அதற்காகவும் சத்யா திட்டிக் கொண்டே இருப்பாள்.
“நோ சொல்லனும்ன்னா நோ சொல்லித்தான் ஆகணும் மகி. நோ சொல்ல வேண்டிய இடத்துல எஸ் சொல்லவே கூடாது….” கறாராக கூறியவளை பார்த்தாள்.
அவள் சொல்லிவிடுவாள். அந்த தைரியம் சத்யாவுக்கு நிறைய உண்டு. சொல்லியுமிருக்கிறாள், பிடிவாதமாக, இன்று வரை! ஆனால் தன்னுடைய நிலை அப்படி இல்லையே!
நிராதரவான தன்னுடைய நிலையை நினைத்து அவளுக்கு எப்போதும் போல தன்னிரக்கம் சூழ்ந்தது. பாவமான புன்னகை அந்த இதழ்களில் நெளிந்தது.
“இதுதான்டி உன்கிட்ட எனக்கு பிடிக்கவே பிடிக்காத விஷயம்…” என்று முறைத்த சத்யாவை புரியாமல் பார்த்தாள்.
“என்ன சத்யா?”
“பின்ன? எப்ப பார்த்தாலும் உன்னை நீயே தாழ்த்திக்கற… மத்தவங்க கிண்டல் பண்றதுக்கு முன்னாடி உன்னை நீயே கிண்டல் பண்ணிக்கற… கஷ்டம் எல்லாருக்கும் இருக்கறதுதான்… அதுக்காக… நம்மளை நாமளே தாழ்த்திக்கனுமா? எந்த பிரச்சனையா இருந்தாலும் தைரியமா பேஸ் பண்ண வேண்டாமா?” எப்போதும் சத்யா சொல்வதுதான். ஆனால் மகிழால் தன்னை மாற்றிக் கொள்ள முடிவதில்லை. காலூன்றி நிற்கும் போது தன்னம்பிக்கை வரலாம். ஆனால் சரியான வேலை இன்னும் அமையாமல், கிடைத்த வேலையை செய்துகொண்டு எப்படியாவது தங்கையையும் காப்பாற்ற வேண்டிய அவசியமிருக்கும் போது எப்படி தன்னம்பிக்கை வந்து விடும்?
“சொல்றது ஈசி சத்யா…” என்று மகிழ் கூறிக் கொண்டிருக்கும் போதே அவளது செல்பேசி அழைத்தது.
மணியை பார்த்தாள்!
கிட்டத்தட்ட பத்தரையை தாண்டியிருந்தது!
சங்கரியின் மகன் தான் அழைத்திருந்தான்!
இந்த நேரத்தில் அழைக்கிறார்கள் என்றால்? என்ன பிரச்சனையோ என்ற பயத்தோடு பேசியை காதுக்கு கொடுத்தாள்!
“ஹலோ… சொல்லுங்க சர்…” என்று ஆரம்பித்தவளின் முகத்தில் லேசான வியர்வை பூச்சு.
என்னவென்று சத்யா பார்த்தபடி இருக்க, “ஒரு பத்து நிமிஷத்துல புறப்பட்டு வர்றேன் சர்… பாத்துட்டு சொல்றேன்… எதுக்கும் பக்கத்துல இருக்க ஹாஸ்பிடல்ல கூப்பிட்டு பாருங்க… அவங்க கன்பர்ம் பண்ணி சர்டிஃபை பண்ணனும்…” என்று சற்று இறங்கிய குரலில் கூறிவிட்டு செல்பேசியை அணைத்தாள்.
“என்ன சிலுக்கு?” சத்யா கேட்க, முகத்தை அழுத்தமாக துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.
“சங்கரிம்மா இறந்துட்டாங்க போல இருக்கு சத்யா…” என்றவளின் குரல் சோர்ந்து ஒலித்தது.
“ஓ… இப்ப எதுக்கு கூப்பிடறாங்க?”
“நாடித் துடிப்பு இருக்கான்னு பாக்கணுமாம்…”
“ம்ம்ம்…”
ஒரு உயிர் போய்விட்டதே என்ற ஆதங்கம் ஒருபுறம். அவர் ஒருவர் மட்டுமே இந்த மூன்று மாதமாக வருமானத்திற்கு ஆதாரமாக இருந்தார் என்பது மறுபுறம். இனி தினசரி தேவைகளுக்கும், தங்கைக்கும் செலவு செய்ய வருமானம் எங்கே என்ற கேள்வி இன்னொருபுறம்!
தலையைப் பிடித்துக் கொண்டாள் மகிழ்.
“சரி கிளம்புடி…” சத்யா மகிழை எழுப்பினாள்.
“அடுத்த வேலைய தேடனும் சத்யா…” பெருமூச்சோடு எழும்பினாள்.
“படிச்ச படிப்ப விட்டுட்டு கன்னாபின்னான்னு வேலை பாக்கதன்னு நானும் தலையால அடிச்சுக்கறேன்…” சத்யா பல்லைக் கடிக்க,
“நான் தான் ரொம்ப அறிவாளித்தனமா மெக்ல டிப்ளமா பண்ணி இருக்கேனே… எந்த லேத்து பட்டறைக்கு வேலைக்கு போறது ஆத்தா?” அந்த சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது மகிழினிக்கு!
அப்போது தெளிவில்லாமல், பீஸ் குறைச்சல், உடனே அட்மிஷன் என்றவுடன் சேர்ந்தாயிற்று. மூன்று வருடம் முடிக்கும் வரை எத்தனையோ கேலிப் பார்வைகள். மெக்கானிக்கல்ல பொண்ணா என்ற ஆச்சரிய பார்வைகள். ஆர்வ மிகுதியில் சேர்ந்து இருக்கிறாள் என்ற வியப்பில் சிலர் வந்து கையெல்லாம் கொடுத்து இருக்கிறார்கள். இவளும் ஹிஹி என்று இளித்தும் வைத்திருக்கிறாள். அப்போதே சத்யா மெக்கானிக்கல் வேண்டாமென்றாள். அவளோடு பனிரெண்டாவது படிக்க முடியாது என்று தோன்றியதால் தான் மகிழ் அந்த முடிவை எடுத்தாள்.
தந்தை இறந்திருந்த நேரம் வேறு! ஒரேயொரு வீட்டை தவிர வேறு எந்த சேமிப்பும் பெரிதாக இல்லாத நிலை என்பதோடு ஆதரிக்க உறவினர்களும் பெரிதாக தயாராக இல்லை.
சத்யா பிடிவாதம் பிடித்தாள் தான். ஆனால் ஏனோ அப்போது தோன்றவில்லை. இப்போது எந்த வேலையும் அமையாதது தலைவேதனையாக இருந்தது.
“எந்த லேத்து பட்டறைக்கும் போக வேணா… எனக்கு தெரிஞ்ச கம்பெனில வேக்கன்சி இருக்கற மாதிரி சொன்னாங்க… அதுக்கு போ…” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே சத்யாவின் செல்பேசியில் நோட்டிபிகேஷன் வந்தது.
மகிழ் அணிந்திருந்த நைட்டியை கழற்றியபடி சத்யாவை பார்த்தாள். சங்கரிம்மாவை கடைசியாக பார்த்துவிட்டு வர வேண்டும் என்று தோன்றியது. கடைசியாக இவள் தான் அவருக்கு அத்தனையும் செய்திருந்தாள்.
பேசிக்கொண்டே வந்த மெயிலை சத்யா திறந்தாள்.
திறந்தவளின் முகத்தில் தவுசன்ட் வாட்ஸ் மின்னல்!
“ஏய் சிலுக்கு… நம்ம ஸ்கூல்ல ரீயூனியன் வைக்கிறாங்களாம்…” கிட்டத்தட்ட கூவினாள் சத்யா.
மகிழ் முகத்தில் இரண்டாயிரம் வாட்ஸ் மின்னல்!
சுடிதாரை அணிந்தபடியே, “ஏய்… நிஜமாவா?” கண்களை விரித்தாள் மகிழ்.
“ஏய் ரொம்ப முழிக்காதடி சிலுக்கு… கண்ணு ரெண்டும் வெளிய குதிச்சிட போகுது…” கிளுகிளுத்தாள் சத்யா.
“அட பக்கி… கவர்மென்ட் ஸ்கூல்ல எல்லாம் ரீயூனியன் வைக்கிறாங்களா?” கொண்டையாக முடிந்திருந்த முடியை அவிழ்த்தபடியே ஆச்சரியத்துடன் மகிழ் கேட்க,
“யாரோ சாய்பிரகாஷாம்… அவங்க தான் கோஆர்டினேட் பண்றதா மெயில் வந்திருக்கு… உனக்கு ஞாபகம் இருக்கா சிலுக்கு?”
மெயிலை படித்துக் கொண்டே சத்யா கேட்க, ஒரு கணம் மகிழின் மூச்சு தடுமாறியது!
“என்ன… சாய்பிரகாஷாஆஆஆ???” என்றவள், வாயை ஆவென்று திறக்க, நிமிர்ந்து பார்த்து சிரித்தபடி அவளது வாயை மூடினாள்.
“டோர் க்ளோஸ் பண்ணு சிலுக்கு… என்ன மேட்டர்?” என்று சத்யா கேட்க,
“சத்யா உனக்கு ஞாபகம் இல்லையா?” இடைவரை கிடந்த முடியை வாரியபடியே ஆச்சரியக் குரலில் மகிழ் கேட்க,
“என்னடி?” புரியாமல் பார்த்தாள் அவள்.
“பிரகாஷ்டி… நம்ம செட்… கொஞ்சம் ஸ்டயுட்டா… டார்க்கா…” என்று அவள் சொல்லும் போதே, சத்யாவுக்கு பல்ப் எரிந்துவிட்டது.
“அட… அந்த முள்ளம்பன்றியாஆஆஆ?” இப்போது வாயை திறப்பது அவளது முறையாயிற்று!
“முள்ளம்பன்றின்னு சொல்லாத எருமை…” பள்ளி காலத்துக்கே போய்விட்டாள் மகிழ்.
“ஓ… உன்னோட டாவுல்ல…” கிளுக்கி சிரித்தாள் சத்யா.
முடியை பின்னி பின்னால் போட்டவள், அவளது தலையில் கொட்டினாள்.
“ஹலோ என்னோட டாவெல்லாம் இல்ல… ஜஸ்ட் ப்ரென்ட்…” என்றவள், “அதுவுமில்லாம இதுவரைக்கும் அவன் சும்மாவா இருப்பான்?” என்றபோது மகிழின் குரலில் சிறு ஏக்கம் எட்டிப் பார்த்தது.
“இருந்தா மட்டும்? என்ன பண்ண போற சிலுக்கு?” கேள்வியாக புருவத்தை உயர்த்தினாள் சத்யா!
“என்ன பண்ண முடியும்? ஒன்னும் முடியாது… நீ நல்லா இருக்கியா? நான் நல்லா இருக்கேன்னு சொல்ல முடியும்… போனை கொடுத்துட்டு போனியே, அதுக்கு பில்லு யாருடா கட்டுவான்னு கேக்கணும்…” என்றவள் சட்டென சிரித்துவிட, சத்யா சிரிப்பை தாள முடியாமல் வயிற்றை பிடித்து கொண்டாள்.
“வெக்கன கொக்கா வெறி கொக்கான்னு அந்த செங்கல்லையே உக்காந்து பாத்துட்டு இருப்பியே…”
“அது ஒரு அழகிய கனாக் காலம் பாப்பா…” ரொம்பவும் நெகிழ்ந்த சமயத்தில் மட்டும் தான் அவள் பாப்பா என்பாள் சத்யாவை!
“ஞாபகம் வருதே… ஞாபகம் வருதேன்னு… பாடப் போறியா சிலுக்கு?”
“அடப்போ பக்கி…” என்று அவளது மண்டையில் தட்டியவள், கைப்பையை எடுத்துக் கொண்டு,
“ரீயுனியன் எங்கவாம் சத்யா? கரூர் போகனுமா?” என்று கேட்க,
“இல்லடி… சென்னைல தானாம்… நிறைய பேர் இங்க தான் இருக்காங்களாம்… சிடிசில வாம்…”
சிடிசி என்றவுடன் மகிழின் நடை நின்றது.
“ஏன் சிடிசி சத்யா? கொஞ்சம் பெரிய ஆளுங்கள மட்டும் இன்வைட் பண்ணி இருப்பாங்களோ…” எப்போதும் போல தாழ்வுணர்ச்சி தலை காட்டியது.
“லூசு… உன்னோட மெயிலை செக் பண்ணு… தெரிஞ்ச மெயிலுக்கெல்லாம் கூகிள் இன்வைட் கொடுத்து இருக்காங்க… உனக்கு அனுப்பலைன்னா, தெரிஞ்சவங்க எல்லாருக்கும் பார்வர்ட் பண்ண சொல்லி இருக்காங்க… நான் உனக்கு பார்வர்ட் பண்ணிடறேன்…”
சாதாரணமாக சத்யா சொல்ல… மகிழின் முகத்தில் லேசான குழப்பம்.
“பாக்கலாம் சத்யா…” என்றவள், அந்த நினைவை அழித்து விட்டு சங்கரிம்மாவை பார்க்க சென்றாள்.
அவளுக்காகவே ஒருவன் அவ்வளவு பெரிய ஈவன்ட்டை ஆர்கனைஸ் செய்து இருக்கிறான் என்பதை அவள் எப்படி அறிவாள்?