UVU -35
UVU -35
அத்தியாயம் 35
அவர்கள் இருவரும் தூங்கிக் கொண்டிருக்கும் தீபியின் கட்டிலின் அருகில் அமர்ந்திருந்தனர். சின்னவள் சித்ராவின் கையை இருக்கிப் பிடித்தவாறு தூங்கிக் கொண்டிருந்தாள். பிரகாஷோ மகளின் காலை மென்மையாக பிடித்து விட்டுக் கொண்டிருந்தான்.
“ப்ரௌனி! நான் கொஞ்ச நேரம் அழுதுக்கவா?”
முடியாதென தலையாட்டினான் பிரகாஷ். கண்களை சுருக்கி பாவமாகப் பார்த்தவள்,
“ப்ளிஸ்” என்றாள்.
“இங்கே வா” என வாயை மட்டும் அசைத்தான் பிரகாஷ். நாற்காலியில் இருந்து எழுந்தவள், மெல்ல மகளின் பிடியில் இருந்து கையை விலக்கிக் கொண்டு குட்டி தலையணையை அவளுக்கு அணைவாகக் கொடுத்தாள். கட்டிலில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தவன் அருகில் இவளும் போய் அமர்ந்துக் கொண்டாள். மனைவியை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன்,
“இப்ப அழு” என்றான்.
அவன் வார்த்தைக்குக் காத்திருந்தது போல மடை திறந்த வெள்ளமாய் கண்ணீர் பெருகியது சித்ராவுக்கு. சத்தமாக அழுதால் தீபீ விழித்துக் கொள்வாளோ என பயந்தவள், முகத்தை அவன் நெஞ்சில் இறுக்கமாகப் புதைத்துக் கொண்டாள். தன் அதிர்ச்சியையும் சோகத்தையையும் கண்ணீரில் கரைத்துக் கொண்டிருந்தாள் அவள். ஒன்றுமே பேசாமல் அவள் அழுது ஓயும் வரை முதுகை வருடி, கூந்தலை தடவி, வழியும் கண்ணீரைத் துடைத்து அவளை ஆறுதல் படுத்தினான் பிரகாஷ்.
“நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன் ப்ரௌனி? ஏன் மாதி என் வாழ்க்கையில இப்படி விளையாடிட்டா? அவ லெட்டர பார்த்து பார்த்து நான் எத்தனை நாள் கண்ணீர் வடிச்சிருக்கேன் தெரியுமா? இப்படி பிள்ளை பாசத்த அனுபவிக்காம போயிட்டாளேன்னு எப்படி துடிச்சிருப்பேன். ஏன், தீபா கட்டி புடிச்சு முத்தம் குடுக்கும் போது கூட இதெல்லாம் அவளுக்கு போக வேண்டியதாச்சே, நாம அனுபவிக்கிறோமேன்னு எப்படி மறுகுவேன்! எனக்கு இப்படி ஒரு துரோகத்தைப் பண்ண அவளுக்கு எப்படி மனசு வந்துச்சு? என்னால தாங்க முடியல பிரகாஷ் ! மனசு ரொம்ப வலிக்குது. தீபிய இந்த நிலைமல பார்க்கிறப்ப நெஞ்சு வெடிச்சு செத்துருவேன் மாதிரி இருக்கு ப்ரௌனி. பயமா இருக்கு. நான் செத்துருவேனா? அப்புறம் உங்கள எல்லாம் யார் பார்த்துக்குவா ப்ரௌனி? நான் சாக மாட்டேன். நோ ப்ரௌனி, நான் சாகமாட்டேன்”
மெல்ல பிதற்றலும் அழுகையும் அடங்கி, அவளிடமிருந்து எந்த அசைவும் இல்லாது போக, முகத்தை நிமிர்த்தினான் பிரகாஷ். அழுதழுது அப்படியே தூங்கிப் போயிருந்தாள் அவன் மனைவி.
அவள் எந்த அளவு மன உளைச்சலில் இருப்பாள் என உணர்ந்த பிரகாஷ், தூக்கம் மட்டுமே அவளுக்கு மருந்தாக இருக்கும் என எண்ணிதான் சற்று முன் அவளுக்கு கொடுத்த பாலில் தூக்க மருந்தைக் கலந்திருந்தான். மகளின் பக்கத்தில் அவளை அலுங்காமல் படுக்க வைத்தான் பிரகாஷ். தூக்கத்திலேயே அவள் தீபியைக் கட்டிக் கொள்ள, சின்னவளும் சித்ராவின் மார்பில் ஒண்டிக் கொண்டாள். அந்தக் காட்சியைப் பார்த்தவனுக்கு மனம் நிறைந்துப் போய் கண்கள் கலங்கி விட்டது. இருவர் கன்னத்திலும் முத்தம் வைத்தவன், எழுந்துப் போய் நிலாவுக்கு போன் செய்து நாளை காலை வருவதாகவும், பத்திரமாக இருந்துக் கொள்ளும் படியும் தகவல் கொடுத்தான்.
நாற்காலியை அவர்கள் அருகே நகர்த்திப் போட்டவன், மனதை அழுத்திய பாரத்தை இறங்கியதில் கண் மூடி நித்திரையில் ஆழ்ந்தான். இரவில் தாதி வந்து பிள்ளையை எட்டிப் பார்த்து விட்டுப் போனது கூட தெரியாது உறங்கினர் மூவரும்.
காலையில் யாரோ கன்னத்தை சுரண்டுவது போல இருக்க துயில் கலைந்தாள் சித்ரா. தன் முகத்தருகே தீபியைப் பார்க்கவும் பிரகாஷ் சொன்ன அனைத்தும் முட்டி மோதி கண் முன்னே வந்தன. மகளைப் பார்த்து கலங்கிய கண்களை கட்டுப்படுத்தியவள்,
“என்னம்மா வேணும்?” என்றாள்.
“ம்மா தூம்”(அம்மா பாத்ரூம்) ஒரு விரலைக் காட்டி சொன்னாள்.
பட்டென எழுந்து அமர்ந்த சித்ரா, கட்டிலை விட்டு கீழே இறங்கினாள். அந்த ரூமிலே பாத்ரூம் வசதி இருந்தது. மகளைத் தூக்க வந்தவளை தடுத்து நிறுத்தினான் பிரகாஷ். இவர்களின் அசைவில் ஏற்கனவே எழுந்திருந்தான் அவன்.
“நான் கூட்டிட்டுப் போறேன் சிமி. நீ நகரு” என்றவன்,
“தீபீ! பிதாஜி கை பிடிச்சிக்குவேன், நீயே நடக்கனும்” என சின்ன கண்டிப்புடன் சொன்னான்.
“நோ!” கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு தலையை இடம் வலமாக ஆட்டினாள் குட்டி.
அவனும் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு அவளை பொய்யாய் முறைக்க, முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள் தீபிகா.
“உங்க அம்மா மாதிரியே முகத்தை பாவமா வச்சே என்னை ஏமாத்து!” செல்லமாய் கோபித்துக் கொண்டவன், அவளை அலேக்காக தூக்கிக் கொண்டு பாத்ரூம் சென்றான்.
அவர்கள் இருவரின் அந்நியோன்யத்தை முகம் மலர கண்கள் கலங்க பார்த்திருந்தாள் சித்ரா. அதற்குள் தீபியைக் கவனித்துக் கொள்ளும் நர்ஸ் வந்திருந்தார். அப்படியே அவளைக் குளிக்க வைத்தவர், காலை உணவை அவளுக்கு மேசையில் செட் செய்து வைத்தார். அவள் சாப்பிடும் நேரத்தில் இவர்கள் இருவரும் முகம் கழுவி வந்தனர்.
“வா சிமி! நாம ரெண்டு பேரும் கேண்டீன் போய் ஏதாச்சும் சாப்பிட்டுட்டு வரலாம். அதுக்குள்ள தீபிய பிசியோதெரபிக்கு ரெடி பண்ணுவாங்க. நாமளும் போய் பார்க்கலாம்”
அவர்கள் தன்னை விட்டு விட்டு போக போகிறார்கள் என பயந்த தீபீ, சத்தம் செய்யாமல் கண்களில் மட்டும் நீர் வழிய பார்த்தாள். சித்ராவுக்கு தாங்கவே முடியவில்லை. மகளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தவளை, கைப் பிடித்து தடுத்தான் பிரகாஷ்.
“தீபீ பேட்டி, பிதாஜியும் அம்மாவும் காபி குடிச்சிட்டு இங்க தான் திரும்ப வருவோம். கண்ணை துடைங்க” என்றான்.
கண்ணைத் துடைத்துக் கொண்டவள்,
“பாமிஸ்?”(ப்ராமீஸ்) என கேட்டாள்.
“ப்ராமிஸ்” என இவன் சொல்லவும், முகம் மலர சரியென தலையாட்டினாள்.
அமைதியாகவே அவனோடு நடந்து வந்தாள் சித்ரா. காபியும் சாண்ட்விச்சும் வாங்கி கொடுத்தவன்,
“சாப்பிடு சிமி” என்றான்.
அமைதியாகவே சாப்பிட்டாள் அவள்.
“கோபமா சிமி?”
“பின்ன என்ன கொஞ்சுவாங்களா? பிள்ளை அழறா, என்னை சமாதானப் படுத்த விட மாட்டற நீ!”
“அவ சாதாரண குழந்தை இல்ல சிமி. அவளை பொத்தி பொத்தி வளர்க்க கூடாது. தன்னம்பிக்கைப் போயிரும். தீபிக்கு கடந்து வர வேண்டிய பாதை இன்னும் எவ்வளவோ இருக்கு. நாம செல்லம் குடுக்கறோம்ன்ற பேருல அவள கோழையா மாத்திட கூடாது. இப்போ பாரு, நான் சொன்னதும் ஒத்துக்கிட்டா! இதே நீ அணைச்சி ஆறுதல் படுத்திருந்தா இன்னும் அழுவா, நமக்கும் மனசு கேட்காது. அப்புறம் பாசம்னு சொல்லி, அவள நம்ம கூடவே வச்சிக்க சொல்லும். அப்புறம் எப்படி அவ குணமாகி வருவா?”
“என்னால தீபிய இப்படி பார்க்கவே முடியல பிரகாஷ்” கண்கள் மீண்டும் கலங்கியது.
“அதனால தான் அவள பற்றி உன் கிட்ட மறைச்சேன் சிமி. நம்ம பாசம் அவ முன்னேற்றத்துக்கு வேலியா இருக்க கூடாது. அவ எவ்வளவோ தேறி வந்துட்டாடா. மேடம்கு நல்லா நடக்க முடியும் இப்போ. பேச்சு மட்டும் தான் இன்னும் சரியா வரல. மத்தபடி ஷீ இஸ் பெர்பெக்லி ஆல்ரைட்”
“ஆனா சக்கர நாற்காலியில இருக்காளே!”
“பிசியோ எல்லாம் நல்ல பலன் கொடுத்துச்சு. இந்த வருஷம் தான் ஸ்டிக் துணை இல்லாம நடக்க ஆரம்பிச்சா. அன்னிக்கு விளையாடும் போது விழுந்துட்டா. அதான் சிமி, உங்க கூட நான் டின்னர் சாப்பிட வந்தேனே சிவா சேண்ட் ஆப் முன்னுக்கு, அப்போதான். காலுல சின்ன அடி. இப்போ திரும்பவும் நடக்க பயப்படறா.”
“ஓ! யூ ஃபூல்னு போன்ல கத்திகிட்டே போனீங்களே! நல்லா ஞாபகம் இருக்கு.”
“ரொம்ப டவுனா இருந்தேன் அப்போ. தீபா தான் ரைம்ஸ் பாடி என்னை கால்ம் பண்ணா. ரொம்ப நல்ல ரைம்ஸ்ல அது! என்னையும் அடிக்கடி நீ நினைச்சிக்கறன்னு எனக்கு க்ளு கிடைச்சது அப்பத்தான்” மெல்லிய நகைப்பு அவனிடம்.
“நெனப்ஸ் தான் பொழப்ஸ்ச கெடுக்குமாம். பிள்ளைய பத்தி பேசிட்டு இருக்கறப்ப எதுக்கு பிள்ளைப் பூச்சி கதை?”
“சிமி, பேக் டூ ஃபோர்ம்! ஹ்ம்ம் நடத்து, நடத்து” “போ ப்ரௌனி! என்னால இன்னும் நம்பவே முடியலை இன்னொரு மக இருக்கான்னு. படபடன்னு வருது தெரியுமா” கை நடுங்க காபியை வாயில் வைத்து மெல்ல உறிஞ்சினாள்.
அவளது படபடப்பையும் தவிப்பையும் உணர்ந்ததால் தான் பேச்சை திசை திருப்பி இருந்தான் பிரகாஷ்.
“அப்படியே உன்னை உரிச்சி வச்சிருக்காளே, இன்னுமா நம்ப முடியல?” சிரித்தான் பிரகாஷ்.
மென்னகை எட்டிப் பார்த்தது அவளுக்கு.
“கல்யாணம் செஞ்சு ரெண்டு மாசத்துல நமக்கு ரெண்டு பிள்ளைங்க. இருந்தாலும் உனக்கு இவ்வளவு வேகம் ஆகாது ப்ரௌனி” பழைய சித்ரா திரும்பி இருந்தாள்.
வாய் விட்டு சிரித்தவன்,
“இப்பயாவது என் வேகத்தின் அளவ புரிஞ்சிகிட்டயே.” கெத்து காட்டினான்.
“ஹ்க்கும்! போதுமே!”அழகு காட்டியவள்,
“பி.வி.எல் பெரிய நோய்னு சொல்றாங்களே? நம்ம மகளுக்கு வேற ஒன்னும் பெருசா இல்லையே? தீபீ பாப்பாவ பற்றி சொல்லு பிரகாஷ்.” கவலை அப்பிய முகத்துடன் கேட்டாள் சித்ரா.
“அவள கேர் செண்டர்ல போய் பார்த்தப்ப என் இதயமே நின்னுருச்சு சிமி. பேபி கோட்ல அனாதை மாதிரி படுத்துருந்தா. பால் குடிச்சது சட்டை எல்லாம் ஊத்தி கிடந்துச்சு. என்னைப் பார்த்ததும் அப்படி ஒரு சிரிப்பு முகத்துல. அள்ளி அணைச்சுக்கிட்டேன். அப்போவே பார்மாலிட்டி எல்லாம் முடிச்சு அங்கிருந்து கூட்டிட்டு வந்துட்டேன். அவள டையக்னொஸ் பண்ண டாக்டர போய் பார்த்தேன். அவளோட மைல்ட் பி.வி.எல் தான். இப்போவே மெடிசன், பிசியோ இப்படி ட்ரீட்மெண்ட் குடுத்தா வளர வளர சரி பண்ணிறலாம்னு ஹோப் குடுத்தாரு. ஐம்புலன்களின் செயல்பாடு இன்னும் கொஞ்சம் வளர்ந்தா தான் கண்டுபிடிக்க முடியும்னு கொஞ்சம் பீதியையும் ஏத்திவிட்டாரு. அவர்தான் அமெரிக்காவுல இருக்கற இந்த செண்டர ரிபர் பண்ணாரு. அதுக்கப்புறம் என்னத்த சொல்ல, மீண்டும் என் தம்பி ஜெபீய போய் பார்க்க வேண்டிய நிலமை.”
“ஏன் பிரகாஷ்?”
“லீகலி அவன் தானே அப்பா. நான் எப்படி அமெரிக்கா கூட்டிட்டுப் போக முடியும்? மனசாட்சி உறுத்திருச்சு போல, என் கூட வந்தான். ராணிம்மாவ சென்னை வீட்டுல மேற்பார்வை பார்க்க சொல்லிட்டு நாங்க அமெரிக்கா போனோம். லீகலி தீபிய இந்த செண்டர்ல சேர்க்க எல்லா ஏற்படுக்கும் உதவி செஞ்சான். கார்டியனா என்னை அப்பாயிண்ட் பண்ணான். அதுக்கப்புறம் தீபீ கூடவே இங்கயே இருந்தேன். அமெரிக்கா, சென்னைன்னு பறந்து கிட்டே இருந்தேன். நிறைய செலவுகள் வேற. பிஸ்னச வேற சரியா பார்த்துக்க முடியல. தவிச்சுப் போயிட்டேன்.”
“ஏன் ப்ரௌனி அப்பவே என்னை தேடி வரல? உனக்கு துணையா நான் இருந்துருப்பேன்ல?” அவனின் கஸ்டம் பொறுக்க முடியாமல் கேட்டாள் சித்ரா.
“வந்து என்னன்னு சொல்ல சொல்லுற? உனக்கும் எனக்கும் தீபாவ தவிர உடம்பு சரி தீபிகான்னு இன்னொரு பிள்ளையும் இருக்கான்னா? அப்படி சொல்லி இருந்தா நீ என்ன செஞ்சிருப்ப? அப்படியா, அப்போ சரி, அந்தப் பிள்ளையையும் என் கிட்ட குடுத்துட்டு நீ நடையைக் கட்டுன்னு சொல்லிருப்ப. ஆமாவா இல்லையா?” புன்னகைத்தான்.
“சொல்லி இருப்பேன் ப்ரௌனி. கண்டிப்பா அப்படிதான் சொல்லி இருப்பேன். மாதி ஆடி வச்ச ஆட்டத்துக்கு, ஆம்பிளைங்கல பார்த்தாலே ஒரு பயம். அதுவும் கொஞ்சம் இண்ட்ரெஸ்டோட யாராச்சும் என்னைப் பார்த்தா, வெளிய கெத்தா காட்டிக்கிட்டாலும் உள்ளலாம் உதறும். விஷயம் தெரிஞ்சிருந்தா தீபீய கண்டிப்பா உன் கிட்ட இருந்து வாங்கியிருப்பேன். உன் அளவுக்கு வச்சி பார்க்க முடியாட்டியும், என் அளவுக்கு கைல இருந்த காசெல்லாம் போட்டு பாப்பாவுக்கு கண்டிப்பா வைத்தியம் பார்த்திருப்பேன்.”
“அந்த டைம்ல கண்டிப்பா நீ என்னை ஏத்துக்க மாட்டேன்னு தெரியும். பிள்ளைய நீ கேட்டா கண்டிப்பா உனக்கு விட்டும் குடுத்துருப்பேன். உயிரா வளர்த்தவள உன் கிட்ட குடுத்துட்டு அதுக்கப்புறம் நான் நடைப்பிணமா தான் அலைஞ்சிருப்பேன். அதனால தான் மனசுல உன் மேல அவ்வளவு ஆசை இருந்தும் உன்னை நெருங்கல. தூரத்துல இருந்தே கவனிச்சிக்கிட்டேன். அதோட, நீ நம்ம தீபாவ எப்படி ஆரோக்கியமா வைச்சிருக்கியோ அதே மாதிரி தீபியையும் நல்ல கண்டிஷன்ல தான் உன் கிட்ட காட்டனும்னு ஒரு வைராக்கியம் சிமி. இந்த ட்ரீப் முடிஞ்சு இங்க உன்னை கூட்டிட்டு வரத்தான் இருந்தேன். தீபிய இங்க ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க. மூனு வயசு ஆகவும், நல்ல மாற்றம் வர ஆரம்பிச்சது தீபிகிட்ட. பேச்சு மட்டும் சரியா வரல. அதுக்கும் ஸ்பீங்கிங் தெரப்பி போட்டோம். அதன் பிறகு அவளோட டாக்டர் இண்டிபென்டனா அவள விட சொல்லிட்டாரு. இல்லைனா ஒவ்வொன்னுக்கும் உங்கள எதிர்பார்ப்பா, இனிமே கூட தங்க வேணாம்னு சொல்லிட்டாரு. குழந்தைய விட்டுட்டு வரவே முடியல என்னால. சென்னைக்கு வந்ததும் நான் ரொம்ப ஏங்கிப் போயிட்டேன். மாசத்துக்கு ஒரு தடவை போய் பார்த்துக்குவேன்.”
“என்னை எப்படி அம்மான்னு கூப்பிடறா?”
“நான் தான் உன் படத்த காட்டி சொல்லி தந்தேன். எப்படியும் உன்னை சாய்ச்சிறலாம்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சு. அதான் சின்ன புள்ளையில இருந்து அம்மா நீ தான்னு சொல்லிக் குடுத்தேன்”
அப்படி சொல்லி பல அடிகளையும் பரிசாக வாங்கிக் கொண்டான் பிரகாஷ்.
“சாய்க்கறதுக்கு நான் என்ன கொய்யாக்காய் மரமா? பிச்சிருவேன். சாய்க்கற மூஞ்ச பாரு! உயிர குடுத்து லவ் பண்ணேன்னு கப்ஸா விடற, ஆனா முதன் முதல்ல பார்த்தப்ப வீட்டுக்குள்ள கூட விடல. நல்லா பண்ணீங்கடா லவ்வு!”
புன்னகைத்தவன்,
“நீ வாழ போற வீட்டுக்கு, என் பொண்டாட்டியா தான் காலடி எடுத்து வைக்கனும்னு நினைச்சது தப்பா சிமி?” என கேட்டான்.
“இந்த நொரைநாட்டியம் எல்லாம் நீ நல்லாதான் பேசுவ கப்பூரு!”
“நொரைநாட்டியமா? சிமி, எங்க ஆத்தா எனக்கு தமிழ் வளர்த்தா தான், ஆனா இந்த அளவுக்கு வளர்க்கலமா! தமிழ் வாத்தியார் பொண்ணுங்கறத அடிக்கொரு தடவை நிருபிக்கற” மூக்கைப் பிடித்து ஆட்டினான்.
இருவருக்கும் பழைய நினைவுகளில் முகம் மலர்ந்தது.
“சிமி, ஆர்த்தி என்னைப் பத்தி என்ன சொல்லி வச்சிருந்தாங்க?” திடீரென கேட்டான்.
“அதை ஏன் கேட்கற பிரகாஷ்? எங்கள லோ லோன்னு அலைய விடுவ, பண விஷயத்துல ரொம்ப ஸ்ட்ரிக்ட் அப்படி இப்படின்னு பயம் காட்டிட்டா. அது சரி, எப்படி உன் அக்கவுண்ட் மட்டும் எனக்கு கீழ வந்தது? ஜோன் உன்னோட ஆளா? ”
“ஜோனோட பாஸ் என்னோட ஆளு. உங்க பேங்க்ல ஃபண்ட் போடறப்பவே, நான் கேட்கறப்ப உன்னை எனக்கு அக்கவுன்ட் மேனஜரா மாத்தனும்னு டீல் பேசிட்டு தான் ஆரம்பிச்சேன். ஆர்த்தி மெடிக்கல் லீவ் போகவும் இதுதான் சரியான டைம்னு உன்னை என் கிட்ட சேர்த்துட்டாங்க. நான் பிசியான ஆளுன்னு உனக்கே தெரியும் சிமி. அடிக்கடி தீபிய பார்க்க வேற வரனும். அப்படி இருக்கறப்ப, நான் எங்க இருக்கறனோ அங்க உங்கள வர சொல்லுறதுல என்ன தப்பு? உனக்கு மட்டும் இல்ல ஆர்த்திக்கும் திரும்பி போகும் போது கார் அரெஞ் பண்ணி குடுத்துருக்கேன் . அப்படி இருந்தும் என்னைப் பத்தி தப்பு தப்பா சொல்லியிருக்காங்க. என்ன சொல்லு, நல்லவன இந்த உலகம் நம்பாது சிமி”
“நீ ரொம்ப நல்லவன் தான் கப்பூரு. அதான் வீட்டுக்கு வந்த புள்ளை முகத்தப் பார்க்காம அவ காலையே முறைச்சிப் பார்த்துட்டு இருந்த!”
அடக்கமாட்டாமல் சிரித்தவன்,
“எங்க டாடி சொல்லிருக்காரு, எல்லா பொண்ணுங்க கிட்டயும் கண்ண பார்த்து மட்டும் தான் பேசணும். உனக்குன்னு வரவ கிட்ட மட்டும் எங்க பார்த்து வேணும்னாலும் பேசலாம்னு” என்றான்.
“அது உனக்கு தெரியும், உங்க டாடிக்கு தெரியும், உன்னை முதன் முதலா அப்பதான் பார்க்கற எனக்குத் தெரியுமா?”
“ஆமா, நீ மட்டும் என்ன குறைச்சல், முதன் முதலா என்னைப் பார்க்க வந்தவ புதை குழில இறங்க போகிற மாதிரி வச்சிருந்த முகத்த. உன்னைப் பக்கத்துல பார்க்க போறோம்னு நான் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா? தீபீ சரியா ஆகிட்டே வரா, இனியாச்சும் உன்னை கூடவே வச்சிக்கனும், சைட்டடிக்கனும், சின்ன பசங்க மாதிரி காதலில் விழனும்னு ஆயிரம் ஆசைகள் மனசுல. ஆனா நீ புன்னகைன்ற பேருல முகத்தை இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வச்சிருந்த. பேசும் போதும் என்னவோ எதிரி நாட்டு மன்னன் கிட்ட பேசற மாதிரி பேசுன! ”
“டேய் லூசு!”
“டேயா?”
“டேய் சொன்னது தான் பிரச்சனையா? லூசு சொன்னது பிரச்சனை இல்லையா? கஸ்டம்டா சாமி. நீ தான் என்னை உருகி உருகி காதலிச்சிருக்க. ஆனா அந்த டைம்ல நீ எனக்கு யாரோ ஒரு பிரகாஷ் கப்பூர் தான் ! யாரோ ஒரு கப்பூர் கிட்டலாம் என்னால அன்பா சிரிக்க முடியாது, அளவா தான் சிரிக்க முடியும்”
“அறிவுக்குப் புரியுது, உன்னை பீவியா(மனைவியா), நம்ம பிள்ளைங்களுக்கு அம்மாவா நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கற இந்த மனசுக்கு புரியலையே. ஃபேக்கா சிரிக்கற உன்னோட நிஜ முகத்தப் பார்க்க தான் காபி கலந்து குடுக்க சொன்னேன். உன் முகம் போன போக்கப் பார்க்கனுமே. எனக்கு சிரிப்பை அடக்க முடியல. இன்னும் சீண்டிப் பார்க்கனும்னு தோணுச்சு, அதான் தெரிஞ்சிகிட்டே பேர கேட்டேன். மனசுல ஏற்கனவே சிமினு கூப்பிட்டுப் பழகிட்டதால அப்படியே கூப்பிட முடிவு பண்ணேன். அதுக்கும் அப்படி ஒரு முழி முழிச்ச. அப்பவே பேய் முழி முழிக்கற உன் கண்ணுக்கு ஏஞ்சல் கிஸ் குடுக்கனும்னு பரபரத்துச்சு. அடிய கிளப்பிருவியோன்னு கண்ட்ரோல் பண்ணிக்கிட்டேன் ”
“அடப்பாவி! அப்படி மட்டும் பண்ணிருந்த, உனக்கு மூச்சிருந்துருக்கும், பேச்சிருந்துருக்காது.”
“எப்படி , எப்படி? ஒவ்வொரு தடவை கிஸ் குடுக்கறப்பவும், பேச்சு மூச்சு இல்லாம மயங்கி நிப்பியே அந்த மாதிரியா?”
“அது வந்து, தீபிக்கு பிசியோ ஆரம்பிச்சிருப்பாங்களா?” கதையை மாற்றினாள்.
அவள் கைகளைப் பற்றி இதழ் ஒற்றியவன்,
“சரி வா, பிசியோ செய்யறத பார்த்துக்கிட்டே பேசலாம்” என அழைத்து சென்றான் சித்ராவை. போகும் போதே நிலாவுக்கு போன் செய்து தீபாவிடம் பேசி, கொஞ்சி, இன்னும் வராதற்கு சமாதானம் செய்தாள் சித்ரா.
ரூமின் வெளியே அமர்ந்து கண்ணாடி தடுப்பின் வழியாக தீபிக்கு பிசியோதெரபி செய்யப்படுவதை கவனித்தார்கள் இருவரும். தெரபிஸ்ட் அவள் காலை நீட்டி, மடக்கி, அழுத்தி மசாஜ் செய்வதைப் பார்க்க சித்ராவுக்கே வலிப்பது போல இருந்தது. பிரகாஷின் முகத்திலும் வேதனைதான். சித்ரா பார்க்கவும் சட்டென முகத்தை மாற்றி நார்மலாக வைத்துக் கொண்டான்.
“வலிக்குமே பிரகாஷ்!”
“அவளுக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து செய்யறாங்க சிமி. வலி பொறுத்துக்க கத்துகிட்டா. அவ முகத்தப் பாரு, சிரிச்சிட்டு தானே இருக்கா”
“அவளுக்கு மட்டும் ஏன் பிரகாஷ் இந்த வேதனை? ஏன் அவள மட்டும் கடவுள் இப்படி படைச்சாரு?” கண்ணீர் குரலில் வினவினாள் சித்ரா.
“நம்ம குழந்தை மட்டுமா இப்படி இருக்கா? சுத்தி பாரு சிமி! எத்தனை பேரு! தீபிக்கு நாம இருக்கோம், அவள குணப்படுத்த பண வசதி இருக்கு. பண வசதி இல்லாதவங்க நிலமைய நினைச்சுப் பாரு. கடவுள் மேல முழுக்க முழுக்க பழி போட முடியுமா? குழந்தை பெத்துக்கறதுன்றது ஒரு தவம். இஸ்லாத்துல மனைவிய கூடும் போது வேதம் ஓதிட்டு தான் சேரனும்னு சொல்லிருக்காங்க. அப்போத்தான் பிறக்கும் குழந்தை குறைபாடு இல்லாம, நல்ல குணநலனோட இருக்குமாம். சந்தோஷமா சேர்ந்து ஒரு தாய் தகப்பன் உருவாக்கற குழந்தை நலமா தான் இருக்கும். குடி, சிகரேட், தேவை இல்லாத கெட்ட பழக்கம், உடம்புல பல நோய் இப்படி இருக்கறப்ப குழந்தை எப்படி ஆரோக்கியமா இருக்கும்? ப்ச், விடு சிமி. இதப் பத்தி பேசனாலே மனசு கவலையா இருக்கு.”
“தீபிய நாம எப்போ கூட்டிட்டுப் போலாம்?”
“இருடா, இன்னிக்கு டாக்டர் கிட்ட பேசும்போது உன்னையும் கூட்டிட்டுப் போறேன். நீயே கேளு. தீபி விஷயத்தை உன் கிட்ட சொன்னவுடனே எனக்கு எப்படி இருக்குத் தெரியுமா சிமி? பாறாங்கல்லா அழுத்துன பாரத்தை இறக்கி வச்சிட்ட மாதிரி மனசு லேசா இருக்கு. என் கூட தோள் குடுக்க நீ இருக்கன்னு நினைக்கறப்பவே, யானை பலம் வருது”
பிரகாஷை இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டாள் சித்ரா. பிசியோ முடிந்து, டாக்டரைப் பார்க்க சென்றனர்.
“வெல்கம், மிசஸ் கப்பூர்” வரவேற்றார் டாக்டர்.
தீபீ நன்றாக குணம் அடைந்து வருவதாகவும், இன்னும் ஒரு ஆறு மாதம் பிசியோ முடித்துவிட்டால் அவளை அழைத்துச் செல்லலாம் எனவும் கூறினார். அதோடு சென்னையிலேயே பிசியோதெரபி, மற்றும் ஸ்பீச் தெரபி செய்து கொள்ளலாம் எனவும், மருந்துகள் இனி தேவைப்படாது என முடித்தார். இவர்களிடம் பயிற்சி பெற்றவர்கள் புதிதாய் தொடங்கி இருக்கும் சென்னை பி.வி.எல் செண்டரின் முகவரியையும் கொடுத்தார் அவர்.
“டோண்ட் வோரி மிசஸ் கப்பூர். தீபீ இஸ் பெர்பக்ட்லி ஆல்ரைட் நவ்” என சித்ராவின் வயிற்றில் பாலை வார்த்தார் அவர்.
வெளியே வந்தவுடன்,
“கப்பூரு! அதான் அங்க செண்டர் இருக்குல்ல, இப்பவே தீபிய நாம கூட்டிட்டுப் போலாமா?” என கேட்டாள்.
“சிமி, டாக்டர் சொன்னத கேட்ட தானே! இன்னும் ஆறே மாசம் தான். பொறுத்துக்கடா. அதுக்குள்ள இங்க ஆரம்பிச்ச தெரபி, மருந்து மாத்திரை எல்லாம் முடிச்சிருவாங்க. நம்ம மக நன்மைக்குத்தான் சொல்லுறேன். ப்ளிஸ்டா! நீ முகத்த இப்படி பாவமா வச்சிட்டு கேட்டா, நான் சரின்னு சொல்லிருவேன். புரிஞ்சிக்கடா”
“ஹ்ம்ம் சரி, கேட்கல. ஆஆஆஆறு மாசம் தானே. பொறுத்துக்கறேன்” என மனதைக் கல்லாக்கி கொண்டு சொன்னாள்.
பிரகாஷ் அழகாக எடுத்து சொல்லவும் அழாமல், பெறாமல் பெற்றவர்களை சிரித்த முகத்துடன் அனுப்பி வைத்தாள் தீபீ. சித்ரா தான் கண் கலங்க திரும்பி திரும்பி பார்த்தபடியே வந்தாள்.
ஹோட்டலுக்கு வந்தவுடன், தீபா ஓடி வந்து சித்ராவைக் கட்டிக் கொண்டாள்.
“அம்மா! எங்க போன? நான் ரொம்ப மிஸ் பண்ணேன் உன்னையும் பிகாஷையும்.” முத்த மழை பொழிந்து விட்டாள். மகளைக் கொஞ்சி சமாதானப் படுத்துவதற்குள் ஒரு வழி ஆகிவிட்டாள் சித்ரா.
“அக்கா, லன்ச் ஆர்டர் செஞ்சு வச்சிருக்கேன். ரெண்டு பேரும் சாப்பிட்டு படுங்க. பார்க்கவே ரொம்ப டயர்டா தெரியறீங்க. நாங்க தீபாவ ஸ்லீப்பிங் பியூட்டி காஸலுக்கு கூட்டிட்டுப் போறோம்” என மற்றவர்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள் நிலா.
குளித்து விட்டு இருவரும், ஒன்றாகவே அமர்ந்து சாப்பிட்டார்கள். தீபா ரூம் முழுக்க இறைத்து வைத்திருந்த விளையாட்டுப் பொருட்களை இருவரும் சேர்ந்து அடுக்கி வைத்தார்கள்.
“படுக்கலாமா சிமி?”
“ஹ்ம்ம்” என்றவள் அவன் கைவளைவில் தலையை சாய்த்துக் கொண்டாள். அப்படியே கண்ணயர போனவள் திடீரென எழுந்து உட்கார்ந்து,
“உன் சீரியில கொள்ளி வைக்க!” என தலையணையால் மொத்த ஆரம்பித்துவிட்டாள்.
“ஹேய் சிமி! சீரி பொம்பள குரல்ல பேசறதனால அது மேலலாம் உனக்கு இவ்வளவு பொறாமை வரக்கூடாது. நோடா செல்லம், தப்பு” என அடிகளை வாங்கிக் கொண்டே சமாதானப்படுத்தினான்.
“ஆமா, சீரி என் சக்காளத்தி, எனக்கு பொறாமை பொங்கி வழியுது. இன்னொரு தடவை சீரி கால் ஜோன்னு சொன்ன, வாயிருக்கும் வார்த்தை இருக்காது”
அவள் இரு கரங்களையும் பற்றி, அடிப்பதை நிறுத்தியவன்,
“நானும் மொதப் புடிச்சி பார்க்கிறேன், வாய் பத்தியே பேசிட்டு இருக்கியே சிமி, என்ன மேட்டரு?” சரசமாக வினவியவன், லிங்கரிங் கிஸ்(lingering kiss) ஒன்றை கொடுத்துவிட்டே விட்டான்.
(தொடர்ந்து உன்னோடுதான்)