mm-23

mm-23

மயங்காதே மனமே 23

கண்விழித்த கதிர் நேரத்தைப் பார்த்தான். அதிகாலை ஐந்து மணி என்றது, பக்கத்தில் இருந்த ஃபோன். தலை லேசாகக் கனத்தது. நேற்று இரவு மித்ரன் வந்து போனதில் இருந்து ஒரே யோசனையாகவே இருந்தது.

ராஜினாமாக் கடிதத்தைக் கொடுத்தவுடனேயே, மித்ரன் அதை ஏற்றுக் கொள்வான் என்று கதிர் எதிர்பார்த்திருக்கவில்லை. இருந்தாலும், வீடு வரை வருவான் என்று நிச்சயமாக எண்ணவில்லை. வந்தது மட்டுமல்லாமல், அவன் கண்ணெதிரேயே அந்தக் கடிதத்தை சுக்கு நூறாகக் கிழித்து எறிந்தான்.

என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே உம் மனசுல? நீ சொல்றதையெல்லாம் கேக்குறேங்குறதுக்காக நீ என்ன பண்ணினாலும் கைய கட்டிக்கிட்டு பாத்துக்கிட்டு நிப்பேன்னு நினைச்சியா?” நடுவீட்டில் நின்று கத்தியவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை கதிர்

ஏதோ ஓர் கோபம் அவனை உந்தித் தள்ள பிடிவாதமாகவே நின்றான். கொஞ்ச நேரம் பொறுமையாக நின்ற மித்ரன் கதிரருகே வந்தான்

புரிஞ்சுக்கோ கதிர். நீயும் என்னைக் கஷ்டப்படுத்தாத. மூச்சு முட்டுதுடா. நான் கெட்டவன் தான். பொண்ணுங்களோட அலைஞ்சவன் தான். ஆனா எந்தப் பொண்ணுக்கும் நம்பிக்கை குடுத்து ஏமாத்தல்லை. யாரையும் ஆசை காட்டி மோசம் பண்ணலை.” அந்தக் குரலில் இருந்த வலி கதிரை இளகச் செய்த போதும், அவன் அசைந்து கொடுக்கவில்லை.

எங்கப்பா பண்ணின காரியஅதை விடு, உங்கம்மா பட்ட வேதனையை எல்லாம் கேக்கும் போது, யாரோ கத்தியால கிழிக்கிற மாதிரி வலிக்குது கதிர். எங்க தாத்தாக்கு மட்டும் சரியான நேரத்துல தகவல் கிடைக்கலைன்னா, ரெண்டு சின்னப் பசங்களோட எதிர்காலம் என்ன ஆகியிருக்கும்?” மித்ரனின் குரல் பரிதவித்தது.

எனக்கு கருணை காட்டு கதிர். இந்தப் பாவத்துல இருந்து மீழ்றதுக்கு எனக்கொரு வழி கிடைச்சிருக்கு, அதைக் கெடுத்துராத கதிர். உன் தங்கையை நான் மகாராணி மாதிரி வச்சுக்கிறேன். இது கடமைக்காக நடந்த கல்யாணந்தான். ஆனா கண்டிப்பா அதுல காதல் வரும். நாங்க சந்தோஷமா வாழுவோம். அதுல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. தயவு செஞ்சு கொஞ்சம் எனக்கு சப்போர்ட் பண்ணு கதிர்.” கெஞ்சிய மித்ரன் வெளியேறிப் போய் விட்டான். உண்ணக் கூடத் தோன்றாமல் கட்டிலில் சரிந்து விட்டான் கதிர்.

காலைக் கதிரவனின் வெளிச்சம் மெதுவாக ஜன்னலைத் தீண்ட ஆரம்பித்தது. அம்மாவின் முகம் ஞாபகம் வந்தது கதிருக்கு. தாமரை தன் தாயைக் கொண்டுதான் பிறந்திருந்தாள். கதிரின் அம்மாவும் அத்தனை அழகு. மிகவும் மென்மையான பெண்மணி. தன் அம்மா அந்தக் காலத்திலேயே காதல் பண்ணியிருக்கிறார் என்றால் கதிரால் நம்ப முடியவில்லை. ஆனால் விரட்டி விரட்டித்தான் ராஜேந்திரன் அந்தப் பெண்ணை தன் வழிக்குக் கொண்டு வந்தார் என்று யாருக்கும் தெரியாது.

அதிர்ந்து கூடப் பேசத் தெரியாது வைதேகிக்கு. தான் குழந்தையாக இருந்த போது அம்மா, அப்பாவின் வாழ்க்கை எப்படி இருந்தது என்று கதிருக்குத் தெரியாது. அவனுக்கு அது ஞாபகத்திலும் இல்லை. ஆனால் புத்தி தெரிய ஆரம்பித்த பிறகு வீட்டில் எப்போதும் சண்டை தான்.

ஓயாது சத்தம் போடும் அப்பாவைத் தான் கதிருக்கு ஞாபகம் இருந்தது. அம்மா வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள். இருந்தாலும், அப்பா வீட்டில் இல்லாத சமயங்களில் கண்ணீர் விட்டழும் தாயின் முகம், கதிரை இப்போது போலவே அப்போதும் வேதனைப் படுத்தும்.

என்ன, ஏது? என்று முதலில் ஒன்றும் புரியாமல் போனாலும், காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக ஏதோ புரிந்தது. வாயில்லாப் பூச்சியான அம்மாவை, அப்பா தன் இஷ்டத்துக்கு ஆட்டிப் படைக்கிறார் என்று தெளிவாகப் புரிந்தது

பதினைந்து வயது சிறுவனுக்குத் தாயின் அவலம் பார்க்கப் பொறுக்கவில்லை. வீட்டை விட்டுப் போய் விடலாம், நான் உழைத்து உங்களையும், தாமரையையும் பார்த்துக் கொள்வேன் என்று சொன்னதிற்குக் கூட, வைதேகி ஒத்துக் கொள்ளவில்லை.

ஒரு வாரம் ஹாஸ்பிடலில் படுத்த படுக்கையாக இருந்த அம்மா, அதற்குப் பிறகு வீட்டிற்கு வரவேயில்லை. அப்பா என்ன ஆனார் என்றே தெரியவில்லை. நடுத்தெருவில் அனாதையாக நின்ற போதுதான் மதுராந்தகன் வந்தார். யார், என்ன சொன்னார்கள்? எப்படி வந்தார்? எதுவும் தெரியாது.

நேற்று இரவு மித்ரன் வந்தது போல, ஒரு நாள் இரவுதான் அவரும் வந்தார். மித்ரன் பேசிய அதே வார்த்தைகளைத்தான் அவரும் பேசினார். எதையும் ஒளிக்கவும் இல்லை, மறைக்கவும் இல்லை. அவர் அன்று பேசியது இன்றும் நினைவில் இருந்தது கதிருக்கு.

நீ சின்னப் பையன் தான் தம்பி. இருந்தாலும் பரவாயில்லை, உன் கை ரெண்டையும் காலா நினைச்சுக் கேக்குறேன். எனக்குப் பாவ விமோசனம் குடுப்பா.” என்று கதறி அழுத அந்தப் பெரியவரைப் பார்த்த போது, கதிருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

பரவாயில்லை ஐயா, எனக்கு ஒரு வேலை மட்டும் வாங்கிக் குடுங்க. என்னோட தங்கச்சியை நான் பாத்துக்கிறேன்.” பொறுப்பாகப் பேசிய அந்தப் பையனை மதுராந்தகனிற்கு அவ்வளவு பிடித்தது.

இல்லைய்யா, பொண் குழந்தை. ரெண்டுங் கெட்டான் வயசு. நான் சொல்லுறதை கேளுப்பா.” எவ்வளவு சொன்னபோதும் கொஞ்சம் பிடிவாதமாகவே இருந்த பையனை ஜெயந்தி தனியே அழைத்துக் கொண்டு போனார். பெண்ணாக சில விபரங்கள் சொன்ன பிறகே, தங்கைக்காக வேண்டி இறங்கி வந்திருந்தான் கதிர்

அதன் பிறகு ஹாஸ்டல் வாசம்தான். வாரத்தில் ஒரு நாள் தாமரையைப் போய்ப் பார்ப்பான் கதிர். மதுராந்தகன் அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. தாமரையை நல்ல, தரமான லேடீஸ் ஹாஸ்டலில் சேர்த்திருந்தார். வாழ்க்கை அப்படியே ஓடிப் போனது.

படித்து முடித்து ஒரு நல்ல வேலையில் அமர்ந்த கதிர், தங்களுக்கென ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து, தங்கையையும் தன்னோடு அழைத்துக் கொண்டான். அதன் பிறகு மதுராந்தகனின் உதவியை அவன் ஏற்க மறுத்துவிட்டான்.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு தங்களைக் காண வந்த மதுராந்தகன் தான், அந்தக் கோரிக்கையை கதிரின் முன் வைத்திருந்தார்.

தன் பேரனின் நடவடிக்கைகளில் கலவரப் பட்டிருந்தார் பெரியவர். அவனின் சேர்க்கைகளே அவன் போக்கிற்குக் காரணம் என்றறிந்து, கதிரிடம் உதவி கேட்டு வந்திருந்தார். ஏதோ ஒரு வகையில் பெரியவருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்று நினைத்திருந்த கதிரும் அதற்கு ஒத்துக்கொண்டான்.

மித்ரனை முதல் முதலாகப் பார்த்த போது, கதிருக்கு வருத்தம் தான் தோன்றியது. வாழ்க்கையின் கஷ்ட நஷ்டம் புரியாத வாலிபம் என்று, ஒரு இளக்காரமே வந்தது. ஆனால் அதே மித்ரன் இன்று பேசிய வார்த்தைகள்

நேரம் ஆறையும் தாண்டி இருக்கவும், குளியலறைக்குள் போனான் கதிர். மனதின் பாரம் கொஞ்சம் வடிந்தாற்போல தோன்றியது.

                                *******************************

கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் தாமரை. மித்ரன் நல்ல தூக்கத்தில் இருந்தான். இரவு தன்னோடு பேசிய படியே தூங்கிப் போனவனைப் பார்த்தபடி, இவள்தான் கொட்டக் கொட்ட முழித்திருந்தாள்

நேரம் ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது. மித்ரனை லேசாக அசைத்தாள். அவன் ஆழ்ந்த உறக்கத்தைக் கலைக்க, இந்த மெல்லிடையாளின் அசைவு போதுமானதாக இருக்கவில்லை.

என்னங்க…” அந்த அழைப்பில் லேசாக அசைந்த மித்ரன், கண் விழித்தான். தன்னெதிரே அள்ளி முடிந்த கூந்தலுடன் நின்ற மனைவியை ஆச்சரியமாகப் பார்த்தான். சுற்று முற்றும் பார்த்தவன், அவள் ரூமில் தான் இருப்பதை அப்போதுதான் உணர்ந்து கொண்டான்.

சாரி தாமரை, பேச்சு சுவாரஸ்யத்துல அப்பிடியே தூங்கிட்டேன்.”

காலைல எந்திருச்சா குட் மார்னிங் சொல்லணும், சாரி சொல்லக் கூடாது.” சொன்னபடியே காஃபியை நீட்டினாள்.

என்ன இது?”

ஏன்? காஃபி.”

…!” ஆச்சரியப் பட்டவன் அவள் கொடுத்ததை வாங்கிக் கொண்டான். இதுவரை அவன் பெட் காஃபி குடித்ததில்லை. பாட்டியைக் கஷ்டப்படுத்த மனம் இல்லாமல், ப்ரேக் ஃபாஸ்ட்டுடன் காஃபி குடிப்பது தான் மித்ரனின் வழக்கம். ஆனால் இன்று இதுவும் நன்றாகத்தான் இருந்தது.

பல்லு விளக்கலை.” சொன்ன மனைவியைப் பார்த்துக் கண்ணடித்தான் மித்ரன்.

இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பர்மிட் பண்ணும்மா.” என்றவன்,

ஆமாநீ இப்போ என்னை எப்பிடிக் கூப்பிட்ட?” என்றான்.

என்னங்கன்னு கூப்பிட்டேன்.”

அப்பிடின்னா?”

அப்பிடின்னாவா? இது என்ன கேள்வி? உங்களை வேற எப்பிடிக் கூப்பிடுறது?”

ஏன்? பேர் சொல்லிக் கூப்பிடு.” அவன் சொன்னதும், மலைத்துப் போனாள் தாமரை.

என்னது? பேர் சொல்லிக் கூப்பிடவா?”

ம்அதுக்குத்தானே எனக்குப் பெயர் வைச்சிருக்காங்க.” காஃபியைப் பருகியபடி இலகுவாகச் சொன்னான் மித்ரன்.

அதெல்லாம் எனக்குத் தெரியாது. வேணும்னா அத்தான்னு கூப்பிடுறேன்.” சொல்லிவிட்டு ஜன்னலைத் திறக்கப் போனாள் தாமரை. காஃபியை முடித்துவிட்டு பாத்ரூமை நோக்கிப் போன மித்ரன், அவள் வார்த்தைகளில் அப்படியே நின்றான். தோள்பற்றி தன்புறமாக அவளைத் திருப்பியவன்,

இன்னொரு தரம் சொல்லு.” என்றான். அவனை ஆச்சரியமாகப் பார்த்தவள்,

என்ன சொல்ல?” என்றாள்.

இப்போ என்னமோ சொன்னியேஅதை…”

உங்களைஅத்தான்னு கூப்பிடுறேன்னு சொன்னேன்.” 

…!” அந்த வார்த்தையை அவள் சொல்லும்போது, மித்ரனுக்கு ஏதோ பண்ணியது. மயக்கத்தைக் காட்டிய அவன் விழிகளை, அவள் பார்க்கும் முன் மறைத்துக் கொண்டு நகர்ந்து விட்டான்.

குளித்து முடித்து பாத்ரூமை விட்டு மித்ரன் வெளியே வந்தபோது, தாமரை ரெடியாக நின்றிருந்தாள். மஞ்சள் நிற சுடிதார் அவளுக்கு வெகுவாகப் பொருந்தி இருந்தது. கேள்வியாகப் பார்த்தான் மித்ரன்.

இல்லைஇன்னைக்கு ஃபாக்டரிக்கு கூட்டிட்டுப் போறேன்னு சொன்னீங்கஅதான்…” 

ஆமாமில்லை. ஆனா இந்த ட்ரெஸ் வேணாம்டா. பாட்டியோட காஸ்ட்யூம் தான் நல்லா இருக்கும்.” 

பாட்டியோட காஸ்ட்யூம்மா…? …! புடவையா?”

ம்…” சொன்னபடியே தனது ரூமிற்குள் போனான் மித்ரன். மனம் விரைவாக யோசனை பண்ணியது. அண்ணனைப் பார்க்கும் ஆர்வத்தில் இந்தப் பெண் தயாராகின்றாள். அந்த முரடன் வராமல் போனாள் நொந்து போவாளேஎன்று மித்ரனுக்குக் கவலையாக இருந்தது.

க்ரே கலர் ஷிஃபான் ஜார்ஜெட்டில், சின்னதாக காக்கி நிறத்தில் பார்டர் வைத்த புடவை அணிந்து, கிச்சனுக்குள் வந்த தாமரையை, வைத்த கண் வாங்காமல் பார்த்தார் ஜெயந்தி. அத்தனை அழகாக இருந்தாள் பெண்.

ரொம்ப அழகா இருக்கேம்மா. பூ கொஞ்சம் வைச்சுக்கிறயா?” 

சரி பாட்டி.” அவள் சம்மதிக்கவும், ஃப்ரிட்ஜில் இருந்த குண்டு மல்லியை அவள் ஒற்றைப் பின்னலில் வைத்துவிட்டார்.

புடவை கட்ட பிடிக்குமா தாமரை?”

ரொம்ப ரெயாராத்தான் கட்டுவேன் பாட்டி. இன்னைக்கு உங்க பேரன் தான் கட்ட சொன்னாங்க?”

என்ன…? எம் பேரனா?” ஏதோ அதிசயம் போல வாயைப் பிளந்தார் பாட்டி.

ம்அண்ணாவைப் பாக்கணும் போல இருந்துச்சு பாட்டி. ஃபாக்டரிக்கு நானும் வரட்டுமான்னு கேட்டேன். சரின்னு சொன்னாங்க. அதான், பாட்டி மாதிரி புடவை கட்டுன்னு சொன்னாங்க.” சன்னச் சிரிப்புடன் அவள் அதைச் சொல்லி முடிக்கவும், ஜெயந்திக்குக் கண்கள் கலங்கின. அன்றொரு நாள், நிலவொளியில் தன் மடியில் படுத்துக் கொண்டு, பாட்டி மாதிரிப் பெண் வேண்டும் என்று சொன்ன பேரன் ஞாபகத்திற்கு வந்தான்

ஆண்டவாஎன் பேரனின் வாழ்க்கை இனிமேலாவது சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும்.’ என்று அவர் மனது பிரார்த்தித்துக் கொண்டது.

என்னாச்சு பாட்டி?” சட்டென்று மௌனமாகிப் போன பாட்டியைப் பார்த்துக் கேட்டாள் தாமரை.

ஒன்னுமில்லைடா, மித்ரன் ரெடியாகிட்டானா?” பேச்சை மாற்றியபடியே இட்லி, சாம்பாரை டைனிங் டேபிளில் வைத்தார் ஜெயந்தி

பாட்டி, எல்லாம் ரெடியா?” ரிஸ்ட் வாட்ச்சைக் கட்டியபடியே வந்தமர்ந்தான் மித்ரன். சட்னியுடன் வந்த தாமரையைப் பார்த்தவன் கண்கள் இமைக்க மறந்தன. பேரனின் முகத்தைப் பார்த்த ஜெயந்தி,

தாமரை, நீயே பரிமாறும்மா. நான் தாத்தா என்ன பண்ணுறாங்கன்னு பாத்துட்டு வர்றேன்.” சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்

சரி பாட்டி.” இவை எதையும் கவனிக்கும் நிலையில் தாமரை இல்லை. அவள் எண்ணம் முழுவதும் கோபத்தில் இருக்கும் தன் அண்ணனை எப்படி சமாதானம் பண்ணுவது என்பதிலேயே குறியாக இருந்தது

மனைவி ப்ளேட்டில் பரிமாறவும் தன்னை மீட்டுக் கொண்டான் மித்ரன். இந்தப் பெண் இத்தனை அழகா? அவன் மனதிற்குள் பெரிய பட்டிமன்றமே நடந்தது. இரண்டு நாட்களுக்கு முன் அவன் இருந்த மனநிலையில் சரியாக அவளைக் கவனித்திருக்கவில்லை. அந்தக் குடும்பத்திற்கு நியாயம் செய்ய வேண்டும் என்ற மனநிலை ஒன்று மட்டுமே, பிரதானமாக இருந்தது. இந்த விஷயங்கள் எதுவும் அவன் மனதில் பதியவில்லை

என்ன யோசனை?”

ம்…?”

இல்லை, எதையோ யோசனை பண்ணிக்கிட்டே சாப்பிடுற மாதிரி தோணுதே, அதான் என்னன்னு கேட்டேன்.”

எல்லாம் உன்னோட அருமை அண்ணனைப் பத்தித்தான்.” சட்டென்று பேச்சை மாற்றினான் மித்ரன்.

அண்ணா இன்னைக்கு வருவாங்கல்ல…” தனக்கும் பரிமாறிய படி உண்ண ஆரம்பித்தாள் தாமரை. அந்தக் கேள்விக்கு பதில் அவனுக்கு நிச்சயமாகத் தெரியும் என்பது போல, அவன் முகத்தையே பார்த்தபடி உண்டாள்.

வரலைன்னா அப்பிடியே விட்டுட முடியுமா? போய் ரெண்டு அறையைப் போட்டு இழுத்துக்கிட்டு வரவேண்டியதுதான்.” கொஞ்சம் காட்டமான அவன் பதிலில், அவள் முகம் சுணங்கிப் போனது. அந்த முகம் காட்டும் பாவங்களை லயித்துப் போய்ப் பார்த்திருந்தான் மித்ரன்.

கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தோடே பழகியவனுக்கு, அவளின் இயல்பான நடவடிக்கைகள் விந்தையாக இருந்தன. தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னை மேவியே நடந்து பழகியிருந்தவனுக்கு, தன்னை உதாசீனப்படுத்தும் இந்தப் பெண் புதுமையாகத் தெரிந்தாள்

உதட்டில் ஒட்டிக்கொண்ட புன்னகையோடு அவளையே பார்த்தபடி உண்டு முடித்தான் மித்ரன். இவன் முடித்துக் கொள்ளவும், அவளும் பாதியிலேயே எழுந்து கொள்ளப் போனாள். அவள் கைபிடித்துத் தடுத்தவன்,

சாப்பிட்டு முடி தாமரை, எதுக்கு பாதியிலேயே எந்திரிக்கிற?” என்றான். அவன் அதட்டலில் பயந்து இட்லியை அள்ளி வாயில் வைத்தவளை இமைக்காமல் பார்த்தான் மித்ரன். இந்தப் பெண்ணிடம் கூடிய சீக்கிரமே தான் தோற்றுப் போவது உறுதி என்று, நிச்சயமாக அவனுக்குப் புரிந்தது.

                          ***********************************

அபியும், கீதாஞ்சலியும் ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தார்கள். இன்று அபியின் காலிலிருந்த பி பி அகற்றுவதாக ஏற்பாடு. ஈஷ்வரனும், சீஃப் டாக்டரும் முழுதாக கண்காணித்தபடி இருக்க, பேன்டேஜ் அகற்றப்பட்டது. கீதாஞ்சலிதான் ஒரு பதட்டத்தோடே நின்றிருந்தாள்.

என்னம்மா, நவயுக சாவித்திரி! இன்னும் என்ன பயம்? அதான் யமனையே விரட்டி அடிச்சாச்சே.” சீஃப் டாக்டரே கீதாஞ்சலியைக் கேலி பண்ணினார். வெட்கத்தோடு புன்னகைத்துக் கொண்டாள் பெண்.

பேன்டேஜ் இல்லாத காலுக்கு ஒரு பிடிமானத்திற்காகக்ரட்சஸ்மட்டும் கொடுத்திருந்தார்கள். சீஃபின் ஆலோசனையின் பேரில்நெக் ப்ரேஸிஸ்ஐயும் ரிமூவ் பண்ணி விட்டார் ஈஷ்வரன். ஃபிஸியோதெரபிஸ்ட் கூடவே இருந்து தேவையான அறிவுரைகள் அனைத்தையும் வழங்கிக் கொண்டிருந்தார். அடுத்த வாரம் நார்மல் செக்கப்பிற்கு வந்தால் போதும் என்று சொல்லி, அபியை டிஸ்சார்ஜ் பண்ணினார்கள்

கீதாஞ்சலிக்கு சுவாசம் நேரானது போல சுகமாக இருந்தது. கார் வரை வந்த ஈஷ்வரன் ஆயிரம் அறிவுரைகள் சொன்னார்.

அபி, ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேணாம். பேசும் போது வலி இருந்தா ஃபிஸியோதெரப்பிஸ்ட் சொன்னதை கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க. அஜாக்கிரதையா இருந்துராதீங்க.” லேசாகப் புன்னகைத்தான் அபிமன்யு.

அதுக்காகப் பேசாமலேயே இருக்கணும்னு அர்த்தம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமா ட்ர்ரை பண்ணுங்க அபி.” நகர மனமேயில்லாமல் கீதாஞ்சலியைப் பார்த்தார் ஈஷ்வரன்.

சரிண்ணா, நான் பாத்துக்கிறேன். நீங்க கவலைப் படாதீங்க.” சொல்லிவிட்டு இரண்டு பேரும் காரிற்குள் ஏறினார்கள். அந்த black Audi கொஞ்ச நாட்களாக ட்ரைவர் வசமே இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு உடம்பில் எந்தக் கட்டுக்களும் இல்லாமல் சாதாரணமாக இருந்த கணவனை ஆசை தீரப் பார்த்தாள் கீதாஞ்சலி. ட்ரைவரிடம் ஏதோ ஃபோனில் டைப் பண்ணிக் காண்பித்துக் கொண்டிருந்தான் அபிமன்யு.

சரிங்கய்யா, சரிசரி…” என்று அபியின் ஃபோனைப் பார்த்தபடி தலையாட்டிக் கொண்டிருந்தான் ட்ரைவர். இவை எதையும் கருத்தில் கொள்ளாது, அமைதியாக கணவனின் அருகில் நெருங்கி உட்கார்ந்தாள் மனைவி. அவள் நெருக்கத்தில் சட்டென்று திரும்பிப் பார்த்தான் அபி. நாணங் கலந்த புன்னகையொன்று மட்டுமே பதிலாகக் கிடைத்தது.

கார் வழமைக்கு மாறாக வித்தியாசமான பாதையில் போய்க் கொண்டிருந்தது. கீதாஞ்சலிக்கு அது எந்த இடம் என்று புரியவில்லை. இருந்தாலும், எந்தக் கேள்வியும் கேட்காமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். உன்னோடு எங்கு வருவதென்றாலும் எனக்குச் சம்மதமே என்பது போல இருந்தது அவளின் நடவடிக்கை.

அந்தக் காலை நேர வெயிலுக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத வகையில், அந்த இடம் அத்தனை குளிர்ச்சியாக இருந்தது. வைக்கோல் கூரைகள் கொண்ட சின்னச் சின்னக் குடில்கள், அள்ளித் தெறித்தாற் போல ஒரு பத்துப் பதினைந்து ஆங்காங்கே அமைந்திருந்தது

அபி இறங்குவதற்கு முன்னமே ட்ரைவர் ஓடி வந்து கதவைத் திறந்து வைத்துக் கொண்டான். கீதாஞ்சலி எந்த உதவியும் பண்ண முயற்சிக்கவில்லை. அவன் போக்கிலேயே விட்டு, அமைதியாக அவனைப் பின் தொடர்ந்தாள்

இத்தனை நாளும் கைப்பிடித்து நடை பழக்கிய அம்மா, குழந்தை முதன் முதலாக உதவியின்றி நடக்கும் போது தட்டுத் தடுமாறுவதையும் ரசிப்பது போல, அவன் ஒவ்வொரு அசைவையும் ரசித்தபடியே அவனோடு நடந்தாள்.

அந்த ஒற்றைக் குடில் அவர்கள் வருகைக்காகக் காத்திருந்தது போல் தெரிந்தது. அவர்கள் போன சிறிது நேரத்திற்கு எல்லாம், ஜில்லென்று ஐஸ்கிரீம் வந்து சேர்ந்தது. அவன் கை காட்டவும், அமைதியாக இரண்டு பேரும் உண்டு முடித்தார்கள்.

அவன் எதையோ சொல்ல வாயெடுக்கவும், அவன் முகத்தையே ஆவலாகப் பார்த்தாள் கீதாஞ்சலி. வார்த்தை வருமுன் வலி வந்ததால், அபியின் முகம் லேசாகச் சுணங்கியது.

அபி…! வேணாம், வேணாம். எதுவும் பேச ட்ர்ரை பண்ணாதீங்க. வலிச்சுதுன்னா வருத்திக்காதீங்க.” அவன் பக்கத்தில் சட்டென்று நகர்ந்து உட்கார்ந்தவள், அவன் முகத்தைப் பற்றிக் கொண்டாள். குரலில் வேதனை தெரிந்தது.

ஞ்சலி…” அவன் முதல் வார்த்தை மெதுவாக வெளியே வந்தது. குரல் கரகரத்துப் போயிருந்தது. பேசுவது அபி தானா என்று ஆச்சரியமாகப் பார்த்தாள் கீதாஞ்சலி.

அபி…!”

அஞ்சலி.” இப்போது வார்த்தை கொஞ்சம் வசப்பட்டது.

அபி…!”

அஞ்சலி…” அவன் முழுதாக அவள் பெயரைச் சொல்லி முடிக்க, சந்தோஷத்தின் உச்சத்திற்குப் போனாள் பெண். சுற்றம் மறந்து போனது

அபிஅபிஅபி…” அவன் முகம் முழுவதும் முத்தம் பதித்தவள், உலகத்தையே வென்று விட்ட சந்தோஷத்தோடு அவனை இறுகக் கட்டிக் கொண்டாள். கண்கள் இரண்டும் கலங்கிப் போயின

அபிக்கு லேசாக வலி தெரிந்த போதும் சமாளித்துக் கொண்டான். முழுதாக ஐந்து வாரங்கள் கடந்து போயிருந்தன. மனதிற்குள் இருந்த வலி, வேதனை எதையும் வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும், உள்ளுக்குள் ஜுவாலை தகித்துக் கொண்டுதான் இருந்தது. சிந்தனையை உதறிவிட்டு, நிகழ்காலத்திற்கு வந்தான் அபிமன்யு.

தான் மட்டுமே அவள் உலகம் என நினைத்து வாழ்பவளை அபியும் அணைத்துக் கொண்டான். இந்த ஐந்து வாரங்களில் தன் பெற்றோரைக் கூட மறந்து வாழும் அவளை நினைத்த போது பெருமையாக இருந்தது

அஞ்சலி…” குரல் அத்தனை சத்தமாக வெளியே வரவில்லை. அவனிலிருந்து விலகியவள்,

சொல்லுங்க அபி.” என்றாள். முகத்தில் கண்ணீரோடு புன்னகையும் கலந்திருந்தது.

ஃபாக்டரிக்குப்போகலாமா…?” அந்தக் கேள்வியில் கீதாஞ்சலி கொஞ்சம் நிதானித்தாள்.

இன்னைக்கே போகணுமா அபி? வீட்டுக்குப் போகலாமே. அத்தை, மாமா, தாத்தா, பாட்டி, எல்லாரும் நீங்க பேசுறதைப் பாத்தா சந்தோஷப்படுவாங்க இல்லை.”

இல்லைஃபர்ஸ்ட் டைம்பேசும் போதுநீமட்டும் தான்பக்கத்துலஇருக்க…” கொஞ்சம் சேர்ந்தாற்போல பேசவும் அபிக்கு வலித்தது.

புரியுதுபுரியுது அபி. நீங்க கஷ்டப்படாதீங்க. ஃபாக்டரிக்கு இன்னைக்கே போய் என்ன பண்ணப் போறீங்க அபி? நாளைக்கு…” அவளை முடிக்க விடாமல் அவன் தலை அசைந்தது.

கொஞ்சம்கணக்கு வழக்குபாக்கணும் அஞ்சலி…” அதைச் சொல்லும் போது அபியின் கண்களில் ரௌத்திரம் தெரிந்தது.

அபி…!” கணவன் முகத்தையே பார்த்திருந்த கீதாஞ்சலி விக்கித்துப் போனாள்.

 

error: Content is protected !!