அமன்ஜீத்துக்கு, ப்ரீத்தி ரயில் நிலையத்தில் காவல் துறைக்கு எப்படி உதவினாள் என்பதை வீரேந்தர் வாயால் கேள்வி பட்டதில் இருந்து, முகம் அறியா அந்த ப்ரீத்தியின் மீது ஒரு மரியாதை வந்து இருந்தது.யாரையும் அது வரை புகழாத அவரே அவ்வளவு புகழ்ந்து தள்ளி விட அது அமன் மனதில் ஆழ பதிந்து போனது.
தன் உடல் நலத்தை பற்றி கூட கவலைபடாதவளாய் ஜெஸ்ஸி அறைக்கு வந்த அந்த மன திடம் அவள் மேல் ஒரு crush அவன் மனதில் ஏற்படுத்தி இருந்தது.மயக்க நிலையிலும் அவளின் மங்காத அந்த அழகு அவனை அசைத்து தான் விட்டது.
இன்று நேரில் பார்த்து,பேச ப்ரீத்தி அவளே அறியாமல் அமன்ஜீத் மனதில் இடம் பிடித்து விட்டாள்.
அது வரை நட்பாய் பேசி கொண்டு இருந்தவன் நெருக்கமாய் பேச ஆரம்பித்தான்.குரலில் இருந்த தெனாவெட்டு மறைந்து அங்கு உற்ற நட்பிடம் பேசும் ஒரு மென்மை வந்தது.கண்கள் புதிதாய் ரசனையுடன் ப்ரீத்தியை பார்க்க ஆரம்பித்தது.
ப்ரீத்தி அர்ஜுனுக்கு என்று பார்த்து இருக்கும் என்ற பெண் என்ற எண்ணம் ஒரு கணம் எழுந்தாலும்,
‘என்ன மங்கலஸூத்ர கட்டி விட்டானா என்ன? இன்னும் தான் ப்ரீத்தி ஒகே சொல்லவில்லையே.இந்த அர்ஜுனுக்கு மட்டும் தான் பேர்,புகழ்,இது மாதிரி தேவதை பெண் கிடைக்கணுமா? ஒருவேளை எனக்கானவள் இவள் தானா?’ என்று மனதில் ஒரு எரிச்சல் கிளம்பியது அமன்ஜீத்திற்கு.
இது வரை அவன் அர்ஜுனை எதிர்த்தது எல்லாம் உயிர் அற்ற பொருட்களை அடிப்படையாக கொண்டு.ஆனால் ப்ரீத்தி என்பவள் உயிர் உள்ள பெண்,அவளுக்கும் மனம் என்று ஒன்று இருக்கும் என்று உணர தவறிய அமன்ஜீத், ப்ரீதிக்காக மீண்டும் ஒரு போர் ஆரம்பிக்க சித்தம் ஆகி விட்டான்.
பாஷை புரியவில்லை என்றாலும் தீப் மூலம் ப்ரீத்தியின் அறிவு, திறமை,அவளின் பேசும் திறன் எல்லாம் அறிந்து இருந்த அர்ஜுன், அவள் ஒரு யக்ஷினி என்பதையும், அவளே அறியாமல் ஆண்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுகிறாள் என்பதையும் புரிந்து கொண்டான்.
இன்று அவளின் அந்த ஆகர்சனம் அமன்ஜீத்தையும் விட்டு விடவில்லை என்பது புரிந்து விட, அமன்ஜீத் முகம் சொல்லாமல் சொல்லி கொண்டு இருந்தது அவன் மனம் போகும் பாதையை பற்றி.
அமன்ஜீத் முகத்தில்,கண்களில் வந்து போன உணர்ச்சிகள் அர்ஜுனை மிடறு விழுங்க வைத்தது.ஏற்கெனவே இரு குடும்பத்திற்கும் பெண்ணால் ஏற்பட்ட பிரச்சனை போதாது என்று மீண்டும் ஒரு புயல் அடிக்க போவதற்கான அறிகுறி அங்கு உருவாகி கொண்டு இருப்பதை உணர்ந்த அர்ஜுன் மனம் நிம்மதி இழந்து தவிக்க ஆரம்பித்தது.
அமன்ஜீத் மனம் போகும் போக்கை புரிந்து கொண்ட இன்னொரு ஜீவன் ஜெஸ்ஸி தான்.
1000 வாட்ஸ் பல்பு முகத்தில் எரிய,தான் பிறந்ததே ப்ரீதியிடம் பேசுவதற்காக தான் என்று இருக்கும் இந்த அமன் ஜெஸ்ஸிக்கு புதியவன்.அளந்து அளந்து பேசும் தன் நண்பன் தானா இது என்ற சந்தேகமே வந்து விட்டது ஜெஸ்ஸிக்கு.
வாய் விட்டு சட்டென்று யாரிடமும் பேசி விட மாட்டான் அமன்ஜீத்.
பேசுவதில் ஒரு அழுத்தம் இருக்குமே ஒழிய நட்பு இருக்காது.
‘தூர நில்’ என்ற ஒதுக்கம், ஒரு விறைப்புத்தன்மை அவனிடம் இருக்கும். யாரையும் அவன் தன் அருகே நெருங்க விட்டது இல்லை என்பது தான் உண்மை.
அவன் பிறப்பு பற்றிய வதந்தி,அவன் காதால் கேட்ட ஏச்சுகளும், பேச்சுகளும் அவனை இறுக செய்து இருந்தது.மற்றவர்கள் தன்னை நெருங்கி பேசி விட கூடாது என்று அவனுக்கு அவனாகவே போட்டு கொண்ட வளையம் அது என்பது அர்ஜூனுக்கும்,ஜெஸ்ஸிக்கும் நன்கு தெரியும்.
அதை அர்ஜுனுக்கு சுட்டி காட்டியவளும் ஜெஸ்ஸி தான்.
அதுவரை குருதேவ் -தன்வி மகனாக மட்டுமே பார்த்து வந்த அர்ஜுனுக்கு,அவன் குற்றத்தை புரிய வைத்தவளும் ஜெஸ்ஸி தான். இருகரையாய் இருந்த சகோதரர்களுக்கு பாலமாய் இருந்தவளும் இவள் மட்டும் தான்.
தன் முகமூடியை,இறுக்கத்தை அமன்ஜீத் தளர்த்தியது ஜெஸ்ஸிகாக மட்டுமே.
அவளின் அந்த பப்ளியான குழந்தைத்தனம் மட்டுமே அவனின் இறுக்கத்தை உடைத்து முதல் நட்பு என்ற உரிமையை ஜெஸ்ஸியிடம் ஏற்படுத்தி இருந்தது. அந்த இறுக்கத்தை முற்றிலும் ஜெஸ்ஸியால் நீக்கி இருக்க முடியும் தான்,ஆனால் அது நடக்காமல் விதி இவர்களை பிரித்து விட்டது.
மீண்டும் இறுகி போன அமன்ஜீத்தை அசைத்து பார்த்து கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.
அமன்ஜீத்தின் இந்த நயாகரா அருவி ஜெஸ்ஸிக்கு அதிர்ச்சி தான்.
ப்ரீத்தியுடன் அந்த அளவிற்கு பழக்கம் இல்லை என்றாலும் அவளை பற்றி மதுரா,ராஜேஸ்வரி பேசி கேள்வி பட்டு இருக்கிறாள்.வீரேந்தர் ரயில் நிலைய சம்பவங்களை சொல்ல,இவளின் மேல் மரியாதை பெருகியது என்றே தான் சொல்ல வேண்டும்.
மற்றவரை காக்க “ஒண்டெர் வுமன் “எல்லாம் தேவையில்லை. மனம் இருந்தால்,எதையும் எதிர்க்கும் துணிவு இருந்தால் எல்லா பெண்களும் சாதனைகளை புரிய கூடிய திறன் உள்ள “ஒண்டெர் வுமன்களே “என்று நிரூபிக்கும் அவளின் துணிச்சல் ஜெஸ்ஸியை கவர்ந்து விட்டு இருக்க, அமன்ஜீத் மனம் செல்லும் பாதையும் அவளுக்கு புரிந்தது.
‘நமக்கு என்ன வந்தது’என்று கடந்து விடாமல் திடமாய் நின்று தன்னை சுற்றி இருந்தவர்களை காக்க அவள் எடுத்த முடிவு, அவளே எதிர்பார்க்காமல் பஞ்சாப் முழுவதும் அவளுக்கு ரசிகர்களை உருவாக்கி கொண்டு இருந்தது.
அந்த ரசிகர் மன்ற தலைவனாய் இருந்தே தீருவேன் என்று அமன்ஜீத் சபதமே எடுத்து விட்டான்.
அமர்நாத்துக்குமே, தான் அமன்ஜீத்திற்கு உதவ சென்று தவறு செய்து விட்டோமா என்ற எண்ணம் அமன்ஜீத் நடவடிக்கையால் உருவாகி கொண்டு இருந்தது.
இனகவர்ச்சி,காமம்,காதல் எல்லாம் சூறாவளி காற்றை போன்றது தானே.எந்த பக்கம் திசை மாறும் என்று யார் அறிவார்?
அமன்ஜீத் விடும் ஜொள்ளில் அர்ஜுன் என்ற எரிமலை பொங்கி கொண்டு இருப்பதை கண்டு கொண்ட மூன்றாவது நபர் அந்த காரில் ஜெஸ்ஸி தான்.
உரிமை இல்லாத பொருளின் மேல் உரிமை பாராட்டுவதும் ஒரு இல்லுசன்.
அதில் சிக்கி கொண்டு தவறு செய்து கொண்டு இருக்கும் ஒருவன் ஒருபுறம்,மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் கையை நீட்டி விட கூடாதே என்று தன்னை முயன்று கட்டு படுத்தி கொண்டு காரை ஒட்டி கொண்டு இருக்கும் இன்னொருவன் என்று என்று அங்கே கைகலப்பே ஏற்பட்டு விடும் சூழல்.
இதை இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என்று புரிந்தது ஜெஸ்ஸிக்கு.
“ஹே குங்பூ பாண்டா1…இன்னுமாடா அமன்ஜீத் மேல் இருக்கும் லவ்ஸ் உனக்கு குறையலை? இவ்வளவு பாசமா பார்த்துட்டு இருக்கே.எதுக்கு இப்படி உர்ங்கோட்டன் மாதிரி லுக்ஸ் வேற? ….இன்னுமாடா உங்க கோல்டு வார் முடியலை…இங்கே நாங்களும் இருக்கோம்.கொஞ்சம் எங்களையும் கவனிக்கலாம் தப்பில்லை.”என்றாள் ஜெஸ்ஸி.
‘குங்பூ பாண்டா’ இந்த வார்த்தை காதில் விழுந்ததும் அனிச்சை செயலாய், அர்ஜுன் பிரேக்மீது கால் வைக்க கார் குலுங்களுடன் நின்றது.
காரை நிறுத்தி விட்டு திகைத்து திரும்பிய அர்ஜுன், பின்னால் அமர்ந்து இருந்த ஜெஸ்ஸியை குழப்பத்துடன் பார்த்தான். அவனை அப்படி கூப்பிடும் ஒரே பெண் -கண்கள் பார்ப்பதை நம்ப முடியாமல் விரிய,
“ஹே …ஹே …நீ ஜஸ்மிந்தேர் ….ஜெஸ்ஸி ….கோல்டன் பிஷ் நீயாடீ ?” என்றான் அர்ஜுன் திகைப்பு நீங்காதவனாய்.
“யப்பா பாண்டா!… இப்போவது என்னை அடையாளம் தெரிந்ததே உனக்கு. உனக்கு இந்த அமன் குரங்கே தேவலை போல் இருக்கு…”என்றாள் ஜெஸ்மிந்தேர் தலையில் அடித்து கொண்டு
“ஆள் அட்ரஸ் இல்லாமல் காணாமல் போயிட்டு இங்கே வந்து எங்களை ஏன்டீ குறை சொல்றே? போடீ டிராகுலா!… .உன் பேச்சு டூ. உன்னை பார்த்தா பார்த்த இடத்திலேயே சப்புன்னு ஒரு அப்பு விடணும் என்று நினைத்து இருந்தேன்.
வாயை திறந்தே அடிச்சுடுவேன்.இத்தனை வருஷம் ஒரு கால் இல்லை,மெயில் இல்லை ,இருக்கோமா செத்தோமா என்று அக்கறை இல்லை” என்று பொரிந்து தள்ளினான் அர்ஜுன்.
என்ன நடக்குதுன்னு புரியாமல் அவர்களை மாற்றி மாற்றி பார்த்து கொண்டு இருந்த ப்ரீத்திக்கு,ஜெஸ்ஸி எப்படி அர்ஜுன்,அமன்ஜீத் தோழிஎன்பதையும்,எப்படி சொல்லாமலே அவர்களை ஒருநாள் பிரிந்து சென்றால் என்பதையும் தீப் விளக்கி கூற, அவர்களின் நட்பை கண்டு மனம் ஒரு புறம் நிறைந்தாலும், இன்னொரு புறம் மனதில் விவரிக்க முடியாத பயபந்து ஒன்று உருள ஆரம்பித்தது.
ஏதோ ஒரு uneasy பீலிங்.
பின்னால் நடக்க போவதற்கு premonition என்று சொல்வார்களே அதுவா?
அர்ஜுன் கோபத்தில் நட்பையும் தாண்டிய ஒரு நெருக்கம் இருப்பது சட்டென்று பிடிபட்டு போனது ப்ரீத்தியின் பெண் மனதிற்கு.
இந்த மன நெருக்கத்தை அர்ஜுன் உணருவனா?
அர்ஜுன் கோபத்தை கண்டு, சிறு கேவலுடன் தன் குடும்பத்தை பற்றி சொல்ல, அர்ஜுன்,அமன் இருவரின் கண்களும் கலங்கி போனது.
‘பள்ளி பருவத்தில் பட்டாம் பூச்சியாய் எந்த கவலையும் இல்லாமல் சுற்றி வந்த தங்கள் தோழியா இது?…’ என்று இருந்தது அர்ஜூனுக்கும் அமனுக்கும்.
சிரிப்பை தவிர வேறு ஒன்றையும் அறியாத தேவதை அல்லவா அவர்கள் தோழி. வேதனை பார்வை ஒன்றை இருவரும் பார்த்து கொள்ள அவர்களே அறியாமல் பெருமூச்சு ஒன்று வெளிவந்தது.
ஒருவர் மாற்றி ஒருவர் ஆறுதல் சொல்ல ஜெஸ்ஸி தன்னை ஒருவாறு தேற்றி கொண்டாள்.
நட்பின் துணை இருக்க கவலைகள் அதிக நேரம் இருந்து விட முடியுமா?
அடுத்த சில வினாடிகளில் அங்கு கேட்க ஆரம்பித்தது சிரிப்பு சத்தம் மட்டுமே.
ஒருவர் காலை ஒருவர் வாரி கொண்டு என்று கடந்த பொழுதுகளில் அந்த காரே அதிர்ந்தது.
24 மணி நேரம் தொடர்ந்து பேசுவது என்றால் கூட அலுத்து கொள்ளாத, பூமி,வான்,பால்வெளி என்று அனைத்தையும் அலசி ஆராய்ந்திடும் பஞ்சாபிகள் பற்றி கேட்கவும் வேண்டுமோ!….
கச்சேரி கலை கட்டியது. அவர்களுக்கே உண்டான liveliness, உற்சாகம்,பேச்சு சத்தம்.
ஆனால், இது எதிலும் கலந்து கொள்ள முடியாதவளாய் வெளியே பார்த்து கொண்டே வர ஆரம்பித்தாள் ப்ரீத்தி.
மொழி புரிந்தாலாவது ஏதாவது பேசலாம்.அதற்கும் வழி இல்லை.பேச்சு சுவாரஸ்யத்தில் தீப் கூட மொழி பெயர்ப்பை நிறுத்தி விட்டு இருந்தான்.
அந்த நொடி அவர்களை பொறுத்தவரை, ‘ப்ரீத்தி’ என்ற ஒருத்தி இல்லாமல் தான் போனாள்.ப்ரீத்திக்குமே தான் அங்கே அதிக படியோ என்று தான் தோன்ற ஆரம்பித்தது.
மனித மனம் புரியாத புதிர் தானே.ஒரு நொடி வானத்தில் பறக்கும் அடுத்த நொடி அதள பாதாளத்தில் தனக்கு என்று யாருமே இல்லை என்றெல்லாம் சிந்திக்கும்.
ப்ரீத்தி மீது இருக்கும் காதல் அளவிற்கு, ஜெஸ்ஸியுடன் உரிமை பாராட்டும் அர்ஜுன்.
ஜெஸ்ஸி மீது ஆழமான நட்பையும் தாண்டி ஓர் உரிமை காட்டியவாறு ,ப்ரீத்தியின் பக்கம் மனதை தொலைக்க ஆரம்பித்து இருக்கும் அமன்ஜீத்.
இந்த இருவரில் ஒருவனை பல வருடங்களாய் காதலிக்கும் ஜெஸ்ஸி.
அர்ஜுன் மேல் மனம் சென்று கொண்டு இருந்தாலும் ஒரு தயக்கத்தோடு தன் மனதை உணர தவறும் ப்ரீத்தி.
ப்ரீத்திக்கு பல வருடமாய் தோழனாய் இருக்கும் ரஞ்சித்.
இதில் எந்த மனம் எந்த மனதின் சரிபாதியாய் ஆகும்?
(ஹெலோ ஒரு பக்கமாய் லுக் விடுங்கப்பா …எல்லோரும் எல்லா பக்கமும் பார்த்தால் நாங்க ஒரு முடிவுக்கு வர வேண்டாமா?)
“ஏய் கோல்டன் பிஷ்! …இத்தனை நாள் எங்கே இருந்தே?” என்றான் அர்ஜுன்.
“சென்னை தான். அதான் சொன்னேனே, அதன் பிறகு எங்களால் இங்கே இருக்க முடியலை. அம்மா தான் ரொம்ப உடைந்து போனாங்க .அதான் தமிழ்நாட்டிற்கு குடியேறிட்டோம்.அங்கே தான் படிச்சேன்.வேலை செய்யறேன்.” என்றாள் ஜெஸ்ஸி.
“எல்லாம் சரி இப்போ இந்த வெள்ளை குரங்கு கூட என்ன செய்துட்டு இருக்கே? இங்கே நான் ஒருத்தன் இருப்பது நினைவுக்கே இல்லையா உனக்கு?அவன் கூட தங்கிட்டு இருக்கே .அவன் கிட்டே தான் வேலைக்கு வந்தே ஆவேன் என்று அப்படி என்ன …போடீ பேசாதே “என்றான் அர்ஜுன்
இந்த உரிமை நட்பு மட்டும் தானா?
“ஏன் அவ என் கூட தங்கினா உனக்கு எந்த பக்கம் இடிக்குது அர்ஜுன்?.அவ எனக்கும் தோழி தான். அவ என் கூட தான் வேலை செய்வா .என் கூட என் வீட்டில் தான் தங்குவா.” என்றான் அமன் அவனுக்கு குறையாத கோபத்துடன்.
(இவன் எல்லா டீமிற்கும் பேட் செய்யறானே!)
“அடேய் நிறுத்துங்கடா உங்க சண்டையை .நான் எங்கேடா இந்த வெள்ளை குரங்கு கிட்டே வேலைக்கு வந்தேன் ?
எல்லாம் ஹர்பிர் அங்கிள்லும்,உங்க அமர்நாத் மாமா இதோ ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரி உக்காந்துட்டு இருக்காரே இவர் செய்த வேலை…
நான் என் தோழியின் ….” என்று மேலும் ஜெஸ்ஸி பேசுவதற்குள் அர்ஜுன், அமன் குரல் அவள் சொல்ல வந்ததை முழுதாய் சொல்ல விடாமல் தடுத்து நிறுத்தியது.
ஜெஸ்ஸி சொல்ல வந்தது,
‘நான் எங்கேடா இவன் கிட்டே வேலைக்கு என்று வந்தேன்? என் தோழியின் திருமணத்திற்காக இங்கே வருவதை ஹர்பிர் அங்கிள், உன் மாமா அமர்நாத் கிட்டே சொல்லி இருக்கார்.
உடனே இதுங்க பக்கா கிரிமினல் பிளான் எல்லாம் போட்டு தோழியின் திருமணத்திற்கு வரும் எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை அரேஞ் செய்துட்டாங்க.
அதுவரை மூத்த மகன் என்று கண்ணீர் விட்டு கொண்டு ரெண்டாவது மகன்,மருமகளோடு அமெரிக்காவில் இருக்கும் அம்மா,எனக்கென்று ஒன்றை பல வருடங்களுக்கு பிறகு செய்வதால் இதை நிறுத்த முடியவில்லை
இதுல பிளைட் டிக்கெட், ட்ரெயின் டிக்கெட் எல்லாமும் வேற. நான் என் அம்மா கிட்டே சொல்லிட்டேன்…பிடித்து இருந்தால் தான் மேற்கொண்டு எதையும் பேசுவேன் என்று….
கடைசியில் பார்த்தா அந்த எனக்கு என்று பார்த்து இருக்கும் அந்த மாப்பிள்ளை குரங்கு இந்த அமன் தான்.என் விதியை பார்த்தாயா அர்ஜுன்? இதுல சார் திருமணம் என்றால் அலர்ஜியாம்.
எங்க அம்மாவும் நான் திரும்பி வர 6 மாதம் ஆகும் அதுவரை சென்னையில் தனியாய் இருப்பதற்கு பதில் அமன் எங்க சொந்தம் தானாம்.அவன் குடும்பத்தோடு இரு’என்று சொல்லி விட்டாங்க’என்று முழுதும் சொல்லி முடித்து இருப்பாள்.
‘இவள் வேலைக்கே வரவில்லை என்றால், அமன்ஜீத் தோழனை போலியாய் கால் உடைத்து, அவனுடன் வேலை செய்ய வரவழைத்த ப்ரீத்தி இவள் இல்லையா?…’ என்ற கேள்வி வந்து இருக்கும்.
(அந்த ப்ரீத்தி தானே வேலைக்கு வரும் பெண் –ஜெஸ்ஸி இல்லையே)
‘நான் எப்படி உனக்கு உறவு முறை ஆகும்?’என்று அமன்ஜீத் கேள்வி எழுப்பி இருக்கலாம்.
‘நீ உங்க அம்மாவிற்கு ஒரே மகள் தானே!…உனக்கு ஏது ரெண்டு அண்ணன்?’என்ற கேள்வி வந்து இருக்கலாம்.
(அந்த ப்ரீத்தி தானே ஒரே குழந்தை-ஜெஸ்ஸிக்கு உடன் பிறந்தவர் இருவர் ஆயிற்றே! )
விதி மீண்டும் விளையாடி இருந்தது.
உண்மை வெளிவராமல் எந்த ப்ரீத்தி, எந்த வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற குழப்பம் நீங்கி இருக்கும் வழி மீண்டூம் அடைபட்டு போனது.
“ஹே அது பாயல் அண்ணா தில்ஷர் தானே!…”அர்ஜுன், அமன் ஒரே சமயத்தில் எதிரே வந்து கொண்டு இருந்த ஒருவனை கண்டு கத்தினார்கள் என்று சொன்னால் சரியாய் இருக்குமோ.
அதோடு அந்த விஷயத்தை இவர்கள் மறந்து போய் விட, காரில் இருந்தவர்கள் கவனம் எதிரே வந்து கொண்டு இருந்த கூட்டத்தில் ஒருவன் மேல் படிந்தது.
அர்ஜுன், அமன் சந்தோசத்துடன் காரில் இருந்து கை காட்ட,பைக்கில் வந்து வந்து கொண்டு இருந்த அவனும் இவர்களை பார்த்து கை காட்டினான்.
அர்ஜுன் காரை ஓரமாய் நிறுத்த, தில்சர் என்று இவர்களால் அழைக்கப்பட்டவனும், அவன் உடன் வந்து கொண்டு இருந்த அவன் தோழர்கள் முப்பது பேரும் தங்கள் பைக்குகளை ஓரமாய் நிறுத்தி விட்டு இறங்கினார்கள்.
“அட அவனே தான்…அவன் கல்சாவில் இணைந்து துறவறம் வாங்கி விட்டதாக கேள்வி பட்டேன்.”என்றார் அமர்நாத் எதிரே “குரு க்ராந் சாஹிப்” லாரியில் பின் வர, அந்த லாரிக்கு முன்னால் வந்து கொண்டு இருந்த தில்சர் குழுவை கண்டு.
“என்னது துறவறம் வாங்கிட்டானா?விளையாடறீங்களா என்ன? துறவறம் வாங்கும் வயசா அவனுக்கு? எங்களை விட சின்னவன்” என்று ஒன்றாய் அதிர்ந்தனர் அர்ஜுனும், அமன்னும்.
“விளையாடுறேனா! …சத்தியமாய் அவன் துறவறம் வாங்கிட்டான். என்ன இப்படி ஷாக் ஆகறீங்க?…அப்போ உங்களுக்கு விஷயமே தெரியாதா என்ன?’என்றார் அமர்நாத் திகைப்புடன்.
“தெரியாது.”என்றனர் இருவரும் கோரஸாக.
அவர்கள் பார்வை தங்கள் குழுவிடம் பேசி கொண்டு கொண்டு இருந்த தில்சர் உடை மேல் விழ , அமர்நாத் சொல்வது உண்மை என்று சொல்லாமல் சொல்லியது அவனின் “கல்சா டிரஸ் code”.
கல்சா என்பது குழு/மரபுவழி ,ஒரு ஆர்கனைசேஷன்.1699 குரு கோவிந்த் சிங் உருவாக்கியது. இந்த கல்ஸாவில் இணைந்தவர்கள் ஐந்து சின்னங்களை தரித்து இருப்பார்கள்.
கங்கா (சீப்பு), காரா (எஃகு வளையல்), கேஷ் (வெட்டப்படாத முடி, தலைப்பாகையால் மூடப்பட்டிருக்கும், மற்றும் தாடி), கிர்பன் (குறுகிய வாள்) மற்றும் குச்சா (குறுகிய கால்சட்டை,) போன்றவை இவர்கள் அணியும் ஆடை யூனிபோர்ம் போல் இது இவர்களின் டிரஸ் code .
‘கல்சா/khalsa பற்றி சிறு தகவல்…
பஞ்சாபிகளில், ‘ஹிந்து பஞ்சாபி, சீக்கியர்கள்’ என்று பல பிரிவுகள் உண்டு. அதில் ‘orthodox sikhs’ ’ என்று இவர்களை அழைப்பார்கள்.
khalsa இணைந்த ஆண்களின் பெயரின் பின்னால், “சிங்” என்றும் பெண்கள் பெயரின் பின்னால், “கவுர்”என்ற அடை மொழியும் சேர்க்கபட்டு இருக்கும்.
இவர்கள் கடைபிடிக்கும் வழிபாட்டு முறை,வாழ்க்கை முறை “ரஹிட்/rahit ” எனபடும்.
புகையிலை,ஆல்கஹால்/மது /போதை பொருட்கள், விபச்சாரம்/பல திருமணம் , ஹலால்/ இறைச்சி போன்றவற்றை அறவே தவிர்த்து குரு கோவிந்த் சிங் காட்டிய வழிமுறையில் நடப்பவர்கள்.
“கல்சா”, மெக்லியோட்டின் கூற்றுப்படி, அரபு அல்லது பாரசீக வார்த்தையான “கலீசா” என்பதிலிருந்து உருவானது.
இதன் பொருள் “தூய்மையானவர்,தெளிவானவர், விடுதலை பெற்றவர்” என்பதாகும்.
உலக மாயைகளை கடந்து, பாவம் என்ற சேற்றில் இருந்து மீண்டு, மற்ற உயிர்களுக்காக வாழ்ந்து இறைத்தன்மையை அடையும் புனிதர்கள் இவர்கள்.மனித சேவையே இறை சேவை என்று வாழ்பவர்கள்.
சீக்கிய மதத்தின்படி உலகில் பிறந்த எல்லா மனிதர்களும் சீக்கியர்கள்.அவர்கள் அனைவரும் இயற்கையைப் படிக்க பூமிக்கு வந்தவர்கள்.அதாவது, கடவுளின் பிரதிநிதியாய் பூமிக்கு வந்த கடவுளின் சொரூபம் மனிதர்கள்.
தானும் உயர்ந்து மற்ற உயிர்களையும் உயர்த்தி இறைத்தன்மையை அடைய முயலும் இறை அம்சம் தான் மனிதர்கள்.
கல்சா என்பது தூய்மையானது, இது பலவீனமான மக்களுக்காக போராடுவதற்காக ஸ்ரீ குரு கோபிந்த் சிங் ஜி உருவாக்கிய இராணுவம்.
குரு காட்டிய வழியில் மக்களை கொண்டு செல்லவும், அநீதிகளை அழிக்கவும்,சத்தியத்தை நிலைநாட்டவும் உருவாக்க பட்ட ‘இறை ராணுவம்/GOD’S ARMY ” தான் கல்சா குழுவினர்.
இந்த குழுக்கள் கார்,பைக்,லாரி,நடந்தவாறு தலையில் சுமந்து என்று பலவிதமாய் “குரு க்ராந் சாஹிப்” எடுத்து கொண்டு கிராமம், கிராமமாய் சென்று இறைவனின் புகழை பரப்புவார்கள்.
அன்னதானம் செய்வார்கள்.பஜனை பாடல்கள் பாடுவார்கள். கிராமங்களில் தேவைப்படும் சுத்தம்,சுகாதாரம்,கர சேவை போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்.
அப்படி ஒரு கல்சாவில் தன்னை முற்றிலும் இணைத்து கொண்டு இருந்தான் இறந்து போன பாயலின் அண்ணன் தில்சர்.தங்கை மரணம் அவனை துறவறம் ஏற்க வைத்து இருந்தது.
வீடு வீடாய் சென்று போதை மருந்துக்கு எதிராக பிரசாரம், ‘இறைவன் மீது கவனம் திருப்புங்கள்’ என்று அவனும் அவனை போலவே அவனின் சில தோழர்களும் ஊர் ஊராய் அலைந்து கொண்டு இருந்தார்கள்.
அர்ஜுன் காரினை ஓரமாக நிறுத்த, தில்சர் உடன் பேச அர்ஜுனும் அமன்னும் இறங்கி சென்றார்கள். அவர்களின் நண்பனாய் கவலைகள் இல்லாமல் சுற்றி திரிந்தவனை,நல்ல வேலையில் இருந்தவனை அப்படி பார்க்கவே அவர்களின் நெஞ்சை பிசைந்தது.
அர்ஜுன்,அமன் தில்சரை அணைத்து, தட்டி கொடுத்து கண் கலங்கி நின்றார்கள்.
“ஹே அர்ஜுன்!…அமன்!…என்ன ஹைராணி இது?….ரெண்டு பேரும் ஒன்றாய் வந்து இருக்கீங்க.மழை தான் கொட்ட போகுது.”என்றான் தில்சர் இவர்களை கண்ட உடன்.
தில்சர் குழுவும் ஒரு ஓரமாய் தங்கள் வண்டிகளை நிறுத்தி விட்டு அங்கே இருந்த லஸ்ஸி கடையில் 27 வகையான இனிப்பு,கார லஸ்ஸிகளை ஒரு கை பார்க்க ஆரம்பித்தார்கள்.
அந்த குழுவின் மத தலைவர் மாதிரி இருந்த பெரியவரிடம் தில்சர் அனைவரையும் அறிமுக படுத்தி வைக்க,ஆண்கள் கைக்குட்டை எடுத்து தலையில் கட்டி கொண்டு “குரு க்ராந் சாஹிப்” வணங்கினார்கள்.
ஜெஸ்ஸி ப்ரீத்திக்கு இவர்கள் வழிபாட்டை பற்றி விவரமாய் கூறி, தன் பையில் இருந்து,”சுன்னி/துப்பட்டா” என்று அழைக்கப்படும் ஷால் எடுத்து ப்ரீத்தி தலையில் கட்டி விட,
ஜெஸ்ஸியுடன் ப்ரீத்தியும் வழிபாட்டில் கலந்து கொண்டாள்.பாஷை புரியவில்லை என்றாலும் மனதில் ஒரு அமைதி பரவுவதை ப்ரீத்தியால் உணர முடிந்தது.
வழிபாடு முடிந்து பிரசாதம் பெற்று கொண்டு வந்த ப்ரீத்திக்கு அந்த குழுவில் இருந்த ஒவ்வொரு சீக்கியர்கள் தலையில் இருந்த turban ஆச்சிரியத்தை கொடுத்தது.
ஜெஸ்ஸி அவளின் திகைப்பை பார்த்து சீக்கியர்கள் அணியும் turban பற்றிய விளக்கத்தை கொடுத்தாள்.
“ப்ரீத்தி சீக்கியர்கள் முடியை கடவுள் தந்த பரிசாய் நினைப்பார்கள். orthodox சீக்கியர்கள் தங்கள் முடியை வெட்டவே மாட்டார்கள். கண்டிப்பாய் தலை பாகை/turban அணிவார்கள்.”
“ஓஹ் பெண்களுக்கும் இது உண்டா?”
“ஹ்ம்ம் இருக்கு.அதோ பெண்கள் அணிந்து இருக்கிறார்களே அது மாதிரி.ஆனால் அதிகமாய் சுன்னி மூலம் தான் தலையை முக்காடு இடுவார்கள்அதிகமாய் சுன்னி/துப்பட்டா என்பதை தலைக்கு அணிந்து தான் குருதுவராவிற்குள் வழிபட வருவார்கள்.
“கடவுள் முன் தலைமுடியை காட்ட கூடாது, அது அவமதிப்பு என்று கருதுவார்கள்.பஞ்சாபிஸ்,நார்த் இந்தியா மக்கள் நிறைய பேர் கோயிலுக்கு வரும் போது எல்லாம் தலை முக்காடு போட்டு இருப்பார்கள் பார்த்து இருப்பாய் தானே.அது மாதிரி தான் இது.
தீவிர சீக்கியர்கள் அணியும் turban பெயர் dastaar.இதை வைத்தே எந்த நாட்டிற்கு சென்றாலும் ஒரு சீக்கியரை நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
அந்த காலத்தில் பணக்காரர்கள் மட்டுமே turban அணிவர்களாம். அது அந்த உயர் வகுப்பு மட்டுமே அணியும் பெருமையாக கருத பட்டது.ஆனால் 1699ல் குரு கோவிந்த் சிங் தான் சீக்கியர்கள் என்றால் turban அணிவதை கட்டாயம் ஆக்கினார்.
சோ பணக்காரர்கள் மட்டும் அணியும் தலைப்பாகை என்பது மாறி, கடவுளின் முன் அனைவரும் சமம் என்று கூறும் விதமாய் சீக்கியர்கள் அனைவரும் தலைப்பாகை அணிவது கட்டாயம் என்று கொண்டு வந்தார்.
அப்படியே தொப்பி மாதிரி எல்லாம் எடுத்து அணிந்து கொள்வதில்லை ஒரு சீக்கியரின் dastaar. அது எப்படி கட்ட வேண்டும் என்றும் வழிமுறைகள் உள்ளன.அது தொப்பி மாதிரி தலை மேல் இல்லாமல்,முக்கிய நரம்புகளை தலையில் தூண்டும் விதமாய் கட்டப்படும்.accupressure மாதிரி முக்கிய நரம்புகளை அழுத்தும் வண்ணம் மிக இறுக்கமாக கட்டப்படும்.
இதில் நிறைய வகை இருக்கு.
ஷாஹி dastaar,பப்பா,நிஹாங், தும்மளா,பர்னா,பாக்ஹ்ரி.”என்று சொன்ன ஜெஸ்ஸி அந்த குழுவில் இருந்த வித விதமான தலைப்பாகைகளை சுட்டி காட்டினாள்.
“இதோ இந்த பெரியவர் அணிந்து இருக்கிறாரே இதன் பெயர் -பக்டி .
இதை அவர் தினமும் கழற்றி விட்டு,மறுநாள் காலையில் புதிதாய் அணிவார். குறைந்தது ரெண்டு,மூன்று மணி நேரம் ஆகும் இதை அவர் தினமும் தலையில் கட்டி கொள்ள. இப்படி அணிவதையும் இறை சேவையாக தான் இவர்கள் செய்வார்கள்.
இந்தியாவில் சீக்கிய புனிதர் என்று அழைக்கப்படும் ‘Avtar Singh Mauni’ என்பவர் ‘பாட்டியாலா/patiala’ என்ற நகரத்தில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு தினமும் இந்த ‘pagdi’ அணிந்து முடிக்க ஆறு மணி நேரம் ஆகுமாம்.உலகத்தில் மிகவும் எடை அதிகமான,மிக நீளமான turban அது தான்.
எடை 456 கிலோ,2115 அடி நீளம் கொண்ட தலைப்பாகை அது.
அதில் அவர் சேர்த்து இருக்கும் ஆயுதங்கள்,சின்னங்கள் அது தனியே 3.6 கிலோ வெயிட் இருக்கும்.”என்று பல turbanகளை காட்ட ப்ரீத்திக்கு திகைப்பில் பேச்சே வரவில்லை.
அத்தனை அழகாய் இருந்தது அந்த தலைப்பாகைகள் ஒவ்வொன்றும்.TURBAN என்பது ஒரு ஒவ்வொரு சீக்கியரின் பெருமை.
“என்னப்பா அப்படி மலைச்சி போய் பார்க்கிறே?”என்றாள் ஜெஸ்ஸி.
“இந்தியாவில் மட்டும் எந்த மதமாய் இருந்தாலும் இறை வழிபாட்டில் கூட அறிவியல்,சமுதாய ஒழுக்கம்,தனி மனித ஒழுக்கம், மற்ற உயிரை மதிக்கும் உன்ன கோட்பாடுகளை கொண்டு வந்திருக்கும் நம் முன்னோர்களை நினைத்து பார்த்தேன் ஜெஸ்ஸி வியக்காமல் இருக்க முடியவில்லை.
எவ்ளவோ சுலபமாய் நாம் வாழும் முறையையே எப்படி அறிவியல் பூர்வமாய் அமைத்து இருக்கிறார்கள் பாரேன்.TURBAN தானே என்று சாதாரணமாய் நினைத்து விட முடியாத படி அதிலும் ஒரு சயின்ஸ்….”என்றாள் ப்ரீத்தி பெருமிதத்துடன்.
“ஹ்ம்ம் யெஸ் ப்ரீத்தி.நீ சொன்ன பிறகு தான் இந்த ANGLE யோசிக்க தோணுது.இன்னும் இது மாதிரி நிறைய உண்டு இல்லை.”என்றாள் ஜெஸ்ஸி.
“ஹ்ம்ம் யெஸ். இந்த தலைப்பாகை ACCUPRESSUREக்கு சமமாய் பெண்கள் நெற்றியில் விரல் வைத்து அழுத்தி வைக்கும் குங்குமம்,புருவ மத்தியில் உள்ள நரம்பு குவியல்களை அழுத்தம் தரவும் அங்கு உள்ள சக்ராகளை இயக்கி காஸ்மிக்,ப்ராணிக் எனர்ஜியை இழுக்குமாம்.குங்குமம் என்பது MERCURY/பாதரசம்,மஞ்சள்,சுண்ணாம்பு,எலுமிச்சை கொண்டு தயாரிக்க படுவது.
பாதரசம் வினையூக்கியாக செயல்படுகிறது, இது மூளையை சுறுசுறுப்பாகவும் எச்சரிக்கையாகவும் வைத்திருக்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பாலியல் இயக்கியாகவும் மற்றும் LIBIDINAL எனர்ஜி /லிபிடினல் ஆற்றலை செயல்படுத்துவதற்கும் குங்குமம் உதவுகிறது.
“ஆமா புதிதாய் திருமணம் ஆகும் பெண்களுக்கும்,தாய்மை அடைந்து இருக்கும் பெண்களுக்கும் அதற்காக தான் கை நிறைய வளையல் அணிவிக்கிறார்கள்.
எப்படி கோயிலில் ஒலிக்கும் ஆலய மணி ஒரு மன அமைதியை கொடுக்கிறதோ அதற்கு ஈடான அமைதி ஒரு பெண்ணின் கண்ணாடி வளையல் ஒளி வீட்டில் எழுப்புகிறதாம்.கர்ப்பத்தில் இருக்கும் சிசுவின் மூளை வளர்ச்சிக்கும்,காது திறன் மேம்படவும் தான் தாய்மை அடைந்த பெண்கள் வளையல் அணிய வைக்கிறார்கள். “என்றாள் ஜெஸ்ஸி.
“எனக்கும் கூட அர்ஜுன் நண்பர் ஒருவர் வீட்டில் கை நிறைய வளையல் போட்டு விட்டார்கள்.
INDUS VALLEY நாகரிகத்தில் ஆண்களும் வளையல் அணிந்து இருக்கும் சிலைகள் கிடைத்து உள்ளன.
தெலுங்கில் இதை கடையம்,கன்னடத்தில் “கடகா”,பஞ்சாபியில் “கடா “என்றும் அழைப்பார்கள். ஆனால் இவர்களை போல் அர்ஜுன் வீட்டில் யாரும் அணியவில்லையே, அமன் சார் கூட தான்.”என்றாள் ப்ரீத்தி வியப்புடன்.
“அர்ஜுன் பஞ்சாபி ஹிந்து.மாதா வைஷ்ணவி தேவியை வழிபாடு செய்வார்கள்.இந்தியாவில் உள்ள மற்ற ஹிந்து பண்டிகையை எல்லாம் கொண்டாடுவார்கள்.
பொங்கல் இதை lohri என்பார்கள்.
விநாயக சதுர்த்தி,நவராத்திரி, தீபாவளி,பைசாகி,ஹோலி /ஹோல்லா மோலா,சரஸ்வதி பூஜையை ‘பசன்ட் பஞ்சமி ‘என்றும், ‘டீயாண்’என்ற பெண்கள் நடனம்,’டிக்கா-ராக்கி’ மாதிரி இதை எல்லாம் பஞ்சாபி ஹிந்துக்களும் கொண்டாடுவார்கள்.
இத்துடன் ‘கார்வ சவுத்’ என்ற ‘சுமங்கலி பூஜை’ என்பது ரொம்ப பேமஸ்.இத்துடன் ‘குரு பிரபா’ என்று சீக்கிய மதத்தை காக்க உயிர் துறந்த மத்த குருக்களுக்கு அஞ்சலி செலுத்தும் பண்டிகைகளும் கொண்டாடுவார்கள்.
குருதுவராவில் வழிபாடு செய்வான் அர்ஜுன். பஞ்சாபி ஆனால் சீக்கியர் இல்லை.
சீக்கியர் “குரு க்ராந் சாஹிப்” மட்டுமே வழிபடுவார்கள். ஐந்து சின்னம் தரித்து இருப்பார்கள் orthodox சீக்கியர்கள்.
நம் மேல் பாசம் வைத்து விட்டால் அவர்களில் ஒருவராக நம்மை கருதி இந்த தலைப்பாகைகளை அணிவித்து விடுவார்கள். அதை அணிந்து கொண்டால் மதம் மாறி விட்டதாக அர்த்தம் எல்லாம் இல்லை. “என்றாள் ஜெஸ்ஸி.
அந்த குழுவின் தலைவர் அணிவித்து இருந்த சீக்கிய தலைப்பாகையையில் ஒரு சீக்கிய சிங்கம் போல் நின்று இருந்த அர்ஜுனை விட்டு ப்ரீத்தியால் கண்ணை அங்கு இங்கு விலக்க முடியவில்லை என்பது தான் உண்மை.
வழிபாடு முடிந்து அமர்நாத்தும்,தீப்பும் தில்சரிடம் விசாரித்து விட்டு,கீழே இறங்கி நின்று இருந்த ரெண்டு ப்ரீத்திகளுக்கும் லஸ்ஸி வாங்கி வர சென்றார்கள்.
ஒரே சமயத்தில் அத்தனை பேர் வந்தாலும்,காரின் அருகே இருக்கும் பெண்களுக்கு முதலில் லஸ்ஸி கொடுக்கும் படி வழிவிட்டு, அந்த கல்ஸா குழுவினர் தரையில் பாய் விரித்து,பைக் மேல் அமர்ந்து என்று தங்களை ஆசுவாச படுத்தி கொண்டார்கள்.
ஒரு மிக சிறிய கிராமத்தின் நடுவே நின்று இருந்தார்கள் இவர்கள். காலை வேலை பரபரப்பு எதுவும் இல்லாமல் தூங்கி வழிந்து கொண்டு இருந்தது அந்த கிராமம்.
அமர்நாத்,தீப் வாங்கி வந்து கொடுத்த லஸ்ஸியை சுவைத்து கொண்டு அந்த கிராமத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.
கார் அருகே ப்ரீதியுடன் ஜெஸ்ஸி நின்று இருக்க, அர்ஜுன், அமன் தில்சர் உடன் பேசி கொண்டு இருக்க,தீப்,அமர்நாத் அந்த கல்சா குழுவிற்கு லஸ்ஸி வாங்கி கொடுத்து கொண்டு அவர்களுடன் பேசி கொண்டு இருந்தார்கள்.
“ஹே என்னப்பா அப்படி பார்த்துட்டு இருக்கே?”என்றாள் ஜெஸ்ஸி.
“மணியை பாரு பதினொன்று.இதே நேரம் நம்ம சென்னை என்றால் எப்படி hurry and burryயா இருக்கும்.இந்த கிராமத்தை எல்லாம் பார்த்தால் ஏதோ ஒரு ஓவியனின் உறைந்து போன ஓவியம் மாதிரியே இருக்கு…அதான்.”என்றாள் ப்ரீத்தி.
“இங்கே லைப் ஸ்டைல் வேற ப்ரீத்தி…விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கிராமங்கள் இல்லையா ?அதான் இப்படி தூங்கி வழிவது போல் உனக்கு தோணுது.தவிர இது போன்ற கிராமங்கள் “widows village”என்று அழைப்பாங்க.” என்றாள் ஜெஸ்ஸி.
“புரியலை …widows village …அப்படி என்றால் ?”என்றாள் ப்ரீத்தி.
“இங்கே எல்லாம் போதை மருந்து எடுத்துட்டு இறந்து போனவங்க, இங்கே ஒவ்வொரு வீட்டிலும் மிக அதிகம் ப்ரீத்தி.சோ இது மாதிரி கிராமங்களில் மோஸ்ட்லி இருப்பது எல்லாமே விதவை பெண்கள் தான்.
“வாட்…ஆர் யூ ஜோக்கிங் ஜெஸ்ஸி?”என்றாள் ப்ரீத்தி காதால் கேட்டதை ஜீரணிக்க முடியாதவளாய்.
“இல்லை ப்ரீத்தி.இட்ஸ் ட்ருத்.நான் உண்மையை தான் சொல்றேன். ஒரு குடும்பத்தில் ஐந்து தலைமுறை பெண்க கூட விதவைகளாய் இருப்பாங்க.
தமிழ்நாட்டில் மது, கள்ள சாராயம் எப்படி குடிகாரங்களையும், சீக்ரெட், குட்கா, பான் மசாலா எப்படி கான்செர் பேசண்ட்ஸ்களையும், விதவைகளையும் உருவாக்குகிறதோ அதே மாதிரி இங்கே போதை மருந்து.
பார்த்தே இல்லை ரயில் நிலையத்தில் பிள்ளைகளை கொண்டு எப்படி எல்லாம் உள்ளே கொண்டு வாரங்கா என்று. பின்னே அளவுக்கு அதிகமாய் உள்ளே வந்தால் ‘விதவைங்க கிராமம்’ தான் இருக்கும்.
சோ இவங்க வாழ்க்கை முறைக்கு ஏற்றார் போல் தான் இங்கே பள்ளிகள் கூட இயங்கும். அக்கம் பக்கத்து ஒரு பத்து கிராமத்திற்கு சேர்த்து என்று ஒரே ஒரு பள்ளி தான் இருக்கும். “என்றாள் ஜெஸ்ஸி.
“ஹ்ம்ம் கேள்வி பட்டு இருக்கேன் …இவங்களை “inivisble women/கண்ணுக்கு தெரியாத பெண்கள்”என்று சொல்வாங்க இல்லை.அதாவது இவர்களால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்று இப்படி அழைப்பாங்க.மேற்கு வங்கத்தில், ப்ருந்தாவனத்தில் கூட இப்படி “widows village” இருக்கு இல்லை.” என்றாள் ப்ரீத்தி.
“யெஸ் ..கடைசி உயிர் மூச்சு பிரியும் வரை யாருமே யூஸ்லேஸ் இல்லை தான் அதிலும் குறிப்பாக பெண்கள் .” “என்றாள் ஜெஸ்ஸி கடுப்புடன்.
“எஸ் கரெக்ட் .எந்த எகானமி மேதையும்,நோபல் பரிசு வாங்கினவங்களும், ,நாட்டின் பொருளாதார மேதைகளும் தினமும் காலை முதல் மாலை வரை வீட்டு வேலைகளை செய்யும் இல்லத்தரசிகளின் பணிகளை ஒரு நாட்டின் GDPயில் சேர்ப்பது இல்லை தான்.
எந்த நாடாய் இருந்தாலும் இவை எல்லாம் பணியில் சேர்த்தி இல்லையாம்.திருமண வாழ்வில் உள்ள இல்லத்தரசிகளுக்கே இந்த கதி என்றால் இவர்கள் கைம்பெண்கள் . சோ இவர்களாகவே “INVISIBLE WOMEN/கண்ணுக்கு தெரியாத பெண்கள்”,” நீங்க எதற்குமே லாயக்கு இல்லை “ என்று முத்திரை குத்தி மூலையில் அமர வைத்து விட்டார்கள்.
இவர்களும் கணவன்,அந்த வீட்டின் ஆண்மகன் கொழுப்பு, திமிர் பிடித்து போதை சாராயம் எடுத்து செத்தால்,வீட்டோடு முடங்கி விடுவார்கள். “என்றாள் ப்ரீத்தி கோபத்துடன்.
“இன்னொரு கொடுமையான விஷயம் இவர்கள் மறுத்திருமணம், வேலை எல்லாம் இதன் பிறகு செய்வது இல்லை. கைம்பெண் திருமணத்திற்கு குரு கோவிந்த் சிங் அவர்களே முன்னுரிமை கொடுத்து தான் இருக்கிறார் என்றாலும் இது போன்ற கிராமங்கள் இங்கு இன்னும் அதிகரித்து கொண்டு தான் .அரசாங்கம் பென்ஷன் தரும்.அதை வைத்து வாழ்க்கை ஓட்டுவார்கள்.”என்றாள் ஜெஸ்ஸி.
“அது நம்ம இந்திய பெண்களின் மைண்ட் செட் ஜெஸ்ஸி. ரெண்டு பிள்ளை பிறந்த உடன் உடலின் மேல் கவனம் இருக்காது…உறவு,சுற்றம் கைம்பெண் என்றால் மறுமணம் எல்லாம் செய்ய மாட்டார்கள்.
நம் தோழி கணவனை இழந்து இருக்கிறாள் என்று தெரிந்தாலும் பேசி மறுத்திருமணத்திற்கு சம்மதம் வாங்குவோம், அவள் வாழ்வில் இன்னொரு துணையை ஏற்படுத்தி கொடுப்போம் என்பது எல்லாம் அதிகமாய் இருப்பது இல்லை தான்.
50 வயது ஆனால் “எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு” இவங்களாவே தங்கள் மூளையில் யோசித்துட்டு “ஏதோ ராமா,கிருஷ்ணான்னு இருக்கேன் …நேரம் வந்தால் போக வேண்டியது தான் “என்று டயலொக் பேசிட்டு இருப்பாங்க.
இதுக்கு எதுவும் இங்க இருக்கறவங்க செய்யலையா…?”என்றாள் ப்ரீத்தி.
“தோ தடிமாடுங்க ரெண்டு இருக்கே .அதுங்க கிட்டே தான் ஏதாவது செய்ய சொல்லணும்.அர்ஜுன் நல்லது என்றால் யோசிக்கவே மாட்டான் .அடுத்த நொடி நடத்தி விட்டு தான் அடங்குவான்.
இந்த அமன் இருக்கே … அவனுக்கு இருக்கும் ஒரே வேலை அர்ஜுன் குடும்பத்தை வம்புக்கு இழுத்துட்டு இருப்பது தான்.
இந்த எருமை நினைத்தால், எவ்வளவோ நல்லது செய்யலாம் இதுக்கும் அப்பா ரொம்ப powerful மத்திய அமைச்சர் வேறு .நல்லவன் தான் ஆனால் அது அவனுக்கு மட்டும் தான்.”என்றாள் ஜெஸ்ஸி.
இதை பற்றி அர்ஜுனிடம் பேச வேண்டும் என்று குறித்து கொண்டாள் ப்ரீத்தி.
கணவனை இழந்த ஒரே காரணத்திற்காக இவர்கள் சிறையில் இருக்க வேண்டுமா என்ன?
மறுமணம் என்ற கொள்கை உடைய பஞ்சாபிகள் மாநிலத்திலேயே இப்படியொரு கிராமம் என்பது திகைப்பான விஷயமே …ஆனால் இதன் காரணம் போதை என்னும் ஆழிப்பேரலை ஆயிற்றே .
எரிவதை பிடுங்கினால் தான் கொதிப்பது அடங்கும்.அடக்க முடியுமா?
மனம் கனத்து போனது ப்ரீத்திக்கு.கண்களில் படும் சிலது எல்லாம் மனதை கசக்கி பிழிந்து கொண்டு இருந்தது.
ஆரம்ப சுகாதார நிலையம் என்ற ஒன்றில் பூட்டு தான் தொங்கியது.
கட்டாய கிராம புற சேவை என்பதை கொண்டு வந்தால் எதற்கு என்று புரியாமல் கண் மூடி எதிர்த்து விட்டு,வெளிநாட்டு கார்பொரேட் ஹாஸ் பிடல்களுக்கு சேவை செய்ய நம் மருத்துவர்களை அனுப்பி கொண்டு இருக்கிறோம்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை படி 1000 மக்களுக்கு ஒரு டாக்டர் என்ற RATIO இருக்க வேண்டுமாம்.ஆனால் இந்தியாவில் “missing doctors,nurses “எண்ணிக்கை மிக அதிகம்.
FINANCE EXPRESS 2018,INDIAN EXPRESS 2019 அறிக்கை படி 10,000 மக்களுக்கு ஒரு டாக்டர் என்ற நிலைமை தான் இருக்கிறது.’என்று நினைத்து பார்த்த ப்ரீத்தி திடீர் எமெர்ஜெண்சி என்றால் இந்த மக்களின் உயிர் அல்லவா பணயம் வைக்கபடுகிறது.
ALL INDIANS ARE MY BROTHERS AND SISTERS என்று சிறு வயதில் எடுக்கும் சத்தியப்பிரமாணம் எல்லாம் ஏனோ பணத்தின் முன் வசதியாய் மறந்து தான் விடுகிறது.
வருங்கால தலைமுறையை உருவாக்கும் அரசாங்க பள்ளிக்கூடம் சுற்றுச்சுவர் கூட இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் தான் இருந்தது.
சைக்கிள் மூலம் வந்து இறங்கி கொண்டு இருந்த இளம் பெண்கள்,சிறார்கள் whiskey பாட்டில், சிகரெட் துண்டுகள்,போதை ஊசிகள் இவற்றை தாண்டி தான் சென்று கொண்டு இருந்தார்கள்.கண்கள் கலங்க அந்த பள்ளி செல்லும் பிள்ளைகளையே பார்த்து கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.
அவளுக்கு சற்றும் குறையாத வேதனையை காட்டியது ஜெஸ்ஸியின் கண்கள்.
“இந்த பிள்ளைகள் எல்லாம் பார்க்கும் போது நம்ம எவ்ளவோ மேல் நிலையில் இருக்கோம் என்று தோன்றுது இல்லை ப்ரீத்தி?” என்றாள் ஜெஸ்ஸி
“ஹ்ம்ம் …வாஸ்தவம் தான் ஜெஸ்ஸி.நாம படித்த ஸ்கூல்,அதன் சூழலுக்கும் இவங்க படிக்கும் ஸ்கூல்,சுற்றுப்புறத்திக்கும் வித்தியாசம், சுகாதாரம் பாரேன்.
கார்பொரேட் மட்டும் இல்லை ஒவ்வொரு தெருவில் உள்ள அரசாங்க பள்ளி,ஹாஸ்பிடல்லை ஒவ்வொரு தெருவும் தத்து எடுத்தால் தான் இது எல்லாம் சரியாகும்.அர்ஜுன்,அமன் சார் கிட்டே இதை பத்தி பேசணும்.”என்ற ப்ரீத்தி
“நாமளே இறங்கி கிளீன் செய்துடலாமா ஜெஸ்ஸி? படிக்கும் இடம் இப்படி இருப்பது மனதை அறுகுது.அந்த திருமணத்திற்கு போய் வரும் ஆயிரம் பேருடன் நின்று இருப்பதற்கு இதை செய்து விடலாமே”என்றாள் ப்ரீத்தி.
“செய்யலாம் தான் ஆனால் பள்ளி நிர்வாகம் இதை ஒற்று கொள்ளணும்.”என்றாள் ஜெஸ்ஸி.
“நாம என்ன பிரின்சிபால் வேலையா கேட்கிறோம்?சுத்தம் செய்ய தானே அதுவும் பிரீயா செய்ய தானே!…”என்றாள் ப்ரீத்தி திகைப்புடன் தான் காதில் கேட்பதை நம்ப முடியாமல்.
“இங்கே ஒரு ஹெல்பிங் குரூப் இருக்கு…அவங்க போன வாரம் தான் போன் செய்து புலம்பினாங்க.இந்த பக்கம் சில பள்ளிகளுக்கு வாட்டர் டிரீட்மென்ட் /குடி தண்ணீர் சுத்திகரிப்பு மெஷின் ஒவ்வொரு தளத்திற்கும் CSR என்று அரசாங்கம் எடுத்து வந்த ‘கார்பொரேட் சோசியல் RESPONSIBILITY ‘ என்ற திட்டத்தின் கீழ் பிரீயா அமைத்து தருவதாய் கேட்டார்களாம்.
அதுக்கு அந்த ஸ்கூல் நிர்வாகம் ‘நீங்க பிக்ஸ் செய்துட்டு போயிடுவீங்க. வருஷா வருஷம் அதை யார் மெயின்டெய்ன் செய்ய பணம் தருவது?’என்று கேட்டு கடுப்பு ஏற்றி உள்ளார்கள்.
அவங்க கேட்க ஆரம்பித்த போது அவங்க பெண் அந்த ஸ்கூலில் LKG படிச்சிட்டு இருந்தது.இப்போ அது நாலாம் வகுப்பு படிக்குது.இத்தனை வருசமாய் போட்டு தரேன் என்று கெஞ்சிட்டு இருக்காங்க அந்த பெற்றோர்.
ஆனால் இன்டெர்னல் பாலிடிக்ஸ்,சுத்தம் சுகாதாரம் என்ற விழிப்புணர்வு இல்லாத போர்டு மெம்பெர்ஸ் என்று நிறைய இருக்கு.நீ நினைச்ச உடன் துடைப்பம்,முறம்,வாளியுடன் எல்லாம் கிளீன் செய்ய முடியாது.அர்ஜுன்,அமன் மூலம் தான் கேட்க வேண்டும்.”என்றாள் ஜெஸ்ஸி
“யோவ் நான் ஸ்கூல் கொள்ளை அடிக்க கேட்கலை.அதை சுத்தம் செய்ய தான்யா கேட்கிறேன்.”என்றாள் ப்ரீத்தி திகைப்புடன்.
“கொள்ளை கூட அடிக்க விட்டுடுவாங்க.ஆனால் சுத்தம் எல்லாம் ஹ்ம்ம்…நம்ம நாட்டு ஆட்களை பொறுத்தவரை சுத்தம் என்பது நம் வீட்டு குப்பைகளை பெருக்கி தெருவில் கொட்டுவதுடன் முடிந்து விடும்.
‘கம்யூனிட்டி கிளீனிங்’ என்பது எல்லாம் கிடையவே கிடையாது.
அப்படி யாராவது செய்தாலும் பத்து பேர் அதை SELFIE எடுத்து போட வருவாங்க.இறங்கி எல்லாம் கிளீன் செய்ய மாட்டாங்க baby .. நாலு சுவத்துக்குள் இருந்து பக்கம் பக்கமாய் போஸ்ட் போட சொல்லுறியா நானும் அதை செய்வேன்.
நாலு சுவத்துக்குள் வீரம் பொங்கோ பொங்குன்னு பொங்கும்.அதுவே field ஒர்க் என்றால் ஓட்டம் எடுப்பேன் ப்ரீத்தி.இது தான் எதார்த்தம்.இந்த பக்கம் குனிஞ்சி நிமிர்ந்து வேலை செய்ய மாட்டோம்.அந்த பக்கம் ‘சுத்தம் இல்லாத இந்தியா ‘என்று போஸ்ட் போடுவோம்.
நீ ஒருநாள் இங்கே வந்து செய்வே.பள்ளி கூடம் கோயிலுக்கு சமானம் என்ற பேசிக் அறிவு கூட இல்லாமல் இதை எல்லாம் இங்கே போட்டு இருக்கும் மிருகங்கள் நாளைக்கும் இதையே தான் இங்கே போட போகிறது.
இப்போ ஒரு பேய் படம் பார்த்தேன்.அதில் பள்ளிக்குள் இரவு வேளையில் விலைமாதர்களுடன் சில வக்கிர ஜென்மங்கள் இருப்பதாய் காட்டுவார்கள்.முகம் சுளிக்க வைத்தாலும் சுற்றுச்சுவர்,காவல் இல்லா பள்ளிகளின் நிலைமை இது தான்.சாராய கடையாய்,படுக்கை அறையாய் தான் இப்படி உள்ள பள்ளிகள் சமூக விரோதிகளுக்கு பயன்படுகிறது. சோ இந்த ஷாக்கை குறை,அர்ஜுன் கிட்டே பேசலாம்”என்றாள் ஜெஸ்ஸி.
பெண்கள் இருவரும் தங்கள் கண் முன்னே அந்த பள்ளியின் சுற்றுப்புறம் இருந்த நிலை கண்டு வேதனையில் இருக்க, அர்ஜுன், அமன் இருவரும் அதற்கு சற்றும் குறையாத வேதனையுடன் தங்கள் நண்பனிடம் பேசி கொண்டு இருந்தார்கள்.
“ஏண்டா …அங்கிள்,ஆன்ட்டிய கொஞ்சமாவது நினைத்து பார்க்காமல் இதற்கு இப்படி ஒரு முடிவு எடுத்தே …”என்றான் அர்ஜுன் முகம் வேதனையில் சுருங்க.
“கோடி கோடியாய் சம்பாதித்தேன் …யாருக்காக அர்ஜுன்? …என் குடும்பத்திற்கு தானேடா …அப்படி ஓடி ஓடி சம்பாதித்து என்னத்தை சாதித்து விட்டேன் சொல்லு? …என் தங்கையை பலி கொடுத்தது தான் மிச்சம் …
வீட்டில் அத்தனை பேர் இருந்தோம் என்று தான் பெயர் பாயலை கூட கவனிக்காமல் இருந்து இருக்கோம்.இப்போ அம்மா படுத்த படுக்கை ஆகிட்டாங்க .இப்போவோ அப்போவோ என்ற நிலைமை.திடமாய் இருந்த அப்பா,கவலையே இல்லாமல் சுற்றி வந்த தம்பி, தங்கை யாரும் இப்போ நிம்மதியாய் இல்லை அர்ஜுன்…
எங்க வீட்டு இளவரசி ஒரேடியா போய் சேர்ந்துட்டா.அவ மரணம் ஒரு முறை தான் நடந்தது .ஆனா தினம் தினம் மனதிற்குள் ஆயிரம்,லட்சம் முறை நாங்க செத்து செத்து பிழைச்சிட்டு இருக்கோம் அர்ஜுன்.எங்கே திரும்பினாலும் அவ முகம் தான் தெரியுது.
‘அண்ணா!… என்னை காப்பாத்து அண்ணா’ என்று அவள் குரல் தான் கேக்கிறா மாதிரி இருக்கு.SURVIVERS GUILT.நாங்க உயிரோடு இருக்கும் போது அவ இறக்க விட்டுட்டோமே என்ற குற்ற உணர்ச்சி கொல்லுது.
இந்த நிலைமை இன்னொரு குடும்பத்திற்கு வர கூடாது என்று தான் துறவறம் வாங்கிட்டு, இறை வழியில் இவங்களை திருத்த முடியும் என்று என்னை போலவே, போதை மருந்தை எதிர்த்து போராடும் இந்த குழுவில் இணைந்து விட்டேன்.
என் தங்கை உயிரை தான் ஒரு அண்ணனாய் இருந்து காப்பாற்ற முடியவில்லை . நாட்டில் இந்த போதைக்கு அடிமையாகி லட்சம், கோடி தம்பி, தங்கை கள் இருக்காங்க ..அவர்களில் யாரையாவது காப்பாற்றினால் கூட போதும் …” என்றான் தில்சர் கண்களில் கண்ணீர் வழிய.
“அதுக்கு துறவறம் தான் வாங்கணுமா?”என்றான் அமன்ஜீத்.
“பாயல் என் தங்கை.அவ பிறந்த உடன் இந்த கைகளில் தான் முதலில் வைத்தார்கள்.என் அப்பா கூட பிறகு தான் அவளை தூக்கினார்.அவளே போன பிறகு எல்லாவற்றின் மேலும் ஆசை போய் விட்டது அமன்.
சச்தீப் நிலைமை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. எல்லாம் கை விட்டு போன பிறகு இறைவனின் சன்னதி தானே மன நிம்மதியை தரும்.என் தங்கைக்கு தேவை படும் போது இல்லாமல் போனேன் …
இன்று ‘என்னையே எல்லோருக்கும்’ என்று துறவறம் வாங்கி விட்டேன்..
சரி என் கதையை விடுங்க .அர்ஜுன் உனக்கு திருமணம் என்று கேள்வி பட்டேன்.பஞ்சாப் முழுவதும் இப்போ ஹாட் டாபிக் உன் திருமணம் தான். யார் பெண்?”என்றான் தில்சர் .
‘இப்போ இவன் இதை கேட்கவில்லை என்று யார் அழுதது?.’ என்று அமன்ஜீத் முகம் சுருங்கி போனது.
‘ப்ரீத்தி அர்ஜுனுக்கு என்று பார்த்து இருக்கும் பெண்’என்று மனசாட்சி அறிவுறுத்த அதன் பேச்சை ப்ரீத்தி மேல் ஆசை கொண்டு விட்ட மனம் குப்பை போல் அலட்சிய படுத்தியது.
“ALL IS FAIR IN LOVE AND WAR “என்று மனம் தனக்கு தானே சமாதானம் சொல்லி கொண்டது.
ஆசை எல்லா பாவத்திற்கும் அடித்தளம்.
‘நேபாள மன்னன் அரசாட்சி!
அழிச்சது அங்கொரு அழகியப்பா!
சாக்ரடீஸ் குடித்த விஷத்திற்கு பெயர்,
HEMLOCK இல்லை பெண் தானப்பா!
ஆதாம் தொடங்கி பில் கிளின்டன்
வரைக்கும் பெண் வழி போனவன் திரும்பலைப்பா!…’
என்பதை உணராத அமன்ஜீத் தன் மூளையை அடகு வைத்து விட்டு இருந்தான்.
பெருமூச்சை வெளியிட்ட அர்ஜுன், “பேச்சை திசை திருப்புகிறாயா தில்சர்?.”என்று கண்கள் கலங்க கேட்டு
சற்று தொலைவில் அவன் காரின் அருகே நின்று லஸ்ஸி அருந்தி கொண்டு இருந்த ப்ரீத்தியை கை காட்டி,”அதோ அந்த சந்தன கலர் சுடிதார் போட்டு இருக்கும் பெண் தான் நான் திருமணம் செய்ய போகிறேன்.பெயர் ப்ரீத்தி.”என்று சொல்ல தில்சர் தன் குழுவிடம் அதை பற்றி சொல்ல எல்லோரும் ப்ரீத்தியை பார்த்து மனம் நிறைந்தார்கள்.
“வாழ்த்துக்கள் சர்தார்ஜி …உங்களுக்கு ஏற்ற ஜோடி தான் …பர்ஜாயீ பார்க்க தேவதை மாதிரி இருக்காங்க …”என்று ஆளுக்கு ஆள் வாழ்த்து சொல்ல அந்த இடமே கலகலவென இருந்தது.
அமன்ஜீத் முகம் சுருங்கி போனது.
அந்த வாழ்த்துக்கள் எல்லாம் அமிலத்தை அவன் மேல் ஊற்றியது போல் இருக்க,அவனே வெறுப்பில் கருகுவது போல் உணர்ந்தான்.
அவர்கள் வாழ்த்தை மனமார பெற்ற அர்ஜுன் முகம் புன்னகையில் மலர்ந்தது.
‘உண்மை தான் என் ப்ரீத்தி தேவதை பெண் தான்.அழகில் மட்டும் இல்லை ,குணத்தில்,நடத்தையில்,செய்யும் செயல்,பேசும் வார்த்தைகளில் கூட தேவதையாய் மிளிர்பவள் தான். குதா …உமக்கு நன்றி.’என்று கண் மூடி மனதில் எழுந்த ஆனந்தத்தில் திளைத்தான் அர்ஜுன்.
“ஒரு டவுட் சர்தார்ஜி! …அவங்க சம்மதம் உடன் தானே திருமணத்திற்கு ஏற்பாடு செய்து இருக்கீங்க?”என்றான் அந்த கூட்டத்தில் ஒருவன் திடீர் என்று.
அந்த கேள்வியால் அதிர்ந்தது அர்ஜுன் மட்டும் இல்லை, அமன்னும் தான்.
“ஏன் இப்படி கேக்கறீங்க?”என்றான் அர்ஜுன் இந்த கேள்வி எதற்கு என்று புரியாமல்.
“அந்த பெண் சம்மதத்துடன் தானே அர்ஜுன் இந்த திருமணம் ஏற்பாடு ஆகி இருக்கு…பிடிக்காத பெண்ணை கட்டாய திருமணம் செய்கிறாயா என்ன?” என்றான் தில்சரும் தன் தாடையை தடவி கொண்டு.
“அமர் மாமா கொண்டு வந்த ப்ரோபோசல் தான் இது…அவங்க குடும்பத்திற்கு பிடிச்சி இருக்கு.ப்ரீத்தி சம்மதம் வாங்கிய பிறகு தான் பஞ்சாப் அனுப்பி வைத்து இருக்காங்க …யாரையும் நான் கட்டாய படுத்தி எல்லாம் திருமணம் செய்யலை …போதுமா?இப்போ எதுக்கு இத்தனை பேர் மாத்தி மாத்தி இந்த கேள்வியை கேட்டுட்டு இருக்கீங்க?”என்றான் அர்ஜுன் கடுப்புடன்.
ஒரே நொடியில் பால்வெளியில் பறந்து கொண்டு இருந்து அடுத்த நொடி அதள பாதாளத்தில் விழும் பீல் எழுவதை அர்ஜூனால் தடுக்க முடியவில்லை.
“அது ஒன்றும் இல்லை சர்தார்ஜி …நீங்க அவங்க தான் “மணப்பெண்”என்று அறிமுகம் செய்து கையை காட்டியதும் ஓட ஆரம்பிச்சவங்க தான் இன்னும் ஓடிட்டு இருக்காங்க ….நீங்க பிடிக்காத பெண்ணை கம்பெல் செய்து வைத்து இருக்கீங்களா என்று தான் …”என்று ஒருவன் இழுக்க,
“வாட்?”என்ற திகைப்பான கேள்வியுடன் ஒரு காலால் வட்டம் அடித்து அர்ஜுன் திரும்ப,பார்ப்பதை அவன் கண்களாலேயே நம்ப தான் முடியவில்லை.
பின்னங்கால் பிடரியில் படும் படி ஓடி கொண்டு இருந்தது சாட்சாத் பிரீத்தியே தான்.உங்க வீட்டு ஓட்டம்,எங்க வீட்டு ஓட்டம் இல்லை..உசைன் போல்ட் கூட தோற்று விடும் வண்ணம் அந்தளவு வேகமான ஓட்டம் ஓடி கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.
‘திருமணம் பிடிக்கவில்லையா?
இவர்களிடம் அறிமுகம் செய்தது பிடிக்கவில்லையா…?
என்னையே பிடிக்கவில்லையா?’
ஒரு கணத்தில் அண்ட சராசரத்தையே சுற்றி வரும் வல்லமை பிடித்த மனம் என்னென்னமோ எண்ணி நடுங்க உறைந்து நின்றான் அர்ஜுன்.
பயணம் தொடரும்…