npg-13

கீதாஞ்சலி – 13

ராகுலுக்கும் அமிர்தாவிற்கும் திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஓடியே போயிருந்தது. இருவருமே ஓரளவுக்கு மற்றவரின் அண்மையை விரும்பத் தொடங்கி இருந்தார்கள்.

அமிர்தாவிற்கு எப்படியோ ஆனால் நிலா பாப்பாவிற்கு தொட்டதுக்கெல்லாம் அவளுடைய அப்பா வேண்டும். காலை எழுந்தது முதல் இரவு தூக்கம் வரை அவளுடைய அப்பா அருகிருக்க வேண்டும்.

அதே போல ராகுல் தேடுவானோ இல்லையோ சந்தோஷ் மிகவும் அமிர்தாவைத் தேடுவான். இதற்கு முன் சிறு பிள்ளையாக இருந்தாலும் அவன் பேச்சுக்களிலும் செய்கைகளிலும் ஒரு பெரிய மனிதத்தன்மை இருக்கும்.

இப்பொழுதோ அதற்கு முற்றிலும் எதிராகக் குழந்தையாகவே ஆகிப் போனான். காலையில் அவனை எழுப்பி விடுவது முதல் பள்ளிக்கு அழைத்துச் செல்வது, பின் மாலைப் பள்ளியிலிருந்து அழைத்து வருவது, ஹோம் வொர்க் செய்வது என்று அத்தனைக்கும் அவனுடைய ‘அம்மும்மா’ அவனுக்கு வேண்டும். முக்கியமாக இரவு அமிர்தாவின் தாலாட்டைக் கேட்டால்தான் சந்தோஷுக்குத் தூக்கமே வரும்.

அம்மாவையும் அமிர்தாவையும் ஒன்றாக்கி அவனாகவே ‘அம்மும்மா’ என்றழைக்கத் தொடங்கி இருந்தான். நிலா குட்டியும் கூட இதுவரை அம்மா என்றழைத்துக் கொண்டிருந்தவள் சந்தோஷைப் பார்த்து அவளும் ‘அம்மும்மா’ என்றும் அழைக்க ஆரம்பித்து இருந்தாள்.

காலைப் பொழுது மிகப் பரபரப்பாகக் கழியும் அமிர்தாவிற்கு. சந்தோஷ் பள்ளிக்குக் கிளம்ப, அந்நேரம் பார்த்து தூங்கிக் கொண்டிருந்த நிலாவும் கூட முழித்துக் கொண்டு இருவருமாகச் சேர்ந்து இவளை ஒரு வழியாக்கி விடுவார்கள்.

இந்த ரூமுக்கும் அந்த ரூமுக்கும் ஓடியே அமிர்தா களைத்துப் போவாள். இரண்டு அறைகளுமே ஒன்றாகவே பாவிக்கப் பட்டு வந்தது. குழந்தைகள் இருவரும் இரவு எந்த அறையில் உறங்குகிறார்களோ அங்கேயே பெரியவர்களும் இருக்கப் பழகிக் கொண்டார்கள்.

உன் அறை என் அறை என்பதெல்லாம் காணாமல் போயிருந்தது. நடுவில் இருக்கும் டிரெஸ்சிங் ரூமின் இரண்டு கதவுகளும் இப்பொழுதெல்லாம் எந்நேரமும் திறந்தே தான் இருந்தன.

காலையில் சந்தோஷ் பள்ளிக்குச் சென்ற பிறகு, கௌஷிக் சற்று முன்னதாகவே கிளம்பி விடுவான். இவர்கள் கணவன் மனைவி இருவரும் சற்றுத் தாமதமாகக் கிளம்பி நிரஞ்சலாவை ப்ரீ ஸ்கூல் ப்ளே க்ரூப்பில் விட்டுவிட்டுப் பின் ரெக்கார்டிங் ஸ்டுடியோ வந்து சேர்வார்கள்.

நிரஞ்ஜலா ப்ரீ ஸ்கூல் செல்வது ராகுலின் ஏற்பாடு. ஊரில் இருந்த  பொழுது க்ரெச்சில் இருந்ததால், இப்பொழுது வீட்டில் இருந்துப் பழகிவிட்டால் அடுத்த வருடம் பள்ளி செல்ல வைப்பது கஷ்டமாகி விடும் என்பதால் இந்த முடிவு.

சத்யவதி தான் புலம்பிக் கொள்வார், “எங்க காலத்துல எல்லாம் அஞ்சு வயசுல தான் ஸ்கூல் பக்கமே அனுப்புவாங்க. இப்ப என்னடான்னா ரெண்டு வயசுலேயே கொண்டு போய் தள்ளிடறீங்க. பாவம் இப்ப இருக்குற புள்ளைக எல்லாம்.”

அமிர்தாவிற்கும் சத்யவதி கூறுவது தான் சரியோ என்று தோன்றூம். ஆனால் சின்னவள் ராகுலைக் கண்டுவிட்டால் செய்யும் சேட்டைகளைக் கண்டு, ராகுல் சொல்வது தான் சரி என்ற முடிவுக்கு வந்துவிடுவாள்.

காலைப் பொழுதில் இவள் பரபரவென்றுப் பிள்ளைகள் பின்னால் ஓடிக் கொண்டிருக்க அதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் தினமும் ஜாகிங் செல்பவனைக் கண்டால் புசுபுசுவென்று கோபம் பொங்கிப் பெருகும் அமிர்தாவிற்கு.

அமிர்தா சந்தோஷைப் பள்ளியில் விட்டுவிட்டு வந்து அக்கடா என்று உட்காரும் போது தான் ராகுல், கௌஷிக் இருவரும் அவர்கள் ஓட்டத்தை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்வார்கள். அப்பொழுதும் நிரஞ்ஜலா ராகுலோடே ஒட்டிக் கொண்டு மாடிக்குச் சென்றுவிட இவளும் பின்னோடு செல்வதைத் தவிர வேறு வழி இருக்காது.

அங்கோ இவள் ஒருத்தி இருப்பதையே கண்டு கொள்ளாது ராகுலின் பின்னாலேயே ஓடிக் கொண்டிருப்பாள் சின்னவள். தன்னையே சுற்றி சுற்றி வந்த குழந்தை இப்பொழுதோ ராகுல் இல்லாவிட்டால் மட்டுமே இவளிடம் செல்லம் கொஞ்சுவது. மற்ற நேரமெல்லாம் அப்பா… அப்பா… அப்பா… மட்டும்தான். முகம் வாடிப் போகும் அமிர்தாவிற்கு.

இப்பொழுது யாரின் மீது பொறாமைப் படுவது? யாரைக் கோபித்துக் கொள்வது? தகப்பனையா அல்லது மகளையா?

அறைக்குள் முகத்தை நாலு முழத்தில் நீட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் அமிர்தாவை வேண்டுமென்றே சீண்டுவான் மெல்லிசைக்காரன்.

“ஓய் சோனி, முகம் என்ன தௌசன்ட் வால்ட்ஸ் பல்ப் போட்ட மாதிரி ரொம்பப் பிரகாசமா இருக்கு?”

“வேணாம், அப்படிக் கூப்பிடாதீங்க. எனக்குக் கோவம் வந்துடும்.” சிறு பிள்ளையாக ஒற்றை விரல் நீட்டி எச்சரிப்பவளைப் பார்த்ததும் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூடிப் போகும் அவனுக்கு. விடாது வம்பிழுப்பான்.

“அப்படித்தான் கூப்பிடுவேன். என்னடி பண்ணுவ?”

“நீங்க டி சொன்னா அப்புறம் நானும் சொல்லுவேன் ரவி.”

ர..ரா என்று ராகம் பாடிக் கொண்டிருந்தவளின் வாயில் இப்பொழுதெல்லாம் சரளமாக இந்த வார்த்தை வரத் தொடங்கி இருந்தது.

“எங்க சொல்லித் தான் பாரேன்.”

“போடா” வேறு என்ன பதில் கொடுப்பதென்றுத் தெரியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு சொல்லியும் விடுவாள் அமிர்தா.

ராகுலுக்குத் தினம் ஒருமுறையாவது அவள் வாயால் இந்தச் சொல்லைக் கேட்காவிட்டால் அன்றைய பொழுது நிறைவடையாது. அதற்காகவாவது இரவு எந்நேரம் ஆனாலும் அவளைச் சீண்டி இவ்வார்த்தையைப் பரிசாகப் பெற்றுக் கொள்வான். அகமும் புறமும் அவ்வார்த்தையைக் கேட்ட களிப்பில் பூரித்திருக்க வாயிலிருந்தோ பொய்யான புலம்பல் மட்டுமே வளிவரும்.

“இந்த அநியாயத்தைக் கேக்க யாருமே இல்லையா? சின்னப் பிள்ளையில தான் வாடா போடாம்பா. இப்போ கல்யாணத்துக்கு அப்புறமும் அப்படியே கூப்பிடுறாளே. அங்கங்க பொண்டாட்டிங்க புருஷனை அத்தான்ங்கிறாங்க, மாமாங்கிறாங்க. எனக்கு மட்டும் ஏனிந்த சோதனை? கடவுளே!”

நெஞ்சைப் பிடித்துக் கொண்டு வானம் பார்த்துக் கத்திக் கொண்டிருப்பவன் வாயின் மீது கை வைத்து மூடி அவன் சத்தத்தை அடக்குவாள் அமிர்தா.

“ஐயோ ஏன் இப்படிக் கத்துறீங்க ரவி. கௌஷிக் அண்ணா மேல தான் இருக்காங்க.”

“ஏன் உங்க அண்ணன் என்ன பெரிய இவரோ? அவர் இருந்தா நாங்க சத்தம் போடக் கூடாதா?”

அவனை முறைத்துப் பார்த்தவள், “கௌஷிக்  அண்ணாவை வம்பிழுக்கலைன்னா உங்களுக்குத் தூக்கம் வராதே. ஆமா நீங்க எதுக்கு ரவி இப்போ ஜாகிங் எல்லாம் போறீங்க?”

“அப்புறம் அதெல்லாம் பண்ணி பாடியை ஃபிட்டா வைச்சுக்கணுமில்ல.”

“அதான் எதுக்குங்குறேன்?”

“இதென்ன கேள்வி, அப்புறம் எப்படி என் சிக்ஸ் பேக்கை நான் மெயின்டெயின் பண்றதாம்? ஜாகிங் எக்சர்சைஸ் இதெல்லாம் மஸ்ட்ம்மா மஸ்ட். இல்லாட்டி சிக்ஸ் பேக் காணாம போயிடும்.” 

“போனா போகட்டுமே.”

“போனா போகட்டுமா… நான் இதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் தெரியுமா? பெர்சனல் டிரெயினர் எல்லாம் வைச்சு வீட்டிலேயே ஜிம் செட்டப் பண்ணி… நீ என்னடான்னா ரொம்ப ஈசியா போனா போகட்டும்கிற.”

“உங்களுக்கு எதுக்கு சிக்ஸ் பேக்? நீங்க என்ன சினிமா ஹீரோவா? இல்லையில்ல, மியூசிக் டைரக்டர் தானே? அப்புறம் எதுக்கு இந்த சிக்ஸ் பேக் எயிட் பேக் எல்லாம்?”

“ஹீரோஸ் மட்டும் தான் இதெல்லாம் வைச்சிருக்கணுமா என்ன? பாடியை ஃபிட்டா வைச்சிருக்க ஆசைப்படுறவங்க யார் வேணும்னாலும் வைச்சுக்கலாம். ஏன், உன் பாச மலர் கௌஷிக் கூடத்தான் என் கூட சேர்ந்து இதெல்லாம் பண்றான். அவன் கிட்ட இப்படி சண்டை போட வேண்டியது தானே?”

“ஹான்… கௌஷிக் அண்ணாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. அவங்க இதெல்லாம் பண்ணலாம் தப்பில்லை.”

“ஆக, உம் பிரச்சனை என் சிக்ஸ் பேக் இல்ல. வேறேதோ இருக்குற மாதிரித் தோணுதே. ஹ்ம்ம்…” சொல்லிவிட்டுப் பெண்ணவளை அளவெடுக்கும் பார்வை பார்க்க,

“என்ன… என்ன.. எனக்கென்ன பிரச்சனை? அதெல்லாம் ஒன்னுமில்ல” அவசர அவசரமாக மறுத்து எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றுத் தெளிவாக அவனுக்குப் புரிய வைப்பாள்.

“ஓய்… சோனி. என்ன பொறாமையா?” கண்ணடித்துக் கேட்பான் மெல்லிசைக்காரன்.

“பொறாமையா எனக்கா? சேச்சே நெவர். அவங்களை எல்லாம்… அதான் உங்க ரசிகைகளை எல்லாம் பார்த்து எனக்குப் பரிதாபமா வேணா இருக்கும்” நொடித்துக் கொண்டாலும் முணுமுணுப்புத் தொடரவே செய்யும். 

“அப்படி என்ன தான் இருக்கோ ‘ஆர்.வீ, ஆர்.வீ’ன்னு எங்க போனாலும் சுத்தி கூட்டம் கூடிக்கிட்டு, மேல வந்து விழுந்துக்கிட்டு…” முகத்தில் ஒரு விதமான இயலாமை, பொறாமை, கோபம் மூன்றும் போட்டி போட பேச்சை அத்தோடு முடித்துக் கொண்டு கிளம்பி விடுவாள்.

இது அவளுடைய தார்மீக உரிமையை நிலைநாட்ட விரும்புவதால் வரும் கோபம். அவனைத் தன்னுடையவனாகத் தன் உடையவனாக ஏற்றுக் கொண்டதால் வரும் பொறாமை.  அந்த உரிமையை வெளியில் காண்பிக்க முடியாத இயலாமை நிலையில் வெளிப்படும் உணர்வு தான் இது போன்ற பேச்சுக்கள்.

இது போல வெகு சில சந்தர்ப்பங்களில் தன்னை மறந்துத் தன் மனத்தை வெளிப்படுத்தத்தான் செய்தாள் அமிர்தா. அவள் இப்படித் தன்னை வெளிக்காட்டும் பொழுதெல்லாம் வானில் சிறகடித்துப் பறப்பதைப் போல் தோன்றும் ராகுலுக்கு.

எதையோ பெரிதாக சாதித்து விட்டதைப் போன்ற உணர்வு. தனக்கே தனக்காக, தன் மீது உரிமை பாராட்ட, கோபப்பட, பாராட்ட, சீராட்ட ஒரு பெண். உடம்பெல்லாம் புது ரத்தம் பாய்ந்ததைப் போன்று ஜிவ்வென்ற ஒரு உணர்வு. இதுவரை அனுபவித்திராத புது உணர்வு. கண் மூடி ஆழ்ந்து ரசித்து அவ்வுணர்வைத் தனக்குள் சேமித்துக் கொள்வான் மெல்லிசைக்காரன். ஒட்டு மொத்தமாக அவளிடம் அதைக் கொட்டும் நாள் வராமலா போய்விடும்?

***************

சென்னையின் பிரதான சாலையில் அமைந்திருந்தது அந்தக் கட்டிடம். ‘ஆர்.வீ ஸ்டுடியோஸ்’ ராகுலின் இசை சாம்ராஜ்யம். ஒரே நேரத்தில் முப்பது மியூசிஷியன்கள் அமர்ந்து இசைக்கக் கூடிய அளவு தாராளமாக இடம் விட்டு இதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டக் கட்டிடம் அது.

‘ஐசோலேடிங் ரூம்’ என்று சொல்லக் கூடிய பாடகர்கள் நின்று பாடக் கூடிய கண்ணாடி நெகிழ் கதவுடன் கூடிய இரண்டு அறைகள். அது மட்டுமல்லாமல் பிரத்யேகமான மானிட்டரிங் ரூம், மிக்சிங் ரூம் என்று சகல வசதிகளையும் தன்னகத்தே ஒருமித்து வைத்திருந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோ அது. இது போக ஆஃபீஸ் ரூம், சவுண்ட் என்ஜினியர்களுக்கு, அங்கு முக்கிய பொறுப்பிலிருக்கும் ஒரு சிலருக்குத் தனி அறை என எந்த வசதிக் குறைபாடும் இல்லாத வகையில் பார்த்துப் பார்த்து அக்கட்டிடத்தை உருவாக்கி இருந்தான் ராகுல்ரவிவர்மன்.

அன்று அங்கு ஒரு பாடல் ஒலிப்பதிவு நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. பாடகர் ஏற்கனவே பாடி முடித்துவிட்டுச் சென்றிருக்க இப்பொழுது பாடகி பாடிக் கொண்டிருந்தார். அதை சவுண்ட் மிக்சிங் முறையில் ஒன்றாக்கிக் கொண்டிருந்தார்கள். ராகுல் இந்த வேலைகளில் பிசியாக இருக்க, அமிர்தாவும் கௌஷிக்கும் ஆபீஸ் ரூமில் அமர்ந்து கணக்கு வழ்க்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கௌஷிக் வற்புறுத்தி அமிர்தாவிடமும் சிற்சில பொறுப்புகளைக் கொடுத்திருந்தான். முதலில் தயங்கினாலும் பிற்பாடு ஈடுபாட்டுடனே செய்ய ஆரம்பித்திருந்தாள் அமிர்தா. கௌஷிக்கின் பணிச்சுமையும் கொஞ்சம் குறைந்திருந்தது.

“கௌஷிக் அண்ணா, இது என்ன போன மாசம் மொத்தமா பத்து கோடி ஏதோ ஒரு அகௌன்ட்டுக்கு டிரான்ஸ்பர் ஆகியிருக்கு. யாரு அக்கௌன்ட் இது?” அமிர்தா கேட்கவும் பதில் சொல்லத் தயங்கினான் கௌஷிக்.

“என் கிட்ட சொல்ல முடியாத விஷயம்னா பரவாயில்லைண்ணா, விட்டுடுங்க.”

“சேச்சே அப்படி எல்லாம் எதுவும் இல்லைம்மா. உனக்குத் தெரியாம ரகசியம்னு ராகுல் கிட்ட எந்த விஷயமும் கிடையாது.”

“இல்லண்ணா அமௌன்ட் பெருசா இருக்கவும் கேட்டுட்டேன். அதுவும் எங்க மேரேஜ் முடிஞ்சு இங்க வந்த மறுநாளே நடந்திருக்கு. அதான்…”

“இந்த விஷயத்தை நான் சொல்றது வேற, ராகுல் சொல்றது வேற. அதுக்குத் தான்மா யோசிச்சேன். வேற ஒன்னுமில்ல. அது… அந்த அமௌன்ட்… அன்னைக்கு ஊர்ல நம்ம வீட்டுக்கு வந்து சத்தம் போட்டாரே ஜீ…ஜீவாவோட சித்தப்பா அவருக்குத் தான்மா டிரான்ஸ்ஃபர் பண்ணினோம்.”

விஷயத்தை இந்தப் பெண் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்ற தயக்கம் இருந்தாலும் சொல்லியே விட்டான் கௌஷிக். கேட்டவளுக்கோ கால்களுக்கடியில் பூமி நழுவிய உணர்வு. ஒன்றா.. இரண்டா… பத்து கோடி ரூபாய்!

எதற்காக இவ்வளவு பெரியத் தொகையைத் தூக்கிக் கொடுத்திருக்கிறார்கள் இவர்கள் இருவரும்? யாருக்காக? தனக்காகவா? 

அன்று அந்த மனிதரிடம் கௌஷிக்கும் ராகுலும் தனியாகச் சென்றுப் பேசி வந்தது நியாபகம் வந்தது. இந்தக் காரணத்திற்காகத் தான் அன்று அந்த மனிதர் உடனடியாக எந்தப் பிரச்சனையும் செய்யாமல் கிளம்பியதா?

நீண்ட நாட்களாக மண்டையைக் குடைந்து கொண்டிருந்த கேள்விக்குப் பதில் கிடைத்தாற் போலத் தோன்றியது அமிர்தாவிற்கு. 

இப்படிப்பட்ட மனிதர்களும் இன்னும் இந்தப் பூமியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்களா? இவர்களை எல்லாம் எந்த வகையில் சேர்ப்பது? நிச்சயமாக மனித குலத்தில் சேர்க்க முடியாது. மிருகங்களோடு ஒப்பிட்டால் அதன் தரத்தையும் சேர்த்துக் குறைத்தாற் போல ஆகிவிடும்.

இப்படி ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவரா ஜீவா? இவர்கள் நடந்து கொள்ளும் முறைக்கும் ஜீவாவின் குணத்திற்கும் சம்பந்தமே இல்லையென்று தான் தோன்றியது. ஆனால் ‘அப்பா’ என்ற பேச்செடுத்தாலே ஜீவா பதறிப் போனதற்கான காரணங்கள் இப்பொழுது புரிந்தது.

பேச்சற்று மௌனமாகிப் போனாள் அமிர்தா. அவள் மௌனத்தைக் கண்டு சங்கடப்பட்டவனாக கௌஷிக் தொடர்ந்தான்.

“அன்னைக்கு அந்தாளு.. அவர்… ஜீவாவோட சித்தப்பா…” என்ன இருந்தாலும் தான் அவரை மரியாதை குறைவாகப் பேசுவது அமிர்தாவைப் பாதிக்குமோ என்று தோன்றியதால் திக்கித் திணறினான் கௌஷிக்.

“அந்தாளுன்னே சொல்லுங்கண்ணா. இவங்களுக்கெல்லாம் மரியாதை ஒன்னுதான் குறைச்சல்.”

“ரொம்பப் பேச்சிட்டாரும்மா. பணத்தால தான் அவர் வாயை அடக்க முடிஞ்சுது.”

“சொந்த மகனோட குடும்பம்னு கூடப் பார்க்காம கூண்டோட அழிச்சப் பாவிங்க தானே அவங்க. அவங்களையெல்லாம்…” ஒன்றும் பண்ண முடியாத ஆத்திரம் தெளிவாகத் தெரிந்தது பெண்ணவளின் முகத்தில்.

“ரிலாக்ஸ் அமிர்தா. ராகுல் அப்படி எல்லாம் விட்டுட மாட்டான். கண்டிப்பா எதாவது பிளான் வைச்சிருப்பான்.”

“அந்தாள் தான் பணம் கேட்டாருன்னா நீங்க ரெண்டு பேரும் எதுக்குண்ணா அதுக்கு ஒத்துக்கிட்டீங்க? இதுக்குப் பதிலா எங்களை அந்த ஆள் கூடவே அனுப்பி வைச்சிருக்கலாம்.”

“என்ன அமிர்தா இப்படி எல்லாம் பேசுற. ராகுல் உன்னை விட இந்தப் பணத்தைப் பெருசா நினைப்பானா சொல்லு.”

“ஒன்னா ரெண்டா பத்துக் கோடிண்ணா. இதுக்கு நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்?” என்ன செய்தாலும் அவன் செய்ததற்கு ஈடாகாது என்றே தோன்றியது பெண்ணவளுக்கு.

“அவன் ரொம்ப நல்லவன்ம்மா. ஆனா யாருமே அவனை சரியா புரிஞ்சுக்கலை. தங்களோடத் தேவைக்கு அவனைப் பயன்படுத்திக்கிட்டவங்க தான் அதிகம். ஏற்கனவே நடந்த கலயாணத்தால ரொம்ப பாதிக்கப் பட்டுட்டான்ம்மா. 

இப்போ நீயும் நிலாவும் அவன் லைஃப்ல வந்தப்புறம் தான் நான் அவன் முகத்துல முழுமையான சிரிப்பையே பார்க்கிறேன். சந்தோஷ்,ராகுல் ரெண்டு பேரோட சந்தோஷமுமே உன் கையில தான் அமிர்தா இருக்கு.

சத்தியமா சொல்றேன் நீ மட்டும் ராகுல் லைஃப்ல வரலைன்னா நானும் எனக்கொரு வாழ்க்கையைப் பத்தி யோசிச்சிருக்க மாட்டேன். கடைசி வரைக்கும் இவங்க ரெண்டு பேர் கூடவே இருந்துடலாங்குற முடிவுல தான் இருந்தேன்.”

கௌஷிக் பேசி முடிக்க அவனை பிரமிப்போடுப் பார்த்தாள் அமிர்தா. என்ன மாதிரியான நட்பு இது. உறவுகள் விஷயத்தில் ராகுலை அந்தக் கடவுள் சோதித்திருந்தாலும் அதை ஈடுகட்டும் வகையில் ஒரு உத்தமமான நட்பை அவனுக்குப் பரிசளித்திருக்கிறார் என்றே தோன்றியது அமிர்தாவிற்கு. 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ராகுல் இவர்களை நோக்கி வந்து கொண்டிருப்பது அங்கிருந்த கண்ணாடித் திரையின் ஊடாகத் தெரிந்தது.

ப்ளாக் டிஷர்ட், ப்ளூ ஜீன்சில் தங்களை நோக்கி வரும் இந்தியாவின் ஸ்டைல் ஐகானை முதல் முறையாகக் கண்களில் காதலும் உரிமையும் போட்டி போட தன்னை மறந்துப் பார்த்திருந்தாள் அமிர்தவர்ஷினி.

அமிர்தாவின் பார்வை மாற்றத்தைக் கண்டு கொண்ட கௌஷிக்,

“சரிம்மா, நான் நம்ம ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் போயிட்டு வந்துடறேன். அவன் வந்தா சொல்லிடு” என்றுவிட்டு நகர்ந்தான்.

ராகுல் தன் முன்னே வந்து சொடக்கிட்டு அழைக்கும் வரை அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அமிர்தா. 

“எந்த உலகத்துல இருக்க நீ? கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு பார்த்துக்கிட்டே இருக்க” ராகுல் கேட்கவும் மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டாள் அமிர்தா.

‘அமிர்தா இவ்வளவு பப்ளிக்காவா சைட் அடிப்ப? மானம் போச்சு. இனி இவன் கிண்டல் பண்ணியே ஒரு வழி ஆக்கிடுவானே. சரி சமாளிப்போம்.’

“ஹான்… என்ன கேட்டீங்க?”

“கௌஷிக் எங்கேன்னு கேட்டேன்?”

“ஒ… அண்ணாவா… அவங்க ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் வரைக்கும் போயிருக்காங்க.”

“ஹ்ம்ம்ம்”

“நீங்க வந்தா சொல்லச் சொன்னாங்க.”

“ஹ்ம்ம்… ஆமா நான் வரும் போது ஒரு பார்வை பார்த்தியே, அதுக்கு என்ன அர்த்தம்?”

“என்ன பார்வை? நான் ஒன்னும் பார்க்கலையே. நான் சும்மா யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.”

அவளின் படபடப்பு அவன் முகத்தில் புன்னகையைத் தருவித்தது.

“ஓ… அப்போ அதுக்குப் பேரு யோசிக்கிறதா? நான் கூட வேற என்னவோன்னு நினைச்சேன்.”

“நீங்க ஒன்னும் நினைக்க வேணாம். பேசாம போய் வேலையைப் பாருங்க ரவி.”

“இல்ல… வேற ஒரு பொண்ணும் இதே மாதிரி இன்னைக்குப் பார்த்துச்சு. அதான்…” முடிக்காமல் ராகுல் இழுக்க,

“யாரு? யாரு அது? உங்களை அப்படிப் பார்க்குறது? காட்டுங்க என்கிட்ட… அவளை…” பல்லைக் கடித்துக் கொண்டு சீட்டில் இருந்து எழுந்தே விட்டாள் அமிர்தா. அது வரையில் ஃப்ளோட்டிங்கில் இருந்த புடவைத் தலைப்பு இப்பொழுது இடுப்பில் வேகமாக இழுத்துச் சொருகப்பட்டது.

அவளின் கோபத்தில் வாய்விட்டுச் சிரித்தான் மெல்லிசைக்காரன்.

“ஹா…ஹா… கூல் சோனி கூல். பார்த்தான்னு தான் சொன்னேன். என்னைப் பார்த்தான்னு சொன்னேனா?”

“என்ன ரவி குழப்புறீங்க?”

“நீ முதல்ல உட்காரு. நான் சொல்றேன்.” அவள் தோள் பற்றி சீட்டில் அமர வைத்தவன் அவளுக்கு எதிரில் இருந்த டேபிளில் சாய்ந்தவாறு நின்று கொண்டான்.

“அதோ அங்க ப்ளூ சுடி போட்டுக்கிட்டு ஒரு பொண்ணு நிக்குது பாரு” கண்ணாடி வழியாக அப்பெண்ணைச் சுட்டிக் காட்டினான்.

“ஆமா, யாரோ புதுசா இன்னைக்கு சான்ஸ் கேட்டு வந்து நீங்க இப்போதைக்கு கோரஸ்ல ஜாயின் பண்ணிக்க சொன்னதா சொன்னாங்க. அதுக்கென்ன இப்ப?”

“அந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்குல்ல” அடக்கப்பட்டப் புன்னகையுடன் ராகுல் கேட்க இப்பொழுது நன்றாகவே அவனை முறைத்தாள் அமிர்தா.

“சரி…சரி. நீ சொன்ன எல்லாமே சரி. ஆனா அந்தப் பொண்ணு புதுசு இல்ல. ஏற்கனவே நம்ம கோரஸ் டீம்ல இருந்த பொண்ணு தான். பேரு தீப்தி. நடுவுல கொஞ்ச நாள் வரலை.

சாப்ட்வேர் படிச்சிருக்கிறதால அமெரிக்காவுல வேலை கிடைச்சிருக்குறதா சொல்லிக் கிளம்பிப் போயிடுச்சு. இப்போ திடுதிப்புன்னு திரும்பி வந்திருக்கு.”

“எதுக்கு இப்போ அம்ம்மெரிக்காவுல இருந்துத் திரும்பி வரணும். உங்களைப் பார்க்குறதுக்கா?” இப்பொழுது மிகுந்த கலக்கம் அமிர்தாவின் கண்களில். அவள் அமெரிக்காவை இழுத்துச் சொன்ன விதத்தில் மீண்டும் சிரிப்பு தான் வந்தது ராகுலுக்கு.

“அட என் மக்கு சோனி… இங்க வா” அவள் கைப்பிடித்து அழைத்துச் சென்று ஜன்னலோரம் நிற்க வைத்தான் ராகுல்.

அங்கு அவள் கண்கள் கண்ட காட்சியில் உதட்டில் புன்னகைத் தானாக மலர்ந்தது.

அங்கிருந்த சவுண்ட் என்ஜினியரிடம் ஏதோ பேசிக் கொண்டு நின்றிருந்தான் கௌஷிக். ஒரு கை ஜீன்ஸ் பாக்கெட்டில் இருக்க, மற்றொரு கை தலை முடியைக் கோதிக் கொண்டிருக்க அவன் ஸ்டைலாகப் பேசிக் கொண்டிருந்த அழகை விழுங்கி விடுபவள் போலப் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த தீப்தி.

அந்தக் கண்களில் காதலையும் தாண்டி எக்கச்சக்கக் கோபம் தெறித்தது.