Ani Shiva’s Agalya 17

17

சண்டையும் சமாதானமும் மாறி மாறி வருவது வாடிக்கையாகி விட்டது… அவனிடம் மீட்டிங் சமயத்தில் போன் பேசிய விஷயத்தில் வாங்கிக் கட்டிக்கொண்ட பின், தன் வேலை விஷயமாய் அவனிடம் கேட்பதையே நிறுத்திக்கொண்டாள் அகல்யா…

ஆனால் ஏன் தான் இவனோடு சமாதானமாய்ப் போனோம் என்று எண்ணும்படி சில நேரம் செய்தான் சூர்யா,

“அகல்யா உனக்கு விளையாட்டு ஜாஸ்தி ஆயிடிச்சு, அம்மா நீ செஞ்சதை சொல்லி சிரிச்சாங்க… அவங்க உன் கிட்ட ஒரு வேலை சொன்னா நீ செய்யவே மாட்டியாமே? சின்னப் புள்ள டா அவன்னு சொன்னாங்க”

என்ன தான் நடக்கிறது இங்கே? நாம் சொன்னால் அவனது காதிலேயே விழுவதில்லை… ஆனால் அம்மா சொன்னார்கள் ஆட்டுக்குட்டி சொன்னது என்று நம்மிடமே கதை சொல்கிறான்? தன் கணவனின் செயலால் கோபம் தான் வந்தது…

திருமண வாழ்க்கையைச் சந்தோஷமாக இட்டுச் செல்வதில் பேச்சு தொடர்பு ஒரு முக்கியமான காரணியாக உள்ளது. உதாரணமாக, இருவரும் ஒரு பிரச்சனையைப் பற்றிப் பேசும் போது, ஒருவர் மற்றவர்களது கருத்துக்களைக் கவனிக்க வேண்டும். சூர்யா அதைச் செய்யத் தவறினான்…

மேலும் சொல்வதைச் சரியாகத் தெளிவாகச் சொல்ல வேண்டும். அகல்யாவும் இதில் கோட்டைவிட்டாள் தான்… அகல்யாவுக்கு சூர்யாவின் மேல் இருந்த நூறு சதவீத நம்பிக்கை கொஞ்சம் ஆட்டம் கண்டது இந்த விஷயத்தில் தான்…

அவனும் என்ன செய்வான்? அக்கறையாக அம்மா கேட்கிறாள் என்பதால், தன் எண்ணங்களை வடிகட்டாமல் சொல்லிவிடுகிறான்…

அது வேறு மாதிரி வடிவில் அவனுக்கே பிரச்சனை ஆகும் என்று தெரிந்தால் செய்திருப்பானா?

இப்படித் தானே நாட்டில் பாதிப் பேர் உள்ளனர்…

எதை யாரிடம் சொல்ல வேண்டுமோ அதைச் சொன்னால் போதாதா? எல்லாரிடமும் எல்லாவற்றையும் சொல்ல நாம் என்ன ரேடியோ ஜாக்கியா?

ராஜமின் திறமையும் குறைவில்லை… தன்னால் தன் மருமகளுக்கு எந்த வித தீங்கும் இல்லை, என்பதைப் போல் ஒரு பிம்பத்தை மகன் மனதில் உருவாக்கம் செய்து விட்டாளே, சாமர்த்தியம் தான்…

அது அவன் மனதில் பதிவேற்றப் பட்டதால், அவனுக்கும் அகல்யா பற்றி அன்னையிடம் கூற தடை எதுவும் தோன்றவில்லை…

சூர்யாவுக்கு நேரமின்மை காரணமாக இவளிடமே பேச முடியவில்லை… எப்படித் தன் அன்னையிடம் வலிய போய்ச் சொல்கிறான் இதையெல்லாம்?

ராஜம் விஷயத்தைக் கறந்து விடுவதில் கில்லாடி. அவள் கேட்பதும் யாருக்கும் தெரியாது. பேச்சோடு பேச்சாக அதை வாங்கி விடுவாள். அவளைப் பொறுத்தவரை ஒருவரிடம் மட்டுமே பயம்… ராமானுஜம் உடனிருந்தால் இதெல்லாம் நடக்காது.

அதைத் தவிர்ப்பதற்காகவே, மகன் வேலை முடித்து வரும் வரை காத்திருக்க வேண்டியது… அகல்யாவை தூங்க சொல்லிவிட்டு இவள் இருப்பாள் மகன் வரும் வரை…

அவன் வந்ததும் ‘மருமகளைத் தொந்தரவு பண்ணாதே, பாவம். அந்தத் தோட்டத்தில் என்ன தான் இருக்கிறதோ, அங்கேயே கிடக்கிறாள்’ என்று பெருமை பேசிவிட்டு, அவனுக்குச் சாப்பாடு எடுத்து வைப்பாள்…

அவன் சாப்பிடும் சமயம் கம்பெனி விஷயம் ஆரம்பித்து எல்லாமே அவளே கேட்டு கேட்டுத் தெரிந்து கொள்வாள்… இதே வழியில் தான் அகல்யா வெளிநாட்டில் இருக்க ஆசைப் படுகிறாள் என்பதும், வேலைக்காக அவனிடம் கேட்டிருக்கிறாள் என்பதும் ராஜமிற்குத் தெரிய வந்தது…

அகல்யாவுக்கு இவையெல்லாம் தெரியாமல் போனது அவளின் கெட்ட நேரம்…

ஆனால் வேண்டும் என்றே அகல்யாவிடம் ஏதோ தன் மகன் தன்னிடம் எதையும் மறக்காதவன் என்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டாள்…

தன் முன் இவர்கள் இருவரும் அதிகம் பேசிக்கொள்வதே இல்லையே? எப்போது இதை எல்லாம் மகனிடம் சொல்கிறாள்?

அது அகல்யாவுக்கு மிக லேட்டாக புரிந்தது… ராஜமின் இந்த வேலை அகல்யாவுக்கு தெரிந்ததும் தான், ஏன் தன் மாமியார் இப்படிப் பகலில் தூங்கி வழிகிறாள் என்ற உண்மையையும் உணர்ந்தாள்…

ஒரு நாள் ராஜமும் சூர்யாவும் பேசுவதைக் கேட்கவும் நேர்ந்தது…

அவள் கேட்ட சமயம் சூர்யா அவள் சொன்ன ஏதோ விஷயத்தைத் தன் அன்னையிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தான்…

அதைக் கேட்டு அகல்யா இவன் தான் வலிய எல்லாவற்றையும் சொல்கிறான் போல என்ற முடிவுக்கே வந்துவிட்டாள்…

அவனிடம் விஷயத்தை வாங்கி அகல்யாவிடம் திரித்துப் பேசி, ராஜம் என்னவெல்லாம் செய்கிறாள்…

ராஜம் ஏன் இந்த அளவுக்கு இறங்கிவிட்டாள்?

தன் அதிகாரத்தை இந்த வீட்டில் நிலைநாட்ட இதுவெல்லாம் ஒரு வழியா? இப்படிச் செய்வதால் தான் பெற்று வளர்த்த மகனும் தானே அவஸ்தை படப் போகிறான்… ஏன் சில பேர் இப்படியெல்லாம் மாறிவிடுகிறார்கள்?

தான் பெற்ற பிள்ளை காலம் முழுவதும் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற நினைப்பா? பிறகு ஏன் திருமணம் செய்து வைக்க வேண்டும்? விவாகரத்துக்கு மாமியார்களின் பங்கும் அதிகம் என்பது இந்திய நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் ஆதாரங்களே சொல்லும்…

இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?

அகல்யாவின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது…

சூர்யா என்று மாட்டுவான் அவனிடம் எல்லாவற்றையும் கொட்டலாம் என்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்…

சில சமயங்களில் சூர்யாவை நினைத்தாலும் ஆத்திரமாய் வந்தது… எவனாவது எல்லாவற்றையும் தன் தாயிடம் சொல்வானா? எவ்வளவு அறிவிருந்தும் இந்த விஷயத்தில் கோட்டை விடுகிறானே? வெளிநாட்டில் இருக்கலாமா என்று கேட்டேன் தான், ஆனால் இவன் கூறிய காரணங்களைப் புரிந்து ஒத்துக்கொண்டாளே!

அப்புறம் முடிந்து போன கதையை ஏன் ராஜமிடம் சொன்னான்?

அவனுக்கு அவன் அம்மா பற்றிப் புரியவில்லை என்பதால் அவள் நல்லவள் என்று ஆகிவிடுமா? ஆனால் இதில் அகல்யா சிலவற்றைப் புரிந்து கொள்ளவில்லை.

அகல்யாவுக்கு ராஜம் அளவுக்கு அறிவோ அனுபவமோ போதாது… பட்டப்படிப்பு முடித்ததனால் இந்த அறிவெல்லாம் தானாய் வந்துவிடுமா? வந்துவிட்டால் தான் பாதிப் பேர் இதை மாதிரி விஷயங்களில் தப்பிவிடுவார்களே? அகல்யா தன் வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொண்டாள்.

ஒரு எறும்பு கூடத் தான் வாழ்வதற்கு எவ்வளவு போராட்டங்களைச் சந்திக்கிறது. நாம் எல்லாம் எழுபது வருடங்கள் மேல் வாழும் மனித இனம், ஆக நமக்கு வாழ்க்கை ஒரு போராட்டம்… இதை அகல்யா உணராமல், சமாளிக்கலாம் என்ற எண்ணம் இல்லாமல் தன் வாழ்வைப் பிரச்சனையாகவே பார்த்தாள்…

சமாளிக்கும் எண்ணம் மட்டும் அவளுக்கு இருந்திருந்தால், இந்தப் பிரிவினையைத் தவிர்த்திருக்கலாம்…

அன்று சீதா வந்திருந்தாள், நீண்ட இடைவேளைக்குப் பிறகு…

“எப்படி இருக்கீங்க, எவ்ளோ நாள் ஆச்சு உங்களைப் பார்த்து…”என்ற அகல்யாவை பார்க்க சீதாவுக்கு சந்தோஷம் தொற்றிக் கொண்டது…

“அவர் ஊரில் இல்லை. காலையிலேயே வேலை எல்லாம் முடிச்சிட்டு வந்துட்டேன்”என்ற சீதாவின் பேச்சை கேட்டபடி வந்தார் ராஜம்.

“என்ன மா உன் வீட்டுக்காரர் இல்லாம நீ மட்டும் இந்த ஊரில் என்ன பண்றே? அவர் கூடப் போக வேண்டியது தானே?” அகல்யாவும் அங்கே தானிருக்கிறாள். சீதா உடனே,

“அவரும் என்னைக் கூட வர சொன்னார் தான்… அத்தை தனியா இருக்க முடியாதென்று சொல்லிட்டாங்க… அதான் நான் போகலை…”என்றவளை ராஜம்,

“ஏன் டீ கூறுகெட்டவளா இருக்கே? அவர் கூட வாழத் தானே உன்னைக் கட்டிகொடுத்திருக்கு… மாமியார் கூட இருக்கவா?”

இதைகேட்டதும் அகல்யாவுக்கு மனதில் எரிமலை குழம்பு கொதிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது.

ஆளுக்கொரு ஒரு நியாயம்.

பெண் மட்டும் மாப்பிள்ளையுடன் தனியே இருக்கலாமாம், மருமகள் செய்தால் குடும்பத்தைப் பிரிப்பதாம்… அதனால் தான் வெளிநாடு செல்லலாம் என்று சொன்னது குற்றம் போல்! என்ன ஒரு நியாயம்…

அவளால் அந்த இடத்தில் அதற்கு மேல் நிற்க முடியவில்லை… நின்றால் எதுவும் பேச நேரிடும் என்பதால், சீதாவிடம் சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றுவிட்டாள்…

சீதா ராஜமிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அகல்யாவின் அறைக்கு வந்தவள்,

“என்ன அகல்யா, ஏன் பாதியில் வந்துட்டே?”அவள் கண்களில் நீரைக் கண்டு, “நீ வருத்தபடுற அளவுக்கு என்ன ஆச்சு” என்று கேட்க, அகல்யா தனக்குள் தேக்கி வைத்திருந்த எல்லாக் குமுறலையும் கொட்டி விட்டாள் சீதாவிடம்…

“எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை…” என்று அவள் மடியில் படுத்துக் கதறினாள். சீதாவுக்கு பாவமாகி விட்டது. சின்னப்பெண்… தானும் இப்படித் தானே அவஸ்தைகளைக் கடந்து வந்திருக்கிறாள்… எல்லாவற்றையும் தெரிந்து தன் அம்மாவே இப்படிச் செய்கிறாளே?

“அகல்யா சோர்ந்து போனா வாழ முடியாது. அண்ணன் நல்லவன். அவன் கூட இருக்க இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயமெல்லாம் நீ சமாளிக்கப் பழகு… நான் அம்மா கிட்ட பேசுறேன்…” என்று ஒரு நல்ல ஆத்மாவாக அவளுக்கு அறிவுரை வழங்கினாள்…

அதன் பிறகு கீழே சென்றுவிட்டாள் சீதா, அகல்யா அறைக்குள்ளேயே இருந்து கொண்டாள்…

சிறிது நேரத்தில் கீழேயிருந்து பயங்கரப் பேச்சுச் சத்தம்… யார் குரல் இது என்று அகல்யாவுக்கு விளங்கவே இல்லை. கீழிறங்கி வந்தவள் பார்த்தது சீதாவுக்கும் ராஜமுக்கும் நடந்த வாக்குவாதத்தை!

ராமானுஜத்தை நடுவில் வைத்துக் கொண்டு மாறி மாறிப் பேசினர் இருவரும். தன் அம்மாவிடம் சாந்தமாகவே சொல்ல ஆரம்பித்திருந்த சீதாவிடம் ராஜம் குதிக்கவும் தான் வார்த்தைகள் முற்றி விட்டது… எதிர்த்தே பேசிடாத சீதா இன்றோ, வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தாள்…

“அம்மா நானே எந்த ஒரு பாவமும் பண்ணாமலே குழந்தை இல்லைன்னு வேதனைப் படுறேன், நீங்க வேற, கூடக் கொஞ்சம் பாவத்தை உங்களுக்குச் சேர்க்காதீங்க, அதுவும் எங்களைத் தான் பாதிக்கும்… அண்ணன் விஷயத்தில் எல்லாம் தயவுசெய்து நீங்க தலையிடாதீங்க…”

ராமானுஜத்திற்கு அகல்யா விஷயம் எல்லாமே புதிதாய் இருந்தது. அவர் இருக்கிறார் என்றும் ராஜம் அடங்கவில்லை,

“என்ன உன்கிட்ட வத்தி வச்சாளா? அவ என்னைக்கு இங்க வந்தாளோ, எல்லாமே தலைகீழா மாறிட்டுது. இப்போ நீயும் என்னை எதிர்த்துபேசுற!” என்றாள் அகல்யாவை முறைத்தபடி. அகல்யா சீதாவின் கையைப் பற்றியபடி

“விடுங்க சீதா. எனக்காக நீங்க ஏன் உங்க அம்மா கூடச் சண்டை போடுறீங்க. என் தலைவிதி படி நடக்கட்டும்…” சீதாவுக்கு அதற்கு மேல் ராஜமிடம் போராடும் சக்தியும் வற்றிவிட்டது…

“அந்த வீட்டில் பிரச்சனை தாங்காமல் தான் நான் இங்க வர்றேன், ஆனா அம்மா, நீங்க பண்ணதை கேட்டா என் மாமியாரே தேவலைன்னு தோணுது… சே…” புறப்பட்டு விட்டாள்…

அகல்யா அவள் பின்னோடையே ஓடினாள்…

“சீதா போகாதீங்க…”அவள் எதையும் காதில் வாங்காமல் விறு விறு வென்று சென்றே விட்டாள்…

“உனக்கு இப்போ சந்தோஷமா? என்னைக்குமே எனக்கு எதிரா பேசாத என் பொண்ண இன்னிக்கி பேச வச்சி எனக்கு எதிரா திருப்பியும் விட்டுட்டல? இதற்கெல்லாம் நீ அனுபவிப்பே…” ராஜம் அகல்யாவிடம் கர்ஜித்தாள்…

அடுத்தவரைச் சாபமிடுவது என்ன அவ்வளவு எளிதானதா? சாபமிட்டால் நடந்துவிடும் என்று யார் இந்த உலகில் வரம் வாங்கியிருக்கிறார்கள்? சபிப்பது என்றுமே அழியாத ஃபேஷனாக இருக்கிறது…

இதை எல்லாம் புரியாத ராஜம், அகல்யாவை அனுபவிப்பாய் என்று சொன்னது அவளையே திரும்பத் தாக்கியது…

ராமானுஜமின் மனதில் தோன்றிய சந்தேகமும் உறுதியாகிப் போனது… ஜெயந்த் விஷயத்தில்… இதைத் தான் ‘திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பார்கள் போல.

ஜெயந்த் ராமானுஜமிற்கு போன் செய்தான்,

“அப்பா என்னை மன்னிசிடுங்க. நான் என் மனசுக்கு பிடித்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிகிட்டேன்.”

ராமானுஜம் அமைதி காக்கவே, அவன் மேலும் தொடர்ந்தான்…

“நானும் அவளும் ரொம்ப வருஷமா காதலிக்கிறோம். அவ ஊரு மும்பை, உங்க கிட்ட சொல்ல ஒரு தயக்கம்… ஏற்கனவே அண்ணன் விஷயத்தில் அம்மா புலம்பிட்டு இருந்ததினால் நானும் ஏன் இப்போ சொல்லவேண்டுமென்று விட்டுவிட்டேன்… ஆனால் இப்போ அவ வீட்டில் கல்யாண ஏற்பாடு செஞ்சிட்டாங்க, அதைத் தடுக்க வேண்டி அவளை அவசரக் கல்யாணம் பண்ணிகிட்டேன்…”

ராஜமிடம் இவன் இதைச் சொல்லியிருந்தால் அவள் நெஞ்சைப் பிடித்திருப்பாள்.

ராமானுஜமோ, “ஜெயந்த் நீ ஏதோ தப்பு செய்றேன்னு நான் நினைத்தது சரிதான். இவ்ளோ பெரிய விஷயத்தைப் பெத்தவங்க கிட்ட மறைப்பேன்னு எதிர்பார்க்கவில்லை… உன்னையும் சூர்யாவையும் ஒரே மாதிரி தானே வளர்த்தோம்? நம்ம குடும்பத்துக்கு இப்படி ஒரு அவமானத்தைத் தேடி தந்துட்டியே… அம்மா இதை எப்படித் தாங்குவாளோ…” என்று மேலும் புலம்பியவர் “எங்கள் முகத்தில் இனிமேல் முழிக்காதே” போனை வைத்துவிட்டார்…

இரண்டு நாட்களுக்குப் பிறகே ராஜமிடம் ஜெயந்த் திருமணம் செய்த விஷயத்தைக் கூறினார். அவர் எதிர்பார்த்ததற்குச் சற்றும் குறையாமல் எல்லா ஆர்ப்பாட்டமும் அழுகையும் நடந்தது அதன் பின். அவளால் ஜெயந்தின் இந்தச் செயலை ஒப்புக்கொள்ளவே முடியவில்லை…

அவனைப் பற்றி எவ்வளவு கனவுகள் கண்டிருந்தாள்… இப்படிச் செய்துவிட்டானே பாவி, என்று மனம் அடித்துக்கொண்டது… அவனுக்காகப் பெண் கேட்டிருந்த இடத்தில் எல்லாம் என்ன சொல்ல?

தனக்கு நேர்ந்த பிரச்சனைக்கு எல்லாம் சம்மந்தமேயில்லாமல் அகல்யா மேல் கோபம் வந்தது ராஜமிற்கு. அவளிடம் எரிந்து விழுவது இன்னும் ஜாஸ்தியானது. தன் மகள் சீதாவிடம் ஜெயந்த் செய்ததைச் சொல்லி புலம்பலாம் என்றெண்ணி போன் செய்தாள் ராஜம், அவள் இவளிடம் பேசவே தயாரில்லை… தந்தையிடம் பேசியவள், ராஜம் பேசினால் மட்டும் பதிலளிக்காமல் இருந்தாள்…

இவை எல்லாமாய் ராஜமை ஒரு ஆங்கார நிலைக்குக் கொண்டு சென்றிருந்தது…

அகல்யா தான் பாவம், சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மான்குட்டி போலாகிவிட்டாள்…

ராஜம் சொல்லும் சில விஷயங்களுக்கு எப்படிப் பதில் பேசவது என்றே அவளுக்கு இப்போதெல்லாம் தெரியவில்லை… அந்த எரிச்சலை எல்லாம் சூர்யாவிடம் காட்டி அவனையும் தன்னிடமிருந்து விலகவைத்துவிட்டாள்…

சந்தோஷமாகப் பேசி பல நாள் ஆனது போல் இருந்தது… மஹாவிடம் சில முறை தன் பிரச்சனைகளைச் சொல்லி பார்த்தாள்… என்று தன்னால் ராஜமை சமாளிக்க முடியாது என்று தோன்றியதோ அப்போது, அன்னையின் உதவியை நாடினாள். மஹா அதை எல்லாம் பொறுமையாய் கேட்டுக் கொண்டாளே தவிர, மகளிடம் ‘இப்படிச் செய், அப்படிச் செய்’ என்று எதையும் திணிக்கவில்லை… “இது எல்லாம் கொஞ்ச நாள் தான், பொறுத்துப் போ” என்று மட்டும் சொன்னார்…

அகல்யாவின் தந்தை கிரியிடம் மஹா இதையெல்லாம் கூறி, “அகல்யா சொல்றதை கேட்கக் கஷ்டமா இருக்குங்க, நாம ஏதும் பேசி பார்ப்போமா அவ மாமியார் கிட்ட?”

அவரோ, “அகல்யா கெட்டிக்காரி, அதுவும் இல்லாமல் வாழ்க்கை பாடத்தைத் தானா கற்றுக்கொண்டால் தான் அது நிலைக்கும்… விடு அவ சமாளிச்சிடுவா… அகிலன் விஷயத்தில் நமக்கே தெரியாமா நம்ம பொண்ணு நல்லதா என்னவெல்லாம் அவ அண்ணனுக்கு செஞ்சா! அவ வாழ்க்கைன்னு வரும் போது அப்படி எதும் யோசிக்க மாட்டாளா?”

மஹாவால் தீர்மானிக்கமுடியவில்லை… அவர் சொல்வது சரி தான் என்றாலும், இப்போது தன் மகள் அப்படி எல்லாம் திறம்பட யோசிக்கிறாளா என்று சந்தேகம் அவளுக்கு…

பெண்ணை நினைத்து ஒரு கலக்கம்… அகல்யா சவால்களை அசால்டாகச் சந்திக்கும் ரகம் தான், இன்று ஏனோ பயப்படுகிறாள்… இதுவும் கடந்து போகட்டும்… கடவுளே என் மகளுக்குத் துணை நில் என்று வேண்டிக்கொண்டாள்… ஆனால் தன் பெண் இப்படி ஒரேடியாய் கணவனை விட்டு விலகி வருவாள் என்பது அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி தான்…