MT 2

MT 2

மாடி வீடு – 2

வீட்டுக்கு வந்த அழகு, தங்கையை எங்கும் தேடினான் அவள் இல்லாமல் போகவே போட்டிருந்த சட்டையை கழட்டி அங்கும், இங்கும் திருப்பி பார்த்தான்.

காலரில் மட்டும் கொஞ்சமாய் அழுக்கு அவன் கண்ணில் பட்டது. அதுவும் பெரியதாக தெரியவில்லை அவனுக்கு ‘அழுக்கு ஒன்னும் இல்லை. அன்பு வரமுன்ன இதையே வயலுக்கு போட்டு போவோம்’ எண்ணியவன், வீட்டின் பின் புறம் குளிக்க சென்றான்.

வயலி இறங்கும் பொழுது எப்பொழுதும் அழகு குளித்து விட்டு தான் இறங்குவான். தொழில் மேலும், ஐயா மேலும் இருக்கும் மரியாதை தான் காரணம்.

அன்பு, அவனை எப்பொழுதும் அழுக்கு சட்டை போடவிடமாட்டாள். தன் அண்ணனை ராஜாவாக தான் பார்ப்பாள். அழகு எப்பொழுதும் தங்கையை ராணியாக தான் பார்ப்பான்.

அதிக வேலை கூட தங்கையை செய்யவிடமாட்டான். அவன் துணியை அவனே துவைத்துக் கொள்வான். சில நேரம் தங்கை துணியையும் அவனே துவைப்பான். அவனுக்கு எப்பொழுதும் அவள் குழந்தையே. எதற்கும் இது வரைக்கும் தங்கையை அவன் எதிர் பார்த்ததில்லை.

அன்பு, அண்ணன் நலன் ஒன்றை மட்டுமே பார்ப்பாள். அவன் மட்டுமே வேலைக்கு செல்கிறான் என்று, ஐயா வீட்டுக்கு தானும் வேலைக்கு வருகிறேன் என்று பள்ளி முடிக்கும் முன்னே கூறிவிட்டாள். அதனால் தான் வேலை இருக்கிறதா என்று ஐயாவிடம் கேட்டான் அழகு.

அதற்காக நன்றாக படிக்கும் பிள்ளை பாதியில் படிப்பை நிறுத்துகிறது என யாரும் நினைக்க வேண்டாம்.

அவளுக்கு படிப்பு வராது. வராத படிப்பை வா வா என்று அழைக்க அவள் ஆசிரியை தயாராக இல்லை. இவர்களுக்கு பள்ளியில் இடம் கீழே, இதுலேயே ஆசிரியர் அவள் தகுதியை அறிந்துக் கொண்டிருப்பார். அதற்கேற்ற படி அவர்களின் நடைமுறை இருக்கும். அதனாலேயே படிப்பை அதிகம் நேசிக்கவில்லை அன்பு.

அன்பு கொஞ்சம் குட்டையாக இருப்பாள். அவளின் ஆறு வயதில் பள்ளியில் சேர்க்க சென்றான் அழகு.
ஆனால் அங்கு இருந்த ஆசிரியர் அவளின் காதை தொட கூற, நமது அன்புவோ டக்கென்று காதை பிடித்து ஆசிரியரை பார்த்து ஒரு சிரிப்பு வேறு,

அதில் கடுப்பானவர் முறைத்து கழுத்தை சுற்றி தொட கூற, கை, காதுக்கு எட்டாமல் முழித்தாள் அவள். அதில் ஆசிரியர் அவளை அடுத்த வருடம் வரக் கூறிவிட்டார்.

அதிலிருந்தே அவர் மீது ஏதோ ஒரு கோபம் அவளுக்கு.

இதே இது அன்பு உயர்ந்த ஜாதியாக இருந்திருந்தால், எப்பொழுதோ பள்ளியில் இடம் கிடைத்திருக்கும். இப்படியாக அவளின் ஏழ்மையை சுட்டிக் காட்டியே படிப்பு அவளுக்கு கசந்துப் போனது. படிப்பை விட தன் அண்ணனை அதிகம் நேசித்தாள் அவள்.

தன் அண்ணனுக்காய் பார்த்துப் பார்த்து செய்வாள் அன்பு. தன் தங்கைக்காய் பார்த்துப் பார்த்து செய்வான் அழகு. ஒருவருக்கு மற்றவர் உலகம்.

குளித்து முடித்தவன், அதே சட்டையை அணிந்துக் கொள்ள அவனை தேடி வந்தான் ஒரு சிறுவன்.

அழகுண்ணே”

என்னடே” சட்டை பட்டனை போட்டபடி வெளியில் வந்தான் அழகு.

ஐயா வீட்டுல உன்னை உடனே கூப்பிட்டாக, சீக்கிரம் போணுமாம்”

சரிடே, அங்கன தான் கிளம்புதேன், நீ போ” அவனை அனுப்பியவன் எப்பொழுதும் கழுத்தை சுற்றி அணியும் சிகப்பு டவலை எடுக்க சென்றான்.

கயிற்றில் தொங்கிய டவலை எடுத்து, கழுத்தை சுற்றிப் போட்டவன், வீட்டு நிலைப் படியில் குனிந்து வெளியில் வர, அவன் தங்கை இரு கெழுத்தி மீனை கையில் பிடித்து வரவும் சரியாக இருந்தது.

அண்ணே அதுக்குள்ள எங்க கிளம்பிட்ட, உனக்காக நான் கெழுத்தி மீன் புடிச்சுட்டு வந்திருக்கேன், நீ கிளம்புற?”

சாப்ட்டு எல்லாம் போகமுடியாதுமா, ஐயா சீக்கிரமா வர சொல்லிருக்காக, நான் போயிட்டு வந்து சாப்டுதேன்”

அண்ணே… நில்லு, கூழாச்சும் கரைச்சு தாரேன் குடிச்சுட்டு போ, இப்படி வெறும் வயித்துல போகாதே”

ஒரு நேரம் சாப்டலன்னா, ஒன்னும் ஆகாது விடுடா”

அதெல்லாம் முடியாது, சாப்பிட்டுத்தேன் போற அம்புட்டுத்தேன்” கட்டளையிட்டவள் அவனின் அழுக்காக இருந்த மாத்திப் போட்ட சட்டையையும், நீர் சொட்ட சொட்ட இருந்த முடியை பார்த்து,

இதென்ன இப்படி இருக்க? வேலைக்குப் போற மாதிரியா போற, தலையும் வாராம, ஒன்னும் வாராம? தண்ணி அப்படி சொட்டுது, உள்ள வா?” முறைத்தவள் கையோடு வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றாள்.

தலை தட்டும் உயரத்தில் இருந்த அந்த குடிசை வீட்டில் மீண்டும் தலையை குனிந்து சென்றான் அழகு.

என்ன தான் ஐயா கூப்பிட்டாகன்னு அவசரமா போனாலும் இப்படியா சட்டையை மாத்தி போட்டுட்டு போவ, சட்டையை மாத்து, போட்டா திங்க வேண்டியது, வச்சா சுமக்க வேண்டியது, மாடு மாதிரி இருக்க வேண்டியது, எல்லாம் நானே சொல்ல வேண்டி இருக்கு… எதுக்குண்ணே இப்படி இருக்க? இந்தா இதைப் போடு” திட்டியபடி அவன் மீது வேறு ஒரு சட்டையை வீசினாள் அன்பு.

என்ன? திட்டுறீக” பல்லை கடித்தான் அழகு.

என்ன முறைக்கிற? குரங்கு மாதிரி”

சரி… சரி… விடு, உன் அண்ணன்னா அப்படித்தேன்”

ஆமா, இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” முறைத்தவள் சீப்பையும், இன்னொரு டவலையும் எடுத்து அவன் முன் வந்து நின்றாள்.

இருபுறமும் வழிந்த துண்டை பிடித்தபடி அவள் முன் நிமிர்ந்து நின்றவனைக் கண்டவள், “ஒட்டகம் மாதிரி இப்படி உசரமா இருந்தா எப்படி தலை துவட்டுறதாம், உட்காரு” அவனின் தோளை பிடித்து அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் அமரவைத்தவள், கழுத்தில் கிடந்த துண்டை எடுத்து அருகில் வைத்தாள்.

அவனின் முகத்தை நேராகப் பிடித்து “தலையும் துவட்டாம, தலையும் வாராம அப்படி என்ன தான் வேலையோ?” திட்டியபடியே, தலையை துவட்டி விட,

தலையை அங்கும், இங்கும் அசைந்தவன் தலையில் ஒரு தட்டு தட்டி “என்ன தஞ்சாவூர் பொம்ம மாதிரி தலையாட்டிக்கிட்டு, சும்மா இருக்க முடியாதா உன்னால” அதட்டலாக முறைத்தாள்.

அவன் கண்ணை மட்டும் உயர்த்திப் பார்க்க,

முழியைப் பாரு ஆந்தை மாதிரி” முறைத்தவள்,

தலையை துவட்டி, அழகாக வாரி குங்குமத்தை எடுத்து அவன் நெற்றியில் வைத்து விட்டவள், அதை அழகாகத் துடைத்து விட, கண்களில் நீருடன் பார்த்திருந்தான் அழகேசன்.
அருகில் இருந்த துண்டை எடுத்து “எந்திரி” என,

அவன் தோளில் துண்டை போடவந்தவளை, போடவிடாமல் எம்பி தடுத்தவனை, இடுப்பில் கைவத்து முறைத்து எம்பி துண்டை அவன் கழுத்தில் இருபுறமும் வழியவிட்டவள், கொஞ்சமாய் இழுத்து “இப்போ போ, என் கண்ணே பட்டிரும் போல இருக்கு, ராசா கணக்கா இருக்க” திருஷ்டி கழித்தாள் அந்த பாசமிகு தங்கை.

எந்த ஊருலையாவது ராஜா இப்படி ஒரு துண்டை கழுத்தில் போட்டு சுத்துறதை நீ பாத்திருக்கியா?” கிண்டலடித்தான் அழகு.

ம்ம்” இடுப்பில் கை வைத்து முறைத்தவள், அவன் முதுகில் கையை வைத்து தள்ளிக் கொண்டே வெளியில் விட்டு “சீக்கிரம் போ ஐயா கூப்டாக” நியாபகப்படுத்த,

ஆமால்ல, வர்றேன்” இருபக்கமும் வழிந்த துண்டை கையில் பிடித்தபடி ஒரே ஓட்டமாக ஓடினான் அழகு.
பல வீட்டு வாசலில் போட்டிருந்த கோலத்தை மிதிக்காமல் குதித்துக் குதித்து ஓடினான் அழகு.

அழகு சென்ற கொஞ்ச நேரத்தில் ‘அய்யோ அண்ணே சாப்பிடாம போகுதே, அதுக்குப் பசிக்குமே… மடச்சி மாதிரி இருந்திருக்கேன்’ தன்னையே தலையில் குட்டியவள். குட்டி மண் சட்டியில் கூழை எடுத்து, கொஞ்சம் மோர் கலந்து, இரண்டு பச்சை மிளகாய், வெங்காயம் பிச்சு போட்டவள் அவனை நோக்கி ஓடினாள்.

அமுதா வாசலில் அழகுவுக்காகக் காத்திருக்க, வெத்தலை இடித்துக் கொண்டிருந்த அவளின் மாமியார் சும்மா இல்லாமல்,

வேலைக்காரனை, வேலைக்காரன் மாதிரி வைச்சிருந்தா சொன்ன நேரத்துக்கு சரியா வந்து நின்றிருப்பான்… இப்போ பாரு ஒரு மருவாதை இல்ல, அவனுக்காக எம்மவன் காத்திருக்கான், எல்லாம் நேரம். வைக்க வேண்டிய இடதுல அதத வைக்கோணும்… இதெல்லாம் சொன்னா நம்ம சொல்லை யாரு கேட்குறா?” முணுமுணுப்புடனே வெத்தலையை இடித்தார்.

அப்பத்தாவுக்கு ஒன்றும் அவனைப் பிடிக்காமல் இல்லை. ஆனால் தன் மகன் கொடுக்கும் இடம் சில சமயம் அவரை கோபம் கொள்ள வைக்கும்.

ஆலமரத்தான் சாமி கும்பிட்டு, திருநீரை எடுத்து நெற்றியில் பூசி, துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டே வெளியில் வந்தவர்,

தன் தாயின் முன் வந்து நின்று “கிளம்புறேன்ம்மா” என காலில் விழுந்து ஆசி வாங்க,

மவராசனா போயிட்டு வாய்யா” எழுந்து நின்று கூறினார் அவரின் தாய்.

மூச்சு வாங்க ஓடி வந்த அழகு அவர் முன் வந்து நிற்க,

வாடா” என ஆலமரத்தான் காலில் செருப்பை அணிந்து முன்னே செல்ல, கழுத்தில் கிடந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டி, கையைக் கட்டிக் கொண்டே அவர் பின்னே சென்றான் அழகு.

செல்லுபவனை சும்மா விடாமல் “ஏன்டா லேட்டு” என அவனை தடுத்தப்படி கேட்டார் அப்பத்தா.

ஐயா, நீங்க உட்காருங்க நான் இப்போ வந்திடுதேன்” உரைத்தவன் அப்பத்தாவை நோக்கி சென்றான்.

ஏன்டா லேட்டா?” முறைத்தவன், இடுப்பில் இருந்த துண்டை எடுத்து உதறிக் கொண்டே கழுத்தில் போட்டுக்கொண்டான்.

துணி கொண்டு வர லேட்டு, களை எடுக்க ஆள் கிளம்பி வர லேட்டு, செருப்பு தச்சுக் கொண்டு வர லேட்டு, அம்மணி கிளம்ப லேட்டு, இதை எல்லாம் நான் தானே கேட்கவேண்டி இருக்கு. இப்போ என்னையே கேள்விக் கேளுங்க”

ஹும்கும்” அப்பத்தா சிலிர்த்துக் கொண்டார்.

இப்போ மட்டும்  கழுத்தை  ஏழு முழத்துக்கு நீட்டு, நல்லா மூனு வேளையும் மொக்கிட்டு, இங்க உட்காந்து டொக்கு டொக்குன்னு இந்த உரல்ல உட்காந்து குத்திகிட்டே இருக்காதே ஏதாவது வேலையைச் செய், சும்மா என்னையே குத்தம் சொல்லாதீக”

குசும்புடா உனக்கு” நாடியில் இடித்தார் அப்பத்தா.

ஆமா… எனக்குக் குசும்புதேன் நீ விசும்பு பண்ணாம வீட்டுல பத்திரமா உட்காரு” என்றவன் வேகமாக வண்டியை எடுக்க ஓடினான்.

அவனை பார்த்து சிரித்தபடி வீட்டின் உள்ளே சென்றார் அமுதா. அடிக்கடி அப்பத்தாவுக்கும், அவனுக்கு இடையில் நடக்கும் செல்ல சண்டை தான் இவைகள்.

பல வண்ண சலங்கை முத்துக்களை கொண்ட அவர் மாட்டுவண்டி மெதுவாக நகர்ந்து, மதிலை தாண்டி வந்து தெருவில் வேகமாகப் பயணித்தது.

தூரத்தில் அவன் செல்வதை கண்டவள்,

அண்ணே… நில்லுண்ணே” அழைத்துக் கொண்டே ஓடி வந்தாள்.

அவளின் குரல் கேட்டு, பின்னால் திரும்பி பார்த்து வண்டியை ஓரம் காட்டினான் அழகு.

“என்னாச்சு அழகு”

“இல்லீங்கய்யா அன்பு வருது அதேன்”

“சரி சரி போ… என்னனு கேளு?”

“சரிங்கைய்யா’

இந்தா, இந்தக் கூழை குடிச்சுட்டு போண்ணே, உனக்காக மோர், வெங்காயம் போட்டு பிசைஞ்சு கொண்டு வந்திருக்கேன், ஒன்னுமே சாப்பிடாம போறியே… உனக்குப் பசிக்கும்ல” அக்கறையாக கூறினாள் அந்த பாசக்கார தங்கை.

அவள் கன்னத்தை மெதுவாகத் தட்டியவன், அவள் கையில் இருந்த சிறு மண் பானையை வாங்கி, அதைக் குடிக்க, அண்ணன் முகத்தையே சிரிப்புடன் பார்த்திருந்தாள் தங்கை.

இந்தாம்மா” குடித்து முடித்தவன் அவள் கையில் சிறு பானையைக் கொடுத்தான்.

பார்த்து போண்ணே”

சரிம்மா” என்றவன் மீண்டும் வண்டியைக் காட்டினான்.

செல்லும் அவனையே பார்த்திருந்தாள் அன்பு. அவளுக்குத் தாயும், தந்தையும் அவனே!

சிறு வயதிலேயே தாய், தந்தையை இழக்க, அவளுக்கு எல்லாமுமாய் அழகு மாறிப் போனான்.

அழகு சிறு வயதில் தாயையும், தந்தையும் இழக்க, வீட்டில் வேலை செய்தவர்களின் குழந்தை என்று வளர்க்க ஆரம்பித்தார் ஆலமரத்தான்.

அவருக்கு எல்லாமே அழகு தான் என்று இருந்தாலும், எது வேண்டும் என்றாலும் பின் வாசலில் நின்று தான் கேட்கவேண்டும்.

தோட்ட வேலையில் இருந்து, வீட்டு வேலை வரை எல்லாமே அழகு தான் பார்த்துக் கொள்வான். நாத்து நடுவதில் இருந்து, சில நேரம் கணக்குப் பார்ப்பது வரை அழகு தான். பல திறமைகளைத் தன்னுள் அடைக்கி ஆலமரத்தானுக்குக் கைகட்டி வேலை பார்க்கும் வேலைக்காரன்.

என்ன தான் எல்லா வேலையையும் அவன் செய்தாலும் வீட்டில் கால் எடுத்து வைக்கவிடமாட்டார். அவனும் அதை விரும்பமாட்டான். தான் என்றும் அவர் காலடியில் கிடப்பதே தனது இனத்துக்குப் பெருமை என்று எண்ணுவான். அதனால் அவன் வரவு அந்த வாசலோடு முடிந்துவிடும்.

எதையும் மீறும் பழக்கம் அவனுக்கு இல்லை. இனியும் வராது. அவருக்கு அடிமையாக தான் இருக்க வேண்டும் என்பது அவன் ரத்தத்தில் ஊறிய அவன் கலாச்சாரம்.

அவர் ஜாதிக்காரன், குறைந்த ஜாதிகார பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து விட்டான் என்று பஞ்சாயத்தைக் கூட்டி இருந்தனர் பெண்ணைப் பெற்றவர்கள்.

என்ன தீர்ப்பு வழங்குவது’ என்ற யோசனையுடன் வந்தார் ஆலமரத்தான்.

அவர் இனக்காரன் என்று அவனுக்காகவும் பேசமுடியாது, குறைந்த இனக்காரி என்று பஞ்சாயத்தை நிறுத்தவும் முடியாது.

இரு இனக்கார்களுக்கும் சரியான தீர்ப்பை தான் எப்பொழுதும் ஆலமரத்தான் வம்சாவழி வழங்கும் என்பதற்காக தான் இன்னும் பல ஊர் மக்கள் இவரை பஞ்சாயத்துக்கு அழைக்கின்றனர்.

@@@@@@@@@@@@@@@

தான் பிடித்து வந்திருந்த மீனை கழுவிய அன்பு, பக்கத்துக்கு வீட்டு மதனியிடன் கேட்டு கேட்டு குழம்பு வைத்துக் கொண்டிருந்தாள். இன்று தான் முதல் முறையாக சமைக்கிறாள்.

அப்பொழுது அவர்கள் வீட்டு திண்ணையில் வந்தமர்ந்தான் லிங்கம்.

என்னண்ணே காலமே காத்து இந்த பக்கமா வீசுது?”

சும்மா இரு புள்ள நீ”

மதனி செத்த நேரம் குழம்பை பாத்துக்க நான் இப்ப வந்திடுதேன்” கூறியவள், கையை துடைத்துக் கொண்டே லிங்கத்தை நோக்கி வந்தாள்.

என்னண்னே சோகமா இருக்கிய?”
அத எப்படி புள்ள சொல்ல” சோகமாக முகத்தை வைத்துக் கொண்டான் லிங்கம்.

என்னாச்சுன்ணே பட்டணத்துக்கு போன உன் நண்பன் வாராறா?”

இல்ல புள்ள” லேசான சலிப்பு அவனிடம்.

பின்ன என்னாச்சுன்ணே, முகம் இப்படி சுணங்கி போய் கிடக்கு?”

செல்வி புள்ள என்கிட்ட சரியாவே பேசல, அதேன்” உரைத்தவன் எழுந்துக் கொள்ள,

எங்கண்ணே கிளம்புற”

வீட்டுக்கு தான் புள்ள” முகத்தை சோகமாக வைத்துக் கொண்டான்.

என்னண்னே வீட்டுக்கு போறேன்னு சொல்லிபோட்டு கொல்லை பக்கமா போற?” வாயை பிளந்து கேட்டாள் அன்பு.

பின்ன என்ன புள்ள, பொட்ட புள்ளக்கு கவலை இருந்தாக்கா வீட்டுகுள்ளாற அழுவி சோகத்தை மறைச்சிக்கும், நான் ரோட்டுல நின்னு அழுவயா முடியும். அதேன் கொல்லை பக்கமா போறேன்”

நீ இப்போ அழுவையா போற?”

ஆமா புள்ள” படலையை வைத்து அடைத்துக் கொண்டான் லிங்கம்.

அண்ணே நீ அழுவு, நான் ஆரும் வராம பாத்துகிடுதேன். நீ அழுவி முடிச்சதும் வெளிக்க வா” அந்த மறைவின் வாசலில் நின்றுக் கொண்டாள் அன்பு.

சிறிது நேரத்தில் முகத்தை அழுந்த துடைத்தபடி வெளியில் வந்தான் லிங்கம்.

அழுவி முடிச்சுட்டேன் வா புள்ள”

ஒரு வா சாப்பிட்டு போண்ணே, சோகமா வேற இருக்க, தெம்பா சாப்பிட்டு செலுவி கூடாக்க பேசு. அவ பேசுவா?”

அழுவச்சையே கெழுத்தி மீன் வாசம் வந்திச்சு புள்ள. அதேன் சீக்கிரமா அழுவிட்டு வந்துட்டேன். சீக்கிரம் சோத்தை போடு” பெரிய இலையை விரித்து அமர்ந்து விட்டான் லிங்கம்.

இவனின் அழுகை நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த, அன்புவின் மதனி அவனை முறைத்துக் கொண்டே வந்தார்.

இதுக்கெதுக்கு பரட்டை மண்டையா அலையணும், மொட்டையாவே சுத்தலாமே நாலு வீட்டுல சோறு கூடாக்க போடுவாகளே” காட்டமாய் உரைக்க,

புள்ள அன்பு, துண்டு மீனை சோத்துக்குள்ள மறைச்சு கொண்டு வா புள்ள. காக்கா கூட்டமா சுத்துது” மதனியை பார்த்துக் கொண்டே உரைத்தான்.

மதனி, அந்த பட்டில இருக்க கம்பை எடுத்து காக்காவை விரட்டு, அண்ணே பாவம் சாப்பிடாம இருக்காம்” அங்கிருந்து குரல் கொடுத்தாள்.

நீ இப்படி கோட்டி மாதிரி இருக்க அதேன், பரட்டை காக்கா எல்லாம் உன்னை ஏமாத்துது” பல்லை கடித்தார் அவர்.

அன்பு குளத்தில் இருந்து மீன் பிடித்துக் கொண்டு வரும் பொழுதே லிங்கம் பார்த்துவிட்டான். அன்பு மிகவும் வெகுளி. குழந்தை தனம் மாறாதவள், எல்லாரையும் ஈஸியாக நம்பிடும். அது தான் அப்பப்ப வந்து லிங்கம் ஏதாவது சொல்லி அவளிடம் வாங்கி தின்னுவான். என்ன ஆனாலும் அவனுக்கு சோறு முக்கியம்.

மதிய உணவை அன்பு வீட்டில் கழித்தவன் வயலை நோக்கி நடந்தான்.

அழகு இன்று ஐயாவை அழைத்துக் கொண்டு பஞ்சாயத்து செல்வதால் அவன் வர நேரம் ஆகும். ஐயா போன மாதம் அன்புக்கு கொடுத்த சிறு கன்னு குட்டியை அவிழ்த்துக் கொண்டு குளத்தாங்கரையை நோக்கி சென்றாள். கையில் மீன் குழம்பு வாளி இருந்தது.

மாலை ஆனதும் ஆலமரத்தான் வயலை நோக்கி செல்வாள் அன்பு. அந்த வயலில் தான் அவளின் ரகசியம் நிறைய ஒளிந்து கிடக்கின்றன.

error: Content is protected !!