anbudai 19

அறிமுகம்

மாற்றுதல் ஆகி வந்து சென்னையில் குடிபெயர்ந்த முடிந்திருந்த இந்த ஒரு வாரம் முழுவதும் லண்டன் அலுவலகம் தொடர்பு கொண்டு பேசியிருந்ததில், அலுவலக சம்மந்தப்பட்ட சில சமாசாரங்கள் தெளிவு படுத்திக்கொள்ள மீண்டும் மூன்று நாட்கள் பயணமாக ஷ்ரவன் லண்டன் செல்லவேண்டியிருந்தது.

அதன்பின் இவ்வார இறுதிக்கு முன்னுள்ள இரண்டு நாட்களில் south india frachise எடுத்துப்பவர்கள் அனைவரின் கூட்டம் ஹைதராபாத்தில் நடக்கயிருந்தது. இரண்டும் தொடர்ச்சியாய் வந்ததனால், வாரம் முழுக்க ஷ்ரவன் இங்கே சென்னையில், எங்களோடு இல்லை. முதலில் லண்டன் சென்று தன் வேலைகளை முடித்துக்கொண்டு, பின் அங்கிருந்து நேரே ஹைதராபாத் சென்றும் இவ்வார இறுதியில், வெள்ளி இரவன்று திரும்புவதாய் திட்டம்.

அவரில்லாது கழிந்த இவ்வேழு நாட்களில் பொருட்களை பிரித்து அடுக்கவும், வீட்டை சரி செய்யும் வேலைகளிலும் அபூர்வா என்னை தனித்து விட்டுவிடாமல் கூடியவரை வீட்டில் இருந்து தன் வேலையயும் பார்த்து கொண்டு என்னுடன் இருக்கலானாள். முன்னிருந்த அலுவலகம் என்றால் இதுவும் முடிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை கேத்தன் மற்றொரு பக்கம் சக்கரம் கட்டிக்கொண்ட கால்கள் கொண்டவனாய் பறந்ததில் அறிந்து கொண்டேன். அவ்வார முதல் நாளில் அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி என நால்வரும் திரும்பியிருந்ததும், அபூர்வா கட்டாயமாய் அலுவலகம் சென்று வந்த நாட்களின் சில மணிநேரங்களிலும் என்னை அவர்களுடன் விட்டுவிட்டுச் சென்று வந்தாள்.

லண்டனில் இருந்த காலம்யாவும், கருவுற்றிருந்த தன்  பெண்ணை அருகில் வைத்து பார்த்துக்கொள்ள முடியவில்லை என பார்த்து பேசிக்கொண்ட FaceTime பேச்சுக்களின் இடையே அம்மா கண்கலங்கிய நாட்கள் ஏராளம். தன் எல்லா வேண்டுதல்களின் மொத்தமாய், இனி அவர்களை விட்டு தூரம் செல்ல இடமேயில்லாத படியாய் இவ்வாறான மாற்றம், குழந்தையின் வரவையும் தாண்டி பிள்ளை தாங்கிய என்னையும் குழந்தையாய் பார்த்திருந்த அனைவருக்கும் ஏகபோக கொண்டாட்டம்.

அது மட்டுமின்றி நானிங்கு அவர்களோடு இல்லாது இருந்ததனால், கேத்தன் அவர்களை விட்டு விலகாது இத்தனை நாட்களாய் அவனுக்கு வந்திருந்த வெளிநாட்டு வாய்ப்புகள் சிலவற்றை மறுத்திருந்தான். இது குறித்து அவனிடம் நான் நேரில் பேசத்தயங்கியதின் முழுக்காரணமும், என் குற்ற உணர்வின் குலைச்சல் மட்டுமே. நான் இவர்களோடு இருப்பதை விடுத்து, லண்டனில் இருந்ததால் மட்டுமே, அவன் இங்கே அவர்களை தனியே விட்டுவிட முடியாத படி தன் வாய்ப்புகள் அனைத்தையும் தட்டிக்கழித்து வந்திருந்தான் என்பதை மனதினால் ஏற்று, சிந்தித்த ஒவ்வொரு நொடியும் உடலில் பாய்ந்தோடிய உதிரப்புனலாய் ஒரு விதமான complex உடனான helplessness மனதை சத்தாய்த்தது.

இனியும் அது நடக்காமல் பார்த்துக்கொள்வதும் என் கையில் தான் இருப்பதாய் தோன்றியது. அவனோ நானோ ஒரு நாளும் பெற்றவர்களையும், பெறா தாய் தந்தையையும் பிரித்து பார்த்தது கிடையாது. உடல் நலக்குறைவு என்னை பெற்ற என் தந்தைக்கே என்றாலும், எங்கும் செல்லாமல் அவரோடு இருந்து அவரை பார்த்து தேற்றியது கேத்தன் தானே! அதுமட்டுமின்றி இன்று வேறெங்கும் செல்ல சம்மதிக்காது அவர்களோடே இருப்பதும், எங்கே தூரம் சென்றால் அவர்களை நல்லபடியாய் கவனித்துக்கொள்ள முடியாமல் நான் தவிப்பதை போல் தானும் தவிக்க நேரிடுமோ என்ற பயமும், கவலையும்  மட்டும் தான். ஆண்பிள்ளைகள் ஆழ்மன உணர்ச்சிகளை வெளியே காட்டமாட்டார்கள் என்றாலும், அவரவர்கட்கு இருக்கும் vulnerability மனதிற்கு நெருக்கமானவரோடு மட்டும் வெளிப்படுதல் உலக இயல்பு.

இவருக்கு நானென்றால், அவனுக்கு அபூர்வா.

இவன் எங்கும் போகாதிருந்து இங்கேயே காலத்தைக் கழிக்கும் காரணமெல்லாம் அவன் வாய்க்கூறி நான் கேட்கவில்லை என்றாலும், முன்பே அதனை அறிந்தே இருந்தேன். அதனையும் தாண்டி இந்த வாரநாட்களின் ஒரு இரவில், உணவின் பின் எதையோப் பற்றிய பேச்சினூடே கேத்தன் அலுவலகம் பற்றி வந்திட, அப்போது அப்புவிடம் நேரடியாய் கேட்டு விட்டேன், அவனது வெளிநாடு செல்லாத காரணங்கள் பற்றி. முதலில் என் மனம் வருந்தக்கூடாது என்று மறுத்தாலும், பின் நான் கொண்ட குழப்பம் உணர்ந்து உண்மையை கூறி, தெளிவு படுத்தி, இறுதியில் என்னை தேற்றவும் செய்தாள் அவள்.

வீட்டு வேலைகள் செய்ய அனுமதி தராமல் இருந்தாலும் அவளிடம் கெஞ்சி கேட்டு போராடிய பின்பாய் சில வேலைகளை செய்வதற்கான அனுமதியை மட்டும் அளித்திருந்தாள். 

அன்று காலை உணவை முடித்துக்கொண்டதும் சிணுங்கிய அலைபேசியில் உரையாடியவாறே தன்னறைக்குள் சென்றவள், வெளியே வருகையில் உடைமாறி அலுவலகம் செல்ல கிளம்பியிருந்தவள் போல் காட்சியளித்தாள். 

அதன்பின் முக்கியமாய் செய்து முடிக்கவேண்டிய வேலையை பற்றி தான் இப்போது வடிவமைத்து பணியாற்றும் ஹோட்டலின் நிர்வாகத்தலைவரோடு பேச வேண்டுமென்று கூறியவள், தான் வர இரவாகிவிடும் அது வரை தனித்திருக்க வேண்டாமென்று என்னை தன்னுடன் அழைத்து பெற்றோர் வீட்டில் விட்டுச்சென்றாள்.

மதிய உணவை முடித்து அனைவரும் ஓய்ந்து அமர்ந்து கதைத்த நேரம், அணிந்திருந்த உடையின் நலுங்கல் முகத்திலும் பிரதிபலிப்பாய் கேத்தன் வீட்டினுள் நுழைந்தான். உலகமே நான்காய் பிளதாலும் இரவிற்கு முன்பாய் வீட்டுற்கு வராத இவனா இன்று மதியமே வந்து நிற்கிறான் என்று வாய்ப்பிளந்து அவனை பார்க்க, லெதர் இருக்கையில் அமர்ந்து கண்களில் ஆர்வத்தோடு கையில் இருந்த The Hindu நாளிதழின் sudokuவிற்கு தீர்வு காண அதனில் மூழ்கியிருந்த சித்தப்பாவோ அவனை கண்ணாடியின் இடுக்கில் பார்த்தார். “என்னடாப்பா என்னிக்கும் இல்லாததா இந்த நேரத்துல வந்திருக்க?”

கையில் இருந்த ஹெல்மெட்டை அதன் இடத்தில் வைத்தவன், கைகளினால் கலைந்திருந்த கேசம் கோதி, சித்தப்பாவின் அருகில் அமர்ந்து முனகலாய் பதில் உரைத்தான். “அரை நாள் லீவ் சொல்லிட்டு வந்துட்டேன்.”

அவன் கூறியது தான் தாமதம் போல், சித்தி விழிகள் விரிய அவனை பார்த்தார். “என்ன கண்ணா சொல்ற? நீ லீவ் போட்டியா?”

விழிகளில் ஆச்சரியம் ததும்ப அவனை பார்த்த சித்தியிடம் குனிந்த கேத்தன், “ஆமாம், கடுப்பா இருந்தது. அதான்,” என்று சத்தமாய் கூறிவிட்டு என்னை கண்கள் இடுங்க ஒரு ஏளனப்பார்வை பார்த்து பின், அவர் காதில் கிசுகிசுத்தான். “ஏன்மா ரெண்டுநா முன்னாடி உன் கிட்டயும், பெரியம்மா கிட்டயும் ஒரு விஷயம் சொன்னேனே, என்னன்னு இவகிட்ட கேட்டியா?”

அவன் கூறுவதே புரியாததாய் சித்தி முழித்தார். “என்னடா சொன்ன, நியாபகமில்லையே,” என்று நெற்றிச் சுருங்க யோசனை வட்டத்துக்கள் ஒட்டிக்கொண்டவரை மேலும் clue கொடுத்து தெளிவு படுத்தினான். “ப்ச், அதான்மா; கிச்சன்ல சொன்னேனே.. அன்னிக்கு,” என்று தன்னிரு சோர்ந்த விழிகளையும் பெரிதாக்கி, உருட்டி அவனது துப்பை கூற முயன்றவனின் வார்த்தையில் சித்திக்கு பொறி தட்டியது.

சட்டென அவன் கூற வருவதை உணர்ந்தவர், “ஓ, அதுவா..” என்று இழுக்க, இவனோ உதட்டிலொரு வெற்றி புன்னகையோடு பதில் கொடுத்தான். “அதான் அதான்.. கேளு கேளு,” என்று ஊக்கினான் சித்தியின் கையை இடித்து. இத்தனையையும் பார்த்து கையிலிருந்த நாளிதழை அருகில் கிடத்திவிட்டு அவன் என்ன கூறவிழைகிறான் என்று எனக்கு இரண்டாவதாய் சித்தப்பாவும் ஆவலோடு கவனமாய் அமர்ந்திருக்க, சித்தியோ முகத்தின் பாதி தயக்கமாகவும், மற்றொரு பாதி பரிகாசத்தின் விளைவாய் விஷமச்சிரிப்பும் நிறைய என்னை பார்த்தார்.

இவன் பேசுவதோ, சித்தியின் முகபாவங்களையோ புரிந்துக்கொள்ள முடியாமல் இதுவரை இன்பமாய் சித்தியின் மடியில் தலைசாய்த்திருந்தவள் என்னவென்று அறியும் அவா தாங்காமல் எழுந்துவிட்டேன். “அப்படி என்ன சித்தி என் கிட்ட கேக்கணும், அவன் தான் ஓவரா பண்றான்னா நீ அதுக்குமேல பண்றியே.” முகம் சுளித்தவளை பார்த்து கேத்தன் கண்களில் கேலியும், கிண்டலும் பளபளக்க தன் அம்மாவை மேலும் ஊக்குவிக்கும் சாக்கில் என்னை சீண்டினான். கண்களால் செய்கை காட்டிய படியே அமர்ந்திருந்த சோபாவில் இருந்து கீழிறங்கி சித்தியின் கையை சுரண்ட ஆரம்பித்தான். “கேளுமா, விடாதே..”

“ஏன் டா குழந்தைய சும்மா சீண்டற?” என்று ஒன்றும் புரியாத சூழலிலும் சித்தப்பா என் பக்கம் சாய்ந்து விட, அவனோ அதனில் ஸ்தம்பித்து ஒரு எட்டில் எழுந்து தான் முன்னிருந்த நிலைக்கு ஏறி சித்தப்பாவை முறைத்தான். “அப்பா, அவளுக்கே குழந்தை பொறக்க போகுது. இன்னும் குழந்தை குழந்தைன்னு கொஞ்சறீங்க!”

“இருந்தா என்னடா, அப்பா அம்மாக்கு எப்போதுமே புள்ளைங்க குழந்தை தானே,” என்று சித்தி ஒத்து ஊத, கேட்டு அலுத்தவனாய் இனி அவர்களிடம் பேசி பயனில்லை என என்னிடம் திரும்பினான். “இவளா குழந்தை.. ஒண்ணுமே தெரியாத மாதிரி மூஞ்சிய வெச்சுருக்கா பாருங்க.. அன்னிக்கு வீட்டுக்கு போனா ஷ்ரவன் இவ கால புடிச்சு நகம் வெட்டி விடறார், வீட்டு மாப்பிளைய இப்படில்லாமா வேலை வாங்கறது..ம்ம்?”  என்று ஒன்றுமில்லாததை பெரிதாய் கைகளை விரித்து பேசியவனை சித்தப்பா தோளிலே தட்டினார்.

“குழந்தை வளர்ரதுல்ல, அவளால எப்படி கால்ல நகம் வெட்டிக்க முடியும், அதான் அவர் செய்யறார்.” என்று கூலாய் உதட்டில் ஒரு சிரிப்போடு கூறி மடித்து வைத்த நாளிதழை கையில் எடுத்து விட்ட வேலையை பார்க்க ஆரம்பித்தார். இவன் பிதற்றியதை சற்றும் கண்டுகொள்ளாமல் தன் வேலையில் மூழ்கியவரையும், அதைக்கண்டு சோகத்தில் மூழ்கிய முகத்தை வைத்து ‘நீயாவது எதாவது சொல்லேன்மா’ என்று கெஞ்சலாய் தன் அம்மாவை பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சித்தப்பாவையும் ஒரு படி மிஞ்சிப்போய் சித்தி, அவன் கண்ட பார்வையை கண்டும் காணாதது போல், முகத்தை திருப்பி கொள்ள, பொங்கிய சிரிப்பை கைகளை வைத்து மறைத்து கொண்டேன். “எல்லாத்தையும் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி சிரிக்கறா பாரு!” என்று முணுமுணுத்தவனை முறைத்தேன்.

“ஏய், இப்போ உனக்கு அவர் எனக்கு நகம் வெட்டினது பிரச்சனையா இல்ல உன் plan இங்க எடுபடலைன்னு பிரச்சனையா?” அதற்குமேல அடக்கமாட்டாமல் சத்தமாய் சிரித்து, கண் சிமிட்டியவளை தன் கூர் பார்வையில் பார்த்து, உதட்டிலேயே எதையோ பேசி முணுமுணுப்பாய் வைதான்.

அதனை பார்த்து புருவம் சுளித்த சித்தியோ, அவனிடம் தொடையை கிள்ளினார். “ஏன் டா இதுக்கே இப்படிங்கறியே.. கல்யாணத்தன்னிக்கே மெட்டி போட்டு விடறச்சே இந்த வீட்டு மாப்பிள்ளை மேல இருந்த அக்கறையெல்லாம் எங்க ராஜா போச்சு?” என்று பரிகசிக்க, அவனோ சட்டென பதில் கிட்டாது தவித்தான்.

எடுத்த எடுப்பில் சில விநாடி தடுமாறினாலும், கிடைத்த பதிலை உரக்கச்சொன்னான். “ஆங்!அது.. அன்னிக்கு..  ஏன்னா.. அது கல்யாணம்..”

“அது கல்யாணம்னா இது கல்யாணத்துக்கு அப்றம், போடா,” என்று வேகமாய் படபடத்து சித்தி கூறி, சித்தப்பா நக்கலாய் அவனை பார்க்க; பதிலில்லாது விழித்தவனை மேலும் சீண்ட தோன்றி முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டேன்.

“ஏன் கேத்தன், இன்னிக்கு அவர் எனக்கு செய்யறத இப்படி சொல்றியே, அப்போ நாளைக்கு உன் அம்முக்கு நீ இதெல்லாம் செய்ய மாட்டியா?” கேட்டதும் பட்டென செய்தித்தாளில் இருந்து தலை நிமிர்த்திய சித்தப்பா, விஷமமாய் சிரித்த என்னையும், அடுத்து தன்னை நோக்கி பாயப்போகும் கேள்விகளை எண்ணி மலைத்து, தலையில் அடித்துக்கொண்ட அவனையும் மாற்றி மாற்றி பேச்சிழந்து பார்க்க, சித்தியோ கண்களில் வியப்பும் திகைப்பும் ஒருங்கே மின்ன, “டேய் யார்றா அது அம்மு? சொல்லவே இல்ல?” என்று எதிர்பார்த்த வினாவை தொடுத்தார்.

“ஏய்., கோர்த்து விடாதே, சும்மா இரு!” என்றவன் கண்களிலேயே எச்சரிக்கை விடுக்க, நானோ அதனை சற்றும் மனதில் ஏற்றாமல் முன் பேசிய தொனியிலேயே தொடர்ந்தேன், “என்னடா… கேக்கறாங்கயில்ல? பதில் சொல்லு!”

“டேய், ராஜா, அப்போ சிவா பாக்க போறேன்னுட்டு சும்மா சும்மா வெளியில போறதெல்லாம் அம்முவ பாக்க தானா?” என்று சித்தப்பா உள்ளிருந்து எழுந்த சிரிப்பை அடிக்கியவாறாய் கேட்க, சித்தி முகத்தில் அச்சூழ்நிலை சமைத்த முக பாவனைகள், ஏக entertainingஆய் இருந்தது.

சுதாரித்து தலை நிமிர்த்தியவன், “அம்மா, சும்மா இரும்மா. ஆபீஸ்லேந்து வந்தேனே சாப்ட்டியாடான்னு ஒரு வார்த்தை கேட்டியா?” என்று இலாவகமாய் பேச்சை மாற்ற, அப்போதும் அவனை விடாமல் பார்த்து சிரித்து கொண்டிருந்தேன். “சொல்லு கேத்தன், உன் அம்முன்னா செய்யமாட்டியா?”

மீண்டும் பாவமாய் கேட்டவளை கைகளை கூப்பி, “தாயே, உன் காலவார நினைச்சது தப்புதான், ஒண்ணு கடக்க ஒண்ணு சொல்லிவெக்காதே,” கூறியவன் என்னை பேசவிடாது அவனே தொடர்ந்தான். “இனி உன் கால் நகம் இல்ல, காலையே வெட்டினாலும் நான் வாய திறக்க மாட்டேன்.” என்றவாறாய் சமாளித்து உடை மாற்றி வர உள்ளே சென்றான்.

அதன் பின்னான நேரம் முழுவதும் கேத்தன் உடனான கேலியிலும், கிண்டலிலும் கழிந்திருக்க கிளம்பும் நேரம் அலை பேசி சிணுங்கியது. மாலை அனுப்பியிருந்த குறுஞ்செய்திக்கு அவரிடம் இருந்து வந்த பதிலாய் இருக்கும் என உணரவும், அவசரமாய் எடுத்து பார்த்தேன்.

இன்று இரவு நிச்சயமாய் வீடு திரும்பிவிடுவார் தானே, அப்படியானால் அழைக்க கேத்தனை ஏர்போர்ட் வரச்சொல்லவா என்று கேட்டிருந்ததுக்கு, ‘Not necessary Kannamma.’ என்று பதில் வந்திருந்தது.

தினம் காலை எழுந்ததும் கண்கள் கண்டு ரசிக்கவென அவர் விட்டுச்செல்லும் காகிதக் கிறுக்கல்கள் போல் அல்லாது displayவில் தென்பட்ட சீரான எழுத்துக்களை கண்டதும் எல்லாம் இருந்தும் எதுவோ இல்லாதது போல் தோன்றியது. ஆயிரம் இருந்தாலும் அவர் கைப்பட காதலோடு எழுதுவது போல் ஆகாதில்லையா?

ஏமாற்றத்தை முகத்தில் காண்பிக்காமல் இருக்க முயன்று பதில் அடித்தேன். ‘Okay. don’t skip your dinner.’

அப்பு அலுவலகத்தில் இருந்து கிளம்பும் முன்பாய் அழைத்திருந்தாள். நாள் முழுவதும் வேலை பார்த்த அலுப்பில் சோர்ந்து பேசியவளை, வீட்டிற்கு செல்லச் சொல்லி இங்கிருந்து என்னை வீட்டில் கொண்டு விடுமாறு கேத்தனை உடன் அழைத்துச் சென்றேன்.

வீட்டில் என்னை இறக்கிவிட்டவன், பால்கனியில் இருந்து கையசைத்த அபூர்வாவை பார்த்து, “இத அங்க அனுப்பாதே, நீயே வெச்சுக்கோ,” என்று உரக்க கூறி, முகம் சுளித்து காலினால் கீழுள்ள லீவரை உதைத்து கிளம்ப ஆயத்தமானான்.

முறைத்து அவன் தோளை அறைய, கண நேரத்தில் தன் வாகனத்தில் காற்றாய் பறந்தவனின் உருவம் தெருவை தாண்டியதும் கட்டிடத்தினுள் புகுந்து, மேலே ஏறினேன். நான் வருவதை நின்று பார்த்த அபூர்வா, ஒரு நொடி கூட வீணாக்காது பால்கனியில் வந்து சொந்தம் கொண்டாடிய தென்றல் அவள் குழல் கலைக்கக் காற்றின் இசையினூடே மெலிதாய் சிரித்தாள். “என்னவாம் உங்க தம்பிக்கு? நீங்க அந்த வீட்டுக்கு போகாம, வேற யார் போவாங்களாம்?”

“அவன் என் காலை வாரினான், அதான் நானும் லேசா விளையாடினேன்.”

“அவன் கெடக்கான் விடுங்க.”

சற்று நேரம் என்னோடு அமர்ந்து அன்று நடந்த கதைகள் பேசியவள், அதன் பின் கவனிக்கப்பட வேண்டிய அலுவலக வேலையை செய்து முடிக்க தன் லேப்டாப்பினுள் மூழ்கினாள்.

சென்னை வந்திருந்த இந்த ஒரு வாரத்திலும் சரி, லண்டனில் கழிந்த கடைசி சில நாட்களிலும் சரி, தூக்கம் சரியாய் இல்லாது படுத்தியது. அவர் வரும் நேரம்வரை வேண்டுமென்று முழித்திருக்க ஆசைதான் என்றாலும், தூக்கத்தை கெடுத்துக்கொண்டு முழுத்திருந்தால் வைவார் என்று, படுக்கையில் சாய்ந்து கண்களை மூடி அவரிடம் சொல்வதற்காகவாது தூங்க முயற்சித்தேன்.

குழந்தை புரண்டு துயில் கலைப்பது மட்டுமின்றி, மனதில் இருந்து தத்தளித்த பயமும், ஒரு புறமாய் படுக்க முடியாது அவ்வப்போது எழுந்து அமர்வதும், அதனை உணர்ந்து அவரும் தூக்கம் கெட்டு எழுந்தமர்ந்து கை வளைவினுள் அணைத்து சமாதானம் கூறுவதும் புதிது ஒன்றும் அல்ல. அப்படியான தூக்கமில்லாத இரவுகளெல்லாம் குழந்தை புரள்வது மட்டுமன்றி, குழந்தை பற்றிய கவலை, கட்டின்றி விரைந்து வெளிப்பாயவிருக்கும் நீத்தம் தேக்கும் அணையாய் மாறி, நிறைந்தது. உள்ளமென்பது முடிவில்லா அடிவானமாய் தொடரும் பட்சம், அது கொள்ளும் கவலைகளும், யோசனைகளும், என்று அவையாவுமே அதே தன்மையுடையவை தானே!

என்ன செய்வதென்று தெரியாமல் தறிகெட்டு ஓடும் யோசனைச் சங்கிலியை உடைக்க முடியாது அதன் வசத்திலும், கன்னம் நனைக்கும் கண்ணீரின் பிடியிலும் தூக்கமில்லாத இராக்காலத்தையெல்லாம், துவண்டு கழித்த பொழுதுகள் யாவும் கனன்று கொண்டிருந்தது.

சொல் பேச்சை கேட்காமல் விழி தாண்டி கன்னம் தொட்ட நீர்த்துளிகளை நானுணர்ந்த நேரம், குழந்தை அசைந்து, அனிச்சையாய் வயிற்றின்மேல் உள்ளங்கை பதித்துத் தடவ, உதட்டை அடைந்து விரிந்தது ஒரு புன்னகை.

இத்தனை நாட்களாய் பொழுது கழிவதே குழந்தையுடனான பேச்சு வார்த்தையில் தான் என்றாலும், உடன் சுமக்கும் உயிரை குனிந்து முத்தமிட இயலாமல் தவிப்பாய் இருந்தது உடல் முழுக்க. “அப்பா, அத்தை, மாமான்னு எல்லார்கிட்டயும் முத்தா வாங்கியாச்சு. அம்மா கிட்ட ஒண்டி இன்னும் இல்ல, இல்லமா?” என்று முறுவலித்து கேட்டேன்.

“இன்னும் கொஞ்சம் நாள் தான், அதுக்கப்பறம் குட்டிமா அம்மாகிட்ட வந்துடுவல்லமா.” என்று கேட்டதற்கு இப்போதும் உன்னுடன் தான் இருக்கிறேனம்மா என்று கூறாமல் புரண்ட தங்கத்தை வாரியணைக்க தோன்றாது இருக்குமா!

அதுமட்டுமில்லாது அம்மாவின் பாட்டு என்றால் அசையாமல் ஒரிடம் இருந்து கேட்டுக்கொண்டு ரசிக்கும் தங்கத்தை பெற்றெடுக்க யாருக்குத்தான் ஆசையாய் இருக்காது? வழியில்லாத இருளின் அச்சுருத்தலில் கலங்கரை விளக்கமாய் ஆகியது இப்பிள்ளையமுது!

ஓசையின்றி கன்னத்தில் தன் தடம் பதித்து வழிந்த விழிநீரை புறங்கையால் துடைத்து அலைபேசியை கையில் எடுத்து மணி பார்த்தேன். ஒன்றரையை தாண்டியிருந்தது, இந்நேரமெல்லாம் ஷ்ரவன் வந்திருக்க வேண்டுமே, என்று திடமில்லாது மனம் துவளத் தொடங்க ஆகப்பெரும் சமாதானமாய் கதவின் தாழ்திறக்கும் ஓசை கேட்டது. படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்ததும் அதன் பின் அசைவின் ஓசையும் காதினில் எட்டாததாய் அமைதியாய் உள்ளே நுழைந்தவரை கண்டதும் அழையா விருந்தாளியாய் உள்ளம் கொண்ட நெகிழ்ச்சியின் பிம்பமாய் உயிர்த்தது ஒரு புன்னகை.

ஓசையின்றி அறைக்கதவை சாத்தித் தாழிட்டவர், உன்மத்தமாகி புன்னகைப்பதை பார்த்து தன் வேலைகளை பார்த்தவாறே கேட்டார். “ஏன் தூங்கல இன்னும்!”

அடுத்த கேள்வி வரும் முன்பாய் முந்திக்கொண்டேன். “எனக்கு தெரியும் இப்படித்தான் கேப்பீங்கன்னு, எனக்கு தூக்கம் வரலை, ஷ்ரவன்; நான் ஒண்ணும் வேணும்னு முழிச்சு இருக்கலை,” சிலையாய் நின்றவரின் கைகள் மட்டும் சட்டை பொத்தானை அவிழ்க்க பதில் கூறாது முறைத்தார்.

“promise,” என்று நான் உறுதிப்படுத்த, பெருமூச்செறிந்தவராய் என்னருகில் அமர்ந்தார். நிழலாடிய மௌனத்தில் தலை கவிழ்த்து, அவர் கரம் பிடித்து கொண்டேன், ஒன்றுமில்லாமல் பார்த்த பார்வைக்கே உருகி வழியும் மனதின் பற்றுதலுக்காக.

“கண்ண மூடி படுத்தா தானே தூக்கம் வரும்? புக்க கைல வெச்சு அதை படிச்சுட்டு இருந்தா எப்படி தூக்கம் வரும்!” அருகில் இருந்த முக்காலியின் மேல் தன் பக்கங்களை விரித்து வர்ணமாய் காட்சியளித்த நூலை கண்ணினால் காட்டி, மென்மையாய் சிரித்தார்.

பதிலாய் ஒரு இறுக்கமான சிரிப்பு மட்டும் சாத்தியமாக, குனிந்த தலை நிமிர்த்தி நேராய் பார்த்தேன். “நான் புக் ஒண்ணும் படிக்கலை, சும்மா தான் படுத்திருந்தேன், அப்படியும் தூக்கமே வரலை. எனக்கு தெரியும் வந்ததும் திட்டுவீங்கன்னு, அதான் முடிஞ்சவரை தூங்க try பண்ணேன் ஆனால் முடியலை,” என்று தட்டுத்தடுமாறி தன்னிலை விளக்கம் தந்தவளை மறுவார்த்தை பேசாது, தன்னுள் சரித்து உச்சி முகர்ந்து, முத்தமிட்டார்.

தேங்கியழுத குழந்தையை அள்ளியணைத்து முத்தமிட்டதாய் அவரது தழுவல் மெல்லமைவூட்ட, அவரோ சப்தமின்றி உறையாடிய விரல்களை விடுவித்து, மிருதுவாய் குழல் வருடினார். “வாரம் முழுக்க இப்படித்தான் தூங்காம இருந்தியா?”

“அப்படி ஒண்ணும் இல்ல, அப்பு இங்க என் கூட தான் தூங்கினா, அதனால தூங்கினேன் தான்.” மெதுவாய் அளித்த பதிலில் ஆறுதல் அடைந்தவரை “சரி, how was your journey? Conference எல்லாம் ஓகே தானே?”

“அதெல்லாம் ஓகே. சொல்ல விட்டுட்டேன் பாரேன், ரெண்டு பசங்க resume அனுப்பியிருந்தாங்க, நாளைக்கு நேர்ல வர சொல்லியிருக்கேன்.” உடைமாற்ற எழுந்தவரை தலை நிமிர்த்தி பார்த்து கூறிய கதை கேட்டு தலை அசைத்தேன்.

அணிந்திருந்த formals களைந்து, track pants, t shirt மாற்றி வந்தவர், ஓசையில்லாது அருகில் அமர்ந்து பின்னால் சாய்ந்தார். “ஏன் கண்ணம்மா, கடைசி தடவ நீ ஒலிவியா பாக்க போனப்ப scan மட்டும் தானே பண்ணாங்க, உன்னோட routine check-up பண்ணலையே.” சிரத்தையாய் யோசித்திருந்ததில் நெற்றி நெறிக்க கேட்டவரை, பார்த்து இதமாய் முறுவலித்தேன்.

“ஆமாம்மா, பண்ணலைதான்,” கூறிய நொடி தன் கை மென்மையாய் சிகையளக்க, “இதையெல்லாம் நியாபகம் வெச்சுக்கறதில்ல? நான் மறந்துட்டா என்ன பண்றதாம்?” என்றார்.

“இதெல்லாம் நீங்க மறக்க மாட்டிங்க.” தன்பால் கொண்ட அதீத நம்பிக்கையை பறைசாற்றியவளை காதலாடி பார்வை பார்த்திருந்தவரை கண்டு முகம் சுளித்தேன், “எனக்கு தெரியும்!” என்று கூறி.

சப்தமின்றி நகைத்தவர் நீட்டியிருந்த கைகளில் தலைவைத்த பின், ஒரு விஷமமான ஓரப்பார்வை தீண்ட பார்த்தார். “சரி, வேற என்ன தெரியும்?”

“எனக்கு வேற ஒண்ணும் தெரியாதுபா,” என்று சலித்து கொண்ட என்னை கள்சிரிப்பு ததும்ப பார்வையால் அளவிட்டவரின் கைகளில் ஏதுவாய் முகம்புதைத்து, வளர்பிறையாய் நிறைந்திருந்த வயிற்றில் கைவைத்த மாத்திரத்தில் கண்ணிமைகள் ஒன்றை ஒன்று தழுவிக்கொள்ள ஒரு வாரமாய் இல்லாது இன்று கிடைத்த அரவணைப்பில் மனம் உன்மத்தமாகி உருகியிருந்தது.

தன் கிறுக்கல்களை வானில் தொலைத்த பறவை அலைந்து திரிந்து தன் கூடு திரும்பியது போல் உணர்ந்ததும், அப்பறவையிழந்த இறகாய் கன்னமமர்ந்த கைவிரல்கள் அந்த வாஞ்சையான வருடலில், கண் திறந்த என்னை இமைக்காது பார்த்திருந்தார். அதை நான் பார்த்த நொடி கேட்டும் விட்டார். “என்ன அப்படி ஒரு சிரிப்பு.. உலகத்தையே  கைக்குள்ள கொண்டு வந்துட்ட மாதிரி?”

உள்ளத்தில் வெள்ளமாகிக்கிடந்த அத்தனையும்  அவர் பார்த்த பார்வையே நன்கு அறிந்திருக்கும், ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.”என் உலகம் இவ்வளோதான்பா.”

அத்தோடு எங்கள் உலகம் அவ்விரவிற்கான அமைதியில் மூழ்க, கரைக்கு வந்து போகும் அலைகளென கழுத்தில் உறவாடிய சுவாசம் தாலாட்டாய் ஆனது.

அறையின் ஜன்னல்களை போர்த்தியிருந்த windshieldஐத்தாண்டி அக்காலை வெளிச்சம் இமைத்தட்ட, படுக்கையின் மறுபுறம் காலியாகியிருந்தது. எழுந்து பல் தேய்த்து, கிச்சனுக்குள் காலடி வைத்த நேரம், அபூர்வாவின் குரல் தேய்ந்த விம்மலாய் காதை எட்டியது.

“…நீ கொஞ்சம் பேசறியா அவன்கிட்ட? எனக்கு இதை solve பண்ண வேற வழியே தெரியல, please,” பேசிய வார்த்தைகளின் இறுதியில் சொற்கள் மறைந்து உணர்ச்சிகள் நிரம்பியிருந்தது. என்றைக்கும் இல்லாததாய் குழந்தை எதை நினைத்து இப்படி வருந்துகிறாள்.

நடப்பதை நோக்கி மறு அடி வைத்தபோது இவர் குரல் தேற்றும் விதமாய் அலைபாய்ந்தது. “நீ சொல்றது சரி தான், கவலைப்படாதே நான் பேசறேன்.”

“அப்போ அவனை போன் பண்ணி இங்க வரசொல்லவா?” உணர்ச்சிகள் வலுவிழந்திருந்தாலும், குரலில் எழுந்திருந்த ஏக்கம் மேலும் மனதை நெருடியது.

“இன்னிக்கே பேசணுமா?”

“Please, நான் எனக்காக ஒண்டி சொல்லலை. He is not alright கொஞ்ச நாளா, என்னோட hunch சரியா இருந்தா, உன்னால தான் இது சரியாகும்.” அவள் குரல் சிறு நூலிழையில் கெஞ்சலாய் மாறியிருந்தது. அங்கே அடிவைத்து அபூர்வா கண்களில் நீர் ஜனித்திருந்ததை கண்டதும், அவசரமாய் தன் புறங்கையினால் ஒற்றைத்துளியை தூரத்தள்ளினாள்.

என்னை கண்டதும் அச்சிறு முகத்தில் ஒரு இளநகை, சற்று முன்னிருந்த அவளது விசும்பலுக்கு முரணாய் மட்டும் இல்லாது இலக்கணமற்று தெரிந்தது. “ஶ்ரீ, எப்போ எழுந்தீங்க?” Table top மீது கால்களை கட்டிக்கொண்டு கையில் காபி கோப்பையோடு அமர்ந்திருந்தவள் என்னை பார்த்து கிழிறங்கி, என்னிடம் வந்தாள். சிரத்தையாய் தங்கையை ஆறுதல் படுத்தியவரை மேலும் கீழும் கண்ட என்னை தோளில் தட்டினாள் அவள். “அவன் ரொம்ப முன்னாடியே எழுந்துட்டான், அதான் அவனையே காபி போட விட்டுட்டேன்,” என்று சொல்லி, என் கையை பற்றினாள்.

முகமும் அதற்கேற்றார்போல் விகசிக்க தொடங்கவும், தாமதிக்காமல் முன் தலை கோதி கேட்டேன். “எனக்கு எல்லாம் கேட்டுது, என்ன ஆச்சு? கேத்தன் எதாவது சொன்னானா?”

நதிகள் பெருக்கும் கடலாய் பெருகியது அவள் கண்ணின் நீர்த்துளிகள். “அவன் எதாவது சொன்னால் தான் பரவாயில்லையே, ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறான், அதான் பிரச்சனை. ஷ்ரவன் பேசினா சரி ஆகும், எங்களுக்குள்ள இருக்க பிரச்சனைன்னா நான் இப்படி கேக்கமாட்டேன், ஆனால் இது அப்படி இல்ல வேற என்னமோ இருக்கு அவன் மனசுல. He is keeping something to himself, நேத்தி கூட பாத்தீங்கல்ல, கீழவரைக்கும் வந்தவன் அப்படியே போய்ட்டான்.”

என் தோள்மேல் சாய்ந்து மௌனத்தில் அவள் கண்ணீர் என் உடை நனைக்க, அவர் பின்னாலிருந்து மனம் கனம் தாங்காமல் அப்புவை கைவைத்து அழைக்க, அவளோ தலை நிமிர்த்தி அவரை பார்த்தாள். அவள் பார்த்த பார்வையிலும், அவள் மனம் தவித்த தவிப்பிலும் கேத்தன் மேலிருந்த கோபம் குருதியாய் பாய்ந்தோடி முகத்தை சிவக்கச்செய்ய, அவள் தீர்க்கமாய் கூறினாள். “நான் அவனை வர சொல்றேன், மொதல்ல வரானா பாக்கலாம்,” என்றும் இவ்வாறு பட்டும் படாமல் இவள் பேசமாட்டாள். 

அவள் முடித்த கணம் இவர் தொடங்கினார். “இங்க பாரு அப்பு, அவன் மனசுல என்ன இருக்குன்னு தெஞ்சுக்காம இப்படி பேசறது தப்பு. அவன் கிட்ட என்ன பிரச்சனைன்னு மொதல்ல கேப்போம், சரியா?”

சப்தமில்லாது தலையசைத்தாள். “சரியாகிடும், கவலைப்படாதே,” என்று கூறி முடித்த நேரம் காட்டுப்புயலாய் அவள் நெஞ்ச வாட்டிய வதை சற்றே குறைந்திருந்ததை போல் தெளிவடைந்தது அவளது முகம்.

என் கையில் அவர் கலந்த காபி கோப்பையை திணித்து, பின் கூறினாள். “சரி, ஷ்ரவன் சொன்ன மாதிரி நான் doctor கிட்ட appointment வாங்கி வெச்சுருக்கேன். She is not a gynaecologist, ஆனால் trust me, she is a very good doctor. அவங்க கிட்ட இன்னிக்கு போங்க, she’ll refer a gynaecologist, சரியா?”

“சரி, எத்தனை மணிக்கு அவங்கள பாக்கணும்?”  அவர் கேட்க, கூடத்திற்கு நடந்தவாறே பதிலளித்தாள். “பத்தரைக்கு, அவங்க வேலை செய்யற hospital இல்லாத வேற இடத்துக்கு வர சொல்லியிருக்காங்க. Station view road தான்.”

அங்கிருந்து உள்ளே மறைந்தவள், கூற நினைத்ததை மறந்தவளாய் திரும்பினாள், “ஏய், சொல்ல மறந்துட்டேன் பாரேன், உன் வண்டி service பண்ணியாச்சு. கீழ தான் இருக்கு. கார் வேணும்னாலும் எடுத்துக்கோ, anyways நான் காதம்பரி கூட தான் போவேன் இன்னிக்கு.”

மிட்டாய் பார்த்த சிறுகுழந்தையாய் ஒளிவிட்டன அவர் கண்கள். அதனை குறும்பாய் பார்த்து, அப்பு உதட்டை பிதுக்கினாள். “நான் எவ்வளோ நாளா சொல்றேன், Royal Enfield வாங்கிக்கலாம்னு, கேக்கவே மாட்டேங்கறான் ஶ்ரீ, இவன் Yamahaவ விட்டு தரமாட்டானாம்,” குறை கூற, அவரோ யார் என்ன சொன்னாலும் என் வண்டியை விட்டுத்தர மாட்டேன் என்று பார்வையிலே மறுப்பு தெரிவித்தார்.

பெருமூச்சு ஒன்றை விட்டு, கைகளை மார்போடு கட்டிக்கொண்டு, “சரி இதைத்தர ஒண்ணும் வேண்டாம்; அதுவும் வாங்கிக்கலாம். Win-win, என்ன சொல்ற?” என்று ஆர்வமாய் தன் யோசனையை எடுத்துரைத்து, புருவம் உயர கேட்டவளை கேலியாய் தலையில் தட்டினார் ஷ்ரவன். “எனக்கென்ன பத்து கால் பத்து கையா இருக்கு இதுவும் வெச்சுக்கணும், அதுவும் வாங்கணும்னு.. ஒரு வண்டி போதும்.” என்றுமில்லாது சீண்டலாய் சலித்து கொண்டவரிடம் முகம் சுளித்து, தனக்கான ஆதரவு திரட்ட என்னிடம் விரைந்தாள்.

“சொல்லுங்க ஶ்ரீ, அவன்கிட்ட.. bullet வாங்கிக்கலாம்.”

அவள் கூறியது கேட்டு அவரிடம் வாய் திறக்கும் முன்பே, அவரே கூறிவிட்டார். “முடியாது, முடியாது..”

பதிலாய் அவரை முறைத்தேன், “ஹலோ, எனக்கு ஒண்ணும் ‘பார்த்த முதல் நாளே’ எல்லாம் ஆசை இல்லை, கொழந்தை ஆசைப்படறான்னு கேட்டா, ஓவரா பண்றீங்க.”

அபூர்வா ஆதரவாய் குரல் கொடுத்தாள். “நம்ம சொன்னா கேக்கமாட்டான். நாளைக்கு அவன் பொண்ணு வந்து இந்த ஓட்டை வண்டில ஏறமாட்டேன், போப்பா சொன்னாதான் கேப்பான்,” என்று அலுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.

“என் பொண்ணு ஒண்ணும் என் வண்டிய அப்படில்லாம் சொல்லமாட்டா,” என்று குழந்தை பற்றிய உரையாடலில் குழந்தையாகவே மாறியிருந்த மனிதரை தொடர்ந்த படியே, கூடத்திற்கு நடந்தேன்.

குளித்து தயாராகி அப்பு தந்த விலாசத்திற்கு சொன்ன நேரத்திற்கு முன்பாகவே சென்றிருந்தோம் அவரும் நானும். பெரிய மருத்துவமனையாய் அல்லாது, கட்டடத்தின் நாடியிலேயே பழமையை கொண்டதாய் வலுவுடன் காட்சியளித்தது அச்சிறு dispensary.

உள்ளே சென்றமர்ந்த நேரம், வெள்ளை coat, அதன் சட்டைப்பையில் மானியுடன் மருத்துவர் போல் அல்லாது அபூர்வாவின் வயதை ஒத்த சிறு பெண் எங்களை நோக்கி வந்தாள். “Hello, I am Maya; C.R.R.I,” என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவள் என் முகம் கண்ட புன்னகையில் மேலும் பேசலானாள்.

“டாக்டர் வந்துருவாங்க, but before that, Can I see your reports and finish off some basic examinations?” என்றவள் இதமான புன்னகையோடே கூற, பதில் சொல்ல இயலாது இவர் முகத்தை பார்த்தேன். குழப்பத்தை உணர்ந்தவள் என் கரம் பற்றி தெளிவு படுத்தினார். “பயப்படாதீங்க, மறுபடியும் டாக்டரும் examine பண்ணுவாங்க. இது நான் தெரிஞ்சிக்க and டாக்டர் கிட்ட explain பண்ண..” ஒன்றும் புரியாது நானும் ஷ்ரவனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, மேலும் சில விவரங்கள் கூறினாள்.

“Oh sorry, Mostly, யாரும் என்ன examine பண்ண விடமாட்டாங்க. பாதி நேரம் வரவங்க கிட்ட கெஞ்சியே போயிடும்..” என்று கூறியவளின் முகத்தில் சோகத்தின் தடம் பதிய ஆரம்பிக்க, அவளே அதனை சரி செய்து, இவரிடம் கேட்டாள். “Please sir,” கெஞ்சலாய் கேட்டதும் ஒப்புதலாய் தலை அசைத்தவரை நன்றியுடன் பார்த்து குஷியாய் என் கரம் பற்றினாள். “Thank you so much!”

அடுத்த பதினைந்து நிமிடங்களில் என்னை பரிசோத்தித்தவர், டாக்டரிடம் அழைத்துச்சென்று அமரச்செய்து; இவரையும் உள்ளே அழைத்தார்.

அங்கு அமர்ந்திருந்தவரோ நாற்பதுகளின் முடிவில் அனுபவம் தந்த இளநரைகளோடு அமர்ந்திருந்தார். பெயர் பலகை ஏதுமில்லாத காரணத்தினால், அவர் பெயரை முதலில் கண்டு கொள்ள முடியவில்லை, இருவரும் அமர்ந்த பின் அவர் கொண்ட புன்னகை எங்களிடம் தொற்ற அறிமுகமானார். “Hello, I am Doctor. Mitha Sanjay Rish.”

“Hello doctor!”

“அபூர்வா சொன்னா அண்ணாவும், அண்ணியும் வந்திருக்காங்கன்னு, வாங்க.” முகமெங்கும் முறுவலோடு வரவழைத்ததும், உள்ளே நுழைந்த மாயா அவர் கைகளில் இருந்த என் பரிசோதனை காகிதங்களை அவர் முன் வைத்தார். “Mrs. Sri, age 27, The report says she has the history of fetal resorption, and the other fetus is alive and okay. Recent scan shows the condition of oligohydroamnios” என்று மூச்சுவிடவும் இடைவெளியில்லாமல் அக்கியானமாய் உரைத்த மாயாவை பார்த்து தலை அசைத்து, என்னிடம் திரும்பினார். “Let’s get in for check-up.”

எல்லாம் நல்லவிதமாய் இருப்பதாய் தெரிவித்து பின், prescription எழுதத்தொடங்க உள்ளிருந்த ஐயம் தீர மறுமுறை கேட்டுக்கொண்டேன். “குழந்தை நல்லா இருக்காதானே டாக்டர். எதுவும் பிரச்சனை இல்லையே..”

பெண்பால் குறித்து கேட்டதை பார்த்து ஒரு குறுஞ்சிரிப்பை உதிர்த்து, பதில் தொடர்ந்தார். “லண்டன்ல உங்களுக்கு முன்னாலையே தெரிஞ்சாலும், எங்க வாயால நாங்க அப்படி சொல்லக்கூடாதே, ஆமாம்தானே மாயா?” என்று புன்னகைத்தவர் இப்போது தீவிரமாய் தொடர்ந்தார். “How frequent is your urination these days?”

“I am not sure, doctor; 4 to 5 times may be.” ஒப்புதலாய் தலை அசைத்து, மேலும் தெளிவு படுத்திக்கொள்ள கேட்டார். “குழந்தையோட movements எப்படி இருக்கு? ஒரு நாளைக்கு எத்தனை தடவ feel பண்ண முடியுது?”

கேட்ட கேள்வியில், மலர் சேர்ந்த வாசமாய், முகம் சேர்ந்து ஒரு ருதுவான புன்னகை. “பேசினா பாடினாயெல்லாம் அடிக்கடி அசையறா, மத்தபடி  normalஆ, 4-5 times a day,” விடையில் புருவம் உயர கண்களில் ஆச்சரியம் மின்ன, மெல்லிசையாய் புன்னகைத்தவர், “இப்போவே hyperactiveஆ இருக்காங்களே, பரவால்லையே” என்று கூறி கையில் இருந்த பேனாவை வைத்து, விரல் கோர்த்து நிமிர்ந்தார். “She is completely okay, Mr. Shravan; and the baby is fine too.”

“Thank you doctor.”

“ஒரே ஒரு சின்ன விஷயம், அவங்களுக்கு amniotic fluid ஒண்டி கொஞ்சம் கம்மியா இருக்கு,” கேட்ட மாத்திரத்தில் முகம் கொண்ட புன்னகை கடலில் உப்பென கரைய, மேசைக்கடியில் என் மடிமீது கிடந்து நடுங்கிய விரல்களை பற்றின அவரது கைகொண்ட விரல்கள்.

இருவர் முகம் அரைந்த பதட்டத்தையும் நோட்டம் விட்டு, டாக்டர் சற்று இளகலாய் தொடர்ந்தார். “பயப்படற மாதிரி ஒரு கவலையும் இல்ல. Let me prescribe you l-arginine sachets, amniotic fluid அதிகமாக்கும். இதை tabletsஒட சாப்பிடுங்க, next time வரப்போ பார்த்துட்டு என்னனு பேசிக்கலாம். ஆனால், இதனால கவலைப்பட வேண்டாம். The baby’s growth is perfect,” என்று புன்னகையுடன் எடுத்துரைத்து எழுதியவர், கவனத்துடன் நிமிர்ந்தார். “And one more thing, bp கம்மி பண்ணனும். Pregnancy induced hypertensionநால நான் anti-hypertensives எதுவும் குடுக்கலை. Dietல concentrate பண்ணா போதும்.”

என்னை பார்த்து இந்நேரம் வரை பேசியிருந்தவர், அவரிடம் திரும்பி கண்டிப்பாய் கூறினார். “Don’t allow her to take coffee for more than one time a day; Apoorva சொன்னா உங்களுக்கு காபின்னா கொள்ளை ப்ரியம்னு, ஆனா கொஞ்ச நாளைக்கு கம்மி பண்ணிக்கலாமே!”

இதழில் எழுந்த குறுஞ்சிரிப்போடு ஓரப்பார்வை பார்த்து, ஒப்புதலாய் தலை அசைத்தார் இவரும். “கடைசி scanக்கு வந்தா போதும். இதே இடம் தான், ஆனால் நான் இருக்க மாட்டேன். இங்க doctor Radhika பாப்பாங்க, சரியா?”

“வேற டாக்டரா?” இவரோடு உண்டான நல்லுணர்வின் லயிப்பில் சற்று அமைதியடைந்திருந்த தவிப்பு, என்னுள் உயிர்ப்பித்தது.

“ஆமாம்மா, அவங்க என் friend தான்,” என்று கூறியவர் என் முகம் இருந்த ஆற்றாமையை கண்டுகொண்டு ஒரு சின்ன அட்டையை எங்கள் முன்னால் வைத்தார். “But you can contact me without any hesitation, என்ன help வேணும்னாலும்.”

“Thank you madam, கண்டிப்பா,” என்று நன்றி கலந்த பார்வையுடன், மாயாவிடமும் ஒரு புன்னகையை உதிர்த்து அங்கிருந்து நகர்ந்தோம்.

வெளியே வந்தவுடன், ஷ்ரவன் வாஞ்சையாய் என் கைப்பற்றினார். “ரொம்ப யோசிக்கக்கூடாது. குழந்தை நல்லா இருக்கானு டாக்டர் சொல்லிட்டாங்கல்ல..”

“இருந்தாலும்..”

“என்னம்மா..”

“கொஞ்சம் பயமா தான் இருக்கு,” என்றவளை அள்ளி அணைக்க முடியாதவாறாய் மனம் கொண்ட தவிப்பு கண்ணிலே தவழ, பறிதவிப்பாய் பார்த்தார்.

வண்டியில் ஏறிய பின், கிண்டலாய் rear view கண்ணாடியில் முகம் வெளுத்திருந்ததை கண்டவர், உற்சாகப்படுத்த முற்பட்டார். “என்ன கண்ணம்மா காபி சாப்பிடலாமா?”

போலியாய் முறைத்து தோளை தட்டினேன். “ஹலோ, என்ன கிண்டலா?”

“என்ன காபி வேணுமான்னு கேட்டது தப்பா?” அப்பாவியாய் முகத்தை வைத்து கேட்கவும், முன்னிருந்த முறைப்பு குறையாமல் சொன்னேன். “அப்புகிட்ட complain பண்ணேன்னா, அப்பறம் இன்னும் மூணு மாசம் வீட்ல காபி பொடியே இருக்காது. கூட இருந்து சாப்ட்டு tempt பண்ணக்கூடாதுன்னு, அவ வாங்கவே மாட்டா. உங்களமாதிரி ஒண்ணும் கிண்டல் பண்ணமாட்டா!” 

“இன்னும் கொஞ்ச நாள்ல ரெண்டு பேரும் சேந்து வீட்ட விட்டே விரட்டிடுவீங்க போலருக்கே! ஜாக்கிரதையா தான் இருக்கணும்.”