avalukkenna13b
avalukkenna13b
அத்தியாயம்(நிறைவு)
13b
கிஷோர் கைலாஷ், அனன்யா தம்பதியினருக்கு, ஆண் குழந்தை பிறந்திருந்தது. பெயர் வைக்கும் விழாவிற்கு வந்திருந்த கைலாஷ், கையோடு மனைவியை தங்களது வீட்டிற்கு அழைத்துச் செல்வேன் என நின்றான்.
ஈஸ்வரன், தேவகி, திருக்குமரன், கோமதி நால்வரும் அவனின் பிடிவாதத்திற்கு செவி சாய்ப்பதா, இல்லை குழந்தையின் நலன் கருதி கைலாஷை விட்டுப் பிடிப்பதா என குழம்பி அமைதியாக இருந்தனர்.
அனன்யா பெரியவர்களின் அமைதி எதனால் என்பதை உணர்ந்து கணவனிடம் வந்தவள், “உங்க பையன் கொஞ்சம் பெரியவனாகறவர நான் எங்க அம்மா வீட்லதான் இருப்பேன். அது வர நீங்களும் உங்கம்மா வீட்ல இருந்து ஆஃபீஸ் போங்க, என்ன அத்தை சரிதான!”, என்று தனது மாமியாரையும் தனது முடிவிற்கு துணைக்கு அழைத்திருந்தாள்.
கணவன், மனைவிக்கு இடையே போனவர்கள் கண்டிப்பாக பல்ப் வாங்குவது உறுதி என்பதை தெளிவாகத் தெரிந்து வைத்திருந்த கோமதி, “ஏம்மா, அவனுக்கு புத்தி சொல்ற நிலையிலே நான் இல்லம்மா. என்னைய தயவு செய்து இதுல இழுத்து விடாதே”, என்று சிரித்தவாறே பின்வாங்கியிருந்தார்.
மனைவியின் பேச்சில் வாடிப்போன வதனத்துடன், தொட்டிலில் இருந்த பிள்ளையோடு அருகில் அமர்ந்து சிறு குரலில் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான், கைலாஷ்.
தந்தை பேசுவதைக் கேட்டு, கைகால்களை குஷியாக உதைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய குழந்தை சர்வேஷின் செய்கையில் மனைவியின் பேச்சை மறந்து மகிழ்ந்திருந்தான் கைலாஷ்.
பெயர் சூட்டுவிழாவிற்கு வந்தருந்த அனைவரும் சென்றிருக்க, மனைவியில் முடிவினை ஏற்க இயலாமல் குட்டி போட்ட பூனை போல அங்கேயே சுற்றி வந்தான். இதை உணர்ந்த தேவகி மகளிடம் கண்ணைக் காட்டினார்.
தொட்டிலில் இருந்த மகனை எடுத்து தாயின் கையில் திணித்தவள், தனது அறைக்குச் செல்லத் திரும்பினாள். அதுவரை குழந்தையுடன் இருந்தவன், மனைவியின் செயலில் அவள் போகும் பாதை பார்த்திருந்தான்.
அறைக்குள் சென்றவளை கண்டு, தானும் பின்னோடு சென்றான்.
அறைக்குள் நுழைந்தவனைக் கண்டும் காணாதவள் போல மகனின் உடைகளை எடுத்துக் கொண்டு வெளிவந்தவளை மறித்தவன், “அம்மு! நம்ம வீட்டை விட்டு நீ இங்க வந்து மூனு மாசமாச்சு, இன்னும் நாளாகும்னா என்னிலையையும் கொஞ்சம் யோசிச்சுப் பாக்கமாட்டியா?”, என கைபிடித்து நிறுத்தி நியாயம் கேட்டவனை
“குழந்தைய கவனிச்சுக்கலாம். ஆனா குழந்தையோட அப்பாவக் கவனிக்க இப்ப என்னால முடியாதே!”, என்று வருத்தத்தோடு கூறியவள், “அதான் கொஞ்ச நாள் கழிச்சி அங்க வரேன்னு சொன்னேன்”, என்று மீண்டும் தனது நிலையில் உறுதியாக இருந்து பேசினாள்.
“நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன் அம்மு. நீ அங்க வந்து இருந்தா மட்டும் போதும். நீ நம்ம சர்வேஷை மட்டும் கவனி”, என்று கூறியவன் சிறு இடைவெளிக்குப்பின், “எனக்கு இந்த மூனு மாசமா நம்ம வீட்ல நீ இல்லாததால அங்க போகவே பிடிக்கலடீ… அம்மு”, என்று பேசியவனைப் பார்த்தவளுக்கு வருத்தமாக இருந்தது.
வீட்டு வேலைகள் பார்க்க ஆள் அமர்த்தியிருந்தாலும், குழந்தையை கவனித்துக் கொண்டு, அம்மா வீட்டில் இருப்பதுபோல, மாமியார் வீட்டில் இலகுவாக இருக்க இயலாது என்பதைப் புரிந்தவளுக்கு, கணவனுக்காகப் பார்ப்பதா, இல்லை பிறந்திருக்கும் மகனுக்காகப் பார்ப்பதா என்று குழப்பமே வந்திருந்தது.
மனைவியின் முகத்தில் வந்துபோன உணர்ச்சிகளைக் கவனித்தபடியே இருந்தவன், பிடித்திருந்த கையை டக்கென விடுவித்துக் கொண்டு, “சரி அம்மு, பையனை பாத்துக்க…! எனக்கு ஆஃபீஸ்ல ஒரு வேலை இருக்கு கிளம்பறேன்”, என்று அங்கிருந்து அகன்றிருந்தான்.
கணவன் கெஞ்சிக் கேட்டபோது தோன்றாத உணர்வு, அவன் தனது கையை விட்டு பட்டென்று விட்டு அகன்று, பட்டும் படாமல் பேசிக் கிளம்பியபோது, எதையோ இழந்தது போன்ற உணர்வை அனன்யாவிற்குத் தந்திருந்தது.
கணவனின் வார்த்தையின் மீதும், அவனின் எதையோ இழந்தது போன்ற முகத்தினையும் அவளின் மனம் யோசித்துக் கொண்டிருந்தது.
அதற்குமேல் குழந்தையை மனதில் எண்ண அவளால் இயலவில்லை. சிறுகுழந்தையாக மனம் சுணங்கியதை தன்னிடம் காட்டாமல் மறைத்த வாடிய வதனத்தோடு சென்ற கணவனையே வட்டமிட்ட தன் மனதை அமைதியாக்க முடியாமல் திணறியிருந்தாள், அனன்யா.
மருமகன் சென்றபின்பு, மகளின் முகத்தைக் கண்டு எதுவோ சரியில்லை என்று உணர்ந்த தேவகி, “அனி, உடம்புக்கு என்ன செய்யுது”, என கேட்டார்.
தாயின் கேள்வியைக்கூட உள்வாங்க முடியாத அளவு கணவன் சென்ற நொடியையே நினைத்திருந்தவளுக்கு, அப்போதே அவன் இருக்குமிடம் கிளம்பிவிட மனம் வெறிகொண்டது.
எல்லாவற்றையும் கடந்து வந்த குடும்பத் தலைவிகள் இருவரும், எளிதாக அனியின் உணர்வுகளை உணர்ந்து கொண்டு அதற்குத் தகுந்த தீர்வை பெரியவர்களாகவே பேசி முடிவு செய்து கொண்டனர்.
தேவகி, கோமதி இருவரும் கலந்து பேசி, அன்று மாலையே குழந்தையோடு கோமதியின் வீட்டிற்கு அழைத்துக் கொள்ள முடிவு செய்து, நடைமுறைப்படுத்தியிருந்தனர்.
பெரியவர்களின் முடிவை மறுக்காமல் கிளம்பியளை எண்ணிப் பெரியவர்கள் பார்த்து சிரித்துக் கொண்டதைக்கூட, கவனிக்கும் நிலையில் அனன்யா இல்லை. மனம் புகுந்த வீட்டிற்கு வந்தபின்பு சற்றுத் தெளிந்திருந்தாலும், கணவனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அனன்யா.
குழந்தையை பெரும்பாலும் தேவகியே கவனித்துக் கொள்ள, தற்போது குட்டி போட்ட பூனை போல அனன்யா மாறியிருந்தாள்.
அலைபேசியில் பேசியிருந்தால் அறிந்து கொண்ருப்பான். ஆனால் தங்களது வருகையை எதிர்பார்த்திராமல் வருபவனுக்கு சர்ப்பிரைஸ் கொடுக்க எண்ணிக் காத்திருந்தாள்.
பதினோரு மணிக்குமேல் ஏனோதானோ என வீட்டிற்குள் நுழைந்தவனை, மகிழ்வோடு எதிர்கொண்டிருந்தாள் மனைவி.
எந்தப் புதுமையும் என்னை ஒன்றும் செய்யாது என்பதுபோல முகத்தில் எதையும் காட்டாமல், “நீ இன்னும் தூங்கலயா?”, எனும் கேள்வியோடு தானாகவே டைனிங்கில் சென்று அமர்ந்து, இருந்ததை எடுத்துப் போட்டு உண்ணத் துவங்கினான் கைலாஷ்.
இடையில் உணவை அவன்புறமாக எடுத்துத் தர முயன்றவளைத் தடுத்து, “நீ போ, நான் பாத்துக்குவேன்”, என்று தனது பணியைத்தானே செய்து கொண்டிருந்தவனைக் கண்டவளுக்கு இரத்த அழுத்தம் கூடியிருந்தது.
தன்னை ஒரு பொருட்டாகக் கருதாமல் இருந்த கணவன் அவளுக்குப் புதியவன். அந்த ஏமாற்றத்தை அவளால் தாங்க இயலவில்லை. இயலாமையினால் வந்த அழுகையை அடக்கியபடியே அகலாமல் அங்கேயே நின்றிருந்தாள்.
குழந்தையைத் தொட்டிலிட்டு உறங்க வைத்திருந்த தேவகி, கண்டிருந்த இளஉள்ளங்களின் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்சிகளைக் காணாததுபோல, அவ்விடத்தைவிட்டு அகன்றிருந்தார்.
உண்டு முடித்து தங்களதறைக்குள் வந்தவன் உடைமாற்றிப் படுக்கையில் படுத்திருந்தான். கணவனது பாராமுகம் அனன்யாவினால் தாங்க இயலாமல் அடுக்களைப் பகுதியில் நின்றபடியே அழுதிருந்தாள்.
குழந்தை அழுததைக் கேட்டுக்கூட உணர்வு வராதவளாக இருந்த அனன்யாவை வெகுநேரம் கவனித்திருந்தார், தேவகி. நிகழ்காலத்திற்கு அனன்யாவைக் கொண்டு வந்து, குழந்தையை அமர்த்துமாறு கூறினால், மறுக்காமல் மாமியார் கூறியதை இயந்திரம்போல செய்திருந்தாள்.
தேவகிக்கும் அன்று சிவராத்திரியாகிப் போனது. அனன்யா கணவனின் செயலால் உறங்கவில்லை. எதையும் உணராதவனாக கைலாஷ் உறங்கியிருந்தான்.
திருமணத்திற்குப் பிறகு அனைத்துமாக மாறியவள், குழந்தைபேற்றிற்காகச் சென்றுவிட்டால் அதுவரை மனைவியைத் தேடாத ஆணின் உள்ளம் அப்பெண்ணை, அவளின் பிரிவை ஏற்றுக் கொள்ள இயலாமல் அவளின் அண்மையைத் தேடிக் களைக்கிறது.
வந்திருந்த களைப்பு எதனால் என்பதை உணரும் திராணியில்லாமல் திணறியவன், உள்ளதை உணரும் பக்கும் பெறுதல் அபூர்வம். அத்தகைய விழிப்புநிலை வாய்ந்தவன் உள்ளதை மனைவியிடம் பகிர்ந்து அதற்கான உரிய முடிவுகளை எடுக்க விழைகிறான்.
தெரியாதவன் தெருவில் சேலை முந்தானை எங்கு கிடைத்ததோ, அதில் தனது தேவையை நிறைவேற்றிக் களைக்கிறான்.
கைலாஷ் தனது புத்திகூர்மையினால் புரிந்து கொண்டதை மனைவியிடம் பகிர்ந்து கொண்டான். ஆனால் பெண்ணவளுக்கு அவனின் மனம் புரியாமல் தயக்கம் கொள்கிறாள். பெண்ணிடம் தன்முனைப்பின்றி ஆண் இறங்குவது அபூர்வம். இரங்கியவனுக்கு இறங்காதவளை எண்ணி வருத்தம் இருந்தது. அதனால் கிளம்பினான். ஆனாலும் தன்னவளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறான்.
எதிர்பாரா மனைவியின் வரவு மனதிற்கு இதமளித்திருக்க, அவள் வீட்டிற்கு வந்த நிம்மதியில், கைலாஷிற்கு எப்போதுமில்லாத நிம்மதியான உறக்கம் இதமாக அணைத்திருந்தது. ஆனால், இது எதையும் அறியாதவள் குழம்புகிறாள்.
குழந்தையை மட்டுமே இரண்டு மாதங்களாக கவனித்தபோது, கணவனைப் பற்றி எண்ணாதவள், இன்று கணவனை மட்டுமே எண்ணிக் குமைகிறாள்.
இது எதையும் உணராதவன் நிம்மதியாக உறங்கியிருக்க, புரியாதவள் இரவை நன்பகலாக்கி விழித்திருந்தாள்.
விடியல் சுகமாக இருந்தது கைலாஷிற்கு. விடிந்தவுடன் குழந்தையுடன் சற்று நேரம் செலவளித்து ஊக்கம் பெற்றான்.
குளித்துவிட்டு வெளியில் வந்தவன், குழந்தையுடன் இருந்த மனைவியின் சேலைத்தலைப்பை எடுத்து தலையை துவட்டிக் கொண்டான்.
சற்றுநேரத்தில் அலுவலகம் கிளம்பியிருந்தான்.
“பை… அம்மு”, என்ற அவனின் விடைபெறலில் திரும்பி கணவனை நோக்கியவளைக் காணாமல், விடைபெற்றிருந்தவன் அவளுக்குப் புதிது.
மாலை வரை பூமி சுழற்சியை நிறுத்தியதுபோல உணர்ந்திருந்தாள், அனன்யா. எப்படா இரவு வரும், என கணவனின் வருகைக்காக காத்திருந்தாள். கைலாஷின் பாராமுகத்தை, அனன்யாவால் இயல்பாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்றி பதறியிருந்தாள்.
முந்தைய இரவைப் போல தாமதமாக வராமல் சற்று முன்பாகவே வந்திருந்தான் கைலாஷ்.
மனைவியை கடந்த இரு நாட்களாகவே கவனிக்கிறான். அவளின் குழப்பம் எதனால் என்பதை இன்று முழுவதும் யூகித்திருந்தான்.
குழந்தையுடன் சற்று நேரம் செலவளித்தவன், இரவு உணவை முடித்துக் கொண்டு நேராக தாயிடம் சென்றான்.
“மாதாஜி, சர்வேஷை இன்னிக்கு நீங்கதான் பாத்துக்கணும். என் அம்முக்கு எதுவோ சரியில்லை. நான் என்னனு பாத்துட்டு சொல்றவரை உங்க பேரன் உங்க பொறுப்பு”, என்று கூறிவிட்டு தனதறைக்கு சென்றிருந்தான்.
மருமகளிடம் குழந்தையை தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி அனுப்பி வைத்திருந்தார், தேவகி.
அறைக்குள் நுழைந்தவளின் எதிர்பார்ப்போடு கூடிய வதனத்தைப் பார்த்தும் பார்க்காததுபோல படுக்கையில் இருந்தவன், “சர்வேஷ் தூங்கிட்டானா அம்மு”, என்று பேச்சுக் கொடுத்தான்.
“ம்…”, என்ற பேச்சோடு படுக்கையின் அருகே வராமல் நின்றவளை, “என்ன அம்மு! உனக்குத் தூக்கம் வந்தா வந்து தூங்கு, நான் தூங்க இன்னும் நேரமாகும்”, என்று கூறியவனை ஆராய்ச்சிக் கண்ணோடு பார்த்திருந்தாள்.
“எம்மேல உங்களுக்கு என்ன கோபம், என்னை ஏன் நீங்க அவாய்ட் பண்றீங்க”, என்று ஒருவழியாக தன் மனதில் தோன்றியதை மிகக் குறைந்த குரலில் கேட்டவளை
படுக்கையில் எழுந்து அமர்ந்தபடியே கையால் அருகே வருமாறு அழைத்தான். அவனின் அழைப்பிற்காக ஏங்கியிருந்த உள்ளம் அவனின் அண்மையில் வந்திருக்க, “இப்டி உக்காரு”, என் படுக்கையில் தனதருகே அமரச் செய்தான்.
“அம்மு, எம்மேலயே நான் கோபப்பட்டு என்னாகப் போகுது? உனக்கு ஏன் இப்டியொரு எண்ணம் வந்தது?”, என்ற கணவனின் பேச்சில் புரியாமல் பார்த்திருந்தாள் அனன்யா.
“உன்னைக் கஷ்டப்படுத்திறக் கூடாதேன்னுதான் நான் தள்ளி நிக்கறேன் அம்மு. நானும் மனுசந்தானே…! மூனு மாசமா பக்கத்தில இல்லாத வயிஃப் இப்ப பக்கத்திலே இருக்கனு ரொம்ப உரிமையெடுத்திட்டா உள்ளதும் இல்லாம போயிரும்ல? என்ன நான் சொல்றது சரிதான…?”, என்று கேட்டவனை புரியாமேலேயே பார்த்திருந்தாள்.
“என்ன இன்னுமா புரியல… திரும்பவும் அடுத்த புராஜெக்ட்டோட தாக்கம் வந்து… உனக்கு மயக்கம், வாமிட்… அப்டி இப்டினு… அடுத்த புராசஸ்கு நான் இன்னும் ரெடியில்லம்மா”, என்று பயப்படுபவன் போல சிரித்தபடியே கூறியவனின் வார்த்தைகள் புரிந்தாலும், இதை எதற்கு இப்போது கூறுகிறான், இவன் தன்னைத் தவிர்த்ததற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று எதுவும் புரிந்து கொள்ளும் நிலையில் அனன்யா இல்லை.
மனைவியின் முகம் சொன்ன செய்தியில் அவளின் புரிதலின் நிலை புரிந்தவன், “அம்மு”, என்று அழைத்து அவளைத் தன்னோடு இழுத்தணைத்து இதழ் பதித்து, இதம் தந்திருந்தான்.
பெண்ணவளுக்கும் இதழ் தீண்டல் இதமளித்திருக்க, கணவனுக்கு தன்மேல் எந்தக் கோபமும் இல்லை என்பது புரிந்தாலும், ‘ஏனிந்த இடைவெளி’ என்ற கேள்வி மனதின் ஓரத்தில் தொக்கி நின்றது.
“எல்லாம் நம்ம ஜூனியருக்காக அம்மு, இன்னும் கொஞ்ச நாள் உனக்கு குழந்தையையும் கவனிச்சிட்டு, என்னையும் கவனிக்க கஷ்டமா இருக்கும்னுதான்டா உங்கிட்ட இருந்து தள்ளி நின்னேன். வேற எதுவும் இல்ல, எதையும் போட்டு மனச குழப்பிக்காத… மாமு எப்பவும் உங்கூடத்தான்… உனக்காகத்தான் எல்லாமே.
உன்னோட இப்போதைய செழுமைய பாத்துட்டு சும்மாயிருக்க என்னால முடியல. அதனால உம்முகத்தைப் பாத்து பேசறத கொஞ்சம் குறைச்சிருக்கேன். உன்னைக்கிட்ட வச்சிட்டு என்னால சும்மாயிருக்க முடியாதுன்னு தள்ளி இருக்கேன். அதுக்காக உம்மேல கோபம்னு எடுத்துக்கக் கூடாது. என்ன சரியா?”, என்று அனன்யாவின் தலையோடு தனது தலையை முட்டிக் கூறியவனிடம் தலையை ஆட்டியிருந்தாள் அனன்யா.
கணவனின் செயலில் கண்கள் கலங்க, அதைக் கணவனுக்கு காட்டாமல் இருக்க எண்ணி தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.
தன்னை ஒருவாறு நிலைப்படுத்திக் கொண்டு கணவனின் அருகாமையில் அமைதி அடைந்திருந்தாள்.
“உனக்கு என்ன வேணுனாலும் எப்பவும் போல கேக்கலாம், பேசலாம். என்ன?” என்று குனிந்தபடி இருந்தவளின் முகத்தை நிமிர்த்திக் கேட்டவனை, தனது மட்டி மனதால் புரிந்து கொள்ள இயலாத தன்னிலையை புரிந்துகொண்டு விளக்கிய கணவனை ஆசையோடு பார்த்திருந்தாள், அனன்யா.
மனைவியின் சுகத்தைப் பேணுபவன் மாமனிதனாகப் பார்க்கப்படுகிறான். அனன்யா தன்னவனை எண்ணிப் பெருமை கொள்கிறாள்.
இறைவனுக்கு நன்றி கூறுகிறாள். தனக்கென வாய்த்தவனை எண்ணி உள்ளம் மகிழ்ந்து போகிறாள். தனது அறிவீனத்தைக்கூட கேலி செய்யாமல் தனக்குப் புரியும்படி எடுத்துக் கூறி விளங்க வைப்பவன் என்பதாலேயே எப்போதும் அவனின் மீது மரியாதை அவளுக்கு.
தற்போதைய தனது செயலும் அதைப் போன்றே இருக்க, அதையும் கவனித்துத் தனது மனதைச் சரி செய்ய விழைந்தவனை அணைத்து மகிழ்ச்சியில் கண்ணீர் உகுத்திருந்தாள்.
மனைவியின் அணைப்பில் தன் உணர்வுகளை அடக்கிக் காத்திருந்தவனுக்கு ஈரத்தின் தன்மையை உணர்ந்து பதறியவன், “டேய்… அம்மு… ஏன்? எதுக்குடா அழற? என்ன செய்யுது?”, என்று பதறியவனை, “ஒன்னுமில்லை மாமு. ரெண்டு நாளா ஒரே குழப்பம். இப்பதான் சரியாச்சு”, என்றபடியே தனது கணவனின் முகமெங்கும் முத்தமழை பொழிந்தவளை தடைசெய்யாமல் காத்திருந்தான்.
தெளிந்தவளைப் பார்த்தவன், “உனக்கு உங்க அம்மா வீட்ல இருக்கிறதுதான் கன்வீனியன்ட்டுனா அங்கேயே இரு அம்மு. எனக்காக வந்து கஷ்டப்படாத… நான் அப்பப்போ அங்க வந்து பாத்துக்கறேன்”, என்று அவனின் அணைப்பில் இருந்தவளை முதுகில் இதமாகத் தடவியபடியே கூறினான்.
“இல்லை மாமு, நான் இங்கேயே இருக்கிறேன்”, என்றுவிட்டாள் அனன்யா.
தடுப்புமுறைகள் இன்றைய நவீன மருத்துவத்தில் வந்திருக்க, ஏனிந்த இடைவெளி என கணவனிடம் சாடியவளை அமைதியாகப் பார்த்திருந்தவன், “தடுப்புமுறைகள் ஆயிரம் வந்தாலும், அதெல்லாமே இயற்கைக்கு முரணாணது அம்மு. அதோட தாக்கம் இன்னிக்கு இல்லைனாலும் பின்னாடி நம்மை வச்சு செய்திரும். அதனால அதெல்லாம் உனக்கு வேணாம். என்ன சரியா?”, என்று கேட்டவன் அவளின் முகத்தில் வந்திருந்த அதிருப்தி சொன்ன செய்தியில், ”என்னடா?”, என்று அணைத்தபடியே கேட்டிருந்தான்.
“இல்லை எனக்கு உங்களோட இந்த அணைப்பு எப்பவும் வேணும். இல்லைனா எதையோ இழந்த மாதிரி ஃபீல் ஆகுது”, என்று மறையாது கூறியவள் அவனின் மார்போடு ஒட்டிக் கொண்டாள்.
“அம்மு, மாமன சோதிக்கிறடீ…”, என்றவன் தன்னவளின் இதமான உடல் மொழியின் மூலம் அவளின் தேவையை உணர்ந்து சிரித்தபடியே விளக்கோடு தன்னவளையும் சேர்த்து அணைத்திருந்தான்.
ஏட்டுக் கல்வி அறிவை உயர்த்துகிறது. பொருளாதார உயர்வுக்கும், சமூகத்தில் நடந்து கொள்ள வேண்டிய பயிற்சியை அளித்து நம்மை செம்மைப்படுத்தி நல்வழிப்படுத்துகிறது.
வாழ்க்கைக் கல்வியை ஏட்டில் கற்கும் வாய்ப்பில்லாத சமூக சூழலில் வாழ்ந்து வருகிறோம். அனுபவமும், பக்குவமும், பொறுமையும், ஆராய்ந்து தெளியும் மனப்பக்குவமும் செம்மையான இதமான வாழ்க்கையை தரவல்லது.
அரவணைத்துச் செல்லும் உறவுகள் கிட்டினாலும், அதனைத் தக்கவைத்துக் கொள்ள அரும்போராட்டம் மேற்கொள்ள வேண்டிய நிலையில் இன்றைய வாழ்க்கை முறை உள்ளது.
அனன்யாவிற்கு அற்புதமான குடும்ப சூழலுடன் கூடிய அருமையான கணவன் கிடைத்ததால் குறையின்றி வாழ்ந்து வருகிறாள்.
விடியல் மிக அழகானதாகத் தோன்றியது அனன்யாவிற்கு.
மனம் நிறைந்த வாழ்வில், மகனோடு அவனது தந்தையின் ஒவ்வொரு அசைவையும் கவனித்தபடியே, வீட்டையும் திறமையாக நிர்வகிக்க கற்றுக் கொண்டாள்.
மாமியாரும் தனக்கு இன்னொரு தாயாக மாறியிருந்ததால் மகிழ்விற்கு பஞ்சமில்லாமல் இருந்தது.
வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகியிருந்தது.
நாள் முழுவதும் நடைபயிலும் மகனோடு ஓடி, ஓடிக் களைப்பவளை ஓய்வெடுக்கச் செய்துவிட்டு, மகன் உறங்கும்வரை உடன் ஓடிக் களைக்கும் கணவனை ஆசையோடு பார்த்திருந்தாள் அனன்யா.
“ஓய் அம்மு, என்ன மாமன ஒரு மார்க்கமா பாக்கற?”, என்ற கேள்வியோடு மகனைப் பார்த்துக் கொண்டிருக்கும் கணவனை
“பாக்கறது ஒரு குத்தமா…? சுதந்திர நாட்டில எதுக்கெல்லாம் கவலைப்பட வேண்டியிருக்கு”, என்று பதிலளித்து உதட்டைச் சுழித்துச் சிரித்தவளின் இதழைக் கொய்யும் ஆவல் வந்தபோது, ஓடிய மகனைக் கையில் தூக்கிக் கொண்டு மனைவியின் அருகில் வந்தவன், “சர்வேஷூக்கு தம்பி வேணுமா? இல்லை தங்கை வேணுமா?”, என்ற கேள்வியுடன் வந்து நின்றிருந்தான்.
தந்தையிடம் போக்குக் காட்டி ஓடிக் கொண்டிருந்தவனுக்கும் தன்னோடு விளையாட யாருமில்லாத ஏக்கம் இருந்ததுபோலும்.
தந்தை கேட்டவுடனேயே, “தம்ப்பி தங்க பாப்பாவும் வேணுமா”, என்ற மகனின் மழலைப் பதிலில் கைகள் கொண்டு வாயைப் பொத்தி விழித்தவளை, அப்பாவும் மகனும் பார்த்துச் சிரித்திருந்தனர்.
“அப்பாவை விட நீ ரொம்ப பேராசைக்காரனாவுல்ல இருக்கடா”, என்ற தகப்பனின் வார்த்தை புரியாமல் சிரித்திருந்த மகனின் வயிற்றுப் பகுதியில் தனது முகத்தால் குறுகுறுப்பை ஏற்படுத்திய கைலாஷின் செயலால் குலுங்கிச் சிரித்த மகனை அன்போடு பார்த்திருந்தாள் அனன்யா.
வாழ்வை அதன்போக்கில் குடும்பத்தோடு இனிமையாக வாழ ஆரம்பித்த இளஞ்சோடிகளை வாழ்த்தி விடைபெறுவோம்.
——————————————–
அவளுக்கென்ன…!
அகல்யா…
சமூக கட்டமைப்பிற்கு மாறான, தனது தவறான அவசர முடிவால் சிரமங்களை மேற்கொண்டாலும், நல்ல உறவுகளின் துணையால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உரிய நியாயம் கிடைக்கப்பெற்றாள்.
பகிர்தல் என்பது எந்த எல்லை வரை தொல்லையில்லாமல் இருக்கும் என்பதை தோழி கூறும்போது ஏற்றுக்கொள்ளத் தயங்கியவள், தனக்கு அதுபோல ஒரு சூழல் வந்து தெரிந்து கொள்கிறாள்.
தனக்கு துரோகம் இழைத்ததாக எண்ணிய தோழியின் மனநிலையை அப்போதுதான் புரிந்து கொள்கிறாள். தோள் கொடுக்க, தோழமையோடு இறுதிவரை பயணிக்க ஏற்ற உறவுகளோடு இனிதே தனது குழந்தையுடன் வாழ்ந்திருந்தாள்.
அனன்யா…
எதிலும் நேர்த்தியாக வாழ்ந்து பழகியவள். இறுதிவரை எதற்காகவும், தனது இரங்கும் குணத்தை எந்த சூழலிலும் விட்டுக்கொடுக்காதவள்.
விட்டுக்கொடுத்ததால் வாழ்வு கெட்டுப் போனது என்று சுற்றம் தூற்றினாலும், பெற்றோர் வருந்தினாலும், தன்னை மாற்றிக் கொள்ளாதவள். அனைவரோடும் அன்போடு நடந்து கொள்ளும் பண்பால், அவளைத் தாங்க… பண்புடையோர் பலர் இருக்க இன்பமாக வாழ்கிறாள்.
தோழியாக இருந்தாலும், இருவருக்கும் பிடித்தங்கள் ஒன்றாக இருக்கும் நிலையில், பகிர்தல் என்பது வரைமுறைக்கு உட்பட்டே என வாழ்ந்து காட்டுகிறாள்.
———————————————————————————-
நன்றி….!
———————————————————————————-
எம் குறுநாவலைப் படித்தவர்கள் அனைவரும் மறக்காமல், தங்களின் பொன்னான கருத்துகளை பதிவு செய்யுங்கள். மறந்து விடாதீர்கள்… தோழமைகளே!!!
என்றென்றும் மாறா அன்புடன்…. சரோஜினி