anbudai 22
anbudai 22
காலை காபிக்கு பின் விரைவிலேயே குளித்து பின் இருபது நிமிடங்களில் ஒரு Ivory maternity tunic topஉம், நீல நிற ஜீன்ஸும் உடுத்தி, சுருள் முடி அனைத்தையும் அள்ளி ஒரு கொண்டையில் அடைத்து தயாராகினேன். அபூர்வா, இன்று தானே காலை உணவை தயார் செய்வதாய்ச் சொல்லி என்னை கிச்சன் அருகில் அண்டவிடவில்லை.
வெகு நாட்கள் கழித்து மூவரும் ஒன்றாய் அமர்ந்து உண்டு பின் அரை மணி நேரத்தில் வீட்டை விட்டு ஷ்ரவனும் நானும் கிளம்பியிருந்தோம். அப்புவிற்கு அலுவலக விடுப்பு என்பதால் அவள் வீட்டிலேயே தங்கிக்கொள்வதாய் கூறினாள். கூடவே, மதிய உணவை தானே தயார் செய்வதாயும் சொல்லி எங்களை வழியனுப்பி வைத்தாள்.
அலுவலகம் இருக்கும் இடமும் வீட்டிற்கும் பெரிதாய் தூரமொன்றும் இல்லையென்பதால் ஒன்பது மணி வெயில் பெரிதாய் படுத்தவில்லை, அடுத்த பத்து நிமிடங்களில் எல்லாம் அலுவலக வாயிலை அடைந்திருந்தோம்.
ஹோமம் செய்த அன்று வந்திருந்தது, அதன்பின் இன்று தான் சென்றிருந்தேன். அலுவலக இடம் இருப்பதோ முதலாம் மாடியில். ஏறிச்செல்லும் படிகளின் கீழே ஒரு பழ மண்டி. இரண்டாம் மாடியில் மற்றும் இதைப்போல் வேறு சில அலுவலகங்கள், என்று சகலமும் அன்றே ஷ்ரவன் காட்டியிருந்தார்.
அத்தை சொன்னதற்கு தகுந்தாற்போல் ஹோமம் செய்து முடித்தது ஷ்ரவனுக்கு அத்தை உடனில்லை என்பதையும் தாண்டி சிறு ஆறுதலை தந்திருந்தது. ஷ்ரவனும் அபூர்வாவும் வற்புறுத்தி ஊரிலிருந்து மாமாவும், மாமியும் வந்திருந்தனர். அவர்களுக்கு குழந்தை இல்லையென்றாலும் ஷ்ரவனும் அபூர்வாவும் அவர்களது பெறாபிள்ளைகள். இவர்கள் இருவர் சொல்வதை மீறி அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். லண்டனிலிருந்து வந்ததில் இருந்து மெட்றாஸ் அழைத்த போதெல்லாம் வராமல் சாக்கு போக்கு கூறியிருக்க, business தொடங்கையில் மாமா இல்லாமல் எப்படி என்று ஷ்ரவன் கண்டிப்பாக வரவேண்டும் என்று கூறியிருந்தார்.
கர்ப்ப காலத்தில் அலைச்சல் வேண்டாமென்று நாங்கள் ஊருக்கு செல்ல ஆயத்தமான போதும் மாமி தெளிவாக மறுத்துவிட்டார், தேவையில்லாமல் அலைச்சல் கூடாதென்று சொல்லி. அதன்பின், ஷ்ரவனும் சேர்ந்தாற்போல் ஒரு வாரம் கூடி வீட்டில் இருக்கும் படி இலகுவாய் இருந்துவிடவில்லை அலுவலக வேலைகளும், அவ்வப்போது organise செய்யப்பட்ட meetingsஉம். அவர்களை காண செல்லும் வாய்ப்புகளும் ஒன்றை மாற்றி ஒன்று தட்டு பட்டுப் போக, இப்போது வந்தேத் தீர வேண்டுமென்று அண்ணாவும், தங்கையும் கூறியான பின் அதற்கு மறு பேச்சு ஒன்றுமில்லாது வந்திருந்தனர் இருவரும்.
அத்தோடு அம்மா, அப்பா, சித்தப்பா, சித்தி, கேத்தன், அப்பு, நளன் என்று அனைவரும் ஒன்றாய் எங்களுடன் இருந்தது இத்தனை நாள் தனியே இருவரும் ஆகாச தூரத்தில் இருந்து கொண்டு ஒன்றும் ஆகாமல் தவித்து ரணமாக்கிய அனைத்திற்கும் மருந்தாகிப்போனது.
ஷ்ரவன் இங்கு என்னோடு இல்லாமல் இருந்த போதும் மற்றவர்களும், அப்புவும் இருந்ததனால் மட்டுமே இங்கு இத்தனை நாட்கள் எல்லாம் தேவையில்லாத யோசனைகளின்றி கடக்க முடிந்தது. லண்டனிலேயே இருந்திருந்தால் என்ன செய்திருப்போம், இது எப்படி சாத்தியமாகியிருக்கும் எதற்கும் பதில் கண்டுகொள்ள முடியாத மாதிரியான அசாத்தியமான அமைதி பரவியிருந்தது.
ஷ்ரவன், அவர் செய்யும் ஒவ்வொரு சிறு செயல்களிலும் முழுதாய் நிறைந்துத் தன்னால் முடிந்ததை செய்தார். Wherever He was, he was all there. பல வருட கனவு, இன்று சாத்தியமாகின்றதென்றால் இவையெல்லாம் நிச்சயமாய் இருந்தல்லவா ஆகவேண்டும். After all, setting up business isn’t an easy job.
லண்டனில் இருந்த stereotypical வாழ்க்கையில் இருந்து கிடைத்த விடுப்பு, வெளிநாட்டு வாழ்க்கை வழிப்பறி செய்திருந்த அனைத்தும் எங்களிடம் திரும்பியிருந்தது.
அலுவலக கதவை திறந்த மாத்திரத்தில் ஒரு மிகச்சிறிய waiting lounge, இரு எதிர் எதிர் சுவர்களின் அருகில் இரு சாய்விருக்கைகள். அதற்கு பக்கத்து cabinஇல் customer service desk, அதிலிருந்து உள்ளே சென்றால் மேலும் dispatching, pick-upபிற்கு இரு தனி சின்ன இடங்கள். அவ்வறைக்கு வலதுப்பக்கவாட்டில், மூன்று மேசைகளும் நாற்காலிகளும், பின் இரண்டு தொலைபேசிகளும், இரண்டு புத்தம்புதிய desktopஉம் அடுக்கியிருக்க, சகலமும் புத்தம்புது ஆரம்பத்திற்கு அவாவோடு காத்திருந்தன.
வீட்டிலிருந்து அலுவலகம் வரும் வழியிலேயே நெடுக இரண்டு phone calls, ஹைதராபாத்திலிருந்து. அங்கே சென்றவுடன் mail எதையோ பார்க்க வேண்டுமென்று ஷ்ரவன் உள்ளே அவர் வேலையை பார்த்திருந்தார்.
இருந்த அறைகளை முழுதாய் கால்களில் நடந்து அளந்து பார்த்த பின், waiting loungeஇல் இருந்த சாய்விருக்கையில் அமர்ந்திருந்த நேரம், சின்னஞ்சிறு தயக்க அடிகளோடு தோளினில் தொங்கிய backpackஉம், ஜீன்ஸ், காதி குர்தா என்று உள்ளே நடந்தார் ஒரு பெண். வயது, அப்புவை ஒத்ததாய் அல்லது ஒன்றிரண்டு குறைவாய் இருக்கலாம். வட்ட முகம், கையில் பற்றியிருந்த mobile displayவில் பதிந்து விரிந்திருந்த பெரிய கண்கள். முகத்தில் தொற்றியிருந்த பதற்றம் மட்டுமில்லாது அதை செறிவாய் வரையறுப்பது போல் இறுக அழுந்திய உதடுகளும், தன் அலைபேசியை முறைத்தவாறாய் உள்ளே அடியெடுத்து வைத்தவர், என்னை கண்டதும் தானாக வராது, வாவென்று வரவழைத்த ஒரு புன்னகையை லேசாய் காட்டி சிரித்து என்னிடம் அடியெடுத்து வைத்தார். “Interview, இங்க தானே?” மெல்லிய குரலானாலும், தயக்கம் இழைந்து இருந்தாலும் கூட தணிவாய் ஒலித்த குரலிடம் சிறிதாய் முறுவலித்து தலையை மட்டும் அசைத்தேன்.
ஷ்ரவன் கூறிய இருவரில் ஒருவர் என்று கேள்விக்கு இடமில்லாமல் தெளிவாய் ஆனது அப்போது. கேட்ட பதிலில் சமாதானம் அடைந்தவராய் அவரது புன்னகையை சற்று பெரிதாக்கி என்னருகில் வந்து அமர்ந்து கொண்டார் அப்பெண்.
அதன்பின் நகர்ந்து இருபது நிமிடங்களில் எல்லாம் ஷ்ரவன் உள்ளே எதோவொரு அலுவலக அழைப்பில் ஆழ்ந்திருந்தது, அவர் குரல் sincerest business தொனியில் மிதந்திருந்ததை வைத்து அறிந்து கொண்டு அமர்ந்திருந்தேன். இந்தப்பெண் வந்துவிட்டதை எப்படி தெரிவிப்பதென்று தெரியாமல். எப்படியும் அழைப்பை வைத்தப்பின் தானல்லவா இவரிடம் வேலைப்பற்றிய பேச்சினை தொடங்க இயலும்.
ஷ்ரவன் பேசி முடித்தவுடன் அவரே எப்படியும் இங்கு வந்து வந்திருக்கிறார்களா என்று பார்த்துவிடுவார் என்று இருந்துவிட்ட நேரம் கதவின் அருகில் இருந்து மற்றுமொரு வாலிபர் தோன்றினார். கச்சிதமாய் பொருந்திய formalsஉம், காற்றினில் கலைந்து கேசத்தினை கைகளினால் கோதிக்கொண்டும் நீண்ட அடிகளில் உள்ளே விரைந்தார். முன்பே வந்தமர்ந்திருந்த பெண் இப்போது வந்த வாலிபரைக் கண்டதும் தன்னிருக்கையை விட்டு எழுந்தார்.
தலைபோகும் வேகத்தில் வந்திருந்தவர் இரைந்த மூச்சோடும், வியர்த்து கொட்டிய முகத்தோடும் அப்பெண்ணிடம் பேசலானார். “என் fileஅ மறக்காம கொண்டு வந்துட்டதானே? ஒண்ணும் சொதப்பலையே?” Interviewவிற்கு வந்த இருவர்கள் பேசிக்கொள்வது போல் ஒன்றும் இல்லாது, முன்பே நன்கறிந்தவரோடு உரிமையாய் பேசுவது போல் இந்த வாலிபர் கேட்ட ஆச்சரியத்தில் அமர்ந்திருந்தேன். இருவரும் பல வருடங்களாய் பழகிய நண்பர்கள் போல!
ஏற்கனவே தயக்கமும், பயமுமாய் அமர்ந்திருந்தாலும் கால்கள் நடுக்கத்தில் ஆடிக்கொண்டிருந்த அப்பெண்ணோ அவர் கூறிய வார்த்தைகளில், ஒரு விநாடியில் அவையாவும் மறைய, இத்தனை நேரம் அடர்த்தியாய் அவரை குடிகொண்டிருந்த அனைத்தையும் அந்த கணம் கோபம் மட்டும் மொத்தமாய் ஆட்கொண்டது. இருக்கையில் இருந்த ஒரு அடியில் எழுந்தவரோ தனது பையில் இருந்து ஒரு fileஐ விடுவித்து அந்த வாலிபர் கைகளில் பட்டென அறைந்தார். “கொஞ்சமாவது seriousness இருக்கா உனக்கு? Interviewக்கு வரப்போ இதக்கூட என்ன எடுத்துட்டு வர சொல்லிட்டு, நீயும் சரியான நேரத்துக்கு வராம, இப்போ மட்டும் எதுக்கு வந்த?” சிடுசிடுவென பொறிந்துத்தள்ளியவர், அவர் எதுவும் விளக்கும் முன்பே அந்தப் பையனின் சட்டையில் கழன்று இருந்த collar buttonஐ கண்களில் காட்டினார்.
“என்ன இது? அந்த பட்டன போடு மொதல்ல.” அவரோ மறுவார்த்தை ஒன்றுமில்லாது, மறுபார்வை கூட பாராமல் சட்டை பொத்தானை லாவகமாய் வேகமாய் சீராய் மாட்டினார். ஓரக்கண்ணினால் பார்த்த படியே அந்தப்பெண் உதட்டினில், “shirtஅ tuck in பண்ணவாது தெரிஞ்சுதே,” என்று அயர்ச்சியில் முணுமுணுத்தது அதன்பின் தலை கவிழ்ந்துகொண்ட எனக்கு காதினில் கேட்டது.
இருவரும் நண்பர்கள் தான். புதிதாய் பழகுபவர்கள் அல்ல.
தன் fileஐ திறந்து அனைத்தையும் சரிபார்த்தவர், அந்தப்பெண்ணிடம் நிமிர்ந்தார். “இன்னுமா கூப்படலை? நான் மட்டும் லேட் இல்லை, என்ன மட்டும் திட்ற.. பாரு அவர்கூட லேட்டுதான்,” என்று அந்தப் பையன் எங்கள் எதிரில் இருந்த கண்ணாடிக்கு மறுபக்கம் இருந்த ஷ்ரவனைக் காட்டி கூறியதில் என்னை மீறி சிறு புன்னகை உதட்டை கீறிக்கொண்டது.
அவர் கூறுவதை கேட்ட அப்பெண், முகத்தில் இறுகியிருந்த நெறிப்பு மேலும் இறுகிப்போய் அவரை முறைத்தார், தன் நண்பரின் தலையை லேசாய் தட்டி. “அவர் வேலையா இருக்கார், கண்ண திறந்து பாரு பக்கி!” என்று கடிந்து கொண்டு, கண்ணாடியின் திசையில் விரலினால் காண்பித்தார்.
கேட்ட பதிலில் சட்டென வாய்ப்பிளந்த இந்த வாலிபரோ, அந்தப்பெண் காட்டிய திசையில் ஷ்ரவன் தொலைபேசியில் பேசியும், தனது desktopஇல் எதையோ பார்த்த வண்ணம் சிரத்தையாய் வேலையில் மூழ்கியிருந்ததை கண்டு, பின் தனக்குள்ளேயே முணுமுணுத்து கொண்டார். “மனுஷன்னா வேலை இருக்கதான் செய்யும். எல்லாருமே உன்ன மாதிரியே வெட்டியா இருப்பாங்களா, சொல்லு.”
உணர்ச்சியேதுமற்ற முகபாவத்தில் அந்தப்பெண் அவரை முறைத்தார். “நான் வெட்டியா இருக்கேனா?”
“ஆமாம், வேலையிருக்கறதால தான் லேட்டு. நீ வெட்டியா இருக்க, அதான் சீக்கிரமா வந்துட்ட,” என்று casualஆய் தோளை குலுக்கினார். அவர் கூறியதை கேட்டி வாய்விட்டு சிரிக்கவும் முடியாமல், பட்டென்று வந்ததை மறைக்கவும் வழியில்லாமல் நான் பட்ட அவஸ்தை, அதை மறைப்பதற்குள் அந்தப்பெண் தலையில் அடித்துக்கொள்ளாத குறை. “வாய் மட்டும் இல்லனா, நாய் கூட சீண்டாது. உள்ள போயாவது கம்மியா பேசு, எதையாவது உளறிக்கொட்டி வெக்காத!” முணுமுணுத்து தன் முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டார்.
அந்த வாலிபரோ என்னிடம் திரும்பியிருந்தார், அவரது பார்வை என் முகத்திற்கும், நிறைந்து பிறையென வளைந்திருந்த வயிற்றிற்கும் ஒரு நொடி அல்லாடியது. பின், என் கண்களில் நின்றது. “Interviewக்கு தானே வந்திருக்கீங்க?”
என்னையும் வேலைக்கு வந்திருப்பதாய் நினைத்துவிட்டார் போல, இல்லையென்று வாய் திறக்க விடாமல் புறப்பட்ட அம்பாய் வந்தது அடுத்த கேள்வி. “குழந்தை பிறந்துட்டா அப்றம் கொஞ்சநாள் வரமுடியாதுல்ல?”
என்ன சொல்வதென்று தெரியாமல் மலங்கவிழித்ததில், அவர் என்ன கண்டுகொண்டாரோ தெரியவில்லை, சரேலென்று மறு விநாடி அவர் உள்ளங்கையை என்னெதிரே நீட்டியிருந்தார். “என் பேர் அர்ஜுனன் பார்த்திபன்,” அறிமுகம் செய்து கொண்டவர், அருகில் தன்னிரு கைகளுக்குள் முகம் புதைத்து அமர்ந்திருந்த பெண்ணை காட்டி, “இது என் friend, ஆதிரா,” என்றார்.
உடனேயே, அந்தப்பெண் தன் தலையை நிமிர்த்தி அதனை வழிமொழியும் விதமாய் சிறிதாய் தலையை அசைத்து, பின் புன்னகைத்தார். இம்முறை பெரிதாய். அவர் புன்னகை உள்ளத்தின் ஒரு பகுதியினால் இல்லாது அத்தனையுமாய் இருக்கும்படியாய் ஆத்மார்த்தமாய் தோன்றியது. அதன் spontaneous reflection, என் முகத்தில் திக்குத்தெரியாத பெரும் புன்னகையாய். என் குரலில், அறிமுகமாய் என் பெயரில் ஒலித்து, அர்ஜுன் நீட்டியிருந்த அவர் கைகளை குலுக்கினேன்.
“என் பேர் ஶ்ரீ,” என்று கூறியவுடன் அர்ஜுன் அடுத்த கேள்வியை கேட்டார். “ஓ, உங்க husband என்ன பண்றார்?”
உங்களை வேலைக்கு வரச்சொல்லிவிட்டு உள்ளேதானப்பா காத்துக்கொண்டிருக்கிறார் என்று தோன்றிற்று. அதனோடே எழுந்த சிரிப்பையும் உதட்டோடே புதைத்து, “அவர் business பண்றார், start-up இப்போதான் கொஞ்ச நாளா,” என்றேன்.
“என்ன business?” உடனடியாய் அடுத்த விசாரிப்பு வந்தது.
“Freight forwarding,” எவ்வளவு முயன்றும் அடக்க முடியவில்லை ஆழியாய் எழுந்த சிரிப்பை, கேட்ட பதிலிலும் என் முகம் கண்ட கேலி சிரிப்பிலும் நிஜத்தை உணர்ந்து கொண்டவர் போல் எதுவும் பேசாது மலைத்து போனவர், சட்டென சுதாரித்து கொண்டு என்னிடம் திரும்பினார். “அப்படின்னா… நீங்க…” அவர் கூறத்தொடங்க முகமெங்கும் இருந்த புன்னகை காணாமல் பொய், அக்கணமே வெறித்து போய்விட்டார், பாவம்.
எதுவும் வெளிப்படையாய் கேட்காமல் இருந்தாலும் அவர் உறைந்துப்போய் அதிர்ச்சியில் என்னை பார்த்ததே கேட்டதை போல் இருக்க ஒன்றும் கூறாது முகத்தில் மறையாத சிரிப்போடே ஆமென்று தலையை அசைத்தேன், புத்திசாலி பிள்ளை; புரிந்து கொண்டது.
“ஐயோ, அப்போனா நீங்க interviewக்கு வந்திருக்கேன்னு சொன்னது?” என்றார் வேகவேகமாய், கைகளை மார்பின் முன் குறுக்கே கோர்த்து அவரை ஏறிட்டேன். “நான் எப்போ சொன்னேன் interviewக்கு வந்திருக்கேன்னு?”
“அப்போ.. கொஞ்ச நேரம் முன்னாடி நான் கேட்டப்போ,” அவர் பேச பேச குறுக்கில் விடையளித்தேன், “நீங்க என்ன சொல்லவிட்டாதானே?” என்று முகத்தை சுருக்கி பாவமாக்கிக்கொண்டேன். என்னமோ அந்தப் பையனிடம் அவ்வாறு அங்கு அப்படி பேசியது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு உறவிடம், பழகிய மனதிடம் பாசாங்கு செய்வது போல் தோன்றியது. கேத்தனுடன் இருப்பது போலொரு உணர்வு, உள்ளமெங்கும்.
கேட்ட செய்தி தந்த அதிர்ச்சியில் இருந்த மீளாதவராய், ஆவென்று என்னை பார்த்தார், “அப்போ, சார் தான் உங்க-” கைவிரலினால் கண்ணாடிக்கு அந்தப்பக்கம் இருந்த ஷ்ரவனை காட்டி, சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் பாதியிலேயே வாயடைத்து போனார்.
“ஆமாம், சார் தான் என் husband,” பாவமாய் தெரிந்தாலும், வந்ததில் இருந்த என்னை பேசக்கூட விடாமல் தானாய் ஒன்றை புரிந்து கொண்டு என்னவெல்லாம் சொன்னார் என்று சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
“அப்போ நீங்க தான் அவர் wifeஆ?”
“அட, என்ன நீங்க கேட்டதையே கேக்கறீங்க, அவர் என் husbandநா நான் அவருக்கு wife தானே?!” என்று நான் கூறி முடிக்கையில் முழுதாய், சத்தமாய் சிரித்துவிட்டேன்.
இத்தனையும் இங்கு நடந்தரங்கேறிக் கொண்டிருக்க, அர்ஜுன் அருகில் அந்தப்பெண் ஆதிரா அத்தனையையும் கண்டமன்யம், எதுவும் பேசாது அமர்ந்திருந்தார்.
கேட்டதை உணர்ந்து கொண்டவராய் தன் கைகளினால் தலையில் பட்டீரென்று அறைந்து கொண்டவர், “டேய் அர்ஜுனா,” என்று தன்னை தானே கடிந்து கொண்டு, என்னிடம் திரும்பினார்.
“மேடம், தப்பா நினைச்சுக்காதீங்க.. சாரி, உங்களையே interviewக்கு வந்துருக்கீங்களா அது இதுன்னு கேட்டுட்டேன், மனசுல வெச்சுக்காதீங்க,” என்று வார்த்தைகள் முட்டி மோதிக்கொண்டு ஒன்றோடு ஒன்றாய் அவதியில் வந்து இறங்கியது. அவர் தவிப்போடு மன்னிப்பு கேட்டதில் மனம் தள்ளாடியது. தவறு செய்தால் தானே மன்னிப்பு கோறவேண்டும், ஒன்றும் செய்யாமல் இது என்ன இப்படி.
“ஐயோ, நீங்க தப்பு ஒண்ணும் செய்யலையே அப்பறம் ஏன் சாரியெல்லாம். நான் தப்பா ஒண்ணும் நினைக்கலை, நீங்க ஏற்கனவே வேலை கிடைக்கணும்னு நெனச்சு tensionஆ இருப்பீங்க இப்போ இத வேற போட்டு கொழப்பிக்காதீங்க. நான் தப்பா எல்லாம் நினைக்கலை, சரியா? Relaxedஆ இருங்க, அவர் கேக்கறதுக்கு மட்டும் நிதானமா, confidentஆ பதில் சொல்லுங்க, all the best!” என்னால் ஆன வரை சமாதானம் கூற முயன்றேன். ஒன்றும் செய்யாமல் இப்படி வருந்திக்கொண்டு வேலையை கெடுத்துக்கொள்வானேன். சற்று தலையை முன்னால் சாய்த்து, “உங்களுக்கும் All the best, Adhira,” என்றேன்.
மெலிதாய் புன்னகைத்த ஆதிரா, “Thank you Madam, நெஜமாவே ஒண்ணும் தப்பா நெனச்சுக்கலையே?” என்றார் reassurance கேட்டு.
“ம்ஹூம், இல்லை.”
அதன்பின் நடந்த இரண்டு மணிநேர பேச்சினில், அர்ஜுன் ஆதிரா இருவரையும் ஷ்ரவனுக்கு மிகவும் பிடித்து போயிருந்ததாய் மட்டும் தெரிந்து கொண்டேன், நானும் அவரும் வீடு திரும்புகையில் அவர் அவர்களை பற்றி பேசியபோது சிரித்த கண்களை கண்டு.
இருவரையும் நாளை முதலே சேர்ந்து கொள்ளுமாறு கூறியிருந்தார் ஷ்ரவன். “விளையாட்டா இருந்தா கூட இல்ல, அந்த பையன் அர்ஜுன், he is very smart.” அலுவலகத்தில் இருந்து வீடு வந்து சேர்ந்த பின், அறைக்குள் வந்து மெத்தையின் மீது அமர்ந்து போது பின் தொடர்ந்தது ஷ்ரவனும், அவர் குரலும்.
கால்களை நீட்டி மடக்கி வைத்துக்கொண்டு, பின் அவரை பார்த்தேன். “ஆமாம் தான் ஷ்ரவன், ரெண்டு பேருமே they seem promising. இப்படி spiritedஆ ரெண்டு பேர் கூட இருந்தா உங்களுக்குமே easyஆ இருக்கும் இல்ல?” அறைக்கதவை மூடியவர், தன் விரல்கள் தலைமுடியின் உள்ளே வேகமாய் சீற, உள்ளே நடந்தார், நான் சொன்னதை கேட்டு ஒப்புதலாய் தலை அசைத்து.
“கண்ணம்மா, இந்த ஒரு வாரத்தில எதாவது parcel வந்தது?” என்றார் தன் formalsஇலிருந்து இலகுவாய் ஒரு track pantsஇற்கும், t-shirtக்கும் மாறிக்கொண்டு.
இதுவரை மறந்திருந்தது, அவர் கேட்டவுடன் நினைவில் பொறிதட்ட எழுந்தது. “ஆமாம்மா, வந்துதே. நீங்க இன்னும் office address மாத்தி குடுக்கலை போலன்னு நெனச்சு வாங்கி வெச்சேன். உங்க shirt இருக்கற அலமாறிக் கதவை திறங்க. அதுக்குள்ளே இருக்கு.” அலமாறியை அடைந்து அதைத் திறந்தவர் பிரிக்காது உறங்கியிருந்த சிறு பெட்டியை கையில் எடுத்து, என்னை பார்த்தவர் பார்வையில் அத்தனை சிரிப்பு.
“அதை பிரிக்கலையா நீ?”
“இல்லையே,” என்றேன் அவரைப் பார்த்து. அதனை தன் கைகளில் ஏந்தி என்னருகில் நடந்தவர், அதன்மேல் ஒன்றும் பேசாதிருந்து தன் பக்கம் அமர்ந்து அந்த பெட்டியை திறக்க முற்பட்டார். கைவிரல்கள் படபடக்க அதன் மேல் படர்ந்து அதனை பிரிக்கும் நேரமெல்லாம் அவர் முகத்தில் மிதமாய் அளவளாவியது ஒரு ருதுவான புன்னகை. அதைக்கண்ட என்னிடமும் அதே புன்னகை, அப்படியே.
அட்டையை பிரித்தவர் உள்ளே உள்ளதை வெளிக்கொணராமல், தன்னிரு கைகளை மேலே உயர்த்தி என் முகமேந்தி ஒரு பார்வை பார்த்துவிட்டு பின் என் மூக்குக்கண்ணாடியை கழற்ற முன்வந்தார். அவர் அவ்வாறாய் செய்தவுடன் ஒன்றும் விளங்கவில்லை, பத்தாதற்கு பார்வை வேறு மங்கலாய் போனது.
“ஐயோ, ஷ்ரவன் என்ன பண்றீங்க.. அதை ஏன் கழட்டறீங்க..” கண்ணாடி இல்லையென்றால் சரியாய் தெரியாதல்லவா, தெரிந்தும் என்ன செய்கிறார் இவர்.
அவசரமாய் பிதற்றியவளை ஒன்றும் பேசாமல் தன் பார்வையை மட்டும் செலுத்தி என்னை பார்த்தவர், “ஷ், ஒண்ணுமில்லை,” என்றுபடி தன் மடியில் இருந்த பெட்டியை கைகளினால் பிரித்தார். செய்கிறவர் தெரிந்துதான் செய்கிறாரா என்று தலையும் புரியாது காலும் புரியாது படபடத்தேன். “எனக்கு கண்ணே தெரில, விளையாடாதீங்க ஷ்ரவன், கண்ணாடிய குடுங்க!” என் கண்ணாடியை தான் ஒளித்து வைத்துவிட்டு என்னை தேட வைப்பதுதான் தான் தலைவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு ஆயிற்றே.
ஒரு நிமிடம் அயர்ந்தவர், பிரித்துக்கொண்டிருந்த கைகளில் அந்த குடுவையில் இருந்து புத்தம்புது மூக்குக்கண்ணாடியை கையில் எடுத்தவர், அதனை முன்போல் என் முகத்தில் மாட்டி பின், கைகளில் முகமேந்தி உச்சிமுகர்ந்து உரிமையாய் நெற்றியில் முத்தமிட்டு பார்த்த பார்வை சொன்னது, இதற்குத்தான் கழட்டினேன் என்று.
பிறந்தநாள் முடிந்து, தாமதமாகியிருந்தாலும் பரிசை கையில் தராது இப்படி ஆசையாய் அருகில் அமர்ந்து, முகமேந்தி காதல் முத்தத்தோடு தன் கையினால் அணிவித்து மகிழும் மனதிடம் நன்றி சொன்னால் போதுமா?
பார்வை சரியில்லாத குறைக்கு அணியும் மூக்குக்கண்ணாடியையும் காதலிக்கும் வண்ணம் இப்படி வாஞ்சையுடன் அதையே பரிசாய் தரவும், அதை தானே காதலாட அணிவித்துவிடவும்.. உயிரென்றால் பிடித்தவருடன் கழியும் நேரத்திற்கும், அவர் தரும் முத்தத்திற்கும் உண்டென அறிந்தேன், எண்ணிலடங்கா எத்தனையாவதோ முறையாக.