anbudai 24

anbudai 24

அலுவலகத்தின் நிர்வாகங்கள் அனைத்தும் officialஆய் தொடங்கப்பட்டு, அர்ஜுன் மற்றும் ஆதிராவின் உதவியோடு, ஷ்ரவனால் ஒருவாறாய் சமாளிக்க முடிந்தது. மெட்றாஸ் வந்திறங்கியதில் இருந்து வெளியூர் பிரயாணிக்கவும், அலுவலக சேதிகளாய் மெட்றாசினுள்ளே வேறேதும் headoffice எனறு இவை எதற்கும் செல்ல வேண்டாதபடியாய், ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசில் என்றிருந்த நாட்களெல்லாம் நீரில் பட்ட கல்லெறியினைப்போல வட்டமிட்டு நிர்த்திறந்துவிட்டு, இருப்பனப்போல் காட்டிக்கொண்டு பின் காணாமல் போயிருந்தன.

காலையில் அலுவலகம் கிளம்பும் முன்பாய் கிட்டும் சில நேரத்தில் அவருடன் அமர்ந்து அருந்தும் காபிகளிலும், அதனுள் அவருடனிருத்தலை முழுதாய் எங்களுக்கும், எங்களுக்குள்ளிடையேயான காதலுக்குமென கொண்டிருந்தவள்; இப்போது எங்களுக்கும் அந்தக்காதலின் முடிவிலியாய் உயிர் பெற்று, உருவும் பெற்றிருந்த குழந்தையுடன் உரையாடியும் களித்து கழித்திருந்தேன். அதன்பின், காலை உணவும் மதிய உணவிற்குமென அப்புவும் ஷ்ரவனும் வீடு வந்தார்களெனில் அவர்களுடனும் இல்லையெனில் தனியே ஏதோவொரு புத்தகத்தின் பக்கங்களுக்கு இடையே தங்கிக்கிடந்தும், வயிற்றினில் புரளும் குழந்தையுடன் கதைத்துமென, அவ்வாறே விரைந்திருந்தன என் நாட்கள்.

முன்னறே எழுதி வைத்திருந்த மூன்று நான்கு playவிற்கான திரையிடல் ஏற்பாடுகள் ஒன்றை அடுத்து ஒன்றென நிறைந்திருந்து காத்திருந்தன. அவையாவும் முடியும் தருவாயில் அடுத்த ஒன்றை எழுதத் தொடங்கினால் போதுமென்ற அளவில், சிறியதாய் எனக்கென தேவைப்பட்டதாய் தோன்றிய downtimeஐ தானாய் எடுத்துக்கொண்டேன்.

முழுதாய் வெகுண்டு சாய்ந்திருந்த பொழுது மெல்ல மெல்ல தன்னுடைய இடத்திற்கு வந்து கொண்டிருந்து முடியாவானம் முழுதையும் வெளிச்சம் நீள்க்கதிர்களாய் ஆட்கொண்டிருந்தன. விடிந்தும் விடியாததுமாய் ஆழ்கடல் வண்ணம் சிதறியிருக்க, அதனுள் தூரிகையினால் குழந்தைத் தன் கைக்கொண்டு கிறுக்கியதைப் போல் ஆங்காங்கே தென்பட்டது மிகச்சிறிய வெளிச்சம். மணி நான்கரை அளவினதாய் இருக்கலாம்.

ஏற்கனவே உறக்கம் இல்லாது சுமார் ஒரு மணிநேரமாய் தூங்க முயற்சி செய்தும் அதில் தோல்வி கண்டும் கழித்தாயிற்று. இத்தனை நேரம் படுத்தியது போதாதென்று கண்ணோரம் நின்றிருந்த இம்மியளவு தூக்கமும் இப்போது கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருக்க, எழுந்து அந்த அறைக்குச் சென்று ஏதேனும் எழுதத் துவங்கலாமேயென்று யோசனை வழங்கியது மூளை.

எழுதுவதை விடுத்திருந்த கடந்த சில நாட்களில் எல்லாம் என்னை அண்டாத எதோ ஒன்று, இப்போது என்னைச் சுற்றி இறுக வட்டமிட்டு இருந்ததை உணரமுடிந்தது. வாழ்வில் இத்தனை நாட்கள் தொடர்ச்சியாய் எழுதியில்லாமல் ஊதாறியாய் நீ ஒரு நாளும் இருந்ததில்லை என்று புத்தி கடிந்துத்தள்ளியது. இப்போதும் தூக்கம் தான் கைக்குள் இல்லையே இன்று நிச்சயமாய் எதையேனும் எழுதியேத் தீர வேண்டும் என்னும் மன ஓட்டத்துடன் ஜன்னல் பக்கமாய் தலையை சாய்த்து பார்த்திருந்தவள் தலையை திருப்பியதற்கு பலனாய் அருகில் உறங்கிக்கொண்டிருந்தவரை கண்ணாரக் கண்டேன்.

ஷ்ரவன் இத்தனை செறிவாய் துயில் கொண்டு அதனை நான் கண்டும், லண்டனில் இருந்த சில முறையை தவிர வேறென்றும் ரசித்ததுமில்லை. ரசித்ததில்லையெனில், அவ்வாறான வாய்ப்பென்றும் அமைந்ததில்லை. சிரத்தை மறந்து ரசிக்குமளவு செறிவாய் நான் முழித்திருக்கையில் அவர் உறங்கியது இல்லை.

மேடிட்டிருந்த வயிற்றினால் பக்கவாட்டில் திரும்பமுடியாது போனாலும் ஒரு கையினால் நிறைந்து விளைந்திருந்த கர்ப்பத்தை தாங்கி என்னாலானவரை அவர் பக்கம் அசறாது மெல்ல திரும்ப முயற்சித்தேன். மூன்றுப்பேர் தாராளமாய் தூங்குமளவினதாய் உள்ள படுக்கையில் தன் பாதியையும் தாண்டி, தன்னை மறந்து உறங்கியவரைக் கண்டதும் தூக்கமில்லா சோர்வையும் தாண்டி என்னை வந்தொட்டிக் கொண்டது ஒரு குறுநகை. ஆசையாய் தலை கோதி சிகைக் கலைக்கும் விரல்களையும், நீண்டிருந்த நெற்றியில் இளஞ்சூட்டு முத்தம் பதிக்கவும் அப்போது உள்ளுக்குள் எழுந்த வாஞ்சையை போன்றதொரு மெல்லினமான நகை.

உரிமையாய், ஆசையாய் அவ்வாறெல்லாம் செய்யத் தோன்றினாலும், தூக்கத்தில் சீராய் ஏறி இறங்கிய மார்பும், கவிழ்ந்திருந்ததில் நெற்றிமீது கலைந்திருந்த முடியிலும், தலையணையில் புதைப்படிருந்த முகமும், முகத்தில் அடுக்காய் படர்ந்திருந்து ரேகையெனவே ஆகியிருந்த அசதியுமில்லாது இப்படி நிம்மதியான துயில் அவர் கொண்டு அதனை நான் கண்டு எத்தனை நாட்கள் ஆகியிருக்கும்!

இப்படியே தினமும் ஒரு தொந்தரவும் இடையூறும் இன்றி, தூக்கத்தினூடே முழித்துக்கொள்ளாமல் தூங்கீனாரானால் என்னவாம்! சரியான கொட்டாப்புளி, இம்மி சத்தமென்றாலும் முழித்துக்கொண்டு பின் தூக்கம் வராமல் வீட்டை உலாத்த வேண்டியது! நினைப்பிலேயே திட்டியவள், அவரது தூக்கம் கலைந்துவிடாத படி மெல்ல ஓரப்பார்வையில் நோட்டமிட்டமன்யமாய் எழுந்தமர எத்தனித்தேன்.

படுக்கையில் இருந்து எழுந்து, பின்னால் சாய்ந்த நேரமெல்லாம் அருகில் அசைவை உணர்ந்து லேசாய் ஷ்ரவன் முழித்துக்கொள்ள, அதனை உணர்ந்தவள் மேற்படி அவர் தூக்கம் கலையாதவாறு அங்கணமே உறைய; அவையெதுவும் உபயோகமே ஆகாததைப்போல் விட்ட தூக்கத்தை பிடிக்க எண்ணி பாதித் திறந்த விழிகளில் நிரம்பி வழிந்தத் தூக்கத்தில் இமைகள் படபடக்க தன்னை பார்வையில் விழுங்கிக்கொண்டிருந்தவளை அரைகுறையாய் திறந்த விழிகளின் வழி கண்டுகொண்டார்.

இத்தனை கவனமாய் இருந்தும் இப்படி எழுந்துவிட்டாரே இதற்கு பேசாமல் முத்தமே தந்து எழுப்பியிருக்கலாம் என்று நினைக்க முகத்தை சுளிக்காமல் இருக்கமுடியவில்லை. அவரோ எங்களுக்குள் நீண்டிருந்த ஜானளவு இடைவெளியை, அமர்ந்திருந்தவளின் இடையைச் சுற்றி தன் கரம் தொடுத்து குறைத்துக்கொண்டு, பழையபடியாய் லாவகமாய் கண்களை மூடி பின் கேட்டார். “எதுக்கு அப்படி பாக்கற?” கேட்ட குரலிலோ தூக்கமே தன்னையே அதனுள் ஊற்றிக்கொண்டதைப் போலொரு கலக்கம்.

தூக்கத்தை கெடுத்துக்கொண்டு இப்போது இந்த விசாரணையெல்லாம் தேவைதானா இவருக்கு, என்று தோன்ற மேலும் கோபமாய் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டேன். ஆனால் கேட்டதிற்கு பதில் தந்த நாழி என்னைமீறி தழைந்திருந்தது என் குரல், “எப்படி பாக்கறேன்?” கூடவே அரும்பியிருந்த ஒரு பிறை புன்னகையோடு.

தலையணையில் புதைத்திருந்த தலையை லேசாய் திருப்பி, ஒற்றைக்கண்ணை ஒண்டியாய் திறந்து, அவர் குரல் என்னதற்குத் தோதாய் ஆர்ந்தமர்ந்து ஒலித்தது. “மொதல் தடவ பாக்கற மாதிரி, அப்படியே முழுங்கறமாதிரி,” என்று கூற தன்னை மீறிய, தான் போலியாய் கடிந்து கொண்டதையும் மீறி தன் முகத்தில் மலர்ந்த புன்னகையை வடிகட்டத் தெரியாதுத் திணறிப்போய், கண்கள் மூடியிருந்து பாசாங்கு செய்தவரை பார்த்தேன். “அப்படியா பாக்கறேன்?”

என் முகம் காணவில்லை என்றாலும் என்னிடமிருந்துத் தொற்றிய பாதிச்சிரிப்பினோடே தலை அசைத்து ஆமென்றார்.

வடிகட்ட முடியாதது போய், இப்போது வடிகட்ட அவசியமில்லாது முகம் முழுவதும் படர்ந்திருந்தது அப்பெரிய புன்னகை. “சரி, அப்போ இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே முழுங்கிக்கறேன், என்ன சரியா?” தூங்கவில்லையானால் தண்டனையாய் வம்பிழுக்கலாம் தானே?

கவிழ்ந்ததில்லிருந்து என் பக்கமாய் திரும்பியவர் இடை தொடுத்து அணைத்திருந்த கரத்தினால் மெதுவாய் குழந்தையிருந்த வயிற்றினை சாரங்கியை மீட்டும் விரல்களைப் போல் மெல்ல வருடி, “எப்போவேணும்னாலும் முழுங்கிக்கலாம், இப்போ படுத்து தூங்கு கண்ணம்மா,” என்று கூற, தூங்குவதற்கு இதமாய் மெல்ல அவர் தலை வருடினேன். “தூக்கம் வரலைமா. ரொம்ப நேரம் வெறுமனையே படுத்துக்கெடக்கேன்.”

வருடிய கையினைப் பற்றியவர், என்னைக் கண்களில் ஒரு பார்வை பார்த்தார். இப்போதும் நான் என் அத்தனையையும் கண்டுகொள்ளும் அவர் கண்களில் தூக்கம் ஏராளம். அதனைக் காட்டிலும் தன்னவளைப் பற்றிய அக்கியானம் நிதர்சனமாய் ஏராளம். “என்ன கண்ணம்மா ஆச்சு, கால் மரத்துப்போச்சா?”

“ம்ஹூம்!”

“மூச்சுவிட முடிலையா?” குரலில் அக்கறையும் கவலையும் தோய என்னை நேரில் பார்த்து கேட்டவரிடம் சத்தமின்றி லேசாய் முறுவலித்தேன். “அதெல்லாம் எதுவும் இல்ல ஷ்ரவன், I am okay. அசதியா இருக்கு அவ்வளோதான். படுத்தா தூக்கம் வரலை,” என்று சொல்ல சொல்ல என் ஆற்றாமையை எடுத்துரைக்க வாகாய் குரல் கமறத்தொடங்கியது. அதனை சரி செய்து அடுத்த படியாய் சொற்கள் கோர்க்க பத்து விநாடி பிடித்தாலும், அதையே செய்தேன். “நீங்க இன்னும் கொஞ்ச நேரம் தூங்குங்களேன். sunday தானே..”

தூக்கமில்லாமல் நான் படும் அவஸ்தையை கண்களில் ஒரு helplessnessஓடு பார்த்தவரிடம் கூற சமாதனமொழி ஒன்றும் என்னிடமில்லை. அதனை விடுத்து மனதில் தோய்ந்திருந்ததையே மென்மையாய் கேட்டேன். “எனக்கு தூக்கம் வரலை. நான் போய் கொஞ்சநேரம் எழுதவா? எனக்கு எழுதணும்போல இருக்கு.”

கோரியதை உணர்ந்து என் மேல் கொடியென படர்ந்திருந்த தன் கையினை பின்னாலிழுத்துக்கொண்டும், வாகாய் தலையை மீண்டும் தலையணைக்குள் புதைத்தும் பதிலளித்தார். “கவனமா நடந்து போ கண்ணம்மா, இருட்டுல இடிச்சுக்காதே,” என்று உதட்டினோடே சொல்லியவரின் இமைகள் கூறி முடிக்கும் முன்பே ஒன்றை ஒன்று கட்டியிழுத்துக்கொண்டன.

அதனைப் பார்த்த மாத்திரத்தில் மறு கேள்வியேதுமின்றி ஆசுவாசமடைந்தது பேதை மனம். சுவாசப்பையினை முழுதாய் கரித்த சுவாசத்தை வெளியேற்றி ஒரு நீள்மூச்சில் நிம்மதியடைந்து, கையினால் மெத்தையை தாங்கியபடி மெல்ல எழுந்தேன். நான் எழுந்த மென்னசைவின் உணர்வில் புரண்டு படுத்தவரைக்கண்ட எனக்கு முகம் மீண்டும் சுருங்கிப்போனது. “சரியான கொட்டாப்புளியே தான்!” என்று மனதினுள் வைதவளை நோக்கி அந்நேரக் காலை தென்றல் வீச்சினைப்போல மெலிதாய் இசைந்தது அவர் குரல். “எதாவது சொன்னியா கண்ணம்மா?” என்றவாறாய். மனதில் நினைத்ததாய் எண்ணி முணுமுணுத்துவிட்டது கூட தூக்கத்தில் காதினில் கேட்டு விடுமா!

“என்ன எழுதணும்னு எனக்கு நானே பேசினேன், உங்களுக்கு ஒண்ணும் இல்ல, பேசாம தூங்குங்க,” மென்மையாய் அதட்டிய பின் தளர்ந்த மென்நடையில் நடக்கப்பழகும் சாயலில் பாதம் மெதுமெதுவாய் தரையை ஊரத்தொடங்க சில அடிகளில் கதவினை அடைந்து, ஓசை எழுப்பாமல் வெளியே சென்று கதவை சாற்றி புத்தக அறைக்கு நகர்ந்தேன்.

****

வானின் சொந்தம் நிலவு சேர்ந்து வரும் இருள்சூழ் வேளைக்கா, புலர்ந்து மஞ்சள் தீட்டி தீக்கோலமிடும் காலை பொழுதிற்கா என்று புரியாத விடியல் வேளை. மெத்தையை ஒட்டி உள்ள ஜன்னலின் ஊடே மெல்லினமாய் மிதந்து வந்து முகத்தில் விழும் ஒளிவீச்சின் இதமும், அபார்ட்மெண்டை சுற்றி நடப்பட்ட மரங்களின் வரிசையில், ஜன்னலின் வழியே காட்சியளிக்கும் வாதுமை மரத்தின் கிளைகளில் இருந்து வந்த சலசலப்பு ஓசையிலும், ஜன்னல் திரை போடப்பட்டிருந்தும் தவழ ஆரம்பித்த குழந்தையாய் வீட்டினுள் கரைபுரண்டிருந்த அவ்வெளிச்சத்தலும் அவர் தூக்கம் தொலைத்திருப்பார்.

முழித்தும் கண்விழிக்காமல் அனிச்சையாய் அருகில் அப்பெரிய கை என்னைத் தேடியிருக்கும். கிட்டுவது என்னவோ ஏமாற்றமும், மெத்தையின் விரிப்போடு புதைப்பட்டிருக்கும்  எலுமிச்சையும் மிண்ட்டும் கலந்த என் பாடிவாஷ் வாசனையும் தான். நினைப்பிலேயே வந்தொட்டிக்கொண்டது ஒரு உன்மத்த சிரிப்பு! அத்தோடு வந்தனயெல்லாம் அவர் என்னை வாஞ்சையாய் கட்டியணைத்து உச்சி முகர்ந்த நியாபகம். 

மெட்றாஸ் வந்த நாளில் இருந்தே என் தூக்கம் சரியான அளவினதாய் இல்லையென்பதை அவரும் அறிந்தே இருந்தார். குழந்தை புரண்டு துயில் கலைப்பதை தாண்டி, சிந்தனை செய்யும் மனதிற்கும் எல்லை ஒன்றும் கொண்டதாய் இல்லை இன்று வரை. குழந்தை பற்றிய கவலை- அதுவும் இம்முறை சென்று மருத்துவரை பார்த்து வந்ததில்லிருந்து சற்று கூடியே இருந்தது. மனம் தாங்கிய எந்த கனத்தையும் அவரிடம் வாய் திறந்து சொல்லத்தயங்கினாலும், என் செயல்களையும், இரவுகளின் அடர் வேளைகளில் தூக்கமின்றி திண்டாடும் நேரமெல்லாம் என்னோடே எழுந்தமர்ந்து லகுவாய் பேசி தூங்கவைப்பதுமாய் இருந்தார்; முன்பைவிட அதிக செறிவுடன் என்னை கவனித்து வந்த அவருக்கு கண்ட முகம் காட்டும் ஓடை நீர்போல் அவையெல்லாம் தெளிவு!

மெத்தையில் இருந்து இறங்கியவர் நேரே சென்று பல் தேய்த்தப்பின் அறையில் இருந்து வெளியேறி என் குரல் காற்றினோடே கலந்து இசைந்து கேட்ட திசையில் கிச்சனிற்கு நடந்தார்.

சமைக்கும் நேரம் கேட்பதற்கு என, தன் அம்மாவின் சமையலறையில் எப்போதும் ஒரு ரேடியோ உண்டு, என்று ஷ்ரவன் கூறி கேட்டதுண்டு. அதுவே இப்போது, அப்புவிற்கும் எனக்கும்.

கிச்சன் கேபினட்டை அடுத்து உள்ள அலமாரியின் ஓரத்தில், ரேடியோ தன் வேலையை சீராய் செய்து பாடிக்கொண்டிருக்க, நானும் என் சின்னக் குரலில் இணைந்து உதட்டினால் பாட்டினை முணுமுணுத்துக்கொண்டு காபி மேக்கரில் இருந்து டிகாக்‌ஷனை என் கோப்பைக்கு மாற்றிக்கொண்டிருந்தேன்.

தூக்கக்கலக்கதின் பிடியில் உள்ளே நுழைந்தவரைக் கண்ட விழிகள் விகசித்த மலராய் விரிந்தன. “என்னமா அதுக்குள்ள எழுந்துட்டீங்க?” கைகள் தன்பாட்டில் காபியை கலந்தன, கண்களோ நான் செய்யும் வேலையில் மையமாய்; குரலில் அவரைக் கேள்வி.

கைக்கொண்டு முடி நுழைத்து, cabinet மேல் ஏறி ஒன்றும் பேசாது அமர்ந்தவரை நெருங்கி, என் விரல்கள் இதமாய் அவர் தொடையில் மெத்தென பதிந்து, வார்த்தைகள் வினாவாய். “காபி?” வேண்டும் என்று தலை அசைத்தார்.

எனக்கு கலந்த காபியை ஓரம் நிறுத்தி, கவிழ்ந்திருந்த கோப்பைகளில் ஒன்றினை நிமிர்த்தி அவருக்குமான காபியை கலந்தேன். காய்ந்து புகைவிட்டிருந்த பாலை காபி டிகாக்‌ஷனோடு சேர்த்த நேரம் நாசி தொட்ட வாசம், தூங்கி வழிந்திருந்த எங்கள் மூளை செல்களுக்கான wake up call!

கலந்த காபியை கோப்பைக்கு மாற்றி அவர் கைகளுக்குள் புகுத்தியதும், அவரது விரல்கள் அதனைச் சுற்றி அணைத்துக்கொண்டன.

என் கையில் இருந்த காபியே கண்ணாய் இருந்தவள் அது தீரப்போகும் கடைசி துளியில் தான் அவரை கண்டு கொண்டேன். “ஷ்ரவன், இன்னிக்கு கார்த்தால எழுதறேன்னு போனேனே, என்னமோ திடீர்னு தமிழ்ல எழுதணும்னு இருந்தது. ஒரு short story எழுதினேன். உங்களுக்கு மெய்ல் பண்றேன், அப்பறமா நேரம் கிடைச்சா படிச்சு பார்த்துட்டு எப்படி இருக்கு சொல்றீங்களா?” பருகிய காபியில் உயிர் கலந்திருந்த உற்சாகம் முழுவதும் குரலில் நிரம்பியிருந்தது.

பள்ளியில் தமிழ் படித்திருந்தாலும் நான் எழுதத் துவங்கியதில் இருந்தே, எழுதித் தீர்ப்பது என்னவோ ஆங்கிலத்தில் தான். வெகுநாட்கள் கழித்து மனம்கொண்ட காதலை எழுத்தில் மொழிபெயர்த்து அவருக்கு தந்திருந்த கடிதத்தில் எழுதிய தமிழில் இப்போது மற்றுமொரு சிறுகதை.

கையில் இருந்த கோப்பையை விட்டு நகர்ந்த அவரது கண்கள் ஆச்சரியமும், அவசரமுமாய் கதைத்த செய்தி கேட்டு என்னை பார்த்தன; அவர் மனம் கொண்டிருந்த அதிர்ச்சியெல்லாம் காட்டும் பளிங்காய் கருவிழி இரண்டும் விரிய, “தமிழ்ல எழுதினியா கண்ணம்மா? நிஜமாவா?” கூறிய வார்த்தையுடனே ஜன்னலினோடே வந்த அனலியின் சாயல் தோய விகசித்த அவரின் முகத்தை கண்ட என் முகத்தில் அதனை விடப் பெரிதாய் ஒரு மந்திரச்சிரிப்பு.

ஆமென்று தலையசைத்ததில் என் விடையை கூறி, மேலேதும் கூறாது அவரையே பார்த்த வண்ணம் நின்றிருந்தேன்.

“அப்பு இன்னும் எழுந்துக்கலையா?” மறுநொடி கேட்ட அவரை பரிகாசமாய் பார்த்து, உதட்டில் பொத்திய குறுஞ்சிரிப்போடு அவர் கையில்லிருந்த காலி கோப்பையை வாங்கி கொண்டேன்.

“கார்த்தால காபி உள்ள போன தான் குரலே வருது.. ம்ம்?” அவர் அமர்ந்திருந்த cabinetஇலிருந்து கிச்சன் sinkஇற்கு நகர்ந்தபடியாய் கூறியதிற்கு பதிலாய் மீண்டும் ஒரு சிரிப்பு.

ஒரு குதியில் தரைக்கு இறங்கியவர் என்னை பின் தொடர்ந்து, “நான் செய்யறேன்.. நீ போய் உக்காரு..” என்றவாறாய் கோப்பையை வாங்கி கொண்டார்.

அடுப்படியில் இருந்து சென்றவள் நேரே வாசலுக்குச் சென்று செய்தித்தாளை எடுத்து வந்து, couchஇல் அமர்ந்திருந்தேன் அவர் வரும் நேரமெல்லாம். முழுவீச்சாய் வெளியில் அலைந்து திரிந்த வெளிச்சம், திறந்திருந்த கதவு அளித்த அனுமதியோடு வீட்டினுள் படையெடுக்க, தன் அனுமதியில்லாது என் கன்னங்களில் எல்லாம் சிதறிக்கிடந்த ஒளியை கண்டிப்பதைப் போலொரு பார்வை பார்த்து என் புறமாய் நடந்தார்.

கண்களில் sincerityஓடு செய்தித்தாளை வாசித்திருந்த என் உதட்டுக்குவியலை கூர்மையாய் ஆய்ந்தமாத்திரத்தில் எல்லாம் என்னை அடைந்திருந்தார். அடுத்த விநாடி, இதழோரங்கள் மட்டுமாய் விரிந்துத் தன் எல்லையைத் தாண்டி கன்னத்தை எட்டியிருந்த என் புன்னகையை தன் கையினால் பிடிக்க நினைத்தவரைப்போல் என் கன்னம் வருட என்னை சுற்றிக்கொண்டது அவரது வலிய கரம்.

அவர் விரல் தீண்டி மெத்தென்று என் கன்னம் கிறுக்கிய கதைகளெல்லாம் அவர் கண்களின் கதகதப்பிலும், அவை என்னை பார்க்கும் பார்வையிலும், பிறந்து கண்ட தாயின் முகமாய், யுகப்பரிச்சயம் என் மனதிற்கு!

ஒரு நொடியில் முகம் கொண்டிருந்த sincerity ஆகப்பெரும் ஒரு complaintஉடனான முகச்சுளிப்பானது. இதழ் அணைத்த குறுஞ்சிரிப்போடே பேசாமல் என்னையும், என் முகத்தின் மாற்றத்தையும் கவனித்து அமர்ந்திருந்தார், இன்னுமும் விரல்கள் என் கன்னம் தொட்டு அளவளாவ. ஓரப்பார்வையில் முறைத்தேன். “நீங்களுமா?”

ஒன்றும் புரியாமல் என்னையே திரும்பகேட்டார் ஷ்ரவன், “என்னது நீங்களுமா?”

என் கை இறுகப்பிடித்திருந்த செய்தித்தாள் இப்போது அருகில் கிடத்தப்பட்டிருந்தது. “ஆமாம், என் கன்னம் ரொம்ப பெருசா இருக்குன்னு, இந்த கேத்தன் இப்படித்தான் என்ன கிள்ளி கிள்ளி விளையாடறான். நீங்களும் அப்படித்தான் பண்றீங்க!” வேகமாய் கைகளை விரித்தும், விழிகளை பெரிதாக்கியும் இடைவெளியில்லாது புகார் செய்து கொட்டினேன்.

“என்ன கண்ணம்மா நீ, ஸ்கூல் போற குழந்தை மாதிரி கன்னத்தை கிள்றான்னு complain பண்ற?” இன்னும் அவர் விரல்கள் என் கன்னத்தின் பிடிமானத்தில் தான் இருந்தன. என்றைக்கும் இல்லாது இப்படி complaint செய்த என்னை சீண்டிப்பார்க்கும் அவா இப்போது முன்பைவிட அதிகமாகி இருந்ததுப் போல், பிடிவாதமாய் என் கன்னம் விட்டு இறங்கமறந்தது அவர் கை.

உதட்டைப்பிதுக்கி மேலும் முறைத்தேன், “அப்படித்தான் பண்ணுவேன்…..” என்று எதையோ நான் பிதற்றி கொண்டிருக்க, இந்நேரம் வரை நான் பேசி அவர் காதில் விழாமல் இருந்தனயாவும், முன்னால் சரிந்து என் கன்னத்தில் அழுந்த அவர் முத்தமிட்டதில் பேசிக்கொண்டிருந்த வார்த்தை என்னை கைவிட்ட நிலையில், காணாமல் போயிருந்தன.

கண்டுகொள்ளாமல் முறைத்துமட்டும் தன் வேலையை பார்த்தவளை, மேலும் வம்பிழுக்க, மீண்டும் என்மேல் சரிந்து, அவர் சுவாசம் தாங்கும் வெம்மையுடன் எங்கிருந்தாலும் நான் கண்டுகொள்ளும் வாசமும் என் கன்னதில் எல்லாம் இரைய, மீண்டுமொரு முறை முத்தமிட்டார்.

கனத்தில் இழைந்த மூச்சின் வெப்பத்தில் கரைந்தவளோ, அதனோடே படிந்த மனதினை மீட்க முடியாதவளாய் தன்னை மீட்டிய என்னை பார்த்து விஷமமாய் கண் சிமிட்டினார், “ஏன் கண்ணம்மா.. இதுவும் நல்லா தானே இருக்கு.. குண்டா.. மெத்துமெத்துன்னு.. முத்தம் குடுக்க வசதியா..” என்று காரணங்களை அடுக்கி.

மின்னலின் வெட்டாய் ஒரு விநாடியில் என் கரங்கள் கோபமாய் மார்பின் குறுக்கே பிணைந்துக்கொண்டன. வெளியே முறைத்தாலும், என் மனம் கொண்டாடும் விஷமச்சிரிப்பு மனதில் படமாகியிருக்கும் அவருக்கு. நான் கொண்ட ரகசியச்சிரிப்பை கண்டு கொண்டு அதற்கான வெளிபாட்டில் ஷ்ரவன் முகம் மலர, அவரை முறைத்தவள் மறு நொடி என் இதழ்கள் அவர் கன்னத்தை தொட்டுவிட நெருங்கின. அருகில் வந்தும் தொடமுடியாத சிறு தூரத்தில் பிறையாய் நிறைந்திருந்த கர்ப்பம் தடுத்தது, என் இதழ் அவரை அடையவிடாது.

கண்களில் சலிப்போடு விலகி, பின்னால் சாய்ந்து கொண்டேன். “எனக்கு வசதியா இல்ல, போங்க!”

அதைக்கேட்ட அவர் முகத்தில் பாய்ந்த நகையோடே அவரது கரமும், மலை உச்சியை அணைத்துக்கொள்ளும் மேகக்கட்டுகளாய் தன்னதுள் என்னை சுற்றிக்கொண்டன.
அவர் கன்னம் என் இதழ் தொட லகுவாய், நானாய் சாய்ந்து முத்தமிட தோதாய் சரிந்து  கொண்டவரோ, இப்போது வசதியா என்றபடியாய் பார்க்க, கரை காணும்வரை நிற்கத் தெரியாத ஆழிகளாய் பரவசமடைந்த மனதின் பரிசாய் அவர் கன்னத்தை எட்டிப்பிடித்துக்கொண்டன எனதிரு இதழ்கள்.

கன்னங்களில் இடப்படும் முத்தங்களுக்கு சுயமரியாதை எந்தளவாயின், தரப்பட்ட மாத்திரத்தில் ஒன்றிற்கு இரண்டாய் அவரிடமே திரும்பிவிடும்.

மேகம்விழ்ந்து தரை வீழும் முதல் தூறலைப் போன்று ஒன்றின் பின் ஒன்றாய் சென்றிறங்கின ஒரு சில மெல்லின முத்தங்கள். அதனில் விரைந்திருந்து, உடல் கொண்ட ஜீவன் தித்திக்க தொடர்ந்திருந்த கணங்கள் எல்லாம் முதல் முதல் கற்ற மழலைப்பாடம்போன்று தலைகீழ் மனனம் என் மனதிற்கு.

வாரி வழங்கிய முத்தத்தில் நனைந்திருந்து மூழ்கியிருந்தவளை என் அலைபேசியின் சிணுங்கல் மீட்டு வந்தது. வாகாய் அருகில் இருந்தவரின் தோள்மீதே தலை சாய்த்து, அலைபேசி எடுத்து வந்திருந்த குறுஞ்செய்தியை விரல் நுனியினால் தொட்டுத் திறந்தேன்.

‘இதுல உங்க பிராணநாதன கண்டுப்பிடிங்க பாப்போம் ?’ Display காட்டிய குறுஞ்செய்தியைக் கண்ட எனக்கு, முகமெங்கும் ஒரு பெரிய உவகை சிரிப்பு கூத்தாடியது.

தன் மேல் சரிந்திருந்து கையில் இருந்தக் கருவியை கண்டு முகம் முழுக்க சிரிப்பாய் அமர்ந்திருந்தவளை, அவர் எதுவும் கேட்கும் முன்பாய் நானே கூறிவிட்டேன். என் கையிலிருந்த படத்தை காட்டி, “நளன் அனுப்பி உங்களை கண்டுபிடிக்க சொல்றார்,” என்றதும் கையில் இருந்த படத்தை கண்டவரின் முகத்திலும் அதே சிரிப்பு தன் சிறுவயது பள்ளி புகைப்படம் கண்டு, காற்றோடு கொஞ்சி விளையாடும் காத்தாடி கொண்ட துடிப்பைப்போல், களிப்புடனான உற்சாகத்தோடு.

கலைந்தத் தலையோடும், கசங்கிய uniformஓடும் வரிசையாய் முகத்தில் நிரம்பி வழிந்த அசட்டு அப்பாவிச்சிரிப்போடும் நின்றிருந்த மாணவர்களின் முகங்களையெல்லாம் ஒவ்வொன்றாய் கண்களினால் அளவிட்டபடி, ஷ்ரவனை கண்டுகொள்ள முயற்சித்தேன்.

கீழே பெஞ்சில் அமர்ந்திருந்தவர்களை கூர்மையாய் நோட்டமிட்டு முதல் வரிசையில் இருந்த மாணவர்களில் அவர் இல்லாது போக, அதற்குள் உயிர்ப்பித்த யோசனை என்னை தலையின் பின்னால் தட்டியது. இவர் தான் ஆகாசத்தில் பாதி உயரமாயிற்றே அவரைப் போய் முதல் வரிசையில் தேடினேனானால், இன்று கண்டுப்பிடித்ததைப் போல் தான் என்றுணர தன்னையறியாத உதட்டு சுளிப்பில் அவ்வலுப்பை வெளிவிட்டபடியாய், கடைசி வரிசையில் நான் தேடமுற்பட்ட சில விநாடிகளில், அடர்த்தியாய் கலைந்திருந்த கேசமும், உலகம் கொண்ட நல்லுணர்வையனைத்தயும் தன்னுள் சேமித்து வெளிப்படுத்தும் வெதுவெதுப்பான பார்வையும், நீள்வட்ட முகமும், ஒரு குறுஞ்சிரிப்பை அதனுள் பொத்தியபடி அந்த வடிவான இதழ்களும்; அதன்மேல் லேசாய் பென்சிலின் கிறுக்கலைப் போல் படர்ந்திருந்த சிறிய இளமீசையுமாய் ஷ்ரவன் நின்ற படத்தை அணைத்துக்கொண்டது அகல விரிந்துத் தேடிய எனது பார்வை.

கண்டு கொண்டு அதனை உள்ளம் உணர்ந்ததில் ஏற்பட்ட உணர்ச்சிகள் ஏராளம்; அதனை இப்படி, இவ்வளவு என்று வரையறுத்து விடுவது கடினம்.

“இங்க இருக்கீங்க பாருங்க,” என்று துள்ளலாய் என் அலைபேசியில் தென்பட்ட அவர் முகத்தில் ஒரு விரல் பதித்து காட்டி சொன்னதும், அவரின் கண்களும், அவைகளின் அசைவும் என்னவோ வலையில் சென்று மாட்டினாற்போல் அடிமனம் வரை உணரவைத்தது. ஆமென்று தலையாட்டியவரின் கூர்ந்து என் மேல் விரிந்திருந்தப் பார்வையில் இருந்து மீண்டு வந்தது கதையை தொடர்ந்தேன், அவரருகில் இருந்த பையனை காட்டி. “இதுதானே நளன்?” அவர் முகம் இருந்த களிப்பு என்னிடத்திலும் ஒட்டிக்கொள்ள லேசாய் சிரித்து, மெதுவாய் தலையசைத்தார்.

புகைப்படம் ஒட்டப்பட்டிருந்த அட்டையின் மீது பள்ளியின் பெயரும், அதனோடே எழுதப்பட்டிருந்த 11th standardஉம் கண்ணில் பட்ட கணம், என்றோ நாங்கள் கதைத்திருந்தது மனதை துளைத்து ஆழத்தில் விதைத்திருந்த நினைவுகள் மிதந்து மேலே மீண்டு வந்தது. பதினொன்றாம் வகுப்பெனில் சாருவும் இதனுள் எங்கோ இருப்பாரல்லவா!

இதில் ஷ்ரவனுக்கு பிடித்த சாரு யாராக இருக்கும்!

என்னை அறியாது வெகுவாய் வழிந்த சிரிப்பையும், அனிச்சையாய் விரிந்த விழிகளிரண்டும் கிழே வரிசையாய் அமர்ந்திருந்த பெண்பிள்ளைகள் முகத்தை தேடத்துவங்கின. “ஹேய், ஷ்ரவன் இதுல சாரு எங்க இருக்காங்க? எனக்கு காட்டுங்களேன்!” இந்நேரம் வரையெல்லாம் அகண்டிருந்து உள்மனதையே ஆட்கொள்ளும் பார்வை பார்த்திருந்தவர் கண்களில், கேட்ட சொற்களின் தொடர்ச்சியாய் ஒரு குறுஞ்சிரிப்பும் சேர்ந்து கொண்டது.

என்னை ஒருதரம் நேராய் கண்களில் பார்த்தவர்,  
அமைதியாய் தன் கையினுள் என் அலைபேசியை வாங்கிக்கொண்டார். உதட்டில் புலர்ந்த புன் சிரிப்போடே ஒரு மூலைக்குள் zoom in செய்து, காட்டிய கண்ணசைவிலும் அதேமாதிரியாய் ஒரு மதுரச்சிரிப்பு.

ரெட்டை பின்னலும், எலுமிச்சை நிறமும், பெரிய உருண்ட கண்களும், கதுப்பானக் கன்னங்களுமாய் நின்றிருந்த பெண்ணிடம் நின்றது அவரது பார்வை. தேடி கிடைத்தது பற்றாததுப் போல் மீண்டும் எதையோ தேடிய எனது பார்வையும் முற்றுப்புள்ளியாய் அவர் கண்ட சின்னஞ்சிறு முகத்திற்கே வந்து நின்றது. அவர் கையில் இருந்த கைபேசியை வாங்கி இன்னும் சிறிது பக்கத்தில் வைத்து பார்த்தேன். வட்ட முகமும், அழகாய் அடர்ந்தப் புருவங்களும், அவைகளுக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்த சின்னக் கீற்றிலான பொட்டிலும், இதழ் கொண்டிருந்த அந்தக் குட்டி சிரிப்பிலும், அதனை எதிர்கொண்ட மாத்திரத்தில் ஏன் எதற்கு என்னும் கேள்விகளுக்கு இடமில்லாமல் என்னிடமும் இருந்தது அந்த சிரிப்பு. “ஏன் ஷ்ரவன், அழகா இருக்காங்க இல்ல?”

வாய்வார்த்தையில் எல்லாம் அவர் பதில் கூறவில்லை. மனங்கொண்டாடிய நினைவுகளோடே அலைந்திருந்தவர், சிரத்தையாய் சிறு தலையசைவை மட்டும் பரிசாய் தந்தார்.

“இவங்க நல்லா பாட்டு கூட பாடுவாங்கன்னு சொல்லியிருக்கீங்க இல்ல?” அலைபேசியை என்கையினில் தந்துவிட்டதில் காலியாகியிருந்த அவரது கரம், என் தோளினை சுற்றிக்கொண்டு தன் கைவளையத்தினுள் சாய்த்துக்கொண்டதில் எங்களுள் நீண்டிருந்த ஒரு விரலளவு இடைவெளி காணாமல் போயிருந்தது.

அதற்கும் மீண்டும் ஆமென்று சிறு தலை அசைப்பில் பதில், அதைக்கண்ட என்னுள் உதட்டில் பொத்திய படியான புன்னகை. ஆனால் இப்போது சொற்களும் வந்திருந்தன, அதனையடுத்து. “நல்லா பாட்டு பாடுவா. பயங்கற படிப்பாளி வேற. Maths ரொம்பப் பிடிக்கும்! எப்போதுமே mathsல centum தான். யார் என்ன சந்தேகம் கேட்டாலும் பாரபட்சம் பாக்காம பொறுமையா சொல்லித்தருவா..” அவர் வாய் வந்திருந்த சங்கதிகளிலும், உதடுப் புகுந்திருந்த குறுநகையிலும், அந்தக் கண்களில் சுழன்ற பரம ஆக்கமான பார்வையிலும் எனக்கே அல்லவா சாருவை நேரில் கண்டேத் தீர வேண்டுமென்று ஆனது. இத்தனை மனமாற ரசித்திருந்தும் அவரிடம் ஏன் இந்த ஷ்ரவன் பிடித்திருக்கிறதென்று சொல்லாமல் போனார்!

சாய்த்திருந்த தலையை நிமிர்த்தி குழப்பமிகுந்த கண்களால் பார்த்தேன், என் நெற்றி ஒரு போலி முறைப்பில் நெறித்திருந்ததை கண்டவரதும் அவ்வாறே ஆனது, அடுத்து வரவிருக்கும் என் வினாவை எதிர்பார்த்தது போல். “என்கிட்ட இப்போ இவ்வளோ சொல்றீங்களே.. இதுல கொஞ்சமாவது அப்போவே அவங்கக்கிட்ட சொல்லியிருக்கலாம்ல?” யோசனையாய் பிதற்றியவளை பார்த்தவரது பார்வையில் இத்தனை நேரம் இருந்தனயெல்லாம் என் மனதில் என்ன ஓடுகிறதென்ற சிந்தனை மட்டும் தான். அது தெரிந்துவிட்ட மாத்திரத்தில் அது மாறியிருந்தது.. ஒரு விதமான மிரண்டப் பார்வையாக. அனுசரணையானப் பற்றுதலுக்குரியதாக.. காணும் நேரமெல்லம் தொட்டுவிடாமல் அரவணைக்கும் பார்வையாக.. காதலாக.. இன்னும் சொல்லப்போனால் முத்தப் பார்வையாக.

கேட்டுவிட்டு கிடைத்த பார்வையில் மீண்டும் அவர் தோளிலே தலை சாய்த்துக்கொண்டதும் தொடர்ந்தேன். “அப்போவே சாருகிட்ட சொல்லியிருந்தா எதாவது நடந்திருக்கும்.. இப்ப வந்து சொல்லி என்ன பண்றது? என்கிட்ட வந்து மாட்டின அப்பறமா?” என்று கூறி சரிந்திருந்த சிகை நேராக்கியதில் இருந்தது அதேப் பார்வை அவ்வாறே இப்போதும். ஆம், அது முத்தப்பார்வை தான்.

இப்போது முத்தம் வேண்டாம் பதில் தான் வேண்டும்.
“நீங்க ஏன்மா சாருகிட்ட சொல்லவேயில்ல உங்களுக்கு அவங்களை பிடிக்கும்னு?” யோசிக்காமல் தோன்றியதை உதிர்த்துவிட்டேன், ஷ்ரவனிற்கும் என்னிடத்தில் மிகவும் பிடித்தது அந்த candidness என்று பலமுறை தெரிந்துகொண்டது உண்டு. இந்நேரம் வரை ஓசையின்றி வெளிப்பட்டிருந்த குறுஞ்சிரிப்பு, இப்போது ஓசைப்பெற்று ஒலித்தது. ஆனந்தக் களிப்புடனான நகையன்றி அதனில் ஒரு விதமான ஆச்சரியம் ஓங்கியிருந்தது.

“ஏன் கண்ணம்மா நீ பிரக்ஞையோட தான் பேசறியா?” பேசியக் குரலிலும் அதேயளவு சிரிப்பு. இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது, கேட்டக் கேள்விக்கு பதிலைத் தராது சிரிப்பு அத்தோடு  மற்றொரு கேள்வி வேறு.

கண்களை சுருக்கி அவரை பார்த்தேன். “இப்ப என்னத்துக்கு சிரிப்பு? கேட்டதுக்கு பதில் சொல்லாம..” கட்டுப்படுத்த முடியாது மேற்படி சிரித்து பேசியவர் சிரத்தையாய் கேட்டார், சிரித்து முடித்துவிட்டுதான். “எந்த wifeஆவது இப்படி கேப்பாங்களா? ஏன் டா பிடிச்ச பொண்ணுக்கிட்ட போய் பேசலைன்னு?”

“சரி பரவால்ல நான் கேட்டுக்கறேன், சொல்லுங்க,” என்று கூறியவளை தன் பெரிய கை என் சிறம் கூப்பி தன் பேல் சரித்தவாறு உச்சிமுகர்ந்து முத்தம் தந்தாயிற்று. “எப்படி கண்ணம்மா இவ்வளோ தெளிவா இருக்க?” இன்னுமும் ஆச்சரியமாய் அவர் குரல் ஒலிக்க, இப்போது வசதியாய் அவர் முகம் காண தலை நிமிர்த்தி கொண்டேன். “அது.. அப்போதான் நான் உங்ககூட இல்லையே..”

அப்போது அவர் விழிகள் தாங்கிய மர்மப்பார்வையில் என்னால் ஒன்றும் கண்டுகொள்ள முடியவில்லை. பின் தெரிந்தது, அவர் அதன்பின்னால் கேட்டதே அந்தப் பார்வைக்கான அர்த்தம் என்று. “ஆமாம் இல்லைதான். இருந்திருந்தா?” விஷமமாய் பார்த்தவரிடம், “இருந்திருந்தா கதை வேறமாதிரி ஆகியிருக்கலாம்ல?” என்று கூறி கண்சிமிட்டினேன். இப்போது என்னைப் பிடித்து, என்மீது காதலென்றால், அப்போதும் கூட அப்படி ஆகியிருக்கலாமல்லவா.

மனதிற்கு வேண்டியன எல்லாம் ஒருவரிடம் கிடைத்ததைப் போல் உணரவைப்பது தானே காதல், இதில் இப்போதென்ன அப்போதென்ன. என்றாக இருந்தாலும் அதே தான். காதலே தான். நான் சொல்வது சரி தானே!

கிடைத்த பதிலே ஜீவனைப் பிடுங்கித் தின்றதைப் போலொரு ஒரு நீள்மூச்சினை முதலில் இழுத்து கொண்டார். பிறகு, என்னையும் தன்னிடத்தில் மீண்டும் ஒருமுறை சரித்துக்கொண்டு, எதோ அப்போதைய அவரது வாழ்க்கைக்கான பற்றுதலைப்போல் அண்டிக்கொண்டார். அப்போது பிடித்திருந்தது, தூரத்தில் இருந்து ரசித்திருக்கிறாரேயன்றி, உடனிருத்தலோ ரசித்தனவையெல்லாம் சொல்லவோ தோன்றியதில்லை. அது பிடித்தல் மட்டுமே.

இப்போது என்னைப் பார்த்த விதமும், அதன்முடிவில் உரிமையாய் தன்னுடன் அணைத்துக்கொண்டதும், அதில் இருந்த இதமும், அது தரும் நல்லுணர்வும், இப்போது இது காதல்.

கைவளையத்தினுள் கட்டுண்டுக் கிடந்த நேரமெல்லாம் அறையினுள்ளிருந்த அவர் அலைபேசி சிணுங்கிய நொடி கண்ணில் படாது கரைந்திருந்தது. அவர் எழ சௌகர்யமாய் தலையை நிமிர்த்தியும், எழுந்து தன் பெரிய அடிகளில் அறையினுள் சென்ற உருவத்தையே தழுவியிருந்தது என் பார்வை.

இப்போதும் வார்த்தைகளில் பதிலேதும் அவர் சொல்லவில்லை. வார்த்தைகள் தேவையில்லை.

ஐந்து நிமிடங்களில் அறையிலிருந்து வெளிவந்தவரின் கையினில் அலைபேசி, காதினில் ஒற்றிய படியாய். “I will get back to you in twenty minutes, yeah, sure. Thanks!” என்று பேசியிருந்தவர் அழைப்பை அணைத்த நேரமெல்லாம் என்னிடம் வந்திருந்து, என் கையினில் தன் அலைபேசியை திணித்தார். “நான் நேத்திக்கே சொன்னேனில்லையா? ஒரு ரெண்டு மணிநேரம் ஆபீஸ் போகவேண்டி வரும்னு? நான் குளிச்சுட்டு கிளம்பி வரேன். அதுக்குள்ள அர்ஜுன் கூப்ட்டான்னா நான் நேரா ஆபீஸ் வந்துடறேன்னு சொல்லிடேன். அவன் கிட்டதான் இருக்கு ஆபீஸ் சாவி, அவனை முன்னால போகச் சொல்லு,” என்று சொல்லி முடித்து பதிலாய் என் தலையசைவை மட்டும் கண்ணினால் கண்டு ஒப்புதல் தந்தவர், மீண்டும் அறைக்குள் மறைந்தார், ஒரு சின்ன அவசர சிரிப்பு சிந்தி.

அவர் கிளம்பிய அரைமணி நேரத்தில் அபூர்வாவும் அவள் தோழியோடு வெளியேச் செல்வதாய் சொல்லி கிளம்பியிருந்தாள். பக்கத்தில் ஒரு clientஐப் பார்க்க செல்வதாயும், சீக்கிரமாய் திரும்பி விடுவதாகவும் சொல்லிவிட்டு கிளம்பியிருந்தாள்.

நான்கறைகள் விஸ்தாரமாய் இருந்திருந்த அவ்வீட்டில் நான் ஒண்டியாய் அமர்ந்திருந்தது என்னமோ போல் இருந்தது. வேலைகளெதுவும் இல்லை. காலையில் தான் சில மணிநேரம் எழுதியிருந்ததில், இப்போது மீண்டும் எழுதுவதா என்று சலித்துக் கொண்டது மூளை. சோம்பலாய் couchஇன் பின்னால் சாய்ந்திருந்த நேரமெல்லாம் அலைபேசி சிணுங்கியது, குறுஞ்செய்தி வந்துள்ளதாய் சொல்லி.

நான், இவர், அப்பு, கேத்தன் என நால்வரும் உள்ளடங்கிய WhatsApp groupஇல் கேத்தன் அனுப்பியிருந்தான்.

 

 

அவர்கள் பேசிக்கொண்டதில் தலையும் புரியாமல், வாலும் புரியாமல் இப்படி தவிக்கவிட்டு விட்டானே இந்த கேத்தன். மாலை ஐந்து மணிக்கு எங்கோ கூட்டி செல்கிறானாம், என்னவாக இருக்கும்? தெரியவில்லை!

ஆனால் எனக்கு மட்டும் தான் தெரியவில்லை. அப்புவும் அவனோடு சேர்ந்து கொண்டு ஒரு guava kulfiக்காக என்னிடம் சொல்லமாட்டேன் என்று விட்டாள். இவரும் தெரியாது என்று நைசாய் நழுவிக்கொண்டார். பாசாங்கு செய்கிறாரோ! இல்லை, உண்மையில் தெரியாதா? அதுவும் தெரியவில்லை.

செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லாத வேளையில் இப்படியொன்றை போட்டுடைத்து என்னை தனியே வேறு விட்டுச் சென்றுவிட்டார்கள் இவர்கள் மூவரும். பதில் தெரியாத அலுப்பினில் ஓரத்தில் கிடத்திய அலைபேசியை எடுத்து பார்த்தேன். மணி ஒன்றரை. இரவெல்லாம் நீள நெடுக தூக்கமில்லை. வாசற்கதவும் சாற்றித்தான் இருந்தது! வெளியில் சென்ற இருவரிடமும் வீட்டு சாவியுண்டு. ஒரு முறை தூங்கி எழுந்தால் மாலை வந்துவிடுமல்லவா!

Couchஇலேயே பின்னால் சாய்ந்து கண்களை மூடிய எனக்கு ஷ்ரவனோ அப்புவோ வந்தது எப்போதென்று தெரியாது. நான் கண் முழிக்கையில் எல்லாம் மணி நான்கரை ஆகிவிட்டது போல, கேத்தன் வந்திருந்தான்.

தூக்கக்கலக்கத்தில் எழுந்தவளை கண்களில் கேலியாய் பார்த்தபடியே உள்ளே விரைந்தவன், என்னருகில் அமர்ந்து கொண்டான். அவனையே முறைத்தேன், “அப்படியெங்க போறோம்?”

பீறிட்ட சிரிப்பை கடினமாய் அடக்க முயன்று, தோற்று, மேலும் என்னிடமிருந்து முறைப்பை வாங்கிக்கொண்டு, பரிகாசமாய் கண்ணடித்தான். “ஏன் உன்னோட அவர் உன்கிட்ட சொல்லலையா?”

என்ன சொல்கிறான் இவன்? அவருக்குத்தான் தெரியாது என்றுவிட்டாரே! “அவருக்குத்தான் தெரியாதாமே,” என்று முகம் பிதுக்கியவளை, அவன் பார்த்த பார்வையே கிண்டல் செய்தது. “ஐயோ ஷ்ரவன் சொன்னத நம்பிட்டியா?”

“அப்போ அவருக்கு தெரியுமா?” இப்போது நான் யாரை நம்புவது? அவரையா கேத்தனையா.

கேள்வியில் கண்களிலேயே சுருக்கி சலித்துக்கொண்டவன், அப்புவின் அறையிருக்கும் திசையில் லேசாய் திரும்பி உறக்க அவளை அழைத்தான். “அம்மு! சீக்கிரமா வா, இவ என்ன கேள்வியா கேட்டு கொல்றா!”

“ரெண்டு நிமிஷம், வந்துட்டேன்,” பின்னாலேயே துரத்தி வந்தது அவளது குரல்.

இரண்டு நிமிடங்கள் ஆகவில்லை, புதிதாய் ஒரு ஜீன்ஸும், கைத்தறியில் செய்யப்பட்ட ஆழிநீல குர்தாவும் அணிந்தவாறாய் பதுமையாய் அப்பு வந்திருந்தாள். “போலாமா,” என்ற கேள்வியோடு அவனைப் பார்த்து.

ஒப்புதலாய் தலை அசைவோடு இருக்கையிலிருந்து எழுந்தவன் தன் முன்னாலிருந்த அறையில் இருந்து வெளிப்பட்ட ஷ்ரவனிடம், “சீக்கிரமா வந்துடுங்க ரெண்டு பேரும். அப்புவும் நானும் முன்னால போறோம். உங்களுக்கு நான் address message பண்ணியிருக்கேன்,” என்று கூறி என்னிடமும் ஒரு விஷமச்சிரிப்பை உதிர்த்தான்.

ஷ்ரவனிற்கும் ஒன்றும் புரியவில்லைதான் போல், பாவம். குழம்பிய பார்வையோடு வெறுமன தலையை மட்டும் ஆட்டிவைத்தார். நாங்கள் குழம்பி நிற்பதைக் கண்டு என்ன சுகம் கண்டானோ, அவன் முகத்தில் இதழ் விரிந்த நிலையில் பெரியதாய் ஒரு சிரிப்பு.

****
கிழிறங்கியதும் தன் வண்டியை அடைந்த கேத்தன் ஏறியமர்ந்ததும், அபூர்வா அமர்ந்து கொள்ள வாகாய் குனிந்து footrestஐ திறந்துவிட்டு நிமிர்ந்தான்.

கதவை தாழிட்டு வந்து வண்டியில் ஏறியவள், “ஏன் கேத்தன் உன்கிட்ட helmetநு ஒண்ணு எதுக்கு இருக்கு? Use பண்ணாத வீட்லையே வெச்சுக்கவா? எடுத்து போட்டுக்கத்தானே, ஏன் இப்படி பண்ற?” என்று அதட்டியபடியே அவன் தோள் பற்றிக்கொள்ள அவனோ வண்டியை உதைத்துக் கிளப்பும் முன்பாய் sideview mirrorஇற்கு பார்வையை செலுத்தினான். அவளைக் காணத்தான். “ஏன் அம்மு helmet போட்டு என் முடியெல்லாம் கொட்டுப்போச்சுன்னா, என்ன எந்தப் பொண்ணு கல்யாணம் பண்ணிப்பா சொல்லு?”

வெகு சீரியசாய் ஆரம்பித்து கேலியாய் முடிந்தது அவனது பதில். கண்ணாடியில் அவனது பார்வையைப் பற்றி முறைத்தவள் அவனுக்கு தக்கவாறே பதிலளித்து காலைவாரினாள். “நானே நல்லப் பொண்ணா பார்த்துத்தரேன் டா.”

அதிர்ந்தவன், “இப்போவாது நானே கல்யாணம் பண்ணிக்கறேன்னு வாய்லேந்து வருதாப் பாரு!” என்று உதட்டினோடு முணுமுணுத்துப் பின் வண்டியை செலுத்த, அபூர்வாவோ அவன் தோளில் லேசாய் தட்டினாள். “அதான் சொல்லிட்டேன்ல கல்யாணம் பண்ணிக்கறேன்னு, இன்னும் எத்தனை தடவை சொல்லணும் உனக்கு?”

“நான் எத்தனை தடவை கேட்டிருக்கேன், அதுக்கெல்லாம் நீ ஒரே தடவதான் சரி சொன்ன..” என்று முகத்தை அப்பாவியாக்கி கண்ணாடியில் அவளைப் பார்த்தவனை தன் கண்களை சுருக்கி பார்த்தாள் அப்பு. “எத்தனை தடவை கேட்டாலும் ஒருவாட்டி தானே கல்யாணம் பண்ணிக்கப்போற..” என்றிழுத்தவளை மேலும் முறைத்தான் அவன்.

“சரி, சரி கோச்சுக்காதேடா. நீ எத்தனை தடவை கேட்டாலும் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன். உன் மூடியெல்லாம் கொட்டிப்போனா கூட பண்ணிக்கறேன், தயவுசெஞ்சு நாளைலேந்து helmet போட்டு வண்டிய ஓட்டு!” சமாதானம் செய்தவளை அவனது பார்வை சிரித்துவிட்டு மீண்டும் குழம்பத் தொடங்கியது.

“ஏன் அம்மு, ஶ்ரீக்கும் ஷ்ரவனுக்கும் செஞ்சிருக்கறது பிடிக்கும் தானே?”

“பிடிக்காம எப்படி போகும்? கண்டிப்பா பிடிக்கும், நீ வேணும்னா பாரேன்!”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!