Anegan2

கனவு – 2

அய்யோ.. என்ன பாப்பா இப்படி பண்ணிட்டீங்க..?” என்று பதட்டத்துடன் கூறிய பொன்னம்மா, அம்முவை தண்ணீர் தெளித்து எழுப்ப ஓடினார்.

வேணாம் பொன்னம்மா.. அவ கொஞ்ச நேரம் இப்படியே இருக்கட்டும்.. அவளாவே எழுந்துப்பா.. எழுந்ததும் சகஜமாகிடுவா.. நான் இப்ப அம்மு விஷயமாதான் வெளியில போறேன்.. நீங்க அவள பார்த்துக்கோங்க.. அவ எழுந்ததும் எதையும் காட்டிக்க வேண்டாம்.. முக்கியமா அவ வெளியில எங்கேயும் போகாம பார்த்துக்கோங்க.. நான் முடிஞ்சவர சீக்கிரமா வந்துடுறேன்..” என்றாள் அச்சு.

சின்ன பாப்பாவுக்கு என்ன மா ஆச்சு..? இப்ப எல்லாம் ஏன் இப்படி இருக்காங்க..?” என்று அழுகுரலில் கேட்டாள் பொன்னாம்மா.

தெரியல பொன்னம்மா.. ஆனா சீக்கிரம் சரிப்பண்ணணும்.. நான் போய்ட்டு வர்றேன்..” என்று கிளம்பியவள் இறந்து போன தங்கள் தாயின் படத்தின் முன் நின்று தன் கண்களை மூடிக்கொண்டு

நீதான் மா எனக்கு துணையா இருக்கனும்..!” என்று பிரார்த்தனை செய்தாள்.

ஆஷ்ரிதா – அம்ரிதா இரட்டை சகோதரிகளின் அம்மா உயிரோடு இல்லை. அப்பா உயிரோடு இருக்கிறாரா இல்லையா என தெரியவில்லை. அம்முவுக்கும் அச்சுவிற்கு எட்டு வயது இருக்கும் பொழுது தன் குடும்பத்தை விட்டுவிட்டு வேறு குடும்பம் உருவாக்கிக் கொண்ட விஸ்வனாதனை விவாகரத்து செய்துவிட்ட யசோதா தன் திறமையாலும் செல்வாக்காலும் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் நன்றாகவே வளர்த்து வந்தாள்.

சிறு வயதிலேயே அப்பா செய்த இப்படியொரு அருவருக்கத்தக்க காரியம் ஆண் என்றாலே அனலை மூட்டுவதாய் ஆயிற்று இரட்டை சகோதரிகளுக்கு. பெண்கள் கூட்டணியாய், செல்வத்திற்கும் சந்தோஷத்திற்கும் குறைவில்லாது வாழ்ந்தார்கள் யசோதாவும் இரட்டை தேவதைகளும். சிறுமிகளின் பத்தாம் வயதில் ஏர்காட்டில் ஒரு எஸ்டேட் வாங்கினாள் யசோதா.

அதனை பார்வையிட சென்றுவிட்டு வீடு திரும்பும் பொழுது இரவின் இருள் கண்மணிகளை குருடாக்கிட, காரின் ஹெட் லைட்டை ஒளிறவிட்டபடி வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தாள் யசோதா.

திடீரென வண்டி நிலைப்பாடற்று அங்குமிங்குமாய் வளைந்து திரிந்து சென்றதில், பின் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த அம்முவும் அச்சுவும் எழுந்துக் கொண்டனர். அச்சு பயத்தில் கத்தி கூப்பாடு போட, அம்மு அவளை தன்னோடு அனைத்துக் கொண்டு சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள்.

சிறு வயதில் இருந்தே அம்மு அச்சுவை விட தைரியசாலியாக இருந்தாள். எதிலும் தீர்க்கமாக முடிவெடுக்கும் திறம் கொண்டவள். உள்ளதை உள்ளதென பட்டென உடைக்கும் ஸ்ட்ரெயிட் ஃபார்வேடு கேரக்டர். ஆனால் என்ன அதிர்ஷ்டமோ  தெரியவில்லை, தான் எவ்வளவு முயன்றும் அச்சு -வால் அவ்வாறு இருக்க முடிந்ததில்லை.

சில வினாடிகளில் கார் நின்றதும், அழுதுக்கொண்டே காரை விட்டு வேகமாக கீழே இறங்கிய ஓடிய அச்சுவை பார்த்து அடக்க முடியாத சிரிப்புடன் தானும் கீழே இறங்கினாள் அம்மு. 

இரட்டை சகோதரிகள் உருவத்தில் ஒன்று பட்டவர்கள்; செயல்களிலும் ஒன்று பட்டார்கள் – காரை விட்டு கீழே இறங்கியது.

 இரட்டை சகோதரிகள் உடலால் வேறுபட்டவர்கள்; உணர்வாலும் வேறுபட்டார்கள் – ஒருத்தி அழுதாள், மற்றொருத்தி சிரித்தாள்.

இவற்றை எல்லாம் காரின் உள்ளே ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த யசோதா சிலாகித்துக் கொண்டிருந்த தருணம் காரின் விளக்குகள் மொத்தமும் அணைந்துப் போக, கருமை இருளில் சிக்கிய அந்த கார் நின்றுக் கொண்டிருந்தது என்னவோ ரயில்வே தண்டவாளம்.

கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக அந்த கார் ரயிலால் அடித்து வீசப்பட்டதில் உடல் சிதறி அங்கேயே உயிரிழந்து விட்டாள் யசோதா.

அழுகையின் காரணமாக கண்களை மூடியிருந்த அச்சு நடந்த அந்த கொடூரத்தை தன் கண்களால் பார்க்கவில்லை. ஆனால் சிரித்துக் கொண்டு நின்றிருந்த அம்முவின் விழிகள் உள்வாங்கிய அந்த காட்சி அவளது மூளையை சீண்டிப் பார்த்துவிட்டது.

அதீத சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தார் ஓடி வந்து ஆகவேண்டிய காரியங்களை செய்து இன்றோடு பன்னிரெண்டு வருடங்கள் ஆகிறது. அன்று முதல் இன்றுவரை அவர்களுடன் இருப்பது அம்மா சேர்த்துவைத்த சொத்து செல்வங்களும் பொன்னம்மாவும் தான்.

விபத்து நடந்து இரண்டு வருடங்களுக்கு யாரிடமும் பேசாமல், உணர்வுகள் எதையும் வெளிக்காட்டாமல் சிலையென வாழ்ந்து வந்த அம்மு, மருத்துவ உதவியால் கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள்.

இருவரும் தங்கள் பருவ வயதை எய்தி கன்னிகளானது அவர்களது பதினாறாம் வயதில். அதன் பிறகு ஒரு வருடமே சகஜமாய் இருந்த அம்முவின் நடவடிக்கைகள் மாறுபடத் தொடங்கின.

தன் அம்மாவின் சாவை நேருக்கு நேராக பார்த்த அதிர்ச்சியும், சிகிச்சையின்  காரணமாக எடுத்துக் கொண்ட மருந்துகளின் வீரியமும், பருவ வயதில் ஏற்பட்டுள்ள ஹார்மோன் மாற்றங்களும் அம்முவின் உடலில் பல்வேறு வேதிவினைகளைத் தூண்டி, தேவையற்ற கனவுகளையும் வெவ்வேறான நினைவலைகளையும் தந்து துடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

இதில் கொடுமையிலும் கொடுமையான விஷயம் என்னவென்றால், வேற்று சிந்தனையில் சிதறும் பொழுது கத்தி கதறி துடிதுடிக்கும் அம்மு, தன் நிகழ்காலத்தின் நினைவுகளுக்கு திரும்பிய பின்னர் தான் செய்த எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் அறியாதவளாய், நடந்தவை எதுவும் நியாபகத்தில் இல்லாதவளாய் இருப்பாள். இந்த விபரீத நிலையில் இருந்து அவளை வெளிக் கொண்டுவந்து முற்றிலுமாய் குணப்படுத்தப் போராடிக் கொண்டிருக்கிறாள் அச்சு.

அம்மாவின் போட்டோ முன் நின்று தன் வேண்டுதலை கூறிவிட்டு அவரது ஆசியை பெற்றுக்கொண்ட அச்சு, தன் வைலட் நிற ஸ்கூட்டி பெப்பை எடுத்துக்கொண்டு டாக்டர் பிரபாகரன் க்ளீனிக்குக்கு விரைந்தாள்.

சென்னையின் போக்குவரத்து நெரிசலை பற்றி சொல்லியா தெரியவேண்டும். தன் வீட்டில் இருந்து கிளம்பிய அச்சு, அவள் வீட்டு தெருவின் குண்டும் குழியுமான சாலையில் நான்கு கிலோமீட்டர் தூரத்தை கூட மின்னல் வேகத்தில் தாண்டி வந்து விட்டாள். ஆனால் சம தளம் கொண்ட அந்த ஹய்வே தார் ரோட்டில் தன் வாகனத்தின் இரண்டு டயர்களையும் ஒரு முறை சுழற்றுவதற்கே ஒன்றரை மணி நேரம் காக்க வேண்டி இருந்தது.

தீயாய் சுட்டெரிக்கும் சூரியன் அவள் தேகத்தில் கனலை அள்ளித் தெளிக்க, அதில் அவளது பச்சை தாவணியில் இருந்து எட்டிப் பார்த்து மின்னிக்கொண்டிருந்த தங்க நிற இடுப்பை இமையாது வெகுண்டு நோக்கிக் கொண்டிருந்தது ஒரு ஹெல்மட் அணிந்த முகத்தின் கண்கள்.

சூரிய கனலை பொருத்துக் கொண்ட அவளால் அந்த கூரிய பார்வை கொடுத்த தழலை ஏற்க முடியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு தன் ஒற்றை புருவத்தை தூக்கி அவனை பார்த்து முறைத்த அம்மு, தன் பார்வையை தனது கால்களுக்கு திருப்பி செருப்பை வெறித்தவள் மீண்டும் அவன் முகம் கிழியுமாறு அவனை நோக்கி முறைத்தாள். 

‘செருப்பு பிஞ்சிடும்’ என அவள் எச்சரிப்பதை அவளது பார்வையின் மூலம் அறிந்தவன் அப்பொழுதுதான் சுதாரித்தான்; தான் அவளை விழுங்கும் அளவு வாய்பிளந்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை. சற்றே அசடு வலிய சிக்னல் விளக்கின் மீது தன் பார்வையை திருப்பினான் அவன்.

இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே நிற்பது என்ற எரிச்சலோடு தன் கை கடிகாரத்தை பார்த்தாள் அம்மு. பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

“சுத்தம்.. இங்கேயே பத்து ஆக போகுதா..? அவரு என்ன நினைப்பாரு இப்படி லேட்டா போனா..? ப்சே..” என்ற அவளது புலம்பல் சத்தம் ஆண்டவனுக்கு கேட்டதோ இல்லையோ, அங்கே விமான வேகத்தில் இடைவிடாது எட்டு கார்கள் பறந்து சென்ற வேகம் அனைவரது காதுகளிலும் கேட்டது. அந்த சத்தம் ஓய்ந்த பிறகே பச்சை விளக்கு எறிந்தது.

பெட்டியை திறந்து பறக்கவிடப்பட்ட  பட்டாம்பூச்சிகள் போல அனைத்து வாகனங்களும் சிறிதும் தாமதமின்றி தங்கள் இலக்குகளை நோக்கி பறக்கத் தொடங்கின. எண்ணி பன்னிரெண்டாம் நிமிஷத்தில் க்ளீனிக்கை அடைந்திருந்தாள் அச்சு. உள்ளே வந்தவள் பார்க்கிங் ஏரியாவில் தன் வாகனத்தை நிறுத்தச் சென்றாள்.

அங்கே அவள் அருகே ஓடி வந்த ஒரு குட்டி பெண் “அக்கா இந்தாங்க..” என ஒற்றை சிவப்பு ரோஜாவை நீட்டினாள். முகத்தில் புன்முறுவலோடு அதை வாங்கிக் கொண்ட அச்சு 

“யார் குட்டிமா கொடுத்தாங்க..?” என்றாள்.

“அதோ.. அந்த தூணுக்கு பின்னாடி இருக்குற அண்ணா..” என திசையை காட்டினாள் அந்த குட்டி பெண். குட்டி குழந்தை அண்ணா என்று சொல்லியதால் அந்த குட்டியை விட ஒன்று இரண்டு வயது மூத்திருப்பான் அந்த அண்ணா என்ற கற்பனையுடன் தன் ஸ்கூட்டியில் அமர்ந்திருந்த வண்ணம் அதனை உருட்டிக் கொண்டே அங்கும் இங்கும் ஆடியபடி தூணுக்கு அருகில் வந்து சிரித்த முகத்தோடு “யாரு ஒழிஞ்சிட்டு இருக்கீங்க..!” என்று மழலையாய் பேசி எட்டிப் பார்த்தாள் அச்சு.

சிக்னலில் பார்த்தவனுக்கு ஒத்த அதே உடற்கட்டும் அவன் அணிந்திருந்த அதே வெள்ளை நிற ஷர்ட்டும் போட்ட ஆடவன் ஒருவன் நின்றுக் கொண்டிருந்தான். அவனை கண்டவுடன் அவளது முகமோ, தன் உடம்பின் ஒட்டு மொத்த இரத்த ஓட்டத்தையும் மொத்தமாக முகம் நோக்கி பாய செய்தது போல அத்தனை சிகப்பைக் கக்கிக்கொண்டிருந்தது.

அவளது வெளிர் மேனி கோவத்தின் சிகப்பை இன்னும் அதிகரித்தே காட்ட, ‘சிக்னல் –ல இடுப்ப பார்த்ததோடு மட்டும் இல்லாம ஃபாலோ பண்ணிக்கிட்டு வந்து பூ வேற கொடுக்கிறியா..?’ என்று எண்ணியவள் வாய் திறப்பதற்குள்,

“ஹலோ டு யூ ஹவ் எனி சென்ஸ்..? இவ்வளவு லேட்டாவா வருவ..?” என்று கத்தத் தொடங்கினான் அவன். தனக்கு முன்னதாக கத்திய அவனது குரல் ஒலித்த வாசகத்தின் தெளிந்த அழுத்தத்தில் ஒரு வினாடி அடங்கியிருந்தாள் அச்சு. பின் தன்னை தானே சமாதானப் படுத்திக் கொண்டவள்

“ஹலோ மிஸ்டர்.. யாரு நீ..? என்னமோ உன் பொண்டாட்டி கிட்ட கத்துற மாதிரி உரிமையா கத்துற..? என்ன கேட்ட..? எவ்வளவு லேட்டா வர்றேன்னா..? ஆமா.. நாம தினம் தினம் இங்க டைம்-க்கு மீட் பண்ணுறோம்-ல..?” என்ன நினைச்சிக்கிட்டு இருக்க மனசுல..? சிக்னல்-ல நின்னது நீதான..? பின்னாடியே வந்து பூ வேற கொடுக்குறியா..?” என்று அவனை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்தாள்.

அவன் தனது கர்ஜனை முகத்தை மாற்றிக் கொள்ளாமல் அவள் எடுத்து வைத்திருந்த இரண்டு அடியை சமன் செய்து இருவருக்கும் இடையேயான தூரத்தை பூஜியமாக்கினான். அவனது அந்த ஆஜானுபாகுவான உடல் வாகைக் கண்டு பயத்தில் கை கால்கள் நடுக்கமெடுக்க கண்கள் படபடத்தவாறு அவனை பார்த்துக்கொண்டிருந்தாள் அச்சு.

“ஷட் யுவர் மவுத் அண்ட் கம் வித் மீ..” என்று அவள் விழிகளை நோக்கி கத்தியை விட கூர்மையாய் கூறியவன் வேகமாக நடந்து க்ளீனிக்கின் உள்ளே சென்றுவிட்டான்.

தான் நின்றுக் கொண்டிருந்த இடத்தில் சற்றும் அசையாது சிலையென நின்றிருந்த அச்சு இதுவரை என்ன நடந்தது என்று அசைப்போட்டுக் கொண்டிருந்தாள். ‘யாரு இவன்..? அவனா பூ கொடுத்தான்.. அவனா கத்தினான்.. இப்ப என் கூட வா-னு சொல்லிக்கிட்டு போய்க்கிட்டே இருக்கான்.. ஒரு வேளை லூசா இருப்பானோ..” என்று எண்ணிக் கொண்டிருந்தவளது தொடையை தட்டி கூப்பிட்டால் அந்த குட்டி பாப்பா.

அவள் அளவிற்கு மண்டியிட்டு அமர்ந்த அச்சு “என்ன குட்டிமா..?” என்றாள்.

“அந்த அண்ணா எனக்கு பூ கொடுத்ததுக்கு நீங்க எதுக்கு திட்டுனீங்க..?” என்று கேட்டது அந்த குட்டி தேவதை.

“என்ன.. உனக்கு கொடுத்தானா..?” என்று தன் செயலை எண்ணி தன்னையே நொந்துக் கொண்ட அச்சு,

“அத எதுக்கு டா நீ என் கிட்ட கொடுத்த..?” என்று கேட்ட அச்சுவின் கன்னத்தில் தன் பிஞ்சு இதழை பதித்துவிட்டு ஓடிவிட்டாள் அந்த குட்டி. குழந்தையின் ஸ்பரிச முத்தம் ஒரு பக்கம் புத்துயிர் கொடுக்க

“இறைவா.. காலைலயே என்ன ஏன் இப்படி படுத்துற..? கோவிலுக்கு வர மாட்டேன்னு சொன்னதுக்கா..?” என்று அந்த வெள்ளை சட்டைக்காரனை நினைத்து வருந்திக்கொண்டாள்.

அடுத்த கணம் “சரி நாம வந்த வேலையை பார்ப்போம்..” என ரிசப்ஷனில் அனுமதி வாங்கிக் கொண்டு டாக்டர் பிரபாகரன் அறைக்கு சென்றாள்.

“எக்ஸ்க்யூஸ் மீ சார்..” – தாமத்ததின் தயக்கத்தோடு அச்சுவின் குரல்.

“எஸ்.. கம் இன்..” – வந்துட்டியா.. வா.. வா.. என்ற தோரணையில் டாக்டர் பிரபாகரன்.

“சாரி சார்.. வரும்போது டிராஃபிக்..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க, அந்த அறையில் செதுக்கப்பட்டிருந்த அலமாரி ஒன்றில் இருந்து ஒரு கோப்பை எடுத்துக் கொண்டவனாய் டாக்டர் பிரபாகரன் எதிரே வந்து அமர்ந்தான் அந்த ஆடம்பர உடற்கட்டுக்கு சொந்தமானவன்.

அச்சுவின் வாய் பிரபாகரனிடம் பேசிக் கொண்டிருக்க, அவள் கண்கள் ஆடம்பரக்காரனை குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அவள் மனமோ ‘இவன் எதுக்கு என் விசிட்டிங் டைம்-ல இங்க வந்து உட்கார்ந்திருக்கான்..?’ என எண்ணிக் கொண்டிருந்தது.

“சாரி சார்.. வரும்போது டிராஃபிக்.. அதான் இவ்வளவு டிலே ஆகிடுச்சு..” – ஒரு வழியாக சொல்லி முடித்துவிட்டாள் அச்சு.

“ம்ம்ம்.. டோண்ட் ரிபீட் இட் அகைன்.. டேக் யுவர் சீட்..” என்றார் டாக்டர் பிரபாகரன்.

“தேன்க் யூ சார்..” என்றவள் முதலில் அவனுக்கு அருகில் இருக்கும் சீட்டில் அமர யோசித்தாள். பிறகு,‘இது எனக்கான விசிட்டிங் டைம்.. ஓசியில வந்து உட்கார்ந்திருக்குற நீயே கெத்தா இருந்தா நான் அதவிட கெத்தா இருப்பேன் டா..’ என்று எண்ணிக் கொண்டு இருக்கை முழுதும் நிறைந்தவாறு நிமிர்ந்து அமர்ந்துக் கொண்டாள்.

“சார்.. நாம தனியா டிஸ்கஸ் பண்ணனும்னு சொன்னீங்க.. பட்..” – என்ன தனியா வர சொல்லிட்டு நீங்க யாரையோ எதுக்கு கூப்பிட்டு வச்சிருக்கீங்க..? என்ற பாணியில் கேட்டாள் அச்சு.

ஒரு வேளை நான் லேட்டா வந்ததால என் டைம் முடிஞ்சிருச்சோ..?இப்ப இந்த ஆடம்பர அராத்தோட டைம்-ஆ..? என்ற குழப்பமும் அவள் மண்டையில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது.

“ஆமா அஷ்ரிதா.. மீட் மிஸ்டர் அனேகன்.. அமெரிக்க மனோ தத்துவ கவுன்சில்-ல நம்பர் வன் அவார்டு வாங்கினவர். நம்ம சென்னை தான்.. இவருதான் உங்க கேஸ் டீல் பண்ண போறாரு..” என்றார் டாக்டர் பிரபாகரன்.

“ஓ.. இதுக்கு தான் என் கூட வா –னு சொல்லிட்டு போனியா டா..? பாவி பயலே.. முழுசா சொல்லிட்டு போயிருக்கலாம்-ல.. கிராதகா..” என மனதினுள் எண்ணியவள் டாக்டர் பிரபாகரனிடம் “ஓ.. ஓகே சார்.. தேங்க் யூ..” என்றாள்.

“ம்ம்ம்.. உங்க சிஸ்டர் பத்தின ஃபுல் டீடெயில்ஸ் நான் அவருக்கு கொடுத்துட்டேன்.. உங்க நம்பர் அவர்கிட்ட இருக்கு.. அவருடைய கார்டு வாங்கிக்கோங்க.. இனி தினசரி நீங்க என்ன செய்யனும்-னு டாக்டர் அனேகன் உங்களுக்கு சொல்லுவாரு.. வீக்லீ ஒன்ஸ் நான் கேஸ் ஃபைல் பார்த்துக்குறேன்.. எனக்கு பேஷண்ட் வெயிட் பண்ணுறாங்க.. ஹீ வில் கேரி யூ..” என்ற டாக்டர் பிரபாகரன் அங்கிருந்து கிளம்பினார்.

(களவாடுவான்)