anima26

anima26

 

 

அணிமா-26

 

அழகான கிராமத்து ஓட்டுவீடு, தேவையான வருமானத்தை தரும் விவசாய நிலங்கள், வீட்டில் ஒரு அங்கமாய் இருக்கும் பசுக்கள் என, எளிமையான வாழ்க்கை  பரந்தாமனுடையது.

 

 

 

விவசாயத்தை உயிராக நினைக்கும், தந்தைக்கு தப்பாத மகன் ஈஸ்வர். விவசாயம் அவனது சுவாசம். அந்த ஊர் வானம் பார்த்த பூமிதான் என்றாலும், அவர்களுடைய வயல்வெளி கிணறு வற்றாமல் நீர் வழங்க, ஓரளவிற்கு விவசாயம் செய்ய முடிந்தது.

 

 

 

அதனை மேம்படுத்தும் ஆசை அவன் மனதில் சிறு வயது முதலே, அவனுடன் சேர்ந்தே வளர்ந்தது. பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், அவனுக்கு வேளாண்மை சம்பந்தமாக படிக்கவே விருப்பம் இருந்தது.

 

 

 

சுபானுவும் அதே நேரத்தில் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாள். அதுவும் அவளுக்கு, பொறியியல் படித்து, அது சார்ந்த துறையில் வேலைக்குச் சென்று, கைநிறைய சம்பாதிப்பது, வெளிநாட்டு வாழ்க்கை… என பெரிய அளவில் கனவுகளும் எதிர்பார்ப்புகளும், கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

 

 

 

இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் செலவு செய்வது என்பது, தந்தையின் சுமையை பெரும் அளவிற்கு ஏற்றிவிடும் என்பது நிதர்சனமாகப் புரியவே, வேளாண் சம்பந்தமான பொறியியல் படிப்புகள் படிக்க வாய்ப்புகள் இருந்தாலும், அதைத் தவிர்த்து, ‘பி.எஸ்.சி அக்ரி’ சேர்ந்தான் ஈஸ்வர்.

 

***

 

சுபானு, காஞ்சிபுரத்தில் ஒரு கல்லூரியில் பொறியியல் சேர்ந்து படிக்க, சென்னையில், அவனுடைய குமார் சித்தப்பா வீட்டின் அருகிலேயே தங்கிக்கொண்டு, கல்லூரிக்கு செல்ல தொடங்கினான் ஈஸ்வர்.

 

 

 

கூடவே, நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், குமாருடைய வீட்டில் அவர் வைத்திருக்கும் ‘ஜிம்’ மில் பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக்கொண்டான் அவன். குமாருடன் சண்டை பயிற்சிகளிலும் ஈடுபாடு காட்டத்தொடங்கினான்.

 

 

 

குமார் எதாவது பண உதவி செய்தால் அதை அவன் தவிர்க்கவே, அவனது தன்மானம் புரிந்து, அவன் விடுமுறையில் இருக்கும் சமயங்களில், தான் வேலை செய்யும் திரைப்படங்களிலேயே, சண்டைக் காட்சிகளில் நடிக்க அவனுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்து, அதன் மூலம் அவனுடைய செலவுகளுக்கு, வருமானமும் செய்துகொடுத்தார், அவனைத் தனது சொந்த மகனாகவே பாவிக்கும் அவனுடைய சித்தப்பா.

 

 

 

ஈஸ்வர் பயிற்சி செய்யும் அதே நேரங்களில் உடற் பயிற்சி செய்யவென குமாருடைய வீட்டிற்கு வருவான், அவனை விட இரண்டு வயதே மூத்தவனான  கருணாகரன்.

 

 

 

செங்கமலம் பாட்டியின் சொந்த சகோதரியின் மகன் குமார் மற்றும் அவனுடைய அக்கா, நிர்மலா இருவரும் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட, அவர்களைப் பரந்தாமனுடன் சேர்த்து, தமது பிள்ளைகளாகவே வளர்த்து, படிக்க வைத்து, திருமணமும் செய்துவைத்தனர் செங்கமலம் பாட்டியும் அவருடைய கணவரும்.

 

 

 

நிர்மலாவை மிக வசதியான, அரசியல் குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.

 

 

 

அப்பொழுது கருணாகரனின் பெரியப்பா, இந்திய அளவில் மிகப்பெரிய கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று, தொழிற்துறை அமைச்சராக இருந்தார்.

 

 

 

அந்த கட்சியில் அவரது கை மிகவும் ஓங்கி இருந்தது. அவனுடைய தந்தை அண்ணனுக்குப் பக்கபலமாகத் திகழ்ந்தார்.

 

 

 

கருணாகரன் சிறுவனாக இருந்த பொழுதே, அவனுடைய தந்தை ஒரு விபத்தில் இறந்துபோக, திருமணமே செய்துகொள்ளாமல், அரசியலே வாழ்க்கை என்று இருக்கும் அவனுடைய பெரியப்பா, அவனது பொறுப்பை எடுத்துக்கொண்டு, அவனை தன் அரசியல் வாரிசாகவே மாற்றினார்.

 

 

 

கருணாகரன் அவனுடைய பெரியப்பாவுடன் அரசியலில் ஈடுபட்டுக்கொண்டே கல்லூரியில் சேர்ந்து, ‘பொலிட்டிக்கல் சயின்ஸ்’ படித்துக்கொண்டிருந்தான்.

 

 

 

ஏற்கனவே அத்தை மகன் என்ற உறவு அவனுடன் இருந்த பொழுதிலும், ஏதாவது விசேஷ சமயங்களில் மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு இருக்க, அந்த சந்தர்ப்பத்தில்தான், ஈஸ்வர் மற்றும் கருணாகரன் இருவரும் அதிகம் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர்.

 

 

 

காலப்போக்கில் மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேசி, அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு, அழகிய புரிதலும், இணைபிரியாத நட்பும் இருவருக்கிடையில் உருவானது.

 

***

 

ஈஸ்வர் இளநிலை பட்ட படிப்பு முடித்து, முதுகலை படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தான்.

 

 

 

சுபா கல்லூரி படிப்பு முடிந்து, அவளுக்கு ‘கேம்பஸ் செலக்ஷன்’ மூலமாக வேலையும் கிடைத்துவிட, அதற்கான ஆறுமாத பயிற்சி முடித்து, பெங்களூருவில் ‘பிளேஸ்மென்ட்’ ஆகியிருந்தது.

 

 

 

அந்த சந்தர்ப்பத்திலேதான் பொங்கல் பண்டிகை வந்தது. குடும்பத்துடன் அதைக்கொண்டாட ஊருக்கு வந்திருந்தான் ஈஸ்வர்.

 

 

 

திருவிழா கூட்டத்தில், நின்றுகொண்டிருந்த பெண்களைக் கைப்பேசிமூலம் காணொளியாகப் பதிவு செய்துகொண்டிருந்தான்  அங்கே திருவிழாவைக் காண்பதற்கென வந்திருந்த புதியவன் ஒருவன்.

 

 

 

அவனுடைய செயல் ஜீவிதாவையும், அவளுடைய தோழிகளையும் எரிச்சல் படுத்த, அதைக் கால் செய்து அண்ணனிடம் சொல்லிவிட்டாள் அவள்.

 

 

 

தொலைவிலிருந்தே அதைப் பார்த்து, அவனது செயலை உறுதிப்படுத்திக்கொண்டு, கோபத்துடன் அங்கே வந்த ஈஸ்வர், நேராக அந்த புதியவனுடைய கைப்பேசியை அவனது கைகளிலிருந்து பறித்து, அதில் பதிவாகியிருந்த அந்த காணொளிகளை அழித்துவிட்டு, அதை அவன் கையில் திணித்தவாறே,

 

 

 

“நீ எங்க பழனிச்சாமி அய்யா வீட்டு கெஸ்ட்டுங்கறதால விடுறேன். இல்லனா இந்த போனையும், உன்னையும் பீஸ் பீசா ஆக்கியிருப்பேன்… போட்டோ, வீடியோ எடுக்கறதுனா, மாடுங்களைத்தான் எடுக்கணும். எங்க ஊரு பொண்ணுங்களை இல்ல!” என்று எச்சரிக்கும் குரலில் சொல்லிக்கொண்டிருக்க, அவனை நோக்கி வந்தான் ஈஸ்வர் குறிப்பிட்ட பழனிச்சாமி அய்யாவின் மகன், கைலாஷ்.

 

 

 

அவன், “என்ன ஈஸ்வர்! சின்ன விஷயத்தையெல்லாம் பெருசாக்கிட்டு இருக்க, ப்ரவீண் என் கூட வேலை செய்யறவர்தான். அவர்  சும்மா ஃபன்னியா வீடியோ எடுத்திருப்பாரு!” என்று அவனுக்குப் பரிந்து பேச,

 

 

 

“வெக்கமா இல்ல உனக்கு, இந்த கூட்டத்துலதானே, உன் தங்கையும் நிக்கறா… யாரோ எப்படியோ போகட்டும்னு பேசற?” என்று ஈஸ்வர் காட்டமாகக் கேட்க,

 

 

 

“இதெல்லாம் சகஜமான விஷயம். நாலு பேர மாதிரி, சொசைட்டில பழகினா உனக்கு தெரியும். தெரியலைனா, சுபானுவை பார்த்து கத்துக்கோ. சும்மா நானும் படிக்கறேன்னு, வேலைக்கே ஆகாத எம்.எஸ்.சி அக்ரி படிச்சுக்கிட்டு, உங்க சித்தப்பா ஸ்டண்ட் மஸ்டார்னால, சினிமால கேவலமா டூப் போட்டுட்டு சுத்திட்டு இருக்க! ஐடீ ல வேலை செய்யறவங்கள பார்த்தால் உனக்கு காம்ப்ளக்ஸ்…” என்று நக்கலாக அவன் சொல்லிக்கொண்டே போக, பொறுமை இழந்து, ஓங்கி அவன் முகத்தில் அறைந்தான் ஈஸ்வர்.

 

 

 

அதில் நிலை தடுமாறி அவன் ஓரடி பின்னால் செல்ல, ஈஸ்வர் அடுத்த அடி அவனை அடிப்பதற்குள் அவனை வந்து தடுத்தார் பரந்தாமன், ஈஸ்வருடைய அப்பா.

 

 

 

அனைத்தையும் பார்த்து, பயத்தில் அதிர்ந்துபோய் அந்த ப்ரவீண் நிற்க,  ஈஸ்வரின் ஆறடி உயரத்தையும், அவனது உடற்கட்டையும் பார்த்து மிரண்டு போய், அவனைத் திரும்பத் தாக்கும் துணிவு இல்லாமல், அவமானத்தில் முகம் கன்றி, கொதித்துப்போனான் கைலாஷ்.

 

 

 

அவனது படிப்பு, அவன் விரும்பி செய்யும் வேலை என எல்லாவற்றையும் அந்த கைலாஷ் பழித்துப் பேச, ருத்திர மூர்த்தியாக மாறியிருந்த மகனின் கோபத்தைத் தணிக்கும்பொருட்டு, “கண்ணப்பா! வேண்டாம், பழனி எதாவது தப்பா நினைக்க போறான்! இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு கோபப்படுறது தப்புடா!” என்று  பரந்தாமன் நிதானமாகச் சொல்லவும், கொஞ்சம் தணிந்தான் ஈஸ்வர்.

 

 

 

அனைத்தையும் கேள்விப்பட்டு, அங்கே வந்த பழனி, பரந்தாமன் சொன்னதைக் கேட்டு, “நான் இங்க இல்லைனாலும், ஈஸ்வர் தப்பான ஒரு வேலையை செய்யமாட்டான்னு எனக்கு நல்லாவே தெரியும்.

 

 

 

அவன் கோபப்பட்டு கை நீட்டினான்னா, எதிரில் இருக்கிறவன் ஏதோ தப்பு பண்ணியிருக்கான்னுதான் அர்த்தம்…” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, “அப்பா!” என்று கைலாஷ் குறுக்கே வர, அவனை கை நீட்டித் தடுத்தவர், “அவன் என் மகனாகவே இருந்தாலும்… நான் ஈஸ்வருக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன்!” என்று மகனைக் கண்களால் எரித்தவாறே சொல்லி முடித்தார் அவர்.

 

 

 

ரைஸ் மில், பால் பண்ணை, கோழிப் பண்ணை, விவசாய நிலங்கள், சொத்துக்கள் என வசதி படைத்தவர் பழனிச்சாமி. அவர் கர்வமின்றி இயல்பாக இருக்க, கைலாஷ் அகந்தையுடன் நடந்துகொள்வான்.

 

 

 

தந்தையின் பேச்சில் உள்ளுக்குள்ளே குமுறியவனாக, அவரை  எதிர்த்துப்பேசும் துணிவின்றி,  தலையை தொங்கவிட்டவாறு, நண்பனுடன்  அங்கிருந்து அகன்றான் கைலாஷ்.

 

 

 

ஆனாலும் அவன் மனதில் வன்மம் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.

 

***

 

பொங்கல் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து, இன்னும் ஒரு வாரத்தில் வேலையில் சேர வேண்டும் என்ற நிலையில், வீட்டில் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் சுபா.

 

 

 

சென்னைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த ஈஸ்வர், சகோதரியின் வாட்டமான முகத்தைக் கண்டு, என்ன என்பது போல் அன்னையிடம் ஜாடை செய்ய, அதை கவனித்த பரந்தாமன், “அங்கே என்ன கேள்வி? என்கிட்டே கேளு சொல்றேன்” என்று அமர்தலான குரலில் சொன்னவர்,

 

 

 

“இந்த பொண்ணுக்கு, இங்கேயே மெட்ராஸ்ல வேலைக்கு போட்டிருந்தாங்கன்னா, சரின்னு சொல்லலாம். நீங்க எல்லாரும் அங்கே இருக்கீங்க. நான் கவலை இல்லாமல் இருப்பேன்.

 

 

 

ஏன் பெங்களூர்ல போட்டாங்கன்னு தெரியல.” என்று சொல்லி பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவர்,

 

 

 

“வயசு பொண்ணை அங்கெல்லாம் அனுப்பிட்டு, என்னால வயத்துல நெருப்பை கட்டிட்டு இருக்க முடியாது. அவ வேலைக்குப் போய் கிழிக்க வேணாம்…

 

 

 

காலகாலத்துல மாப்பிள்ளை பார்க்கறேன், கல்யாணத்தைச் செஞ்சிட்டு, எங்க வேணா போகட்டும்!” என்று சொல்லி முடித்தார்.

 

 

 

அதில் பொறுமை இழந்த சுபானு, தந்தையின் எதிரில் பேசப் பயந்துகொண்டு, மெல்லிய குரலில், “ஆமாம்! வேலைக்கே ஆகாத படிப்பெல்லாம் படிச்சிட்டு, வெட்டியா சுத்திட்டு இருக்கான்… ஆம்பிளை பிள்ளைன்னு! அவனைக் கேள்வி கேட்க, இங்கே யாருக்கும் வாய் இல்ல… எனக்கு முட்டுக்கட்டை போடுறதிலேயே குறி!” என்று முணுமுணுக்க, அது ஈஸ்வரின் செவிகளில் நன்றாகவே விழுந்தது.

 

 

 

ஆனால் பரந்தாமனுக்குப் புரியாமல் போகவே, “என்ன! என்ன முணுமுணுக்கிற… எதுவா இருந்தாலும் தெளிவா பேசு!” என்று அவர் சொல்லவும்…

 

 

 

“அப்பா! ப்ளீஸ்…பா! ஆறே ஆறு மாசம் மட்டும் நான் வேலைக்கு போய், கொஞ்சம் சம்பாதிச்சுட்டு, கொஞ்சம் என்ஜாய் பண்ணிட்டு, பிறகு நீங்க சொல்ற மாதிரி கல்யாணம் பண்ணிக்கறேன் பா!” என கெஞ்சலில் இறங்கினாள் சுபா, அந்த ஆறு மாத காலம்தான் அவளது வாழ்க்கையையே மாற்றிப் போடப்போகிறது என்பதை அறியாமல்!

 

 

 

அதில் கொஞ்சமும் இளக்கமின்றி, “வேணாம்மா! எதாவது தப்பா போச்சுன்னா… ஊரில் தலை நிமிர்ந்து நடக்கவே முடியாமல் போயிடும்…

 

 

 

நீ ஒழுங்கா நல்லபடியா இருக்கணும்ன்னு நினைச்சாலும், சுத்தி இருக்கறவங்க உன்னை அப்படி இருக்க விட மாட்டாங்க.

 

 

 

மெட்ராஸிலேயே  வேற வேலை வேணா தேடிக்கலாம்…விட்டுடு!” என்று அவர் தீர்மானமாய் சொல்ல,

 

 

 

அவர் சொல்லுவதுதான் சரி என்று, செங்கமலம் பாட்டியும், சாருமதியும் கூட சுபாவிற்குப் புத்தி சொல்லும் விதமாகப் பேசினர்.

 

 

 

சென்னையில் வேலைக்குச் சென்றாலும், அவள் எதிர்பார்க்கும் கட்டுப்பாடற்ற

 

சுதந்திரம் அவளுக்குக் கிடைக்காது என்று சொல்லி அவளுடைய மனது அவளை இடித்துரைக்க, மேலும் அப்படி ஒரு வேலையை உடனே தேடிக்கொள்வதும் அவ்வளவு சுலபமில்லை என்பதும் புரிய, வீட்டில் எல்லோருமே தனக்கு எதிராக நிற்பதுபோல் தோன்றவும், ஏமாற்றத்தில் அவளுடைய முகம் கசங்கிப் போனது.

 

 

error: Content is protected !!