anbudai 21

இயற்கை இரைத்த காலை வெளிச்சத்தின் கணிசமான பங்கை ஒண்டியாய் ஜன்னலை திரையிட்ட உரை மூலமாய் அறைக்குள் உலவவிட்ட படியாய் புலர்ந்திருந்தது அக்காலை. தினமும் காலை கண்களை தட்டி எழுப்பும் அந்த வெளிச்சமே இன்று மாறுதலாய், படுக்கையறையில் இல்லாமல் கிச்சனில் நின்றிருந்த எனக்கு துணையாய் உள்ளடைந்து பரந்திருந்தது; அங்கு எதிலும் கூடியும், சிதறியும் இருள் போக்கியிருந்தது.

எழுந்த நொடி காலியாகி இருந்த அவர் இடத்தை பார்த்த போதும் ஷ்ரவன் இன்னும் திரும்பவில்லை என்பதை உணர்ந்திருந்த மனம், தயாரித்த காபியின் அவர் பங்கு ~அதே காபி, அப்படியே; சர்க்கரையின் அளவு மட்டும் குறைவாய் அவரது கோப்பையில் தேங்கி நிற்க, அதனை விரலணைப்பில் நிறுத்தி, சுவைக்க ஷ்ரவன் இங்கில்லை என்பதை உணர தாமதமானது.

அவர் இங்கில்லாவிடினும் ஏனோ தனிப்பட்ட கோப்பையில் ஒருவருக்கான காபி தயாரிப்பானது சில நாட்களாய் இங்கு இருந்ததில்லை.

காலை காபியானால், தயாரிப்பது யாரானாலும் இருவருக்குமாகவே செய்து பழக்கம். தலை போகும் அவசரம், உடனடியான வேலைகளானாலும், காலை காபியினுடனான வேளை, அந்த இதம் அளிக்கும் மௌனமாகவும், நாநனைக்கும் வெதுவெதுப்பிலும், அவர் முகம் காணும் புன்னகையிலும், அப்போது நாங்கள் ஏதும் பேசாவிட்டாலும் அந்த வேளைக்கான காபியை போல் அந்நேர உடனிருத்தலும் எங்கள் இருவரின் தினசறி தேவை.

இது வேண்டுமென்று அவர் கேட்டதும் இல்லை; இது இப்படித்தான் என்று நான் தந்ததும் இல்லை. அன்றாட தேவை என்பதைத் தாண்டி அதுவொரு பழகிய செயல். எங்கள் இருவரின் வாழ்க்கை முறை. உண்பது, உடுப்பது, உறங்குவது, சுவாசிப்பதைப் போன்றொரு அனிச்சைச் செயல்.

இதை ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளால் பதில் வகுத்துவிட முடியாதென்பதை அறிந்தும் எனக்குள் நானே பலமுறை கேட்டதுண்டு. என்றைக்கும் ஒரு நாள் தொடங்க அவசியமாய் இருந்தது துளி துளியாய் தான் கொண்ட சுவையை நம்முள் ஊறச்செய்யும் காபியே ஆனாலும், இப்போதெல்லாம் அதுவும் அவர் உடனிருந்து அதை சுவைக்கும் நேரம் தான் என்பதைப் போல் ஆகியிருந்தது வாழ்க்கை.

என் கோப்பையை மட்டுமாய் கையில் ஏந்தி கூடத்திற்கு வந்த கணம், couchஇல் இருந்த cushion ஒன்றை மடியில் புதைத்த படி, தூக்கம் நிறைந்த கண்களை தன் கை கொண்ட விரலினால் தேய்த்த படி அமர்ந்திருந்தாள் அப்பு. இரவு நான் உறங்கச் சென்ற நேரம் அவளுக்கு வேலை இருப்பதாய் சொல்லி, தாமதமாய் தூங்குவதாய் சொல்லியிருந்தவள் வேலையின் நடுவே அசதியடைந்து அவள் தன்னிலை அறியாது சாய்ந்துப்போய் தூங்கியிருக்கிறாள் என்பதை அவளை சுற்றிலும் இரைந்திருந்த காகிதங்களும், அதனை சூழ்ந்திருந்த பென்சில் படையும் உறக்கச் சொல்லின.

அவள் கைகொண்டு தேய்த்த அவள் விழிகளிரண்டும் சின்னஞ்சிறு மதிநிகளாய் சிரித்தன, சேர்ந்தாற்போல் இசைந்தது அவளது தூக்கக்கலக்க குரல். “குட் மார்னிங் ஶ்ரீ!!!” சிறு பிள்ளையின் சாயலாய் தன் கை மடக்கி நெற்றியில் பதித்து சல்யூட்டுடனான அவளது காலை வணக்கம் உள் கனன்றிருந்த எதோவொரு யோசனையை தகர்த்து பதில் புன்னகைக்கு வித்திட்டது.

புன்னகைத்த என்னை பார்த்த அவளது முகம் வெயில்நேர தொய்வைக்காணும் இலையாய் வாட, அதனை ஏனென்று கேட்கும் முன்பாய் அவளே கூறிவிட்டாள். “கபாலி கோவில் கோபுரம் அளவுக்கு வேலை இருக்கு ஶ்ரீ. தூக்கத்துல தெரியாம தூங்கி போய்ட்டேன்!”

அந்தச் சிணுங்கலுடனான புகாரை கேட்டு சிறிதாய் புன்னகைத்து அவளை அடைந்தேன். “பரவால்ல கொழந்த, இப்போ freshஆ வேலை பாக்கலாம் இல்ல? எழுந்து பல் தேய்ச்சுட்டு வா, காபி தரேன்.” என்னை போல் காலை எழுவதே காபிக்காக தான் என்று இருக்கும் மற்றொரு ஜீவனை படுக்கையை விட்டு எழுப்ப, வேறு என்ன சொல்லி சமாதானம் செய்ய இயலும்?

நெருங்கி நின்றவளின் இடை சாய்ந்து கண்கள் மூடி கொண்டாள், தூக்கம் நிறைந்த கண்களோடு தாயை அண்டி கொள்ளும் குழந்தைப் போல அள்ளி அணைத்து, நிறைந்து வளர்ந்திருந்த வயிற்றையொட்டி தலை சாய்த்து கொண்டாள். ஒரு கையினால் அவள் அணைப்பிற்கு பதிலளித்து மறு கை ஏந்தியிருந்த கோப்பையை உயர்த்திய நொடி, என் மடியிலிருந்து தலை நிமிர்த்தி அபூர்வா என்னை பார்த்தாள். கண்களில் தூக்கம் இருந்தாலும் அதனை மிஞ்சிய ஒரு குறுகுறுப்பு தென்பட்டது.

நான் கேட்கும் முன்பாய் அவளே அதனை விளக்கவும் செய்தாள். “ஶ்ரீ நீங்க தூங்கிட்டீங்க. ராத்திரி, ஷ்ரவன் போன் பண்ணான். இன்னிக்கு சாயங்காலம் வந்துடுவானாம்.” கேட்ட வார்த்தைகளில் உதட்டை நிறைத்த புன்னகையை முகம் கண்ட அவள் அறிந்திருப்பாள். ஷ்ரவன் வீட்டில் இல்லாது போய் நாளையோடு ஒரு வாரம் ஆகிவிடும். தினமும் இரவினோடு கோர்க்கப்பட்ட அலைபேசி அழைப்புகளே மனதின் ஏக்கங்களை குறைக்கும்படி இருந்தாலும் நேரில் அவர் காணும் பார்வைகள் எல்லாம் இல்லாது நீண்டிருந்த நாட்களில் எல்லாம் யான் கொண்ட வெறுமை போக்கிடவே என்னுடனே பிரயாணித்திருந்த என் பிள்ளையே எனக்கு கிடைத்த வரமாய் இருந்த நாட்கள்.

முழுக்க முழுக்க தனியாய் இருந்துவிட இல்லை என்றாலும் தனித்திருந்த சில நேரங்களில் எல்லாம் ஏன் என்று சொல்ல முடியாத மாதிரியான ஒரு ஆற்றாமை, மனதை அழுந்த பிய்த்தெறிந்து கொண்டிருக்க, அதனை மென்மையாய் வருடி மனம் கொஞ்சும் மயிலிறகாய் குழந்தை அசைந்தும் என்னை தன்னுடன் பேச துணைக்கழைத்தும், மனம் கொண்ட துயர் போக்கி, தன்னை சுமப்பவளை காரண காரியமில்லாது பைத்தியம்போல் புன்னகைக்க வைத்ததெல்லாம் தன்னால் முடிந்தவரை குழந்தை செய்து கொண்டிருந்தாள்.

இது போக அலைபேசியில் தன் தந்தை குரல் கேட்கும் நேரமெல்லாம் உண்டாகும் அசைவு வேறு. 
என்னவென்று கேட்டால் பதிலாய் மெற்றுமொரு விதமாய் செல்ல உதை. இவளை வயிற்றில் சுமந்திருக்கும் இந்நாட்களின் சொல்லில் இடமுடியாத பேரின்பமெல்லாம் எனக்கு மட்டுமே, அவரிடம் வாயால் சொன்னாலும் உடலாலும் உள்ளத்தாலும் எனக்கு மட்டுமே உரிமை, என்பதிலும் தனி கர்வம் ஒன்று ஆட்கொண்டிருந்தது.

என்றேனும் கவலைத் தோய மனம் வெதும்பி தலை சாய்த்து படுத்திருந்தாலும் என்னுள் புரண்டும் அசைந்தும், மணலில் புதைந்த நீரென ஊடுருவிருந்த பாரங்களெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் காணமுடியாது மறைந்திருந்தன அவளது சொற்களில்லாத பேச்சில். அவ்வாறே நொடிக்கு நொடி அவளைக்காண மனதின் பரவசமெல்லாம் பெருகின. முன்பைப்போல் பயம் ஓங்கி உயராது சற்றே அடக்கமாய் இருந்து, பரவசத்தையும் அவளைக்காணும் ஆனந்தத்தை மட்டும் ஒசத்தியது மற்றுமொரு ஆறுதல்.

இரண்டு நாட்கள் முன்னர் என் பிறந்தநாள் அன்றும் FaceTimeஇல் பேசமுடியாது, அலைபேசியிலேயே கிடைத்தது காதலெல்லாம் ஒன்றான வாழ்த்தோடு. இன்று இரவிற்குள் வந்துவிடுவார் என்றது கைகால் புரியாது போனது என்னவோ உண்மை என்றாலும், பரவசத்தை மிஞ்சிய ஒரு உணர்வு மனதின் விளிம்பை எட்டியிருந்தது.

காதலிற்கு இல்லாத எல்லையை என் மனதிற்கும்
என்றும் நான் கண்டதில்லை. இன்று ஏனோ உடலெங்கும் பாயும் உணர்ச்சியாய் எங்கும் நிறைந்து விளிம்பில் நின்றது போல் மனதை அரித்தது ஏனோ.

அன்றிரவு அபூர்வாவும் நானும் தனியாய் உணவை முடித்துக்கொண்டு, அவள் தன் அறைக்குச் சென்று தன் வேலைகளை பார்த்திருந்த நேரம் வாசற்கதவு திறக்கும் ஒலி கேட்டு, தலையை வெளியே நீட்டி பார்த்த எனக்கு எதிர்பார்ப்பே உருவமாய் ஷ்ரவன் உள்ளே நுழைந்தது பேராறுதல்.

வீடு திரும்பிய உடன் சொல்லிவிட வேண்டும் என்று மனதில் தேங்கியிருந்த அனைத்தும் கணத்தில் எங்கோ கரைந்திருந்தது, அந்த மனிதர் முகம் கண்ட விநாடி. நான் எதுவும் கேட்கும் முன்னர், முகம் தாங்கிய புன்னகையை கண்டிருந்தார். குளித்துவிட்டு வருமாறாய் சைகையில் காட்டியவர் குளியறைக்குள் புகுந்து கொண்ட பின், நடை தளர்ந்து சிறு அடிகளில் மெத்தையை சென்றடைந்து இதமாய் தாங்கிய அதனுள் புதைந்து கொண்டேன்.

காத்திருந்து கடந்த நிமிடங்களில் எல்லாம் முன்பிருந்த புன்னகை முகத்தில் இல்லாது, மூளை எதையோ யோசிக்க ஆரம்பித்திருக்க, அருகிலிருந்த மேஜை மீதான அலைபேசி தன் அதிர்வில் திணற யான் கொண்டிருந்த சிந்தனையை தகர்த்து அதனை கையில் எடுக்க வித்திட்டது. கேத்தன் அவனது குறுந்தாடி முகம் காட்டி புகைபடத்தோடு displayவில் தெரிய சிந்தனையில் மூழ்கியிருந்த மனம் தெளிந்தது.

“ஓய், ஹெலோ, ஷ்ரவன் வந்தாச்சா? அவர் phoneக்கு அடிச்சேன், அவர் எடுக்கலை.” அழைப்பை ஏற்று காதில் பொறுத்தியதே தாமதம். அவனது குரல் ஆரவாரமாய், அவசர அவசரமாய் காதில் பாய அனைத்தையும் மீறி உதட்டை கீறிக்கொண்டது ஒரு சிறிய புன்னகை. நீட்டியிருந்த கால்களை மெதுவாய் என்னை நோக்கி இழுத்து மடித்துக்கொண்டு பதிலளித்தேன் அவனிடம். “He is in the shower. இப்போதான் வந்தார். என்னாச்சு?”

“ஓஹோ! சரி நான் அவர்கிட்ட அப்பறமா பேசிக்கறேன். ஒரு வேலை இருக்கு, வெளில போகணும்.-“

பேசுவதை கேட்க கேட்க கேள்விக்குறியாய் இருந்த மூளையெல்லாம் ஆச்சரியக்குறியாயனது. அவன் பேசியது அப்படி. “என்ன இவ்வளோ அவசரம்? இந்த நேரத்துல?”

“இது வேற விஷயம். சிவா வீட்டுக்கு போறேன், Bye.”

அழைப்பு துண்டிக்கப்பட்டது. என்ன அவசரம் என்று அறிய அவா இருந்தது உண்மை தான் என்றாலும், அவரிடம் அவசியமாய் பேச என்ன இருக்கும்? அதுவும் அவருடன் அப்புறமாய் பேசிக்கொள்வானாம். கூறிய ஒன்றும் புரியாமல் அமர்ந்திருப்பதும், அலைபேசியை பார்த்து முறைத்துக்கொண்டிருப்பதையும் தன்னிலை அறியாமல் ஷ்ரவன் அருகில் வந்து அமர்ந்த போதே உணர்ந்தேன்.

நெற்றி நெறித்திருப்பதை உணராதிருந்த கணமெல்லாம் முகம் பதிந்திருந்த சுருக்கங்களை கண்டு முகத்தில் கிறுக்கியிருந்த புன்னகையோடே பார்வையில் அளவிட்டிருந்தார். ஊடுருவிப்படர்ந்திருந்த நிசப்தத்தில் நாட்கள் கணக்கில் அவ்வறையின் சுவர்கள் ஒலிப்பதியா குரலில் இசைந்தது. “என்ன யோசனை?”

விழி உயர்த்தி அவர் முகம் பார்த்த போது, சிரத்தை உணர்ந்திருந்தேன். கேட்கவில்லையானாலே சகலத்தையும் ஒப்பிக்கும் சம்பிரதாயம். கேட்டாயிற்று என்றான பின், கூறியாக வேண்டுமல்லவா! கதையென்றாலே அவ்வாறு, complaint என்றால்!

“இந்த கேத்தன் இல்லமா? மெனக்கெட்டு கூப்ட்டுட்டு ஒண்ணுமே சொல்லாம, அப்பறமா உங்கக்கிட்ட பேசிக்கறேன்னு phoneஅ வெச்சுட்டான்…” கூறியதை முகமேந்தியிருந்த புன்னகை மாறாமல் கேட்டிருந்தவர், உடனடியாய் பதிலளித்தார். “எதாவது சும்மாவா இருக்கும் இதை ஏன் நீ இவ்வளோ யோசிக்கற?”

“சரி யோசிக்கலை, போதுமா?” பதிலாய் தலையசைத்தவரிடம், அடுத்த கேள்வியை தொடுப்பது தானே உத்தமம்! “Conference நல்ல படியா போச்சா? மறுபடியும் கூட போகணும் சொன்னீங்களே, எப்போ அது?”

அலுப்புடனான நீள்மூச்சொன்றை அவிழ்த்து பின் தொடங்கினார். “நல்லாதான் போச்சு.. அடுத்தது, வர மாசம் பத்து, பதினொண்ணு.. ஹைதராபாத் தான்.” கேட்ட வார்த்தைகளின் பொருள் அதன் இசைவினிலேயே பதிவானது. அப்படியானால், delivery dateஇற்கும் முன்பாக தான். முதல் பிரசவம் என்றாலும், ஷ்ரவன் உடனிருக்க வேண்டுமென்று மனதில் அப்போது வரை தோன்றியிராத எண்ணம், அவர் அங்குதான் இருக்கப்போவதாய் தெரிந்தது, காது கேட்ட செய்திக்கும் மனம் இனித்தது. கொஞ்சமாய் ஏங்கவும் செய்தது. அப்போழுது அந்த யோசனை தேவையானதில்லை என்று தோன்ற அதனை உதிர்க்க ஷ்ரவன் மறுதரம் பேச தொடங்கவே தேவையாய் இருந்தது. “ஶ்ரீ, நாளைக்கு கார்த்தால ஆபீஸ் போகணும். ரெண்டு பசங்கள வர சொல்லியிருக்கேன் சொன்னேனே..”

நினைவில்லிருந்து தற்காலிகமாய் அகன்றிருந்தாலும், கூறியதை கேட்டவுடன் மனமறிந்த கதையைப் போல் ஆமாம் போடத்தொடங்கியது மனம்.

தலையசைவை கடைக்கண்ணில் கண்டவர், மேலும் கூறினார். “Resume பார்த்தே ஓகே மாதிரி தான் இருக்கு. அப்புக்கு தெரிஞ்ச பசங்க தான். நல்ல பசங்க, இப்போதைக்கு வேலை ரொம்ப தேவையா இருக்குன்னு சொன்னா; சும்மா formalityக்கு பேசிட்டு salary negotiate பண்ணிட்டா போதும்,” என்றவரின் பெரிய உள்ளங்கை என்னதின் மேல் வந்து அமர்ந்திருந்தது. அதனை பார்த்த கண்கள் அவர் மேல ஏறிய போது அவரது மென்பார்வையும் என்னையே தழுவியிருந்தது… எதோ பற்றுதலுக்கான வழியைப் போல். காரணம் ஏதும் தேவையில்லாது இருந்தது அதன் இதம் தந்த களிப்பில்.

வார்த்தைகளில் ஒன்றும் பேசாத போதும் இறுக்கமாய் அண்டிக்கொண்ட பெரிய விரல்களோ குரலில் அவர் சொல்லி விடாததை திரைகளன்றி தெளிவாய் கூறியது. மற்றொரு கை கொண்டு என் மேல் அண்டியிருந்த அவர் கையின் புறத்தை தட்டி மெல்ல அழைத்தேன். “என்னமா ஆச்சு?”

அவரிடம் திரும்பியது சிரத்தை மட்டுமில்லை, வார்த்தைகளும் தான் என்பதைப் போல் பின் தொடர்ந்தார். “ஒண்ணும் இல்ல. நாளைக்கு என் கூட வரியா.. ஆபீஸ் வரைக்கும்..”

இதற்குத்தான் இத்தனை தயக்கமா! கேள்விக்கு தவறான பதிலுண்டு. இங்கு கேள்வியே அல்லவா தவறாய் உள்ளது. “வான்னு சொன்னா வர போறேன். இதுக்கு போய் யாராவது இப்படி கேப்பாங்களா?”

செய்ததை உணர்ந்தது போல் ஊர்ந்து போனது ஒரு சிரிப்பு, அவர் முகத்தில். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, கீழே குனிந்து என் முகமேந்தி நெற்றியில் இதழ் பதித்தவர் அதன்பின் ஒன்றும் பேசாது 
மெத்தையில் இருந்து ஒரு விநாடியில் கால்களுக்கு உயர்ந்து, கதவிற்கு நகர்ந்து விளக்கை அணைத்துவிட்டு அவரும் என்னருகில் சாய்ந்து கொண்டார்.

பெரிதாய் நல்லுறக்கம் இருந்து விடவில்லை என்றாலும், முன்பிருந்த ஒரு வாரத்தின் அளவினதை விட சற்று செறிவாய் இருப்பதாய் உணர்ந்தேன் மறுநாள் காலையில்.

ஆறரை மணி சிறுபிள்ளை வெளிச்சம் ஜன்னல் திரை தாண்டி துயில் கலைத்த நேரம், அங்கு அருகில் ஷ்ரவன் என்னோடு இல்லை. இரவு வீடு வந்து சேர்ந்ததே தாமதம், இதில் காலை ஏழு வரை கூட தூங்காமல், ஏங்கே சென்றுவிட்டார் இந்த மனிதர். தூக்கத்திற்கும் இவருக்கும் அப்படியென்ன ஏழாம் பொருத்தம்!

என்னிரு கைகளுக்குள் வரயறுத்து முடிய மறுத்த கூந்தலை அள்ளிக்கொண்டு, எழுந்து அமர்ந்த விநாடி குளியலறையில் இருந்து வெளிப்பட்டார் ஷ்ரவன். தூக்கத்தின் பிடியில் அமர்ந்திருந்த என்னை கண்டு, “good morning,” என்றவர் அலமாறியில் இருந்த ஒரு சட்டை, பாண்டை கையிலெடுத்தார்.

“அது எப்படி? அஞ்சு மணிநேரம் கூட முழுசா தூங்காம கார்த்தால உங்களுக்கு குட் மார்னிங்க் வேறயா?” நக்கலாய் கேட்டதிற்கு பதிலாய் சிறு சிரிப்பு இழைந்தது. மேல் படர்ந்துருந்த போர்வையை உரித்தெடுத்து, படுக்கையை விட்டு எழ, அவரோ எனக்கு அருகில் நடந்திருந்தார். எழுந்து நிற்க சௌகர்யமாய் கீழறிங்கிய கையினை ஒரு கையினால் தாங்கிப்பிடித்தும், மற்றொன்றை இடை நிரைத்திருந்த கர்ப்பத்தின் மேலிட்டும் மெல்ல எழுந்தேன். பல் தேய்த்து, கிச்சனுக்குள் நுழைந்த நேரமெல்லாம் கிச்சன் cabinet மீது ஏறி அமர்ந்து ஒரு கையில் கோப்பையில் காபியும், மறு கையில் அவளது அலைபேசியில் விரல்கள் கிறுக்க கூர்ந்த பார்வையில் உதட்டினில் முணுமுணுத்து எதையோ பார்த்து கொண்டிருந்தாள் அபூர்வா. பறவையின் விரிந்த சிறகுகளாய் அவள் உடுத்தியிருந்த wrap around skirt தளர்ந்து திரிந்து கொண்டிருந்தது.

என் இருத்தலை உணர்ந்தவள் கண்ட பார்வையில் கண்கள் சிரிக்க பேசினாள். “நான் சீக்கிரமாவே எழுந்துட்டேனே. குளிச்சுட்டேன் கூட, இங்க பாருங்க,” ஒற்றை விரலால் தன் ஈரம் தோய்ந்த தலமுடியை காட்டி கதை கூறியவள் மேலும் தொடர்ந்தாள். “ஆபீஸ் இல்லாத அன்னிக்குல்லாம் சீக்கிரமா முழிப்பு வருது. போகணும்னா தான் படுக்கைய விட்டு எழுந்துக்கவே மனசு வராது.”

கூறியதை கேட்ட மனதிற்கு அவளது புலம்பல் சிரிப்பை வரவழைக்க, அதனை கண்ட அவள் மேலும் தொடர்ந்தாள். “ஏன் ஶ்ரீ, இன்னிக்கு சாய்ங்காலம் கபாலீஸ்வரர் கோயில் வரைக்கும் போய்ட்டு வரலாமா?”

தளர்ந்த மென்நடைகளின் பிடியில் இரண்டொரு அடிகளில் அவளை அடைந்திருப்பேன். திறக்கப்பட்ட ஜன்னலினூடே மிதந்து வந்த ஒளிச்சிதறிலில் அவள் கூந்தல் தொற்றியிருந்த ஈரமனைத்தும் முடிநுனியில் பற்றிக்கொண்டிருந்து மினுமினுத்தது. “கார்த்தால எழுந்து சீக்கிரமா குளிச்சா மட்டும் சமத்து குழந்த இல்ல.. ஒழுங்க தலைய காய கூட வெக்கணும். இப்படியா இருக்கறது, ஈரத்தலையோட. சளி தான் புடிக்கும்,” என் கைவிரல் அவள் முடிக் களைய கூறினேன்.

எதற்கும் பதில் வைத்திருக்கும் அப்புவிடம் இதற்கும் இருந்தது. “காபி சாப்ட்டுட்டு போலாம்னு இருந்தேன் ஶ்ரீ. காபி உள்ள போனாதானே எந்த வேலையானாலும் செய்ய முடியுது.” அசட்டுச் சிரிப்போடு அவள் கூறியிருந்தாலும் என் நிலையும் அது தானே.