MM-22

மயங்காதே மனமே 22

கதிரின் கால்கள் அந்த வீட்டு வாசலை மிதிக்கவே தயங்கின. ராஜேந்திரனின் வீடு. அங்கிருந்த தாத்தா, பாட்டி, மித்ரன் சார் அத்தனை பேரும் அவனோடு அவ்வளவு இதமாக நடந்து கொண்டாலும், அதையும் தாண்டி அது ராஜேந்திரனின் வீடு என்பது ஒன்று மட்டுமே அவன் கருத்தினில் நிறைந்து நின்றது.

என்றைக்குமே அவன் இங்கு வரப் பிரியப்பட்டதில்லை. தவிர்க்க முடியாத ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் வந்திருக்கிறான். அப்போதும் வீட்டு வாசலோடு வேலையை முடித்துக்கொண்டு போய்விடுவான். இன்று என்னவோ தெரியவில்லை. மித்ரன் காலையிலேயே இவனை அழைத்து வீட்டுக்கு வரச்சொல்லி இருந்தான்

மித்ரன் ஏதோ ஒரு வேலை விஷயமாக வெளியூர் போயிருந்தான். கதிரிடமும் ஒரு தகவலும் சொல்லவில்லை. திடீரென்று இரண்டு நாட்களுக்கு முன் கால் பண்ணி

வெளியூர் போகிறேன், ஃபாக்டரியைப் பாத்துக்கொள்.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பியிருந்தான். இன்று காலையில் திரும்பவும் கால் பண்ணி,

கதிர் கொஞ்சம் வீடு வரைக்கும் வந்து போ. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் வீட்டுக்கு வந்திருவேன்.” என்று சொல்லி இருந்தான்.

தயங்கித் தயங்கி வாசலில் நின்ற கதிரை முதலில் பார்த்தது ஜெயந்தி தான். வாசலுக்கு விரைந்து வத்தவர்,

கதிர், என்னப்பா அங்கயே நின்னுட்டே? உள்ள வா.” என்றார்.

இல்லை பாட்டி, மித்ரன் சார் கால் பண்ணி வரச் சொன்னாங்க. அதான்…” முடிக்காமல் தயங்கினான் கதிர்.

மித்ரன் ரெண்டு நாளா ஊர்லயே இல்லையேப்பா?”

தெரியும் பாட்டி. இப்போதான் கால் பண்ணி வரச் சொன்னாங்க.” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே தாத்தா மதுராந்தகனும் வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டார். வாசலில் நின்ற கதிரைப் பார்த்தவர்,

அடடே! கதிர், உள்ள வாப்பா. என்ன அங்கயே நின்னுட்ட?” தாத்தாவின் கேள்வியில் சங்கடப்பட்டவன், அதை மறுக்க இயலாது உள்ளே வந்தான்.

திருமணம் ஒன்றிற்குப் போவதற்காக தயாராகிக் கொண்டு அப்போதுதான் ரூமை விட்டு வெளியே வந்தார்கள் ராஜேந்திரன் தம்பதியினர். கதிரைப் பார்த்த மாத்திரத்தில் ராஜேந்திரனின் முகம் சங்கடத்தில் திரும்பிக் கொண்டது. அவர் மனைவியின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தன.

மித்ரனைத் தவிர அந்த வீட்டில் இருந்த அத்தனை பேருக்கும் கதிர் யார் என்ற ரகசியம் தெரிந்திருந்தது. ஆரம்பத்தில் அதற்குப் பயங்கரமான எதிர்ப்பு தோன்றி இருந்தாலும், மதுராந்தகனின் உறுதியைப் பார்த்து விட்டு வாயை மூடிக் கொண்டார்கள்.

சூழ்நிலையின் கனத்தைக் கலைத்துக் கொண்டு வந்து நின்றது மித்ரனின் கார். எவ்லோரும் வாசலைப் பார்க்க, கதிருக்கு அதுவரை சிக்கிக் கொண்டு தவித்த மூச்சு லேசாக வெளியேறியது.

இதோ, மித்ரனே வந்துட்டானே கதி…” பாட்டி சொல்ல நினைத்ததை முழுதாக முடித்திருக்கவில்லை. எல்லோரும் வாய் பிளந்து மித்ரனையே பார்த்தபடி இருந்தார்கள். ஏனென்றால் மித்ரனோடு காரிலிருந்து கூட இறங்கியது தாமரை, கதிரின் தங்கை.

தாமரை, நீ இங்க என்ன பண்ணுற?” ஆச்சரியமாகக் கேட்ட அண்ணனின் கேள்வியில் தலை குனிந்தாள் தங்கை. அப்போதுதான் தன் உடன் பிறப்பை ஊன்றிப் பார்த்தான் கதிர்.

தாமரையின் கழுத்தைப் புதிதாக அலங்கரித்திருந்தது அந்த மஞ்சள்க் கயிறு. புதிதாகக் கோர்க்கப்பட்டிருந்த அந்தத் திருமாங்கல்யத்தில் கதிரின் சப்த நாடியும் அடங்கியது. நிதர்சனத்தைப் புரிந்து கொள்ள ஓரிரு நிமிடங்கள் எடுத்துக் கொண்டவன், தன் தங்கையை நோக்கிப் பாய்ந்து வந்தான்.

கதிரின் உள் நோக்கத்தை சட்டென்று புரிந்து கொண்ட மித்ரன், தாமரைக்கு முன்னால் வந்து நின்று அவளை முழுதாக மறைத்துக் கொண்டான். ஆத்திரத்தின் உச்சத்தில் மித்ரனைத் தள்ளிவிட முயன்றான் கதிர். ஆனால் அது நடக்கவில்லை.

தள்ளிப் போங்க சார். அவ என்ன காரியம் பண்ணி இருக்கா? எவ்வளவு தைரியம் இருந்தா இந்தளவுக்கு துணிஞ்சிருப்பா?” 

கதிர், நான் சொல்லுறதைக் கொஞ்சம் பொறுமையாக் கேளு.”

உங்களுக்கும் எனக்கும் இனி எந்தப் பேச்சும் இல்லை சார். நான் தாமரைக் கிட்ட பேசிக்கிறேன், நீங்க விலகுங்க.”

இனி விலகுற ஐடியா எனக்கு இல்லை கதிர். தாமரையைப் பாதிக்கிற எந்த விஷயமா இருந்தாலும்அது இனி என்னைத் தாண்டித்தான் அவகிட்ட போகணும்.” இதைச் சொல்லும் போது மித்ரனின் கண்கள் ஒரு முறை தன் பெற்றோர்களைத் தொட்டு மீண்டது.

மித்ரனின் பேச்சில் கதிர் தலை குனிந்து கொண்டான். முகத்தில் அத்தனை வலி தெரிந்தது. இப்படியொரு திருப்பத்தை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. யாரும் எதுவும் சொல்லுமுன் மித்ரனே வாய் திறந்தான்.

நான் சொல்லப் போற விஷயம் உங்களுக்கெல்லாம் அதிர்ச்சியா இருக்கலாம். இருந்தாலும் அது தான் உண்மை. உங்களுக்குப் பிடிக்குதோ? பிடிக்கலையோ? எனக்கு அதைப் பத்திக் கவலை இல்லை. இந்தப் பொண்ணுதான் என்னோட வைஃப். இன்னைக்கு காலையில முறைப்படி கோவில்ல வைச்சு தாலி கட்டி, ரெஜிஸ்டரும் பண்ணி இருக்கேன்.” அவன் சொல்லி முடித்த போது ராஜேந்திரன் ஒரு முறை கண்களை இறுக மூடித் திறந்தார். சுலோச்சனாவின் முகம், ஏதோ தீண்டத் தகாததைத் தீண்டிவிட்டது போல அருவருப்பைக் காட்டியது. மித்ரன் எதையும் கண்டு கொள்ளவில்லை.

பாட்டீ…” அந்த விழிப்பில் ஜெயந்தி பேரனைத் திரும்பிப் பார்த்தார்.

இங்க யாரு என்ன சொன்னாலும் எனக்கு அதைப் பத்திக் கவலையில்லை. நீங்க சொல்லுங்க, நான் பண்ணினது தப்பா?” அத்தனை பேரின் கண்களும் பாட்டியை நோக்கித் திரும்பியது. சற்று நேரம் அமைதியாக இருந்த ஜெயந்தியின் தலை இடம் வலமாக அசைந்தது

அத்தை…! ஆத்திரத்தோடு குறுக்கிட்டார் சுலோச்சனா.

எம் பேரன் ஒரு உருப்படியான காரியம் பண்ணி இருக்கான். அவனுக்கும், அவனை சாந்தவங்களுக்கும் இந்த வீட்டுல மரியாதை கிடைச்சுதுன்னா நாங்க இங்க இருப்போம். இல்லைன்னாஇந்த ஜெயந்தி ஒன்னுக்கும் வழியில்லாதவ இல்லை. கிராமத்துல வீடு, தோப்பு, காணி, பூமின்னு எல்லாம் இருக்கு.” முழுதாக முடிக்காமல் அத்தோடு நிறுத்தினார் பாட்டி

சுலோச்சனா திடுக்கிட்டுப் போனார். இது வரை ஜெயந்தி இப்படிப் பேசியவர் கிடையாது. தான் எது செய்தாலும் அதற்கு மறு வார்த்தை பேச மாட்டார். அவரே இப்படிப் பேசவும், சட்டென்று மூண்ட கோபத்தில் காரை நோக்கி நடந்து விட்டார். மனைவியைத் தொடர்ந்து ராஜேந்திரனும் வெளிநடப்புச் செய்து விட்டார்.

அதற்கு மேல் தான் மட்டும் அங்கு நிற்பதில் என்ன லாபம் இருக்கின்றது என்று கதிரும் திரும்பி வாசலை நோக்கி நடந்தான்

அண்ணா…” அழைத்தபடியே ஓடிப் போய் கதிரின் கைகளைப் பற்றிக் கொண்டாள் தாமரை. கதிர் தன் கைகளை உதறிய வேகத்தில் தொப்பென்று நிலத்தில் விழுந்தவள், நகரப்போன அவன் காலை இறுகப் பற்றிக் கொண்டாள்.

தப்புதான் அண்ணா. உங்கிட்ட சொல்லாம நான் இப்பிடிப் பண்ணினது தப்புதான். என்னை மன்னிச்சிரு அண்ணா.” தன் காலடியில் கிடந்து கதறிய தங்கையைத் திரும்பிப் பார்த்தான் கதிர்

நீ எங்கிட்ட சொல்லாம வேற யாரையாவது கல்யாணம் பண்ணி இருந்தாக் கூட நான் இந்தளவுக்குக் கவலைப் பட்டிருக்க மாட்டேன். ஆனா, இந்த வீட்டுல வந்து வாழணும்னு நினைச்சிருக்கியே, உம் புத்தியை அடமானம் வைச்சுட்டியா? உனக்கு இங்க என்ன மரியாதை கிடைக்கும்னு எதிர்பாக்குற? நாயை விடக் கேவலமா பாப்பாங்க.” கதிரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் குலுங்கி அழுதாள் தாமரை.

நம்ம அம்மாதான் நிம்மதியா ஒரு வாழ்க்கை வாழலை. நீயாவது நிம்மதியா வாழணும்னு எவ்வளவு கனவு கண்டேன். கடைசியிலஎல்லாத்தையும்…” அதற்கு மேலும் பேச முடியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டான் கதிர்.

அங்கேயே இருந்த மற்ற மூன்று பேரும் அதுவரை எதுவும் பேசவில்லை. கதிரை நோக்கி வந்த மித்ரன் அவன் காலடியில் கிடந்து அழுத தன் மனைவியைத் தூக்கி நிறுத்தினான்

கதிர்…” 

ஒன்னும் பேசாதீங்க சார். உங்க மேல ரொம்ப மரியாதை வைச்சிருந்தேன்…” வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவன், எதுவும் பேசாமல் வெளியேறிவிட்டான்

மனைவியின் கண்களைத் துடைத்து விட்டான் மித்ரன். தாத்தாவும், பாட்டியும் அசையாமல் அப்படியே சோஃபாவில் அமர்ந்த படி இருந்தார்கள். தாத்தாவைப் பார்த்த மித்ரன்,

சாரி தாத்தா.” என்றான். கைகள் இரண்டையும் சோஃபாவில் ஊன்றியபடி அமர்ந்து இருந்த மதுராந்தகன் பேரனை நிமிர்ந்து பார்த்தார்.

நீ பண்ணின காரியம் தப்புன்னு நான் சொல்ல மாட்டேன் மித்ரா. ஆனா இப்போ கதிர் அவன் தங்கையைப் பாத்துக் கேட்ட கேள்வி நியாயம் இல்லையா?”

நியாயம் தான். நானும் அதை இல்லேங்கலை தாத்தா. கதிர் கேக்குறதுக்கு இப்போ என்னால பதில் சொல்ல முடியாது. ஆனா, அவன் தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கையை குடுக்குறது மூலமா அவனுக்கு என்னால பதில் சொல்ல முடியும்.” திடமாகச் சொன்ன பேரனின் தோள்களில் தட்டிக் கொடுத்துவிட்டு உள்ளே போய்விட்டார் மதுராந்தகன்.

பாட்டியின் கண்ணசைவில் தாமரையை மாடிக்கு அழைத்துச் சென்றான் மித்ரன். அந்தப் போர்ஷனுக்கு யாரும் வருவதில்லை. அங்கு எப்போதும் மித்ரனின் ஆட்சிதான். மாடியில் இருந்த லிவிங் ஏரியாவில் அவளை உட்காரச் சொன்னவன் தானும் அமர்ந்து கொண்டான்.

தாமரை…” கண்களைத் துடைத்த படி இருந்தவள் அவன் அழைக்கவும் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.

ம்…”

இதையெல்லாம் எதிர்பாத்துத் தானே கல்யாணம் பண்ணினோம்?”

ம்ஆனாலும்அண்ணா…” அவள் உதடு பிதுங்கியது.

சரி, சரிஎனக்குப் புரியுதும்மா. அவன் கோபத்துலயும் ஒரு நியாயம் இருக்கில்லையா? நாம பொறுத்துத்தான் போகணும்.” 

ம்…” குனிந்தபடியே தலையாட்டியவளைப் பார்த்த போது சிரிப்பு வந்தது மித்ரனுக்கு. அவள் அமர்ந்திருந்த சோஃபாவில் அவளுக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

தாமரைஎல்லாத்துக்கும் இப்பிடித் தலையாட்டிட்டே இருக்கக் கூடாது. உம் மனசுல தோணுறதை வாய்விட்டுப் பேசணும், புரியுதா?” 

நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்களா?”

ம்ஹூம்மாட்டேன். இந்த வீட்டுல உனக்கு முழு சுதந்திரம் இருக்கு. நீ என்னோட வைஃப். உனக்குப் பிடிக்காததை யாரு பேசினாலும் கேட்டுக்கிட்டு இருக்காதே. அது நானா இருந்தாலும் சரிதான்.”

அது மரியாதையா இருக்காது. சட்டுன்னு அப்பிடியெல்லாம் நடந்துக்க முடியாது.” 

மரியாதை பாத்து அமைதியா நடந்து உங்கம்மா எதை சாதிச்சாங்க?” அந்தக் கேள்வியில் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் பெண்.

எங்கம்மாவை உங்களுக்குத் தெரியுமா? நீங்க அவங்களைப் பார்த்திருக்கீங்களா? அவள் ஆர்வத்தில் நெஞ்சு கனத்தது மித்ரனுக்கு. இல்லயென்று தலையாட்டினான்.

ஏன்? உனக்கு ஞாபகம் இல்லையா தாமரை?”

இல்லைங்க. அப்போ எனக்கு பத்து வயசாம், அண்ணாக்கு பதினைஞ்சு. அண்ணாக்கு எல்லாம் ஞாபகம் இருக்காம், ஒன்னொன்னா சொல்லும். எனக்குத் தான் எதுவுமே ஞாபகம் இல்லை.”

ரொம்பச் சின்னப் பொண்ணு இல்லையா? அதனால இருக்கும். ஆனா, பாட்டி பாத்திருக்காங்களாம்.”

அப்பிடியா…!”

ம்இங்கப் பாரும்மா, அதையெல்லாம் இப்ப நினைச்சு மனசை வருத்திக்கக் கூடாது. வாஉனக்கு வீட்டை சுத்திக் காட்டுறேன்.” பேச்சை மாற்றியவன் அவளை அழைத்துக் கொண்டு அவன் ரூமிற்கு வந்தான்.

இது என்னோட ரூம். இதுக்குப் பக்கத்துல இன்னொரு ரூம் இருக்கு, அதை நீ யூஸ் பண்ணிக்கலாம்.” சொல்லிவிட்டு அவளை அந்த ரூமிற்கு அழைத்துச் சென்றான்.

பிடிச்சிருக்கா?” கதவைத் திறந்து உள்ளே வந்தவன் அவளைப் பார்த்துக் கேட்டான். ரூமைச் சுற்றிக் கண்ணைச் சுழல விட்டவள் மலைத்துப் போனாள். அந்தக் கண்களின் பாவனையில் மித்ரன் கொஞ்ச நேரம் இமைக்க மறந்தான்.

அடேங்கப்பா! என் ஹாஸ்டல் ரூம் இதுல கால்வாசி கூட வராது.” அவள் பேச்சில் லேசாகப் புன்னகைத்தான் மித்ரன்.

ஏதாவது பிடிக்கலைன்னா கண்டிப்பா சொல்லணும். உடனேயே சேன்ஞ் பண்ணிடலாம் என்ன?”

இல்லையில்லை, இதுவே ரொம்ப அழகா இருக்கு.” அந்த ரூமின் ஒவ்வொரு இடத்தையும் ஆராய்ந்தவள், கடைசியாக அந்தக் கதவிற்குப் பக்கத்தில் வந்து நின்றாள்.

பாத்ரூம் அங்க இருக்கு. இது என்ன இன்னொரு டோர்?” மித்ரனின் அறையும், இந்த அறையும் அடுத்தடுத்தாற் போல இருந்தன. இரண்டிற்கும் இடையில் அந்தக் கதவு இருந்தது.

அதுஅது சும்மா வச்சிருப்பாங்களா இருக்கும்.” சற்றே திணறியவன் பேச்சை மாற்றினான்.

தாமரை, நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு ரெடியா இரு. ஈவ்னிங் நாம வெளியே போய் சின்னதா ஒரு ஷாப்பிங் பண்ணலாம்.”

இப்போ எங்கபோறீங்க?”

ஃபாக்டரிக்குப் போகணும்மா. ரெண்டு நாளா நான் போகல்லை இல்லையா?”

ம்ஆமா. நீங்கதப்பா எடுக்கலைன்னாநான் உங்க பாட்டி கூடபோய் இருக்கட்டுமா?” தயங்கித் தயங்கி அவள் கேட்ட விதத்தில், அவளை ஆழ்ந்து பார்த்தவன் அவளருகில் சென்று அந்தக் கைகளைப் பற்றிக் கொண்டான்

ஹேய்தாமரை, நான்தான் சொன்னேன்லஎல்லாத்துக்கும் பர்மிஷன் கேட்டுட்டு நிக்கக் கூடாது. இது உன்னோட வீடு, நீ இங்க என்ன வேணும்னாலும் பண்ணலாம். புரியுதா?”

ம்…” அவன் அருகாமை அவளுக்கு லேசாகத் தைரியம் கொடுத்தது

தனக்கு மிக அருகில் தெரிந்த அந்த முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொணடிருந்தான் மித்ரன். மேக்கப் இல்லாத நிர்மலமான முகம் அவள் அழகி என்று அடித்துச் சொன்னது. அவள் மேனியின் நிறம் ஏதோ தங்கத்தைக் குழைத்துப் பூசினாற் போல இருந்தது. அந்த முகத்தில் அப்படியொரு குழந்தைத்தனம்

இப்படியொரு தங்கைக்குச் சொந்தக் காரன், கீதாஞ்சலியைப் பாதுகாத்ததில் ஆச்சரியமே இல்லை என்று இப்போது மித்ரனுக்குத் தோன்றியது. ஏதோ ஒன்று உந்த அவள் நெற்றியில் இதழ் பதித்தான்

ஃபைவ் மினிட்ஸ்ல ரெடியாகி வந்திர்றேன். கொஞ்சம் வெயிட் பண்ணுடா.” என்றவன், அவள் சுட்டிக் காட்டிய கதவைத் திறந்து கொண்டு அவன் ரூமிற்குள் போனான்

ஐந்தே நிமிடங்களில் குளித்து முடித்து, அவசர அவசரமாக ரெடியாகி வந்தவனைப் பார்த்தாள் தாமரை. லைட் ப்ளூ ஷேர்ட்டும், க்ரே கலர் ட்ரௌசரும் அணிந்திருந்தான். லேசாகச் சுருண்டிருந்த தலைமுடியை ஜெல்லால் அடக்கி இருந்தான்

கீழே போலாமா தாமரை?” ஃபைல்களை சரிபார்த்துக்கொண்டே வந்தவன் இவள் பார்வையைக் கவனிக்கவில்லை. இருவரும் கீழே இறங்கி வந்தார்கள். வீடே நிசப்தமாக இருந்தது

பாட்டீ…” மித்ரனின் குரலில் சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தார் ஜெயந்தி

என்ன மித்ரா?” 

பாட்டி, நான் ஃபாக்டரி வரைக்கும் போய்ட்டு வந்திர்றேன்.”

இன்னைக்கே போகணுமாப்பா? புதிய இடம், நீ கூட இருந்தா தாமரைக்கு கொஞ்சம் அனுசரணையா இருக்குமில்லையா?” பாட்டியின் விளக்கத்தில் சங்கடமாக மனைவியைப் பார்த்தான் மித்ரன்.

பரவாயில்லை பாட்டி, அதான் நீங்க இருக்கீங்களே. வேலை கெட்டுப்போக வேணாம். ரெண்டு நாளா ஃபாக்டரிக்குப் போகலைன்னு சொன்னாங்க.” அவளின் பதிலில் பாட்டியைப் பார்த்து லேசாகச் சிரித்த மித்ரன் கிளம்பிவிட்டான்.

வாம்மா, சமைப்பியா? எதெல்லாம் பிடிக்கும் உனக்கு?” சம்பிரதாயமாகக் கேட்ட ஜெயந்தி சமையலறைக்குள் நுழைந்தார்.

சுமாரா சமைப்பேன் பாட்டி. ஹாஸ்டல்ல இருந்த வரைக்கும் ஒன்னும் தெரியாது. அண்ணா சம்பாதிக்க ஆரம்பிச்ச அப்புறமா, வீடு வாடகைக்கு எடுத்தாங்க இல்லையா? அதுக்கப்புறமா கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன்.”

உன்னோட அண்ணன் தான் பெரிய ரோஷக்காரன் ஆச்சே. தாத்தா அப்போவே வீடு வாங்கித் தரேன்னு சொன்னாங்க. ஒத்துக்கவே மாட்டேன்னுட்டான்.”

நீங்க இவ்வளவு பண்ணினதே பெரிய விஷயம் பாட்டி.” அவள் சொன்ன விதத்தில் அந்தச் சின்னப் பெண்ணின் கரங்களைப் பிடித்துக் கொண்டார் ஜெயந்தி.

தாமரைஎங்க மேல உனக்கு கோபம் இல்லையே…?” 

ஏன் பாட்டி இப்பிடிக் கேக்குறீங்க? கோபம் இருந்திருந்தா, எங்கண்ணா தாத்தா கேட்டதும் உங்க பேரன் கிட்டயே வேலைக்கு வந்திருப்பாங்களா?” 

ம்அதுவும் சரிதான். மித்ரனை எப்போ பாத்தே? திடீர்னு என்ன, இப்பிடியொரு முடிவு?” அந்தக் கேள்வியில் தாமரையின் முகம் லேசாகச் சிவந்தது.

ரெண்டு நாள் முன்னாடி நான் வேலை செய்யுற கம்பெனிக்கு வந்திருந்தாங்க. நிறையப் பேசினாங்க. அவங்க பேசினது எனக்கு நியாயமாத் தோணிச்சுஅதான்…”

சரிம்மா, அது உங்க அந்தரங்கம், உரிமை. அதுல நான் தலையிட மாட்டேன். இருந்தாலும் கதிருகிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்திருக்கலாமோன்னு தோணுது.”

நானும் சொன்னேன் பாட்டி. உங்க பேரன் தான், சொன்னா ஒத்துக்க மாட்டான். அப்புறமா சமாதானம் பண்ணிக்கலாம்னு சொன்னாங்க.” 

அவன் அப்பிடித்தாம்மா, அவன் நினைச்சதை நடத்திட்டுத்தான் மத்த வேலை பாப்பான். கட்டுப்பாடு இல்லாம வளந்துட்டானே தவிர நல்லவன் தாம்மா…” இதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியாமல் நிறுத்தினார் பாட்டி. தாமரை அவர் முகத்தைப் பார்த்துச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.

அன்று முழுவதும் பாட்டியுடனேயே தாமரையின் பொழுது கழிந்தது. ஈவ்னிங் வருவதாக சொல்லி இருந்த மித்ரன், கொஞ்சம் பிஸியாக இருப்பதால் வர முடியாது என்று கால் பண்ணி இருந்தான். சாப்பாட்டிற்கும் வரவில்லை. ட்ரைவரிடம் சாப்பாட்டைக் கொடுத்து அனுப்பினார் பாட்டி.

வேலை அதிகமானா இப்பிடித்தாம்மா. எனக்குப் பழகிப் போச்சு.” சொன்ன பாட்டியைப் பார்த்து சிரித்தாள் தாமரை. ராஜேந்திரனும், மனைவியும் கூட வீட்டுக்கு வரவில்லை. சுலோச்சனாவின் தாய் வீட்டில் இரண்டு நாள் தங்கப் போவதாக தகவல் வந்திருந்தது

தன்னுடைய உடைகளை அவள் ரூமிலிருந்த வோர்ட்ரோபில் அடுக்கி வைத்தாள் தாமரை. வேறு மாற்றங்கள் எதுவும் செய்யத் தேவையில்லாத வகையில் கனகச்சிதமாக இருந்தது ரூம்.

மேலே ஹாலிலிருந்த டீ வியில் கொஞ்ச நேரம் பழைய பாடல்கள் பார்த்துக் கொண்டிருந்தவள், நேரம் பத்தை நெருங்கவும் தூங்குவதற்காக ரூமிற்குள் போனாள். மித்ரன் இன்னும் வந்திருக்கவில்லை. அவனுக்காகக் காத்திருந்தவளை வற்புறுத்தி ஜெயந்தி உண்ண வைத்திருந்தார்.

ரூமிற்குள் வந்து படுத்துக் கொண்டாள் பெண். ஏதாவது படிக்க இருந்தால் நன்றாக இருக்கும் போல தோன்றியது. அவள் சிந்தனையைக் கலைத்தது பக்கத்து ரூமின் நடமாட்டம். பாத்ரூமில் நீர் கொட்டும் சத்தம் கேட்டது. எழுந்து போய் பேசுவதா, வேண்டாமா? என்ற தயக்கத்திலேயே அப்படியே படுத்திருந்தாள் தாமரை

சட்டென்று அவள் ரூமில் விளக்கெரியவும், எழுந்து உட்கார்ந்து கொண்டாள். இரண்டு ரூமிற்கும் இடையில் இருந்த கதவைத் திறந்தபடி நின்றிருந்தான் மித்ரன்.

சாரி தாமரை தூங்கிட்டியா?”

இல்லையில்லைசாப்பிட்டீங்களா?”

ம்ஆச்சு. எனக்காக வெயிட் பண்ணுற வேலையெல்லாம் வைச்சுக்கக் கூடாது. பசிச்சா சாப்பிட்றணும், புரியுதா?”

ம்பாட்டி பாவம்வயசானவங்கஅதான்…”

…! அப்பிடியொன்னு இருக்கோ? இனிமே கவனத்துல எடுத்துக்கிறேன்.” சொல்லிய படியே அவளருகில் வந்து உட்கார்ந்தான்.

ரொம்ப வேலையோ?”

அதெல்லாம் ஒன்னுமில்லை, வழமை போலதான்…” எதையோ அவன் சொல்லத் தயங்குவது போல தெரிந்தது தாமரைக்கு.

என்னாச்சு? சொல்லக் கூடியதா இருந்தா சொல்லுங்க?” அவள் கேள்வியில் மெதுவாகச் சிரித்தான் மித்ரன்.

அதை இப்பிடிக் கேக்கக் கூடாது தாமரை. என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்கன்னு கட் அன்ட் ரைட்டா கேக்கணும் புரியுதா?” அவன் சொல்லிக்காட்டிய விதத்தில் இப்போது தாமரை சிரித்தாள்.

செம டயர்ட் இன்னைக்கு.” சொன்னபடியே அந்த பெட்டில் அவனும் சாய்ந்து கொண்டான். எழுந்து உட்கார்ந்திருந்தவளும் தலை சாய்த்துக் கொண்டாள்.

சாரிம்மா, இன்னைக்கு ஈவ்னிங் வரமுடியலை. வேலை இருந்துது. நாளைக்கு போகலாம் என்ன?”

அது பரவாயில்லை. அண்ணாவைப் பாத்தீங்களா?” அந்தக் குரலில் லேசாகத் தயங்கினான் மித்ரன்.

அதால தான் லேட் ஆகிடுச்சு தாமரை. ரெஸிக்னேஷன் லெட்டர் அனுப்பி இருந்தான். வந்த ஆத்திரத்துக்கு ஓங்கி ஒரு அறை விடத்தான் எண்ணம் வந்திச்சு. கட்டுப்படுத்திக் கிட்டேன். இப்போ அவனைப் பாத்துட்டுத்தான் வந்தேன்.”

உங்களை ஏதாவது திட்டினாங்களா?”

திட்டினாத்தான் பரவாயில்லையே, அமுக்குணி மாதிரி இருக்கான். நம்ம பிரச்சினை வேற, ஃபாக்டரி வேற, மரியாதையா நாளைக்கு வேலைக்கு வந்து சேருன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்.”

என்ன சொன்னாங்க?”

அதெல்லாம் வருவான்.”

நாளைக்கு நானும் உங்க கூட ஃபாக்டரிக்கு வரட்டுமா?”

தாராளமா, இதுக்கெல்லாம் கேப்பியா நீ?” சொல்லிவிட்டு, கையைத் தலைக்கு அணையாகக் கொடுத்தபடி கால்நீட்டிப் படுத்துக் கொண்டான்

ஏங்க…?”

ம்…”

கீதாஞ்சலி அழகா இருப்பாங்களா?” அந்தக் கேள்வியில் சற்றே நிதானித்த மித்ரன், மனைவியைத் திரும்பிப் பார்த்தான். முகத்தில் பாதி தலையணைக்குள் புதைந்திருக்க, மீதி கணவனை ஆவலாகப் பார்த்தபடி இருந்தது.

இந்தக் கேள்வி இப்போ ரொம்ப முக்கியமா தாமரை?”

இல்லைநேத்துல இருந்து கேக்கணும்னு தோனிச்சுஅதான்.”

உங்கண்ணனைக் கேளு. பாசமலரைப் பத்தி வண்டி வண்டியாச் சொல்லுவான்.”

அய்யோவெளக்குமாத்தாலேயே அடிப்பான்.”

அப்பிடியா? ஏன்?” மித்ரனின் குரலில் சிரிப்பிருந்தது.

இந்த வண்டவாளம் எல்லாம் தெரிஞ்சிருந்தும் இவனைக் கடட்டிக்கிட்டயான்னு கேப்பானே.” இப்போது மனைவியும் புன்னகைத்தாள்.

ஹாஹாஆமா, நானே கேக்கணும்னு நினைச்சேன். எல்லாம் சொன்னத்துக்கு அப்புறமும் எப்பிடி சம்மதிச்சே?”

இதுக்கு பதில் நான் இன்னொரு நாள் சொல்லுறேன். இப்போ நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லுங்க?” பிடிவாதமாகக் கேட்டவளின் பக்கம் திரும்பிப் படுத்தான் மித்ரன். கண்கள் இரண்டும் மனைவியின் முகத்தை மொய்த்தது

அழகா இருப்பாங்க தான்ஆனாஉன்னை விட அழகுன்னு சொல்ல மாட்டேன்.”

பொய் பேசுறீங்க.”

நான் உங்கிட்ட பொய் சொல்லியிருக்கேனா தாமரை?” அந்தக் குரலின் ஈர்ப்பில் அண்ணார்ந்து பார்த்தவள்,  

இல்லை.” என்றாள்.

அப்போ இப்ப மட்டும் பொய் சொல்லுவேனா?” அவன் கண்களையே இமைக்காமல் பார்த்தவள் புன்னகைத்தாள். அந்த வசீகரத்தில் மெய்மறந்து போனான் மித்ரன்.