வெயில் தாழ கோவில் வரை சென்று வரலாம் என்று அன்று மதிய உணவின் போதே அபூர்வா மறுமுறை நினைவுருத்தியிருந்தாள். பெரியதாய் அலைச்சல் இல்லை என்றானாலும், அன்று காலையிலையே சென்று வெயிலில் திரும்பியது உடல் அசந்திருந்தது. இரவுகளில் எல்லாம் முன்போல் தொடர்ச்சியாய் தூங்க முடிந்துவிடவில்லை. கலைந்த தூக்கத்தில் எல்லாம் கண்டுகொள்ளும் இன்பமாய் அவளது அசைவு இருந்து கொண்டு அர்த்த ராத்திரியின் அழகை இயக்கும் நிலவொளியாய் திக்குத்தெரியாத வேளையையும் அவளது அசைவில் அவள் கூறும் கதைகளாக்கியிருந்தது.
அவள் என்னுள் பிரண்டும், அசைந்தும், உதைத்தும் சில நேரம் விளையாடியும், பல நேரங்களில் கெஞ்ச வைத்தும், இன்னும் ஒரு சில நேரங்களில் ஏங்கவைத்தும்; வாழ்க்கையின் இக்கட்டம் முடிவிலியாய் இல்லாத போதும் அவ்வாறு ஆகிவிடாதா என்று மனம் நிரைத்த அந்த வாஞ்சையான விதும்பலில் தூக்கமின்றி தொடர்ந்தன நீண்டிருந்தும் இம்சிக்காத இரவுகள் யாவும்.
உடல் ரீதியான அசதி மட்டுமின்றி, மனரீதியான அயர்ச்சி கடந்த சில நாட்களாய் அவ்வப்போது தலை தூக்கி, சற்று எப்போதையும் விட மேலாய், அதி அழுத்தமாய் தன் இருத்தலை காண்பித்து வந்தது.
பல நேரங்களில், தூக்கமின்மைக்கு குழந்தை மட்டுமே காரணமில்லாமல் கட்டுப்பாடற்ற என் யோசனைகளுமே உபத்திரமான காரணமாகிப்போனது. குழந்தை அசைந்து துயில் கலைப்பதை போல, குழந்தையை பற்றிய என் யோசனைகளும், என்னைப் பற்றிய என் யோசனைகளுமே தூங்கவிடாமல் தன் பிடியில் இறுக்கிவைத்து மூளையை அடிமையாக்கி சத்தாய்த்தது.
முதுகுத்தண்டின் வலியோ, அல்லது வீங்கியிருந்து தலையணையென காட்சியளித்த பாதங்களோ பேரூழியாய் தெரியவில்லை. பதிலாய், கட்டுத்தரியற்ற தேவையற்ற சிந்தனைகளும், குழந்தை வளர்ப்பை பற்றிய யோசனைகளும், இன்னும் இதர வெற்றெண்ணங்களும் நெடுக அடுக்கி, தண்டவாளம் ஏறிய ரயில் பெட்டிகளாய் மனதை துளைத்து ஓடின.
குழந்தை கடைசியாய் அசைந்ததை நான் உணர்ந்தது எப்போது? சரியாய் தானே வளர்ந்து வருகிறாள்? நான் அனைத்தையும் சரியாய் தானே செய்து வருகிறேன்? Am I going to be a good mom? Is everything going to be okay? இன்னும் எண்ணிலடங்காத எவ்வளவோ.. அனைத்தும் உள்ளக்கொதிப்பின் ஒவ்வொரு பரிமாணமே தவிர அவையாவுமே தவிப்பையும், பயத்தையும், மேலும் அவ்வாறாக்கும் சிந்தனையையும் மேலும் அதிகரித்தன. அந்த மாளமுடியாத வேளைகளிலும், தூக்கமில்லாது திண்டாடிய நாட்களிலும் அவளது இருத்தலே இந்த உள்ளத்தின் கொண்டாட்டமாய் அமைந்தது. கேள்வியோ, சஞ்சலங்களோ எதுவாயினும், பதிலாய்; கவலைகளின் முடிவாய் அவள் அமைந்திருந்தாள்.
தூக்கம் என்னை கைவிட்டிருந்த இரவுகளில் எல்லாம் என்னுள் இருந்த அவளிடம் சரண்புகுந்திருந்தேன். யாருமின்றி நாங்கள் கதைத்துக் கழிந்த நேரங்களனைத்தும் யாருமறிய வேண்டாத ரகசியம்; அது எங்களுக்கானது.
படித்துக்கொண்டிருந்த புத்தகத்தில் இருந்த கவனம் திசையறியா வண்ணம் மேகம் வாரியிறைத்த மழைநீரென சிதற தெளித்திருந்ததை, நீட்டியிருந்த என் கால்களின் மேல் வந்தமர்ந்து என்னை தட்டிய அப்பெரிய கையினை உணர்ந்த பின்னே சிரத்தை என்னிடமே திரும்பியிருந்தது. தட்டி அழைத்தவரை என்ன என்று புருவம் நெறித்து கேட்டேன்.
மெத்தையின் பின்நின்ற சுவரில் தலைசாய்த்து, கால்களை முன்னே நீட்டி அமர்ந்திருந்தேன், எனக்கு பக்கவாட்டில், மெத்தைக்கு கீழே ஷ்ரவன் அமர்ந்து, laptop அவர் மடிமீது வீற்றிருக்க அலுவலக சம்மந்தமாய் எதையோ பார்த்திருந்தார்.
கீழே அமர்ந்திருந்தவர், தலையை திருப்பி கண்களில் என்னவென்று கண்டுகொள்ள முடியாதபடியான ஒரு amusement. அழுத்தமான உதட்டினை கீறிக்கொண்ட சின்னஞ்சிறு புன்னகையை காட்டி பின் கூறினார். “இல்ல, ரொம்ப நேரமா பாக்கறேன், அந்த bookஅ படிக்காம சிரிக்கறியே அதான்.. என்னன்னு பாத்தேன்,” என்றவரது பார்வை கீழிறங்கி வளர்ந்தும் பிறையாகிக் கிடந்த என் வயிற்றின்மேல் படபடத்தது.
பார்வை மேற்தங்கி அவரை கவனித்திருந்த போதும் என் உள்ளங்கை உள்ளே இருக்கும் சிசுவிடம் பேசுவதைப்போல, மெல்ல வருடிக்கொண்டிருப்பதை நோட்டமிட்ட பின், தன் பார்வையை என் கண்களுக்கு ஏற்றியவரிடம், “நீங்க இவ்வளோ நேரம் வேலை பாக்கறீங்கன்னு நினைச்சா, என்னை தான் பார்த்துட்டு இருந்தீங்களா?” என்றேன் பரிகாசமாய். கூடவே வேண்டாம் வேண்டாமென்று என்று நினைக்க சொல் பேச்சை கேட்காத ஒரு பிடிவாதச் சிரிப்பு.
கேட்டதை உணர்ந்து தன்னை மறந்து வாய்விட்டு குறுஞ்சிரிப்பில் நகைத்தவர், “ஆமாம், உன்ன தான் பார்த்துட்டு இருந்தேன். ஏன் தனியா சிரிக்கறன்னு பார்த்துட்டு இருந்தேன்..” என்றார்.
முகத்தை சுருக்கி, இதழ் பிதுக்கி strictஆய் பதில் கூறினேன். “அதெல்லாம் சொல்ல முடியாதுப்பா..”
“ஏன்பா?” என்றார் நான் பதில் கூறிய தொனியிலேயே, முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு. அந்த போலி தொய்வை கண்டுகொண்டதும், வயிற்றின்மேல் இட்டிருந்த கைகளை அவர் சிரத்திற்கு உயர்த்தி விரல்கள் மெல்லிசாய் அவர் கேசம் கோத, வளர்ந்திருந்த கர்ப்பம் அனுமதித்த வரை பக்கவாட்டில் சாய்ந்து, முழங்கையை மெத்தைமேலிட்டு அவரிடம் குனிந்து மூச்சின் வெப்பம் வார்த்தைகளோடு காது உரச, “ஏன்னா அது ரகசியம்,” என்றேன். கிசுகிசுத்து பின்னால் வந்ததும் பாவமாய் வைத்திருந்த முகம் மேலும் திங்கள் காலை பள்ளி செல்லும் குழந்தைப் போல் ஆகிப்போனது அவருக்கு.
தன் laptopஐ எடுத்து தரையில் வைத்தவர், முழுதாய் என்னிடம் திரும்பிக்கொண்டார் அவர் முகம் நான் கண்டு பேச, வசதியாய். “ரகசியமா.. யாருக்கும் யாருக்கும்?”
வார்த்தைகளில் பதிலேதும் பேசாமல், இதழ் அள்ளிப்பூசிக் கொண்ட மென்சிரிப்போடு ஒற்றை விரலினால் காட்டினேன். முதலில் என் மார்தொட்டு எனக்கும் என்றும், பின் என் வயிற்றைத் தொட்டு குழந்தைக்கும் என்றும். அதை காத்திருந்து கண்டவர், கண்டதை உணர்ந்ததும் முகம் மேலும் பாவமாய் ஆனது.
மனமார்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைப் போல் அடர்ந்த புருவங்களிரண்டும் சுருங்க ஒரு நொடி செலவழித்து எதையோ யோசித்தவர், சட்டென தலையை நிமிர்த்தி, “அது என்ன அப்படி ரகசியம்?” என்றார்.
குழந்தைக்கும் எனக்கும் ரகசியம் என்று சொன்னதில், தனித்துவிடப்பட்ட நிலையில் முகத்தில் ஒன்றாய் அரங்கேறியிருந்த அப்பாவித்தனமான பாவங்களிலும், பின் என்னிதழேறி முத்தம் ஒற்றும் நீண்ட நெற்றியின் சுருக்கங்களும், உண்மை என்னவென்று மனதினால் அறிந்திருந்தாலும் பிடித்து நிறுத்தவியலாத படியாய் சுழன்றிருந்த அந்தப் பார்வையிலும் ஏனோ அவரே சிலநொடிகள் குழந்தையாய் மாறியிருந்தார்.
உள்ளமிருந்த அனைத்தும் ஒரு நொடியில் உற்சாகமாய் மாற, பெருக்கெடுத்த சிரிப்பை உதட்டில் பொத்தியவாறு முகத்தை சுளித்து, “ரெண்டு பேருக்கு தெரிஞ்சது, மூணாவதா ஒருத்தருக்கு தெரிஞ்சா அதெப்படி ரகசியமாகும்?” என்று கனகாரியமாய் உரைக்க, அவரோ அவசரமாய் சற்றுமுன் ஆசையாய் அவர் நெற்றி படர்ந்து தலைக்கோதிய விரல்களை தன் பெரிய கையினுள் சிறைபிடித்துக்கொண்டார். “அதை ஏன் நம்ம மூணுப்பேருக்குள்ள மட்டும் தெரிஞ்ச ரகசியமா வெச்சுக்க கூடாது?” கணீரென்று ஒலித்த குரலும், என்னைக்கண்டு குறுஞ்சிரிப்போடு கண்ணடித்ததிலும் சிவந்து கொண்ட கன்னங்களை, என்னால் ஒன்றும் செய்யமுடியாமல் போனது.
பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் என்னிடம் கேட்டாரானால் சொல்வதையன்றி வேறுவழியில்லாமல் போய்விடுமே! இவ்வாறே இரண்டொரு முறை மீண்டும் அப்படி அப்பாவித்தனமாய் முகத்தை வைத்துக்கொண்டு கண்ணம்மா என்றாரானால் நான் உளறிக்கொட்டி விடுவேனே!
அவரிடம் பகிறக்கூடாத அளவிற்கு என்னிடம் என்ன இருந்துவிட போகிறது. ரகசியமென்று கூறியதே வேண்டுமென்று அவ்வப்போது சொல்லி வம்பிழுக்கத்தானே, அதையும் கூறவேண்டுமென்றால் அதை அவரிடமே உள்ளம் மிகுந்த களிப்பில் கூறிவிட்டேனானால், இனிமேல் வம்பு செய்ய முடியாதே.
யோசித்திருந்ததில் உள்ளங்கையில் ஒட்டிப்படர்ந்திருந்த ரேகையைப் போல் மென்மையாய் தழுவியிருந்த அப்பெரிய கையின் புறங்கையின் மேல் என் மற்றொரு கை வந்தமர்ந்து கொண்டது, நான் கூறும் சமாதானமாய். “கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்னா அப்போ நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க, அப்பறம் ரகசியத்த தெரிஞ்சுக்கலாம்,” என்று ஓரக்கண்ணால் மெல்ல அவரை நோட்டம்விட்ட படி கூறினேன்.
கேட்டதில் அதிர்ந்தவர், அவசரமாய் பதிலுரைத்தார். “என்ன நீ, சும்மா பேச்சுக்கு வேதாளம்னு சொன்னா நிஜமாவே கேள்வியெல்லாம் கேக்கற?” அவர் முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு சொல்லியிருந்தாலும் என்றோ கூறியதை நினைவில் தூக்கிவந்து, இன்று இப்போது போட்டுடைத்ததில் என்னைமீறி ஓங்கிய சிரிப்பில் சத்தமாய் சிரித்துவிட்டு பின் கூறினேன். “ரொம்ப லகுவான கேள்வி, சிரமம் இல்லாம பதில் சொல்லிடலாம்,” என்றே சற்று ஊக்கியதில் மனமிறங்கி, “சரி கேளு,” என்றார் சமாதானமாய்.
“நீங்க ஊர்லேந்து வந்து ஒரு நாளாச்சா?” என்றதற்கு உடனியாய் வேகமான தலையசைப்புடன், கேட்ட கேள்விக்கு பின்னாலேயே, “ஆமாம்,” என்று ஒப்புதல் வந்தது.
முன்போல் முழுதாய் மெத்தைமேல் முழங்கை உன்றி சாயாது, லேசாய் அவர் முகம் காணமட்டுமாய் சரிந்து மென்மையாய் அவர் காதுகளில் வாசித்தேன். “வந்ததுலேந்து உங்களுக்கு என்கிட்ட எதாவது வித்தியாசம் தெரிஞ்சுதா?” இப்போதும் ரகசியமானக் குரலில்தான்.
குழப்பமிகுந்த குமிழிகளாய் மாறியிருந்து தத்தளித்த விழிகளிரண்டையும் ஒரு முறை உச்சி முதல் பாதம்வரை தன்னிலை கொண்ட கவனக்குவியல் சிதறமால் அப்பார்வையினால் மென்மையாய் கட்டித்தழுவியவாறே ஒரு முறை ஏறி, பின் தவழ்ந்திறங்கி நேர்த்தியாய் அளவிட்டன. பார்த்த பார்வையிலேயே கண்டுபிடித்துவிடுவாரென்று ஆவலாய் அவர் முகம் காண விழிவிரித்து காத்திருக்க, அவரோ முகத்தை சுருக்கினார்.
“ம்ம்ஹூம், ஒண்ணும் தெரியலையே கண்ணம்மா..” என்றிழுத்து தலையை வேறு வார்த்தைகளுக்கு துணையாய் அசைத்தார், ஒன்றுமே தெரியவில்லை என்று மறுப்பாய். அவருக்கு கண்டுபிடிக்கத் தெரியவில்லையென்றால் நானென்ன செய்வேன்!
வந்த மறுப்பில், கைக்கொண்டு தோளை தட்டினேன். “என்ன ஷ்ரவன் நீங்க, உன்னதான் பாக்கறேன்.. உன்னதான் பாக்கறேன்னு இவ்வளோ நேரம் பார்த்துட்டு இப்போ ஒண்ணுமே தெரியலன்னு சொல்றீங்க,” அவர் தோள் தொட்டிருந்த கையினை உடனேயே உயர்த்தி ஒற்றை விரலினால் என் மூக்கை காட்டி, “புது மூக்குத்தி, birthdayக்கு அப்பு வாங்கிக்குடுத்தா. இதை தான் கேட்டேன், வித்தியாசமா எதுவும் இருக்கான்னு.” ரகசியமில்லை என்று சொல்லிவிட்டால் வம்பளக்க சேதி ஒன்றுமில்லாது போய்விடுமே என்று நினைத்ததில் இருந்து இப்போது கதை இவ்வாறாய் மாறியதில் பலூன் பார்த்த சிறுமியாய் என்னுள் எழுந்த உற்சாகமும், குஷியும் ஏராளம்.
ஒன்றன்றி வேறொன்றில் என் வாய் குடுத்து அவர் என்னை விஷமம் செய்வதிலுமே கடந்திருந்த வேளைகளைத் தாண்டி, அவரை அவ்வாறு பாசாங்கு செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தாது விடமுடியாதல்லவா. இந்தளவு விளையாட்டும் இல்லாது என்ன பெரிய காதல்!
புருவ மத்தியில் உண்டான போலி சோகத்துடன், மூச்சுவிடவும் இடைவெளியில்லாது கொட்டினேன். அதற்கு அவரோ என்ன சமாதானம் சொல்வதென்று தெரியாமல் முழிப்பிதுங்கிய விநாடி, அவரை காப்பாற்றவென்றே அவர் அலைபேசி அடித்தது. தன் கையை மெதுவாய் விடுவித்துக்கொண்டு அழைப்பை ஏற்றவர், மறுநொடி அது துண்டிக்கப்பட்டதும் கால்களுக்கு உயர்ந்து, “Royapettah வரைக்கும் போகணும், ஶ்ரீ. அங்கதானே headoffice இருக்கு; regional managerக்கு introduce பண்ணிவெக்க கூப்படறாங்க, போய்ட்டு வந்துடறேன்,” என்று தன் அலைபேசியில் எதையோ பார்த்தவாறே கூறி பின் அலமாறிக்கு நகர்ந்தார். மெதுவாய் சிறு புன்னகையோடே தலையை மட்டும் அசைத்தேன்.
ஒரு நொடியில் formalsஇற்கு மாறியிருந்தார். மறுநொடி தன் தந்தையின் கைக்கடிகாரம், மணிக்கட்டில் உறுதியாய் சுற்றிக்கொள்ள, என் கைகொண்டு கலைத்த சிகையை அவர்தம் கை காய்த்த விரல்களை நுழைத்து வேகமாய் வாரிக்கொண்டார். எல்லாம் கச்சிதமாய் செய்த போதிலும், முகத்தில் இந்நேரம் வரை அளவளாவி கொஞ்சிய சிரிப்பும், மனமேந்தி நிறைந்திருந்த உற்சாகமும் காற்றில் மணமென கரைந்து விரைந்திருந்தது.
இப்போது என்முன்னிருந்து யாருடனோ அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியவர் முகத்திலோ அச்சிரிப்பு முற்றிலுமாய் துடைத்து எடுக்கப்பட்டு, சிந்தனை முடிந்த ஆகுலம் எல்லையை மீறி தெரிந்தது. ஒரு கையினால் அலைபேசியை காதினில் ஒற்றி, மற்றொரு கையை தன் இடையினில் விதைத்து பேசியவர், உரையாடலின் முடிவில் கீழறங்கிய கையினை கண்டதும், “ஷ்ரவன்,” என்று மெல்லிய குரலில் அவர் பெயர் இசைந்ததும் தலையை நிமிர்த்தினார். “என்னமா?”
“இங்க வாங்களேன், ஒரு நிமிஷம், please.” தரையில் இருந்த மெத்தையில் இருந்து எழுந்து நான் அவரிடம் செல்லவேண்டுமானால் நேரமாகுமில்லையா, அதனால் அவரையே என்னிடம் அழைத்தேன்.
தலையை அசைத்து சிறிதாய் ஒப்புதல் தெரிவித்து தன் அலைபேசியை pant பையினுள் ஒளித்துக்கொண்டு என்னிடம் நடந்தவரை, என்னருகில் காலியாய் கிடந்த படுக்கையை கண்ணசைவில் காட்டினேன், “இங்க ஒரு நிமிஷம் உக்காருங்களேன்,” என்று.
இத்தனை நேரம் இறுகயிருந்த முகத்தில் இப்போது விரிசலில் வேர்விட்ட கொடியாய் சிறிதாய் ஒரு சிரிப்புப் படர, அவருக்கு அருகில் ஒத்தாசையாய் நகர்ந்து கொண்டு என்னிரு கைகள் அவர் கழுத்தினை சுற்றி தூளியாய் கட்டிக்கொண்டு முன்னால் சாய்ந்து அவர் கன்னத்தில் முத்தமிட்டேன். “tension ஆகாம, நிதானமா போய் பேசிட்டு வாங்க. All the best,” என்றதும் கிறுக்கிய குறுஞ்சிரிப்பு பெரிதாய் விரிய தன்னிரு கைகளினால் என் முகமேந்தி தன் சுவாசம் என்மேல் படர நெற்றியில் மிருதுவாய் முத்தமிட்டு, முணுமுணுத்தார், “thank you Sri,” என்றவாறாய்.
அடுத்த பத்து நிமிடங்களில் தன்னறையில் மும்முரமாய் எதையோ வரைந்து கொண்டிருந்த இருந்த அப்புவிடமும் சொல்லிக்கொண்டு, வண்டி சாவியை கையில் எடுத்து கிளம்பினார். அவர் உருவம் வாசற்கதவின் பின்னால் சென்று மறையும் வரை உறைந்து நின்று பார்த்திருந்தவள், பின்னாலிருந்து அப்புவின் கை தோள்பட்டதும் தெளிந்தேன். “என்ன ஶ்ரீ.. எதாவது யோசனையா?”
புன்னகையானாலும் எப்போதும் என் முகம் முழுக்க படர்ந்து கண்களில் தெறிக்கும் சிரிப்போடல்லாமல் சிறிதான, அளவான சிரிப்போடும், யோசனை சகிதம் கண் முன்னாலிருந்த உருவம் மறைந்த இடத்தையே இலக்கற்றப்பார்வையில் ஒட்டியிருந்ததையும் அதனுள் புதைந்திருந்த சிந்தனையையும் அவள் கண்டு கொண்டாள்.
செறிவாய் நீண்ட மூச்சொன்றினை உள்ளெடுத்து அவளிடம் திரும்பினேன். “ஒண்ணுமில்லை அப்பு, உங்க அண்ணா கொஞ்சம் tensionஆ போறாரா அதான் பாத்தேன்,” என்றேன் என்னை பற்றிய அவளது உள்ளங்கையை என்னதுள் பதுக்கி.
பதிலாய் அவள் முறுவலித்தாள். “ஒண்ணும் யோசிக்காதீங்க. அதெல்லாம் சூப்பரா பேசிட்டு வந்துடுவான்,” என்று நம்பிக்கை கலந்த உற்சாகம் ததும்ப கூறியவள் சட்டென என் முகம் ஏறிட்டாள். “ஶ்ரீ, சொல்லவே மறந்துட்டேன். இப்போதான் உங்க தம்பிகிட்டேந்து phone வந்தது. எல்லாரும் வீட்ல இருக்கோமான்னு கேட்டு, இருக்கோம்னு சொன்னதுக்கு வரேன்னு சொன்னான்.”
அவள் கரம்பிடித்து இருக்கைக்கு நடந்தபடியே அவள் முகம் கண்டு பதிலளித்தேன். “இப்போதான் அவர் இல்லையே.. பரவால்ல வரட்டும். வந்து என்னனு சொல்லட்டும்..” என்று சிணுங்கிய என்னை கவனித்து ஒரு காலை மடக்கியும் மற்றொன்றை தரையோடு வைத்தும் என்னை நோக்கி அமர்ந்து முனைப்பாய் கதை கேட்டாள்.
விட்டதில் இருந்து தொடர்ந்தேன், “அன்னிக்கே phone பண்ணிட்டு ஒண்ணுமே சொல்லாம அவர்கிட்ட பேசிக்கறேன்னு வெச்சுட்டான்,” புகார் செய்ததில் அவள் முகத்தில் தவழ்ந்திருந்த புன்னகை பன்மடங்கு பெருகியிருந்தது. அவள் விடையளிக்கும் முன்பாய் கதவைத்தட்டும் ஓசை எழ, “இதோ வந்துட்டான் பாருங்க. வரட்டும் என்னடா ஶ்ரீய வம்பிழுக்கறியான்னு கேக்கறேன்,” என்றபடியாய் உதட்டில் இருந்து முணுமுணுத்து கதவிற்கு நகர்ந்தாள் அப்பு.
திறந்த கதவினில் இருந்து ஒரு track pantsஉம், t-shirt, காற்றின் விசையில் வந்திருந்ததில் கலைந்திருந்த தலைமுடியும்; பின் அவன் கன்னத்தில் ஒட்டிக்கொண்டிருந்த குறுந்தாடியுமாய் கேத்தன் நுழைந்தான். நுழைந்தவன் ஒரு எட்டில் sofaவை அடைந்து அடுத்த நொடியில் அதன் மேல் தாவி, பின்னால் சாய்ந்து கொண்டவனை முறைத்த என்னை வெகுவாய் ஓரக்கண்ணால் நோட்டமிட்டான். “என்ன ஶ்ரீ, எங்க உன் ஆத்துக்காரர்?”
வந்தவுடன் இருப்பவர்களை கண்டுகொள்ளாது இல்லாதவரை கேட்டால், நான் எங்கே போவேன். மீண்டும் அழுந்த முறைத்து அவன் கை முட்டியை தட்டினேன். “Royapettah வரைக்கும் போயிருக்கார். அது என்னடா வந்த ஒடனே இருக்கற எங்களை கண்டுக்காம இல்லாதவர கேக்கவேண்டியது?”
நான் முடிக்கும் முன்பாய், அப்பு ஒத்தாசையாய் இணைந்து கொண்டாள்; எங்களுக்கு பக்கவாட்டில் ஒரு மூங்கிலால் பின்னப்பட்ட முக்காலியை இழுத்து போட்டு அமர்ந்து. “அதானே.. அப்படி என்ன வெச்சுருக்க நீ, ஷ்ரவன்கிட்ட ஒண்டியா தர? சொல்லு சொல்லு,” அவளும் இணைந்து கொள்ள இருக்கையில் சாய்ந்திருந்தவனோ, முன்னால் வந்து கவனமாய், sincereஆய் சொன்னான்.
“அது.. வந்து,” மெல்ல தயங்குபவன் போல பாவலா செய்தவனை அப்பு மேலும் முறைத்த. “டேய், நடிக்காதே; ஒழுங்கா சொல்லு!”
உத்தேசமாய் இன்று சொல்லிவிடுவது போல் ஒன்றிரண்டு முறை நீள்மூச்சில் சுவாசத்தை நிரப்பிக்கொண்டு என்னிடம் திரும்பினான். “அது ஒண்ணுமில்லை ஶ்ரீ; உன் ஷ்ரவன் உனக்கு கண்ணாடியெல்லாம் gift பண்ணியிருக்காரே. உனக்கு வயசாகிபோச்சுன்னு நினச்சு குடுத்தாரோ என்னமோன்னு அவர்கிட்ட கேக்கணும்.. அதுதான்,” என்று சமத்தான பையன் போன்று கூறினான்; முகத்தில் ஒழுகிய ஒரு அசட்டுச்சிரிப்போடு.
அவர் ஒன்றும் அப்படியெல்லம் தரவில்லை; காதலோடுதான் தந்தார் என்று சொன்னாலும் இவன் என் காலைவாராமல் விடப்போவதில்லை. பின், சொல்லி என்ன பயன். வாய்வார்த்தையில் ஒன்றும் கூறாது; மேலும் முறைத்தேன். முதலில் கேட்ட கேள்விகளில் என்னுடன் இணைந்தது போல், இப்போது இந்த போலி கோபத்துடனான முறைப்பிலும் அப்பு என்னுடன், என் பக்கம் தான்.
கனவை கலைத்த முழிப்பாய், மீண்டும் கதவைத்தட்டும் ஓசை கேட்டது. “இரு நான் பாக்கறேன்,” என்றாவாறாய் இம்முறை எழுந்து சென்றது கேத்தன் ~அது எங்கள் பேச்சிலிருந்து தப்பவா இல்லை வாசலில் ஷ்ரவன் என்று எண்ணியா; தெரியவில்லை.
இரு நிமிடங்களில் அங்கு ஒலித்த நகை அறையில் மூலையிலும் கேட்குமாறு கேத்தனும், அவன் கை அவனருகில் இருந்தவனின் தோளை சுற்றிய வண்ணம், அவனருகில் அவனோடு பேசிக்கொண்டு உள்ளே வந்தது சிவா.
சிறுவயதில் நாங்கள் குடியிருந்த வீட்டினருகில் இருந்தது சிவா குடும்பம். மிகச்சிறிய வயதிலேயே, தந்தையை இழந்த பின் அவரது வியாபாரம் மொத்தத்தையும் சிவாவின் தாயாரே கவனித்தும், இவனை சரியான வழிமுறையில் வளர்த்தும் வந்தார். கேத்தனும், சிவாவும் பள்ளி இறுதிவரை ஒரே வகுப்பிலேயே பயின்றனர். நாங்கள் மூவரும் ஒரே பள்ளி என்பதால் தினமும் காலையும், மாலையும் மூவரும் ஒன்றாகவே அவரவர் சைக்கிளில் சென்று வீடு திரும்புவோம். கேத்தன் என்னுடன் பிறக்காத தம்பியெனில்; சிவா சொந்தத்தில் இல்லாதத் தமயன்.
பள்ளி முடிந்த போதும், சிவாவும் அவனது தாயாரும் வீட்டை மாற்றிக்கொண்ட வேறு இடம்புகுந்த போதும் அவனுடனான எங்களது தொடர்பு முறிந்துவிடவில்லை. இறுதியாய் என் திருமணத்தின் போது பார்ததது, சிவாவையும் அவன் அம்மாவையும். திருமணம் முடிந்து லண்டன் திரும்பிய இரண்டு மாதங்களில் சிவா அம்மா தவறிவிட்டார் -cardiac arrest காரணமாய்.
நினைவில்லாத வயதில் தந்தையை இழந்தவன், இப்போது தாயும் அவனுடன் இல்லை என்ற போது அடுத்த சில மாதங்களெல்லாம் மிக்க தொய்வுடன் காணப்பட்டான். அவனைத் தேற்றி அவனுடனேயே இருந்து ஆறுதல் அளித்ததும் கேத்தன், அப்பு பின் அவனுடைய girlfriend தியா.
அரவமில்லாது ஒரு வருடமாய் சந்திக்காதவனை இன்று நேரில் கண்டதும், காரணமின்றி புரண்டிருந்த மனம் சீராய் லேசானதையும், முகம்நிரைக்க செழித்திருந்த சிரிப்பையும் உணர்ந்தேன்.
அவர்கள் உள்ளே விரைந்ததும், “ஹேய், சிவா!! வா வா,” என்று தன் கண்கள் அகலவிரிந்ததும் தெரியாதபடியாய் குதூகலித்த அப்பு முக்காலியில் இருந்து எழுந்தாள் அவர்களிடம் நகர்ந்தாள். நானோ அமர்ந்திருந்த இடத்தில் இருந்தே தலையை சாய்த்து எட்டிப்பார்த்து, “சிவாதான் இப்போ CEO ஆகியாச்சுல்ல; டேய், சிவா வாடான்னு சொல்லலாமா; இல்ல சிவா சார்னு வாங்க சார்னு சொல்லணுமா?” என்று பாவமாய் கேட்டு; விஷமமாய் கண்ணடித்தேன்.
அதனை பற்றிக்கொண்டு என்பக்கம் விரைந்தவனோ; அருகிலேயே அமர்ந்து, தன் கையினால் கால்முட்டியை காட்டி, “அரை டரௌசரோட சுத்தின காலத்துலேந்து என்ன பாக்கற, என்ன நீ சிவா சார்னு சொன்னா சும்மா விட்டுடுவேனா உன்ன?” என்று புருவம் உயர விசாரித்து லேசாய் நகைத்தான். “எப்படி இருக்க ஶ்ரீ அக்கா? ஒரு வருஷமாச்சு பார்த்து. ஊருக்கு வந்தியே, என்ன வந்து பாக்கணும் தோணலை உனக்கு?”
உரிமையாய் கோவித்துக்கொண்டவனின் கைகளை பற்றி பேசினேன். “சிவா, சாரிடா. கோச்சுக்காதேயேன்; நாங்க வந்ததுலேந்து இப்போதான் எதோ கொஞ்சம் சேர்ந்தாப்ல வேலையில்லாம இருக்கு. ஷ்ரவன் கூட நேத்திதான் ஊர்லேந்து வந்தார். மாத்தி மாத்தி என்னமோ வேலையாவே இருந்துட்டோம்பா,” இரையாமல் தணிந்து ஒலித்த குரலில் சமாதானம் அடைந்தவன், ஏதும் சொல்லும் முன் கேத்தனின் குரல் கேலியாய் ஒலித்தது. “ஐயோ, ஆரம்ச்சுட்டீங்களா. இதுக்கு தான் இந்தப்பையல இத்தனநாளா இங்க கூப்படல,” என்று தன் கைவிரல்களை நெற்றிப்பொட்டுக் வைத்து அழுத்திக்கொண்டவன் அப்புவிடம் திரும்பி, “too much of பாசமலர்; you see Ammu,” என்று பரிகசித்தான்.
“டேய், உண்மைய சொல்லு; அதனாலையா இத்தன நாள் சிவா வீட்டுக்கு வரலை?” என்று அபூர்வா அவன் காலைவார; கேத்தனின் அலைபேசி அடித்து அவனது கவனம் முழுவதையும் ஈர்த்துக்கொண்டது. அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பு போல், அவனும் தன் அலைபேசியை எடுத்து செய்கையில் பேசி வருமாறு காட்டு எதிர் இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான்.
கேத்தன் உள்ளே சென்ற மறுவிநாடி அப்பு, “சிவா, coffee?” என்று வினவ அவனும் சம்மதமாய் தலை அசைத்தான். நான் எழ எத்தனிப்பதற்குள் என் கையை பிடித்தமர்த்தி அதட்டலாய், “உக்காருங்க. உங்களை பார்க்க தானே வந்துருக்கான்; அவன்கிட்ட பேசுங்க நான் coffee போடறேன் உங்களுக்கும் சேர்த்து!” என்று உரிமையான அதட்டலாய் அப்பு கூறி என்னிடம் விட்டுச்சென்ற சிரிப்போடையே சிவாவின் முகத்தை பார்வையிட்டேன்.
மாநிறம், களையான முகம், நல்ல அழுத்தமான பார்வையாயினும் உற்சாகத்திற்கு குறைவில்லாத துருதுரு பார்வையும், கேத்தனைப்போல் கன்னம் படர்ந்திருந்த குறுந்தாடியிலும், மெல்லிய கீற்றினைப்போல் அவனது இளநகையில் தெரியும் பற்களும்; அவனது சிறுபிள்ளை சாயல் மாறாத ஒன்றாய் என் முன் அமர்ந்திருந்தான் சிவா.
“சரி, சொல்லு; எப்படி இருக்க? தியா எப்படி இருக்கா?” என்றது தான் தாமதம்; பெயரைக்கேட்டதும் அவன் முகம் தாங்கிய நகை, கடல் தாங்கும் அலைகளாய் ததும்பியது. உடன் வீசும் தென்றலாய் சேர்ந்து கொண்டது அவனது குரல். “நான் நல்லாயிருக்கேனே. தியாவும் நல்லா இருக்கா. Actualஆ இன்னிக்கு அவளும் வந்து உன்ன பாக்கறதா இருந்தது. ஆனா, நேத்தி ராத்திரி ஒரு outstation auditக்கு அவசரமா help வேணும்னு uncle கூப்ட்டாரா, அதான் திருச்சி வரைக்கும் போயிருக்கா.”
“அப்படியா? எப்போ திரும்ப வரா?”
“ஒரு வாரம்,” என்றவனின் குரலில் தன்னவளைப் பற்றி பேசியதும் வந்தொட்டிக்கொண்ட இனம்புரியாத ஏற்றம் தெரிந்தே இருக்க, கேலியாய் அவனை ஓரக்கண்ணில் பார்த்து கேட்டேன். “அதுசரி, எப்போ கல்யாணம் பண்ணிக்கறதா உத்தேசம்?”
கேட்டதை உணர்ந்து மேலும் மெலிதாய் புன்னகைத்து விடையளித்தான். “தியாக்கு இன்னும் final paper ஒண்ணு இருக்கு. அதை முடிச்சப்பின்னாடின்னு இப்போதைக்கு இருக்கு, பாப்போம்கா. ஆமாம், என்ன நீ மட்டும்தான் இருக்க சார் எங்க?” என்று தியாவிலிருந்து சாருக்கு வந்துவிட்டான் ஒரு நொடிப்பொழுதில்.
அவன் கூறிய முறையை உணர்ந்து, மெல்லமாய் முறைத்தேன், “அது என்னடா சார் புதுசா?” நான் மட்டும் உரிமையாய் அக்காவாம், அவர்மட்டும் சாராம். இது என்ன புது கூத்து!
மேலும் சிறிதாய் சத்தமாய் நகைத்து குறும்பாய் கண்சிமிட்டினான், “சரி விடு, நான் வேணும்னா அத்தான்னு கூப்படவா?” என்று குரலில் முழுதாய் ஆரவாரம் தழுவ. அவன் தன் தாயை இழந்ததில் இருந்து இத்தனை சிரிப்புடன் என்றும் இல்லை, அவ்வளவு ஏன் எப்போதும் இருக்கும் துடிப்புடன் கூட இல்லாமல் வெற்று உடல் அலைவதைப்போல் திரிந்து வருகிறான் என்று கேத்தன் ஒரு முறை வருத்தமாய் கூறியது நினைவில் ஊர்ந்தது. அப்படியெல்லாம், அடிப்பட்டு துவண்டிருந்த பிள்ளையின் முகத்தில் இன்று சிரிப்பைக்காண, அந்த நொடி அவன் எப்போதும் அவ்வாறே சிரித்துக்கொண்டு மன அமைதியோடு, எட்டு வயதில் நான் பார்த்து விளையாடிய சிவாவாக, அந்தத் துடிப்புடனே எப்பொழுதும் இருந்துவிட வேண்டுமென்று கடவுளை வேண்டியது மனம்.
***
அன்று மாலையைப் போல் கேத்தனும், சிவாவும் விடை பெற்றுக்கொண்டனர், ஷ்ரவன் வீடு திரும்பும் முன்பாகவே. அவர் வந்தவுடன் செல்லலாம் என்றதற்கு வேறொரு நாள் வருவதாய்ச் சொல்லி, இருவரும் கிளம்பிவிட்டனர்.
அதன்பின், அப்புவுடன் நானும் கோவில் வரை காலார நடந்து சென்று வந்தோம். மதியமே அலுவலகம் சென்றிருந்தவர் வீடு திரும்பியது அன்றைய வெளிச்சம் மறையத்தொடங்கி, வானமெங்கும் இருள் பூசிக்கொண்ட பின் தான்.
இரவு உணவை முடித்தப்பின், தனக்கு வந்த அழைப்பை பேசியவாறு வெளியில் சென்றவரை பார்த்து பின் அறைக்குள் வந்து கால்களை முன்னே நெடுக நீட்டியவாறு மெத்தைமேல் அமர்ந்து கொண்டேன். சாத்தியிருந்த கதவினை அவள் பக்கமிருந்து உள்ளே தள்ளி, தலையை மட்டுமே உள்ளே நீட்டி எட்டிப்பார்த்தாள் அப்பு “ஶ்ரீ, இன்னிக்கு ஒரு நாள், உங்க ரெண்டுபேர் கூடையும் தூங்கவா?” என்றவளின் குரல் குழைந்து மெலிதாய் இருந்தபோதிலும், கண்களில் எப்போதும் நிறைந்திருக்கும் ஓட்டம் வெள்ளமாய் ஆகிக்கிடந்தது.
“இது என்ன கேள்வி, கொழந்த! உள்ள வா, வந்து இங்க படுத்துக்கோ,” என்று கையினால் எனக்கு அருகில் தடவி காண்பிக்க அவளோ மனதில் இருந்தத் துள்ளலே கால்களுக்கு இறங்கியதைப் போல் துள்ளி இரண்டொரு அடியில் மெத்தைமேல் ஏறி என் மடிமீது தலைவைத்து படுத்து கொண்டாள்.
அழைப்பை முடித்து கொண்டு உள்ளே நுழைந்த ஷ்ரவனைக் கண்டதும், “இன்னிக்கு ஶ்ரீ மடி எனக்கு தான், உனக்கில்ல,” என்று நாக்கை துறுத்தியவாறு வம்பிழுத்து பரிகாசம் செய்தவளை நோட்டமிட்டவர் பார்வை ஒரு நொடி என்னதற்கு தள்ளாட, அதனுள் கண்ட சிரிப்பை பதிலாய் கொண்டு மெத்தைக்கு முன்னேறினார். அவர் பக்கம் வசதியாய் அவர் சாய்ந்து கொண்டதும், மெத்தை மீது இருந்த தன் கால்களை உரிமையாய் தன் அண்ணாவின் மடிமீது கிடத்திக்கொண்டாள்.
அவள் என்னிடமும் அவரிடமும் ஆசையாய் இருப்பது எப்போதுமேயானாலும், என்றும் இதைப்போல் எங்களுடன் உறங்குவதாய் குழந்தைப்போல் வந்து கேட்டதில்லை. இத்தனை நாட்களாய் தனியாய் அவள் துயில் கொண்ட இடமும், எங்களுடன் இருப்பதில் அந்நியமாய் தோன்றியதோ, தெரியவில்லை. அன்னையை கட்டிக்கொண்ட பிள்ளை போல் என் மடிமீது உரிமையாய் அவள் படுத்துக்கொண்ட வேளையெல்லாம் ஏன் எதற்கென்ற கேள்விகளுக்கு இடமில்லாமல் இருந்தது. என் கருவறையறியா குழந்தையல்லவா அவள்!
அந்நேரம் சரியாய் உள்ளே அசைந்த குழந்தையை நான் கைகளில் உணர, அவசரமாய் அப்புவின் கைப்பிடித்து வயிற்றின்மேல் பதித்தேன். அசைவினை உணர்ந்தவள், தன் தலையை திருப்பி, “என் லட்டூ!” என்று கொஞ்சிவிட்டு திரண்டிருந்த வயிற்றை மென்மையாய் முத்தமிட்டாள்.
உடனேயே, அவர் பக்கம் திரும்பி, “ஏன் டா, நம்ம லட்டூ பாக்க எப்படி இருப்பா?” என்று கண்கள் பெரிதாய் விரிவடைய விசாரித்தாள். தங்கையின் சந்தேகத்தில் தன்னிலையின்றி உரக்க சிரித்தவர், “நான் மட்டும் என்ன உன் லட்டூவ கண்ணால பார்த்தேனா? ஶ்ரீதான் இப்போவே குழந்தைக்கிட்ட ரகசியமெல்லாம் பேசறா, அவகிட்டையே கேளு!” என்றவாறாய் என் பெயரைச் சொல்லி விடைபெற்று கொண்டார்.
என்னைக் கேட்டால்.. எனக்கெப்படி தெரியும்; ரகசியம் பேசினேன் என்றால் கண்களால் பார்த்தா பேசினேன்; என் கையில் வயிற்றைத்தொட்டு அந்த ஸ்பரிசத்திலும், மனதினுள் கொஞ்சிக்கொண்டும்; அவ்வப்போது உதைக்கும் வேளையில் எல்லாம் இசை பாடியும் தானல்லவா பேசியிருக்கிறேன்.
“சரி, சொல்லுங்க ஶ்ரீ; நம்ம லட்டூ எப்படி இருப்பா?” என் மடியில் படுத்தவாறே தன் பெரிய கண்களை உருட்டி என்னை பார்த்தவள் சற்று எழுந்து, தன் விரலினால் என் கன்னம் கிள்ளினாள், “சொல்லுங்க சொல்லுங்க, கன்னம் இந்த மாதிரி குண்டா இருக்குமா, இல்ல அவனுதப்போல ஒட்டிப்போய் இருக்குமா?” என்று அவரை கேலி செய்து என்னையும் பார்த்து கண்ணடித்தாள்.
“என்னப்போல குண்டு கன்னமும் இல்லாத, அவரப்போல ஒட்டியும் இல்லாம, நல்ல அப்பக்கன்னமா உன்னுது மாதிரியே இருந்தா உனக்கு ஓகேவா, சொல்லு?” என்றதுடன் அவளது ஒற்றை கேள்விக்கான பதிலை தந்து, பின் வரயிருந்த அனைத்திற்கும் நானும் அவரும் மாற்றி கதை கூற, அவளது சிறு நெற்றியை இதமாய் அவ்வப்போது ஒற்றிய என் உள்ளங்கைக் கசிந்த இளஞ்சூட்டிலும், நெற்றி மறைத்த அவள் கூந்தலை ஒதுக்கியும், அதனை மிதமாய் கோதியும்; அந்த வேளைக்கான உயிராய் இவரது உடனிருத்தலும்; அவ்வப்போது நான் துவளும்போதெல்லாம் கைக்கால் அசைத்து என்னை அசரச்செய்து, நான் செய்திடவே இல்லாத தவத்திற்கு கிடைத்த வரமாய் ஆகிப்போன என் பிள்ளையும், வேறெதுவும் வேண்டாதவாறும்; இதையும் வேண்டாமலேயே மடியில் விழுந்த serendipityயாய் மனம் எண்ணவும்; அப்போது எங்கும் நிறைந்திருக்கும் காற்றைப்போல அங்கிருந்த மிதமான மௌனம் எங்கள் மூவருக்கும் அதனில் அலாதி சுகம்.
Leave a Reply