அத்தியாயம் 2

அன்று ஊருக்குள் பொங்கல் விழா கோலாகலமாக களை கட்டியிருந்தது. மகிழும் சுகன்யாவும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தனர்.

“அடியே ஆக்கங்கெட்ட கூவைங்களா… ஒரு எடத்துல நில்லுங்கடி…” பெரியாத்தா தன்னுடைய பெரிய தொண்டையை திறந்தார்.

ராஜம்மாள், தந்தையின் பெரியம்மா அவர்! அவரது தந்தையின் முதல் மனைவி. அவருக்கு குழந்தைகள் இல்லை என்று அவரது தங்கையையே திருமணம் செய்து கொண்டாராம் மகிழின் பாட்டனார்.

வீட்டின் மொத்த பொறுப்பும் அவரிடம் தான்.

அவர் நிற்கும் தோரணையே மிரட்டலாகத்தான் இருக்கும்.

மாட்டுக்கு தீவனம் வாங்கும் கணக்கிலிருந்து, மாடு பால் கறக்கும் கணக்கு வரைக்கும், தோப்பில் தேங்காய் கணக்கு, நில குத்தகை கணக்கு என்று சகலமும் அவரே!

தோப்பை மட்டுமே மகிழின் தந்தை பார்த்துக் கொண்டிருந்தார். மற்ற நிலங்கள் அத்தனையும் அப்போது குத்தகைக்கு தான் விடப்பட்டு இருந்தது. கரூரில் தனியார் வீவிங் பேக்டரியில் வேலை செய்து கொண்டிருந்தவருக்கு அதுதான் வசதியாக இருந்தது.

அவரது தாய், வடிவுடையாள், வாயில்லா பூச்சி. தமக்கையை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியதில்லை. அது போலவே அவரது மனைவி சந்த்ராவும்  அமைந்து விட, சுந்தரமூர்த்தியின், அதாவது மகிழின் தந்தை எப்போதும் அவரது பெரியம்மாவுக்கு அடக்கமாக இருந்தே பழகி விட்டார்.

சேலையை இழுத்து சொறுகியபடி பெண்கள் மூவரும் மாடுகளை தேங்காய் நார் கொண்டு குளிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.

அன்றைய தினம் மாட்டுப் பொங்கல்!

சந்திராவின் உடலிலிருந்து வியர்வை ஆறாக பெருகியது. மகிழையும் சுகன்யாவையும் வைதபடியே மாட்டை மாங்கு மாங்கென்று தேய்த்துக் கொண்டிருந்த தன்னுடைய பெரிய மாமியாரை பார்த்தார்.

இப்போதைக்கு இந்த இடத்தை விட்டு நகர முடியாது.

பத்து மாட்டையும் குளிக்க வைத்து, கொட்டகையை சுத்தம் செய்தாக வேண்டும். காலை நான்கு மணி முதலே வேலை நடந்து கொண்டுதான் இருந்தது. ஆட்களோடு சேர்ந்து அவர்களும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சுகன்யா பசி தாள மாட்டாள். மகிழ் அப்படியல்ல, புரிந்து கொள்வாள். பொறுப்பான பெண். விளையாட்டுத்தனம் இருக்குமே தவிர அவளது செயல்களில் பொறுப்பு பளிச்சிடும்.

“செத்த நேரம் பொறு கண்ணு…” என்று சந்த்ரா சொல்லிவிட்டால், மாலையானாலும் பொறுமையாக அதே இடத்தில் அமர்ந்திருப்பாள். ஆனால் சுகன்யா அப்படியல்ல. பசி என்று வந்து விட்டால் ஊரையே இரண்டாக்கி விடுவாள். தன் காரியம் ஆனால் மட்டுமே அவள் வாயடங்கும்.

அவளோடு சேர்ந்து விட்டால் யாராக இருந்தாலும் அறுந்த வாலாகி விட வேண்டியதுதான். உடன் சத்யாவும் சேர்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம். ஊர் இரண்டு பட்டுவிடும்.

மாட்டையெல்லாம் குளிக்க வைத்தாயிற்று. இன்னும் கொட்டகையை சுத்தப்படுத்தும் வேலை தான் மிச்சம்.

சுகன்யா பசியில் கத்த ஆரம்பித்து இருந்தாள். தன்னுடைய மாமியாரிடம் கண்களால் கெஞ்ச, தமக்கைக்கு கேட்குமாறு,

“சுக்கு அழுகுது பாரு சந்திரா… மொதல்ல வயித்துக்கு ஏதாச்சும் கொடுத்துட்டு வா… கொட்டாய நான் பாத்துக்கறேன்…” என்று கூற,

“ஏன் செத்த நேரம் பொறுக்க மாட்டாளா அந்த சின்ன கழுத… ஏய் சந்திரா வேலைய முடிச்சுட்டு போடீ… பொங்க வைக்க நேரமாவுதில்ல… இதுக்குத்தான் மொத நாளே வேலைய முடிக்கோணும்ன்னு நான் காட்டு கத்த கத்தறது… எங்கருந்து என் பேச்ச கேக்கறா? எப்ப பாத்தாலும் புள்ளைங்க புள்ளைங்கன்னு உக்காந்தற வேண்டியது…” சுகன்யாவின் வயிற்றுக்கு ஏதாவது கொடுத்துவிட்டால் போதுமென்று சந்திரா தவிக்க, பெரிய மாமியாரின் வசவை தாள முடியாமல் அங்கேயே அமர்ந்து விட்டாள்.

தலை சுற்றிக் கொண்டு வந்தது. இடுப்பு வேறு விண்டு போவது போல வலித்தது. கொஞ்ச நாட்களாகவே இந்த இடுப்பு வலி படுத்தி எடுத்துக் கொண்டு இருந்தது.

“சுக்கு பசி தாங்க மாட்டாக்கா… கொட்டாய நா பாத்துக்கறேன்…” கெஞ்சலாக கேட்ட தங்கையை பார்த்து முறைத்த ராஜம்மாள், எதுவும் பேசாமல் குப்பையை அள்ளினார். ‘சரியென்று’ ஒப்புக் கொள்கிறாராம். அதை வாய் திறந்து கூற மாட்டார்.

கிடைத்த இடைவெளியில் சுகன்யாவை நோக்கி விரைந்தாள் சந்திரா.

அவசரமாக பாலை ஆற்றி இருவருக்கும் கொடுத்தவள்,

“மகிழு… பாப்பாவ குளிக்க வெச்சு போட்டு, நீயும் குளி கண்ணு… உன் சோட்டு புள்ளைங்க எல்லா புது சட்ட போட்டுட்டாங்க பாரு…” என்று மகிழை கிளப்பி விட,

“சாமு நம்மாத்தவ வாயாடின்னு சொல்றாம்மா… பெரியாத்தா ஏம்மா இப்படி கத்திட்டு இருக்கு?” பாலை குடித்தபடியே மகிழ் கூற,

“பெரியவங்கள அப்படி சொல்லக் கூடாது பாப்பா…” என்றவள், இருவருக்குமான புது துணியை எடுத்து மகிழிடம் கொடுத்தவள்,

“சீக்கிரம் சின்னவளை குளிக்க வை கண்ணு… இல்லைன்னா பெரியாத்தா கிட்ட நான் தான் பாட்டு வாங்கோணும்…”

தாயை பார்த்த போது பாவமாக இருந்தது அந்த குட்டி மகிழுக்கு. காலை கருக்கலிருந்தே நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் தாய்க்கு எப்படியாவது ஓய்வை தர வேண்டி ஆசைப்பட்டது அந்த பிஞ்சு மனம்.

தங்கையை குளிக்க வைத்து தானும் குளித்துவிட்டு புது பாவாடை சட்டையை அணிந்து கொண்டு தோழிகளை தேடிப் போனாள், சுகன்யாவையும் அழைத்துக் கொண்டு!

“சத்யாக்கா….” சத்யாவை கண்டதும் துள்ளிக் கொண்டு பறந்தாள் சுகன்யா.

மகிழ் நிதானமாக நின்றாள்.

அருகிலிருந்த வீட்டிற்கு புதிதாக குடி வந்திருந்தனர் போல… சிறு லோடு வண்டியிலிருந்து சாமான்களை இறக்கிக் கொண்டிருந்தனர் அவர்களது தோப்பில் வேலை செய்பவர்கள்.

அருகிலேயே ஒரு பெரிய கார் வேறு நின்றிருக்க, கண்களை விரித்து ஆச்சரியமாக பார்த்தாள் மகிழ்.

‘இவ்வளவு பெரிய காரா?’

அவளுக்கு தெரிந்தது அம்பாசிடர், மாருதி. அவ்வளவுதான். ஆனால் இது அவள் அதுவரை பார்த்திராதது.

காரிலிருந்து இறங்கியவரை சுந்தரமூர்த்தி பணிவுடன் வரவேற்றதை இன்னமுமே ஆச்சரியமாகப் பார்த்தாள்.

அப்போதுதான் அவனைக் கண்டாள் முதன்முறையாக!

கண்களில் அவன் அணிந்திருந்த பெரிய கண்ணாடி தான் முதலில் அவள் கண்களுக்கு தென்பட்டது.

மாநிறம். பார்வையில் பரிதவிப்பு. அவனைப் பார்க்கும் போதே துணைக்கு யாருமில்லாமல் பெரும் கூட்டத்தில் தனித்து விடப்பட்ட சிறு குழந்தையாக பட்டான். அவன் மேல் ஏனோ பரிதாபம் தோன்றியது மகிழுக்கு!

அவனது தந்தையுடன் சுந்தரமூர்த்தி சிரித்து பேசியபடி வீட்டுக்குள் போக, அவன் தேங்கினான், சுற்றும் முற்றும் பார்த்தபடியே!

எங்கிருந்தோ ஓடி வந்த சுகன்யாவும் சத்யாவும், மகிழை பிடிக்க தாவி வர, அவளையும் அறியாமல் சட்டென சற்று நகர்ந்து விட, இருவருமாக அவன் மேல் விழுந்தனர்!

விழுந்த வேகத்தில் மூவருமே படாரென்று கீழே விழப் போக, சத்யா சுதாரித்துக் கொண்டு சுகன்யாவை பிடித்து விட, ஆதரவில்லாமல், அவன் கீழே விழுந்தான்!

அனைத்தும் ஓரிரு நொடிகளுக்குள் முடிந்து விட, பெருங்குரலில் அவன் அழ ஆரம்பித்தான்.

“அய்யோ…” அவனது அழுகையை கண்ட மகிழுக்கு பயம் பீடித்துக் கொண்டது. தந்தையுடன் நெருக்கமானவர் போல தெரிந்த அவனது தந்தையை நினைத்து பயந்து, அவன் எழுவதற்கு அவசரமாக கையை கொடுத்தாள் அவள்.

நிமிர்ந்து அவளை பார்த்தான் அவன்.அவளது பார்வையில் தெரிந்த பயத்தையும் தாண்டிய பரிவு அந்த சிறுவனை ஈர்த்தது!

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்ட தாயை ஏனோ நினைவுப்படுத்தினாள் அந்த சிறுமி… அந்த பிஞ்சு மனதுக்கு அப்படித்தான் தோன்றியது.

“வலிக்குதா?”

மென்மையாக அவள் கேட்டபோது அவனுக்கு எதுவும் தோன்றவில்லை!

வலி மறந்திருந்தது!

இந்த கனிவை தானே அவன் தேடினான்!

கைநீட்டிய அவளுக்கு தன் கையை கொடுத்தான் அவன்!

எழுந்து கொண்டவனிடம், “நாம ப்ரெண்ட்ஸ்… சரியா?” என்று கேட்ட மகிழுக்கு மேலும் கீழுமாக தலையாட்டினான் அவன், மிக அவசரமாக, விட்டால் அவள் தனது சலுகையை பறித்து விடுவாள் என்றெண்ணி விட்டவன் போல!

“நான் மகிழினி…” என்றவள், தனது பக்கம் நின்றுக் கொண்டிருந்தவளை காட்டி, “இது சத்யா…” என்றாள்!

“ஓய்… உன் பேர் என்ன?” சத்யா எப்போதும் போல அவனிடம் தன் ரவுசை காட்ட, மிரண்டு விழித்தவன்,

“சா… சா…” என்று திக்கியது அவனுக்கு!

“இன்னைக்குள்ள முடிச்சுடுவியா?” வேண்டுமென்றே அவனை வாரினாள் குட்டி சத்யா, இதுபோன்ற பையன்கள் என்றால் அவளுக்கு கொண்டாட்டம் தான்!

“ஏய் சத்யா… சும்மா இருடி…” பாவமாக இருந்தது மகிழுக்கு, அந்த அப்பாவியை பார்த்து, அவளை அடக்கியவள் அவன் புறம் திரும்பி, “நீ சொல்லு…” என்று கூற,

“சா.. சாய்… சாய்பிரகாஷ்…” என்று எச்சிலை கூட்டி விழுங்கினான்!

“வெறும் சாய்பிரகாஷா? இல்ல சா… சா… பிரகாஷா?” சத்யா இன்னமும் அவனை கிண்டலடிக்க, நிமிர்ந்து பார்த்து மிரண்டான்! அவனது வயதுக்கு, அவன் சற்று குள்ளம் தான். சத்யா உயரம் தான்! பெண்கள் வளர்த்தி பீர்க்கங்காய் வளர்த்தி என்பார்கள்… இரண்டும் வளர்வதே தெரியாமல் வளர்ந்து விடும். பெண்களின் வளர்த்தி குறையும் போதுதான் ஆண்களின் வளர்த்தி ஆரம்பிக்கும்! அதனால் தான், சிறு வயதில் குள்ளமாக தெரியும் பையன்கள் கூட, சற்று முதிர ஆரம்பிக்கையில் நெடு நெடுவென்று வளர்ந்து விடுவார்கள். அதை இந்த குறும்பி அறிவாளா? மாட்டாள்!

அதிலும் இதுகள் பயிலும் ஆறாம் வகுப்புக்கு இந்த லந்தெல்லாம் மிக அதிகம். ஆனால் கிராமத்து மணம்! சத்யாவும் குறும்பும் ஒட்டிப் பிறந்த இரட்டைகள்!

“இல்ல வெறும் சாய்பிரகாஷ் தான்…” அதை சொல்லி முடிப்பதற்க்குள் அவனுக்கு வியர்த்து விட்டது.

“சத்யா… ஏன்டி அந்த பொடியன மிரட்டுற?” என்ற மகிழ், அவன் பக்கம் திரும்பி, “நீ எந்த கிளாஸ்?” என்று கேட்க,

“சிக்ஸ்த்…” அதே மிரட்சியோடு கூறினான்.

“அடப்பாவி… சிக்ஸ்தா? நம்ம கிளாசு… ஏன்டா இத்துனூண்டா இருக்க?”

“இ.. இல்ல…” தந்தியடித்தான்.

அவனது தலையில் தட்டினாள் சத்யா, கையை தடவியவாறே,

“டேய்… என்னடா முடி இது? முள்ளம்பன்றி மாதிரி…”

“அ… அது….”

“இனிமே உன் பேர் முள்ளம்பன்றி…” சிரித்தாள்.

மீண்டும் அழுது விடுவான் போல… தயாரானவனை தேற்றினாள் மகிழ்!

“சத்யா… போதுண்டி கிண்டலு…” என்றவள், அவன் பக்கம் திரும்பி, “எந்த ஸ்கூல்?” என்று கேட்க,

“இ… இன்னும் சேரல…” என்றான்!

“சரி… அப்படீன்னா எங்க ஸ்கூல்ல சேர்ந்துக்றியா?” சட்டென ஒட்டிக் கொண்டு ஆர்வமாக கேட்டவளை பார்க்கையில் அவனுக்கு மிகவும் பிடித்தது. ஆனால் பக்கத்தில் இருந்தவளை பார்க்கும் போது பயமாக இருந்தது.

சத்யாவை மிரள விழித்தபடி பார்க்கையில் ஜோக்கரை பார்த்த நினைவு, மூக்கில் ஒரு பந்து மட்டும் தான் இல்லையென தோன்றியது மகிக்கு. ஆனால் வெளியில் சொல்லவில்லை.

பாவம் அவன்… ஏற்கனவே சத்யாவால் காயப்பட்ட அவனது மனதை இன்னமும் துன்பத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று நினைத்து,

“அவள பாக்காத… என்கிட்ட பேசு சாய்!”

சாய்!

அவனது தாய் இதுபோலத்தான் அழைப்பார்!

“நீ எந்த ஸ்கூல் மகிழினி?”

*****

“அட்ரா அட்ரா நாக்கு முக்க… நாக்கு முக்க…” காதுக்குள் ஸ்பீக்கர் அலறியது. இரண்டு பக்கமும் தலையணையை வைத்து மறைத்துப் பார்த்தாள் மகிழ். அப்போதும் பாடலின் அலறல் சத்தம் குறைந்தபாடில்லை.

சத்யாவின் அதிகாலை சுபவேளை சுப்ரபாதம் அது!

புரண்டு பார்த்தாள், கவிழ்ந்துப் பார்த்தாள். என்னன்னெவோ செய்தாலும் மகிழால் உறங்க முடியவில்லை.

“ஏய் பிசாசு… சவுண்டை கொறடி…” இரண்டு காதையும் பொத்தியபடி மகிழ் கத்த, ஹோம் தியேட்டர் சவுண்டை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கி, தன்னுடைய படுக்கையிலிருந்து அதற்கேற்றவாறு ஆடியபடியே எழுந்து அமர்ந்தாள் சத்யா.

மகிழுக்கு எப்போதுமே உறக்கம் முக்கியம். அதிலும் முந்தைய தினம் வேறு, பின்னிரவில் சங்கரியம்மாவை பார்த்து, அவரது இறப்பை உறுதி செய்துவிட்டு, வீட்டுக்கு வந்து தலைக்கு தண்ணீர் விட்டு குளித்திருந்தாள்.

அவள் வந்தபோது சத்யாவுக்கு அது இரண்டாம் ஜாமம். அவளை பொறுத்தவரையில் சரியான நேரத்தில் உறங்க வேண்டும். காலை ஆறானால் எழுந்துவிட வேண்டும். இல்லையென்றால் கண்களை சுற்றி கருவளையம் வந்துவிடும், முகப்பரு வந்துவிடும், உடல் பருமனாகி விடும் என்று ஆயிரம் நங்கு பார்ப்பாள்.

அதற்க்கேற்றார் போல உடம்பை அவ்வளவு கச்சிதமாக வைத்திருப்பாள்.

ஆனால் மகிழ் அந்த விஷயத்தில் நேரெதிர்.

காலையில் படுக்கையை விட்டு அவளால் சாமானியமாக எழ முடியாது. சத்யாவை போல எக்ஸர்சைஸ், யோகா என்று உடலை பேணவும் தெரியாது. ஆனால் எப்படியாவது அவளை எக்ஸர்சைஸ் செய்ய வைக்க வேண்டுமென்று சத்யாவும் தலைகீழாக நின்றுப் பார்ப்பாள்.

“கம்மான் கெட் அப் சிலுக்கு…” கொட்டாவி விட்டபடியே கவிழ்ந்தடித்திருந்த மகிழை நோக்கி தலையணையை எறிந்தாள் சத்யா.

“தூங்கவே நேரமாகிடுச்சு சத்யா… கொஞ்ச நேரம் விடேன்…” கெஞ்சியவளை பொருட்படுத்தாமல்,

“இன்னைக்கு இன்டர்வியு இருக்கு…” செல்பேசி அலர்ட் கொடுப்பதை போல கூற, நிமிர்ந்து சத்யாவை பார்த்தவள்,

“ஒரு அரைமணி நேரம் செல்லம்… ப்ளீஸ்…” என்று கெஞ்ச,

“இப்ப எழுந்துக்கலைன்னா அபிஷேகம் தான்…” என்றபடி தன்னுடைய போர்வையை விலக்கியபடி சத்யா எழ,

“ஐயோ…” என்றவள், சத்யாவின் முகத்தை பார்த்தாள்.

குறும்பில் வளைந்திருந்தது தோழியின் இதழ்கள்!

“கொடுமை பண்ணாதடி…” என்று முகத்தை அழுத்தமாக துடைத்துக் கொண்டு, பரட்டையாக இருந்த தலைமுடியை பியைத்துக் கொண்டாள்.

‘பந்தாட்டம் உலகம் வச்சான்.. இராட்டினம் போல் சுழல வச்சான்..
ஏற வச்சான் எறங்க வச்சான் சொல்ல விட்டு மயங்க வச்சான்
மயங்குனவன எழுப்புடா எழுப்புடா எழுப்புடா
அடிங்கடா அடிங்கடா அடிங்கடா அடிங்கடா …’

பாடிக்கொண்டிருந்த ஆண் குரலோடு சேர்ந்து பாடியபடி நின்று கொண்டு கொண்டு குத்தாட்டம் போட்டாள் சத்யா.

காலை எழுந்தவுடன் அவளுக்கு இது போல குத்தாட்டம் போட வேண்டும்.

“ஏன்டி காலங்கார்த்தால இப்படி சாவு மேளம் கொட்ற?” என்று மகிழ் கேட்கும் போதெல்லாம் இன்னொரு முறை குத்தாட்டம் தூள் பறக்கும்.

“நீயும் ஆடிப்பாரு சிலுக்கு… என்னம்மா எனர்ஜி கிடைக்கும் தெரியுமா?” என்று கேட்பவள், மகிழையும் சேர்த்து குத்தாட்டம் போட வைத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள்.

இப்போதும் அப்படியே!

தூங்கிவழிந்த முகத்தோடு இருந்தவளை கட்டி அணைத்தபடி,

‘லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா..
லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா.. லே…’ என்று குதிக்க,

“ஏய் விடுடி…” என்று திமிறினாள் மகிழ்.

“உனக்கு இந்த பாட்டு சரியில்ல சிலுக்கு… உன்னோட பேவரிட் ‘நேத்து ராத்திரி யம்மா…’ போட்டு விடறேன்… வெய்ட் டார்லிங்…” என்று கத்தியபடி கண்ணடிக்க, மகிழால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“நீ ஒரு ஒரிஜினல் பீஸ் மச்சான்…” என்றபடி அவளோடு ஆட்டத்தில் சேர்ந்து கொள்ள,

‘பொண்ணுங்களா பொறக்க வச்சான்
பொண்ணுக்குள்ள கருவ வச்சான்
கருவ வச்சான் கற்ப வச்சான் கற்புக்குள்ள தீய வச்சான்
தீய வச்சு எரிய வச்சான் எரிய வச்சான் எரிய வச்சான்
மதுரை எரியுது அணைங்கடா அணைங்கடா அணைங்கடா…’

ஆண் குரலோடு இருவரும் சேர்ந்து கத்தியபடி குத்தாட்டம் போட்டு முடித்தவர்களுக்கு மூச்சு வாங்கியது.

“ஒன்… டூ… த்ரீ…” பாத்ரூமை யார் முதலில் பிடிப்பது என்ற போட்டி!

“ஹேய்…” என்றபடி அடித்து பிடித்து உள்ளே நுழைந்தவர்கள் கையில் ஆளுக்கொரு பிரஷ்.

“நைட் எப்ப வந்த சிலுக்கு?” வாயில் பேஸ்ட்டை நுரைக்க வைத்தபடி சத்யா கேட்க,

“பன்னெண்டை தாண்டிடுச்சு சத்யா… நீ நல்லா தூங்கிட்டு இருந்த… அதான் உன்னை எழுப்பலை…” என்றபடியே பல் தேய்த்த மகிழை பார்த்து சிரித்தாள் சத்யா.

“ராக் கோடங்கி டி நீ…”

“ப்ச்… என்ன பண்றது? சுந்தரிம்மாவை பார்த்து கன்பார்ம் பண்ணிட்டு, அதுக்கப்புறம் கொஞ்சம் ப்ரோசீஜர்ஸ் பண்ண வேண்டி இருந்துது சத்யா… எல்லாம் முடிச்சுட்டு கிளம்ப நேரமாகிடுச்சு…” நுரையை துப்பியபடி கண்ணாடியை பார்த்தபடி கூறினாள் மகிழ்.

கண்களை சுற்றி கருவளையம் வரும் போல இருந்தது.

“அதுக்கு ஏதாவது பணம் கொடுத்தாங்களா?” முக்கியமான விஷயமே அதுதானே!

“துக்கத்துல இருக்கவங்க கிட்ட பணத்தை கேப்பியா?” நியாயம் பேசியவளை பார்க்கையில் உண்மையில் பரிதாபமாக இருந்தது சத்யாவுக்கு. வெகு எளிதாக இவளை ஏமாற்றிவிடலாம். அதற்கு இவளே வழிவகை செய்து கொடுப்பாள்.

“அதுக்காக ஒண்ணுமே வாங்காம சர்விஸ் பண்ண நீயென்ன நூத்தியெட்டு ஆம்புலன்ஸ் சேவை மையமா? அவனுங்க கூட பணத்தை உருவிடுவானுங்க சிலுக்கு… நீ இப்படி இருந்தா உன் தங்கச்சி என்ன? ஊர்ல போறவன் வர்றவன் எல்லாம் உன்னை ஏமாத்திட்டு தான் இருப்பாங்க…” என்றபடியே நுரையை துப்பியவள், அவளை கண்ணாடியில் பார்த்து, “முகத்துக்கு ஆன்டி டேன் போட்டு, கொஞ்சம் மசாஜ் பண்ணி விடறேன்டி… கருவழிஞ்சு போய் இருக்க…” என்றவளை பார்த்து சிரித்தாள்.

“என்னதான் போட்டு தேச்சாலும் இருக்கறதுதான் இருக்கும் சத்யா. எனக்கு இதுவே போதும்… பேஷியல் எல்லாம் உன்னை மாதிரி அதிரூப அழகு சுந்தரிகளுக்கு தான்…” என்றபடி முகத்தை கழுவியவள், துண்டால் முகத்தை ஒற்றியபடி செல்பேசியை பார்த்தாள்.

“திருந்த மாட்ட பக்கி நீ…” என்றபடி முகத்தை கழுவியவள், முகத்தை துடைத்தப்பின் ரெப்ரெஷ்ஷிங் ஜெல்லை அப்ளை செய்தபடி நிலைகுத்திய பார்வையோடு செல்பேசியை பார்த்துக் கொண்டிருந்த மகிழை யோசனையாக பார்த்தவள், எதை பார்த்து இப்படி அரண்டுப் போய் நின்றிருக்கிறாள் என்பதை பார்க்க கழுத்தை நீட்டினாள்.

“ஏய் சிலுக்கு என்னாச்சு?” என்று கேட்டபடியே பேசியை நோட்டமிட்டவளின் கண்களில் பட்டது அந்த மெயில் தான்!

சாய்பிரகாஷிடமிருந்து தான் வந்திருந்தது.

தலையை குனிந்தபடியே படிக்க கடினமாக இருக்க, கழுத்து வலிக்க ஆரம்பிக்க, அவளிடமிருந்து செல்பேசியை பறித்தாள்.

“ஏய்… என்ன பண்ற நீ?” சத்யாவிடமிருந்த தன்னுடைய செல்பேசியை பிடுங்க முயன்றாள் மகிழ்.

“அப்படி என்னதான் பார்த்துட்டு இருக்கன்னு நானும் பாக்கறேன் சிலுக்கு…” என்று சிரித்தபடியே அவளிடம் பேசியை தராமல் மெயிலை படிக்க ஆரம்பித்தாள்.

“டியர் மகிழ்…” என்றவள், ஜெர்க்காகி, கண்களை விரித்துப் பார்த்து, “இன்னாது டியரா? எப்பா சாமி, நேத்து நைட் படுக்க போறதுக்கு முன்னாடி தான உன்னோட மெயில் ஐடியை அவனுக்கு பார்வர்ட் பண்ணி விட்டேன்? எனக்கெல்லாம் வெறும் கூகிள் இன்வைட்… உனக்கு டியர் போட்டு தனியா லெட்டரா? என்னாங்கடி நடக்குது இங்க?” என்று சிரித்தபடியே மகிழை கலாய்க்க,

“வேணா சத்யா… போனை கொடுத்துடு… நானே இன்னும் முழுசா படிக்கல…” கெஞ்சியவளை புறக்கணித்து,

“நான் மொதல்ல படிக்கறேன் டார்லிங்… அப்படி என்ன எனக்கு தெரியாம உனக்கு அவன் தனியா லெட்டர் போட்டு இருக்கான்?” என்று சிரிக்க,

“ப்ளீஸ் சத்யா… ப்ளீஸ்…” மகிழ் இன்னுமே கெஞ்ச,

“இப்பதான் இன்னும் கொஞ்சம் சந்தேகம் வருது… சம்திங் ராங்…” என்று மண்டையை சொறிந்தவள், அவளிடமிருந்து தள்ளி நின்று கொண்டு மெயிலை சப்தமாக படித்தாள்.

டியர் மகிழ்,

நீ இங்கு நலம்… நான் அங்கு நலமா? என்னடா இப்படி ட்ராமட்டிக்கா லெட்டரை ஆரம்பிக்கறான்னு சிரிக்காத… இத்தனை நாள்ல உன்னை நினைக்காத நாளில்லை. அந்த பசுமையான நினைவுகள் தான் இன்னும் என்னை உயிர்ப்போடு வச்சு இருக்கு. மறக்க முடியாத நாட்களை எனக்கு பரிசளித்த என்னுடைய தேவதைக்கு நன்றிகள். ஆனா எதுக்கு நான் எனக்கே நன்றி சொல்லிக்கணும்? நீ தான் நான்… நான் தான் நீ! உன்னை, உன்னுடைய தோழமையை இத்தனை நாட்களா மிஸ் செய்துக்கிட்டு இருக்கேன் மகிழ். சந்திப்போமா?

இடம்: சென்னை ட்ரேட் சென்டர்.

என்னுடைய போன் நம்பரை நோட் பண்ணிக்க. தயவு செய்து எனக்கு ஒரே ஒரு மெசேஜ் போடு. நான் அதே கொம்பேறி மூக்கன் தான். இப்ப நீ எப்படி இருப்பன்னு பார்க்கணும். உன்கிட்ட பேச எனக்கு ஆயிரம் விஷயம் இருக்கு. நிறைய சொல்லணும். நிறைய காட்டனும். நிறைய நிறைய பேசிட்டே இருக்கணும்.

மிக விரைவில் சந்திக்கலாம்.

நிறைய நிறைய தோழமைகளுடன்,

கொம்பேறி மூக்கன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!