anbudai 20
anbudai 20
ஜுரம் வந்த குழந்தை போல் சென்னை தீப்பற்றாமல் எரிந்து கொண்டிருந்த மதிய வேளையிலும் ஓயாமல் வந்து வந்து போகும் கடலலைகள் வாசம் கமழ வீடு திரும்பியதும் என்னவென்று சொல்லத்தெரியாத அசதி ஒன்று உடலை ஆட்கொண்டது.
அன்று காலையே எங்களை இந்த பக்கம் அனுப்பிவைத்து அந்த பக்கமாய் அலுவலகம் கிளம்பியிருந்தாள் அபூர்வா. சென்று சற்று நேரத்தில் வருவதாய் சொல்லியிருந்தவள், நாங்கள் திரும்பிய நேரத்திற்கு சில மணிநேரம் முன்பாகவே திரும்பியிருந்தாள். தட்டிய கதவை திறந்தவள் கைகளில் அவளது கைபேசி கொஞ்ச, அலுவலக அழைப்பென செய்கை காண்பித்து அவள் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
வீட்டினுள் நுழைந்ததும் கண்ணால் கண்ட couchஏ சரணாகதியாய் அதனுள் புதைந்து கொண்டதை கண்டு உதட்டில் குறுஞ்சிரிப்போடு என்னையடைந்து அருகில் அமர்ந்து கொண்டவர் மறு நொடி தாமதிக்காமல் தரையில் அமிழ்ந்திருந்து மெத்தென ஆகியிருந்த கால்களை தன் கையினால் வாரி மடியில் இட்டு கொண்டார், கைவிரல்கள் ஆறுதல் தரும் அணைப்பில் பாதத்தினை சுற்றிக்கொள்ள, மனதினால் வேண்டியனவெல்லாம் வார்த்தையில் கேட்காது கிடைத்துவிட்டாற்போல், பரவசமடைந்தது உள்ளமதை சொல்ல வழியில்லா சொற்கள் கிடைக்காதபடியாய் ஆனது மனம்.
உள்ளம் கொண்ட உவப்பில் உவமை தேட வழியில்லாது, புன்னகை மலர நிறையாய் தரித்து திரண்டிருந்த வயிற்றின்மேல் கைவைத்து பின்னால் சாய்ந்த நேரம் அவரது அலைபேசி சிணுங்கத்தொடங்கியது.
அவர் கைதாங்கிய அலைபேசி displayவில் கேத்தனின் பெயர் ஆங்கிலத்தில் மிளிர, இதுவரை எதுவென்று காரணமில்லாது புன்னகைத்திருந்தவரது கண்கள் தற்போது காரணம் சொல்லத்தேவையேதும் இல்லாது கேள்வி கேட்டன.. ஒரு விதமான மிரட்சியோடு.
காலை டாக்டரை பார்க்கச் செல்லும் முன்பாய் அப்பு கோரியது போல் கேத்தனிடம் பேசுவதாய் சொன்னது ~ அதையே உடனடியாய் செய்யச் சொல்லி அப்போதே அவள் கெஞ்சலாய் கேட்டுக்கொண்டதும், அதற்கு ஷ்ரவன் எந்த பக்கமும் சாயாது பொறுமையாய் அவனிடம் பேசிவிட்டு எதுவாயினும் முடிவெடுத்து கொள்ளுமாறு சொன்னதும், இப்போது தானாகவே கேத்தன் இவரை அழைத்ததும் தற்செயல் தான் என்றாலும், இவையனைத்தும் பொருட்படுத்துவதும், ஒரு தெளிவிற்கு வித்திடுவதும் காலை சலனமடைந்த மனம் வாரணையோடு சமாதானம் ஆகிய வெள்ளமாய் அமைதியடைய ஆரம்பித்தது.
அழைப்பை ஏற்ற ஷ்ரவன், வார்த்தை ஏதும் பேசாது பார்வையில் மட்டுமாய் என்னை பார்த்து காதில் பொருத்திய அலைபேசியில் கேட்டதிற்கு பதில் பேசினார். “அப்படியா? வாயேன்.. வீட்லதான். இது என்னடா கேள்வி?”
அவன் கூறியது ஏதும் கேட்காத நிலையில், இவர் மேலும் பேசினார். “போய்ட்டு வந்துட்டோம்.” ஷ்ரவன் பேசிக்கொண்டிருக்கையில் அலுவலக அழைப்பை முடித்துக்கொண்டு வெளியில் வந்து இருவருக்கும் இடையே தரையில் அமர்ந்தாள் அபூர்வா. கண்களினால் அவளது முகத்தில் பதிந்திருந்த குழப்பத்தினை அளவெடுத்தவர், குரலில் அமைதி ஆரத்தழுவ தொடர்ந்தார்.
“நம்ம கிட்ட என்னமோ சொல்லணுமாம், வரலாமா கேக்கறான்..” என்றவரை பார்க்காது சோர்ந்தவளாய் என் மடிமீது தலை சாய்த்து கொண்டாள். அவளது நெஞ்சம் தாங்கிய வதைகள் மௌனத்தில்லாயினும், அவைகளின் ஓலம் கேட்க தேவையில்லது உணரும்படியாய் இருந்து, உள்ளம் தனை மறுகச்செய்தது.
வயிற்றில் சுமப்பது என் பிள்ளையானாலும், முதல் குழந்தை போல் என்னிடம் அளவளாவும் இந்த மனதின் வேதனையை சரிசெய்ய முடியாமல் இருக்க யாரால் முடியும்?
எல்லாம் சரியாகிவிடும் எனும் விதமாய் அவள் கூந்தலுள் விரல் நுழைத்து அவள் தலை கோதியதை என் மனம் கூறும் சமாதானமாய் எடுத்துக்கொண்டு, தலை நிமிர்த்தி அவரை கண்டாள். “நீ வர சொன்னியா?” அவள் மனம் கொண்ட நடுக்கம் குரலில் பிரதிபலித்தது.
கேட்டதும் ஷ்ரவனிடமிருந்து எதிர்ப்பு பலமாய் வந்தது. “அவனாவே, பேசணும், வரவா கேக்கறான்,” பார்வை என்மீதிருக்க பதில் அவளுக்கு வந்தது. அந்த அர்த்தமுள்ள விழிவீச்சில் அவர் பார்த்தனயெல்லாம், பந்தயப் புரவியாய் அவர் மனம் ஓடிக்கொண்டிருப்பதை காட்டின. ஒரு கை அவள் சிகையளக்க, நான் சோர்ந்திருக்கும் நேரம் தன் மென்மையான அரவணைப்பில் மனம் தவிக்கும் வாதை ஆற்றும் அப்பெரிய கையினை மற்றொன்றில் பூட்டி கொண்டேன்.
திட்டமிட்டது போல் இவர் அழைக்காது தானாகவே வருவதாய் கூறியிருக்கிறான் எனில் மனதில் ஒடும் குழப்பத்தை தீர்க்க தானாய் ஒரு அடி முன்வைத்திருக்கிறான் என்று தானே பொருள். அப்படியானால், ஒருவர் மேல் ஒருவர் வைத்துள்ள நேசம் சற்றும் குறையில்லாது இருந்திருக்கிறது. அவசரமாய் காலை நேரத்தில் அவன் மீது பொங்கிய சினத்தை மனதினுள் வைத்து ஆற்றியது இவன் வருகையின் சேதி! எதை விடவும் அவள் மேல் கொண்ட நேசத்தை மதிப்பவனிற்கு, அதனையும் மறைக்கும் அளவிற்கு இவன் மனம் குழப்பியது என்னவாக இருக்கும்!
அவர் கூறிய பதிலில் அபூர்வாவின் கண்கள் நொடி தாமதிக்காமல் குளமாகியிருந்தன. அதனை பார்த்த இவர் முகமோ பசுமை இழந்த இலையின் சாயலில்.. உயிர் பிரியும் காய்ந்த சருகாய் ஆகியிருந்தது. இருவருள் சமாதானம் சொல்ல வேண்டிய நிலையில் நான் இருந்தாலும், பெறாத நிலையிலும் அன்னை மடி தேடும் பிள்ளையாய் மடியினில் சுருண்டிருந்த அவளையும், மனம் கொண்ட குலைச்சலை வாய்விட்டு கூறவியலாத தவிப்பை தாங்கிய இவர் முகமும், கண்ட எனக்கு நிலைகுலைவே மிஞ்சியது.
எதுவும் பேசமுடியாது ஓய்ந்திருந்த நேரம், திறந்திருந்த கதவின் வழியாய் ஒரு நீல ஜீன்ஸ், நான் முதல்முறையாய் லண்டனில் இருந்து வாங்கிவந்த டீ ஷர்ட், அணிந்து உள்ளே வந்தவனோ என் காலருகில் அமர்ந்து தரையை வெறித்திருந்த அபூர்வாவை கண்டு கலங்கி உறையாமல், வானிருந்து குதித்த பனியாய் உருகியதை அங்கே நுழைந்த பொழுதில் தளர்ந்து அசந்த அவனது தோள்கள் கூறின.
இவர் அப்புவின் தோள்மீது கைவைத்து, அவள் உடலெங்கும் ஊடுருவிப்படர்ந்த நடுக்கத்தில் சிரத்தையை உணர்ந்தவளாய் அவனை பார்த்தவளது கண்களில் டன் கணக்கில் ஏக்கம் மட்டும் குடியேறியிருந்தது.
“உக்காருடா!” இவரது குரல் ஒலித்த ஓசையில் திரும்பியவன், அவர் பேசியதை உணர்ந்து அமர சற்று நேரம் பிடித்தது.
அந்நேரத்தின் நிசப்தம் நினைவுகளின் பேரிரைச்சலாய் அவன் காதுகளில் கேட்டு கொண்டிருந்ததை உணர முடிந்தது.
தன் சுவாசத்தின் வெப்பத்தையும் கையாண்டுவிட முடியாதவனாய் ஆற்றாமை நிரம்பிய ஒருவனாகவே தெரிந்தான். அங்கு அமர்ந்திருந்தவளின் கண்களின் கோர்த்த நீரினையும், அது இன்று போல் வேறென்றும் இருந்துவிட கூடாது என்பதை மனதிற்குள் தானே நிறுவிய பயமொன்று அவனை இயக்கிக்கொண்டிருந்தது.
அழுகை, கோவம், அத்தனையையும் வெளி காட்டாமல் மறைத்தல் என அனைத்து விதமான ஆறுதல் முறைகளும் அவளை கைவிட்ட நிலையில், வெறுமை ஒன்று ஆரத்தழுவி அமைதிபடுத்தியிருந்தது. அவள் கண்களோ உள்ளே அவளுணர்ந்த வெறுமையை ஆழமாய், அழுத்தமாய் பிரதபலிக்க, அங்கு அந்நேரம் வரை அகிலமும் விரைந்திருக்கும் காற்றைப்போலொரு அமைதி, நீட்சியாய்.. வதையாய்.. அனைத்திற்கும் மேல் அவ்விருவருக்கும் சொல்ல முடியாதளவு பாதிப்பாய்.
கேள்விக்கோ பதிலிற்கோ இடமொன்றும் தராமல், செய்தியாய் அவனாகவே ஆரம்பித்தான், இவரிடம். “ஷ்ரவன், உங்க கிட்ட பேசணும்..”
இத்தனை நேரமும் அவனை நெற்றி சுருங்க கவனித்திருந்தவர், இப்போது உதட்டில் புரிதலோடான புன்னகையோடு பதில் அளித்தார். “பேசலாமேடா.. அதுக்காக தானே வந்திருக்க? என்னாச்சு? சொல்லு!” ஒன்றும் புரியாமல் போயிருந்தாலும், அதனை வெளியே காட்டாமல் இவ்வாறு இருந்தாரா இல்லை உண்மையில் அவருக்கு பதைபதைப்பு இல்லையா என்று என்னால் அனுமானிக்க இயலவில்லை.
முகத்தில் அரைந்திருந்த பதட்டம் கலந்த விசாரம் அவனை சொல்வதற்கில்லாமல் படுத்தியது. சொற்களை வெளிக்கொணர தவித்தவனாய் தொடங்கினான். “வந்து.. எனக்கு அப்புவ பிடிச்சுருக்கு… அவளுக்கும் தான்.” என்ன சொல்ல விழைந்தான் என்பதை அதைவைத்து புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் காதலிக்கிறான், அவளும் தான்; இந்த வீட்டில் உள்ள அனைவரும் அறிந்த உண்மை இது. இப்போது என்ன இந்த தயக்கமும், பதட்டமும்?
“அதான் தெரியுமேடா..” பதிலாய் இவர் கூறிய சொற்கள் இரண்டே ஆனாலும், அவை அவன் முகத்தில் தெளித்த நல்லுணர்வு பன்மடங்கிற்குரியவை. இவர் கூற, என் மடியில் கன்னம் புதைத்து ஏக்கத்தின்னுடனான விழிவீச்சில் அவள் அவனை பார்த்து கொண்டிருந்தாள். இவள் பார்வையில் அவனை மேலும் கூற ஊக்கியதை போல உணர்ந்தவன், ஷ்ரவனிடம் முழுதாய் திரும்பினான்.
அதன்பின் பேசுவதற்கு அவன் எடுத்துக்கொண்ட சில விநாடிகள், அவனது மனத்தின் மீட்புக்கென்று புரிந்தது. ஓசையின்றி எங்கோ தரைமீது எதை பார்க்கிறோமென்றே தெரியாமல் ஒரு சில நொடிகள் வெறித்தவன், என்புறமாய் அடுத்த நொடி அவன் விழிகளை சுழலவிட்டு, பின் அவரிடம் திரும்பினான். “உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்கு தானே ஷ்ரவன்? உங்க தங்கைய எனக்கு கல்யாணம் பண்ணி தருவீங்க தானே?”
முன் பின் யோசிக்காமல் பேசிவிடும் குணமெல்லாம் கேத்தனிடம் கிடையாது. அவன் கேட்ட கேள்வியில் உண்டான அதிர்ச்சி அலைகளை அண்ணா, தங்கை இருவரின் முகத்திலும் அப்பட்டமாய் காணமுடிந்தது. கேட்ட ஆச்சரியத்தில் என் முகம் காண திரும்பியவருக்கு, நான் அதிராமல் இருந்தது அதை விட பேரதிர்ச்சி.
நேரம் காலம் இல்லாது என்னை பேசும் கேலிகளில் எல்லாம் தழைந்து ஒலிக்கும் அவனது தெளிவான வல்லொலி மிக்க குரல் தற்போது குறைந்தே ஒலித்தது அடுத்து அவன் தொடர்ந்ததில், இவர் ஏதும் பதில் பேசாத போதே. “நான் இப்படி திடுதிப்புன்னு உங்ககிட்ட கேக்கறது சரியா தப்பான்னு கூட எனக்கு தெரியலை. ஆனா, இதை பத்தி பேசாம delay பண்ண என்னால முடியலை.”
“கேத்தன், என்ன சொல்றங்கறத தெளிவா சொல்லு. நீ சொன்னாதான் இங்க புரியும். சும்மா இப்படியே இருந்து எல்லாரையும் கஷ்டபடுத்தாதே!” வாய் திறந்து நான் பேசும் முன்பாய், அபூர்வாவின் வாய் வழியே வந்த ஓசை அறையில் மிதமிஞ்சியிருந்த மௌனத்தை கல்லெறிந்து கலைத்தது போல் அதிரச்செய்தது.
மீண்டுமொரு முறை பெருமூச்சிழுத்து கொண்டவன், அவரை பார்த்தான். “நான் இது வரைக்கும் என் அப்பா அம்மா கிட்ட சொல்லாம எதுவும் செஞ்சதில்ல.. ஆனா அப்புவும் நானும் ஒருத்தர ஒருத்தர் நேசிக்கறத இன்னிக்கு வரைக்கும் என் வாயால அவங்க கிட்ட நான் சொல்லலை. சம்பாதிக்க ஆரம்பிச்சதுலேந்து, மாசாமாசம் வாங்கற சம்பளத்துலேந்து கூட என்கிட்டேர்ந்து எங்க அப்பா அம்மா வாங்கிட்டது கிடையாது. நான் அவங்களுக்கு இன்னி வரைக்கும் எதுவும் செஞ்சது இல்ல. அப்பு பத்தி நான் இன்னும் சொல்லாம இருக்கறதுக்கான காரணம் இது இல்ல.. நீங்க எல்லாம் இதை எப்படி பாக்கறீங்க எனக்கு தெரியலை, ஆனால் எனக்கு அப்பா அம்மாக்கு, பெரியம்மாக்கு நான் எதுவுமே செஞ்சதில்லைன்னு ஒரு guilt ரொம்ப நாளா இருக்கு. அது மட்டுமில்லாம, உங்க கிட்ட நேர்ல பார்த்து பேசாம, அப்புகிட்ட பழகறது எனக்கு சரின்னு படலை. ஶ்ரீ கிட்ட ஏற்கனவே நானும், உங்ககிட்ட அப்புவும் பேசியிருந்தாலும் நான் உங்ககிட்ட இத பத்தி பேசறது தானே சரியா வரும்?”
தன் மனம் கொண்ட குற்ற உணர்வோடு இத்தனை நாள் இருந்திருக்கிறான் என்று அவன் கூறியதும் கண்களில் மணிமணியாய் உருவெடுத்தது என் மன தேக்கம் முழுவதும். உலகில் உள்ளவரை கடவுள், பெற்றோர், ஆசிரியர், நண்பன் என யாருக்கும் பயப்படவில்லையானாலும், நம் மனதிற்கு பயந்தால் மட்டுமே போதும்.. you just have to be fair to yourself, at least, என்று சிறு வயதில் கைப்பிடித்து நடந்து சென்றநேரமெல்லாம் அப்பா போதித்தது அவரது குரலிலேயே காதில் அலைபாய்ந்து மனதை நெருடலாய் உராய்ந்தது.
இத்தனை குழப்பத்தை, கலக்கத்தை, பயத்தை மனதினுள் புதைத்த படி சிரித்து பழக அவனுக்கு எத்தனை கடினமாய் இருந்திருக்கும் என, அபூர்வா மனதினால் உணர்ந்ததையும் அவள் கண்களில் பெய்திருந்த சாரல் வலியுறுத்தியது. இந்நேரம் வரை இவரை கண்களில் பார்த்து பேசியிருந்தவன், இப்போது அவன் மனம் கொண்ட இரைச்சலும், நிலை குலைவும் விழி வழியே தெரியும் வண்ணமாய் அபூர்வாவிடம் திரும்பிருந்தான்.
“இது நமக்குள்ள நடக்காது, பொருந்தாதுன்னு தெரிஞ்சு இருந்தா எனக்கு உன்னை பிடிச்சுருக்குன்னு உன்கிட்ட நான் சொல்லியிருக்கவே மாட்டேன் அபூர்வா! After all you didn’t have belief in me all these daysஇல்ல?” குரல் இடுங்கிய தொனியும், அவன் கண்கள் கலங்க அவளை பார்த்த பார்வையும் அவளை மேலும் கலங்கச்செய்தன.
அவளை அப்படியும், இவனை இப்படியும்; செய்யாத குற்றத்திற்காக இருவர் குலைந்து நிற்பதையும் காண என்னால் முடியவில்லை. மடியில் கிடந்த குழந்தையாய் இந்நேரம் வரை அவளை மட்டும் அணைத்திருந்த கைகள், இப்போது அவனையும் கட்டியணைத்து கொண்டன. “அப்படியெல்லாம் இல்லடா.. நீயா நினைச்சுக்காதே. உன்ன நம்பாம தான், எங்ககிட்ட வந்து நீங்களவாது பேசுங்க, அவனுக்கு என்ன பிரச்சனைன்னு சொல்ல மாட்டேங்கறான்னு சொல்லுவாளா?” நான்கூறியதை கேட்டு தலையை நிமிர்த்தவன், அடுத்ததாய் ஷ்ரவனின் குரல் கேட்டு, மேனி சிலிர்ந்து பார்வையில் கூர்மையுடன் அவரை பார்த்தான்.
“உனக்கு உங்க அப்பா அம்மாகிட்ட எதுவும் சொல்லலையேன்னு கவலை, அவளுக்கு நீ எதுவும் வெளியில சொல்லாம நிம்மதி கெட்டு அலையறன்னு கவலை.. உங்க ரெண்டு பேரையும் என்ன பண்ண தேவலை?” மறையும் முன்பாய் வானெங்கும் சிதறும் சிவப்பாய் முகம் நிறைத்த புன்னகை ஒன்று அவர் முகத்தில்.
அவர்கள் யாரும் வாய் திறவாத நிலையில், நான் கூறிவிட்டேன். “கல்யாணம் பண்ணா தேவலை!”
திருமணமென்று கேட்டு அவன் முகத்தில் ஒளிர்ந்தது ஒரு குறுஞ்சிரிப்பு. கண்ணிமைக்கும் நொடியில் எதையோ உணர்ந்தவன் கடைக்கண்ணில் எங்களை பார்த்தான். “நான் அவளை கேக்கறப்போ எல்லாம் எங்க அண்ணாவ கேக்காம உன்கிட்ட சரி சொல்லமாட்டேன் மாட்டேன்னு சொல்லிட்டா..” இப்போது அதே பார்வையில் அவளை, “இப்போ உன் அண்ணா முன்னாடியே கேக்கறேன், கல்யாணம் பண்ணிக்கலாமா?”
அவன் கூறவதை சொல்லி முடிக்கும் முன்பாகவே மறையும் முன்பாய் வானெங்கும் தன் நிறம் தீட்டிச்செவ்வானமாய் குழையும் அழகாய் சிவந்திருந்தன அவளது கன்னங்கள்.
சம்மதம் சொல்ல வாயில் நின்ற சொற்களை தாங்கி பிடித்து, கண்களில் ஒரு கணம் இவரை பார்த்தாள். சம்மதம் தெரிவித்தது அவரது பார்வை. கணக்கில்லாது கரையை காதலித்து தூது செல்லும் அலைகளாய், அவள் சிறிய வடிவான முகத்தில், உதட்டிற்கு ஈடாய் முகமும் சிவக்க; ஒரு அசாதரணமான அசட்டு புன்னகை அவள் முகத்தில். “பண்ணிக்கலாம்.. சீக்கிரமா!”
******
அன்றிரவு ஷ்ரவன் bangalore செல்ல வேண்டியிருந்தது. மாற்றுதல் ஆகி வந்த நாட்களில், இங்கு எங்களோடு அவரிருந்ததை காட்டிலும் வெளியூரிலும், பயணங்களிலும் இருந்ததே அதிகம்.
Entrepreneur என்றாகி விட்டால் இப்படியெல்லாம் இருக்கத்தானே செய்யும்? இதனை கூட செய்யாமல் எவ்வாறு ஒரு firmஐ நிர்வாகம் செய்ய இயலும்? அதுவும் சென்னையில்.. partner ஒருத்தரும் இன்றி?
நம் நிர்வாகம் எனில் நாம் தானே கவனித்து ஆக வேண்டும். லண்டனில் இருந்த வரை நாங்கள் பிரிந்து இருந்ததில்லை, அலுவலகம் செல்லும் நேரம் தவிர்த்து.
அங்கிருந்த மாதக்கணக்கான நாட்களில் எல்லாம் எங்காவது அலுவலக சகிதம் சென்றாலும், மிக அருகில் இரண்டு நாட்களுக்குள் திரும்பும் படியாய் தான் இருக்கும், இங்கு வந்த பின் உயந்த பொறுப்புகளில் எல்லாம் ஒரு வாரம், அதற்கும் மேல் என பயணத்தின் நாட்களும் அதிகரித்தன.
அறையில் இருந்து வெளியேறும் தருணம் கையில் இருக்கும் புத்தகத்தில் மூழ்கியிருப்பவளை பெயர்ச்சொல்லி மெல்லினமாய் அழைத்து, என்னவென்றால் ஒன்றுமில்லை ஒரு சிறு புன்னகையுடனான தலையசைப்பு பரிசாய்; கதவோரத்தில் அவர்.
இத்தனை நாட்கள் ஆயினும், இத்தனை தூரம் வந்திருந்ததிலும் எங்களுள் இருந்தது அங்கேயே தான் இருந்தது… அப்படியே தான்.. எத்தனை வேலைகள் இருந்தாலும் நேரம் தவறாமல் அலைபேசியில் அழைத்து சாப்பிடுமாறு கூறுவதிலும்; நாள் முழுதும் பேச முடியாமல் போயிருந்தாலும், அவர் தூங்கியிருந்தால் எழுப்பிடவேண்டாமென சிறு விரல்கள் ஆசையாய் படபடக்க ஒரு குறுஞ்செய்தியில், சிறு நலன் விசாரிப்பில் நாள் கதைகளை அவரிடம் பகிர்ந்துவிடுவதிலும், அழகாய்.. அமைதியாய்.. காதலாய்.