உலாவரும் கனாக்கள் கண்ணிலே-22 (இறுதி பதிவு)
பிறருக்கு அன்பு காட்டுவதும், பிறர் தன் மீது காட்டும் அன்பினை மதித்துக் காப்பாற்றிக் கொள்வதுமே மனிதனின் பண்புகள்.
அத்தகைய நற்பண்பினை கொண்ட ஜனதா, வீட்டில் உள்ளவர்களிடம் மட்டுமன்றி, அவர்களிடம் பணியாற்றும் பணியாளர்களையும் அரவணைத்து சென்றாள். அதனால் அனைவரும் மதிக்கும் பெண்ணாக இருந்தாள்.
காலச் சுமைதாங்கி – போலே
மார்பில் எனைத் தாங்கி,
வீழும் கண்ணீர் துடைப்பாய் – அதிலென்
விம்மல் தணியுமடி!
ஆலம் விழுதுகள் போல் – உறவு
ஆயிரம் வந்துமென்ன?
வேரெனெ நீயிருந்தாய் – அதில் நான்
வீழ்ந்து விடாதிருந்தேன்! – எனும் கண்ணதாசனின் வரிகளுக்கு ஏற்றவாறு இருந்த ஜனதாவின் பண்பை பொக்கிஷமாக மதித்தான் சந்துரு.
மனைவியின் புத்திகூர்மையையும், பொறுமையையும் கண்டு கொண்டான். அவளை உணர்ந்து கொண்டதால் தன் இதயராணியாக மட்டுமல்லாமல், வீட்டிலும், தொழிலிலும் முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும் ஜனதாவை தனது வலக்கையாகக் கொண்டு செயல்பட்டான்.
சமயோசித புத்தியுடன் தனது எண்ணங்களை செயலாக்குவதில் ஜனதாவிற்கு நிகர் யாருமில்லை. அத்தகைய புத்தி கூர்மையுடன், தன்முனைப்பு இல்லாமல் சாந்தமாகச் செயல்படும் பண்பினால் அவள் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு தொழில்சார் பணியிலும் வெற்றியைத் தவிர வேறெதுவும் இல்லாமல் போனது.
கனவுகள் இல்லா மனிதர்கள் யாருமில்லை. அதை சமயோசிதமாக்கும் மனிதர்கள் சத்தமில்லாமல் சாதிக்கிறார்கள். அதற்காக இயல்பைத் தொலைக்காமல் கொக்கைப் போல காத்திருந்து நேரம் வரும்போது தனது எதிர்பார்ப்புகளை சாதிக்கும் சாமர்த்தியசாலியாக இருந்தாள் ஜனதா.
தொட்டதெல்லாம் துலங்கும் அளவிற்கு சந்திரசேகருக்கு சற்றும் சளைக்காத உழைப்பாளியாக ஜனதா இருந்தாள். மனைவியின் ஒவ்வொரு அடியும், அடுத்தகட்ட முன்னேற்றமாக மாறியதில் கள்ளுண்ட வண்டு போல மனைவியின் பால் சந்துருவை மயங்கச் செய்தது.
அவள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மூன்று மாதங்களில் ஒரு டூ வீலரையும் அவளுக்காக வாங்கிக் கொடுத்திருந்தான். வீட்டைப் பராமரிப்பதிலும் எந்த சுணக்கமும் இல்லாமல் இருந்ததோடு, அவளுக்கென வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளிலும் திறமையாக நிர்வகிக்கும் திறமைசாலியாக இருந்தாள்.
மருமகளின் சாதுவான குணத்தை பயந்த சுபாவமாக எண்ணி ஆரம்பத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தியபடியே இருந்தார் சுசீலா. அத்தகைய சூழலை அடிக்கடி சந்தித்தவள் அதற்கும் முற்றுப்புள்ளி வைக்க தீர்மானிக்கும் வகையில் வீட்டில் ஒரு நிகழ்வொன்று நடந்தது.
வழமைபோல சந்துரு அவனது பணிகளின் நிமித்தமாக வெளியே சென்றிருந்தான். செழியனின் வெளியேறலுக்குப் பின், ஜனதாவை ஜாடையாக பேசியபடி இருந்த சுசுலாவின் அருகில் சென்றவள்,
“அத்த”, என அழைத்திருந்தாள்.
“…”, என்ன என்பது போல பார்த்திருந்த மாமியாரின் அருகில் நின்றிருந்த ஜனதாவை நோக்கி சுசீலா அலட்சியமான பார்வை ஒன்றை வீச
“உங்ககிட்ட ஒரு விசயம் பேசணும்த்த” , ஜனதா
“…”, ‘என்னத்த பெருசா சொல்ல வந்துட்டா பெரிய இவளாட்டம்… எங்கிட்ட…’ என்பது போன்ற மாமியாரின் பார்வையைக் கண்டு கொண்டவள்
“என்னத்த பெருசா சொல்ல வந்துட்டேனு நீங்க யோசிக்கறீங்க இல்ல அத்த, அந்த பெருசா பேச வந்த விசயத்தை உங்ககிட்ட பேசப்போறேன் இப்ப…”
தனது மனதில் இருந்ததை அப்படியே பேசியிருந்த மருமகளை சற்று ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியுடன் முதன் முதலாகப் பார்த்திருந்தார், சுசீலா.
“நீங்க நாப்பது வருசத்துக்கு முன்ன இந்த வீட்டுக்கு எப்படி மருமகளா வந்தீங்களோ அதே மாதிரி தான் நாலு மாசத்துக்கு முன்ன நானும் வந்திருக்கேன்…”
‘அதுக்கு… இப்ப என்னங்குறா’, சுசீலா
“எப்பவுமே நான் அமைதியா போறதால உங்களப் பாத்து பயப்படறேன்னோ, இல்ல எதுக்கும் லாயக்கில்லாதவன்னோ என்ன நீங்க நினச்சிற வேணாம்…”
‘பயபுள்ள தெனாவட்டா வந்து பேசுறத பாரேன்…’, சுசீலா
“என் தெனாவட்ட போகப் போக தெரிஞ்சுக்கங்க, அப்புறம்… இந்த… ரெஸிட்ரேசனுக்கும், அக்ரிமெண்டுக்கும் வித்யாசமே தெரியலனு, மாமாவையும், உங்க மகனையும் வேணா நீங்க ஏமாத்தலாம். ஏன்னா அவங்க ஆம்பிளைங்க… பொண்ணுங்க சைகாலஜி தெரியாத அப்பாவிங்க அவங்க ரெண்டு பேரும்…”
‘அடியே… அதெப்படிடி உனக்கு தெரிஞ்சது… விசமா இருக்கும் போலயே… இது’,சுசீலா
“விசமெல்லாம் இல்ல… விவரம்… அவ்ளோ தான்…. ம்… அப்புறம்… நிறய விசயங்கள்ல ஆம்பிளைங்க அப்டி தான் இருப்பாங்க. பொம்பளைங்க மாதிரி அவங்களுக்கு யோசிக்க வரவே வராது. அத சாதகமாக்கிக்கிட்டுத்தான் பெரும்பாலான பொண்ணுங்க வாழறாங்க. சிலர் அமைதியா இருந்து காரியத்தை சாதிச்சுக்குவாங்க… சிலர் ஆர்ப்பாட்டம் பண்ணி கெட்ட பேர வாங்கிக்குவாங்க..”
‘என்ன சொல்லத்தான் வந்துருக்குன்னு தெரியலயே…’, சுசீலா
“சொல்ல வந்தத சொல்லிறேன்… மங்கை அண்ணி பிறந்த பின்ன மாமா ஆரம்பிச்ச, ஆனா உங்க மாமனாரு முதல் போட்ட பழைய சாமான் வாங்கி வித்த கடைய அப்பவே நீங்க உங்க பேருலதான் பத்திரம் போடணும்னு ஒத்த கால்ல நின்னு சாதிச்சுக்கிட்டது, உங்க மகனுக்கு வேணா தெரியாம இருக்கலாம். உங்க மாமனாரும் பெருந்தன்மையா அதப்பத்தி கேக்காம இருந்திருக்கலாம். ஆனா நானும் அப்டி தெரியாமலே இருப்பேனு நீங்க நினச்சா அது ரொம்ப தப்புத்த…”
‘இத எந்த வேலயத்த பொறம்போக்கு இவக்கிட்ட வந்து சொன்னதுன்னு தெரியலயே?’,சுசீலா
“நான் இந்த வீட்டுக்குள்ள வந்து மூனு நாள்ல தெரிஞ்சிக்கிட்ட விசயம் அது. உங்க மகனுக்கு தெரியாம இருக்கறதுல ஆச்சர்யம் ஒன்னுமில்ல. பின்ன நடக்கப்போறது… குதர்க்கமா யோசிக்கறது… சுயநலமா சிந்திக்கிறது… இப்டி யோசிக்க பெரும்பாலும் ஆம்பிளைங்களுக்கு தோணாது. தலைல வச்சத சுமக்கத் தெரிஞ்ச பாவப்பட்ட இனம் அது ”
‘ஊம ஊரக் கெடுக்கும், பெருச்சாளி பேரக் கெடுக்கும்னு சும்மாவா சொல்லி வச்சாங்க… இவள…’, சுசீலா
“நான் ஊமையில்ல அத்த… இந்த ஆம்பிளைங்க மட்டும் தன்னோட நலன்தான் முக்கியம்னு சுயநலமா யோசிச்சா அங்க குழப்பம் மட்டுமே வரும். அங்க ஒரு குடும்பம் அப்டிங்கற ஒன்னு இல்லாம போயிரும். ஆனா உங்க மகனுக்கு இந்த விசயம் தெரியாம இது வர வச்சிருந்தது உங்க சாமார்த்தியம்… மட்டுமில்ல. அது ஆம்பிள புள்ளைங்களோட சாபக்கேடு…”
‘என்னன்வோ சொல்லுதே… நம்மள பத்தி எந்த நமுத்துப் போன நாதாரி இவகிட்ட வந்து சொல்லிச்சுனு தெரியலயே’,சுசீலா
“எதையும் இட்டுக்கட்டி சொல்லத் தெரியாது எனக்கு… ஆனா இந்த ஆம்பிளைங்ககிட்ட கூப்பிட்டு நம்ம வீட்டு விசயத்த சொன்னாக்கூட… அத மண்டைல ஏத்திக்க தெரியாதவங்க… அவங்க.
ஆனா நீங்க சொல்லாமலே மங்கை அண்ணிக்கும், அர்ச்சனாவுக்கும் இந்த விசயம் தெரிஞ்சிருக்கும்… அது தான் பொண்ணுங்க மெண்டாலிட்டி…”
‘ஜெகஜால கில்லாடியாடி… நீயி…’, சுசீலா
“கில்லாடிங்கிற அளவுக்கு வர்த் எல்லாம் நானில்லத்த… நான் விசயத்துக்கு வரேன். உங்க மகன் சுயமா சம்பாதிச்சத அவரு பேருல வாங்குனேன்னு சொன்னதக் கேட்ட உங்களுக்கு அவ்வளவு மனக்கஷ்டம் வருது… இது பொண்ணுங்க மென்டாலிட்டி. அத என்னால புரிஞ்சுக்க முடியும்.
ஆனா இது எதுவும் தெரியாத உங்க மகன மேற்கொண்டு இதே மாதிரி கிறுக்காட்டணும்னு நினச்சா… நானும் என் பங்குக்கு எப்படி, எங்க, என்ன செய்யணுமோ அப்டி செய்வேன்.”
‘என்னடி செய்வா இவ?’
“எதுனாலும் செய்வேன் என் வாழ்க்கைய காப்பாத்திக்க… ஏன்னா அவர வச்சு தான் என்னோட அடுத்த கட்ட வாழ்க்கை அமையும். அவருக்கு இதுனால ஸ்ட்ரெஸ், அத அப்டியே நீங்க தொடர்ந்தா… ஒரு கட்டத்திற்கு மேல வெறுப்பு உங்க மேல மட்டுமில்லாம குடும்பத்தில இருக்கறவங்க எல்லாரு மேலயும் திரும்பும்.
இது எங்க எதிர்காலத்தையே பாதிக்கும்… அதுனால ஜாடை பேசறது, தேவையில்லாம அவர டென்சன் பண்றத இதோட விடுங்க… அதுதான் எல்லாருக்கும் நல்லது… பெரியவங்களுக்கு மரியாதை தரணும்னு தான் இவ்வளவு நாளா அமைதியா இருந்தேன். அது நிச்சயமா பயம் கிடையாது அத்த…
இதத் தவிர மற்ற சொத்து விபரமெல்லாமும் எனக்குத் தெரியும் அத்த… அதனால குதர்க்கமா யோசிக்காம குடும்ப நலனுக்காகன்னு உங்களால முடிஞ்சத செய்யுங்க… எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம்.
எனக்கு வெளியில வேலை இருக்கு. நான் கிளம்பறேன்த்த…”, என்றவள் அதற்குமேல் அங்கிருந்து அகன்றிருந்தாள்.
அதன்பிறகு ஜாடை பேசுவதை விட்டிருந்தார் சுசீலா. ஆனால் செழியனிடம் விடயம் எப்படி ஜனதாவிற்கு தெரிய வந்தது என்பதைக் கேட்டு ஒரு சாமியாட்டமே ஆடியிருந்தார். அதற்கும் அவர் எனக்கொன்றும் தெரியாது என்றுவிட்டார். குழம்பியபடியே தனது வினாக்களுக்கான விடை தெரியாமல் அமைதியாகவே தனது வழியில் இருந்து கொண்டார் சுசீலா.
நான்கு ஆண்டுகளுக்குப் பின்…
மூன்றரை வயது அபூர்வன், சந்திரசேகரின் சாயலில் மட்டுமல்ல… குணத்திலும், பண்பிலும் அப்படியே தனது தந்தையைக் கொண்டிருந்தான். தற்போது தான் விஜயதசமி அன்று எல்.கே.ஜியில் சேர்த்திருந்தனர். மகனுடன் தனது பெரும்பான்மை நேரத்தை மகிழ்வுடன் ஜனதா இதுவரை செலவளித்திருந்தாள்.
தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்து எட்டு மாதங்கள் கடந்த நிலையிலும், மகனை இனி பள்ளிக்கு அனுப்பிவிட்டு அதிக நேரம் அலுவலகப் பணிகளில் கவனம் செலுத்தலாம் என்ற எண்ணத்துடன் இருந்தாள் ஜனதா.
ஆயினும், தனது குடும்பப் பொறுப்பு, தொழில் சம்பந்தப்பட்ட வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்தி சிறந்த குடும்பத் தலைவியாக பரிணமித்தாள் ஜனதா.
செழியன் தனது பேரனை பகலில் தூக்கி வைத்துக் கொள்வதிலும், குழந்தையுடன் நேரம் செலவளிப்பதிலும் தனது பொழுதை மகிழ்ச்சிக்குரியதாக மாற்றிக் கொண்டார்.
சுசீலா இருக்குமிடம் தெரியாமல், அனைத்தையும் தனது கண்கள் எனும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பதும், வயிறு பொறுமுவதுமாக நாட்களைக் கழித்தார்.
மகனிடம் தேவையில்லாமல் எந்த பிரச்சனைகளையும் எடுத்துச் செல்வதில்லை. தனது தேவைகளை எந்த விதத்திலும் குறைக்காத, தடுக்காத மருமகளை கொண்டாட மனமில்லாத போதும் தூற்றத் தோன்றாத மாமியாராகி இருந்தார்.
ஆனால், சந்துரு தனது தாயின் அமைதிக்கான காரணம் தெரியாமல் வழமை போல தாயிடம் என்னவென்றால் அதற்குப் பதில் என்றளவில் இருந்தான்.
வேலை முடிந்து அசதியாக வந்த சந்துருவிற்கு உணவெடுத்து வைத்த தாயின் சேலைத் தலைப்பை பிடித்தவாறு திரிந்தான் அபூ. பொழுதடைந்தவுடனே உணவெல்லாம் கொடுத்தும் உறங்காமல் தனது தாயின் வருகைக்காக காத்திருந்தான் மகன்.
கணவனுக்கு வேண்டியவற்றைக் கவனித்து விட்டு அவளும் தனக்கான உணவை தட்டில் கொண்டு வந்து கணவனின் அருகில் வந்து உண்ண அமர்ந்தாள்.
அங்கிருந்த குழம்பு பாத்திரத்தை தனது மனைவியின் அருகே நகர்த்தி வைக்க கைகளை உயர்த்திய சந்துருவை தடுத்த அபூ
“அப்பா, நான் எதுனாலும் அம்மாவுக்கு எடுத்துக் கொடுப்பேன், நீங்க சாப்பிடுங்க”,என்றபடி பெரிய மனிதன் போல வந்து குழம்பு இருந்த பாத்திரத்தினை எடுக்க முடியாமல் எடுத்து வந்து கொடுத்ததோடு, கரண்டியில் எடுக்க முயற்சிக்க, மகனின் முயற்சியைக் கண்டவள்,
“அபூ அம்மாவே எடுத்துப்பேன், நீ நகர்த்தி வச்சுட்டல்ல போ போயி தூங்கு”
“ஒன்னும் வேணாம் நானே உங்களுக்கு சாதம் போடுவேன், அப்புறமா நம்ம ரெண்டு பேரும் போயி தூங்கலாம்”, இது அபூ.
இருவரின் செயலைக் கண்ட சந்திரசேகருக்கு சற்று பொறாமை வந்ததென்னவோ நிஜம். ‘பயபுள்ள… நம்மளயே தூக்கித் தின்னுரும் போலயே…’ என எண்ணியபடி
ஜனதா உண்டு முடிக்கும்வரை உடனிருந்துவிட்டு அவளுடன் அறைக்குள் நுழைந்தான் அபூ.
சந்துரு படுக்க அழைத்தாலும் அவனுடன் சென்று உறங்கமாட்டான், அபூ. எல்லா தேவைகளுக்கும் தனது தாயையே தேடுவான்.
வழமை போல இருவருக்கும் நடுவில் படுத்துக் கொண்டவன்,
“அம்மா எனக்கு கத சொல்லுங்கம்மா, கேட்டுட்டே அப்டியே தூங்குறேன்”, அபூ
“இன்னிக்கு கதையெல்லாம் வேணாம், தூங்கு நேரமாச்சு”, சந்துரு
“இல்லனா நீங்க உங்களோட இன்னிக்கு கதைய சொல்ல ஆரம்பிச்சு எங்க அம்மாவ தூங்கவிடமாட்டிங்க”,அபூ
“டேய்… நான் ஒரு கதையும் உங்கம்மாவுக்குச் சொல்லமாட்டேன், நீ தூங்கு”
ஜனதாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு படுத்திருந்த மகனை எவ்வளவு அன்பாக அழைத்தாலும், சந்துருவிடம் வரமாட்டான். தனது தேவைகளாக எதை ஜனதா கூறினாலும் அபூவால் முடிந்த அனைத்தையும் தட்டாமல் செய்வான்.
ஜனதாவிடம் தனது தேவைகள் பற்றி சந்துரு எதாவது அபூ இருக்கும் போது கேட்டாலும், அத்தோடு
“அப்பா உங்களுக்கு வேணும்கறது நீங்களே பாத்துக்கங்க, இன்னும் என்ன நீங்க சின்னப்பையனா? இல்லனா உங்க அம்மாகிட்ட போயிக் கேளுங்க, எதுக்கு எங்கம்மாவ தொந்திரவு பண்றீங்க நீங்க”, என வயதிற்கு மீறிய பேச்சை பேசிவிடுவான் அபூ.
மகனின் மழலைப் பேச்சு ரசிக்கத் தூண்டுவதாக இருந்தாலும், ஜனதா அபூவைச் சுமந்திருந்தபோது தான் செய்த கவனிப்பு, அன்பு, சீராட்டல் என எல்லா அடாவடித்தனத்தையும் தற்போது அபூ செய்து ஆச்சர்யப்படுத்தினான்.
ஆனாலும் தனது இரண்டாவது குழந்தையைச் சுமக்கும் மனைவியை சீராட்டும் வாய்ப்பை மகன் தனக்கு வழங்கவே இல்லை என்பதே மனத்தாங்கலாகிப் போயிருந்தது, சந்துருவிற்கு.
சந்துரு எதாவது வாங்கிக் கொடுக்கும் போது, அதைப் பார்க்கும் அபூ, ‘நான் சீக்கிரமே பெரியவனாகி உங்களுக்கு இத விட சூப்பரா வாங்கித் தருவேன்மா’, என்பான்.
சந்துரு வெளியில் செல்லும் போது மட்டும் ஜோடி போட்டு சுத்தும் அபூ, வீட்டிற்கு வந்தவுடன் நேக்காக தந்தையை கழட்டி விட்டுவிட்டு ஜனதாவைக் கைக்குள் போட்டுக் கொள்வான்.
பள்ளி செல்ல ஆரம்பித்தவன் அழாமல் சென்று வந்தது சந்துருவிற்கு தான் அதிசயமாக இருந்தது. அட்டை போல எப்பொழுதும் ஜனதாவுடன் திரிந்தவன் பள்ளிக்கு சென்று வந்ததும் பழையபடி மாறிவிடுவான்.
சிறுபிள்ளையின் அடாவடிகளை ரசித்தாலும், சற்று பயமும் மனதில் வந்து போகும் சந்துருவிற்கு. அதை மனைவியிடமும் பகிர்ந்து கொள்வான்.
ஜனதாவோ, ‘குழந்தை தானங்க போகப் போக சரியாகிருவான்’ என்பாள்.
அபூர்வன் ஒரு அபூர்வ குழந்தையாகவே வளர ஆரம்பித்தான்.
இரண்டு மாதங்களில் தம்பியோ, தங்கையோ வீட்டிற்கு வரப்போவதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியுடன், தந்தையை மிஞ்சும் மகனாக தனது தாயைக் கவனித்துக் கொண்டான், அபூ.
விதிக்கப்பட்ட வாழ்வினை குறைவில்லாமல் வாழும் முறை அறிந்து சந்திரசேகர் ஜனதா தம்பதியினர் வாழ்ந்திருந்தனர்.
********************************
ஒரிசாவில் இருந்து, அடுத்து ஆந்திராவின் கே.ஜி.எஃப்பில் சில மாதங்களும், அதன்பின் சேலத்திற்கு மாற்றல் வாங்கி வந்த அமர்நாத்துடன் தனது வாழ்க்கைப் பயணத்தை மிகவும் மகிழ்வுடன் அர்ச்சனா தனது மனம்போல வாழ்ந்து வந்தாள்.
கிண்டலும், கேலியும் உடன்பிறந்தவனான அமர்நாத் வயது ஏறினாலும் தனது இயல்பினை மாற்றாமல் இன்பமாக வாழ்ந்திருந்தான். அமரின் கிண்டல் கேலிகளை முதலில் சீரியசாக எடுத்துக் கொண்டு முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு திரியும் அர்ச்சனா, அமரின் இயல்பைப் புரிந்து கொண்டு அவனுடன் தனது வாழ்வை சிறப்பாக நடத்தினாள்.
நான்கு ஆண்டுகளுக்குப் பின்…..
மூன்று வயது அக்ஷயாவிற்கு தனது தந்தை அமரிடம் அதிகமான ஒட்டுதல். வீட்டில் இருக்கும் போது தந்தை, மகள் இருவரும் சேர்ந்து செய்யும் அலப்பறைகளைக் கண்டு அலறும் அர்ச்சனா, மகளை பள்ளிக்கு அனுப்பும் எண்ணத்திற்கு வந்திருந்தாள்.
‘எங்காவது ப்ளே ஸ்கூலில் தயதுசெய்து சேர்த்து விடுங்கள்’ என கணவனிடம் அர்ச்சனா கூற, அமர் அதற்கு மூன்றரை வயதில் எல்.கே.ஜியில் சேர்ப்போம். அது வரை வீட்டில் இருக்கட்டும் என மறுத்துவிட்டான்.
“நீங்க இருக்கும் போது சாது மாதிரி இருக்கு, நீங்க இல்லனா நான் சொல்றது எதயும் கேக்கறதில்ல”
“அக்ஸூ கண்ணா, அம்மா என்னடா உன் மேல நிறய கம்ப்ளையண்ட வாசிக்கறா?”
“நானென்ன வயலினா வாசிக்க…, அச்சு நீ டூ மச்சு…”, தனது பிஞ்சு விரல்களை அர்ச்சனா நோக்கிக் கூறியது.
“அம்மாவ அப்டியெல்லாம் சொல்லக் கூடாதுடா தங்கம்”
“எதுக்கெடுத்தாலும் இதையே சொன்னா நான் என்ன தான் டாடி செய்வேன்”
“அம்மா சொல்றத கேக்கணும் டா”
“அச்சு ஒன்னுமே சொல்லலயே”
“அச்சுன்னு எல்லாம் சொல்லக்கூடாதுடா அம்மாவ… அம்மானு சொல்லித்தான் கூப்பிடணும்”
“நான் எதுக்கு அவங்கள கூப்பிடப் போறேன். அப்டியே கூப்டாலும் பகல்லயே கண்ண திறந்துட்டு ஒரே ட்ரீம் தான்”, சொல்லிவிட்டு கிளுக்கிச் சிரித்தது குழந்தை.
“அப்டியெல்லாம் சொல்லக் கூடாதுடா அம்மாவ”
“போங்க டாடி… எத்தன டைம் கூப்டாலும் டிவிலயே தான் கண்ணு இருக்கு, சரினு டிவிய ஆஃப் பண்ணாலும் நோ ரியாக்சன்”
“ஏய் என்னடி, என்ன பண்ண, அக்ஸூ என்னன்னமோ சொல்றா… வீட்ல என்னடி பண்ற பகல்ல…?”, வாடித்திரிந்தவளைக் கண்டு உடலுக்கு எதுவுமோ என எண்ணியிருந்தவன், மகளின் பேச்சில் மனைவியை நோக்கி கேட்டிருந்தான்.
கணவனை முறைத்த அர்ச்சனா, “நைட் உங்க பொண்ணரசி தூங்குனவுடனே அச்சுனு… எங்கிட்ட வாங்க அப்ப இருக்கு உங்களுக்கு… பகல்ல முழுக்க பொண்ண மேய்க்கிறேன், நைட் முழுக்க அவ அப்பாவ மேய்க்குறேன்…”, என கணவனுக்கு மட்டுமே கேட்குமாறு முனுமுனுத்தவள், அங்கிருந்து எழுந்து
“அப்பாவும், மகளும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க சீக்கிரம், கொஞ்ச நாள் எங்க அத்த வீட்டுக்கு போகப் போறேன் நான்”, என்றபடி அகல
“அக்ஸு கண்ணா, அம்மா போயிட்டா நமக்கு பூவா லேதுடா, சோ கீப் கொயட்றா”
“ஏன் டாடி பயந்துகிட்டு, அப்டியாவது நல்ல சாப்பாடு சாப்டலாம்ல நாம?”, அறியாப் பிள்ளை அறியாமல் கேட்க
“வெளியில பூட் எல்லாம் ஹைஜீனிக்கா இருக்காதுடா தங்கம்”, அமர்
“ஓஹ்…. அப்டினா என்ன செய்யலாம், நான் உங்களுக்கு செஞ்சு தரேனே”, என்ற மகளின் பேச்சில் மகிழ்ந்தவன், மகளை வாரி அணைத்து முத்த மழை பொழிய,
“ரெண்டு பேரும் கை கழுவிட்டு இப்ப சாப்பிட வந்தா சாப்பாடு, இல்லனா நான் போயி படுக்கப்போறேன்”, அர்ச்சனா.
அதற்குமேல் மகளை தாஜா செய்து சாப்பிட வைத்து, உறங்க வைத்தான், அமர்.
மகள் உறங்கியபின்,
“ஏண்டி, எம்பொண்ணுகூட ஏன் எதுக்கெடுத்தாலும் போட்டி போடறே?”
“யாரு நான் அந்த வாண்டு கூட போட்டி போடுறேனா… எல்லாம் நீங்க குடுக்கற இடம். அது என்ன ஒரு மனுசியா கூட மதிக்க மாட்டுது, தம்மா துண்டா இருந்துகிட்டு பயம்னா என்னனே தெரியல”
“பொண்ணு எதையும் பாத்து பயப்படக்கூடாது அச்சு, தைரியமா இருக்கணும், ஆனா சரி எது தப்பு எதுனு சொல்லிக் குடுத்தா புரிஞ்சிப்பா”
“என்னை நெய்வேலியில கொண்டு போயி விடுங்க கொஞ்ச நாளைக்கு”
“ஏண்டி, இப்ப எதுக்கு அங்க?”
“அக்ஸூக்கு தம்பியோ, தங்கச்சியோ வர போகுதுன்னு நினைக்கிறேன், அதான் என்னால இவள வச்சு இப்ப கவனிக்க முடியல”, சோர்வாக சற்றே நாணத்துடன் கூறினாள் அர்ச்சனா.
மனைவியின் பகிர்தலில் மகிழ்ந்தவன்,
மனைவியை அணைத்து, “இந்த மாமாவ விட்டுட்டு ஊருக்குப் போயிட்டா நான் என்ன செய்வேன், அப்புறம் இந்த சந்தோசத்தை எப்டி நாம கொண்டாடறது?”
“அதான் உங்க பொண்ணு உங்களுக்கு சமச்சு தரேனு சொல்றாளே, அப்புறமென்ன? பேசாம அப்பாவும் மகளுமா இங்க இருங்க…. ம்… சந்தோசத்தக் கொண்டாடி தான் இப்ப நான் திண்டாடிட்டு இருக்கேன்… அதுல இன்னும் வேறயா”, அலுத்தது போல வதனத்தை வைத்தவாறு, ஆனால் சந்தோசமாகக் கூறினாள் அர்ச்சனா.
“கண்டிப்பா சமைச்சு தருவாடி ஒரு நாளைக்கு”
“ம்… எல்லாம் அப்ப பாக்கலாம், அப்றம்… அத்த இன்னிக்கு போன் பண்ணும்போது டவுட்டா இருக்குனு சொன்னேன். அதான் அங்க வந்தா டாக்டர்கிட்ட போயி காமிச்சி கன்ஃபார்ம் செய்து, கொஞ்ச நாள் இருந்துட்டு வரலாம்னு அத்த சொன்னாங்க”
“ம்… கூட்டணிக்கு குடுக்கற இம்பார்ட்டன்ஸ் புருசனுக்கு இல்ல… இனி என்ன சொன்னாலும் வண்டி நிக்காது, போ…”, என சோகமாக கூறிவிட்டு படுக்கச் சென்றவனை
“இம்பார்ட்டன்ஸ் குடுக்காமத்தான் அடுத்து வீட்டுக்கு ஒரு குட்டி அமரோ, அர்ச்சனாவோ வரப் போகுதாக்கும்”, என்று சிரித்தபடியே கணவனின் முதுகோடு கட்டிக் கொண்டாள், அர்ச்சனா.
நெய்வேலி வீட்டில்….
சந்திரசேகர், ஜனதா குடும்பம், அமரின் குடும்பம், பத்ரியின் குடும்பம் என அனைவரும் ஒன்று கூடியிருக்க,
பெரியவர்கள் அவரவர் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். நிசி,நிகி இருவரும் சற்று வளர்ந்து இருந்தனர். நிசி, நிகி இருவரும் அபூர்வன், அக்ஷயாவுடன் விளையாடியபடி வார இறுதி நாளைக் கழித்திருந்தனர்.
“ஏய் அக்ஸூ, நாம ரெண்டு பேரும் இனி தனியா விளையாடுவோம்”, அபூ
“ஏன்?”, அக்ஷயா
“எல்லா விளையாட்டுலயும் அவங்க தான் வின் பண்றாங்க, நம்மள அவங்க ரெண்டு பேரும் ஏமாத்துறாங்க”
“என்னல்லாம் யாரும் ஏமாத்த முடியாது”, அக்ஷயா
“போடி… உங்கிட்ட சொன்னா நீ நம்ப மாட்டிங்கற, பெரிய ஆளாட்டம் பேசுற”
“போடி சொன்னா நான் போடா சொல்லுவேன், நான் கண்டிப்பா பெரிய ஆளா வருவேன்”
“நான் அப்டிதான் சொல்லுவேன், போடீ… பெரிய ஆளா எல்லாரும் தான் ஆவோம் சொல்ல வந்துட்டா…”
“நீ சொல்ற பெரிய ஆளு கிடையாதுடா மடையா, இது வேற”,
“மடையாவா… உன்ன என்ன செய்யறேன் பாரு”, என இருவருக்கும் உண்டான வாக்குவாதத்தில் பிரச்சனையின் பஞ்சாயத்தை தனது தாய் ஜனதாவிடம் கொண்டு வந்திருந்தான் அபூ.
குழந்தைகளின் சம்பாசனைகளைக் கேட்டபடி பணிகளைப் பார்த்திருந்த பெரியவர்கள், ‘இந்த வயசுலயே என்னமா பேசுதுங்க… நாமளும் தான் வளந்தோம்… இந்த வயசுல நாம எப்டி இருந்தோம்னு நினச்சாலே சிரிப்பு தான் வருது’ எனப் பேசி சிரித்திருந்தனர்.
கனவுகளுடன் கூடிய உலா நிறைவு பெற்றது…
***********************