Arthy Ravi’s Vilagiduvena Idhayamei – 10


ஆர்த்தி ரவியின் “விலகிடுவேனா இதயமே?”

அத்தியாயம் 10

நேன்சிக்குள் ஒரு தாக்கத்தைத் தந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றிப் பார்த்திக்கு ஒரு க்ளூ கூட இருக்கவில்லை. சாதாரணமாக எப்போதும் போல் இருந்தான். சுற்றுப்புறத்தைக் கூர்ந்து நோக்க எந்தவொரு காரணமும் இல்லையல்லவா?

அந்த விமானத்தில் ஜஸ்ட் ஒரு பயணி அவன். இதோ, விமானம் தரையைத் தொட்டு விட, இன்னும் சில நிமிடங்களில் இப்பயணம் முடிந்து விடும். பிறகென்ன? இச்சூழல் மனதில் கூட நிற்காது.

தன்னை முற்றிலும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் உயிர், மனைவியவளை எதிர்நோக்கியே அவனின் மனதும் எண்ணங்களும்.

பார்த்திபனின் மனதை எப்படி நேன்சி அறிவாள்? இப்படி ஒரு சூழலில் இருவரையும் அருகில் இழுத்து வந்தது எதுவோ? விதி! பல சமயம் நமது ப்ளேம் விதியை நோக்கித் தானே!

இந்த நேன்சி எந்தளவு பார்த்திபன் ~ ப்ரியதர்ஷினி வாழ்வில் வரப் போகிறாள் என்பதுவும் அந்த விதியினிடத்திலோ? பார்த்திபனையும் நேன்சி அறியாள். அவன் பின்னணியும் அவள் கருத்தில் இல்லை. பிறகு விதி என்ற ஒன்று அவள் நினைவில் ஏன் வரப் போகுது?

இப்போது நேன்சியின் கண்ணுக்குப்பட்டது ஒன்று தான். ஹி இஸ் அட்ராக்டிவ். ஐ லைக் ஹிம்! மைட் கெட் கிரேஸி அபௌட் ஹிம்!

ஒரு பயணம் வந்தவள், இடம் பொருள் விளைவு எனப் பார்க்காமல் தன் மனதை மெல்ல மெல்ல அலைபாய விட்டு விட்டாள். அவள் அளவில் அதில் எந்தக் குற்றமும் இல்லை. இப்போது வரை தன்னைக் கவர்ந்து இழுக்கும் ஒருவன்… அவன் விழிகளுக்குத் தன்னைத் தெரியவில்லை என்ற விசயம் மட்டுமே மிகப் பெரிதாகி அவளைத் தூண்டி விட்டு விட்டது.

தற்செயலாகப் பார்த்தியின் பார்வை இவள் மீது பட்டு இருந்தால் கூடப் போதும். நேன்சி திருப்தி அடைந்திருக்க வாய்ப்பு இருக்கு. ஆனால், அப்படி நடக்கவில்லையே!

அவளின் பிடிவாதம், ஆர்வக் கோளாறு, பார்த்திபன் மேல் தெறித்துக் கொண்டிருக்கும் ஈர்ப்பு என யாவும் அவளை ஒரு வித போதைக்குள் தள்ளியது. அந்நேரம் கொஞ்சமாவது ஆழ்ந்து சிந்தித்திருந்தால் சற்று நிதானப்பட்டிருப்பாள்.

அந்தளவு புத்திக் கூர்மையுள்ளவள் தான் நேன்சி. இல்லையென்றால் அமெரிக்காவின் முன்னோடித் தொலைக்காட்சி நிறுவனத்தின் சிறப்புச் செய்தியாளராகப் பணி புரிய முடியுமா? அதுவும் நியூயார்க் நகரத்தில்!

ஓர் உடனடி எதிரொலி தான் அவளின் தற்போதைய மனநிலை. மனித மனம் தானே! சுய கட்டுப்பாடு இல்லையெனில் அம்மனம் எவ்விதமும் சரியலாம். சறுக்கவும் செய்யும்.

இவன் யாரோ எவரோ. முதலில் ஓர் அறிமுகம் செய்து கொள்வோம் என நேன்சி நினைக்கவில்லை. தனி நபருக்குப் பஞ்சமில்லா சுதந்திரத்தை அள்ளித் தந்துள்ள மண்ணில் கால் பதித்ததும் இவளிடம் கொஞ்சநஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழ் பண்பாடு எங்கோ எங்கோ பறந்து போனது.

விமானத்தினுள் வைத்துப் பார்த்திபனை அப்ரோச் பண்ணும் முன், அவன் மிக விரைவாக விமானத்தை விட்டு வெளியேறி இருக்க, நேன்சி அவனை விட்டு விடாமல் பின் தொடர்ந்து கொண்டிருந்தாள். அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை இவளால். அத்தனை வேக நடை அவனிடம்.

ஓடிப் போய்ப் பிடிக்க முடியுமா? பீக் டைம் வேறு. அடுத்தடுத்து விமானங்கள் தரை இறங்கிக் கொண்டு இருக்க, அவற்றிலிருந்து உதிர்ந்த பயணிகள் எல்லோரும் குடியேற்றம் / வருகை பதிவு மற்றும் சுங்கச் சோதனை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் அவ்விடத்தில் பார்த்திபனைத் தவற விட்டாள் நேன்சி.

அமெரிக்கா வந்ததும் ஒரு விதக் கலவையான உணர்வுகள் ஆட்கொள்ள, பார்த்திபனிடம் அமைதியுடன் சிந்தனையும் குடி வந்திருந்தது. இமிக்ரேஷன் செக் முடித்து, பேகேஜ் க்ளைமில் தனது உடைமைகளைக் கைப்பற்றிக் கொண்டு, கஸ்டம்ஸ் செக் முடித்து வெளி வந்தான்.

நேன்சிக்கு அனைத்து ஃபார்மாலிட்டீஸூம் விரைவில் முடிந்தது. அவளிடம் கேரி ஆன் லக்கேஜ் மட்டுமே!

பார்த்திபன் ஒரு டிராலியில் பெரிய பெட்டிகள், சிறிய பெட்டி, லேப்டாப் அடங்கிய பேக்பாக் எனத் தள்ளிக் கொண்டு வந்தான். வெளி நாட்டு வருகை வாசலை விட்டு வெளியே வந்ததும் ஆழமான மூச்செடுத்துச் சுவாசித்தான்.

அப்போது அவனுக்குத் தெரியவில்லை, இனி அடிக்கடி தனக்கு மூச்சு முட்டிப் போகும் நிலை வரப் போகிறதென.

மனைவி இருக்கும் ஊரில் கால் பதித்ததாலா என்னவோ, தன் சுவாசத்தில் புத்துணர்வை உணர்ந்தான் பார்த்திபன். இதழில் புன்னகையின் மலர்வு வர, அவன் தோற்றப் பொலிவு இன்னும் கூடியது.

இளமாறன் எங்கிருக்கிறான் என அழைத்துக் கேட்பதற்காகத் தன் தொடுபேசியை இயக்கி, அதில் ஒன்றினான்.

மிகச் சரியாக அந்நொடி, புயல் வேகத்துடன் வந்து பார்த்திபனை இறுக்கமாக அணைத்திருந்தாள் நேன்சி! அத்தனை நேரம் அவனையே ரசித்திருந்தாள் போலும். துள்ளலுடன் தான் அவனருகே வந்திருந்தாள்.

பார்த்திபனுக்குச் சட்டென்று எதுவும் புரியவில்லை. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என உணரும் முன்பே, தன்னிச்சையாக அவளைத் தள்ள முயன்றான். ஏனென்றால், அத்தொடுகை தன் மனைவியினது அல்ல என்பதை நொடியில் மிகத் தெளிவாகவே உணர்ந்திருந்தான்.

ஆனால், அதற்குள் நேன்சி அவன் மேல் தன் ஈர இதழ்களைப் பதித்திருந்தாள்! கன்னத்தை நோக்கி எட்டிப் போனவளுக்குப் பம்பர் பரிசாகப் பார்த்திபனின் உதடுகளே கிட்டி விட்டன!

இந்த இடத்தில், தன் பிழையின்றிப் பிழையாகினான் பார்த்திபன்!

ஏற்கெனவே தன் வாழ்வில் தீர்க்கப்படாமலே நிற்கும் விசயம் மலை போலிருக்கும் போது, இன்னும் என்னென்ன வந்து சேர்ந்து கொள்கிறது என உள்ளே அவன் மனது அலறியது நிச்சயம்! நொடிகளிலேயே!

ஆம், அவன் என்னவோ தன்னை அணைத்திருந்த பெண்ணை உடனே ஒதுக்கி விடத் தான் முனைந்தான். நேன்சி ஒட்டி இருந்த பக்கம் தலையைத் திருப்பிச் சற்று பின்நோக்கிச் சாய்ந்தவன், அவளைப் பிரித்து எட்ட நிறுத்தும் முன், அத்தனையும் முடிந்து விட்டிருந்தது.

நேன்சி ராய்… நியூயார்க் செய்திகளில் வருபவளை நிச்சயம் பலர் அறிவர். பார்த்திபன் சற்று ஓரமாக நின்றிருந்ததால் இந்நிகழ்வை நிறையப் பேர் கண்டிருக்கவில்லை. கண்ட சிலரும் சாதாரணம் போல விலகி நடந்தனர், கடந்து சென்று கொண்டிருந்தனர்.

அமெரிக்காவைப் பொறுத்த வரை இப்படி முத்தம் கொடுப்பதும் கட்டிப் பிடிப்பதும் மிகச் சகஜமான விசயங்கள் தானே? லிப் லாக் செய்து கொண்டு, மிக ஆழ்ந்த எச்சில் முத்தங்களில் மூழ்கி இருப்பவர்களும் கூடப் பொது இடங்களில் காணப்படுவர்.

பெரிய நகரங்களில் இத்தகைய விசயங்கள் பல நடக்கலாம். நின்று கவனிக்க யாருக்கு நேரம் இருக்கிறது?

இப்போது அரங்கேறியது, ஆப்டர் ஆல் ஒரு ஜென்டில் டச்! இச்செயல் ஒரு பொருட்டே அல்ல மக்களுக்கு. அதுவும் விமான நிலையத்தில் பிரிவு, சந்திப்பு என நிகழும் போது அணைப்பும் முத்தமும் வெகு சகஜம்.

ஆனாலும் அவர்களுள் ஓரிரு நபர்கள் தங்கள் மொபைலில் முத்தக்காட்சியைச் சுவாரசியமாகப் படம் பிடித்துக் கொண்டு போனார்கள். மிகத் தற்செயலாக, எந்தப் பெரிய நோக்கமும் இல்லாமல் இப்படி எடுக்கப்படும் வீடியோக்கள் தான் வைரலாகப் பரவுவது.

அப்படி வீடியோ எடுத்தவர்களும் அடுத்து அங்கே நிற்கவில்லை. பிஸியான உலகில் பொறுமைக்குப் பஞ்சமாகிப் போயிற்று!

அவளைத் தள்ளி நிறுத்தி இருந்த பார்த்திபன், முதலில் தன்னைத் தாக்கிய அதிர்ச்சியிலிருந்து வெளி வந்திருந்தான். நேன்சியைப் பார்த்து அச்சூழ்நிலையையும் நொடிகளில் கிரகித்தவனின் முகத்தில் அக்குளிரிலும் அணலலை வீசிக் கொண்டு இருக்கையில்,

நேன்சி தான் நினைத்ததை முடித்து விட்டு, “ஹாய் ஹேண்ட்ஸம்! ஐ குடிண்ட் ரெசிஸ்ட்!” என்று விரிந்த புன்‍னகையைச் சிந்தினாள்.

அவளின் விழிகளில் வந்திருந்த பளபளப்பு, ஒரு பெரிய சாதனை புரிந்த மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டிருந்தது.

நேன்சி பேசிய வார்த்தைகள் ஏற்கெனவே பார்த்திபனின் கோபத்தை உச்சத்தில் கொண்டு போயிருக்க, அவளின் விழிகளில் வந்திருந்த பளபளப்பில் கொதிநிலையில் நின்று கொண்டிருந்தான்.

எப்போதும் பெண்களை மிக மரியாதையாக நடத்திப் பழக்கப்பட்டவனுக்கு, நேன்சியின் நடத்தை வெறியை வரவழைத்து இருந்தது. அவளை நோக்கித் தன் கையை நீட்டியே விட்டான்.

நேன்சி அப்படியே அரண்டு போய் ஸ்தம்பிக்க, அந்நேரம் சரியாக இளமாறன் இவர்கள் அருகே ஓடி வந்திருந்தான். வந்த வேகத்தில் பார்த்திபனையும் கைப் பிடித்து நகர்த்தி விட்டான். அதனால் நேன்சி நொடியில் தப்பினாள்.

பார்த்திபன் பேசியில் அழைக்கும் போதே பார்வை வட்டத்திற்குள் தான் நின்றிருந்தனர் அந்த இருவரும்! ஒருவன் இளமாறன் தான். மற்ற நபர்?

இளமாறனும், அவன் அருகிலேயே நின்றிருந்த இன்னுமொரு ஜோடி விழிகளுக்குச் சொந்தக்காரியும் நடந்தது அனைத்தையும் விழி தெரிக்கப் பார்த்திருந்தனர்.

பார்த்திபனும் இருவரையும் அப்போதே பார்த்திருந்தான். இளமாறன் அருகே நின்றிருந்தவளைக் கண்டு பெரிதாக ஷாக்கெல்லாம் இல்லை. அவளைக் கண்டு ஜஸ்ட் ஒரு யோசனை ஓடியது.

அந்த யோசனையோடு தன் புருவங்கள் சுருங்க நின்றிருந்த போது தான் நேன்சி வந்து அவனை அப்படி வெறி போல அணைத்துக் கொண்டது.

தன்னைப் பிடித்து நகர்த்திக் கொண்டிருக்கும் இளமாறனை, “டேய்! என்னை விடு! இவளை ஒரு அப்பு அப்புனாத்தேன் இதே தப்பை இன்னொரு தடவை செய்ய மாட்டா! செய்ய மாட்டா என்ன, இப்படியொரு யோசனையே வரக் கூடாது!

என்னவொரு கொழுப்பு? இப்படியா வந்து மேலே விழுவது? ச்சீ அசிங்கம்! யாரோ எவனோன்னு ஒரு யோசனை வேண்டாம்?” எனத் திமிறிக் கொண்டே கடுப்புடன் மொழிந்தான்.

தமிழ் நன்றாகத் தெரியும் நேன்சிக்கு. பார்த்திபனின் கோபம் கண்டு அவளுக்கு மிகவும் சங்கடமாகிப் போக, அவனின் வார்த்தைகள் அவளை மேலும் பதம் பார்த்தன. விழிகள் கலங்கின. உதடுகளை அழுத்திக் கொண்டு கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.

“ஆமா அவ உன் சொந்தம் பாரு! நீ அடிச்சதும் திருந்திரிரப் போறா… அவ யாரோ எவரோ! லூசுத்தனமா வந்து கட்டிப் பிடிச்சுட்டா. லூசுத்தனமா என்ன லூசே தான். இல்லைனா உன்னை வந்து கட்டிப் பிடிப்பாளா? இத்தனை கூட்டத்தில் வேற எவனுமே அவ கண்ணுக்கு அழகா தெரியலை போல. வீணா வந்து வினையை வாங்கிக் கட்டணும்னு இன்னைக்கு அவ ராசிபலன்ல இருக்கும்.”

நிலமையைச் சுலுவாக்கித் தன் நண்பனைச் சாந்தப்படுத்தவே இளமாறன் இவ்வாறு சொல்லியது.

நேன்சி மிகவும் அவமானமாக உணர்ந்தாள். அவளின் செயல் என்ன பெரிய குற்றமா, இவர்கள் இப்படிப் பேச? பிடிக்கவில்லை என்றால் உதறி விட்டுட்டுப் போக வேண்டியது தானே? இப்படித் தான் அவளின் எண்ணம் போனது. அவளின் செயல் என்ன பெரிய பாதிப்பைக் கொடுக்க முடியும்? கண்ட்ரி ப்ரூட்ஸ்!

உணர்ச்சி வேகத்தில் கால்கள் ஊன்றிப் போய் நகர மறுத்தன. தன்னை லூசு எனச் சொன்ன மற்றவனை முறைத்தபடியே நின்றிருந்தாள்.

“விடுடா மாறா! இந்தியப் பெண் இவள். பார்த்தா தமிழ் பொண்ணு மாதிரி வேற இருக்கா.”

நேன்சியின் புறம் திரும்பிய பார்த்திபன், “ஆர் யூ ஃப்ரம் தமிழ் நாடு?” எனக் கேட்டான்.

“ஆமாம்!”

அவள் தலையாட்டவும், “நான் என்ன பப்ளிக் ப்ராப்பர்டியா கண்டவங்க வந்து கட்டிப் பிடிச்சு முத்தம் வைக்க? ஹாங்! இதே இதை நான் உனக்குச் செஞ்சிருந்தா இல்லை வேற பொண்ணுக்கு செஞ்சிருந்தா? நீ பப்ளிக் வுமன் ஹராஸ்மெண்ட்னு உங்க டி. வி சேனல்ல பெரிய செய்தியா ஓட விட்டு, என்னைக் கிழி கிழின்னு கிழிச்சு உள்ள தூக்கி வச்சு இருப்ப இல்லையா?” எனக் கேட்டுக் கோபத்துடன் முறைத்தான்.

‘இவனுக்கு நான் டி. வி நியூஸ் ரிப்போர்ட்டர்ன்னு தெரியுமா?’

“என்ன முழிக்கிற? உங்க நியூஸ் சேனலை ஃபாலோ பண்றேன். உன் டீடெயில்ஸ் தெரியாதுன்னாலும் நம்ம நாட்டுப் பெண் ன்னு தெரியும்.”

“சாரி!”

“இதை ஒன்னு சொல்லி விடுவீங்க. ஹஹ்! நீ சாரி சொன்னாலும் நடந்தது மாறிடாது! எந்த ஒரு செயலை செய்யும் முன் யோசிக்கணும். உன் செயலுக்கான கான்சிக்குவன்சஸ் என்ன மாதிரி இருந்தாலும் நானும் அவற்றை நாளைக்குச் சந்திச்சாகணுமில்ல?

நம்ம எந்த நாட்டுக்குப் போனாலும் அங்க இருக்கும் சூழ்நிலைக்கு அடேப்ட் ஆகிக்கணும்ங்கிற உண்மை தான். ஆனால், நம்ம பண்புகளையும் ஒழுக்கங்களையும் விட்டுடக் கூடாது நேன்சி! புரிஞ்சுதா?”

நேன்சி எந்த விதமான உணர்வையும் காட்டவில்லை. அவளுக்குப் பார்த்திபன் சொன்னவை எல்லாம் புரிந்தது. இன்னுமொன்றும் புரிந்தது. அவன் தன் டைப் இல்லை. லுக்ஸ், அட்ராக்‌ஷன்ஸ் என்பது வேறு. ரியால்டி என்பது வேறு என்பது மிகத் தெளிவாகவே புரிந்தது.

இருவருக்கும் பொதுவாக ஒரு தலையசைப்பைத் தந்துவிட்டு நேன்சி விடுவிடுவென விரைந்துச் சென்றாள்.

“ஏன்டா, இதென்ன நம்ம ஊரா? நீ பாட்டுக்குக் கையை ஓங்கிட்ட? அவ மேல் கையை வச்சிருந்தா பெரிய சீனாயிருக்கும். உன்னைத்தான் கேள்வி கேட்பாங்க. அவ கட்டிப் பிடிச்சது இங்க தப்பா தெரியாது மச்சான்.”

“திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டு! வாயை மூடிட்டு வாடா. என் பொண்டாட்டியைப் பார்க்கணும். கிளம்பு!”

மனைவியின் இமையோரமே சரிந்து கிடப்பவன் பார்த்திபன். நேன்சி கொடுத்திருந்த முத்தமும், அவளின் மொத்த அங்கங்கள் தன் மீது பட்டு விட்ட அணைப்பும், என்றுமே அவனால் ஜீரணிக்க முடியாத ஒன்று. ப்ரியா என்ன சொல்வாள் என்பதைவிட இவனுக்கே ஒவ்வாவமையாக இருக்க, எரிச்சலின் உச்சத்தில் இருந்தான்.

இருவரும் நடக்க, இப்போது அவள்… ரச்சனா… இளமாறன் அருகே முதலில் காணப்பட்டவள், இவர்களுக்கு வெகு அருகில் நின்று கொண்டிருந்தாள்.

“பார்த்தி, ரச்சிடா. அங்க நிக்கிறா பாரு!’

“சோ வாட்?”

“டேய்! உனக்காகத் தான் ரொம்ப நேரமா வெயிட் பண்றா.”

இளமாறனை நோக்கித் திரும்பிய பார்த்திபன் மிகக் கூர்மையான பார்வையைச் செலுத்த,

“என்னடா இப்படிப் பார்க்கிற? நானுமே அவ கிட்ட டச்ல இல்லை. தற்செயலா இப்ப இங்கனகுள்ள வச்சுத்தேன் பார்த்தேன். இந்தியா போறாளாம். அவளுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருக்காம். மாப்பிள அங்க…”

“நிறுத்துறயா? நீ வந்தா வா! இல்லை நான் போய்க் கிட்டே இருப்பேன். நீ இருந்து ஊர் கதையெல்லாம் கேட்டு முடிச்சு, வழி அனுப்பிட்டு உன் இருப்பிடம் பார்த்து போயிரு! என்னைய பார்க்க கீக்க வந்துறாத!”

இளமாறனைக் கடுப்பி விட்டு விர்ரெனப் பார்த்திபன் வெளியேறிப் போயே விட, இவன் தான் ரச்சனாவிடம் சொல்லி விடைப் பெற்றான்.

“உன் ப்ரண்ட் மாறவே இல்லைல இளமாறா. இன்னும் அதே திமிர்! அதே கோபம்! அகந்தை!”

இகழ்ச்சியாக இதழைச் சுழித்த ரச்சனாவுக்குப் பதில் கொடுக்கப் போனவன், நிலமையை எண்ணி அவசரமாகப் பார்த்தியைப் பிடிக்க ஓடினான் இளமாறன்.

ரச்சனாவுக்கு இன்னும் பார்த்திபன் மேல் கோபம் இருந்தது.

பார்த்திபன் இவளை எல்லாம் சட்டை செய்கிறவனா? ஹூம்!

காரில் தன்னருகே அமர்ந்திருந்த பார்த்திபனிடம் வாயைக் கொடுக்காமல் கப்சிப்பென ரோட்டில் மட்டும் கவனம் செலுத்தினான் இளமாறன்.

ப்ரியதர்ஷினியின் ஜாகையும் வந்து விட, பெட்டிகளை வாசலில் இறக்கி வைத்து விட்டுப் போய் இடத்தைத் தேடி ஸ்ட்ரீட் பார்க்கிங் செய்து விட்டு வந்தான் இளமாறன். பார்த்திபன் அதுவரை கீழேயே காத்திருந்தான்.

இருவரும் லக்கேஜ்-யை எடுத்துக் கொண்டு பதினேழாம் தளத்தில் இறங்கி, அந்த வீட்டின் டோர் பெல்லை அழுத்த…

இளமாறன், பார்த்திபனை முன் விட்டுச் சற்றுத் தள்ளி தான் நின்றிருந்தான். சில நொடிகளில் கதவைத் திறந்தாள் ப்ரியா. சந்தித்த அந்நொடியில் அங்கு அதிகம் அதிர்ந்தது யார்?


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!