anima29

anima29

அணிமா-29

சுற்றிலும் இருந்த இருளில் முதலில் ஒன்றும் புரியாமல் இருந்தாலும், நேரம் செல்லச்செல்ல, வண்டி சென்னையை நோக்கிப் போய்க்கொண்டிருப்பது புரிந்தது சுபாவுக்கு.

அவளது கோபம் எல்லையைக் கடக்க, கொஞ்சமும் பொறுக்க முடியாமல்,”இப்ப என்னை இப்படி கம்பல் பண்ணி எங்கே இழுத்துட்டு போற! சொல்ல போறியா இல்லையா?” என்றவாறு, பக்கவாட்டில், அவனது தோள், முதுகு என அவளது கை கொண்டு தாக்கத் தொடங்க, உடலிலிருந்த சக்தியெல்லாம் முற்றிலும் வடிந்து, துவண்ட நிலையிலிருந்தவளின் தாக்குதலால், அவன் ஒன்றும் பெரிதாக அதிரவில்லை.

நிதானமாக வண்டியை நிறுத்தியவன், கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், “இப்ப, உங்க வீட்டுல நீ எவன் கூடவோ ஓடி போயிட்டேன்னு எல்லாரும் முடிவே பண்ணியிருப்பாங்க!

நீ திரும்ப அங்கே போனாலும், உன்னை யாரும் நம்ப போறதில்ல. அதுக்கான எல்லா வேலையும் செஞ்சுட்டேன்!

ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கோ! நான் உண்மையா உன்னைக் கல்யாணம் பண்ணி, வாழணும்னு நினைக்கறேன்!

முடியாதுன்னு நீ பிவாதம் பிடித்தால்… நான் ஏற்கனவே சொன்னதுதான் நடக்கும்…” மிரட்டலாகவே, கறார் குரலில் சொல்லி முடித்தான் அசோக்.

அப்பொழுது இருந்த நிலையில், அவன் சொற்படி கேட்டு நடப்பதைத் தவிர தனக்கு வேறு வழி இல்லவே இல்லை என்றே முற்றிலுமாக நம்பினாள் சுபா!

அவளுடைய அலைபாயும் மனநிலையை நன்றாக உணர்ந்தவனாக, அவளை அப்படி நம்ப வைத்திருந்தான் அசோக் என்பதே உண்மை!

பொழுது நள்ளிரவைக் கடந்து, விடியலை நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருந்த வேளை, கே..கே.. நகரில், அவனுடைய நண்பன் ஒருவன் தங்கியிருந்த ஃப்ளாட் ஒன்றிற்கு, சுபாவை அழைத்துவந்தான் அசோக்.

அங்கே, அவன் அவளுக்காக வாங்கி தயாராக வைத்திருந்த பட்டுப்புடவை, நகைகள் என அனைத்தையும் அவளிடம் கொடுத்து, உடனே தயாராகி வரச்சொல்லவும்தான், அன்றே அவன் திருமணத்திற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவைத்திருக்கிறான் என்பதே அவளுக்குப் புரிந்தது.

அன்று, அதிகாலையே, வடபழனி கோவிலில், அவர்களுடைய திருமணமும், வெகு எளிமையாக நடந்து முடிந்தது.

பெங்களூருவிலிருந்து, சுஜாதா உட்பட, இருவருக்கும் பொதுவான வெகு சில நண்பர்கள் மட்டும் அங்கே வந்திருந்தனர்.

கிடைத்த தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு, தான் வேண்டுமென்றே, சுபாவிடம் கொண்ட காழ்ப்புணர்ச்சியில்தான், அசோக்கைப் பற்றி தவறாகச் சொன்னதாகவும், உண்மையிலேயே அவன், சுபாவை மட்டுமே விரும்புவதாகவும் சொல்லிவிட்டுப் போனாள் சுஜாதா.

‘அவள் உண்மையைத்தான் பேசுகிறாளா அல்லது பொய் சொல்கிறாளா?

அசோக், தன்னை மணப்பதற்காக மட்டுமே இப்படி தவறான வேலைகள் எல்லாம் செய்கிறானா? அல்லது அவன் இயல்பிலேயே மிகவும் கொடியவன்தானா?’ என ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தவித்தாள் சுபா.

அதன்பின்பு கோவிலுக்கு அருகிலேயே இருக்குமொரு உயர்தர உணவகத்தில், அன்றைய காலை உணவை முடித்துக்கொண்டனர்.

அவர்களுடைய நண்பர்கள் அனைவரும் சென்றுவிட, ராயபுரத்தில் இருக்கும் அவனது வீட்டிற்கு அவளை அழைத்து சென்றான் அசோக்.

அங்கே, இரண்டு தளங்களை கொண்ட, பெரிய வீடு அவர்களுடையது. அந்த வீட்டை சிறு, சிறு பகுதிகளாக தடுத்து, வாடகைக்கும் விட்டிருந்தனர்.

அவனுடைய அப்பா அதே பகுதியில் மளிகை கடை வைத்திருந்தார். அவனுடைய அண்ணன் அவருக்கு உதவியாக இருந்தான்.

அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, அவர்களுடைய பிள்ளைகள், மேலும் திருமணம் ஆன ஒரு மூத்த சகோதரி என மிகப்பெரிய குடும்பம் அவனுடையது. மேலும் சொந்தத்திலேயே ஒரு பெண்ணை பார்த்து, அவனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.

அறிமுகம் இல்லாத ஒரு புதிய பெண்ணுடன், மகனை திருமண கோலத்தில் காணவும், நல்லதோ, கெட்டதோ! தேன் தடவிய வார்த்தைகளால், மனதை மறைத்து நடிக்கத் தெரியாதவர் என்பதால்… காது கூச அவர்களை வசை பாடினார் அசோக்கின் அம்மா.

அவருடன், அவனுடைய அக்காவும் சேர்ந்துகொண்டு… சுபாவை அடிக்கவே வந்துவிட, அவர்களை தடுத்து சமாளித்தவன், “நீங்க ஏத்துக்கிட்டாலும், ஏத்துக்கலேன்னாலும், இவதான் என் பொண்டாட்டி! நான் சட்டப்படி இவளை கட்டிகிட்டேன்! இனிமேல் கல்யாணம் அது இதுன்னு என்னைத் தொல்லை பண்ணாதீங்க!

இதை உங்க எல்லார் கிட்டேயும் சொல்லத்தான் வந்தேன்.

இனிமேல், நீங்க இருக்கிற திசை பக்கம் கூட வரமாட்டேன்!” என்று ஒரே மூச்சாகச் சொல்லிவிட்டு, அதிர்ந்து நின்ற அவனது தந்தையை ஓர் ஏளனப் பார்வை பார்த்துவிட்டு, அவமானத்தில் கூசிப்போய் நின்ற சுபாவை இழுத்துக்கொண்டு, அங்கிருந்து சென்றான் அசோக்.

தன்னை மீறி நடக்கும் ஒவ்வொன்றையும் பார்க்கும்பொழுது, உயிரே போனால் கூட பரவாயில்லை என்றே தோன்றியது அவளுக்கு.

இனி எந்த ஒரு நிலையிலும், அவளுடைய வீட்டிற்கு அவளால் போகவே முடியாது என்ற எண்ணம் தோன்றி, உயிர்வரை வலித்தது.

***

அன்றே சுபாவைப் பெங்களூருக்கு அழைத்துவந்துவிட்டான் அசோக்.

சில தினங்களுக்குள்ளாகவே, அவளுடைய கைப்பேசி எண், வங்கிக் கணக்கு அனைத்தையும் புதிதாக மாற்றினான்.

சமூக வலைத் தளங்கள் எதையும் உபயோகிக்க விடாமல், அவளைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தான்.

எந்த ஒரு நிலையிலும் அவள் பிறந்த வீட்டினரைத் தொடர்பு கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக அவன் இருப்பது நன்றாகவே புரிந்தது அவளுக்கு.

அவளை மிரட்டி திருமணம் செய்து, இந்த நிலையில் கொண்டுவந்திருந்தாலும், தொடர்ந்த நாட்களில், அவளிடம் அன்பாகவே நடந்துகொண்டான்.

வீட்டின் நினைவில், அவள் வாடுவதைக் கண்டும் காணாமல் இருந்துவிடுவான். மற்றபடி,  அவளது தேவைகள் அனைத்தையும் கவனித்துச் செய்தான். அதேபோல், அவளிடமான அவனது எல்லா தேவைகளையும், நன்றாகவே நிறைவேற்றிக்கொண்டான், கெஞ்சலும் மிஞ்சலுமாக!

அவர்கள் நிறுவனத்தில், முன்பே பேசி, அவள் வேலையில் தொடர வழி செய்தவன்,  ஒரே மாதத்தில், இருவரும் ஒன்றாக அமெரிக்கா செல்வதற்கும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தான்.

அனைத்தும் முன்பே திட்டமிட்டு அவன் செய்திருப்பது நன்றாகவே புரிந்தது சுபாவுக்கு.

மொத்தத்தில்… அசோக்குடைய விரல் நுனியில், நூலில் ஆட்டி வைக்கும் பொம்மையாய் அவள் மாறிப்போயிருந்தாள், சிந்திக்காமல் அவள் செய்த தவறுகளால்!

***

அமெரிக்கா வந்த பிறகு,  இருவருக்கும் ஒரே இடத்தில் வேலை, கணிசமான வருமானம், அந்த நாட்டிற்குத் தகுந்தாற்போன்ற  ஒரு வாழ்க்கை முறை என நாட்கள் சென்றுகொண்டிருந்தன.

அசோக்கைப் பொறுத்த மட்டும், அவன் அந்த வாழ்க்கை முறையை, ரசித்து அனுபவித்து வாழ்ந்து கொண்டு இருந்தான் என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் சுபாவிற்கோ, மகிழ்ச்சி, துக்கம், என எந்த ஒரு உணர்வும் இன்றி, இயந்திர கதியில் வாழ்க்கை அவளை இழுத்துச்செல்வதுபோல் தோன்றியது.

ஆறு மாதங்கள் கடந்த நிலையில், அசோக் அறியாமல், அலுவலகத்திலிருந்து, சுஜாதாவைத் தொடர்பு கொண்டு, அவளுடைய குடும்பத்தினர் பற்றிய விவரங்களை அறிந்து சொல்லும்படி, சுபா கேட்டுக்கொள்ள, சில தினங்களில் அவளைத் தொடர்புகொண்டாள் சுஜாதா.

அவர்களுடைய குடும்பம், கிராமத்தை விட்டு சென்னைக்கே சென்றுவிட்டதையும், மூன்று மாதங்களுக்கு முன் அவளுடைய அப்பா பரந்தாமன் இறந்துபோன தகவலையும் சொன்னவள், அசோக்கின் மிரட்டலுக்குப் பணித்து, அவளுடைய திருமணம் நடந்த தினம் அவளிடம் அப்படிப் பேசியதாகவும் சொன்னாள்.

அதற்கு பிராயச்சித்தமாகவே, இந்த தகவல்களை அறிந்து சொன்னதாகக் கூறியவள், அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதால், மேற்கொண்டு தன்னை தொடர்புகொள்ள வேண்டாம் என்றும், அவள் சுபாவிற்கு உதவியது தெரிந்தால், அவன் ஏதாவது பிரச்சனை செய்வான் என்பதினால், இந்த விஷயங்கள் அசோக்கிற்குத் தெரிய வேண்டாம் என்றும் சொல்லி முடித்துக்கொண்டாள் சுஜாதா.

பட்ட துயரங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்ற தந்தையின் மரணம் பற்றிய செய்தியில், மனம் உடைந்து போனாள் சுபா.

தேற்றுவதற்கு ஆள் இன்றி, அவள் தனிமைபட்டுபோய் இருக்க, அந்த நிலையிலிருந்து அவளை மீட்பதற்காகவே அவள் கருவில் வந்து உரு கொண்டான் ஜீவன்.

குழந்தை பிறந்ததும், ஜீவிதாவின் பெயரையும், ஜெகதீஸ்வரனின் பெயரையும் இணைத்து ஜீவனேஸ்வரன் என்று குழந்தைக்கு பெயர் வைத்தாள் சுபா.

சுபா கருவுற்றதற்கோ, அல்லது குழந்தை பிறந்ததற்கோ, எதற்குமே பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை அசோக். அலுவலக நண்பர்களின் கேள்விகளுக்குப் பயந்தே, அவளை எச்சரிக்கையுடன் பார்த்துக்கொண்டான். அதை எதிர்பார்த்தே இருந்ததால், அது அவளைப் பெரிதும் பாதிக்கவில்லை.

ஜீவன் பிறந்த பிறகு, குழந்தையை கவனிக்க வேண்டிய அவசியத்தில், சுபா வேலையை விட்டுவிட, அவளுடைய வங்கிக் கணக்கில் இருக்கும் பணமும் சிறுகச் சிறுக செலவகிப்போனது.

அனைத்து செலவுகளுக்கும் அசோக்கை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

அதன் பிறகு அசோக்குடைய நடவடிக்கைகள், அவளை விரக்தியின் விளிம்பில் கொண்டு நிறுத்தியது.

ஜீவனுக்கு மூன்று வயது இருக்கும் சமயம், அவர்கள் வேலை செய்த இந்திய நிறுவனத்திலிருந்து மாறி, அதிக சம்பளத்தில் வேறு ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான் அசோக்.

முதலில் ஏதேதோ காரணங்களை சொல்லி, வார இறுதி நாட்களில், வெளியிலேயே தங்க ஆரம்பித்தவன், நாட்கள் செல்லச்செல்ல வீட்டிற்கு வருவதையே தவிர்த்தான்.

வீட்டு வாடகை, மற்ற செலவுகளுக்கு மட்டும் அவளது வங்கிக் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்துவதுடன் சரி, மற்றபடி சுபாவையோ அல்லது குழந்தையையோ பற்றிய எண்ணமே இல்லாமல் இருந்தான் அசோக்.

ஒரு முறை, அவன் வேலை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எதையோ எடுக்க அசோக் வீட்டிற்கு வந்த சமயம்,   சிறு பிள்ளையுடன், தனிமையில் அதிக மன உளைச்சலிலிருந்த சுபா, அவனது சட்டையைப் பிடித்து, “இந்த நிலைமையில் என்னை வெச்சு கொடுமை படுத்த, எதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கணும்?

அப்படியே விட்டிருந்தால் நான் சந்தோஷமா இருந்திருப்பேனே!”  என்று ஆவேசமாகக் கேட்கவும், அவளது கைகளைத் தட்டிவிட்டவன், “நான் இப்படி, சந்தோஷமா, நிம்மதியா இருக்கத்தான்!” என்றான் நிதானமாக.

***

 

 

error: Content is protected !!