KKE–EPI 3
KKE–EPI 3
அத்தியாயம் 3
சென்னை கபாலிசுவரர் கோயிலில் சிவன் சுயம்புவாக அருள்பாலிக்கிறார். அவரை வழபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும் என்பது ஐதீகம்.
ப்ளேயரில் பாடல் ஒலிக்க, ஸ்டீயரிங் வீலில் தாளம் போட்டப்படியே கண் மூடி அமர்ந்திருந்தான் ஜம்பு. கண்ணாடி ஜன்னல் தட்டப்பட கண்ணைத் திறந்து பார்த்தான் அவன். மெய் லிங் அங்கே தலைவிரிக் கோலமாக நின்றிருந்தாள்.
அவசரமாகத் தலைக்கு குளித்திருப்பாள் போல. முடி காயாமல், நீர் சொட்டிக் கொண்டு இருந்தது. முன்பு பார்த்த போது முடியை போனி டெயில் போட்டு வைத்திருந்ததால், அவன் சரியாக அதனை கவனித்திருக்கவில்லை. இப்பொழுது காய்வதற்காக விரித்து விட்டிருந்த முடி அவன் கருத்தைக் கவர்ந்தது. பட்டு போல் நீளமான முடி. சரியான உவமை பட்டுதான். பொதுவாகவே சீனர்களுக்கு முடி வள வள, பள பளவென இருக்கும். சீப்பை நுழைத்தால் வழுக்கிக் கொண்டு போகும். இவளும் அதற்கு விதிவிலக்கல்ல. கருப்பு முடியில் அங்கங்கே சிவப்பு ஹைலைட் செய்திருந்தாள். அது அவள் மஞ்சள் நிற சருமத்துக்கு எடுப்பாக இருந்தது.
“ஜம்ப்!” சத்தமாக அழைத்தாள் மெய் லிங்.
முடியையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்திருந்தவன், அவள் அழைப்பில் தன்னை உலுக்கிக் கொண்டான்.
“முடி வை வெட்? சளி கமிங்!” என அவள் முடியைச் சுட்டிக்காட்டி ஏன் துவட்டவில்லை, சளி பிடித்துக் கொள்ளப் போகிறது என கேட்டான் நம் ஜம்பு.
“சளி?” அவளுக்குப் புரியவில்லை.
மூக்கை சிந்துவது போல சைகை செய்தான் ஜம்பு. அவன் சைகையைப் பார்த்து அவளுக்கு புன்னகை விரிந்தது.
“தட்ஸ் ஓகே! ஐ கேன் மேனேஜ்”
“சளி புடிச்சாலும் அவங்கள அவங்க பாத்துக்குவாங்களாம். நீங்க அடக்கி வாசிக்கலாம்னு சொல்றாங்க” என அப்பொழுதுதான் அவர்கள் இருக்கும் இடம் வந்த மங்கி மொழி பெயர்த்தான்.
“எங்களுக்குத் தெரியும். நீ…” வாயை மூடு என சைகை செய்த ஜம்பு,
“யூ சிட்” என மெய் லிங்கை வேனில் அமர சொன்னான்.
அவள் எப்பொழுதும் போல பின்னால் அமர வேன் புறப்பட்டது. மங்கி அவளிடம் பேச்சுக் கொடுக்க, அவளும் பேசிக் கொண்டே வந்தாள். நடுநடுவே ஆமாம், இல்லை என தமிழ் வார்த்தைகளையும் பயன்படுத்தினாள். நாக்கை சுழற்றி அந்த வார்த்தைகளை அவள் சொல்ல, கேட்கவே மழலை மொழி போல இனிமையாக இருந்தது. பாட்டு சத்தத்தைக் குறைத்துவிட்டு அவள் சத்தத்தை ரசித்தப்படி வந்தான் ஜம்பு. நடுவில் தலை தூக்கியது மனசாட்சி.
‘சும்மா ரசிக்கத்தானே செய்யறேன். இந்த மாதிரி வெள்ளையா, குட்டியா, அழகா இருந்தா கண் இல்லாதவன் கூடத்தான் ரசிப்பான்’ என்ற அவனின் மைண்ட்வொய்சிற்கு,
‘ஓஹோ!! அட்ரா, அட்ரா! கண் இல்லாதவன் கூட ரசிப்பானா? எங்கயோ போய்ட்டடா ஜம்ப்’ என தலையில் அடித்துக் கொண்டது மனசாட்சி.
அவர்கள் கடைக்குள் நுழைய,
“அண்ணே, நான் போய் ரீசார்ஜ் பண்ணிட்டு வரேன். அவங்க எடுக்கட்டும்” என கழண்டுக் கொண்டான் மங்கி. ஏற்கனவே அம்மா, தங்கையுடன் வந்து அவர்கள் படுத்தி எடுத்த அனுபவம் இருப்பதால் எஸ் ஆகி விட்டான்.
“டேய், இவ டஸ்சு புஸ்சுன்னா நான் என்னடா பண்ணுறது?”
“ஆதி மொழியாம் கை மொழி இருக்க, உமக்கேன் பயம்? ஜாடை காட்டிப் பேசுங்க” என ஓடிவிட்டான்.
“பரதேசி பய!” முனகமட்டும் தான் முடிந்தது அவனால். கடையில் ஜம்புவின் நண்பன் இன்னும் வந்திருக்கவில்லை. கடைப்பையன் தான் இருந்தான்.
“டேய் தம்பி! இவங்களுக்கு ஏத்த சைஸ்ல சுடிதார், டாப்ஸ்லாம் எடுத்துக் காட்டுடா.”
‘சில கோயில் உள்ளுக்கு சேலைல கட்டிட்டுப் போகனும். இவளுக்கு கட்டத் தெரியுமா? கட்டுனாலும் இடுப்புல நிக்குமா?’ அவளை மேலும் கீழும் ஆராய்ந்தான். அவன் வயிற்றுக்கு கொஞ்சம் மேல் தான் அவள் வளர்த்தி. நெஞ்சளவு கூட வரவில்லை. சின்ன சரீரம். இடுப்பு என்ற ஒரு வஸ்து இருக்கிறதா என்று கூட தெரியவில்லை.
அவள் கடைப்பையன் எடுத்துப் போட்ட சுடிதாரை ஆராய, இவன்
“தம்பி, இந்தப் பொண்ணுங்கலாம் சேலைக்குப் பதிலா அதே மாதிரி இன்னொரு ட்ரெஸ் போடுவாங்களே அது பேரு என்னப்பா?” என கேட்டான்.
“பாவாடை, தாவணியாண்ணா?”
“அது என்ன கர்மமோ! எனக்கு என்ன அக்கா தங்கச்சியா இருக்காங்க தெரிஞ்சு வச்சிக்க.”
“அட போங்கண்ணா! அக்கா தங்கச்சி இருந்தா மட்டும்தான் தெரிஞ்சு வச்சிக்கனுமா? சைட் அடிக்க கண் இருக்கறவன் எல்லாம் தெரிஞ்சு வச்சிக்கலாம். நீங்க சொல்லறது தாவணி தான்ணே. அத தான் ஹால்ப் சாரின்னு சொல்லுவாங்க” என கடைக்கண்ணால் மெய் லிங்கை பார்த்தபடியே பேசினான்.
“டேய் தம்பி! வாய்ஸ் என் பக்கம், லுக்கு அந்தப் பக்கமா? தேற மாட்டீங்கடா நீங்களாம்! ஒழுங்க வேலைய பாரு, இல்ல உன் முதலாளி கிட்ட சொல்லி சீட்ட கிழிக்க சொல்லிருவேன். அந்த ஹால்ப் சாரிலாம் எடுத்துப் போடு”
“சைஸ் சரியா எடுத்துப் போடறதுக்காகத்தான் பார்த்தேன்ண்ணா! தப்பா எடுத்துக்காதீங்க. பாவாடை அட்ஜஸ்ட் பண்ணிக்கற மாதிரி ரெடிமேட்டா வருது. ஆனா ரவிக்கைத் தைக்கனும் அண்ணே”
“அது வேறயா!”
“பக்கத்துல கடை இன்னும் கொஞ்ச நேரத்துல திறந்துருவாங்கண்ணே! அரை மணி நேரத்துல தச்சு குடுத்துருவான். நீங்க எந்த கலர் வேணும்னு மட்டும் சொல்லுங்க” என சொன்னவன் பட்டுப் பாவாடைகளை எடுத்துப் போட்டான்.
“மெய் லிங்!” என அழைத்தான் ஜம்பு.
“யெஸ் ஜம்ப்” என திரும்பி பார்த்தாள்.
பாவாடை தாவணி செட்களை காட்டியவன்,
“சூஸ்” என்றான்.
“வாட் இஸ் திஸ்?”
‘என்னான்னு நான் வெளக்குவேன்? இம்சைடி’
“டெம்பிள் போட்டுக்க” கட்டுவது போல சைகை காட்டினான்.
“ஓ!” என்றவள் பால் வண்ணம் ஒன்றும், டார்க்கான ஊதா கலர் ஒன்றும் தேர்ந்தெடுத்தாள். குவியலில் இருந்த மெருன் கலர் பாவாடை இவனைப் பார்த்து சிரித்தது. அதை விட்டு இவனால் கண்ணை எடுக்கவே முடியவில்லை.
“திஸ் டேக்” என அதை எடுத்து அவளிடம் நீட்டினான்.
இவன் எதற்கு நமக்கு தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறான் என அவனை சந்தேகமாய் பார்த்தாள் மெய் லிங்.
‘அய்யோ ஒரு மாதிரியா பார்க்கறாளே! இந்த கலர்ல போட்டா, மகாலெட்சுமி மாதிரி இருப்பா, அப்படியே ஆளை அசத்துமேன்னு எடுத்து குடுத்தேன். அது குத்தமா? ஹ்ம்ம். அவ முறைக்கறதுலயும் தப்பில்ல. என்ன உரிமைல நான் எடுத்துக் குடுக்க முடியும்’
“டெம்பிள் திஸ் கலர் மஸ்ட்” கோயிலுக்கு இந்த கலரில் தான் போட வேண்டும் என புளுகிவிட்டான் ஜம்பு.
“ஓ, தென் ஓக்கே” என எடுத்துக் கொண்டாள்.
பக்கத்துக் கடை திறக்கவும், சைகை காட்டி ஒரு வழியாக புரிய வைத்து ரவிக்கைக்கு அளவு கொடுத்து விட்டு வந்தார்கள். பிறகு சுடிதார்களையும், டாப்ஸ், லெக்கிங்களையும் மடமடவென தேர்ந்தெடுத்தாள் மெய் லிங்.
அதிசயமாகப் பார்த்திருந்தான் ஜம்பு. வேகமாக எடுத்தாலும் அவளுக்குப் பொருத்தமாக, ஆளை அடிக்கும் அளவுக்கு இல்லாமல், கண்ணை உறுத்தாமல் அருமையாக எடுத்திருந்தாள்.
அவள் ஷோப்பிங் செய்ய இவனுக்குக் களைத்து விட்டது. காபி அருந்தலாம் என நினைத்தவன்,
“மெய் லிங்! காபி வான்ட்?” என கேட்டான்.
“நோ தேங்க்ஸ் ஜம்ப்”
“யூ இங்கயே ஸ்டே! ஐ கோ கம்”
“டேய் தம்பி! சீனா சிட்டு பத்திரம். ஏதாச்சும் சேட்டையைக் காட்டுனேன்னு தெரிஞ்சது, வகுந்துருவேன்!” கடைப்பையனை எச்சரித்தான் ஜம்பு.
ரோட்டோர கடையில் காபி வாங்கி அருந்தியவன், வேகமாகவே திரும்பி வந்தான். அதற்குள் ரவிக்கையும் தைத்து வந்திருக்க, இவளும் பணம் செலுத்தி விட்டுக் காத்திருந்தாள்.
“வேற எனிதிங்?”
“வாட் எல்ஸ் ஐ நீட்?” வேற என்ன வேண்டும் என கேட்டாள் அவள்.
“வளையல், தோடு, பொட்டு!” என தன் கையை, காதை நெற்றியைத் தொட்டுக் காட்டினான்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வந்திருந்தான் மங்கி.
அவனிடம் திரும்பியவள், அதெல்லாம் கண்டிப்பாக போட வேண்டுமா என கேட்டாள்.
அவன் பதில் சொல்வதற்குள்,
“போடனும்னு சொல்லுடா. இல்லைனா கோயிலுக்குள்ள விட மாட்டாங்கன்னு சொல்லு”
“ஏண்ணா இப்படி? இதெல்லாம் எப்போ சட்டத்துல கொண்டு வந்தாங்க?” என கிண்டலாகக் கேட்டான்.
“சொன்னதை அப்படியே சொல்லுடா என் வெண்ட்ரு! காதுல, நெத்தியில ஒன்னும் இல்லாம மூளியா இருக்கா. இதெல்லாம் போட்டா மகாலெஷ்மி மாதிரி இருப்பாடா”
“ஓ!!! எந்த மகாலெஷ்மிண்ணா சப்பை மூக்கா இருக்கு? காலண்டர்ல அப்படி நான் பாத்தது இல்லையே”
“கொன்ட்ருவேன்டா! சொல்லித் தொலை”
“அப்படி சொன்னா, எனக்கு என்ன குடுப்பீங்க?”
“ஓஹோ, பேரம் பேசறீங்களோ! என்ன வேணும் சொல்லி தொலை!”
“இப்போதைக்கு ஒன்னும் வேணா! அப்புறம் கேட்கறேன்” என்றவன் இவர்கள் வாயையே பார்த்திருந்த மெய் லிங்கிடம் ஜம்பு சொன்னதைப் போலவே சொன்னான். அருகில் இருந்த அக்சசரிஸ் கடையில் அவசர அவசரமாக வளையல், தோடு, பொட்டு என தேர்ந்தெடுத்து வாங்கினார்கள்.
மூவரும் ஹோட்டலை அடைய, சரியாக காலை பத்து மணி ஆகி இருந்தது.
“சீக்கிரம் போய் சீனா லட்ட சல்வார் சூட் மாத்திட்டு வர சொல்லுடா. ட்ரீப் ஆரம்பிக்கனும்”
அவன் சொல்ல, அவசரமாக இறங்கியவள் உள்ளே போகும் முன் ஜம்புவிடம் ஒரு கவரை நீட்டினாள்.
“வாட்?”
“ப்ரேக்பஸ்ட் மணீ” என சொல்லியவள் கவரை அவன் கையில் திணித்து விட்டு உள்ளே ஓடிவிட்டாள்.
கவரைப் பிரித்தால் உள்ளே அழகிய வேலைப்பாட்டுடன் ஒரு ஆகாய நீல நிற ஜிப்பா இருந்தது.
“அடிப்பாவி! காபி அடிக்க போன கேப்ல எனக்கு ஜிப்பா வாங்கிருக்கியா! சைஸ்லாம் கரேக்டா இருக்கே! அப்படி என்ன அவசரம் காச திருப்பிக் குடுக்க.” முணுமுணுத்தவன் கழுத்துப் பட்டையில் விலையைத் தேடினான். அதை கிழித்து எடுத்திருந்தாள் அவள். ஆனால் முதுகு பகுதியில் இருந்த விலை அட்டையைக் கவனிக்கவில்லை மெய் லிங்.
“பாருடா! மூனு இட்லிக்கு, ஐநூறு ரூபாய்க்கு ஜிப்பா எடுத்துக் குடுத்திருக்கா இந்த சமூ” ஜம்புவுக்கு முகமெல்லாம் சிரிப்பு.
சின்ன வயதில் பெற்றவர்கள் வாங்கி கொடுத்தது. அதன் பிறகு இவன் உடை எல்லாம் இவனேத்தான் வாங்கிக் கொள்வான். இது தான் முதன் முறை வேற்றாள் வாங்கி தருவது. மனம் குதூகலமானது. துணியைத் தன் கையால் வருடிக் கொடுத்தான்.
“சமூவா?”
“ஹ்ம்ம்! சமூ தான்”
“அப்படின்னா?”
“அதெல்லாம் உனக்கெதுக்கு? போய் எல்லாரும் வந்துட்டாங்களான்னு ரிசப்சன்ல செக் பண்ணு” என விரட்டி விட்டான் மங்கியை.
பின் தனக்குள்ளாகவே,
“சமூன்னா சப்பைமூக்கி” என சொல்லி புன்னகைத்துக் கொண்டான் ஜம்புலிங்கம்.