Ani Shiva’s Kathai ondru aarambam 13

13

மதி அன்று அவள் வீட்டில் நடக்கப் போவதை பற்றி வெண்பாவிடம் சொல்லலாம் என்றால் ரதி இவர்கள் இருவருடனேயே ஒட்டிக் கொண்டிருந்தாள். அவள் முன் சொல்லத் தோன்றவில்லை மதிவதனிக்கு. வெண்பா திருமணத்தை பற்றி பேசும் சமயம் எல்லாம் ரதியின் முகம் போகிற போக்கைப் பார்க்க மதிக்கு என்னவோ விநோதமாகப் பட்டது.

இவர்கள் மூவரில் ரதி சீனியர்,தனக்கே இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நினைப்பாளோ! அந்த சிந்தனையில் விஷயத்தை மறைக்க முயன்றவள் வெண்பாவிடம் சொல்ல, பஸ்ஸில் தான் வாய்ப்பு கிடைத்தது!

வெண்பா மகிழ்ந்து போனாள்.
“உனக்கு அலங்காரம் செய்ய ஏதாவது உதவி வேணுமா மதி!உன் கூட நானும் வீட்டுக்கு வரவா!”

“நோ தான்க்ஸ். இந்த பொண்ணு பார்க்கும் போது ஃபிரண்டை கூட வச்சிகிறது, வந்தவன் என்னை பிடிக்கலை என் கூட இருந்தவளை தான் பிடிச்சிருக்குன்னு சொல்றது, அதுக்கு உட்கார்ந்து அழுவுறது எல்லாம் எனக்கு பிடிக்காது வெண்பா!”

தோழியின் கையில் இரண்டு அடி போட்டவள்,

“ஸிஸ்டர் எனக்கு ஆல்ரெடி ஆல் இருக்கு.இன்விடேஷன் கூட ரெடி, தெரிஞ்சிக்கோ! ”

“ஓ…விழியனை உன் ஆளுன்னு சொல்ற அளவுக்கு முன்னேறிட்டியா? பிழைச்சிப்ப”

ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொண்ட கவுண்டரில் விழுந்து விழுந்து சிரித்தனர்.அடக்க முடியாத சிரிப்பு! பக்கத்து சீட்டில் சில தலைகள் இவர்களை முறைத்த பின்னரே அது அடங்கியது!

வெண்பா தன் இடத்தில் இறங்கும் முன்,

“எல்லாரும் வந்துட்டு போனதும் போன் பண்ணு மதி!” என்றுவிட்டு சென்றாள்.

எப்படி மதிவதனி போன் செய்யாமல் இருப்பாள்!?

அன்று வீட்டிற்கு திரும்பியதும் மதி தன் அன்னையை ஒரு வழி செய்தாள். ஒரு கட்டத்தில் , “புடவை வேண்டாம் மதி நீ சுடிதாரில் வந்து நில்லு போதும்” என்று கை விரித்துவிட்டாள் மதிவதனியின் தாய்… 

“அம்மா நீ ரொம்ப மோசம் மா, அக்கான்ன இப்படி விடுவீங்களா, என்னை மட்டும் இப்படி செய்றீங்க?! ஒழுங்கா கட்டி விடுங்க மா”

தாய் சொல்லி பிள்ளை கேட்கும் காலம் எல்லாம் சில வீடுகளில் என்றைக்கோ மலை ஏறிவிட்டது. மோகனாவும் மகள் பேச்சுக்கு இணங்கி அவள் சொன்னதை போல் சின்ன சின்ன மடிப்பெடுத்து அழகாய் அந்த புடவையைக் கட்டி விட்டாள்.

“இத்தனை சின்னதா மடிப்பு வச்சி கட்டினா இடுப்பு தெரியும்னு தான் பெரிசா வைக்க சொன்னேன் கழுதை. இனி அங்க தெரியுது இங்கே தெரியுன்னு என் கிட்ட ஏதாவது சொன்னே, தொலைச்சி கட்டிடுவேன்”

“இந்தா புள்ள மோகனா, புடவையை கட்டி விட்டியா, போயிட்டே இருங்க. ஜாஸ்தி பேசுனீங்க அப்பா கிட்ட வத்தி வச்சிடுவேன்!”

கைநீட்டி மிரட்டிய மகளிடம்,

“தலைக்கு பின்னல் போட என் கிட்ட தானே வருவே, அப்போ வச்சிக்கிறேன்” முறைத்த படி போய்விட்டாள்.

எல்லா ஆர்ப்பாட்டமும் முடித்து அழகுச் சிலையாய் கிளம்பியிருந்த மகளுக்கு கன்னத்தில் மச்சம் அளவிற்கு குட்டியாய் ஒரு திருஷ்டி பொட்டு வைத்து விட்டார் பிரசாத், மதிவதனியின் தந்தை.

“இப்ப தான் நீ ரொம்ப அழகா இருக்கே வதனிகுட்டி”

“ஆமா அவளை பொண்ணு பார்க்க வராங்க, இப்ப போய் அந்த கழுதையை குட்டின்னு கூப்பிடுங்க”

“மோகனா திஸ் இஸ் தி லிமிட், நான் சும்மா இருந்தா ஜாஸ்தி பேசுறியா?”

அன்னையை நெருங்கியவளிடமிருந்து மோகனாவை காப்பாற்றியது, வீட்டின் அழைப்பு மணி!மாப்பிள்ளை வீட்டினர் தான் !மதி அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டாள்.

நீண்ட நேர பேச்சு முடிந்து மோகனா வந்து இவளை அழைக்க ஹாலில் வந்து நின்றவளுக்கு அதிர்ச்சி! மதனை பார்த்தவள் கொஞ்சம் விக்கித்து பின் நிதானத்திற்கு வந்தாள். இவனா? இவன் அவன் ல?கேள்வி கணைகள் எல்லாம் முடிந்த பின் இவள் அறைக்கு திரும்பிவிட, சற்று நேரத்தில் வந்த மோகனா.

“மாப்பிள்ளை உன் கூட தனியா பேசணுமாம் வா மதி”

‘இதோ வரேன், எத்தனை தடவை டா பொண்ணு பார்பேன்னு அவன் சட்டையை பிடிச்சு கேட்குறேன்’ என்று மனதில் நினைத்தபடி அவள் அங்கு செல்ல, நினைத்ததை கேட்க முடியாமல் போனது! 

திருமண வேலைகளுக்கும் சேர்த்து தான் சபாபதி சென்னை வந்தது…

சொந்த அண்ணன் மகள் என்பதால் ரேணுகா நகைப் போட்டு பெண்ணை அழைத்துச் செல்ல போகிறேன் என்றிருந்தாள்.சபாபதி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை!
“உன் வீட்டுக்கு வந்த பிறகு நீ வெண்பாவுக்கு என்னவேணாலும் செய்துக்கோ ரேணுகா.தமிழுக்கு செய்த மாதிரி நான் இவளுக்கும் செஞ்சு தான் ஆகணும்!” என்றுவிட்டார்.

ஆதலால் அந்த வாரம் புடவை நகை வாங்கும் வேலையெல்லாம் இருக்க , விழியனே அழைத்துச் சென்றான்! சபாபதியை விழியன் நடத்தும் விதத்தை இப்போது தான் நேரே பார்க்கிறாள் வெண்பா. துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்பது போல் முன்னர் விழியன் இருக்கும் இடத்தில் இருக்கவே மாட்டாள்.ஆனால் இன்று நேரில் பார்க்க நிறைய உண்மைகள் புரிந்தது!தகப்பன் ஸ்தானத்தில் வைத்திருந்தான் அவள் தந்தையை.
ராம் மாமா மரியாதை தரும் லட்சணத்தை பார்த்து பல முறை மனம் உடைந்து போயிருக்கிறாள்.சபாபதியின் முன் கால் மேல் கால் போடுவதும், மாமனார் என்ற மரியாதை இல்லாத அலட்சியப் பேச்சும் சாதாரணமாய் வரும். தாயைப் போல் பிள்ளை!
தமிழ் எதுவும் தடுக்க இயலாது பார்த்து கொண்டு நிற்பாள். ஆனால் அந்த இடத்தில் பொற்பாவை இருந்தால், 

“பா, பெரியவங்க முன்னாடி என்ன பா இது, கீழே போடு பா காலை” அவளே சென்று எடுத்து விட்டுவிடுவாள்.

வெண்பா நினைப்பதுண்டு, தனக்கு வருபவன் இப்படி தன் தந்தையை நடத்திவிட கூடாதென்று! இன்று விழியன் அவள் மனம் போல் நடந்துக் கொண்டது,இதமளித்தது! மதி சொன்னது போல் அவனிடம் உள்ள சின்னதொரு நல்ல விஷயத்தை எடுத்துக் கொண்டது, இப்போது அவன் செய்வது எல்லாமே நல்லதாய் பட்டது! 

சபாபதி வேலை எல்லாம் முடிந்திருக்க, அடுத்த நாள் அவளின் ஆபிஸ் அழைத்து வந்தான் விழியன்.

“உங்க பொண்ணை எத்தனை பெரிய கம்பெனியில் வேலை பார்க்க வச்சியிருக்கீங்கன்னு நேரில் வந்து பாருங்க மாமா!”

வரவேற்பு கூடத்தில் காத்திருக்க வெண்பாவும் மதியும் வந்தனர்!
“மதிவதனி நல்லா இருக்கியா மா?” உன்னை பத்தி வெண்பா நிறைய சொல்லியிருக்கா!”

சபாபதி மகளின் தோழியிடம் சகஜமாய் உரையாடிக் கொண்டிருக்க,வெண்பா யாரையோ எதிர்பார்த்தது போல் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு நின்றாள். வருகிறேன் என்ற ரதியைக் காணவில்லை. 
தந்தை வந்திருக்கிறார் என்றதும் மூவருமே ஒன்றாக தான் கீழே இறங்கினர், ரிசப்ஷன் பக்கம் வரவும் ரதி அவசர போன் கால் என்று ஒதுங்கிக் கொண்டாள். 

இத்தனை நேரமாகியும் இன்னமும் அவர்களிடம் வந்து சேரவில்லை. வெண்பாவின் செய்கையை பார்த்து,

“என்ன மா” என்றார் சபாபதி!

“இன்னொரு ஃபிரண்டு வரென்னு சொன்னாங்க.இன்னும் காணோம்!அதான் பார்க்குறா” மதி தான் பதிலளித்தது.
‘விழியனை பத்தி அத்தனை துருவுவா, எங்கே போனா’ மதிக்கும் ரதி வராமல் போனதை பற்றி யோசனை தான்.சற்று நேரம் இருந்து விட்டு, 

“மாமா, நான் என் சீட்டுக்கு போறேன். கொஞ்சம் வேலை இருக்கு! நீ பேசிட்டு வா வெண்பா” என்று கிளம்பியவளிடம் விழியன்,
“கங்கிராட்ஸ் மதி” என்றான். அவளும் புன்னகை முகமாய் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு அவனிடமும், வெண்பாவின் தந்தையிடமும்,விடைபெற்றுத் தன் இருக்கைக்கு வந்து விட்டாள்.
மதனிடம் அன்று பேசியதை பற்றி யோசித்தபடி அவள் இருக்கைக்கு வந்து சேர்ந்தவளுக்கு அங்கு வந்த பின்பு ரதியின் நியாபகம் வந்தது.

ரதியின் மொபைலுக்கு கால் செய்ய எடுக்கப்படவில்லை. ‘எங்கே தான் போனா?’ என்று இவள் சுற்றி முற்றி தேட, அவர்கள் தளத்தின் ‘லாபியில்’ ரதி நின்றுக் கொண்டிருந்ததைக் கண்டாள். அங்கிருந்து கீழே வெறித்த படி சிலையாய் நின்றிருந்தாள் ரதி!
அலுவலகத்தில் இருந்த கண்ணாடி கதவு வழியாக ரதியின் செயல்களை தெளிவாய் பார்க்க முடிந்தது மதிவதனியால்! 

ரதி நின்றிருந்த இடத்திலிருந்து பார்த்தால் வெண்பா நின்று கொண்டிருக்கும் வரவேற்புக் கூடம் கட்டாயம் தெரியும். உடன் வர அழைத்தற்கு அங்கே வராமல் ஏன் இங்கே தனியாய் நிற்கிறாள்?

குழப்பமாய் மறுபடியும் ரதியை போனில் அழைத்தாள் மதிவதனி!இவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே போனின் திரையை பார்த்தவள் எதையோ முனுமுனுப்பாய் சொல்லியபடி இவள்‘காலை’ கட் செய்தாள்.அவள் செய்கை எல்லாம் நிரம்பவும் வித்தியாசமாய் இருந்தது!

‘ஏன் இப்படி செய்கிறாள்’. அன்றிலிருந்து ரதி மேல் தன் ஞானக்கண்ணையும் சேர்த்து வைத்தாள் மதிவதனி!
நடந்த விஷயங்கள் மதிவதனிக்கு தெரியாதே! அன்று ரதி வேலையில் மூழ்கியிருக்க அவளிடம் வந்த வெண்பா, 

“அப்பா வந்திருக்கார் , பார்க்க வரியா ரதி ?” என்றழைக்க தாமதிக்காமல் அவளுடன் கிளம்பிவிட்டிருந்தாள் ரதி. கூடத்தை நெருங்கும் சமயம் விழியனை அங்கு கவனித்து விட்டிருக்கிறாள். ஒரு முதியவருடன் பேசிக் கொண்டு நின்றான்.
அவனை பார்த்தவள் தன்னை அவன் கவனிக்காதவாறு நின்றுக் கொண்டு, தன் போனை கையில் எடுத்தபடி,

“வெண்பா நீ போயிட்டே இரு வரேன்…பாஸ் காலிங்” என்று ஒதுங்கிக் கொண்டாள்.
தடதடத்தது இதயம் அவனை நேரில் கண்டதும்!இங்கே இப்போது விழியனை சந்திப்பது இயலாத காரியம்! சாதாரணமாய் எல்லாம் பேச தன்னால் முடியாது! சட்டென்று மேலே தன் தளத்துக்கு வந்தவள் அங்கே நின்றபடி விழியனை கண்களில் நிறைத்துக் கொள்ள ஆரம்பித்தாள்! 

‘அவன் தானே என்னை பார்க்க கூடாது , நான் பார்க்கலாமே என்னவனை!’… அவர்கள் அங்கிருந்து கிளம்பும் வரை விழியனின் தரிசனம் கிடைத்தது அவளுக்கு!

விழியனை பார்த்த தினம் உறக்கம் தொலைந்தது. எத்தனை வருடங்கள் அவனை காணாமல் இருந்திருக்கிறேன்! அவனை இனிமேலும் தன்னால் பிரிந்து இருக்க முடியாது. இந்த விஷயத்தில் ஏதாவது செய்ய வேண்டும்.

அடுத்த நாள் வெண்பாவை ஆபிஸில் தனியே பிடித்தவள்,

“உன் ஏரியாவில் வாடகைக்கு வீடு கிடைக்குமா வெண்பா?கொஞ்சம் தெரிஞ்ச இடமா இருந்தா பரவாயில்லைன்னு பார்க்குறேன். நீயும் பக்கம் இருந்தா எனக்கும் பாதுகாப்பு!”

ரதிக்கு ஏற்கனவே தெரியும் விழியனின் வாடகை வீடுகளை பற்றி, அதை அறியாத வெண்பா,

“எங்க அத்தை வீடே நிறைய இருக்கு ரதி! நான் கேட்டுச் சொல்றேன்!” 

மதி இவர்கள் அருகில் வருவதை பார்த்து சட்டென்று வேறு பேச்சுக்கு மாறி விட்டாள் ரதி.
அன்றிரவு, 

“அத்தை என் பிரண்டுக்கு சிங்கிள் பெட் ரூம் வீடு வேணுமாம் , நம்ம கிட்ட ஏதும் காலியா இருக்கா?”

“இன்னும் ஒரு மாசத்தில் ஒண்ணு காலியாகும்.அதை வேணா தருவோமா வெண்பா? வாடகை அட்வான்ஸ் எல்லாம் …இரு ஃபைலில் பார்த்து சொல்றேன்!”

பார்த்ததோடில்லாமல் அதை ஒரு சீட்டில் எழுதி வெண்பாவிடம் தந்துவிட்டாள். அவளும் தோழியின் பெயரைக் கேட்கவில்லை. இவளும் சொல்லவில்லை!

விதி வலியது!
சூழ்ச்சியை அறியாத வெண்பா,மதியின் முன் வைத்து ரதியிடம் தன் அத்தை கொடுத்ததை தர , ரதி எந்த பேச்சும் இல்லாமல் அதை வாங்கிக் கொண்டு போய்விட்டாள்… அவள் போன பிறகே மதிவதனி என்னவென்று விசாரிக்க,

“வீடு வேணுமாம் டீ, அதான் எங்க அத்தை வீடு பத்தி சொன்னேன்”

மதிவதனி யோசிக்க ஆரம்பித்தாள். ஆபிஸ் பக்கம் இருக்கும் ஹாஸ்டலில் தங்கி இருப்பதாக ரதி முன்னர் சொல்லியிருக்கிறாள். இப்போது எதற்காக பதினைந்து கிலோமீட்டர் தள்ளி உள்ள வெண்பாவின் வீட்டு பக்கம் வர நினைக்க வேண்டும்! இதற்கும் அன்று கீழே வராமல் இருந்ததற்கும் ஏதாவது சமந்தம் இருக்கா?

ஸம்திங் ஃபிஷ்ஷி!

வெண்பாவிடம் சொல்லலாம் என்றாள் அவளே இன்னும் ஒரு வாரம் தான் வேலைக்கு வருவாள் எதற்காக குழப்ப வேண்டும் என்று அப்போதைக்கு விட்டு விட்டாள் மதிவதனி.

Comments