aravalli1
aravalli1
ஆரவல்லி – 1
அடம் பிடித்துக் கொண்டிருந்த அக்கினித் தேவனை வெண்மதி துயில் எழுப்பிக் கொண்டிருந்த அதிகாலை நேரம். அந்த ஆயிரம் கதிரோனைத் துயில் எழுப்ப அவள் அள்ளி விசிறிய நீர் அனைத்தும் பனித்துளிகளாக மாறி பூமிதனில் விழுந்து, புற்களின் தலையில் ஒய்யாரமாய் கிரீடமாய் வீற்றிருந்தது. கிரீடம் தலைக்கு ஏறியதும் அந்தப் புற்களுக்கும் ஒரு தனிக் கர்வம் வந்ததோ?
கர்வத்தை அடக்கப் பிறந்தவன் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவான் என்பதையும் மறந்துத் தனி சோபையுடன் அழகுற நிமிர்ந்து நின்றன அப்புற்கள். சிறு பொழுதாய் இருந்தாலென்ன நெடுங்காலமாய் இருந்தால் என்ன, தலைக்குக் கிரீடம் ஏறிவிட்டால் இந்த நிமிர்வும் கர்வமும் தன்னால் வந்து விடுவது இயல்பு தானே!
ஆனால் எப்பிறவியிலும் எந்தக் கிரீடத்தின் மீதும் எனக்கு விருப்பமில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லும் வண்ணம் அந்தப் புற்களில் தன் பொற்பாதம் பதிய வெறுங்காலோடு அந்த சில்லிப்பை உணர்ந்த சிலிர்ப்போடு ஓடிக் கொண்டிருந்தான் ஆராதித்தன். அவன் காலடி பட்டுப் புற்களின் கிரீடங்கள் உருகிச் சிதறின.
விசாலாட்சி – தங்கவேலு தம்பதியருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் ஆராதித்தன் இளையவன் அர்ஜூன். இருவருக்கும் இடையே முழுதாக இரண்டு வருட இடைவெளி கூட கிடையாது. ஆகையால் அண்ணன் தம்பி என்பதையும் தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள்.
எந்த அளவிற்கென்றால் ஆராதித்தன் செய்யலாம் என நினைத்த விடயத்தை அவன் கூறும் முன்பே செய்து முடித்திருப்பான் அர்ஜூன். அர்ஜூனுக்குப் பிடித்தம் என்று தெரிந்தால் தன் தலையைக் கொடுத்தேனும் அதை நிறைவேற்றி வைப்பான் ஆராதித்தன்.
இவர்கள் இருவரின் இந்த ஒற்றுமையைக் கண்டு விசாலாட்சிக்கும் தங்கவேலுவிற்கும் அளவுகடந்த மன மகிழ்ச்சி மற்றும் திருப்தி. பருவ வயதைக் கடந்துவிட்டாலே பங்காளிகள் என்று இன்றைய பெரும்பாலானோர் இருக்க இவர்கள் இருவரின் ஒற்றுமையைக் கண்டு அந்த ஊரே வியக்கும்.
அண்ணன் தம்பி இருவரும் போகும் பாதை வெவ்வேறாய் இருந்தாலும் போய்ச் சேரும் இலக்கு என்பது எப்பொழுதும் ஒன்றாகத் தான் இருக்கும். இப்பொழுதும் அவர்களின் சொந்தத் தென்னந்தோப்பில் தான் அண்ணன் தம்பி இருவரும் ஓட்டப்பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
ஆராதித்தன் ஒரு புறம் சென்றானென்றால் அர்ஜூன் வேறு வழியாக சுத்தி வருவான். அளவிற் பெரிதான அந்தத் தென்னந்த்தோப்பைச் சுற்றி ஒரு பார்வை பார்த்தாற் போலவும் ஆயிற்று, உடற்பயிற்சி செய்தாற் போலவும் ஆயிற்று. ஆராதித்தனின் வேக ஓட்டம் மித ஓட்டமாக மாறி நடைப் பயிற்சியாக மாறியிருந்த பொழுது அவர்கள் தோப்பின் கடைசிக்கு வந்து சேர்ந்திருந்தான்.
சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு தியானம் செய்வதற்காக எப்பொழுதும் அமரும் சிறு பாறைத் திட்டின் மீது ஏறி அமர்ந்தான். எப்பொழுதும் போல் தூரத்தில் தெரியும் ஒற்றைப் பனை மரமும் அதற்கு மேலே பொட்டு வைத்தாற் போலக் காலை நேரச் சூரியனும் அதனைச் சுற்றி பனை மட்டைகள் விரிந்திருக்கும் காட்சி மனதைக் கொள்ளை கொண்டது.
இக்காட்சி அவனுக்கு மிகவும் பிடித்தமான மற்றும் மனதிற்கு மிக நெருக்கமான ஒன்று. புகைப்படம் எடுப்பதென்பது ஆராதித்தனுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. அவனைப் பொறுத்த வரை அது ஒரு மிகச் சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர்.
ஆராதித்தன் பொழுதுபோக்காக எடுத்துத் தள்ளும் படங்களை முறைப்படி சந்தைப்படுத்தி அதற்குரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவன் அர்ஜூன். சென்ற ஆண்டு இதே பனைமரச் சூரியன் படம் ஆராதித்தனுக்கு நேஷனல் ஜியோகரபி சேனல் வழங்கும் உலக அளவிலான சிறந்தப் புகைப்படத்திற்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
அன்றிலிருந்து அவனது பிற புகைப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிட்டியது. அதனால் வெளியில் பனைமரச் சூரியனையும் உள்ளுக்குள் தன் தம்பியையும் நினைத்து ஒரு இளம் முறுவலை உதட்டில் படரவிட்டபடியே கண் மூடி தியானத்தில் அமர்ந்தான் ஆராதித்தன்.
சில நிமிடங்களில் அவன் உதட்டில் உறைந்திருந்த புன்னகை மாறி ஒரு கடினத்தன்மை வந்து ஒட்டிக் கொண்டது முகத்தில். அவன் மனம் ஒருமுகப் படாமல் ஏதேதோ சிந்தனை வயப்பட்டிருப்பதற்கு அடையாளமாகப் புருவங்கள் முடிச்சிட்டுக் கொண்டது.
ஆராதித்தனின் ஆழ்மனதில் கலங்கலாய் ஒரு உருவம், ஆனால் அந்த உருவத்தின் கண்கள் மட்டும் அவனிடம் பேசுவது போல ஒரு பிரமை. அக்கண்ணைக் கண்ட மாத்திரத்தில் ஆழ்கடலென மனதில் ஒரு இதமான அமைதி உருவாகும் அதே சமயம் அலைகடலென மனதில் ஒரு ஆர்ப்பரிப்பும், இனம்புரியாத கோபமும் சேர்ந்தே உண்டானது.
ஒரே விஷயத்திற்காக மனதில் இருவேறு உணர்ச்சிகள் தோன்றுமா? குழம்பிப் போனான் ஆராதித்தன். அத்தோடு தெளிவில்லாமல சிற்சில குரல்கள், காட்சிகள்…
‘மறுக்க இயலாமல் மறக்கிறேன்’
‘இமைகளுக்குச் சற்று ஓய்வு கொடுங்கள் இளவரசி, தங்களது நேத்திரங்கண்ட மீனினங்கள் அனைத்தும் தன்னை விட அழகான ஒன்றைக் கண்டு குழம்பிப் போயுள்ளன.’
‘யார் இந்த ஆரவல்லி’
இப்பொழுதும் மார்பில் வாளை வைத்துக் குத்தினாற் போல சுரீரென்று ஒரு வலி ஆராதித்தனைத் தாக்கியது. அதற்கு மாறாக அடுத்த கணமே ஆரவல்லி என்ற எழுத்து தன் மார்பில் இருப்பது போலவும் அதை மென்பஞ்சு விரல்கள் தடவிக் கொடுப்பது போன்ற சில்லென்ற உணர்வு.
‘காதல் கொள்ளா பெண்டிர் ஊடல் கொள்ளுவதில்லை இளவரசி’
‘இரணதீரரே’
தேனைக் குழைத்தெடுத்தாற் போன்றதொரு குரல் ஆராதித்தனின் காதில் மீண்டும் மீண்டும் ஒலிக்க அதற்கு மேலும் தியானத்தைத் தொடர முடியாமல் கண் விழித்தான் ஆராதித்தன். உடல் மொத்தமும் தெப்பமாக நனைந்து போயிருந்தது. இன்னும் உடலில் சிலிர்ப்பு மிச்சமிருந்தது.
சிறு வயதிலிருந்தே தந்தையின் விருப்பப்படி யோகக்கலையை முறையாக முழுதாகக் கற்றுத் தேர்ச்சி பெற்றவன் ஆராதித்தன். எத்தனையோ முறை கடினமான சந்தர்ப்ப சூழ்நிலைகளில் கூட ஐந்து நிமிடங்களில் அவனால் மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் அமர முடியும். இப்பொழுது சமீபத்தில் சில நாட்களாகத் தான் இப்படி மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் தவித்துப் போகிறான்.
‘என்ன இது? எப்ப தியானத்துல உட்கார்ந்தாலும் இப்படியே தோனிகிட்டு இருக்கு. நாளையில இருந்து முதல்ல இடத்தை மாத்தணும். அப்பவும் சரியா வரலைன்னா குருஜியைப் போய் பார்த்துக் கேட்டுட்டு வரணும்’ மனதிற்குள் எண்ணியவாறே ஆராதித்தன் அந்த இடத்தை விட்டு எழப் பார்க்கவும் அர்ஜூன் அவனைத் தேடி வரவும் சரியாக இருந்தது.
“என்ன ஆதி, இன்னைக்கும் பாதியிலேயே எழுந்திருச்சிட்டியா? அதே கண்ணுதானா?” கேட்டபடியே ஆராதித்தன் அருகில் வந்து அமர்ந்தான் அர்ஜூன். வீட்டிலும் சரி மற்றவர்களுக்கும் சரி ஆராதித்தன் எப்பொழுதுமே ஆதி தான். அண்ணன் தம்பி இருவருக்குள்ளும் எந்தவித ஒளிவு மறைவும் இருந்ததில்லை ஆதலால் இந்தக் கண்கள் பற்றிய விஷயத்தையும் அர்ஜூனிடம் பகிர்ந்திருந்தான் ஆராதித்தன்.
“ஹ்ம்ம்ம்…” ஒரு பெருமூச்சு மட்டுமே பதிலாக வந்தது ஆராதித்தனிடமிருந்து.
“இதுக்குத் தான் ஓவரா படிக்கக் கூடாதுங்குறது. ரொம்பப் படிச்சா இப்படித்தான் ஆகுமாம்.”
“ஆஹான்…” ஒற்றைப் புருவம் உயர்த்தி ஆராதித்தன் பதிலளித்த அழகில் அசந்து போனான் அர்ஜூன்.
“அழகன் ஆதி நீ.”
“நீயும் தான் டா அழகன்…”
“ம்கூம்… நீ தான் மெச்சிக்கணும். நம்ம ரெண்டு பேரும் ரோட்டுல ஒன்னா நடந்து போனா எல்லா பொம்பளைப் புள்ளைகளும் நம்மளைத் தான் பாக்குதுங்க. நம்மளையும் புள்ளைக பாக்குதுகளேன்னு காலரைத் தூக்கி விட்டுட்டு கெத்தா நான் மட்டும் தனியா நடந்து போனா ஒருத்தியும் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேங்குறாங்க.”
“ஆக, இதுதான் ஜாகிங் முடிஞ்சு டெய்லி நீ எங்கூட வர்றதுக்குக் காரணம்… இரு இரு இப்பவே வீட்டுக்குப் போனதும் நம்ம அம்மாக்கிட்ட போட்டுக் குடுக்குறேன்”
“ஹ… நீ இதைப் போட்டுக் குடுத்தா நான் அந்தக் கண்ணு மேட்டரைப் போட்டுக் குடுப்பேன்ல” கெத்தாகப் பதிலளித்தான் அர்ஜூன்.
“ஏன் டா ஏன்? அது யாரு? என்ன? எதுவும் எனக்குத் தெரியாதுடா. நீ பாட்டுக்கு எதாவது சொல்லி வைக்காதே. அப்புறம் அம்மா பாட்டுக்கு என்னைக் கூட்டிக்கிட்டு ஊரு ஊரா மந்திரிக்க கிளம்பிடப் போகுது” அலறி அடித்துக் கொண்டு பதிலளித்தான் ஆராதித்தன்.
“நான் நினைக்கிறேன் போன ஜென்மத்துல நீ அந்தப் பொண்ணை ஏதோ ஏடாகூடமா பண்ணி அம்போன்னு விட்டிருக்கணும். அதான் இப்ப ஆவியா உன்னை பாலோ பண்ணுது போல!”
“அடப்பாவி, என்னமோ நேர்ல பார்த்த மாதிரியே சொல்றியே டா. அது ஆவியாவே இருந்தாலும் இந்தப் பாவிக்கு அந்த ஆவியே மேல்” சொல்லியபடியே தம்பியின் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தான் ஆராதித்தன்.
“ஆ… வலிக்குது ஆதி” அர்ஜூன் கொஞ்சம் முகம் சுருங்கவும் முதுகைத் தடவிக் கொடுத்தான் ஆராதித்தன். அடிப்பவனும் அவனே அணைப்பவனும் அவனே. சகோதரர்கள் இருவரும் பேசிக் கொண்டே இருக்க தூரத்தில் எங்கோ யானை பிளிறும் சத்தம் கேட்டது.
மலையடிவாரத்தில் அந்தத் தோப்பு அமைந்திருப்பதால் காட்டுக்குள்ளிருந்து அவ்வப்பொழுது யானைகள் தோப்பை எட்டிப் பார்ப்பதுண்டு. இவ்வளவிற்கும் மலையடிவாரத்திற்கும் தோப்பிற்கும் இடையில் அகழி போல பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருக்கும். அதையும் தாண்டி யானைகளின் வருகை அடிக்கடி நடக்கும்.
மற்ற தோப்புக்காரர்கள் அனைவரும் பதட்டத்தில் இருக்க அண்ணன் தம்பி இருவருமே அதை ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதற்குக் காரணம்…
இவர்களின் சொந்த ஊர் மேட்டுப்பாளையம். சுற்றிலும் மலை முகடுகளுக்கு நடுவில் மலைகளின் ராணியாம் உதகமண்டலத்தின் மலை அடிவாரம் இந்த மேட்டுப்பாளையம். இயற்கை அன்னை தன் கொடையை வாரி வழங்கி இருக்கும் இயற்கை எழில் நிறைந்த வளர்ந்து வரும் நகரம்.
ஆராதித்தன் பள்ளிப் படிப்பை முடித்த வருடம் அவர்களுடைய தந்தை தங்கவேலு இயற்கை எய்தி இருக்க, அந்த வயதிலேயே தாய் மற்றும் தம்பியைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஆராதித்தனுக்கு வந்தது. அதுவரை விளையாட்டுச் சிறுவனாக இருந்தவன் அதன் பிறகு மொத்தமாக மாறிப் போனான்.
தங்கவேலு பெரிதாக சொத்து ஒன்றையும் சேர்த்து வைக்கவில்லை. அவர் விட்டுச் சென்றதெல்லாம் நல்லா வாழ்ந்த குடும்பம் என்ற பெயரை மட்டும் தான். ஒரு காலத்தில் சொந்தமாக வீட்டில் யானை வளர்த்த குடும்பம் அவர்களுடையது. செல்வோம் என்ற சொல்லுக்கிணங்க செல்வம் அவர்களை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக செல்ல, அனைத்தையும் இழந்து நின்றது அக்குடும்பம்.
கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக வீட்டில் வளர்த்த யானை, அதைப் பணப் பற்றாக்குறையால் இழக்க நேர்ந்ததை எண்ணி எண்ணியே தங்கவேலு உயிரைவிட்டார். முதுமலை யானைகள் சரணாலயத்தில் சென்று விட்டு வந்த அன்று குடும்பமே இடிந்து போனது. அவருக்கடுத்து அந்த யானை மேல் உயிரையே வைத்திருந்தவன் ஆராதித்தன்.
அர்ஜூனைப் பொறுத்த வரையில் சிறு வயதில் இருந்தே அவன் மனதில் பதிந்த விடயம் என்னவென்றால் அந்த யானை ஆராதித்தனுடையது. இது அவன் மனதில் ஆழப் பதிந்து போனதால் அவன் கொஞ்சம் ஒதுங்கித் தான் இருப்பான் யானையிடத்தில்.
யானைகள் பொதுவாக எல்லோரையும் தன் மீது ஏற அனுமதிப்பதில்லை. வளர்த்தவர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கும். சவாரி செல்வதற்காகவே பழக்கப்பட்ட யானையாக இருந்தாலும் அதன் மீது பாகன் அமர்ந்திருந்தால் மட்டுமே யானை மற்றவர் ஏற அனுமதிக்கும் பாகனின் சொல்லுக்கிணங்கி.
அப்படி ஏறும் பொழுதும் தன் ஒற்றைக் காலை மட்டுமே தூக்கிக் கொடுக்கும் மேலே ஏறுவதற்கு. ஆனால் ஆராதித்தன் வீட்டில் வளர்ந்த யானை அவனைத் தன் தும்பிக்கை வழியாக மேலே ஏற்றிவிடும். இச்சலுகை அவன் தந்தைக்குக் கூடக் கிடையாது. ஆராதித்தனுக்கு மட்டுமே.
அப்பேற்பட்ட அவன் பிரியத்துக்குரிய யானையைப் பிரிந்தது, இறக்கும் பொழுதும் கூட பெரும் சோகத்தோடே மறைந்த தந்தை, ஆகிய இவ்விரு விஷயங்களும் சேர்ந்து முன்னேற வேண்டும் என்றொரு வெறியையே கொடுத்திருந்தது ஆராதித்தனுக்கு.
வாழ்க்கை ஒன்றும் திரைப்படம் அல்லவே ஒரே பாட்டில் முன்னேறுவதற்கு. பரம்பரை பரம்பரையாக விவசாயம் பார்த்தக் குடும்பம். விவசாயத்தைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. விட்டதைப் பிடிக்க வேண்டுமானால் விட்ட இடத்தில் தானே தேட வேண்டும்.
எஞ்சிய நிலபுலன்களை மிகவும் நம்பிக்கையானவர்களிடம் குத்தகைக்கு விட்டு அந்தப் பணத்தில் தன் படிப்பைத் தொடர்ந்தான். கோயம்புத்தூர் பி.எஸ்.ஜியில் கணினித் துறையில் இளங்கலைப் பொறியியல் முடித்தக் கையோடு கேம்பஸ்சிலேயே நல்ல வேலையும் கிடைக்க இறுக்கப் பற்றிக் கொண்டு சென்னை சென்று சேர்ந்தான். வேலை பார்த்துக் கொண்டே கணினித் துறையில் முதுகலை பொறியியலும் முடிக்க அடுத்ததாக லண்டனில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது.
ஆராதித்தன் வெளியூர், வெளி நாடு என்று பறக்க அர்ஜுனோ உள்ளூரிலேயே விவசாயக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றான். அவனுக்குத் தெரியும் ஆராதித்தனின் இலக்கு என்னவென்று. அதையே தனது இலக்காகவும் மாற்றிக் கொண்டவன் அதை நோக்கித் தன் வழியில் பயணித்தான்.
ஆராதித்தன் சம்பாதித்து அனுப்பும் பணம், அர்ஜூனின் நவீன விவசாயம் பற்றிய அறிவு, விசாலாட்சியின் அனுபவ அறிவு மூன்றுமாகச் சேர்ந்து அவர்களை வெற்றி எனும் பாதையில் அடி எடுத்து வைக்க உதவியது. லண்டனில் வாழ்ந்தவன் அவர்கள் இழந்த நிலங்களை எல்லாம் மீண்டும் வாங்கிய பின்னர் தான் தாயகம் திரும்பினான்.
ஆனால் என்ன முயன்றும் அவன் யானையை மட்டும் அவனால் மீட்க முடியவில்லை. இப்பொழுதிருக்கும் சட்டதிட்டங்கள் அதற்கு இடையூறாக இருந்தது. இதற்கிடையில் கும்கி யானையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இவர்களின் யானை, காட்டு யானைகளுடன் நடந்த சண்டையில் மோசமாக அடிபட்டு இறந்தும் போனது.
“ஆதி இந்த வாரம் முதுமலை யானைகள் காப்பகத்துக்குப் போயிட்டு வருவோமா?” சரியாக ஆராதித்தனின் நாடியைப் பிடித்தான் அர்ஜூன். மாறன் இல்லாத போதும் அடிக்கடி முதுமலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான் ஆராதித்தன்.
“ஆமா அஜூ, இந்த வாரம் கண்டிப்பா போகணும். சரி வா இப்போ வீட்டுக்குக் கிளம்பலாம். இந்நேரம் நம்ம அம்மா கச்சேரியை ஆரம்பிச்சிருக்கும்.”
“நீ முன்னாடி போ ஆதி. நான் நம்ம கரும்புத் தோட்டம் விஷயமா அந்த அக்ரி ஆபீசரைப் பார்த்துப் பேசிட்டு வந்துடறேன்.”
“சரி காலங்கார்த்தால வெறும் வயித்தோட ரொம்ப நேரம் இருக்கக் கூடாது அஜூ. சீக்கிரம் வீடு வந்து சேரு” சொல்லிவிட்டு ஆராதித்தன் வீட்டை நோக்கிச் செல்ல,
இங்கு வீட்டிலோ,
“அடியே மங்கை… மங்கை… எங்கடி போய் தொலைஞ்ச?” என்றுக் காட்டுக் கத்தலாகக் கத்திக் கொண்டிருந்தார் விசாலாட்சி.
“இதோ வாறேனுங்க ஆத்தா” என்றபடியே இடுப்பைப் பிடித்துக் கொண்டு தாங்கித் தாங்கி நடந்து வந்தாள் மங்கை.
“என்னடி இப்படி நொண்டி அடிக்கிற! என்ன ஆச்சு?” அதட்டலாக விசாலாட்சி கேட்க,
“எல்லாம் உங்க மகனால வந்த வினை தான். அம்மா வலிக்குதே” நிற்கக் கூட முடியாமல் மங்கை புலம்ப,
“ஆத்தி! என்னடி சொல்ற?” என்றபடி நெஞ்சில் கையை வைத்துக் கொண்டார் விசாலாட்சி.
“கத்திக்கிட்டே கிடக்குதே, தண்ணி வைக்காலாமுன்னு பக்கத்துல போனேன் ஆத்தா. முட்டித் தள்ளிடுச்சு” இடுப்பைப் பிடித்துக் கொண்டு முகத்தை சுளித்து மங்கை சொன்ன பதிலில் விசாலாட்சிக்குப் போன உயிர் மீண்டு வந்ததுப் போல இருந்தது.
“அட கூறு கெட்டவளே சொல்றதை விவரமா சொல்ல மாட்டியா? இப்படித்தான் மொட்டையா உங்க மகனால வந்துச்சுன்னு சொல்லுவியா? நான் ஒரு நிமிசம் பயந்தே போயிட்டேன்.”
“ம்கூம் ஒன்னுக்கு ரெண்டு விஸ்வாமித்ரரைப் பெத்து வைச்சுக்கிட்டு இந்த ஆத்தாவுக்கு இந்தப் பயத்துக்கு ஒன்னும் குறைச்சலில்லை” மெல்லிய குரலில் மங்கை முனுமுனுத்தாலும் அது தெளிவாகவே விசாலாட்சி காதில் விழுந்தது.
“அங்க என்னடி முனுமுனுப்பு? விஸ்வாமித்ரரா இல்லாட்டி போனா உன்னைப் போல ஆளுங்களை எல்லாம் எப்படி சமாளிக்கிறதாம்? நீ எதுக்குடி கொம்பன் கிட்ட போன?”
‘கொம்பன்’ யானையின் பிரிவிற்குப் பிறகு, ஆராதித்தன் இந்தியா வந்து சேர்ந்தப் புதிதில் ஒரு மாதக் கன்னுக்குட்டியாக அவனுடைய பிறந்த நாளுக்காக அர்ஜூனால் பரிசளிக்கப்பட்ட காளை. வந்த கொஞ்ச நாட்களிலேயே கொம்பன் நன்றாக ஆராதித்தனிடம் ஒட்டிக் கொண்டது.
இப்பொழுது வெறும் மூன்று வருடங்கள் தான் ஆகிறது. வயதால் மட்டுமே சிறியது, ஆனால் உருவத்தில் கனகம்பீரமாகக் காட்சியளிக்கும். காங்கேயம் காளை வகையைச் சார்ந்தது. முன்னும் பின்னும் கறுப்பு நிறத்திலிருக்க நடுவில் மட்டும் வெள்ளை நிறமிருக்கும்.
வட்ட வடிவில் வளைந்த கொம்புகளும் திமிறும் திமிலுமாக கம்பீரமாக கொம்பன் நடை போட்டால் எதிரில் எவரும் வருவதற்கு அஞ்சுவர். விசாலாட்சியைப் பொறுத்தவரை ஆராதித்தனைப் போல, அர்ஜூனைப் போல கொம்பனும் அவருக்கு ஒரு மகன் தான். அந்தக் கொம்பனிடம் தான் இப்பொழுது மங்கை வாங்கிக் கட்டிக் கொண்டது.
“ஹப்பா பாம்பு காது ஆத்தா உங்களுக்கு” மங்கை விடாமல் கடுப்படிக்க,
“பாம்புக்கு ஏதுடி காது?” என்றார் விசாலாட்சி.
“அதானுங்களே ஆத்தா! பாம்புக்குத் தான் காதே கிடையாதே, அப்புறம் ஏன் அப்படிச் சொல்றாங்க?” கன்னம் தட்டி யோசிக்கத் தொடங்கினாள் மங்கை.
“யார்றி இவ? காலங்கார்த்தால வேலை எம்பூட்டு கிடக்குது. எல்லாத்தையும் விட்டுப்புட்டு இப்பத்தான் வியாக்கியானம் பேசிக்கிட்டு இருக்கா. போ போ போய் ஒழுங்கா வேலையைப் பாரு.”
“ஐயையோ, இதுக்கு மேல என்னால வேலை பார்க்க முடியாதுங்க. நான் வூட்டுக்குப் போறேனுங்க ஆத்தா. நான் போயிட்டு என்ர ஆத்தாளை வரச் சொல்றேன்.”
“அதை முதல்ல செய்டியம்மா. எனக்கு வேலையாவது நடக்கும். உன்ர ஆத்தா இருக்குற இடமும் தெரியாது, வந்து போன தடமும் தெரியாது. சத்தமில்லாம தானுண்டு தான் வேலை உண்டுன்னு இருப்பா. அவளுக்குப் போய் இப்படி ஒரு புள்ள” விசாலாட்சி நொடித்துக் கொள்ள,
“உங்களுக்கு ஒத்தாசை பண்ண காலங்கார்த்தால ஓடி வந்தேன் பாருங்க, என்னைச் சொல்லணும். உங்க பெரிய பையன் ஆளுதான் முசுடுன்னு பார்த்தா அவரு வளர்க்குற மாடுமில்ல முசுடா இருக்கு. இந்த முட்டு முட்டிடுச்சே, என் இடுப்பு போச்சு.” கிட்டத்தட்ட அழுகைக்குச் சென்று விட்டது மங்கையின் குரல்.
“சரி சரி கோவிச்சுக்காதடி. நீ போ. இன்னைக்கு காலேசு இருக்கில்ல? போய் கிளம்பு போ. இதையே சாக்கா வைச்சுக்கிட்டு காலேசுக்கு மட்டம் போட்டுடாத. போகும் போது அடுப்படில இட்லி வைச்சிருக்கேன் எடுத்துட்டுப் போ. ஏதோ பரீட்சைக்குப் பணம் கட்டணும்னு சொன்னியே பெரியவன் கிட்ட சொல்லி வாங்கி வைச்சிருக்கேன். இட்லி டப்பா கீழ தான் வைச்சிருக்கேன். அதையும் எடுத்துட்டுப் போ.”
விசாலாட்சியின் தூரத்து உறவுமுறைப் பெண் தான் மங்கையின் தாயார். சற்றுக் கஷ்ட ஜீவனுமுள்ள குடும்பம். அதனால் கொஞ்சம் கூடக் குறைய கவனித்துக் கொள்வார் விசாலாட்சி. அந்த உரிமையில தான் மங்கை இவ்வளவு வாயடிப்பதும்.
“ரொம்ப தேங்க்ஸ் ஆத்தா” மங்கை வாயெல்லாம் பல்லாகப் பதிலளிக்க,
“இந்த வாய் தானே என்ர மகனைக் கொஞ்ச நேரத்துக்கு முன்ன முசுடுன்னது?” சொல்லி மங்கையின் கன்னத்தில் ஒரு இடி இடித்தார் விசாலாட்சி.
“நீ வேணா பாருடி, என்ர மகன் ராசகுமாரனாக்கும். அவனுக்கேத்த ராசகுமாரியை நான் தேடிக் கண்டுபிடிக்கலை என்ர பேரு விசாலாட்சி இல்ல” சரியாக விசாலாட்சி இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் நேரம் ஆராதித்தன் அவரைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தான்.
“ராஜகுமாரி எல்லாம் வேண்டவே வேண்டாம்மா. என்னை எனக்காகவே பார்த்துப் பார்த்துக் கவனிச்சுக்கிற ஒரு பொண்ணு இருந்தா போதும்” ராஜகுமாரி என்ற வார்த்தையைக் கேட்ட மட்டில் அதனைத் தீர்மானமாக மறுத்து இப்படி ஒரு பதிலைக் கொடுத்திருந்தான் ஆராதித்தன்.
எதற்காக இப்படிப் பேசினான் என்பது அவனுக்கும் புரியவில்லை, மங்கையையும் வைத்துக் கொண்டு இவனென்ன இப்படிப் பேசுகிறான் என்று யோசித்துக் கொண்டிருந்த விசாலாட்சிக்கும் புரியவில்லை.