Anegan 4

Anegan 4

கனவு – 4

அம்ரிதாவுக்கு தெரியாமல் அனேகன் அவளை பார்த்துக் கொண்டிருந்த நேரம் அவன் கையில் வைத்திருந்த அலைப்பேசி உறும ஆரம்பித்தது. ஒரு வித எரிச்சலோடு கண்களை அழுந்த மூடியவன் அதனை அணைத்துவிட்டு தன் காற்சட்டை பையினுள் போட்டான். மீண்டும் ஒரு முறை அம்ரிதாவை சினேகப்பார்வைப் பார்த்தவன் மன நிறைவுடன் அங்கிருந்து கிளம்பினான்.

அலுவலகம் சென்ற அம்ரிதாவை எதிர்நோக்கி வீட்டு வாசலில் காத்துக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா. “உள்ள வந்து உட்காருங்க பெரிய பாப்பா.. அம்மு இப்ப வந்துடும்..” என்றார் பொன்னம்மா.

அந்த அழகிய அந்திசாய்ந்த பொழுது அள்ளித்தெளித்த ரம்மியமான தென்றல் காற்று ஆஷ்ரிதாவின் மனதில் இருந்த இறுக்கத்தை சிறிது தளர்த்திக்கொண்டிருந்தது. அந்த சுகத்தில் இருந்து விடுபட விரும்பாதவள் “இல்லை பொன்னம்மா.. இன்றைக்கு க்ளைமெட் கொஞ்சம் நல்லா இருக்கு.. அம்மு வந்ததும் உள்ளே வர்றேன்..” என கூறிவிட்டு மீண்டும் தன்னை அந்த தென்றலிடமே தொலைத்துக் கொண்டிருந்தாள்.

என்னதான் தன் மனதை தென்றலிடம் அவள் ஒப்படைத்தாலும், அதனை வழுக்கட்டாயமாக கடத்திச்சென்றது அன்று காலையில் அவள் கடந்து வந்த ஒரு நிகழ்வின் நினைவு.

டாக்டர் பிரபாகரனின் க்ளீனிக்கில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆஷ்ரிதா, தனது அம்மாவின் புகைப்படத்தை வாங்குவதற்காக வடபழநியில் இருக்கும் ஒரு பெரிய மால்-ஐ சென்றடைந்தாள். வாடிக்கையாக அச்சுவும் அம்முவும் அந்த மால்-க்கு தான் வருவார்கள். அவ்வாறு அவர்களுக்கு பரிட்சயமானவன் தான் திரவியம். அவன் அந்த மாலில் உள்ள பொக்கே ஷாப் ஒன்றின் மேற்ப்பார்வையாளன். நட்பின் பெயரில் திரவியத்திற்கு தெரிந்தவர் ஒருவரிடம் யசோதாவின் உருவ படத்தை வரைந்து வாங்கித்தரும்படி கேட்டிருந்தாள் ஆஷ்ரிதா. வரைந்து முடித்த அம்மாவின் படத்தை வாங்கிக்கொள்ளவே அவள் அங்கு சென்றிருந்தாள். அந்த சந்திப்பு அவர்களை ஒரு கப் தேனீருக்கும் அழைக்க, இருவரும் அந்த மாலின் இரண்டாம் தளத்தில் இருந்த காஃபி டே அரங்கை அடைந்தனர்.

“ஆஷ்ரிதா.. நீ ஆர்டர் கொடு, நான் இதோ வந்திடுறேன்..” என்றவனிடம் சரி என தலையாட்டி வைத்த ஆஷ்ரிதா அவன் திரும்பி வருவதற்குள் இரண்டு காப்புசினோ காஃபியை ஆர்டர் எடுத்து வைத்திருந்தாள். வந்தவன் எதுவும் பேசாமல் அமர்ந்து காஃபியை குடிக்கவும் அவனை செல்லமாய் முறைத்துப்பார்த்தாள் ஆஷ்ரிதா. ஆனால் அதை எதையும் கவனித்துக் கொள்ளாத திரவியம், தான் உண்டு தன் காஃபி உண்டு என்று அதனை ருசித்துக் குடித்து முடித்தான்.

அடுத்த கணம் எழுந்து நின்றவன் “போலாமா..” என்றான். ஆஷ்ரிதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ பிரம்மை பிடித்தாற்போல அவனை பார்த்துக்கொண்டிருந்தவளின் தோளை உலுக்கிய திரவியம் “என்னாச்சு..?” என்றான்.

“நான் இன்னும் காஃபி குடிக்கவே இல்லை..” என்றாள் ஆஷ்ரிதா.

“குடி..” என்றான் ஒன்றும் அறியாதவனாய்.

“வேணாம்..” என்றாள் இவள் ஒற்றை வரியில்.

“சரி..” என்றவன் அவளது காஃபியினையும் எடுத்து ஒரே கல்ப்பாக அடித்துவிட்டான்.

கோபத்துடன் எழுந்து நின்ற ஆஷ்ரிதா “ஆர் யூ கிட்டிங் மீ..? உனக்காக தானே வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.. வந்த.. காஃபி ஆர்டர் பண்ண சொல்லிட்டு போன.. மறுபடியும் வந்து ரெண்டையும் நீயே குடிச்சிட்டு கிளம்புற.. இதுக்கு எதுக்கு நான் வரணும்.. நீயே வந்து குடிச்சிருக்க வேண்டியதுதானே..?” என்று கடிந்துக் கொண்டாள்.

அவளது இந்த செயலைக் கண்டதும் திரவியத்துக்கு சிரிப்புதான் வந்தது. “இப்ப என்ன உனக்கு காஃபி வேணும் அவ்வளவு தானே..” என கேட்டான் திரவியம்.

“ஆமா..” என்று வெடுக்கென கூறிவிட்டு தன் கைகளைக்கட்டிக் கொண்டும் முகத்தை திருப்பிக்கொண்டும் நின்றிருந்தாள் ஆஷ்ரிதா. சிறுபிள்ளை தனமான அவளது இந்த செயலில் சிரித்துக்கொண்டவன் மீண்டும் அதே காப்புசினோ காஃபியை ஆர்டர் செய்து ஆஷ்ரிதாவிடம் கொடுத்தான். அவள் குடித்து முடிக்கும் வரை பொறுமையாய் காத்திருந்தான். ஆஷ்ரிதா காஃபியை குடித்து முடித்து கப்-ஐ மேஜையில் வைக்கவும் பேரர் வந்து பில்லை நீட்ட, பணம் கொடுக்கப்போன திரவியத்தை தடுத்த ஆஷ்ரிதா “நோ திரு.. என் அம்மாவோட போட்டோவ இவ்வளவு அழகா வரைஞ்சி வாங்கிட்டு வந்ததுக்காக இன்னைக்கு என்னோட ட்ரீட்..” என்றவள் தானே பணத்தை கட்டினாள்.

அவள் சொன்னதற்கு பதிலும் கூறாமல் எந்த பாவணையும் செய்யாமல் அமர்ந்திருந்த திரவியத்திடம் “ரொம்ப நன்றி திரு.. போட்டோ அவ்வளவு உயிர்ப்பா இருக்கு..” என்றாள்.

“ஆனா நீ அப்படி இல்லையே அச்சு..” என்ற திரவியத்தின் வார்த்தையில் ஒரு நிமிடம் அமைதியான ஆஷ்ரிதா மீண்டும் பேசத்தொடங்கினாள்.

“உனக்கு தெரியாதா திரு..? என் கவலை எல்லாம் அம்மு பத்தினது தான்.. இன்னைக்கு காலையில கூட அம்மாவ வர சொல்லுனு கேட்டு வீட்டுல அத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணிட்டாள்.. அம்மாவுக்கு தெரிஞ்ச டாக்டர் மூலமா அனேகன் –னு ஒருத்தர் கிடச்சிருக்காரு.. அவர மீட் பண்ணிட்டு தான் இப்போ இங்க வந்தேன்..” என்றவளது குரலில் இருந்த சோர்வை உணர்ந்தவன் “எனக்கு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்-ல.. நானும் கூட வந்திருப்பேன்..” என்றான்.

“நானே சமாளிச்சிடுவேன் திரு.. தேவைனா கண்டிப்பா உன்ன கூப்பிடுறேன்.. சரியா..?” என ஆஷ்ரிதா கூற பிரச்சனைக்கு உட்பட்டிருப்பவள் பெண் என்பதை கருத்தில் கொண்டு அதிகம் முக்கை நுழைக்க விரும்பாமல் “சரி..” என்று நாகரிகமாய் முடித்துக் கொண்டான்.

அப்பொழுது தான் அந்த சம்பவம் நடந்தது. திரவியமும் ஆஷ்ரிதாவும் பேசிக்கொண்டிருந்த அந்த டேபிளை நோக்கி கடுங்கோபத்தோடு வேகமாக வந்த பெண் ஒருத்தி திரவியத்தைச் சுட்டிக் காட்டி “உனக்கு தான் நல்ல பார்க்க இலட்சணமா இதோ ஒருத்தன் இருக்கான் –ல.. அப்புறமா எதுக்கு டி என் புருஷனுக்கு வலைய வீசுற..? அன்னைக்கு என்கிட்ட தப்பிச்சிட்ட ஆனால் இன்னைக்கு வசமா மாட்டினியா..?” என்று ரத்தம் கொதிக்க கொதிக்க அவள் பேசிய வார்த்தைகளை தன் காதுகளால் கேட்க முடியவில்லை ஆஷ்ரிதாவுக்கு.

அத்தனை பேர் முன்னிலையில் தன்மேல் பொய்யாக அதுவும் இத்தனை கீழ் தரமான குற்றச்சாட்டை வைத்தது ஆஷ்ரிதாவுக்கு அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஒன்றாய் சேர்த்துத் தந்ததில் அவள் மனமுடைந்து வாயடைத்து நின்றிருந்தாள்.

“ஹலோ.. யாரு நீங்க..?” என்று திரவியம் அந்த பெண்ணிடம் சீற

“இதோ நிக்குறாளே இவகிட்ட கேளுங்க சொல்லுவா..” என்று திரவியத்தின் சீறலுக்கு சிறிதும் சளைக்காது கத்தினாள் அந்த பெண்.

“யாரு அச்சு இவங்க..?” என்று திரவியம் அச்சுவிடம் கேட்க

“எனக்கு தெரியாது திரு..” என மிகவும் பயந்தவாறு கூறினாள் அஷ்ரிதா.

“ஆமா டி.. ஆமா.. என்ன எப்படி தெரியும்..? என் ஆத்துக்காரன மட்டும் தானே தெரியும்..” என்றவளை மேலும் பேசவிடாமல்

“நிறுத்துங்க உங்க பேச்சை.. பப்ளிக்-ல எப்படி பேசனும்-னு தெரியாதா..?” என்றான் திரவியம்.

“ஓ.. நான் பேசுறது அசிங்கமா இருக்கா.. இவ நடு ரோட்டுல நின்னு என் புருஷன்கிட்ட பல்ல இளிச்சுக்கிட்டு, இந்த நீல கலர் சட்டை நல்லா இருக்கு-ன்னு கொஞ்சிக்கிட்டு இருந்தாளே.. அது அசிங்கமா இல்லையா..? அன்னைக்கு அவரு வீட்டுக்கு வந்த முதல் வேலையா அந்த சட்டைய எரிச்சிட்டேன்.. இதோட உன் மனசுல இருக்கற எண்ணத்த நீயும் எரிச்சிடு.. இல்லைனா அடுத்த முறை எரியுறது சட்டையா இருக்காது.. ஜாக்கிரதை..” என்றவள் அவர்களது பதிலையும் எதிர்பார்க்காமல் விறுவிறுவென வந்த வழியை நோக்கிச் சென்றுவிட்டாள்.

அங்கு சுற்றியிருந்த அனைவரும் ஆஷ்ரிதாவை ஒருவிதமான அருவருப்பு பார்வை பார்க்க, கண்களில் கண்ணீரை வடிய விட்டவாறு தலைகுனிந்து அங்கிருந்து ஓடினாள் ஆஷ்ரிதா. அவள் பின்னாலேயே ஓடிய திரவியம் அவளை சமாதனப்படுத்தி ஒரு நிலைக்குக் கொண்டுவந்தான்.

“நிஜமாவே அவங்க யாருனு எனக்கு தெரியாது திரு..” என்று விசும்பிக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“அதை எனக்கு நீ சொல்லனுமா..? என்ன இது சின்ன புள்ள மாதிரி அழுதிக்கிட்டு.. வந்து முகத்தை கழுவு.. வா..” என்றான் திரவியம்.

“நீ இரு திரு.. நான் பார்த்துக்கிறேன்.. அம்மு எழுந்துக்கிறதுக்கு முன்னால நான் வீட்டுக்கு போகனும்.. ஆல்ரெடி லேட் ஆகிடுச்சு.. நான் கிளம்புறேன்..” என்று அவனிடம் விடைப்பெற்று வீட்டை வந்து அடைந்தது வரை ஆஷ்ரிதாவின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

‘அந்த பொண்ணு யாரா இருக்கும்..? எதுக்காக நம்மகிட்ட அப்படி நடந்துக்கனும்..? ஒருவேளை அம்முனு நினைச்சு என்கிட்ட..???’ என்று யோசித்தவளுக்கு ஒரு நிமிடம் பதறிப்போனது மனது.

“அம்மு எதுக்காக யார்க்கிட்டயோ இப்படி பேசப்போறா..? என்ன தான் நடக்குது என்ன சுத்தி..?” என்று தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஆஷ்ரிதா.

அப்போது அங்கே வந்திருந்த அம்ரிதா “என்ன அச்சு மா தலை வலிக்குதா..?” என்று கேட்டவாறு ஆஷ்ரிதாவின் சிரசை தன் கரங்களால் தடவிக்கொடுத்தாள்.

மிகவும் மென்மையாக அவளை ஏறிட்டு பார்த்த ஆஷ்ரிதா “ஆமா டி.. உனக்காக தான் வெயிட் பண்ணுறேன்.. வா..” என்றாள்.

“லூசு.. வந்தா உள்ள தானே வர போறேன்.. தலை வலியோட எதுக்கு இந்த காத்துல உட்கார்ந்திருக்க..? உள்ள வா..” என தன் அக்காவை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள் அம்ரிதா.

“நீ ஃப்ரெஷ் ஆகிட்டு வா.. நான் டின்னர் எடுத்து வைக்குறேன்..” என்று ஆஷ்ரிதா கூற, ஒரு குளியல் போட்டுவிட்டு உணவு மேஜையில் அமர்ந்தாள் அம்ரிதா.

“பொன்னம்மா.. நீங்க சாப்டீங்களா..?” என்று பாசமாய் ஆம்ரிதா கேட்க

“நான் சாப்பிட மாட்டேன் பாப்பா.. உங்க மேல நான் கோவமா இருக்கேன்..” என்றார் பொன்னம்மா.

“என்னாச்சு பொன்னம்மா..? என் மேல என்ன கோபம்..?” என கேட்டாள் ஆம்ரிதா.

“வேலை வேலைனு ஓடி உடம்ப எப்படி ஆக்கி வச்சிருக்கீங்க பாருங்க..! பேசாம அக்கா சொல்லுற மாதிரி இருக்க சொத்துகள கவனிச்சிக்கிட்டு ராணியாட்டம் இருக்கலாம்ல..” என சிறிது ஏக்கத்தோடு கேட்டார் பொன்னம்மா.

“என்ன அச்சு.. உன் வேலையா..?” என்றாள் அம்ரிதா.

“ஆமா டி.. எனக்கு வேற வேலையே இல்லைல.. பொன்னம்மாவ நான்தான் உசுப்பேத்திவிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கேன்..” என்று சலித்துக்கொண்டாள் ஆஷ்ரிதா.

“பெரிய பாப்பா எதும் சொல்லல மா.. நான்தான் கேட்குற..” என்றார் பொன்னம்மா.

ஒருமுறை ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்ட அம்ரிதா உணவு மேஜையில் இருந்து எழுந்து பொன்னம்மாவின் அருகில் சென்றாள். அவள் என்ன சொல்ல வருகிறாள் என காத்துக்கிடக்கும் ஆர்வம் பொன்னம்மாவின் கண்களில் தெரிந்தது. தனது வலது கையினால் பொன்னம்மாவின் இடது கன்னத்தை ஏந்திய அம்ரிதா “அம்மா-வ நீங்க மிஸ் பண்ணுறீங்களா பொன்னம்மா..?” என்று கேட்டாள்.

“என்ன மா இப்படி கேட்டுட்டீங்க..? தாயி என்ன இந்த வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்ததுல இருந்து இன்னைய வர அவதா என் குலசாமி.. அவள என்னால எப்படி..?” என அழத் தொடங்கினார் பொன்னம்மா.

“நீங்க குலசாமியா நினைக்கிற யசோதாவோட குலமே சிதைஞ்சி, இன்னைக்கு நானும் அக்காவும் அப்பா – அம்மா இல்லாம அனாதையா நிக்குறோம்னா அதுக்கு காரணம் அந்த மோகன் தான்..” என்று கண்கள் சிவக்க சிவக்க கூறினாள் அம்ரிதா. அவள் கோபத்தின் உச்ச நிலையை அடைந்துவிட்டாள் என்று உணர்ந்த ஆஷ்ரிதா, அம்ரிதாவின் அருகே வந்து அவளது தோள்களை பற்றி அழுத்தினாள். அதில் கொஞ்சம் சமாதானமான அம்ரிதா

“எல்லாம் கொஞ்சம் காலம் தான் பொன்னம்மா.. அந்த மோகனை மண்ண கவ்வ வைக்கனும்.. அதுக்காக நான் எவ்வளவு வேணும்னாலும் கஷ்டப்பட தயாரா இருக்கேன்..” என்றாள் ரெளத்திர புன்னகையோடு.

யசோதாவின் நினைவுகளுடனேயே ஒன்றி இருந்த அவர்களுக்கு அன்றைய இரவு முழுவதும் விடியலை தேடியபடியே கழிந்துவிட்டது. சற்றும் இரக்கம் காட்டாத பகலவனோ இன்று தாமதமாய் தான் தலையைக் காட்டினான். சிறிது நேரம் கூட கண்கள் அயறாத மூவரையும் பார்த்துக்கொண்டே உள்ளே வந்தாள் சுப்பு.

“என்ன மா.. இன்னைக்கு கதவ சாமத்துலையே துறந்துட்டீக போல.. அதுவும் நல்லதுதான்.. என் பையனோட இஸ்கூல் –ல பணம் கட்டச்சொல்லி நேத்து புள்ளைய அடிச்சிட்டாங்க மா.. கொஞ்சம்..” என அவள் முடிப்பதற்குள் வேகமாக எழுந்து தன் அறையினுள் சென்ற அம்ரிதா பணத்தை எடுத்து வந்து சுப்புவிடம் கொடுத்துவிட்டு,

“உன்கிட்ட எத்தன முறை சொல்லியிருக்கேன்.. ஸ்கூல் ஃபீஸ்-அ கரெக்ட்டா கேட்டு வாங்கிட்டு போ-னு..” என திட்டத்தொடங்கினாள்.

ஓரிரவு தூக்கமின்மை, அம்மாவின் நினைவுகள் தரும் தீரா கனம், அப்பாவின் துரோகம், எதிரியை வீழ்த்த போராடும் சுமை இவ்வாறு பல ரணங்களை தன் முதுகில் சுமக்கும் பொழுதும் எப்படி இவளால் மட்டும் இத்தனை சுறுசுறுப்பாய் தன்னை நாடியவர்களுக்கு கரம் கொடுக்க முடிகிறது என ஒரு நிமிடம் அதிசயித்துப்போனார்கள் ஆஷ்ரிதாவும் பொன்னம்மாவும். அவர்களது எண்ண ஓட்டத்தின் குரல் அடங்கி அம்ரிதாவின் குரல் கேட்கத் தொடங்கியது.

“இனிமே மாச சம்பளத்தோட சேர்த்து பையனோட ஃபீஸ் அமெளண்டையும் வாங்கிட்டு போ.. உன் புருஷன் கண்ணுல படாம வைச்சிருந்து சரியான நேரத்துல பணத்தை கட்டு.. என்ன புரியுதா..?” என்று உரிமையாய் கூறிய அம்ரிதாவிடம் சரி என வேகமாக தலையை ஆட்டி வைத்த சுப்பு தனது வழக்கமான வீட்டு வேலையை செய்யத் தொடங்கினாள்.

சுப்புவிடம் பேசிவிட்டு திரும்பிய அம்ரிதா “அக்கா.. இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்திருப்ப..? எழுந்து வேலைய பாரு..” என்றவள் குளித்துக் கிளம்பி அலுவலகத்திற்குச் சென்றாள்.

அம்ரிதா வீட்டை விட்டு கிளம்பிய அரைமணி நேரத்தில் ஆஷ்ரிதாவிற்கு அழைப்புக் கொடுத்திருந்தான் அனேகன். இன்று பத்து முப்பது மணியளவில் தன்னை அவள் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவில் சந்திக்குமாறு கூறியவன், தான் சொன்ன நேரத்திற்கு பத்து நிமிடங்கள் முன்னதாகவே அங்கு வந்திருந்தான். குறித்த நேரத்தில் சரியாக அங்கு சென்ற ஆஷ்ரிதா பூங்காவின் வாசலில் நின்றுக்கொண்டு தன் கை கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இன்னைக்கு அந்த ஆடம்பரக்காரன் வரட்டும்.. அவன் நேரம் மட்டும் தான் வேஸ்ட் ஆக கூடாதா..? இன்னைக்கு நான் கரெக்டா வந்துட்டேன்.. உன்னதான் காணோம்.. மவனே நீ வா.. உனக்கு வச்சிருக்கேன் கச்சேரி..” என்று அவனை வென்றுவிட்ட சந்தோஷத்தில் பூரித்துக் கொண்டிருந்தாள்.

அந்த நேரம் அவளது கைப்பேசி அலற, அழைத்திருந்தது அனேகன் தான். “வா டா என் வாட்டர் ஃபால்ஸ் மண்டையா.. இப்ப பாரு இந்த அச்சு யாரு-னு காட்டுறேன்..” என்று கைப்பேசியிடம் சொல்லிவிட்டு அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் “உங்களுக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுறது.. நீங்க மட்டும் சொன்ன நேரத்துக்கு வர மாட்டீங்களா..?” என்ற சிறிது அதட்டலுடன் கேட்டாள்.

“பார்க்குக்கு உள்ளே தான மீட் பண்ணுறதா சொன்னேன்.. வாசல்-ல என்ன பண்ணிக்கிட்டு இருக்க..?” என்று அவன் சொன்னதும் ஈயாடவில்லை ஆஷ்ரிதாவின் முகத்தில்.

“எ..எ..எங்க இருக்கீங்க..?” என்றாள் ஆஷ்ரிதா.

“திரும்பு” என ஒற்றை வரியில் பதில் கூறினான் அனேகன்.

‘செத்தான் டா சேகரு..’ என்று திருதிருவென முழித்தவாறு பின்னால் திரும்பினாள் ஆஷ்ரிதா.

அங்கே அவளுக்கு மிக அருகில் இருந்த ஒரு நீண்ட பென்ச்-ல் கால்மேல் கால்போட்டவாறு வலது கையின் ஆட்காட்டி விரலில் தன் கார் சாவியை சுழலவிட்டவாறு மிகவும் தோரணையாக அமர்ந்திருந்தான் அனேகன்.

“ஆகா.. இங்க தான் இருக்கானா.. ப்சே.. கச்சேரி மிஸ் ஆகிடுச்சே..” என்று நொடித்துக்கொண்டவள் வேகமாக அவன் அருகே சென்று அமர்ந்தாள். கார் சாவியின் சுழற்றலை நிறுத்தியவன் தன் காதில் மாட்டியிருந்த ப்ளூடூத்தை கழட்டிவிட்டு அவளைத் திரும்பிக் கூர்மையாகப் பார்க்க, அவளோ தன் செயலை எண்ணி நெளிந்துக் கொண்டிருந்தாள்.

(களவாடுவான்)

error: Content is protected !!