Rainbow kanavugal-37

37

புயல் காற்று வலு பெற தொடங்கியதாக தொலைகாட்சிகள் அலறி கொண்டிருக்க, அதன் எதிரொலியாக அன்றைய இரவு பேய் மழை பெய்து கொண்டிருந்தது.

“மழை இப்போதைக்கு நிற்காது போல… நான் பேசாம கடைக்கு குடை பிடிச்சிட்டு போயிட்டு வந்துடுறேன்” என்று சொல்லி கைகளில் குடையை ஏந்தி கொண்டு வெளியே வந்த தாமு எதிர்ப்பட்டு வந்த மகளை பார்த்து திகைக்கலானார்.

“என்னடா கண்ணு? இந்த கொட்டுற மழையில வந்திருக்க” என்று கேட்க, அவள் பதிலேதும் சொல்லாமல் சோர்வாக உள்ளே சென்றுவிட்டாள்.

வெளியே எட்டி பார்த்த தாமு, “அஜய் எங்கே காணோம்… உன்னை விட்டுட்டு உடனே கிளம்பிட்டாரா?” என்று வினவ,

“அஜய் என் கூட வரல” என்றவள் சோபாவில் சென்று அமர, தாமு அதிர்ச்சியானார்.

இப்படி கொட்டும் மழையில் அஜய் எப்படி இவளை தனியாக அனுப்பியிருக்க முடியும் என்று அவர் குழப்பமுற, சமையலறையிலிருந்து வெளியே வந்த நந்தினியும் அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்திருக்கும் மகளை பார்த்து அதிர்ச்சியானார்.

பின்னர் மகளிடம் தாமுவை போலவே, “ஆமா… அஜய் எங்கே?” என்று அதே கேள்வியை வினவ மது கடுப்பாகி,

“நான் இங்க ஒருத்தி உட்கார்ந்திருக்கேன்… அது உங்க இரண்டு பேர் கண்ணுக்கும் தெரியுதா இல்லையா? சும்மா அஜய் எங்கே அஜய் எங்கேன்னு அவனை பத்தியே கேட்டுட்டு இருக்கீங்க” என்று பொறிந்து தள்ள,

“இல்ல டா… மழை இப்படி பெஞ்சிட்டு இருக்கும் போது நீ தனியா எப்படி வந்தன்னு” என்று தாமு சொல்ல,

“என்னாச்சு மது? உனக்கும் அஜயிற்கும் ஏதாச்சும் பிரச்சனையா?” என்று நந்தினி மகளின் மனநிலையை சரியாக உணர்ந்து கேட்டார்.

“நந்து ப்ளீஸ்… எனக்கு பசிக்குது… முதல சாப்பிட ஏதாச்சும் கொடு… அப்புறமா நான் நடந்த எல்லாத்தையும் விலாவரியா சொல்றேன்” என்றவள் சொன்ன மறுகணமே மகளுக்கு உணவு தயாரித்து எடுத்து வந்து வைத்தார். அவள் உண்டு முடிக்கும் வரை இருவருமே ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

மது கை அலம்பிவிட்டு அவர்கள் இருவரையும் நிதானமாக பார்த்து, “சாரி… ஏதோ டென்ஷன்ல வந்ததும் வராததுமா உங்க இரண்டு பேர்கிட்டயும் எரிஞ்சு விழுந்துட்டேன்” என்க,

“அதெல்லாம் பரவாயில்ல… முதல என்ன நடந்துதுன்னு சொல்லு… ஏன் நீ தனியா கிளம்பி வந்த… அஜய் தம்பி எப்படி இந்த மழையில உன்னை தனியா அனுப்பிவிட்டுச்சு” என்று

“அவன் ஒன்னும் என்னை அனுப்பிவிடல… நான்தான் கிளம்பி வந்தேன்”

“ஏன்?” என்று தாமுவும் நந்தினியும் ஒரு சேர கேட்க,

“புருஷங்கிற ஒரே காரணத்துக்காக அவன் என்ன தப்பு செஞ்சாலும் ஏத்துக்கணுமா? என்னால அப்படி எல்லாம் முடியாது… தான் குடும்ப மானத்தை காப்பாற்ற ஒரு அப்பாவி பொண்ணு பலியாகணும்னு நினைக்கிறது எல்லாம் உச்சபட்ச சுயநலம்” என்றவள் சீற்றமாக வெடித்து கொண்டிருந்தாள்.

தாமு பேச்சற்று நிற்க நந்தினி மகளிடம், “எனக்கு நீ சொல்றது ஒன்னும் புரியல… குடும்ப மானத்தை காப்பாத்தன்னா?” என்று அவர் குழப்பமாக,

“ஐயோ! நந்து… அந்த அனு செஞ்சிருக்க வேலையெல்லாம் என்னால சொல்ல கூட முடியல… அப்படி ஒரு வேலை பார்த்து வைச்சிருக்கா… சுரேஷ் மார்டர்  கேஸ்ல போலிஸ் இன்வெஸ்டிகேஷன் பண்ணா எங்க அனுவோட கதை மொத்தமும் தெரிஞ்சிட போகுதோன்னு பயந்து… அஜய் அந்த கேசை விசாரிக்கிற இன்ஸ்பெக்டரை தான் கைக்குள்ள போட்டுகிட்டான்… அந்த ஆளும் பணம் வாங்கிட்டு கேசை சீக்கிரம் முடிக்க மொத்த பழியையும் தூக்கி சரவணன் பொண்டாட்டி மேல போட்டுட்டான் ” என்றவள் சொல்லி முடிக்கும் போது

நந்தினி அதிர்ந்து, “அப்போ அந்த அனுதான் கொலை பண்ணதா?” என்று கேட்டார்.

“உஹும் இல்ல… அனு இதை செய்யல… எனக்கு தெரியும்” என்றவள் யோசனையாக அவர்கள் இருவரையும் நிமிர்ந்து பார்த்து,

“ஆனா யார் இதை செஞ்சி இருப்பான்னு என்னால கெஸ் பண்ண முடியல… சுரேஷுக்கு ஒருவேளை முன்னாள் எதிரிங்க இருப்பாங்களா இல்ல அனுவோட ப்ரொபெஷனல் ரீதியான எதிரிங்களா இருப்பாங்களோ? இப்படி யோசிச்சு யோசிச்சு எனக்கு மண்டை காயுது” என்றாள்.

நந்தினி உடனே, “அதெல்லாம் சரிதான்… ஆனா அதுக்காக நீ மாப்பிளை கூட சண்டை போட்டுட்டு இந்த மழையில கிளம்பி வரணுமா?” என்று மகளிடம் கண்டிப்போடு கேட்க,

“அவன் என்னை இந்த கேசை நடத்த கூடாதுன்னு கண்டீஷன் போடுறான் நந்து… சத்தியமா அவன் இவ்வளவு பெரிய சுயநலவாதியா இருப்பான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல… இன்னும் கொஞ்ச நேரம் நான் அந்த வீட்டுல இருந்தேன்னு வை… ஏதாச்சும் இமோஷ்னலா பேசி என்னை வீக்காக்கிடுவான்… அதான் நான் கிளம்பி வந்துட்டேன்” என்றாள்.

நந்தினிக்கு மகளின் செயலை எப்படி எடுத்து கொள்வதென்றே புரியவில்லை.

“அஜய் தம்பி இப்போ வந்து உன்னை கூப்பிட்டாருன்னா” என்று நந்தினி கேட்க, “சத்தியமா போக மாட்டேன்” என்று சொல்லி கொண்டே அவள் அறைக்குள் நுழைய போக,

“நீ செய்றது தப்பு மது” அத்தனை நேரம் மௌனமாக நின்றிருந்த தாமு இவ்விதம் சொல்ல, மது அதிர்ச்சியாக திரும்பினாள்.

அவரே மேலும், “அஜய் வந்து கூப்பிட்டா நீ ஒழுங்கா கிளம்பி போற வழியை பாரு… அப்புறம் அந்த கேசை நீ நடத்த வேண்டாம்… இந்த மாதிரி சமயத்தில நீ கோர்ட் கேஸுன்னு அலையறது எல்லாம் சரியா வராது” என்றார். நந்தினியும் கூட கணவன் சொன்னதை நம்ப முடியாமல் பார்க்க,

மது தடாலடியாக அவர் சொன்னதுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டாள்.

“இல்ல தாமு முடியாது… சரவணனுக்கு நான் வாக்கு கொடுத்திருக்கேன்… நான் இந்த கேசை எடுத்து நடத்தியே தீருவேன்… இந்துவிற்கு எந்த பிரச்சனையும் இல்லாம அவளை வெளியே கொண்டு வருவேன்” என்று அவள் திட்டவட்டாமாக சொல்லிவிட்டு அதற்கு மேல் வாக்குவாதம் செய்ய விரும்பாமல் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

தாமுவின் முகம் இருளடர்ந்து போனது. வேகமாக தன் பேசியை எடுத்து கொண்டு பின்வாசலுக்கு சென்றுவிட, கணவரை சந்தேகமாக பின்தொர்ந்தார் நந்தினி.

அவர் தன் பேசியில் அஜயிடம் உரையாடி கொண்டிருந்ததை முழுவதுமாக கேட்டு அவர் பேச்சற்று நின்றார். தாமு பேசி முடித்து திரும்பி வந்து மனைவியை பார்த்து பதட்டமடைய,

“என்னங்க இதெல்லாம்? ஏன் இதை பத்தி முன்னாடியே நீங்க என்கிட்ட சொல்லல” என்ற கேட்க என்ன சொல்வது என்று புரியாமல் தடுமாறியவர் வேகமாக மனைவியின் கரத்தை பிடித்து அறைக்குள் அழைத்து வந்து அனைத்தையும் விளக்கமாக சொல்லி முடித்தார்.

நந்தினியின் விழிகளில் கண்ணீர் வழிந்தோடியது.

தாமு மேலும், “இதுல தப்பு யார் பேர்லன்னு எனக்கு சொல்ல தெரியல… என்னதான் நியாயம் தர்மம்னு பேசினாலும் நம்ம நேசிக்கிற உறவுக்கு முன்னாடி அதெல்லாம் தோற்று போயிடுது நந்து” என்ற போது கணவன் முகத்தை ஆழ்ந்து பார்த்து பெருமூச்செறிந்தவர்,

“எனக்கும் என்ன சொல்றதுன்னு தெரியலங்க… ஆனா மது இந்த கேசை நடத்த விட கூடாதுன்னு மட்டும் தோணுது” என்றார்.

ஆனால் யார் எதை செய்ய வேண்டுமென்பதை இங்கே யாருமே தீர்மானிக்க முடியாது.

அது அவரவர்களின் மனநிலையை பொறுத்தது. மதுவின் முடிவையும் உறுதியையும் அத்தனை சீக்கிரத்தில் யாராலும் தகர்த்துவிடவும் முடியாது.

ஒரு வேளை மதுவின் தன்னம்பிக்கையிலும் தெளிவிலும் பாதியாவது இந்துமதிக்கு இருந்திருந்தால் அவள் இத்தனை பிரச்சனைகளுக்கு ஆளாகியிருக்கவும்  மாட்டாள். இப்படியொரு முடிவையும் எடுக்க துணிந்திருக்கவும் மாட்டாள்.

ஆனால் அதில் அவள் தவறு எதுவுமில்லை. இந்த சமூகமும் அவள் வளர்ந்த சூழ்நிலையும் என்ன அவளுக்கு கற்று தந்ததோ அதன் பிரதிபிம்பமாகவே இந்துமதி இருந்தாள்.

இந்த மொத்த சமூகமே சினிமா என்ற வரையறைக்குள்தான் தங்கள் தேவைகளையும் ஆசைகளையும் தீர்மானித்து கொள்கின்றன.

அப்படியிருக்க சினிமாக்கள் மனித இனத்திற்கு பருவக்காலத்தில் உண்டாகும் இயல்பான ஈர்ப்பு என்ற சாதாரண உணர்வை மிக அதிசிய அற்புதமான தெய்வீக உணர்வாக காட்சிப்படுத்துவதன் விளைவு!

காதல் ஒன்றே இந்த பூலோக வாழ்வில் இன்றியமையாதது என்றும் காதலனோடு ஓடி போவதும் காதல் கல்யாணம் செய்வதும் ஓர் அற்புதமான உயர்ந்த நிலை என்றும் இந்த சமூதாயமும் சினிமாக்களும் ஆணித்தரமாக நம்ப வைக்க, ஏதுமறியா இந்துமதி போன்ற இளம்பெண்கள் இதற்கு பலியாகியவிடுகிறார்கள்.

வாழ்கையின் மிக முக்கியமான ஒரு முடிவை அற்பமாகவும் அவசரமாகவும் எடுத்து அதிலிருந்து மீள முடியாமல் சிக்கி சின்னாபின்னமாகிவிடுகிறார்கள்.

ஆனாலும் அனுவை போல இந்துமதி எந்த சூழ்நிலையிலும் கண்ணியமும் ஒழுக்கமும் தவறவில்லை. இருப்பினும் அவளுக்குத்தான் இந்த உலகம் ஒழுக்கங்கெட்டவள் பட்டம் கட்டிவிட்டிருக்கிறது.

நடுத்தரவர்க்கத்திற்கும் பணக்கார வர்க்கத்தினருக்குமுள்ள மிக முக்கியமான வித்தியாசங்களில் இதுவும் ஒன்று!

நடுத்தர குடும்பங்களில் வாழும் பெண்களை பற்றிய அவதூறுகள் ஒரு சிறு பொறியாக பரவினாலும் அது காட்டு தீயாக பரவி அவர்களின் வாழ்க்கையையே நிர்மூலமாக்கிவிடுகிறது.

இந்துமதியின் இப்போதைய நிலையும் கிட்டதட்ட அப்படிதான்.

காவல் நிலையத்திலிருந்து கிளம்பிய இந்துமதி அங்கே நடந்த எதை பற்றியும் சரவணனிடம் தெரியப்படுத்தவேயில்லை.

அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் தான் பதில் சொன்னதாக மேலோட்டமாக சொல்லி அவனை சமாளித்துவிட்டாள். இப்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றளவில் அவன் மனம் நிம்மதி கொள்ள, அவளோ தனக்குள்ளாகவே வேதனையில் புழுங்கினாள்.

குற்றத்தை ஒப்புக்கொண்டு அவள் வாக்குமூலம் எழுதி கொடுத்த விஷயம் மட்டும் அவனுக்கு தெரிந்தால் அவனால் நிச்சயம் தாங்க இயலாது. அந்த நொடியே அவன் மனமுடைந்து போவான்.

தன் வலி வேதனைகளை விடவும் அவன் எந்தளவு வேதனையுறுவான் என்ற கவலையே அவளுக்கு பெரிதாக இருந்தது. அவனை மேலும் மேலும் கஷ்டபடுத்தி பார்க்க அவள் விரும்பவில்லை.

இப்படியான சிந்தனைகளோடு ஜன்னலோரமாக நின்று அவள் கண்ணீர் சிந்த, வெளியே மின்னலும் காற்றும் மழையும்… நீ பெரியவனா நான் பெரியவனா என்று பலப்பரிட்சை செய்து கொண்டிருந்தது.

ஆனால் அதை விட பயங்கரமான ஒரு புயல் இந்துமதியின் உள்ளத்தை சிதறிடித்து கொண்டிருந்தது. வெளியே இருந்த சூழ்நிலையை விட அவள் மனநிலை மிகவும் மோசமாக இருந்தது.

இயல்பாக இருப்பது போல் அவள் காட்டி கொண்டாலும் சுக்குநூறாக உடைந்த கண்ணாடி துகள்கள் போல அவள் உள்ளம் நொறுங்கி போயிருந்தது அவளுக்கு மட்டுமே தெரியும்.

அந்த நிலையில் சரவணனின் கரம் அவள் தோள் மீது பதிய, அவசரமாக தன் கண்ணீரை மறைத்து கொண்டு அவன் புறம் திரும்பினாள்.

அவளை உறங்கும்படி பணித்தவன், நடக்கும் பிரச்சனைகள் யாவும் அவள் மனதை அலைகழிக்கிறது என்பது ஒருவாறு புரிந்து,

‘நாளைய தினம் எல்லாமே நல்லபடியாக நடக்கும்’ என்று மௌனமொழியில் அவளுக்கு தைரியமும் நம்பிக்கையும் சொல்லிவிட்டு மெல்ல கண்மூடி அவன் உறங்கி போக அவளுக்கோ ஒரு பொட்டு உறக்கம் கூட வரவில்லை.

யாருமோ அவளை நம்பாத போது அவன் மட்டுமே அவளை நம்பினான். யாருமே அவள் உணர்வுகளை மதிக்காதது போது அவன் மட்டுமே அவள் உண்ரவுகளை புரிந்து கொண்டான். யாருமே அவளுக்காக வந்து நிற்காத போது அவன் மட்டுமே வந்து நின்றான்.

அந்த எல்லையில்லா காதலுக்கும் அன்புக்கும் தான் இதுவரை என்ன செய்தோம். இனி என்ன செய்ய போகிறோம் என்ற கேள்வியோடு

உறக்கத்தில் ஆழ்த்திருந்த அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்திருந்தவள், நெருக்கமாக அவன் தோள் சாய்ந்து அணைத்து கொண்டாள்.

அவன் உறக்கம் கலையாத வண்ணம் அவன் முகத்தை அவள் மிருதுவாக வருடினாள். காவல் நிலையத்தில் அவளுக்காக அவன் பட்ட காயங்களின் வடுக்கள் அவள் மனதை நெகிழ்த்த, அந்த நொடி அவளுக்குள் பொங்கி பெருகிய காதல் உணர்வுகளை அவளால் கட்டுபடுத்தி கொள்ளவே முடியவில்லை.

அவன் தேகத்திலிருந்து காயங்களுக்கு தம் இதழ்களால் முத்தமென்ற காதல் மருந்தை ஒற்றினாள். மெல்ல மெல்ல முன்னேறி அவள் அவன் நெற்றியில் முத்தமிட்டு நிமிர்ந்த போதுதான் அவன் விழித்து கொண்டிருப்பதை பார்த்து அவள் விக்கித்து போனாள்.

“மாமா” என்றவள் தன் உதட்டை கடித்து கொள்ள,

இத்தனை நேரம் தான் செய்த வேலைகளை எல்லாம் அவன் அறிந்து கொண்டான் என்பதை எண்ணும் போதே  நாணத்தில் தலைகவிழ்ந்த அவள் முகம் செங்கொழுந்தென சிவக்க, அந்த அழகில் மதிமயங்கியவன் பார்வை அவன் மீது சரிந்திருந்த அவள் தேகத்திலும் அவள் தேகத்திலிருந்து நழுவியிருந்த அவள் மாராப்பின் மீதும் நிலைகொண்டது.

அதனை உணர பெற்ற மறுகணமே பெண்ணவள் அவனிடமிருந்து விலக முற்பட, அப்போது அவள் அவன் கரங்களுக்குள் சிக்கி கொண்டதும் அவள் இதழ்கள் அவன் இதழ்களுக்குள் சிக்கி கொண்டதும் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் நடந்தேறியது.

கடந்து போன ஒவ்வொரு நொடிகளிலும் அவளின் கன்னித்தன்மையும் அவனின் கண்ணியமும் மெல்ல கரைந்து போக போக அவர்களின் தாப உணர்வும் காதல் உணர்வும் பொங்கி பெருகி கொண்டே போனது.

நிறைய போராட்டங்களுக்கும் பிரச்சனைகளுக்கும்  இடையில் அந்த காதலும் கூடலும் அவர்கள் இருவருக்குமே தேவையாக இருந்தது.

வானில் திடீரென்று வரண்ஜாலங்கள் புரியும் வானவில் போல அவர்கள் உறவில் காதல் எனும் வானவில் அழகிய வர்ணஜாலங்களை நிகிழ்த்திவிட, சில நிமிடங்களிலேயே அந்த சந்தோஷம் மொத்தமும் இந்துமதியின் விழிகளில் கண்ணீராக கரைந்தும் போனது.

சரவணன் கண்ணுறங்கும் வரை பொறுமையாக காத்திருந்தவள் மெல்ல அவன் கைவளைக்குள்ளிருந்து எழுந்து வந்தாள்.

அவனை விட்டு பிரிந்த நொடி இனி எப்போது இப்படியான அணைப்பும் ஸ்பரிசத்தலும் கிடைக்க போகிறது என்று அவள் உள்ளம் தவிக்க, கண்ணீர் மீண்டும் ஆறாக பெருகியது.

அந்த மனநிலையில் அவளின் பிரச்சனை அனைத்துக்கும் ஒரே ஒரு தீர்வுதான் அவளுக்கு தோன்றியது.

எத்தனை எத்தனையோ அவமானங்களை அவள் சந்தித்த போதும் அத்தகைய முடிவை எடுக்க அவளுக்கு துணிவு வரவில்லை. ஆனால் இன்று காவல் நிலையத்தில் கிடைத்த அனுபவம் அத்தகைய முடிவை எடுக்க அவளை உந்தி தள்ளியது என்று சொன்னால் அது மிகையில்லை.

அந்த கையெழுத்து அவளின் மானம் மரியாதை என்று மிச்சம் மீதியாக எதையும் விட்டுவைக்க போவதில்லை எனும் போது அந்த உடலில் உயிர் மட்டும் மிச்சம் இருந்த என்ன சாதிக்க போகிறது என்ற அவளின் முடிவு அப்போதைய அவளின் மனநிலைக்கு சரியாகவே தோன்ற, அவள் தன் உயிரை குடிக்கும் அந்த கருவியை கையிலேந்தினாள்.

பலரின் உயிரை காப்பாற்ற பயன்படும் அந்த சிறிய கருவி இன்று அவளின் உயிரை எடுக்க பயன்பட போகிறது.

அவள் அந்த நொடி தன் கையில் வைத்திருந்த ஊசியின்(சிரஞ்ச்) மூலமாக காற்று குமிழிகளை நரம்பின் வழியாக அனுப்பி மாரடைப்பை உருவாக்கும் விபரீத முயற்சியை செய்து பார்க்க துணிந்தாள்.