“ என்ன சொல்ற வில்லி! அவன் ஏன் பொய் சொல்லணும்? “ வெற்றி தீவிரமாக வில்லியைப் பார்க்க,
“ ஆமா! எப்படி ண்ணா ஒரே நாள் நைட்டுல, அவங்க அப்பாவ சமாளிச்சு , அவனுக்கு பேசி வெச்சிருந்த பொண்ணு வீட்டுல சமாளிச்சு , இவங்க கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டானா? அவன் சொல்றான்னு நீங்களும் நம்பறீங்க.. “ கடுப்புடனே சொல்ல,
“ அதை தான் அவன் தெளிவா சொன்னானே , புரிஞ்சிட்டு இருப்பாங்க, அவங்க அப்பாவத் தவிர அவங்க வீட்ல இருக்கற மத்தவங்களுக்கு இவன் விஷயம் தெரியுமே !” சரியாகப் பேசினான் வெற்றி.
“ நீங்க வேணா பாருங்க, நீங்க சொல்ற தேதில அவங்க வீட்டுல இருந்து வர மாட்டாங்க” வாய்க்கு வந்ததை அள்ளி விட்டான்.
அவனது பேச்சி சற்று கோபம் வந்தது வெற்றிக்கு. “அவங்க மட்டும் அப்படி வரல, அப்பறம் என்னோட வேற பக்கத்தை அவன் பார்க்க வேண்டி வரும்” கர்ஜித்து விட்டு சென்றான்.
‘அப்பாடா எப்படியோ இவனைக் கொஞ்சம் குழப்பியாச்சு..’ அடுத்த கட்ட வேலையாக தான் செய்யவேண்டிய குழப்பத்தைப் பற்றி யோசித்தான்.
ஜீவா வும் வெற்றியும் பேசியதிலிருந்து அவனுக்கு ஒரு விஷயம் நன்றாகப் புரிந்தது. அந்தப் பெண் வீட்டில் இவன் சென்று சமாதானம் செய்ததால் தான் இப்போது இவனால் சமாளிக்க முடிந்தது.
வெற்றியை குழப்பியது போல அங்கே சென்று அந்தப் பெண்ணையும் சற்று ஏற்றிவிட்டு மீண்டும் ஜீவாவைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்ல வைக்க வேண்டும். அவன் மனதில் ஓடிய திட்டம் இது தான்.
“ஆனால் அவர்களை யார் எவர் என்று எப்படித் தெரிந்து கொள்வது , எப்படி திடீரென்று சென்று சந்திப்பது…. “
***
“ ஹ்ம்ம் க்க்ஹ்மம்…” – ஜீவா
கண்டும் காணாதது போல திரும்பி அமர்ந்து கொண்டாள் இதயவாணி.
“ மேடம் க்கு இப்போ சந்தோஷமா ?”அவளை நெருங்கி அமர்ந்தான்.
அவனது அருகாமை அவளது இதயத் துடிப்பை அதிகப் படுத்தியது. எப்போதும் அவன் நெருங்கும் போதெல்லாம் அவளுக்குள் இதே நிலை தான். மனத்தைக் கட்டுக்குள் கொண்டு வர மிகவும் சிரமப் படுவாள்.
“ ஜீவா! கொஞ்சம் தள்ளி உக்காருங்க… “ சத்தம் வெளியில் வராது போனது.
“ வெறும் காத்து தாங்க வருது..” சொல்லிவிட்டு சிரித்தான்.
அவளுக்கு மிகவும் சங்கடமாகிப் போனது. தன் நிலைமையை நினைத்து அவளே வெட்கிக் கொண்டாள்.
அவன் சொன்னதற்கு எதுவும் பதில் பேசாமல் அமர்ந்திருக்க, அவன் முகம் தான் சற்று மாறியிருந்தது. அவள் அதைக் கண்டதும் குழம்பினாள்.
“ என்ன ஆச்சு ஜீவா?ஏன் திடிர்னு ஒரு மாதிரி ஆயிடீங்க? “அவள் பதட்டமாகக் கேட்க,
“ ஒண்ணுமில்ல, விடு நானே சரி ஆயிடுவேன்” அவளை விட்டு விலகி அமர,
“ என்னனு இப்போ சொல்லப் போறீங்களா இல்லையா?” அவனைப் பிடித்து உலுக்க,
“ அன்னிக்கு நீ என் வீட்டுல இருந்து கிளம்பிப் போனப்ப, என்னால உன்னைத் தடுக்க முடியல, ஏன்னா என் நிலைமை அப்படி. ஆனா நீ என்னைப் புரிஞ்சுகிட்டு அங்கேயே இருந்திருந்தா நான் ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பேன்.
எனக்கு அப்போ ரொம்ப வேதனையா இருந்துது. உனக்கு என்மேல நம்பிக்கையே இல்லையோன்னு தோனுச்சு . நம்பிக்கை வரணும்னா அந்த பேச்சு வார்த்தை அத்தோட நிக்கணும். எங்க வீட்டுல பேசி உங்க அம்மா அண்ணா கிட்ட அவங்கள சம்மந்தம் பேச வைக்கணும்.
அதுனால தான் அப்போ நான் அதை பெருசா வெளில காட்டிக்கல. எதுவும் செஞ்சு முடிக்காம நான் பேசக் கூடாதுன்னு தான் சைலென்ட்டா இருந்தேன். ஆனா உன்கிட்ட நான் நடிக்கல. செஞ்சுக் காட்டிட்டு சொல்லணும்னு தான் வெய்ட்பண்ணேன்.
இப்போ என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா இதயா?! மறுபடியும் இந்த மாதிரி எதாவது ஒரு சிட்டுவேஷன் வந்தா அப்பவும் என்மேல நம்பிக்கை இல்லாம போயிடுவியா?”
அவன் பேசப் பேச வாணிக்கு யாரோ தன் இதயத்தை கத்தியால் கொஞ்சம் கொஞ்சமாக குத்துவது போல இருந்தது.
தான் செய்தது தவறு என்று புரிந்தாலும் அவனது கடைசி கேள்விகள் அவளை சுக்குநூறாக கிழித்தது.
வேகமாக அடித்துக் கொண்டிருந்த காற்றில் தான் அப்படியே தூசியாக மாறி கலந்து விடமாட்டோமா என்று தோன்றியது.
அவளது கண்களை நேருக்கு நேராக ஜீவா பார்த்துக் கேட்க, தனக்காக அவன் பார்த்துப் பார்த்து எத்தனை செய்தான், அவனுக்கு தான் அளித்தது என்ன! என்ற கேள்வி தான் அவளுக்கு முன் இருந்தது.
தன்னுடைய அந்த நேரத்து முன்கோபம் அவனை இவ்வளவு காயப் படுத்தும் என்று அவள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
அப்போதும் அவளை ஊடுருவும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டதும் அவளது கண்கள் அருவியாய் கண்ணீரைக் கொட்டியது .
“ எனக்கு உங்க மேல நம்பிக்கை இல்லாம நான் அங்கிருந்து கிளம்பிப் போகல ஜீவா.. எனக்கு சொந்தமான உங்கள வேற ஒரு பொண்ணு உரிமை கொண்டாடறது பொறுக்க முடியாம தான் நான் கிளம்பிப் போனேன். அந்த நேரத்துல என்ன செய்றதுன்னு எனக்குத் தெரியல. நான் நடந்துகிட்டது வெளில இருந்து பாக்கும் போது உங்க மேல நம்பிக்கை இல்லாம நான் போனதாத் தான் தெரியும், ஆனா என் மனசு கஷ்டப் பட்டது எனக்கு மட்டும் தான் தெரியும்.
உங்க இடத்துல இருந்து நான் யோசிக்காம போனது என்னோட தப்பு தான். சாரி ஜீவா. ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க” அவனது முகத்தைப் பார்க்க முடியாமல் இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டு கண்ணீர் விட்டாள்.
வாணியின் கண்ணீர் அவனை அசைக்கவே செய்தது. உடனே அவளை சமாதானமும் செய்தான்.
“ ஹே ! லூசு! இங்க பாரு! “ முகத்தில் இருந்த அவளது கையை விலக்க ,
சிவந்திருந்த அவளது கண்களைப் பார்த்தான்.
“ ச்ச இதுக்கு போய் அழுவாங்களா? என்ன நீ !” அவளது கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்தான்.
“ உங்க மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு , நான் எப்படி அதைப் புரியவைப்பேன் “
“ ம்ம்ம்… அதுக்கு நிறைய வழி இருக்கு பேபி… !” ஹஸ்கி வாய்சில் சொல்ல,
அழுதுகொண்டிருந்தவள் அவனை முறைக்க முயன்று முடியாமல் சிரிப்பு வந்தது. அவனும் சேர்ந்து சிரிக்க இருவரும் சூழ்நிலையை இலகுவானதை உணர்ந்தனர்.
சிரித்து முடித்து சற்று நேரம் அமைதிக்குப் பின், ஜீவாவே மீண்டும் பேசினான்.
“ நான் உன் நிலைமைல யோசிச்சதால தான் இத்தனை நாள் நான் எதுவும் இதைப் பத்தி பேசல, ஆனா அது என் மனசுல இருந்துக்கிட்டே இருந்துச்சு . அதை கொட்டிடனும் , இல்லனா அதுவே வேற இடத்துல மறுபடியும் ஞாபகம் வரும் அது நல்லதில்ல இதயா, அதுனால தான் கேட்டுட்டேன். “ அவளது கையைப் பிடித்துக் கொண்டு சொல்ல,
“ அதுவும் நல்லது தான். “
இருவரின் கைகளும் ஒன்றையொன்று தழுவிக் கொண்டிருப்பதை அதே ரயிலில் வந்த வில்லியமும் , துப்பட்டாவால் தன் முகத்தை மூடி அமர்ந்திருந்த வசுந்தராவும் வெவ்வேறு இடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
இருவருக்கும் உள்ளுக்குள் பற்றி எரிந்தது.
அவர்களின் ஒற்றுமையும் , ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதும் , கொஞ்சலும் கெஞ்சலும் எரிகிற நெருப்பில் நெய் வார்த்துக் கொண்டிருந்தது.
ஜீவாவும் வாணியும் ஒன்றாக கீழே இறங்க , வில்லியும் வசுந்தராவும் சற்று இடைவெளி விட்டு இறங்கினர்.
லேசாக தூறல் போட ஆரம்பித்து இருந்தது.
“ ஹே! மழை வருது ஜீவா. நீங்க எப்படி போவீங்க? “
“ காதலியோட மழைல நனையறது ஒரு தனி சுகம். அதகூட அனுபவிக்க விடாம தொரத்துறியே, பாவி!” அலுத்துக் கொண்டான்.
“ ம்ம்.. பாருடா , லவ்வ சொல்ல பிறகு , எல்லாம் பிக்ஸ் பண்ணிட்டு அப்புறம் வந்து சார் லவ் பண்றாரு.. பரவால்ல இப்பயாச்சும் தோனுச்சே!” அவனை கொஞ்சமாக வார நினைத்தாள்.
“ நக்கலா மேடம், நமக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு, நீங்க படிச்சு முடிக்காம எங்க வீட்ல கல்யாணம் பண்ண மாட்டாங்க, அதுனால பொறுமையா லவ் பண்றேன். உங்க அண்ணனும் இனிமே சிஐடி வேலை பாக்காம கொஞ்சம் இடம் குடுப்பான். சோ நோ கவலை… “ அவளது தோளில் கை போட்டு நடக்க,
“ அட என்ன இது ரோட் ல கை போட்டு நடக்கறீங்க, கை எடுங்க ஜீவா…” வாணி நெளிய,
“ இங்க சும்மாவே எவனும் போறதில்ல, இதுல மழை வேற, ஒருத்தனும் வர மாட்டான். யாரும் நம்மள பாக்க மாட்டாங்க , வா உங்க வீடு வரை நான் வந்து விட்டு போறேன்.”
இடியும் மழையுமாக வானம் வலுக்கத் தொடங்கியது. மின்னல் வேறு கண்ணைப் பறித்தது. சட்டென்று அவளையும் இழுத்துக் கொண்டு ஓடினான்.
சற்றும் தாமதிக்காமல் ஒரு பூட்டிய வீட்டின் முன் வாசலில் வாணியையும் அழைத்துக் கொண்டு சென்று நின்றான்.
“ கொஞ்ச நேரத்துல மழை கம்மி ஆயிடும். அதுக்கப்பறம் போலாம். இங்கயே இரு. இப்போ போறது சேஃப் இல்ல..”
அவளும் அதுவே சரி என்று அங்கேயே நின்றாள். முழுதும் நனைந்து போய் குளிரில் நடுங்கினாள். கையை மார்பின் குறுக்காகக் கட்டிக் கொண்டு குளிரைப் போக்கிக் கொள்ள நினைத்தாள்.
அந்த நேரம் பின்னால் வந்த வில்லியும் வசுந்தரா வும் அவர்கள் அங்கே ஒதுங்குவதைக் கண்டு எதிரே மறைவாக இருந்த மரத்தடியில் ஒரே நேரத்தில் சென்று நின்றனர்.
வழிப்போக்கன் என்று ஒருவர் மற்றொருவரை நினைத்துக் கொண்டனர்.
ஜீவா குளிரால் நடுங்கிய வாணியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ இதயா…” மெல்லிய குரல் அவளை இதமாய் வருடியது.
அவன் புறம் பார்க்காமல் அங்கிருந்த விளக்கின் ஒளியில் சூடு கண்டவளாய் மறுபுறம் திரும்பி நின்றாள்.
மெல்ல அவளைத் தன் புறம் திருப்பினான் ஜீவா.
**
இவர்கள் இருந்த மரத்தின் அடியில் இருந்து ஜீவா வாணியை , வசு வும் வில்லியமும் நன்றாகவே பார்க்க முடிந்தது.
“ ச்சீ!” என்று இருவரும் அலுத்துக் கொள்ள,
வில்லியும் வசு வும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“ உங்களுக்கு அவங்களத் தெரியுமா!” வில்லியம் கேட்க,
“ அந்த பையனத் தான் நான் கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தது!” வேண்டாவெறுப்பாக வசு சொன்னாள்.
“ தெய்வமே! உங்களைத் தான் தேடிக்கிட்டு இருந்தேன்!” ஆயிரம் வாட்ஸ் அவன் முகத்தில் எரிந்தது.
**
“ இதயா! ..”
அவளின் பார்வை அவன் கண்களை மட்டுமே நாட, அவனது பார்வை அவள் உயிர் வரைத் தீண்டியது.
“ உங்க பார்வை மட்டும் ஏன் என்னை இப்படி கட்டிப் போடுதுன்னு தெரியல… அதுலேந்து வெளில வரவே முடியல “ கண்களைத் தாழ்த்திக் கொண்டாள்.
“ ப்ப்ச்.. கீழ என்ன இருக்கு, என்னைப் பாரு.. இப்போதிக்கு அது மட்டும் தான் பண்ண முடியும்.”
“ ரொம்ப தான் பாஸ்ட்டா போறீங்க… இன்னும் ரெண்டு வருஷமிருக்கு .. காதலியோட மழைல நனையனும்னு சொன்னிங்க… இப்போ இங்க நின்னு ரொமான்சா…” அவன் மார்பில் கை வைத்துத் தள்ள,
“ இப்போ என்ன மழைல நனையனுமா, சரி “ சற்று தள்ளி நின்று மழையில் நனைந்தான்.
பலமாக மழை கொட்டித் தள்ளியது. இதில் ஐந்து நிமிடம் நின்றால் நிச்சயம் ஜுரம் வருவது உறுதி. பதிரியவள் ,
“ என்ன ஜீவா! சின்ன புள்ளத் தனமா… வாங்க உள்ள..” அவனது கையைப் பிடித்து இழுக்க, பெருத்த சப்தத்துடன் இடி இடித்தது.
அங்கிருந்த ஒற்றை விளக்கும் அணைந்தது.
அவள் இழுத்ததில் இருவரும் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டு நின்றனர்.
அவனது தலைமுடியில் இருந்து சொட்டிய தண்ணீர் துளிகள் அவளது தோள்களில் சிந்தியது.
அவள் உடல் அந்த குளிர் காற்றில் ஏற்கனவே நடுங்க, இது மேலும் குளிரூட்டியது.
அவளது குளிரை உணர்ந்தவன்,
“ இப்போ குளிராது !” அவள் காதோரம் சொல்லி அவளை அணைத்திருந்தான்.
தனக்கே சொந்தமாகப் போகும் தன்னுடைய ஜீவாவை அவளும் தன் இரு கைகளால் சுற்றி வளைத்து அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்.
இருட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இங்கே இருவர் கையைப் பிசைந்து கொண்டு நின்றனர்.