nk4

nk4

நிலவொன்று கண்டேனே 4

யுகேந்திரனுக்கு உலகமே இருண்டாற் போலத் தோன்றியது. சந்தேகம் இல்லாமல் அவர்கள் காட்டுவது நித்திலா வசிக்கும் வீடுதான். சப் கலெக்டரின் வாசஸ்தலம் அவனறியாததா என்ன?

மனம் கிடந்து பதறினாலும், அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. அந்தப் பெண்ணின் ஃபோன் நம்பரைக் கூட வாங்கி வைக்கவில்லையே…

அப்போதுதான் சட்டென்று பொறி தட்டியது. தாத்தாவோடு பேசியதாகச் சொன்னாளே? நேரத்தையும் பொருட்படுத்தாது, தாத்தாவை அழைத்தான்.

“யுகேந்திரா! என்னப்பா இந்த நேரத்துல?”

“தாத்தா! சப் கலெக்டர் நம்பர் உங்க கிட்ட இருக்கா?”

“என்னாச்சுப்பா? ஏன் பதட்டமா பேசுற?”

“நியூஸ்ல என்னென்னவோ போடுறாங்க. ஸ்கூட்டி ஒன்னு பத்தி எரியுது.” அவன் குரல் பதறியது.

“சரி சரி, கொஞ்சம் அமைதியா இரு. நான் நம்பர் அனுப்புறேன் உனக்கு.”

“தாத்தா, நான் இப்போ அங்க போகட்டுமா?” பேரனின் கேள்வியில் தாத்தா சற்று யோசித்தார்.

“யுகேந்திரா… இந்நேரத்துக்கு அங்க போலீஸ் வந்திருக்கும். மீடியாக் காரங்களும் வந்திருப்பாங்க. இப்போ நீ போனா, வீண் பேச்சுக்களுக்கு இடம் வகுக்கும். பதவியில இருந்தாலும், அதுவும் ஒரு பொண்ணில்லையா?”

“ஓ… நான் அப்பிடி யோசிக்கலை தாத்தா.”

“ஃபோன் பண்ணிப் பேசு. அது தப்பில்லை. அங்க இப்போ நிலவரம் என்னன்னு தெரிஞ்சா, நமக்கும் நிம்மதியா இருக்கும் இல்லையா?”

“சரி தாத்தா. நம்பரை அனுப்புங்க.” லைனை டிஸ்கனெக்ட் பண்ணி விட்டு, ரூமிற்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான் யுகேந்திரன். அவன் மனம் என்ன நினைக்கிறது என்று அவனுக்கே புரியவில்லை.

கொஞ்சம் பொறுமையை சோதித்த பிறகே நம்பர் வந்து சேர்ந்தது. சட்டென்று அழைக்காமல், தன்னை அறிமுகப்படுத்தி முதலில் ஒரு மெஸேஜ் அனுப்பினான். மெஸேஜ் பார்க்கப்பட்ட அடுத்த நொடி, அவன் அழைக்க அவசியமின்றி, கால் வந்தது.

“நித்திலா!”

“சொல்லுங்க சார்.”

“இப்போதான் நியூஸ் பார்த்தேன். என்னம்மா நடக்குது அங்க?”

“பெருசாக் கவலைப்படுற மாதிரி ஒன்னுமில்லை சார். ஸ்கூட்டியை யாரோ வேணும்னு எரிச்சிருக்காங்க.”

“போலீஸ் வந்திருக்காங்களா?”

“ஆமா சார். கூர்க்கா உடனேயே கால் பண்ணிட்டார். சார் தப்பா எடுத்துக்காதீங்க, நான் கொஞ்சம் கழிச்சுக் கூப்பிடுறேன்.” அவன் பதிலை எதிர்பார்க்காமல், சட்டென்று அழைப்பு துண்டிக்கப்பட்டது. அவள் பக்கத்தில் யாரோ பேசும் குரல்கள் கேட்டன.

அவள் நிலைமை அவனுக்குப் புரிந்தது. இருந்தாலும், இன்னும் கொஞ்சம் பேசாமல் வைத்துவிட்டாளே என்றுதான் தோன்றியது. விடியாத இரவாகிப் போனது, அந்த இரவு அவனுக்கு.

அடுத்த நாள் மாலை பணி நேரம் முடியும் வரை காத்திருந்த யுகேந்திரன், நித்திலாவின் அலுவலகத்திற்குள் நுழைந்தான். அவள் அனுமதி பெற்று உள்ளே நுழையும் வரை, ஏனோ… ஒரு படபடப்பு இருந்து கொண்டே இருந்தது.

“வாங்க கவிஞரே!” எந்தப் பதட்டமும் இல்லாமல் வரவேற்றது பெண்.

“என்ன ஆச்சு நித்திலா?” அவனை அறியாமலேயே அத்தனை அக்கறை தெரிந்தது அவன் குரலில்.

“நேத்து நைட் விழா முடிஞ்சு உங்களோட பேசிட்டு வீட்டுக்குப் போனேன் இல்லையா சார்? தூங்கிக் கொஞ்ச நேரம்தான் ஆகியிருக்கும். கூர்க்கா சத்தம் போடுற மாதிரி கேட்டுச்சு. எழும்பிப் பார்த்தா, ஸ்கூட்டி எரியுது.”

“யாருன்னு பார்த்தாராமா?”

“யாரோ சுவர் மேலே குதிச்சு ஓடினதைப் பார்த்திருக்கார். திட்டம் போட்டு வந்தவன் முகத்தைக் காட்டிக்கிட்டா சார் ஓடுவான்?”

“அதுவும் சரிதான். காருக்கு ஒன்னும் ஆகலையே?”

“காரா? யாரோட கார் சார்?”

“உங்க காரைத் தான் கேக்குறேன்.”

“எங்கிட்ட கார் இருக்குன்னு நான் எப்ப சொன்னேன்?”

“ஓ! நான் தான் ஏதோ ஞாபகத்துல…” தடுமாறினான் யுகேந்திரன். அவன் தடுமாற்றத்தை அவள் ரசித்தாற்போல தோன்றியது. கண்களில் குறும்போடு,

“உங்களை மாதிரி நாங்கெல்லாம் சில்வர் ஸ்பூனோட பொறக்கலை சார். அடி மட்டத்திலிருந்து வந்திருக்கோம்.” என்றாள். இப்போது அவள் கண்களை ஆழமாகப் பார்த்தான் யுகேந்திரன்.

“உங்களால முடியும்னு உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். சரி அதை விடுங்க, வீட்ல வேற யாரெல்லாம் இப்போதைக்கு இருக்காங்க?”

“சமையலுக்கு ஒரு அம்மா, கூர்க்கா. அவ்வளவு தான்.”

“ஊர்ல இருந்து பேரன்ட்ஸை சீக்கிரம் வரச் சொல்லுங்க நித்திலா. இப்பிடித் தனியா இருக்கிறது அவ்வளவு சேஃப் இல்லைம்மா.” அவன் சொல்லி முடிக்கவும், அங்கே ஒரு கனமான அமைதி நிலவியது.

“எந்த ஊர்ல இருந்தும், யாரையும் வரச் சொல்ல முடியாது சார். ஏன்னா… அப்பிடி யாருமே இல்லையே…”

“நித்திலா… நீங்க என்ன சொல்றீங்க?”

“எனக்குத் தெரிஞ்சது எல்லாம் ஒரு ஆர்ஃபனேஜ் தான். தட்டுத் தடுமாறி இவ்வளவு தூரம் வந்தாச்சு சார். இனி எவ்வளவு தூரம் போகும்னும் தெரியாது. தெரிஞ்சதெல்லாம் ஒன்னே ஒன்னுதான்… என்னை இந்த நிலையில உக்கார வெச்ச சமூகத்துக்கு நாலு நல்லது பண்ணணும், அவ்வளவுதான்.” இது வரை பேப்பர் வெயிட்டை உருட்டியபடி பேசிக் கொண்டிருந்தவள், இப்போது யுகேந்திரனை நிமிர்ந்து பார்த்தாள்.

“கார் வாங்க முடியாம இல்லை சார். தேவையில்லை. அந்தப் பணத்துல, என்னை மாதிரி நாலு அனாதைங்களுக்கு உதவி பண்ணலாம். அதுதான் என்னோட தேவை.”

அவள் சொல்லி முடித்த போதும் யுகேந்திரன் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே இருந்தான். ஆனால், முகம் மட்டும் கொஞ்சம் தீவிரமாக இருந்தது.

“நித்திலா… காலையிலே எப்பிடி ஆஃபீஸ் வந்தீங்க?” எல்லாவற்றையும் துடைத்துவிட்டு, நிகழ்காலத்துக்கு வந்திருந்தான் யுகேந்திரன்.

“ஏன் சார்? நமக்குத் தான் ஆட்டோ இருக்கே, மூனு சக்கரத் தேரு. ராணி மாதிரி வந்தாச்சு. பார்த்தீங்களா? கவிஞரோட சேர்ந்து என் பேச்சுலயும் லேசா கவிதை வாடை வருது.”

“மேடம்? இதுக்குப் பேர் கவிதையா?”

“ஐயோ! இல்லையா? சாரி கவிஞரே…” அவள் கேட்ட பாணியில் இருவரும் வாய் விட்டுச் சிரித்தார்கள்.

“நித்திலா… எனக்குத் தெரிஞ்சவங்க ஒருத்தர், உங்களோட தீவிர ரசிகை. ப்ளீஸ், நீங்க இப்போ ஃப்ரீயா இருந்தா எனக்காக அவங்களை ஒரு முறை சந்திக்க முடியுமா?”

“அட! அது யாரு சார்? நம்ம ஃபேன்?”

“ம்ஹூம்… நான் இப்போ யாருன்னு சொல்ல மாட்டேன். உங்களால இப்போ எங்கூட வர முடியுமா? அதைச் சொல்லுங்க முதல்ல.”

“ம்…” கொஞ்ச நேரம் உதட்டைப் பிதுக்கி யோசித்தாள் பெண். பின்பு,

“ஒரு நிமிஷம் சார்.” சொல்லிவிட்டு, ஒரு சின்ன டைரியில் மளமளவென்று ஏதோ எழுதினாள். எழுதி முடித்துவிட்டு, அதை இன்னொரு முறை சரிபார்த்துக் கொண்டாள். அவள் செய்கைகள் அனைத்தையும் ஒரு சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் யுகேந்திரன். எல்லாவற்றிலும் ஒரு பரபரப்புத் தெரிந்தது. நிதானம் மருந்திற்கும் இல்லை.

“ஓகே சார், போகலாம்.”

“ஓ! தாங்க் யூ நித்திலா.”

இருவரும் வெளியே வந்தார்கள். காரை பார்க் பண்ணியிருந்த இடத்துக்கு அவளை அழைத்து வந்தவன், அவளுக்காகக் கதவைத் திறந்து விட்டான். சுற்றியிருந்த ஒன்றிரண்டு கண்கள் அவர்களை உற்று நோக்கியதை இருவருமே கண்டு கொள்ளவில்லை.

“சார், எங்க போறோம்னு நீங்க இன்னும் சொல்லலை.”

“அதான் நம்பி ஏறி உக்காந்துட்டீங்க இல்லை? டோன்ட் வொர்ரி.” சொல்லியபடியே காரை ஓட்டியவன், அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. நித்திலாவும் அந்தக் கணங்களை ரசித்தாள்.

மாலை நேரத்துக் காற்று முகத்தில் மோதியது. யுகேந்திரன், கார்க் கண்ணாடிகளைத் திறந்து விட்டிருந்தான். காடுகளை அண்மித்த ஊர்கள் என்பதால், பசுமைக்கும், குளிர்ச்சிக்கும் பஞ்சம் இருக்கவில்லை. தூரத்தே ஏதோ ஒரு கோயில் மணி ஓசையும் கேட்டது.

“சார்! நீங்க எப்பிடித்தான் இப்பிடியெல்லாம் உருகி உருகி ரசிக்கிறீங்கன்னு நான் ஆச்சரியப்பட்டிருக்கேன். ஆனா இப்போ அப்பிடித் தோனலை.” அவள் பேச்சில் யுகேந்திரன் புன்னகைத்தான்.

“ஏன்னு கேக்க மாட்டீங்களா?” நீயே பதில் சொல் என்பது போல இப்போதும் புன்னகைத்தான்.

“நீங்க கேக்கலைன்னா என்ன? நானே சொல்லுறேன். இந்த மாதிரி ஒரு ஊர்ல இருந்தா, கவிதையென்ன? காவியமே எழுதலாம்.”

“ம்ஹூம்… அப்பிடியா?”

“அட… ஆமா கவிஞரே.” எவ்வளவு பேசியபோதும், மீண்டும் ஒரு முறை எங்கே போகிறோம் என்று மட்டும் அவள் கேட்கவேயில்லை.

தூரத்தே யுகேந்திரனின் காரைக் கண்டதும், கேட்டைத் திறந்து விட்டார் வாட்ச்மேன். காரை உள்ளே செலுத்தியவன், ஷெட்டில் அதை நிறுத்தினான்.

“வாங்க மேடம்.” அவன் அழைக்கவும், சுற்றி வரப் பார்வையைச் சுழல விட்டவள் அவனோடு நடந்தாள். வீட்டின் கதவு திறந்துதான் இருந்தது. இருந்தாலும், உள்ளே போகாமல் வாசலில் நின்றபடியே பெல்லை அடித்தான்.

“அடடா! என்ன விளையாட்டு இது யுகேந்திரா?” கேட்டபடியே வெளியே வந்த வானதி, இவளைக் காணவும் அப்படியே நின்றுவிட்டார்.

நித்திலாவிற்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. அமைதியாக யுகேந்திரனைப் பார்த்தாள்.

“மீட் மை அம்மா, வானதி. உங்களோட தீவிர ரசிகை.” என்றான் கேலியாக. அவன் பேச்சில் நடப்புக்கு வந்த வானதி,

“வாங்க மேடம், உள்ள வாங்க.” என்றார். அம்மாவின் செயல்களை ஒரு புன்சிரிப்போடு பார்த்திருந்தான் மகன்.

“என்னை ஞாபகம் இருக்கா மேடம்? அன்னைக்கு கோவில்ல…” வானதியை முழுதாக முடிக்க விடவில்லை நித்திலா.

“உங்களை மறக்க முடியுமா ஆன்ட்டி? என்னையும் ஓராளா மதிச்சு, ஆட்டோக்ராஃப் வாங்கின ஜீவனில்லையா நீங்க.”

“என்ன மேடம், இப்பிடி சொல்லிட்டீங்க நீங்க? இன்னைய தேதிக்கு, நம்ம ஏரியாவோட ஹாட் டாப்பிக்கே நீங்க தான்.”

“அப்பிடியா சொல்லுறீங்க?”

“ஆமா!”

“ஏத்துக்க வேண்டியதுதான். அதான் என் ஸ்கூட்டியே பத்திக்கிட்டு எரிஞ்சுதே. அப்போ ஹாட்தான்.” இரு பெண்களுமே கல கலவென்று சிரித்தார்கள்.

யுகேந்திரன் இருவரையும் மாறி மாறிப் பார்த்திருந்தான். அவன் தோளில் ஒரு அடி போட்ட வானதி,

“ஒரு ஃபோன் பண்ணி மேடம் வர்றாங்கன்னு சொல்ல மாட்டியா?” என்றார்.

“ஏன்? நீங்க அரை சென்டிமீட்டர் மேக்கப் ஏத்துறதுக்கா? நித்திலா, இந்த அம்மிணிக்கு எல்லாரும் இவங்களை என்னோட அக்கான்னு சொல்லணும்னு ஆசை.”

“கவிஞரே! மேக்கப் இல்லாமக் கூட அவங்க உங்க அக்கா மாதிரித்தான் இருக்காங்க.”

“சரியாப் போச்சு… சும்மாவே பிடிக்க முடியலை. இதுல இது வேறயா? நடத்துங்க…” சொல்லிவிட்டு ரூமிற்குள் போய்விட்டான் யுகேந்திரன். இவர்களின் சகஜமான பேச்சில் வானதி தான் ஆச்சரியப்பட்டுப் போனார்.

“அதென்ன மேடம்…”

“ஆன்ட்டி ப்ளீஸ்… அந்த மேடமை கட் பண்ணுங்க.”

“சரிம்மா… அதென்ன? கவிஞரேன்னு கூப்பிடுறீங்க?”

“இல்லையா பின்னே? நான் உங்க பையனோட ரசிகை ஆன்ட்டி. ஒரு ப்ரோக்ராம் மிஸ் பண்ணுறதில்லை. இப்போவே தாத்தாவைப் பிடிச்சு அடுத்த இலக்கியக் கூட்டத்துக்குட் டிக்கெட் வாங்கியாச்சுன்னா பாருங்களேன்.”

“அப்பிடியா? தாத்தான்னா… எங்கப்பாவையா சொல்லுறீங்க?”

“ஆமா…” அவள் பேச்சில் புன்னகைத்தார் வானதி.

“அம்மா…” உள்ளே இருந்தபடி யுகேந்திரன் குரல் கொடுக்க,

“ஒரு நிமிஷம், இதோ வந்திர்றேன்.” என்றபடி உள்ளே போனார் வானதி.

உட்கார்ந்தபடியே வீட்டை நோட்டமிட்டாள் நித்திலா. பார்க்கும் இடமெல்லாம் ஒரு செழுமை தெரிந்தது அந்த வீட்டில். கலை நயத்தோடு ஒவ்வொரு இடமும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே அன்பரசின் ஃபோட்டோக்கள், முக்கியமான அரசியல் பெரும்புள்ளிகளுடன்.

மகனோடு பேசிவிட்டு வெளியே வந்தார் வானதி. யுகேந்திரனும் பின்னோடு வந்தவன், வீட்டின் பின் பக்கம் போனான்.

“ஏம்மா… கொஞ்சம் லேட்டாப் போனா பிரச்சினை இல்லையே?” வானதி கேட்கவும், கேள்வியாகப் பார்த்தாள் நித்திலா. லேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது.

“ஒன்னுமில்லைம்மா… இன்னைக்கு ‘பார்பிக்யூ’ போடலாம்னு எல்லாம் ரெடி பண்ணி வச்சிருந்தேன்…” முடிக்காமல் இழுத்தார் வானதி.

“ஓ! ஷ்யூர் ஆன்ட்டி. உங்களுக்கு ப்ராப்ளம் இல்லைன்னா, எனக்கும் ஓகே தான்.”

“அப்போ வீட்டுக்குக் கால் பண்ணி தகவல் சொல்லிடும்மா. இல்லைன்னா கூர்க்கா போலீசைக் கூப்பிட்டிருவார்.” வானதி சொல்லவும் நித்திலா சட்டென்று சிரித்தாள். அவள் தகவல் சொல்லும் வரை பொறுத்திருந்தவர், அவளை வீட்டின் பின் பக்கமாக அழைத்துச் சென்றார்.

வீட்டிற்குப் பின் பக்கமாக கொஞ்சம் நிலம் இருந்தது. அதில் பத்துக்குப் பத்து என்ற அளவில் இருந்த இடத்தில் சின்னச் சின்னக் கற்கள் போடப்பட்டிருந்தது. ‘பெப்ல்ஸ்’ என்பார்களே, அது போன்ற கற்கள்.

கற்களை அணை கட்டினாற் போல நல்ல கெட்டியான, நீளமான மரத்துண்டுகள் நாலு புறமும் ஒற்றை வரிசையில் அடுக்கப்பட்டிருந்தது. ஒரு மூலையில் ‘பார்பிக்யூ’ ற்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் இருக்க, யுகந்திரன் நெருப்பு மூட்டிய வண்ணம் இருந்தான். நான்கைந்து ஸ்டீல் செயார்கள் போடப்பட்டிருந்தன.

ஆங்காங்கே இரண்டு மூன்று சரவிளக்குகளும் தொங்கவிடப் பட்டிருந்தன. சூரிய அஸ்தமன நேரத்தில் அந்த இடம் பார்க்க அத்தனை ரம்மியமாக இருந்தது.

‘அம்மாவும், மகனும் நல்ல ரசிகர்கள் தான்.’ நித்திலாவின் மனது இப்படித்தான் நினைத்தது. சமையல்கார அம்மா காஃபியைக் கொண்டு வந்து வானதி கையில் கொடுத்து விட்டுப் போனார்.

“என்ன கவிஞரே! இதென்ன, புதிய அவதாரமா?” அவள் கேட்க,

“மிகவும் பிரபலமான அவதாரம் பெண்ணே! நள அவதாரம். சுவைக்க ஆயத்தமா?” விட்டேனா பார் என்று அவனும் பதில் சொன்னான்.

“டேய் அரட்டை, சிக்கனைப் போடு. இருக்கிற நெருப்புப் போதும்.” சொன்னபடியே மகனிடம் காஃபியை நீட்டினார் வானதி. இவளுக்கும் ஒரு காஃபியை நீட்ட,

“நான் சாருக்கு ஹெல்ப் பண்ணுறேன் ஆன்ட்டி.” என்றாள்.

“ஒன்னும் வேணாம். நீ சும்மா உக்காரும்மா. ஒரு நாளைக்கு நமக்கு இந்தத் தடிப்பயல் சமைச்சுப் போடட்டும்.” வானதி தடுக்கவும், அங்கிருந்த செயாரில் அமர்ந்தாள் நித்திலா.

பெண்கள் இருவரும் அமர்ந்து அரட்டை அடிக்க, யுகேந்திரன் சிக்கனோடும், பச்சை சோளனோடும் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான்.

“ஐயோ ஆன்ட்டி! பாவம் உங்க பையன். ரொம்பப் போராடுறார். உதவிக் கரம் நீட்டலாமே.”

“அப்படீங்கிறீங்க?”

“ம்…” அவள் கவலையாகச் சொல்லவும் எழுந்து போனார் வானதி. அம்மாவும், மகனும் ஏதோ நண்பர்கள் போல பேசிக் கொண்டார்கள், சிரித்துக் கொண்டார்கள். நித்திலாவிற்கு எல்லாம் விசித்திரமாக இருந்தது.

அந்தச் சூழல் அவளை ஈர்த்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஏதோ ஒரு நிறைவு மனதுக்குள் தோன்றியது. இவர்கள் யாரென்று கூட அவளுக்குச் சரியாகத் தெரியாது. இருந்தாலும், அவர்கள் காட்டும் பரிவும், நேசமும் அவளை நெகிழ வைத்தது.

எல்லாம் தயாராகி விட, அம்மாவும், மகனும் எல்லாவற்றையும் நித்திலா முன்பாகக் கடை பரப்பினார்கள்.

நெருப்பில் வாட்டிய சிக்கன், சோளன், அதோடு சாலட்டும் இருந்தது. வாயில் நீரூற ஒரு வெட்டு வெட்டினாள் நித்திலா. அப்போதே தயாரானதால், அவ்வளவு சுவையாக இருந்தது.

“யுகேந்திரா! இப்போ செவிக்குணவு. பாடு.” என்றார் வானதி. நித்திலா ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“என்ன வானதி! மறந்து போச்சா? போன தடவை நான் தான் பாடினேன். இன்னைக்கு உங்க டர்ன். நீங்க பாடுங்க.” இது யுகேந்திரன்.

“ஓ… ஆமாமில்லை. என்னோட டர்ன் தான். நித்திலா… கொஞ்சம் பொறுத்தருள வேண்டும்…’

“ஐயோ ஆன்ட்டி! நீங்க தாராளமாப் பாடுங்க. நானெல்லாம் வாயைத் தொறந்தா அவ்வளவுதான்.”

“ஏம்மா? பாடமாட்டியா?”

“ஏதாவது ஒரு புகாரைக் குடுங்க, சிந்தாமச் சிதறாம நீங்க வெட்டச் சொன்னதை, நான் கட்டிக்கிட்டே வருவேன். இந்த ஆடல், பாடல், சமையல் இதெல்லாம் நமக்கு வராது ஆன்ட்டி.”

“பொண்ணுங்க சம்பந்தப்பட்டது எதுவும் அப்ப உங்களுக்கு வராது? அப்பிடித்தானே நித்திலா?”

“கொஞ்சம் சிரி கண்ணு. எம் பையன் ஜோக் அடிச்சிட்டானாம்.” வானதி சொல்லவும், நித்திலா விழுந்து விழுந்து சிரித்தாள்.

“பாடுங்க ஆன்ட்டி…” நித்திலா கேட்டுக்கொள்ளவும், பாட ஆரம்பித்தார் வானதி. யுகேந்திரன் கால் நீட்டி அமர்ந்து கொண்டான்.

‘அன்றொரு நாள் இதே நிலவில், அவரிருந்தார் என் அருகே…” பாடல் தொடர லயித்துப் போனாள் இளையவள். பெண் குரலை வானதி பாட, ஆண்குரலோடு யுகேந்திரன் இணைந்து கொண்டான். மேனி சிலிர்த்தது நித்திலாவிற்கு.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக நேரம் செலவழித்தவள், கிளம்ப எத்தனிக்க, ஒரு பையை நீட்டினார் வானதி.

“என்ன ஆன்ட்டி?”

“முதல் முதலா வீட்டுக்கு வந்திருக்கேம்மா. வெறுங் கையோட போகக் கூடாது. அதான், வாங்கிக்கோடா…”

“ஐயோ! இதெல்லாம் எதுக்கு ஆன்ட்டி?” சங்கடப்பட்டவள், யுகேந்திரனைத் திரும்பிப் பார்த்தாள். ஆமோதிப்பாக அவனும் தலையாட்ட, மரியாதை நிமித்தம் வாங்கிக் கொண்டாள்.

இருவரும் காரை நோக்கி நடக்க, வானதி வாசலில் நின்றிருந்தார். இரண்டெட்டுப் போனவள், திரும்பி வந்தாள்.

“எங்கேன்னு ஞாபகம் இல்லை ஆன்ட்டி. எப்பவோ படிச்ச கவிதை… தன்னோட மனைவியைப் பார்த்து கணவன் சொல்லுற மாதிரி வரிகள். அதுல, ‘எனது வீட்டை, இல்லமாக்கினாள்.’ அப்படீன்னு ஒரு வரி வரும். அதுக்கு அர்த்தம் அப்போ எனக்குப் புரியலை. இப்போ புரியுது ஆன்ட்டி. தான்க்யூ சோ மச்… உங்க இல்லத்துல எனக்கும் சில மணித்துளிகள் குடுத்ததுக்கு…” சொன்னவள், வானதியின் கன்னத்தில் அழகாக முத்தமிட்டாள். யுகேந்திரன் புன்னகையோடு பார்த்திருந்தான்.

 

error: Content is protected !!