Atrai thingal 1-2

Atrai thingal 1-2

“வந்துட்டே இருக்கேன் சத்யா குட்டி…” மணியை பார்த்தபடியே மகிழ் கூற, சத்யா பல்லைக் கடிப்பது இங்கு வரை கேட்டது.

“வர்றேன் வர்றேன்னு நீ சொல்லி இரண்டு மணி நேரமாகுது. இன்னும் வந்த பாட்டை காணோம்…”

“வேளச்சேரி சிக்னலை தாண்டிட்டேன் செல்லம். கோவுச்சுக்காத ப்ளீஸ்…” மூக்கை சுருக்கிக் கொண்டு மகிழ் கெஞ்ச, மறுபுறம் சத்யா சற்று இரங்கினாள்.

“இங்க ரெண்டு பேர் என்னை கண்ணாலேயே ரேப் பண்ணிட்டு இருக்கானுங்கடி… இன்னும் லேட் பண்ணின்னா கைல பாப்பா கொடுத்துடுவானுங்க…” கிசுகிசுப்பாக கூறிவிட்டு ஆரவாரமாக அவள் சிரிக்க,

“ச்சீ ச்சீ டர்ட்டியா பேசாதடி…” சிறிய குரலில் கூறியபடியே சங்கரியின் மகன் தந்த பணத்தை இரண்டு முறை எண்ணி தனது பர்சில் வைத்தாள்.

“நான் டர்ட்டியா பேசுறேனா? இன்னும் ரெண்டு மணி நேரம் லேட் பண்ணு சிலுக்கு. என்னை முக்காவாசி முடிச்சு இருப்பானுங்க…” என்று சிரித்தவள், “சாவுக்கு வான்னா பாலுக்கு வர்றவடி நீ…” என்று நறுக்கினாள்.

“சரி சரி கிளம்பிட்டேன்… கிளம்பிட்டேன்…” என்றபடி அவசரமாக பேகை மாட்டியவள், சங்கரிக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தபடி மணியை பார்க்க, அது இரவு எட்டரை என்றது.

சத்யாவின் பேரில் தவறில்லை என்று நினைத்துக் கொண்டாள். மகிழின் பேரிலும் தவறில்லையே. எப்போதுமே ஏழு மணிக்கெல்லாம் வேலை முடிந்து விடும். இன்று ரைல்ஸ் டியூப்பை சங்கரிக்கு போட்டு விடுவதற்குள் நாக்கு தள்ளிவிட்டதே!

அதில் தாமதமானது தான்!

“என்ன இப்பத்தான் கிளம்பறியா? என்னடி விளையாடறியா?” மீண்டும் உச்சஸ்தாயிக்கு போனாள் சத்யா.

“ஆத்தா இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்… தயவு செஞ்சு என்னை விட்டுடு…”

சத்யா இப்படித்தான்!

ஒரு சில நேரம் கொஞ்சல்… ஒரு சில நேரம் மிஞ்சல்! கோபம் என்று வந்து விட்டால் யாராலும் தாள முடியாது. யாராக இருந்தாலும் தூக்கிப் போட்டு விடுவாள். அது பெற்றோர் என்றாலும் கூட!

உயிர் தோழி!

ஒரே வீட்டில் ஜாகை!

அவளுடைய கோபங்கள் அத்தனையும் தாங்கக் கூடிய ஒரே ஜீவன் மகிழ் தான். மகிழின் கண்ணீர் பக்கங்கள் அனைத்தையும் அறிந்து அவளுக்காக தோள் கொடுக்கக் கூடிய ஒரே ஜீவன் சத்யா மட்டுமே!

எக்கச்சக்கமாக ஆண் நண்பர்கள் உண்டு. அத்தனையும் பொழுதுபோக்குக்காக மட்டுமே.

‘ஏன்டி… இவனைக் கூடவா உனக்கு பிடிக்கல?’ அவளது லேட்டஸ்ட் ஆண் நண்பனைக் காட்டி இவள் கேட்ட போது, எப்போதும் போல உதட்டைப் பிதுக்கிக் காட்டினாள் அந்த அழகான ராட்சசி.

ஆம். உண்மையில் அவள் அழகு பிசாசு… வசீகர ராட்சசி!

அத்தனையும் அளவெடுத்தது போல… பளீர் பால் நிறத்தில்…

“ப்ச்… இவன் சரியான லூசு… தாங்கு தாங்குன்னு தாங்கறான்… அவன் நோட்டமென்னன்னு எனக்கு தெரியாதா? காரியமாச்சுன்னா கை கழுவிடுவான்… ராஸ்கல்…” என்று மேலும் இரண்டு எக்ஸ்ட்ரா லார்ஜ் திட்டு வார்த்தைகளை போட்டாள் சத்யா.

காதை மூடிக் கொண்டாள் மகிழினி.

“ஷப்பா… எப்படி இப்படி?” என்று பரிதாப பார்வை பார்க்க,

“ம்ம்ம்… அப்படித்தான்…” என்று அவளது தோளை கட்டிக் கொண்டதை நினைத்து அந்த இரவு நேரத்திலும் சிரிப்பு வந்தது.

இப்போது எவன் மாட்டினானோ?

யாராவது மாட்டிவிட்டால் சத்யாவுக்கு கொண்டாட்டமாகி விடும்.

இதற்காகவே டிண்டர், பேஸ்புக், ட்விட்டர் என்று அனைத்திலும் வெகு பிசி அவள்.

ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று தான் வெளுத்துக் கட்டுவது போதாதென்று மகிழையும் வர வைத்து மாட்டியவனுக்கு பில்லை கொளுத்தி விடுவாள்.

இப்போதும் அப்படித்தான்.

யாரோ ஆகாஷாம்! டிண்டர் ஆப் மூலமான பழக்கம். இவளை நேரில் கண்டதும் கள் குடித்த குரங்காக தலைகீழாகத்தான் நடக்கிறான் என்று அன்று காலைதான் கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.

அவனாகவே டின்னருக்கு அழைக்கவும், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி’ என்று காத்திருந்தவளுக்கு , ஆடு தானாக தலையை காட்டிவிட்டதே என்ற எண்ணம் தான் உதித்தது!

அடுத்த நிமிடம் மகிழினிக்கு அழைத்து விட்டாள், அவள் வேலை செய்து கொண்டிருந்த ஹோட்டலிலிருந்து!

ஃபிரான்ட் ஆஃபீஸ் மேனேஜர் அவள்!

“சிலுக்கு… வகையா ஒரு ஆடு சிக்கிருக்கு… இன்னைக்கு கெடா விருந்து தான்…” என்று கிளுகிளுக்க,

“வேணா சத்யாகுட்டி… என்னைக்காச்சும் பிரச்சனைல விட்டுடும்…” எப்போதும் போல இவள் ஓதியது எல்லாம் செவிடன் காதில் ஓதிய சங்கானது.

“எஞ்சாய் பண்ண கத்துக்க சிலுக்கு… யூ ஆர் ட்டூ ஓல்ட் ஃபேஷன்ட்…” பதிலுக்கு அவள் இவளுக்கு அறிவுரை கூறியதுதான் ஹைலைட்!

“எல்லாம் நேரம் தான்…” என்று இவள் சடைத்துக் கொண்டாலும் தோழியை ஒரு நாளும் விட்டுக் கொடுத்ததில்லை. நிழல் போல எப்போதும் உடனிருப்பாள். மகிழ் உடனிருக்கும் போது, அவளது உருவத்தையும் மிரட்டலான பார்வையும் பார்த்தே நிறைய பேர் தள்ளி நின்றுக் கொண்டதுண்டு.

அன்றும் அப்படித்தான். அடித்துப் பிடித்து அந்த பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு இவள் போக, இவளை பார்த்து மிரண்ட அந்த இளைஞன், சத்யாவை விட்டு இரண்டடி தள்ளி அமர்ந்து கொண்டான்.

அதற்கு பின்னும் அவனுக்கு சத்யாவை பார்த்து ஜொள்ளு விடத் தோன்றும்?

பில்லை செட்டில் செய்தவன், நொண்டிக்கொண்டு சத்தமே இல்லாமல் இடத்தை காலி செய்ய, மகிழுக்கே சற்று சந்தேகமாக இருந்தது.

இந்தளவுக்கு தன்னைப் பார்த்து எவனும் மிரண்டதில்லையே என்று எண்ணியவள், சத்யாவை பார்த்து,

“என்ன சத்யாக்குட்டி? வாட் இஸ் த மேட்டர்?” என்று கேட்க,

“குட்டி ட்ரீட்மெண்ட் கொடுத்தேன் சிலுக்கு…” என்று கண்ணடித்தாள்.

“அடிப்பாவி… என்ன பண்ண?” அதிர்ந்து இவள் கேட்க,

“இவங்க எந்த கடைல அரிசி வாங்கறாங்கன்னு உன்னை பார்த்து என்கிட்ட கேட்டான்…” அசால்ட்டாக அவள் கூற, இதெல்லாம் இவளுக்கு சகஜம் தானே. அதனால் அதை சற்றும் கண்டுகொள்ளாமல்,

“அதனால…”

“ஹேன்ட்வாஷ் பண்ற இடத்துல வெச்சு ரெண்டு மிதி மிதிச்சு, கடைய அடையாளம் காட்டினேன்… பேசாம பில்ல செட்டில் பண்ணிட்டு போய்ட்டான்…” என்று கூற,

“அடிப்பாவி…” என்று வாயை பிளந்தாள் மகிழ்.

“எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டவே உன்னை பத்தி கிண்டலடிப்பான். அதான் இந்த ட்ரீட்மெண்ட்…” அலட்டாமல் கூறியவளை பெருமையாக பார்த்தாள் மகி.

இவளது நட்பு ஒன்றே அவள் பெற்று வந்த வரம்.

அவளது வீட்டின் வசதிகளை எல்லாம் ஒரு நொடியில் தூக்கி எறிந்துவிட்டு வருமளவு தைரியம் உள்ளவள் தான் சத்யா. ஆனால் இந்த நொடி வரை தோழிக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் கூடியவள்.

இதே நினைவில் வீடு வந்து சேரும் வரை மகிழ் பேசவே இல்லை.

அது இரட்டை படுக்கையறை ஃபிளாட். இருவருமாக தங்கியிருந்தனர். இருவருமாக என்பதை விட சத்யாவுக்கு துணைக்கு மகிழ் இருந்தாள் என்பதுதான் சரி.

அறைக்கு வந்து நைட்டிக்கு மாறிய சத்யா, ஏதோ நினைவிலேயே நடந்து கொண்டிருந்த மகிழை ஆழ்ந்து பார்த்தாள்.

“என்ன சிலுக்கு? ஒரு மாதிரியாவே இருக்க?”

“நத்திங் சத்யாக்குட்டி… ஜஸ்ட் தலைவலி…” சமாளிக்கப் பார்த்தாலும் அவளது முகம் காட்டிக் கொடுத்தது.

“உன்னால எதையும் மறைச்சு வைக்க முடியாது மகி… என்ன விஷயம் ஸ்பீக் அவுட்…” என்று உலுக்க,

“ப்ச்… ஒண்ணா ரெண்டா… போடீ…” என்று பெருமூச்சோடு எழ போக, அவளை கைப்பிடித்து இழுத்து அமர வைத்தாள்.

“ஒன்னொன்னா சொல்லேன் சிலுக்கு…” என்று அவளது தாடையை பிடித்து கொஞ்சியவளை ஆழ்ந்து பார்த்தாள் மகிழ்.

“இன்னைக்கு டாடிய பார்த்தேன்…” என்று நிதானமாக கூற, தாடையை பிடித்திருந்த அவளது கைகள் தளர்ந்தன.

“ம்ம்ம்ம்…”

“ரொம்ப வருத்தப்படறார் சத்யா…”

“ம்ம்ம்… அதுக்காக?”

“கொஞ்சம் நீ தான் கீழ இறங்கிப் போயேன்… பெரியவங்க சத்யா…”

“வேற பேச்சு பேசு சிலுக்கு…” என்று இப்போது அவள் எழ முயல, மகிழ் அவளது கையை இறுக்கமாக பிடித்து அமர வைத்தாள்.

“எனக்காக ஒரு தடவ அவர்கிட்ட பேசேன்…” கெஞ்சலாக மகிழ் கேட்க,

“இந்த விஷயத்த பத்தி இனிமே பேசாத மகிழ்…” இறுக்கமாக சத்யா கூறவும், சட்டென அவளது கையை விட்டாள் மகிழ். உயர்ந்தபட்ச கோபம் இருந்தால் மட்டுமே அவளது விளித்தல் ‘மகிழ்’ என்றிருக்கும். மற்ற நேரங்களில் எல்லாம் ‘சிலுக்கு’ மட்டும் தான்.

மெளனமாக இருளை வெறித்தாள் மகிழ்.

“உடனே மூஞ்ச தூக்கி வெச்சுக்காதடி…” அதே குரலில் கூறிய சத்யாவை பார்த்தவள், அடுத்த ஐந்தாவது நொடியில் அடக்க முடியாமல் சிரித்தாள்.

“இதுக்கெல்லாம் மூஞ்ச தூக்கி வெச்சா நாளெல்லாம் என் கழுத்து இப்படியேத்தான்டி இருக்கும்…” என்று கழுத்தை உயர்த்திக் காட்டியவளை பார்த்து சிரித்தாள் சத்யா.

“ம்ம்ம்… இப்ப குட் கேர்ள்… அப்புறம்… அடுத்த பிரச்சனை என்ன?” சாதாரண குரலில் கேட்டவளை பார்த்து வியந்தாள்.

எந்த பிரச்னையை பார்த்தும் கொஞ்சமும் அவள் பயந்ததில்லை. எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அதில் சத்யாவின் அணுகுமுறையே அலாதியானது. பிரச்னையை தீர்ப்பதே தெரியாமல் தீர்ப்பவள் அவள்!

அவளுக்கு நேரெதிர் மகிழ்!

சிறிய பிரச்சனைகளைக் கூட பெரிதாக எண்ணிக் கொண்டு கவலைப்படுபவள். சற்று வேறு மாதிரியாக இருந்தால் கூட நடுங்கி விடுவாள். பார்த்தால் தான் ஆள் பெரிதாக இருப்பாளே தவிர, பூஞ்சை மனது.

“அடுத்த பிரச்சனையா? ம்ம்ம்ம்… அதுக்கென்ன? அதான் லைன் கட்டி நிக்குதே… என் தங்கச்சி ரூபத்துல…” அவளது குரலில் லேசான சலிப்பு தொனிக்க,

“என்ன சிலுக்கு? ஏன் இப்படி சலிச்சுக்கற?” தோழியின் தோள் மேல் கையை போட்டுக் கொண்டு சத்யா கேட்க, அவளது தோளில் சாய்ந்து கொண்டாள் மகிழ்.

“ப்ச்… என்னத்த சொல்றது? சுகன்யாவுக்கு டூர் போயே தீரனுமாம். பணம் வேணும்ன்னு நச்சரிக்கறா… இன்னைக்குத்தான் பேங்க் டியு கட்டி முடிச்சேன்… ஆர்டி க்கு பணத்த சேர்க்கணும்… ஆக்டிவா லோனுக்கு பணத்த கட்டனும்… இன்னும் இந்த மாச செலவுக்கு சங்கரிம்மா வீட்டைத்தான் நம்பி இருக்கேன். ஏதோ உன் கூட இருக்கறதால தங்கறதுக்கும் சாப்பிடவும் பிரச்சனை இல்ல… இப்படி இருக்கு நிலைமை… ஆனா அதை கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே மாட்டேங்கறா இந்த சுக்கு… பணம் கொடுக்கறியா இல்லையான்னு கேட்டாக்கூட பரவால்ல… அப்பா இருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமான்னு கேக்கறா சத்யா… மனசே கஷ்டமா இருக்கு… இதுக்குத்தான் எந்த கஷ்டத்தையும் காட்டாம வளர்க்கறேனா?” என்று சொல்லும் போதே மகிழின் கண்கள் கண்ணீரை கொட்ட ஆரம்பித்து இருந்தன.

“ஏய் அவ உன்னை எப்படி லாக் பண்ணனும்ன்னு தெரிஞ்சு வெச்சுட்டு இருக்கா சிலுக்கு… அவ இழுக்கற இழுப்புக்கெல்லாம் போகாத…” சுகன்யாவை பற்றி சத்யாவுக்கு நன்றாகவே தெரியும். அப்பா இருந்தா எனக்கு இந்த கஷ்டம் வந்திருக்குமா என்று கேட்டு கண்ணைக் கசக்கினால் போதும், இந்த பைத்தியம் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராகிவிடும் என்று கூறியவள் தானே!

அதை கேட்டாலும் மகிழ் அதை மனதில் கொண்டதேயில்லை.

“சின்னப் பொண்ணு சத்யா… போக போக சரியாகிடும்…” என்று சமாதானம் சொல்வாள். அது சத்யாவுக்கு கூறுவதா? அவளுக்கே கூறிக் கொள்வதா என்பதை அவள் மட்டுமே அறிவாள்.

“என்ன சரியாகிடும்? நீ தான் செல்லம் கொடுத்து கெடுக்கறடி… நீ படற கஷ்டத்தை எல்லாம் அவளும் தெரிஞ்சுக்கட்டும். அப்பதான்டி பொறுப்பா இருப்பா… இப்ப அவளுக்கு விட்டேத்தித்தனம் தான் இருக்கு…” சுகன்யாவின் நாடியை பிடித்து வைத்திருப்பாள் சத்யா. ஆனால் அவையெல்லாம் மகிழின் கண்களுக்கு தெரியாது. பாசம் கண்ணை மறைக்கும்.

ஒரே ஆதரவாக இருந்த தந்தை இறந்தவுடன், கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்க இருந்தவள், தந்தை சேர்த்து வைத்ததிலிருந்து வெறுமனே டிப்ளமா மட்டுமே படித்தாள். அதிலும் பாதி கடன். அதற்கு இப்போது வரை திருப்பி கட்டிக் கொண்டிருக்கிறாள். அதோடு தங்கைக்கான ஃபீஸ், ஹாஸ்டல் கட்டணம், மற்றும் இதர கட்டணங்கள் என்று அல்லாடிக் கொண்டுதான் இருக்கிறாள்.

அதிலும் கிடைத்த வேலைகளை செய்து கொண்டு!

இந்த இருபத்தியேழு வயதுக்கு இவையெல்லாம் அதிகமே!

“ப்ச்… என்ன பண்றது சத்யா?” என்றவளுக்கு கண்கள் கலங்கியிருந்தன.

அவளும் தான் எத்தனையோ வேலைகளை பார்க்கிறாள். அதிலும் சங்கரிம்மா போன்ற பேஷன்ட்களை அவ்வளவு எளிதில் யாராலும் சமாளிக்கவும் முடியாது, சகிக்கவும் முடியாது. படுக்கையிலேயே அத்தனையும்! பாவம் அவருக்கு சொல்லவும் தெரியாது. அவரை சுத்தப்படுத்தி, வேறு நைட்டி அணிவித்து விடும்வரை இடுப்பு கழண்டு விடும் அவளுக்கு. அதை புரிந்துக் கொள்ளாமல் பணத்தோடு ஒப்பிட்டு பேசும் சங்கரிம்மாவின் மகன் போன்றவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள்.

மகிழினிக்கு சகிப்புத் தன்மை ரொம்பவுமே அதிகம்.

error: Content is protected !!