Aval throwpathi alla – 15

Aval throwpathi alla – 15

சர்வாதிகாரி

சாரதி என்னதான் தீவிரமாய் யோசித்தாலும் வீராவை பற்றி தீர்க்கமாய் எந்த வித முடிவுக்கும் வர முடியவில்லை. ஒருவித குழப்பமான மனநிலையிலேயே இருந்தான்.

ஆனால் அதற்கு பிறகு அவனுக்கு வரிசைகட்டி நின்ற மற்ற வேலைகளில் கவனம் செலுத்தியதில்,

அவனின் எண்ணம் வீராவை குறித்த சந்தேகத்தை தவிர்த்து அப்போதைக்கு தள்ளி வைத்துவிட்டது.

வீராவிற்கோ அன்றைய நாள் பதட்டத்தில் தொடங்கி,

பின்னர் சாரதியின் வசைகள்
அதிகாரத்தில் சற்றே கடுப்பாய் முடிவடைந்திருந்தது.

வீட்டிற்கு வந்ததிலிருந்து தலையை பிடித்து கொண்டு, ‘வாழ்வே மாயம்’ என்றளவுக்கு அவள் அமர்ந்திருக்க,

அமலாவும் நதியாவும் தன் தமக்கையின் பிரச்சனை என்னவென்று புரியாமல்,

அவளை உற்று பார்த்தபடி குழம்பி கொண்டிருந்தனர்.

“இன்னா க்கா ஆச்சு?… எதுக்கு இப்படி பேயறைஞ்ச மாறி உட்கார்ந்திட்டிருக்க” நதியா கேட்கவும்

அவர்கள் இருவருரையும் உருத்து பார்த்தவள்,

“போங்கடி! முதல் நாளே அந்த சாரதி என்னை கடுப்பேத்தி வெறுப்பேத்தி அனுப்பிட்டான்” என்றவள் சொல்ல இருவரும் ஆர்வமாய்,

“இன்னாக்கா ஆச்சு?!” என்று கதை கேட்கும் தோரணையில் அமர்ந்து கொண்டனர்.

“சரியான ரூல்ஸ் ராமானுஜம்டி அவன்” சினத்தோடு அவள் மூச்சிறைத்தபடி சொல்ல,

“எவன் க்கா” என்று கேட்டாள் அமலா குழப்பமாக!

“அதான் அந்த சா… ரதி” என்று அவன் பெயரை அவள் கடித்து துப்ப,

“அவர்தானே க்கா உன் முதலாளி” என்று வினவினாள் நதியா!

“ஆமா… முத… லாளிதான்… சரியான சிடுமூஞ்சி… பேசிறான் பேசிறான் நிறுத்திக்காம பேசிக்கினே இருக்கான்… அதில்லாம நம்ம பதிலுக்கு திருப்பி எதானாச்சும் பேசிட்டா… அப்படியே முறைச்சி பார்க்கிறான்… முதல் நாளே கடுப்ப்ப்ப்பேத்திட்டேன்” என்று அவள் பொறுமி கொண்டு ஒற்றை காலை மடக்கி தலையில் கைவைத்து கொள்ள,

அமலாவும் நதியாவும் மாறி மாறி சத்தம் வராமல் சிரித்து கொண்டனர்.

“சரி விடுக்கா… நீ வாங்காத திட்டா அடியா?!” அமலா சொல்ல நிதானித்து அவர்களை பார்த்தவள்,

“அதல்லாம் சரிதான்டி… ஆனா ஓவரா பேசிறான்… ரூல்ஸ் போட்டே கொல்றான்” என்று மேலும் வெறுப்பானாள்.

“யக்கா… இன்னைக்கு வரலாறு பாடத்தில படிச்சேன்… சர்வாதிகாரி… அப்படியா க்கா?” என்று அமலா கேட்க,

“ஹ்ம்ம் ஆமான்டி… சர்வாதிகாரி சாரதி… பேர் கூட ஒத்து போவுது” என்று வீரா அழுத்தி சொன்னாள். ஏனோ அவளுக்கு சாரதியை பார்க்கும் போது ஓர் சர்வாதிகாரியை பார்க்கும் உணர்வுதான்!

சாரதியின் மீதான இந்த எண்ணம்,

நாளாக நாளாக அவளுக்கு அதிகரித்து கொண்டே போனது.

அவன் ஒருநாளும் இயல்பாக பேசவோ சிரிக்கவோ செய்ததில்லை. அவனிடமான இயந்திரத்தன்மை அவளுக்குள் வெறுப்பையே வளர்த்துவிட்டது. அதெல்லாம் தாண்டி அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்று அவனை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க வீரா அவனுடன் இருக்கும் போதெல்லாம் ஒருவித ஜாக்கிரதை உணர்வோடு சாமர்த்தியமாய் நடந்து கொண்டிருந்தாள். ஆதலாலேயே அவனை காணும் போதெல்லாம் ஒருவித அச்ச உணர்வு தொற்றி கொள்வோம் அவளுக்கு!

வீரா அன்றும் எப்போதும் போல் சாரதி வீட்டிற்குள் நுழைந்தவள்,

தெய்வானை வாசலில் நின்று துளிசி மாடத்தை சுற்றி வந்து கொண்டிருப்பதை பார்வையிட்டாள்.

“என்ன மாமி? இரண்டு நாளா ஆளையே காணோம்” என்று வீரா விசாரிக்க அவர் புரியாமல் குழம்பியபடி கடைசி சுற்றை  சுற்றி முடித்துவிட்டு,

“யாருடா அம்பி நீ? புதுசா இருக்க” என்றார் அவர்!

“இன்னா மாமி நீங்க? நான் பத்து நாளா வந்து போயினிருக்கேன்… என்னை தெரியலயா?”

அவர் தாடையில் கை வைத்து யோசிக்க,

“அதுவுமில்லாம நீங்க இல்லாததால காகா ங்கெல்லாம் எம்மா வருத்தப்பட்டுச்சு… தெரியுமா?!” என்க,

“என்னடா உளற?… முதல யாரு நீன்னு சொல்லு?” என்றார் அழுத்தமாக!

“சாரதி சாரோட டிரைவர் மாமி” என்று வீரா அறிமுகப்படுத்த அவர் முகம் அஷ்டகோணலாக மாறியது.

“ஆமா… மாமி… நீங்க இங்க இன்னா வேலை செய்றீங்க… சமையலா? ஆனா சாரதி சார் கவுச்சி எல்லாம் சாப்பிடிறாரே…
நீங்க எப்படி மாமி?” என்று அவளாக யூகத்து கொண்டு கேள்வி எழுப்ப,

தெய்வானையின் முகம் உக்கிரமாய் மாறியது.

“என்னை பார்த்தா சமையல்காரி மாறி தெரியுதாடா நோக்கு” என்றவர் பொங்கி எழ,

“இல்லைதான்” என்று யோசனையாய் பார்த்தாள் வீரா!

“அதுவும் அந்த கடன்காரனுக்கு போய்” அவர் கோபம் தாளாமல் பேச,

“சாரதி சார் உங்ககிட்ட கடன் வாங்கி இருக்காரு… இன்னா மாமி சொல்றீங்க?” குழப்பமாய் வினவினாள்.

“அவனை வளர்த்த பாவத்துக்கு … என்னை இப்படி கொண்டாந்து நிக்க வைச்சிட்டான்… அவன் நன்னா இருப்பானா?!” சாரதி இல்லாத தைரியத்தில் தெய்வானை விரல்களை கோர்த்து சபித்து கொண்டிருக்க,

“நிஜமாவா மாமி? நீங்க சாரதி சாரை வளர்த்தீங்களா? நம்பவே முடியல” என்றாள் அவள்!

“அந்த கடன்காரன் என் ஆத்துக்காரோட அண்ணன் பையன்டா… அவங்க அப்பனுக்கு இவனை வளர்க்க துப்பில்ல… என் ஆத்துக்கார்தான் இவனுக்கு இரக்கம் பார்த்து வீட்டில சேர்த்துண்டாரு… ஆனா எல்லாத்தையும் மறந்து படுபாவி இப்படி பண்ணிட்டான்”

“சாரதி சாரை பார்த்தா உங்க ஆளுங்க மாறி தெரியலயே மாமி… அதுவும் கறி மீனெல்லாம் வெளுத்து வாங்கிறாரு”

“அபச்சாரம்! அபச்சாரம்!” என்று தெய்வானை காதை மூடி கொள்ள வீரா புரியாமல் விழித்தாள்.

தெய்வானை பின்னர் குரலை தாழ்த்தி வீராவிடம்,

“அவன் ஒண்ணும் எங்காளு எல்லாம் இல்ல… அவங்க அம்மா வேற ஜாதி” என்றார்.

“ஓ!!” என்றவளின் முகம் ஆச்சர்ய தொனியில் மாறியது. அவள் ஏதேதோ யோசித்து மௌனமாகிட,

“யாராண்ட பேசிட்டிருக்க?” என்று குரல் கொடுத்து கொண்டே சாரங்கபாணி வெளியே வர,

வீரா தலையை நிமிர்த்தி,
“யாரு மாமி அவரு? உங்க வூட்டுக்காரரா?!” என்று கேட்டாள்.

“உம்ஹும்… என் ஆத்துக்காரர்” என்று தெய்வானை சொல்ல,

“இரண்டும் ஒண்ணுதான் மாமி” என்றாள் வீரா!

அதற்குள் சாரங்கபாணி நெருங்கி வர,

“நான் யாரான்டையும் எதுவும் பேசிற கூடாது… மூக்கில வேர்த்திருமே” என்று தெய்வானை அலுப்பாய் சொல்ல,

வீரா சாரங்காபாணியை அளவெடுத்தது போல் பார்த்து தெய்வானை காதோடு நெருங்கியவள்,

“மாமா… உங்களவுக்கு இல்ல… நீங்கதான் சும்மா இந்த வயசிலயும் கிண்ணுன்னு இருக்கீங்க” என்றாள்.

தெய்வானை சலித்து கொண்டு உதட்டை சுளித்தபடி,

“பின்ன… நேக்கும் அவருக்கும் பத்து வயசு வித்தியாசம்டா” என்றவர் புலம்பும் போதே சாரங்கபாணி வந்து நின்று

“ஏன் தெய்வா? யாரன்ட பேசிட்டிருக்க? யாரிந்த அம்பி?” என்று கேட்டு வீராவை கூர்ந்து பார்த்தார்.

“சாரதிக்கு டிரைவரா சேர்ந்திருக்கானா ன்னா… நல்ல பையனா இருக்கான்” என்று தெய்வானை அவர் காதோரம் ரகசியமாய் சொல்ல,

அது வீராவின் காதிலும் கேட்டது.

“ஆமா ஆமா நல்ல பையன்தான்” என்றாள் தலையசைத்தபடி!

சாரங்கபாணி தன் மனைவியின் கரத்தை பிடித்து ஓரமாய் இழுத்து சென்றவர்,

“நேக்கு புதுசா ஏதாவது வம்பு வளர்த்து வைச்சுடாதே… உன் திருவாயை மூடிட்டு உள்ள போறியா கொஞ்சம்” என்று உஷ்ண பார்வையோடு தன் மனைவியிடம் உரைத்தார்.

“ம்க்கும்” என்று உதட்டை சுளித்து கொண்டு வீட்டிற்குள் நடந்தார் தெய்வானை!

வீரா தன் குரலை உயர்த்தி, “இன்னா மாமி? காகாவுக்கு எதுவும் வைக்காம போறீங்களே?!” என்றவள் கேட்க,

“இன்னைக்கு நான் விரதம்டா… சாயந்திரம்தான் சமைச்சி சாமிக்கு படைச்சிட்டுதான் எல்லாம்” என்று சொல்லி கொண்டே உள்ளே சென்றுவிட்டார் தெய்வானை!

“சே! இன்னைக்கும் வடபோச்சே” என்று வீரா ஏமாற்றத்தோடு நடக்க போனவள் வீட்டிற்குள் இருந்து சாரதி வருவதை பார்த்து மிரட்சியுற்று அமைதியாய் நின்றுவிட்டாள்.

அவன் என்றுமில்லாமல் இன்று  கேஷுவல்ஸில் இருந்தான். கூலர்ஸை தாங்கிய டீ ஷர்ட் பேன்ட் அணிந்து கொண்டு கையில் ஒரு பேகை தாங்கிவந்தான்.

அவன் நடந்து வந்த விதத்தில் வியப்பாய் அவனை அவள் பார்த்திருக்க,

“என்ன பார்த்திட்டிருக்க? இந்த பேகை எடுத்திட்டு போய் பின்னாடி சீட்ல வைச்சிட்டு… காரை ஸ்டார்ட் பண்ணு”  அதிகாரமாய் உரைத்தவன் சாவியை அவள் புறம் தூக்கி போட,

அதனை இம்முறை சரியாய் பிடித்து கொண்டவள் அவனிடமிருந்து பேகை வாங்கி கொள்ள,

அது ரொம்பவும் கனத்தது.

‘ஆள் டிரஸுதான் மாறி இருக்கு… ஆனா அதே சிடுமூஞ்சதான்… ப்பா இந்த பேக் வேற இன்னா கனம் கனக்குது… இன்னா வைச்சுக்கிறான் உள்ள’ என்று புலம்பியபடி அதனை காரின் உள்ளே வைத்துவிட்டு,

காரை இயக்கி அவன் முன்னே எடுத்து வந்து நிறுத்தினாள்.

அவன் காரில் ஏறி அமர்ந்ததும் வீரா,

“இன்னைக்கு ஆபிஸ் போலயா சார்?” என்றவள் ஆர்வமாய் வினவ,

“மாசம் முன்னூத்தி அறுபது நாளும் ஆபிஸ் வேலையே பார்த்திட்டிருப்பாங்களா?!” என்றான் அலட்சிய தொனியில்!

“அப்ப எங்கே சார்… போகனும் ?”

“ஈசிஆர் பீச் ரிஸார்ட் போ” என்றவன் தன் செல்பேசியை பார்த்து கொண்டே உரைக்க அவள் புருவங்கள் சுருங்க அவனை பார்த்தாள்.

“அங்க இன்னாத்துக்கு சார்… எதனாச்சும் மீட்டிங்கா?” என்றவள் அடுத்த கேள்வி எழுப்ப,

அவன் பதில் சொல்லாமல் அவளை கூர்ந்து பார்க்க,

அந்த பார்வைக்கு அர்த்தம்  மேலே பேசாமல் அவள் மௌனமாகிட வேண்டும் என்பதுதான்!

அவளும் அதனை உணர்ந்தவளை அவள் வாயை மூடி கொள்ள,

அவனும் மௌனமாக தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

காரும் மிதமான வேகத்தில் ஓடி கொண்டிருக்க சாரதி அவளிடம்,

“ஆமா கேட்கனும்னு நினைச்சேன்! வீட்டில அவங்ககிட்ட என்ன பேசிட்டிருந்த?” என்றவன் யோசனையாய் கேட்க,

அவள் முகம் சட்டென்று மாறியது.

பதில் தெரிந்தாலும் “யாரு சார்?” என்றவள் வினவ

அவன் புருவங்கள் நெறிய அவளை முறைத்து பார்க்கவும் மிரட்சியுற்றவள்,

“மாமியா சொல்றீங்களா சார்?” என்று அவளே வழிக்கு வந்தாள்.

“ஆமா… அவங்கதான்… உன்கிட்ட என்ன சொன்னாங்க அவங்க?” அவன் கூர்மையாய் பார்த்து அவளை வினவ,

“பெரிசா ஒண்ணுமில்ல சார்” என்றாள் காரை இயக்கி கொண்டே!

“ஒண்ணுமில்லாததுக்கா அவ்வ்வ்வ்வ்ளவு நேரம் பேசிட்டிருந்த” என்றவன் அழுத்தமாய் கேட்டு கூர்மையாய் பார்க்க,

என்ன பதில் சொல்வதென்று புரியாமல் மௌனமாய் அமர்ந்திருந்தாள்.

“வீரா” என்று அழைத்தபடியே அவன் பார்வை மேலும் கூர்மையாய் மாற,

‘விடாகொண்டனா இருக்கான்… இப்ப இன்னா சொல்றது?’ என்றவள் யோசித்தபடி அவன் புறம் திரும்பி, “அது” என்று அவள் விழித்தாள்.

அவனோ கைகளை கட்டி கொண்டு புருவத்தை நெறித்து அவளையே பார்க்க வீரா தயக்கத்தோடு,

“நான் ஒண்ணுமே பேசல சார்… காகாவுக்கு ஏன் நாஷ்டா வைக்கலன்னுதான் கேட்டேன்” என்று இறுதியாய் சொல்லி முடித்தாள்.

அவள் சொன்னதை கேட்ட மறுகணம் சாரதிக்கு கட்டுபடுத்த முடியாமல் சிரிப்பு பொங்கி கொண்டு வந்தது.

“லூசு… இதையா கேட்ட” என்று அவன் சில நொடிகள் விடாமல் சிரித்து கொண்டே இருக்க,

வீரா அவனையே குறுகுறுவென பார்த்தாள்.

எப்போதும் இறுக்கமான முகம் … சென்டிமீட்டர் அளவு சிரித்தே பார்த்தவளுக்கு அவனை இப்படி பார்க்க ஆச்சர்யமாய் இருந்தது. சில நொடிகள் அவனை திரும்பி பார்த்தபடி காரை ஓட்ட சட்டென்று எதிரே வந்த பெரிய வாகனம் அவர்களை தடலடியாய் கடந்து போக,

“வீரா பார்த்து போ” என்று அதிர்ந்தான்  சாரதி!

அவள் சுதாரித்து கொண்டு சாலையை பார்க்க, “கண்ணை எங்க வைச்சி வண்டியை ஓட்டிற” என்று கடிந்து கொண்டவன் அதற்கு பிறகு தொடர்ச்சியை திட்டி கொண்டே வர

அது அவளுக்கு சற்றே பழகி போன விஷயம்தான்!

‘ஆரம்பிச்சிட்டான்யா… இப்போதைக்கு நிறுத்த மாட்டான்’ என்று மனதிற்குள்ளேயே அவள் கடுப்பாக,

சில நேர இடைவெளிகளில் அந்த ஈசிஆர் சாலைகளில் பயணித்த அவர்களின் கார் ஆடம்பரமான பீச் ரிஸார்ட்டுக்குள் நுழைந்தது.

சாரதி விறுவிறுவென இறங்கிவிட்டு,

“காரை பார்க் பண்ணிட்டு அந்த பேகை எடுத்துட்டு வா” என்று சொல்லிவிட்டு இறங்கி செல்ல,

அவளும் காரை நிறுத்திவிட்டு அந்த பேகை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு அவனை சிரமப்பட்டு பின்தொடர்ந்தாள்.

போதாக் குறைக்கு வழியேற நண்பர்கள் சிலர், “ஏய் சாரதி?… பார்த்தே ரொம்ப நாள் ஆயிடுச்சு” என்று வினவ,

“கொஞ்சம் பிஸி” என்று எல்லோரிடமும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லி கொண்டே அறைக்குள் நுழைந்தான்.

ஆடம்பரமான எல்லா வசதிகளும் அந்த ஒற்றை அறையிலேயே குடியேறி இருந்தது. 

“பேகை வைச்சிட்டு… நீ போ” என்றவன் அந்த அறையின் ஒருபுறத்தை கை காட்ட,

அதனை வைத்துவிட்டு வெளியேறிவள் கார் இருக்கும் திசையை நோக்கி நடக்க,

பரந்துவிரிந்த அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரிய விளையாட்டு திடல்… நீச்சல் குளம் இவற்றை எல்லாம் பார்த்து சற்றே பிரம்மித்தாள். 

அதே நேரம் அங்கே சூழ்ந்திருந்த கூட்டத்தை பார்கக அவளுக்கு அருவருப்பாய் இருந்தது. எல்லோரும் ஆடம்பரம் ஸோஸியலிஸம் என்ற பெயரில் அறைகுறை ஆடையில் சுற்றி கொண்டிருந்தனர். 

இவற்றையெல்லாம் பார்க்க கூட விருப்பமில்லாமல்,

அவள் காரினுள் தலைசாய்த்து அமர்ந்து கொண்டு பாட்டுக்களை கேட்டு கொண்டிருந்தவளுக்கு,

மதியம் மாலை இரவு என நேரம் கடந்து சென்று இருள் சூழ ஆரம்பிக்க உள்ளூர அச்சம் தொற்றி கொண்டது.

பதட்டமாகி பேசியில் நேரத்தை பார்த்தவள்,

‘இன்னும் இன்னா பன்றான்… தங்கசிங்க வேற வூட்டுல தனியா இருக்கும்’ என்று படபடத்து கொண்டிருந்தாள்.

பொறுமையிழந்தவள் காரிலிருந்து இறங்கி, ‘இந்த ஆளு இன்ன இப்படி பன்றான்… இப்போதைக்கு வருவானா மாட்டானா?!’ என்று புலம்பி கொண்டே நடக்க,

அந்த ரிஸார்ட் முழுவதும் இரவு வண்ண விளக்குகளின் அலங்காரங்களால்  ஜகஜ்ஜோதியாய் மின்னி கொண்டிருந்தது.

ஆண்கள் பெண்கள் பாகுபாடின்றி எல்லோரும் குடியும் கும்மாளமாய் இருந்தனர். 

அங்கே சாரதி இருக்கிறானா என்று தேடலாய் பார்த்து கொண்டே நடந்தவள்

அப்போது எதிரே வருபவனை பார்க்காமல் மோதி கொண்டு நிற்க,

“எங்கே பார்த்திட்டு வர, போஃன் பண்ணா எடுக்க மாட்டியா?!” என்று சாரதியின் குரல் காதில் விழ நிமிர்ந்து பார்த்தாள். அவன்தான் அவளை மோதியவன்.

அவள் அதிர்ச்சியாய் பேசியை தன் பேன்ட் பாக்கெட்டில் துழாவியவள், “ஸாரி சார்… போஃன் கார்ல உட்டு வன்டேன் போல” என்க,

“உன்கிட்ட… ஏற்கனவே சொல்லி இருக்கேன் இல்ல” என்று கோபமாய் முறைத்தவன்,

“சரி இனிமே இப்படி பண்ணாதே” என்று அவனே உடனடியாய் சமாதான நிலைக்கு வந்தான்.

அவன் எப்போது புறப்படலாம் என்று சொல்ல போகிறான் என்ற வீரா தவிப்போடு நிற்க,

அவனோ அவள் அவஸ்த்தை புரியாமல் காசை எடுத்து நீட்ட, அவள் குழம்பினாள்.

அதோடு அவன் வாங்கி வர சொன்னதை  கேட்டு அவளுக்கு தலை சுழன்றது. அவனையும் அந்த பணத்தையும் அதிர்ச்சியாய் அவள் பார்க்க,

“சீக்கிரம் போய் வாங்கிட்டு வா” என்றான்.

“இன்னா சார் வாங்கின்னு வரனும்” என்றவள் புரிந்தும் புரியாமலும் மீண்டும் வினவ,

“சொன்னது காதில ஏறலயா?!” எரிச்சலடைந்தவன்,

“காண்டம் வாங்கிட்டு வான்னு சொன்னேன்… காட் இட்” என்றான்.

விக்கித்து போனவள், ‘நானா?’  என்று மனதிற்குள் கேட்டு கொண்டபடி சிலையாய் சமைந்து நிற்க,

“ஏன் இப்படி திருதிருன்னு முழிச்சிட்டிருக்க… போ” என்றவன் முறைத்து கொண்டே சொல்ல,

அவளுக்கு அப்போதுதான் அழுத்தமாய் உறைத்தது. தான் இப்போது ஆண் வேடத்தில் இருக்கிறோம் என்று!

இதுதான் அவளுக்கு வந்திருக்கும் முதல் கட்ட சோதனை. இதற்கே இப்படியென்றால் இன்னும் படிபடியாய் அவள் சந்திக்க நிறைய காத்து கொண்டு இருந்ததே!

error: Content is protected !!