Anima-8
Anima-8
“எதுக்கு இப்படி… டென்ஷனோட சத்தமா பேசற… சில்… ஜெய்! ரிலாக்ஸ்!” என்று மலர் அமைதியாக ஜெய்யின் வேகத்தை தனிக்கும்விதமாக சொல்லவும்…
“ஏய்… என்ன டைவர்ட் பண்ணாதே… நான் கேட்டதுக்கு முதலில் பதில் சொல்லு” என்று ஜெய் படபடப்பாகவும்…
“நோ… ஜெய்! நீ இப்படி மிரட்டுற மாதிரி கேட்டால்… என்னால பதில் சொல்ல முடியாது… முதலில் நீ போலீஸ் ஆஃபீசர் மாதிரி இல்லாம… என்னோட ஃப்ரெண்டா கேளு சொல்றேன்…” என்று மலர் அழுத்தத்துடன் சொன்னதால்…
ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டு… வரவழைக்கப்பட்ட நிதானத்துடன்… “சரி… சொல்லு மலர்… இந்த ஆளை உனக்குத் தெரியுமா? அவனிடம் உன்னைப்பற்றிய தகவல்களெல்லாம் எப்படிப் போயிருக்கும்?” என்று கேட்டான் ஜெய்…
“சத்தியமா தெரியாது ஜெய்! அந்த ஆளு முகமே சரியா தெரியல… இந்த அழகுல அவனிடம் என்னோட டீடெயில்ஸ்… எப்படி போயிருக்கும்னு எனக்கு எப்படித் தெரியும்… ப்ச்!” என்று சொல்லிவிட்டு…
இல்லை என்பதுபோல் உதட்டை வளைத்து… அலட்சியமாக தோளை குலுக்கினாள் மலர்…
“நோ… மலர்! போன தடவையே… ஜஸ்ட் பேப்பர்ல எழுதியிருந்ததால… நான் எப்படியோ மனோஜ் பண்ணிட்டேன்… பட்… இப்ப நீ விசாரணைக்காக எங்க ஆஃபீசுக்கு வரவேண்டியதாக இருக்கும்… இது நம்ம வீட்டுல தெரிஞ்சா பிரச்சினை வேறு!” என்று ஜெய் வருந்த…
தலை சாய்த்து… அவன் முகத்தைப் பார்த்தவள்… “ஹகூனா மத்தாதா! ஜெய்! நாம எவ்ளோவோ சமாளிச்சிருக்கோம்… இதைச் சமாளிக்க மாட்டோமா… வா எல்லாரும் என்னவோ ஏதோன்னு கவலை பாடுவாங்க” என்றுவிட்டு… ஜெய்யின் கரத்தை பற்றி இழுத்துக்கொண்டு… மலர் கீழே செல்ல…
“எவ்ளோ ஈஸியா சொல்லிட மலர்… ம்! ஹகூ…னா… ம…தா…தா! ம்!”
“அவங்க ரெண்டு பேரும் யாரு என்னன்னு ஒரு க்ளூவும் கிடைக்கல… அவங்கள யாரு கொன்னிருப்பாங்கன்னும் தெரியல… இதுல நீ எப்படி லிங்க் ஆகியிருக்க? ஓ மை கடவுளே!” என்று ஜெய் கவலையும் குழப்பமுமாக சொல்லவும்…
“இதை கண்டுபிடிக்கறத தவிர… உனக்கு வேற என்ன வேலை…”
“நீதான் பெரிய ஆப்பீசர் ஆச்சே… நீ இருக்கும்போது எனக்கு என்ன கவலை… சோ… மறுபடியும் சொல்றேன் ஹகூனா மத்தாதா!” என்று புன்னகையுடன் சொல்லிக்கொண்டே படிகளிலிருந்து இறங்கி… இருவரும் வரவேற்பறைக்குள் நுழைய…
அங்கே போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்திருந்த ஈஸ்வரின் பார்வை… ஜெய்யின் கரத்துடன் இணைந்திருந்த மலரின் கையில் சென்று நிலைத்தது…
ஜெய் மற்றும் மலர் இருவரும் இருந்த மன நிலையில்… அதை இருவருமே கவனிக்கவில்லை…
ஆனால் அண்ணனுடைய பார்வை சென்ற திசையை கவனித்த ஜீவிதா… அவன் ஏதாவது தவறாக எண்ணுவானோ என்ற பயத்தில்… நிலைமையை மற்றும் பொருட்டு… “ஜெய் அண்ணா! நீங்க எப்ப வந்தீங்க?” என்று கேட்கவும்…
“இப்பதான் மா! ஒரு பத்து நிமிஷம் இருக்கும்…” என்ற ஜெய்… அப்பொழுதுதான் ஈஸ்வரை கவனித்தான்… பின்பு… அவனிடம் நலம் விசாரித்து… சில நிமிடங்கள் வீட்டில் எல்லோருடனும் பேசிவிட்டு… அங்கிருந்து கிளப்பிச்சென்றனர் ஜெய் மற்றும் ஈஸ்வர் இருவரும்…
ஈஸ்வர் வீடு வந்து சேரவும்… அங்கே அவனுக்காக காத்திருந்தான் தமிழ்…
“அண்ணா! மறுபடியும் அந்த… அனுபவ் இன்றைக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல வச்சு… ஏழரையை கூட்டிட்டான் அண்ணா! உங்க போர்ஷன்ஸ் எல்லாம் நீங்க முடிச்சு கொடுத்துட்ட பிறகும் கூட… மறுபடியும் எடுத்த சீனையே ஷூட் பண்ண சொல்லி… டைரக்டருக்கு ப்ரெஷர் போட்டிடுக்கான்! என்று அன்று காலை நடந்த பிரச்சினைகளை தமிழ் பட்டியலிட்டுக்கொண்டிருக்க…
அதையெல்லாம் காதில் வாங்காமல்… “அதை விடு தமிழ்! எனக்கு இதை முதலில் சொல்லு… ‘ஹகூனா மத்தாதா! அப்படின்னா என்ன?” என்ற அதி முக்கியமான கேள்வியை தமிழிடம் ஈஸ்வர் கேட்க…
‘லூசாப்பா நீ!’ என்பதுபோல் அவனைப் பார்த்த தமிழுக்குச் சிரிப்பும் வந்துவிட… “இது என்ன… சின்ன புள்ளத்தனமா கேக்கறீங்க…ணா!” என்று கேட்டுவிட்டு… ஈஸ்வரின் முறைப்பில் சற்று அடங்கினான் அவன்…
உடனே “அது… ஸ்வாஹிலின்னு ஒரு ஆஃப்ரிக்கன் லாங்குவேஜ்…ணா… ‘டோன்ட் ஒர்ரி’ ‘நோ ப்ராப்லம்’ இப்படிலாம் அர்த்தம் வரும்… லயன் கிங் னு ஒரு டிஸ்னீ கார்ட்டூன் படத்தினால் பிரபலமான ஒரு ஃப்ரேஸ் அது” என்று தமிழ் விளக்கமாகச் சொல்லவும்…
“வாட்! கார்ட்டூன் மூவில வருமா! டோன்ட் ஒர்ரின்னு அர்த்தமா? மை காட்!” என்றவாறு… வயிற்றைப் பிடித்துக்கொண்டு… கண்களில் நீர் வரும் அளவிற்குச் சிரித்தான் ஈஸ்வர்…
விசித்திரமாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்தான் தமிழ்…
அவன் அறிந்தவரை… அன்றைய தினம்… தமிழுடன் கலந்து பேசி… ஷூட்டிங் இல்லை என்ற காரணத்தினால்தான்… தனிப்பட்ட வேலை என்று சென்றிருந்தான் ஈஸ்வர்…
தற்பொழுது ஈஸ்வர் நடித்துக்கொண்டிருக்கும் அந்தப் படத்தின் இயக்குனர்… மதியம் தமிழை அழைத்து… அனுபவ்… திருப்தி இல்லாமல்… மறுபடியும் சில காட்சிகளைப் புதிதாக எடுக்கச் சொன்னதாகவும்… அதுவும் அன்றே… படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றும் சொல்லவும்… அவரிடம் ஈஸ்வரின் நிலையை விளக்கிய தமிழ்… அன்று ஈஸ்வரால்… படப்பிடிப்பில் கலந்துகொள்ள இயலாது என்பதைத் திட்டவட்டமாக சொல்லிவிட்டான்…
பின்பு அவர் நேரடியாக ஈஸ்வரை தொடர்புகொள்ளவும்… அவன் முற்றிலும் மறுத்துவிட… பிரச்சினை பெரிதாகியிருந்தது… அது தமிழுக்கு தெரியவரவும்… அதைப்பற்றிப் ஈஸ்வருடன் பேசவே… அவன் அங்கே வந்திருந்தான்…
திரைத்துறையில் இருந்த பொழுதும்… தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் ஒழுக்கமான நடிகர்… என்ற பட்டியலில் ஈஸ்வர் இருப்பது… அனுபவ் மட்டுமின்றி… மேலும் சிலரையும் எரிச்சல் படுத்திக்கொண்டுதான் இருந்தது…
இந்த நிலையில்… மீ டூவில்… அனுபவ்… மற்றும் வேறு சிலருக்கு எதிராகப் பேசியிருந்த ஒரு நடிகைக்கு ஆதரவாக ஈஸ்வர் ட்வீட் செய்திருக்க… அந்தக் காழ்ப்புணர்ச்சி வேறு அவன் மேல் இருந்தது அனுபவிற்கு…
இப்பொழுது அவன் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் தயாரிப்பாளருக்குத்தான் ஈஸ்வர் பண உதவி செய்திருந்தான்…
அதில் ‘ஹீரோ நடிகர்களே பேசாமல் இருக்கும் பொழுது… நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள்?’ என்று அந்த நிருபர் பற்றவைத்த தீ… அனுபவின் மனதில் எரிந்துகொண்டிருந்தது…
அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டு… சில நாட்களாகவே… இதுபோல… எதோ ஒரு வகையில் ஈஸ்வரை… தொல்லை செய்துகொண்டுதான் இருந்தான் அவன்…
அனைத்தையும்… எளிதாக எதிர்கொண்டு… தன் வேலையை திறம்பட செய்துகொண்டிருந்தான்… ஈஸ்வர்…
இனி… ஈஸ்வர் நடிக்கும் படத்தில்… தான் ஹீரோவாக நடிக்க மாட்டேன் என்று… மறைமுகமாக சில இயக்குநர்களை மிரட்டவே… தொடங்கியிருந்தான் அனுபவ்… அதையும் அறிந்தே இருந்தான் ஈஸ்வர்…
ஈஸ்வரின் செயல்பாடுகள் எல்லாமே தமிழுக்கு நன்றாகவே தெரியும் என்பதினால்… அவனுடைய கோபமான முகத்தை எதிர்பார்த்து அங்கே காத்திருந்த தமிழ்… அவனது சிரித்த முகத்தைக் கண்டு வியப்பின் உச்சிக்கே சென்றிருந்தான்…
மதியம் கைப்பேசியில் அந்த இயக்குநருடன் சண்டையிட்டு வந்ததும்… உண்மையிலேயே கோபமும்… ஆற்றாமையுமாக இருந்த ஈஸ்வரின் மனநிலை மலரின் மெல்லிசையிலும்… அவளது பேச்சிலும்… முற்றிலும் தெளிந்திருந்ததை தமிழ் அறிந்திருக்க நியாயமில்லை…
அதுவும் அவள் ஜெய்யிடம் சொன்ன… ‘ஹகூனா மத்தாதா’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தமாக இருக்கும் என்று அதை அறிந்துகொள்ளும் குறுகுறுப்பில் இருந்தவன்…
அதன் அர்த்தம் புரிந்ததும்… அவன் மனம் மிகவும் லேசாகிப்போனது… அதுவும் அது கார்ட்டூன் படத்தால் பிரபலமான வார்த்தை என்பதைத் தமிழ் சொன்னவுடன்… ஏனோ சிரிப்பே வந்துவிட்டது ஈஸ்வருக்கு…
அவனது பிரச்சினைகள் கூட பின்னுக்குச் சென்றிருந்தது…
“அண்ணா! நீங்க இந்த நிலைமையிலும் சிரிக்கிறீங்கன்னா… சூப்பர்தான் போங்க!” என்றான் தமிழ்… மனதிலிருந்து…
அதற்குப் புன்னகையுடனே… “எப்படியும்… 2020 வரை எனக்கு எட்டு படங்கள் கமிட் ஆகி இருக்கு… என்ன இந்தக் கொசு தொல்லைகள் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்…”
“அண்ட்… சீக்கிரமே… இன்னும் ஒரு பெரிய சர்ப்ரைஸ் உங்க எல்லாருக்கும் இருக்கு… சோ… ஹகூனா மத்தாதா! தமிழ்!” என்று சொல்லி அவனை மேலும் மேலும் வியப்பில் ஆழ்த்தினான் ஈஸ்வர்…
மகிழ்ச்சியுடன் அங்கிருந்து சென்றான் தமிழ் கதிர்…
அடுத்த நாள்… சுசீலா மாமியுடன் பேசிக்கொண்டே… மாம்பலத்தில் அவர்கள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து… வெளியேறி… வந்து கொண்டிருந்தாள்… மலர்…
அப்பொழுது அங்கே… இருக்கும் நடை மேடையில்… அழுக்கேறிய உடை… காடென வளர்ந்திருந்த கேசம்… முகத்தை மூடிய தாடி… என மன நிலை பாதிக்கப்பட்ட ஒருவன்… சுருண்டு படுத்திருக்க… அவனது நிலையே சொல்லாமல் சொன்னது… அவன் பசியின் மயக்கத்தில் இருக்கிறான் என்று…
“ஐயோ! பாருங்க மாமி! பாவமா இருக்கு” என்று மலர் சொல்லவும்…
“அம்மாம்டி குழந்தை… பத்து பதினஞ்சு நாளா… அவன் இங்கதான் சுத்திண்டு இருக்கான்… இன்னைக்குத்தான் அவன் இப்படி சுருண்டு கிடக்கான்… வேணா… சாப்பிட எதாவது கொடுக்கலாமா?” என்று மாமி கேட்கவும்…
ஒரு நொடியும் யோசிக்காமல்… அந்த தெருவைக் கடந்து எதிர் புறம் இருந்த தேநீர் விடுதிக்குள் சென்று… உணவு பொட்டலம் ஒன்றை எடுத்து வந்தாள் மலர்…
அதற்குள் கோபாலன் மாமா அங்கே வரவும்… அவர் நிலைமை உணர்ந்து… அவனது அருகில் சென்று… மெதுவாக தட்டி அவனை எழுப்பவும்… மிகவும் முயன்று எழுந்து உட்கார்ந்தவன்… அவரைக் கண்டு மிரண்டு போனான்…
உடனே அவசரமாக அவன் அருகில் வந்த மலர்… உணவை அவனிடம் நீட்டவும்… அவன் அதை வாங்கத் தயங்கி… சுற்றும் முற்றும் பார்க்க…
“இல்ல… பயப்படாதீங்க… இதை சாப்பிட்டால்தான்… உங்களால நடக்கவே முடியும்… ப்ளீஸ்…” என்று மலர் மென்மையாக சொல்லவும்… மறுக்காமல் அந்த உணவை வாங்கி அவன் உண்ணத் தொடங்கினான்…
அதற்குள்… உள்ளே சென்ற மாமி… ஒரு பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கவும்… அதை வாங்கி… அவனிடம் நீட்டிய மலர்… எதிப்புறம் இருந்த அந்தத் தேநீர் விடுதியைக் காண்பித்து…
“நான் அங்கே சொல்லிட்டு போறேன்… உங்களுக்கு பசிச்சா அங்கிருந்து வாங்கி சாப்பிட்டுக்கோங்க!” என்று மலர் சொல்ல… அவன் அவளை ஒரு புரியாத பார்வை பார்க்கவும்…
“நான் சொன்னது உங்களுக்குப் புரியலையா… நீங்க அங்கே வாங்கி சாப்பிடுங்கன்னு சொன்னேன்… சரியா…” என்று மலர் மறுபடியும்… கொஞ்சம் குரலை உயர்த்திச் சொல்லவும்… ‘சரி’ என்பது போல்… தலையை ஆட்டினான் அவன்… வயிறு நிறைந்ததாலோ என்னவோ… அவனது கண்களில் ஒரு ஒளி வந்திருந்தது…
“ஏண்டி குழந்த! நான் இங்கே தானே இருக்கேன்? நான் அவனுக்கு கொஞ்சூண்டு சாதம் கொடுக்க மாட்டேனா?” என்று மாமி அங்கலாய்க்கவும்…
“பரவாயில்லை மாமி… ஏற்கனவே என்னால உங்களுக்கு நிறையத் தொல்லை… இதுல… இது வேறயா? நம்ம தீணா அண்ணாதானே… அவர் கிட்ட சொல்லிட்டா… போதும்…” என்றவள்… எதோ நினைவு வந்தவளாக…
“மாமி! கீழே வந்து ரொம்ப நேரம் ஆச்சு… நீங்க வீட்டுக்கு போங்க… நான் தீணா அண்ணா கிட்ட சொல்லிட்டு கிளம்பறேன்…” என்று மலர் அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டு… அந்தத் தேநீர் விடுதி நோக்கிச் சென்றாள்…
தனது கைப்பையிலிருந்து… ஐந்நூறு ரூபாய் தாள் ஒன்றை அந்தக் கடையை நடத்திவரும் தீணாவிடம் நீட்டியவள்…
“அண்ணா… நான் இப்ப எடுத்துட்டு போன பார்சலுக்கும் சேர்த்து… இதை வச்சுக்கோங்க…” என்றவள்… அந்த மன நலம் பாதிக்கப் பட்டவரைக் காண்பித்து…
“மீதிக்கு… டெய்லி ஒருவேளையாவது… அவருக்கு… சாப்பிட எதாவது கொடுத்துடுங்க போதும்…” என்று முடிக்க… கோபமாக அவளை முறைத்த தீணா… “எம்மா… இதை நீ கொடுக்கலேன்னாலும்… நான் அவனுக்கு எதாவது கொடுப்பேன்… இன்னைக்கு இங்கே இருந்த கூட்டத்தால்… அவனை கவனிக்கல…” என்று சொல்லவும்…
“ஓகே அண்ணா! இனிமேல் கூட்டமா இருந்தாலும்… உங்களுக்கு என் ஞாபகம் வரும் ல… அதனால இந்த பணத்தை கொடுத்தேன்… வெறும் ஐந்நூறு ரூபாயிலேயே எல்லாம் முடிஞ்சுடுமா என்ன?” என்றுவிட்டு… அந்தப் பண்ணத்தை அவரது கைகளில் திணித்தாள் மலர்…
அனைத்தையும் கவனித்தவாறு… அங்கே உட்கார்ந்து தேநீர் அருந்திக்கொண்டிருந்த… தமிழ்… மலரை நெருங்கி… “என்ன சிவப்பு சுடிதார் போட்ட தங்கச்சி… எப்படி இருக்கீங்க?”
“நீங்க… எல்லா இடத்திலும் நீக்கமற… நிறைஞ்சு இருப்பீங்க போல இருக்கே…”
“அதோட சமூக சேவை வேற… ம்…” என்கவும்…
மலர் பேசுவதற்குள் இடை புகுந்த தீணா… “தம்பி… இந்த ஏரியாவுக்கு புதுசா… டீ குடிச்சோமா… கிளம்பினோமான்னு இருக்கனும்… எங்க பொண்ணுகிட்ட உனக்கு என்ன பேச்சு” என்று கடின குரலில் சொல்ல…
பிரபாவின் திருமணத்திற்குப் பிறகு… தமிழ் அவளுக்கு நன்று பரிச்சயமாகி இருக்கவே… “அண்ணா! அவரு… எங்க அண்ணி வகையில சொந்தம்தான்… ஒண்ணும் பிரச்சினை இல்ல!” என்று மலர் சொன்னதினால்…
“அப்படியா… தப்பா நினைக்காதீங்க தம்பி… இங்க ஏரியா ஒரு மாதிரி… அதனாலதான் அப்படிச் சொன்னேன்…” என்றார் தீணா…
“பரவாயில்ல ணா… நமக்கு என்னன்னு போறவங்க மத்தியில… உங்களை மாதிரி ஒரு சிலராவது இருக்கீங்களே கிரேட்!” என்றான் தமிழ்… பிறகு இருவருமே அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்…
அன்று படப்பிடிப்பில்… ஏதேதோ காரணங்களினால் ஒரே கட்சியையே… திரும்பத் திரும்ப செய்து… மிகவும் களைத்துப்போய் வீடு திரும்பினான் ஈஸ்வர்…
ஓய்ந்து போய் அவனது அறைக்குள் வந்தவன்… குளித்து… உடை மாற்றி… உணவு உண்ணக்கூடப் பிடிக்காமல்… அப்படியே அங்கே போடப்பட்டிருந்த சோபாவில் சரிந்து உட்கர்த்தான்…
அன்று உணவு இடைவேளையின் பொழுது… மாம்பலத்தில் மலரைப் பார்த்ததையும்… அங்கே நடந்த நிகழ்வுகளையும் தமிழ்… கதை… திரைக்கதை… வசனத்துடன் ஈஸ்வரிடம் சொல்லியிருந்தான்…
ஏனோ அந்த நினைவு அவனுக்கு வரவும்… அணிமா மலருடன் ஏதாவது பேசவேண்டும் என்ற எண்ணம் உந்த… கைப்பேசியில் அவளது என்னை அழுத்தினான் ஈஸ்வர்…
நீண்ட நேரம்… ரிங் போய்க்கொண்டே இருந்து… பின்பு இணைப்பு கிடைத்தது… ஆனால் அந்த அழைப்பு… மலர் அறிந்து ஏற்றது போல் தெரியவில்லை ஈஸ்வருக்கு… தெரியாமல் கை பட்டிருக்க வேண்டும்… காரணம்… எதிர் முனையில் மலர் அவளது இனிமையான குரலில்… ஒரு படலைப் பாடிக்கொண்டிருந்தாள்…
ஆனாலும் அழைப்பைத் துண்டிக்க மனம் இன்றி… அந்தப் பாடலில் ஒன்றிப்போனான் ஈஸ்வர்…
“மாலை வரும் வேளையில்… மதுரை வரும் தென்றலே!!”
“ஆடிமாத வைகையில்… ஆடி வரும் தென்றலே!!”
“நஞ்சைப் புஞ்சை நாலும் உண்டு… நீயும் அதை ஆளலாம்!!”
“மாமன் வீட்டு மயிலும் உண்டு… மாலை கட்டி போடலாம்!!”
“ராஜா நீதான்… நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை…”
மலரின் மென்மையான குரலில்… பாடல் வரிகள் தந்த இனிமையில்… கைப்பேசியைப் பிடித்தபடியே… உறங்கியிருந்தான் ஈஸ்வர்…
ஜீவிதா… தாய்மை அடைந்திருக்கும் நல்ல செய்தியை… அப்பொழுதுதான் சூடாமணி ஃபோன் செய்து அவர்களுக்குச் சொல்லியிருந்தார்…
அதைப் பேரனுடன் பகிர்ந்துகொள்ளும் மகிழ்ச்சியில்… உணவுடன் ஈஸ்வரை தேடி அங்கே வந்த செங்கமலம் பாட்டியின் கண்களில் அவன் படவும்… மெதுவாக கைப்பேசியை அவனது கையிலிருந்து எடுத்து… அதைப் பார்க்க… மலரின் பெயர் அதில் ஒளிர்ந்து கொண்டு… இணைப்பு துண்டிக்கப்படாமல் இருந்தது…
யோசனையுடன் கைப்பேசியை காதில் பொருத்திய பாட்டி… சில நிமிடங்கள் கூர்ந்து கவனிக்க… எதிர் முனையில்… “யூ ஆர் சோ ஸ்பெஷல் ஃபார் மீ டார்லிங்! உம்மா!” என்று கேட்ட மலரின் குரலிலும்… அதைத் தொடர்ந்து வந்த பேச்சிலும்… அதிர்ந்துதான் போனார் பாட்டி!