Atrai thingal 1-1

Atrai thingal 1-1

அற்றைத் திங்கள்

அத்தியாயம் 1

லண்டன் மாநகரம் அந்த இரவு நேரத்திலும் பரபரப்பாக இருந்தது. இருபதாவது மாடியின் ஜன்னல் வழியே பார்க்கையில் வெளிச்ச புள்ளிகளாய் வாகனங்களும், சுற்றியிருந்த கான்க்ரீட் காடும் அவன் மனதை நிறைக்கவில்லை. அத்தனையும் இருந்தும் மனமெங்கும் இறுக்கம். அன்று தான் அவன் சென்னை புறப்படுகிறான். இன்னும் ஆறு மாதத்துக்கு சென்னை வாசம். இந்த பயணம் அவனுக்குள் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது.

மெளனமாக தன்னறையை சுற்றிப் பார்த்தான். தேம்ஸ் நதியோரம் இருந்த அழகான இரட்டை படுக்கையறை பிளாட். அவனது சொந்த உழைப்பு!

அறையின் ஒரு ஓரத்தில் லேப்டாப், அதன் டேபிளின் மீது! அழகாக விரிக்கப்பட்ட படுக்கையுறை, அருகில் லேவண்டர் மனத்தோடு ரூம் ப்ரெஷனர், சீராக அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள் என அத்தனையிலும் சுத்தம், நேர்த்தி. ஒரு சிறு தூசியை கூட காண முடியாத அளவு சுத்தம். சுத்தம் என்பதை காட்டிலும் அழகு!

ஜன்னல் திறையில் கூட அழகை எதிர்பார்ப்பவன் அவன்.

சிறு சிறு பொருட்களை கூட அழகுணர்ச்சியோடு தான் வாங்கி வைப்பான். குப்பை போல பொருட்களை சேர்ப்பதில் அவனுக்கு உடன்பாடு இல்லை. ஒன்றை வாங்கினாலும் அர்த்தமுள்ளதாக நேர்த்தியாக இருக்க வேண்டும் அவனுக்கு.

அப்படித்தான் இருந்தது அவனது வீடும். வசதியாக, அழகாக, நேர்த்தியாக, ஒவ்வொரு இன்சிலும் பணத்தின் செழுமை தெரியுமாறு இருப்பதை அவன் எப்போதும் உறுதி செய்வதுண்டு.

அத்தனை ஆடம்பரத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் அவனது கையில் கூழாங்கல்! அந்த கூழாங்கல்லை வெறித்துப் பார்த்தான் அவன்!

கொக்குச்சி கொக்குகுச்சி, ரெட்டை ரெட்டை சிலாக்கு
மூணுக்குச் சிலந்திகடி, நாலு வந்தா வாரணும்
ஐயப்பன் சோலை, ஆறுமுக தாளம் போட்டு
ஏழுக்குக் கூழு குடி, எட்டுக்கு முட்டி போடு
ஒன்பது கம்பளம் விரிச்சு படு, பத்துக்கு பழம் கொடு.
கட்டை வச்சேன் கால் நீட்டி, கல்லெடுத்து ஆடினேன்,
ஈரிரண்டைப் போடடி, இறுக்கி மாட்டைக் கட்டடி
பருத்திக் கட்டி வையடி, பட்டு கட்ட முடியாம
முக்கட்டி வாணியன் சொல்லாட, சொல்லுஞ் சொல்லும் சேர்ந்தாட
வாணியன் வந்து வழக்காட, வாணிச்சி வந்து வசைபாட
நாலை வைச்சு நாலெடு, நாராயணன் பேரச் சொல்லு
பேரச் சொல்லி வாழ்த்தி நில்லு, ஐவரளி பசுமஞ்சள்
அரைக்க அரைக்கப் பத்தாது, பத்தாத மஞ்சள் பசுமஞ்சள்
ஆக்குருத்தலம் குருத்தலம், அடுப்புத் தண்டலம் தண்டலம்
வேம்பு கட்டால் வெண்கலம், ஏழு புத்திர சகாயம்,
புத்திர சகாயம் வேணாண்டி, மாடு கட்டினா மகராஜி,
எட்டும் பொட்டும் போடட்டும், ஒன்பதுநரி சித்திரத்தை
பேரன் பிறந்தத சொல்லத்தான், பேரிடவாடி பெரியக்கா
பத்திர சித்திர கோலாட்டம், பங்குனி மாசம் ஆடடி
வெள்ளிக்கிழமை அம்மன் கொண்டாட்டம்.

அத்தனை வரிகளும் பசுமையாக நினைவிலிருந்தன. சும்மா இல்லை. அவள் தலையில் கொட்டிக் கொட்டி சொல்லிக் கொடுத்ததாயிற்றே! கல்லாங்கா விளையாட்டு என்று சொல்லித்தான் பழக்கம். ஒண்ணாங்கா, ரெண்டாங்கா, மூணாங்கா, நாலாங்கா, அஞ்சாங்கா என்று போகும். இந்த விளையாட்டு விளையாட கல் பொறுக்குவது ஒரு கலை என்றால், அழகான உருண்டையான ஒரே அளவிலான கற்களை சேமித்தல் இன்னொரு வகையான கலை.

கூழாங்கற்கள் கரடும் முரடுமாக, சொரசொரவென்று ஆரம்பத்தில் இருக்கும். நாளடைவில் விளையாட விளையாட வழவழப்பாகிவிடும். நிறைய கருங்கற்களை தரையில் பரப்பி கற்களை கையால் மேலே எறிந்து சுழற்றிப் பிடிப்பது, புறங்கையில் பிடிப்பது, வாரிப் பிடிப்பது, என பல விதங்கள்.

யாரிடம் அதிக அளவிலான உருண்டை கற்கள் இருக்கிறதோ அவர்களுக்கு இருக்கும் கெத்தே தனி என்பாள் அவள். கல்லாங்கா விளையாடுவது பெண்களுடைய வழக்கம் தான். ஆனால் அவளோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே அவனும் அதை பிடிவாதமாக விளையாடுவான்.

பையன்கள் செட்டிற்குள் ஒப்பாமல் அவளோடே திரிவான். உடன் படிக்கும் அவனது செட் வானரங்கள் அவனை கிண்டல் செய்யும் போதெல்லாம் அவள் தான் சண்டைக்கு செல்வது. அதிலும் அவனது உருவத்தை கண்டு கிண்டல் செய்வது எப்போதுமே நடக்கும்.

சண்டை என்று வந்துவிட்டால் விடவே மாட்டாள். அவனை எப்போதும் விட்டுக் கொடுத்து விடவும் மாட்டாள். அவளிடம் அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று அது.

அது மட்டுமல்ல. அவளிடமிருந்த அத்தனையும் அவனுக்கு பிடிக்கும். ஒன்று விடாமல்… அவள் என்ற ஒற்றை சொல்லே மிகவும் பிடித்தம் தான். அவளை பற்றி நினைக்கும் போதெல்லாம் மனமெங்கும் மழை பெய்யும்.

அத்தனை அழகு! அவள் அழகு! அவள் பெயர் அழகு! அவளது பிறை நெற்றி அழகு! அவளது கொழுக் மொழுக் ஆப்பிள் கன்னங்கள் அழகு! முட்டை முட்டையாய் கன்னங்கரிய அந்தப் பெரிய கண்கள் பேரழகு!

இப்போதும் அவனது கண்களை விட்டு அவள் அகலவில்லை. ரோஜாப்பூ நிற கன்னங்களுக்கு போட்டியாக அவளது இதழ்கள்! அப்போது அவளுக்கு ஒன்பது அல்லது பத்து வயதிருக்குமா? அவ்வளவுதான் இருக்கக் கூடும். அவள் ஐந்தாம் வகுப்பை அந்த அரசினர் பள்ளியில் படித்த போது இவனும் உடன் பயின்றான், அதே பள்ளியில்.

இன்று தன்னை அவளுக்கு நினைவிருக்குமா?

அந்த சிறு கிராமத்தில்… தமிழகத்தின் ஏதோவொரு மூலையிலிருந்த அந்த சிறு கிராமம்.

காவிரி பாய்ந்த வாங்கல்!

கரூரை அடுத்த ஒரு சிறு கிராமம். கரூரில் தந்தைக்கு வேலை. ஜன சந்தடியில்லாமல், தோப்பும் துரவுமாக இருக்க வேண்டுமென்று தந்தை வாங்கலை தேர்ந்தெடுத்தார்.

அங்கு தான் அவளை பார்த்தான் அவன். இணை பிரியா உயிர் தோழியாகிப் போனாள்.

இன்று தன் பெயராவது நினைவிலிருக்குமா?

அவனையும் அறியாமல் அவன் கை அலமாரியிலிருந்த போனை தடவிப் பார்த்தது.

விட்டுப் பிரியும் போது தந்தையிடம் அழுது புரண்டு வாங்கிய அப்போதைய ஐநூறு ரூபாய் ரிலையன்ஸ் போன் அது. ஐநூறு ரூபாய்க்கு இரண்டு போன் என்று ரிலையன்ஸ் புரட்சி செய்த காலம். அந்த இரண்டு செல்பேசிக்கிடையில் பேசுவது அத்தனையும் ஃப்ரீ என்பதால் ஆளாளுக்கு இரண்டு செல்பேசியோடு வலம் வந்த நேரமது.

பிரிகையில் எப்போதும் தொடர்பிலிருக்க வேண்டும் என்பதற்காக தந்தையிடம் பிடிவாதமாக வாங்கிய பேசிகளை அவளிடம் பகிர்ந்து இருந்தான்.

தன்னிடம் இருப்பதை போல அவளிடமும் அந்த பேசி இன்னுமிருக்குமா?

ஆரம்ப ஜோரில் இரண்டொரு முறை பேசியது. பின் எப்படி தொடர்பு விட்டுப் போனதென்று அவனுக்கும் தெரியவில்லை. ஆனால் விட்டுப் போயிற்று.

அந்த எண் செயல்பாட்டில் இல்லையென்ற இயந்திர குரலை கேட்பதற்காகவே அந்த எண்ணுக்கு அழைப்பான்.

எப்போதாவது அந்த எண் செயல்பாட்டுக்கு வராதா என்ற முட்டாள்தனமான நப்பாசை!

வெற்று முகத்தோடு அந்த லேப்டாப் முன் அமர்ந்தான்.

அவனையுமறியாமல் பேஸ்புக்கை திறந்தது அவனது விரல்கள்!

எப்போதும் போல அவளை தேடத் துவங்கினான், அவளது பெயரைக் குறிப்பிட்டு!

*****

கடைசி முயற்சியாக ரைல்ஸ் டியூபை எடுத்துக் கொண்டு அந்த நோயாளியை நோக்கிப் போனாள் மகிழினி. நான்கு முறை படாதபாடு பட்டு அவரது நாசிக்குள் அதை நுழைத்து இருந்தாள். அத்தனை முறையும் திமிறிக் கொண்டு பியைத்து எறிந்திருந்தார் அவர்.

கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக படுத்த படுக்கையாகி இருந்தார் சங்கரி. சிறுநீரகம் செயலிழந்த நிலையில், செப்சிஸ் நோய் தொற்று அதிகமாகி இருந்தது. அதன் தாக்கத்தில் மூளை செயல்பாடு மாறுதலடைந்து எந்தவிதமான ட்ரீட்மென்ட்டுக்கும் அவர் ஒத்துழைக்காமலிருந்தார்.

மூன்று வாரமாக மகிழினி தான் அவரை பார்த்துக் கொள்வது.

ஹோம் நர்ஸ்.

மருத்துவமனையில் கைவிரித்தாயிற்று. இனி ஒன்றும் செய்ய முடியாதென!

அவரது நேரம் முடியும் வரை வீட்டிலேயே வைத்து பார்த்துக் கொள்வது என அவரது பிள்ளைகள் முடிவெடுத்து மகிழினியை வீட்டு நர்ஸாக நியமித்து இருந்தார்கள்.

மகிழினியின் வேலைகளில் அதுவுமொன்று!

அதற்காக நர்சிங் பயிலவில்லை. சிறிது காலம் மருத்துவமனையில் வேலை பார்த்தது, இப்போது உதவுகிறது. அங்கு மட்டுமல்ல. எந்தெந்த வேலை கிடைக்கிறதோ அத்தனையும் பார்த்திருக்கிறாள். ஒன்றையும் விடாமல்.

அவளது ஒரே நோக்கம் பணம்… பணம்… பணம் மட்டுமே!

அதற்காக பேராசை எல்லாம் கிடையாது. அன்றைய நாளுக்கான தேவைகளை தீர்க்க வேண்டும். அவளது கடனுக்கு வட்டி செலுத்த வேண்டும். தங்கையை படிக்க வைக்க வேண்டும். தங்கையின் அதீதமான தேவைகளை தீர்க்க வேண்டும். அது மட்டும் தான்.

இருப்பது அவளும் அவளது தங்கையும் மட்டுமே!

“வேணா… போடீ…” பிடிவாதமாக சங்கரி தள்ளிவிட, விழப் பார்த்த மகிழினி சமாளித்து கட்டிலை பற்றிக் கொண்டாள்.

நேரமாகிக் கொண்டிருந்தது. பொறுமையை இழுத்துப் பிடித்து வைத்திருந்தாலும், கடிகாரத்தில் நேரமோட, மகிழின் பதட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தது.

“சர்… கொஞ்சம் வந்து பிடிங்களேன்…” வெளியே சோபாவில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சங்கரியின் மகனை அழைத்தாள் மகிழ்.

“இதெல்லாம் நீங்களே பண்ண மாட்டீங்களா?” சிடுசிடுத்தான் அவன். அவனுக்கு எப்போதுமே மகிழை கண்டால் பிடிக்காது.

‘ஆளும் மூஞ்சியும்… சரியான குண்டம்மா…’ என்று தான் முணுமுணுப்பான். இப்போதும் அப்படித்தான்… முணுமுணுத்தபடியே அவனது தாயின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.

மகிழினிக்கு இவையெல்லாம் பழக்கம் தான். வெயிலில் அலைந்து சற்று நிறம் மங்கியிருந்தாலும், பார்க்க நன்றாகத்தான் இருப்பாள். ஆனால் சற்று பருத்த உடல்வாகு.

‘என் செல்லக்குட்டி பப்ளிமாஸ்…’ என்று சத்யா கொஞ்சினாலும், அவளுக்கு தெரியும், தன்னுடைய எடை கூடிக் கொண்டே போகிறது என! ஆனால் கத்தி கூர்மையான மூக்கும், அந்த பேசும் பெரிய கண்களும் அவளது அடையாளம். அந்த கண்களை பார்த்தவர்கள், அதிலிருந்து வெளியேறுவது ரொம்பவும் சிரமம். அப்படியொரு காந்தக் கண்கள் அவளுக்கு!

‘சிலுக்கு…’ இதுதான் சத்யா அவளுக்கிட்ட பட்டப்பெயர்.

“இப்படி கூப்பிடாதேன்னு சொல்றேன்ல…” என்று மகிழ் சிணுங்கும் போதெல்லாம்,

‘உன் கண்ணை பாக்கும் போது எனக்கு ஜிவ்வுன்னு ஏறுதுடி… பாத்து… கண்ணு வெளிய குதிச்சிட போகுது…” கிண்டல் தூள் பறக்கும்.

சத்யாவை நினைக்கும் போதெல்லாம் அவளையுமறியாமல் காது வரை புன்னகை விரியும்.

தனக்கே தனக்கான ஒரு ஜீவன்.

சங்கரியை ஒருவாறு சமாளித்து ரைல்ஸ் டியூபை நாசியில் நுழைத்து, அப்போது கொடுக்க வேண்டிய உணவை சிரஞ்சில் எடுத்து டியுபுக்குள் செலுத்தினாள்.

அவரால் திட ஆகாரத்தை உண்ண முடிவதில்லை. நீர்ம உணவுகள் மட்டும் தான். அதையும் வாய் வழியாக கொடுக்க முடியாது. உண்ண மாட்டார். அதனால் மருத்துவர் பரிந்துரைத்தபடி டியூபில் மகிழ் தான் உணவை செலுத்துவாள்.

கஞ்சியோ, பாலோ, பழச்சாறோ எதுவாக இருந்தாலும் அதன் வழி தான்.

பாலை செலுத்தி முடிக்கும் தருவாயிலிருந்தாள். மணியை பார்த்தபடியே, செல்பேசியை பார்த்தாள்.

சத்யாவிடமிருந்து பத்து மிஸ்ட் கால்கள்!

“ஐயோ…” என்று அதிர்ந்தவள், “இப்ப பேசினா கண்டிப்பா மண்டகப்படிதான்…” என்று முணுமுணுத்தபடியே சங்கரியை சுத்தம் செய்தாள்.

ரைல்ஸ் டியுப் போடும் முன்பே அவரது உடம்பை துடைத்து விட்டிருந்தாள்.

படுத்தே கிடப்பதால் படுக்கை புண்கள் வர ஆரம்பித்து இருந்தது. அதனால் சுத்தமாக டெட்டால் போட்டு துடைத்து விட்டு, பவுடர் போட்டுவிட்டிருந்தாள். சங்கரிக்கு கனமான தேகம். அதிலும் அவர் படுக்கையில் இருப்பதால் இன்னும் கனத்திருந்தது. ஆனாலும் மகிழ் சமாளித்து விடுவாள்.

மற்றவர்கள் தூக்க தயங்கும் போது ஒற்றை ஆளாக சமாளிப்பவள் அவள்! தன்னால் முடியாத போதுதான் மற்றவரின் உதவியை எதிர்பார்ப்பது. அதிலும், ‘இதுக்கு எதுக்கு வெட்டியா சம்பளம் தரனும்? நாமளே செஞ்சுட்டு போயிடலாமே…’ என்றெல்லாம் பேச்சு வரும்.

சங்கரியின் மகன் அதையெல்லாம் தயங்காமல் பேசுவான்.

இவர்களை போன்ற ஆட்களை சமாளிப்பதுதான் கடினம்.

ஆனால் ஹோம் நர்ஸ் என்றால் நல்ல வருமானம் உள்ளதால் அத்தனையும் சகித்துக் கொள்வாள். வருமானம் முக்கியமாயிற்றே! அதற்காகத்தானே ஓடுவது!

செல்பேசி அழைத்தது. சத்யாவின் அழைப்பு!

சங்கரியின் வேலைகளை முடித்தவாறே பேசியை எடுத்து காதில் வைத்தாள்.

பெரும் இரைச்சலுக்கிடையில் சத்யாவின் குரல் கேட்டது.

“ஏய் சிலுக்கு… எங்கடி இருக்க?”

error: Content is protected !!