கினாத்தானேம்மா எனக்கு அதெல்லாம் புரியும். கேட்டா ஆமா பேசினா அப்படீங்கிறதோட சரி.”

அவங்க அம்மா எப்படி இருக்காங்களாம்?”

அவங்க இப்ப நல்லா ஆகிட்டாங்களாம். கமலா போகும் போது வந்து விபரம் சொல்லிட்டுதான் போனா.”

ஆனந்தனுக்கும், பைரவிக்குமான இடைவெளி கமலாவைத் தவிர யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனந்தன் தெரிய விடவுமில்லை. கமலாவிடமும் எச்சரித்திருந்தான். அருந்ததிக்கு உடம்புக்கு முடியாமல் போனதாலேயே பைரவி போயிருக்கிறாள் என்று சாதித்து விட்டான்.

அவங்க உடம்புக்கு முடியாம இருக்கிறப்போ நாம கல்யாண பேச்சை ஆரம்பிக்கிறது முறையில்லை, இல்லையா அத்தை?”

ஆமா வாசுகி, அதோட உன் பையன் தான் அந்த ரிசோர்ட்டை கட்டிக்கிட்டு அழுறானே.”

எங்கிட்டயும் சொன்னான் அத்தை. வேலை முடிஞ்சதுக்கப்புறம் நானே சொல்றேன், அதுக்கப்புறம் பேச்சை ஆரம்பிக்கலாம்னு.”

என்னமோ போ, நாம தலை கீழா நின்னாலும் அதது நடக்குற நேரத்திற்கு தானே நடக்கும்.”

இவர்கள் இரண்டு பேரும் அங்கலாய்க்கசம்பந்தப்பட்டவர்களோ அவரவர் காரியங்களில் மும்முரமாக இருந்தனர்.

**–**–**–**–**–**–**

பைரவி லண்டனுக்கு வேலைக்காக வந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. ஜி.எஸ்.கே குழுமம். (GlaxoSmithKline). நல்ல சம்பளம்லியம் வேலை செய்த நிறுவனத்தின் டேர்ம்ஸ் அன்ட் கண்டிஷன்ஸ் இவளுக்கு ஒத்து வராததால் இங்கே தேடிக் கொண்டாள். வாழ்க்கை பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மனதில் மட்டும் வெறுமையே வியாபித்து இருந்தது.

ஆனந்தனைப் பார்த்து பேசி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. வாழ்க்கையில் இனி தனக்கென என்ன இருக்கிறது என்று கேட்டால், அதற்கு பதிலில்லை பைரவியிடம்.

ஆனந்தன் ரொம்பவே பிஸியாக இருந்ததால் அவனை அடிக்கடி அழைத்து தொல்லை கொடுக்கவில்லை பைரவி. அவனது கனவுகளும், லட்சியமும் புரிந்தவளால் அவன் சிந்தனையை கலைக்க முடியவில்லை. எல்லாம் ஆர்த்தியை பார்க்கும் வரைதான்.

ஆர்த்தி கமலாவை தொடர்பு கொண்டு முகவரியை பெற்றிருந்தாள். பைரவி ஸ்கூலில் இருந்து வந்து சற்று ஆசுவாசப் படுத்தவும் ஆர்த்தி வந்து சேரவும் சரியாக இருந்தது.

பைரவி ஆர்த்தியை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. அவளின் திடீர் வருகை ஆச்சரியமூட்ட, வரவேற்றாள்.

ஆனால் ஆர்த்தியின் சோகமும், வேண்டுகோளும் பைரவியை நிலை குலைய வைத்தது. சண்டை போடுபவர்களை எதிர்த்து நிற்கலாம். யாசகம் கேட்பவர்களை எட்டி உதைக்கலாமா?

என் ஆனந்தனை என்னிடம் கொடுத்து விடுஎன்று கண்ணீர் விழிகளோடு கைபிடித்து கெஞ்சியவளை பார்த்த போது பைரவி பாதி இறந்து விட்டாள்.

ஆனந்தை தன்னால் யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. அதே நேரம் ஒரு பெண்ணின் கண்ணீரோடு தன் வாழ்க்கை ஆரம்பிப்பதையும் பைரவி விரும்பவில்லை. என்ன செய்வதென்று திகைத்து நின்ற போது அப்பாவின் அழைப்பு. அம்மாவுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று.

பைரவி முடிவெடுக்க அந்த ஒரு கணம் போதுமானதாக இருந்தது.

ஆனந்தனிடம் சொல்ல முடியாது. சொன்னால் தன்னை போக அவன் அனுமதிக்க மாட்டான். இவள் போய்த்தான் தீரவேண்டும் என்ற அவசரம் அங்கும் இல்லை. சட்டென்று முடிவெடுத்து கிளம்பினாள். பாட்டியிடம் மட்டும் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை என்று சொல்லி சமாளித்தாள். கமலாக்காவிடம் சாவியை பாட்டியிடம் ஒப்படைக்க சொல்லிவிட்டு அன்று இரவே கிளம்பி விட்டாள். நெஞ்சு கனத்துப் போனது.

அந்தக் கட்டடத்தின் பத்தாவது தளத்திலிருந்து எதிரே தெரிந்த ஃப்ளை ஓவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பைரவி.அவசர கதியில் இயங்கிக் கொண்டிருந்தது உலகம்

கம்பெனி அக்கமடேஷனில் தங்கி இருந்தாள். லியம் அடிக்கடி வந்து போவான். வெள்ளி மாலை லிவர்பூல் புறப்பட்டால் திங்கள் காலை மீண்டும் லண்டன். அந்த இரண்டு நாட்களும் பெற்றோரோடு கழிந்தது

அப்பாவின் கண்கள் ஆராய்ச்சியாக பைரவியை நோக்கும். கண்டுகொள்ள மாட்டாள். அவர் கேள்விக்கான பதில் தனக்கே தெரியாத போது எதைச் சொல்லி சமாளிப்பாள்.

வெள்ளி மாலைப்பொழுது அது. வார இறுதியைக் கழிக்க, ஓய்வெடுக்க என மக்கள் லண்டனை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். வீதி ஒழுங்கை எத்தனை அழகாக அந்த மக்கள் பின்பற்றுகின்றார்கள் என்பதைப் பறைசாற்றியன வாகனங்களின் வெளிச்சப் புள்ளிகள்

நேரம் மாலை ஐந்து மணி. குளிர் காலம் கூடிய சீக்கிரத்தில் ஆரம்பிக்க இருப்பதால் ஐந்து மணிக்கே லேசாக இருள் படர்ந்து இருந்தது.

7:03 ற்கு பைரவிக்கு ட்ரெயின். டிக்கெட் ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்திருந்தாள். இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும்

பழுப்பு வெள்ளையில் ஃபுல் ஸ்லீவ் ஷேர்ட், அடர் நீல நிற பான்ட், இரண்டு இன்ச் உயரமான பொக்ஸ் ஹீல் ஷூஸ், கழுத்தில் பச்சையும், நீலமுமாக மாறி மாறிக் கோர்த்த ஓவல் வடிவ பேர்ள் செயின், நீளமாகத் தொங்கியது. கொஞ்சம் நீண்டிருந்த கூந்தலை உயர்த்தி போனி டெய்ல் போட்டிருந்தாள்.

உதட்டில் லேசான லிப் க்ளொஸ்ஸ்டான்ட்டில் மாட்டியிருந்த அந்த நீளமான அடர் நீல கோர்ட்டை எடுத்துக் கொண்டவள் மறு கையில் தனது office bag ஐத் தூக்கிக் கொண்டாள்.

க்ரௌன்ட் ஃப்ளோரில் லிஃப்ட் டை விட்டு வெளியே வந்தவள், தனது கார்ட்டை டச் பண்ணி தன் பணி நேர முடிவைப் பதிவு செய்து விட்டு வெளியேறினாள்.

பைரவி!” லியமின் குரல். சட்டென்று திரும்பினாள் பைரவி. ரிஸெப்ஷன் சோஃபாவில் அமர்ந்திருந்தான்

லியம், இங்க என்ன பண்ணுற? ஒஃபிஷியல் விசிட்டா? ஒரு ஃபோன் கூட பண்ணலை!” ஆச்சரியமாக கேட்க,

பதில் எதுவும் சொல்லாமல் கண்களால் எதையோ சுட்டிக் காண்பித்தான். அவன் காட்டிய திசையில் பார்வையைத் திருப்பிய பைரவி ஸ்தம்பித்துப் போனாள்.

ஆனந்தன்!

அவளுக்கு முதுகு காட்டி போடப்பட்டிருந்த அந்த ஒற்றை சோஃபாவில் இவளையே பார்த்தபடி இருந்தது ஆனந்தன்.

பைரவியின் ஆனந்த்!

 

 

error: Content is protected !!