Aval throwpathi alla – 16

16

வீரா மனமுடைந்த நிலையில் கடலை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

அவள் முகமெல்லாம் சிவந்திருக்க, மனமோ ஆற்றாமையால் தவித்து கொண்டிருந்தது.

அவளின் கண்ணீர் அதன் கரையை உடைக்க முயல,

அவளோ அதனை வெளியே வரவிடாமல் வெகுநேரம் போராடி கொண்டிருந்தாள்.

எந்த பெண்ணுக்கும் வர கூடாத சோதனைதான்!

ஆனால் வேறுவழி!

அவன் கேட்டதை  மறுக்கும் நிலையில் அவள் இல்லை!

ரொம்பவும் சங்கடத்தோடே அவன் கேட்டதை அவள் வாங்கியும் தந்துவிட்டாள்.

அதே நேரம் அவன் அறையில் அவனுடன் நெருக்கமாய் பேசி கொண்டிருந்த பெண்ணை பார்க்க இன்னதென்று சொல்ல முடியாத ஓர் கோபம்! ஒரு வித அருவருப்பான உணர்வு!

ஆணினங்களே இப்படிதானா என்ற ஒர் வெறுப்பான மனநிலை!

அதுவும் சாரதியை அப்படி பார்க்க கொஞ்சம் வலிக்கவே செய்தது.

அவனின் அதிகாரத்தன்மையில் அவளுக்கு கோபம் இருந்தாலும்,  அவன் மீது அவளுக்கு தனி மரியாதையும் ஈர்ப்பும் இருந்ததும் உண்மை!

ஆனால் அவையெல்லாம் ஒரே நொடியில் சுக்குநூறாய் உடைந்து போனதே! தாங்க முடியாத வலியோடும் வேதனையோடும் அமர்ந்திருந்தாள் அவள்!

அதே நேரம் அவன் இப்போதைக்கு புறப்படும் நிலையில் இல்லை என்பதும் அவளுக்கு புரிய,

வீரா தன் வீட்டின் அருகிலிருந்த கடையில் உள்ள தொலைப்பேசிக்கு அழைத்து நதியாவிடம் பேசினாள்.

“நான் வர நேரமாகும் நதி… நீங்க இரண்டு பேரும் சாப்பிட்டு…  கதவை நல்லா பூட்டிக்கின்னு படுத்துக்கோங்க… நான் குரல் கொடுக்காம யார் கதவை தட்டினாலும் திறக்காதீங்க” என்றவள் உரைக்க,

“இன்னா க்கா இப்படி சொல்ற… தனியா நாங்க இரண்டு பேரும் எப்படி க்கா?” நதியா அச்ச உணர்வோடு கேட்டாள்.

“புரியுது நதி… ஆனா என் வேலை அப்படி… அந்த சாரதி” என்று ஆரம்பித்தவள் மேலே எதுவும் சொல்ல முடியாமல்

“சரி… அதை விடு… நீங்க இரண்டும் சாப்பிட்டு படுங்க… எனக்கெல்லாம் எதுவும் எடுத்து வைக்காதீங்க” என்றாள்.

அருகிலிருந்த அமலா ஆர்வமாய், “அக்கா எப்போ வருமா?” என்று வினவ

நதியாவிற்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. 

வீரா மேலும், “நீயும் தங்கச்சியும் ரொம்ப நேரம் கடையாண்ட நிற்க வேண்டாம்… மணியாயிடுச்சு இல்ல… சாப்பிட்டு போய் படுங்க” என்று சொல்ல,

“சரி க்கா” என்று நதியா சிரத்தையின்றி பதிலுரைத்தாள்.

வீரா பேசியை வைக்காமல் பதட்டத்தோடு,

“ஏ நதி! நான் வேணா ஒண்ணு பண்ணவா… கமலா அக்காகிட்ட சொல்லி இரண்டு பேருக்கும் துணையா” என்று கேட்கும் போது,

“அய்யோ யக்கா…வேற வினையே வேணாம்… அது பேசியே கொன்றும்” என்றாள் நதியா!

“சரி… அப்படின்னா கதவை நல்லா பூட்டிக்கின்னு படுத்துக்கோங்க… நான் சீக்கிரம் வந்திரேன்” என்று வீரா  பேசிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்.

அன்று இரவு அவளால் வர முடியாது என்று சொன்னால் தங்கைகள் பயந்துவிட கூடும் என்ற எண்ணித்திலேயே சமாளிக்கும் விதமாய் அவ்விதம் உரைத்தாள். எனினும் தனியே இருக்கும் தங்கைகளை எண்ணி அவள் மனம் அவதியுற்று கொண்டிருந்தது.

எப்படி அவர்கள் இருவரும் தனியே இருப்பார்கள் என்ற கவலையோடு ரிஸார்ட்டின் பின்புறம் நடந்தவள் அவளே அறியாமல் கடலை நோக்கி வந்திருக்க,

சோர்வோடும் தவிப்போடும் அப்படியே மணல் மீது அமர்ந்து கொண்டாள்.

அந்த ஆர்பரிக்கும் கடலை போலவே அவள் மனமும் அந்த நொடி நிம்மதியில்லாமல் கொந்தளித்து கொண்டிருந்தது.

அவள் தன் பார்வையை கடலலைகள் மீது மட்டுமே பதித்திருக்க,

நேரம் சென்றதையே அவள் உணர்ந்திருக்கவில்லை.

இரவு நடுநிசியை எட்டி கொண்டிருக்க தனிமையோடும் சோர்வோடு அவள் தன் தலையை கால்கள் மீது சாய்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“ஏ வீரா… இங்கதான் இருக்கியா?!” என்று சாரதி தோரணையாய் வந்து நின்றவன் சிகரெட்டை புகைத்தபடி அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

அவனை பார்த்ததுமே படக்கென எழுந்து அவள் ஒதுங்கி நிற்க,

“நோ பாஃர்மலட்டீஸ்னு சொல்லி இருக்கேன் இல்ல… உட்காரு” என்றான் தீவிரமாய் சிகரெட்டின் புகையை உள்ளிழுத்தபடி!

அவளுக்கு அவனை பார்க்க பார்க்க எரிச்சலும் கோபமும் மூள, “இல்ல சார்… நான் கார் கிட்ட போறேன்” என்று நழுவி கொள்ள பார்க்க,

“கம்மான் சிட் மேன்… எனக்கும் யாராச்சும் கம்பெனிக்கு இருந்தா நல்லா இருக்கும்” என்றான்.

அவன் இப்படி சொன்னதும் அவள் முகம் சிவப்பேற,

‘உனக்கு இன்னாத்துக்குடா நான் கம்பெனி கொடுக்கனும்’ என்று விரல்களை மடக்கி குத்துவது போல் பின்னோடு நின்று அவள் பாவனை செய்ய,

அவனோ அவள் புறம் திரும்பவும் அவள் பவ்வியமாய் மாறி, “இல்ல சார்” என்று தயங்கினாள்.

“உட்காருன்னு சொன்னேன்” என்று அவன் கட்டளையாய் அழுத்தி சொல்ல,

‘சே’ என்று உதட்டிற்குள்ளேயே முனகியபடி கடுப்பாய் அமர்ந்து கொண்டாள்.

அவன் போதையில் இருப்பதும் அதோடு புகைக்கும் சிகரெட் நெடியும் அவன் மீது அவளுக்கு உச்சகட்ட வெறுப்பை உண்டாகியிருக்க, அவன் அருகாமையில் அமர்ந்திருப்பதே அவளுக்கு அருவருப்பாய் இருந்தது.

எங்கேயோ பார்த்து கொண்டு அவள் முகம் சுளித்து கொள்ள,

அப்போது சாரதி அவள் புறம் திரும்பி,

“ஆமா நீ சாப்பிட்டியா?!” என்று கேள்வி எழுப்பினான்.

அவள் தயக்கத்தோடு அவன் முகம் பார்த்து மௌனமாய் இருக்க,

அவன் மீண்டும், “சாப்பிட்டியா சாப்பிடலயா?!” என்று அழுத்தமாய் கேட்டான்.

“சாப்பிட்டேன் சார்” என்று வேகமாய் அவள் தலையசைக்க,

“நீ பொய் சொல்ற… உன் முகத்தை பார்த்தா அப்படி தெரியலயே”

“இல்ல சார்… சாப்பிட்டேன்”

“நோ… நீ ஏதோ அப்செட்டா இருக்க போல… வாட்ஸ் ராங்” அவன் சிகரெட்டின் புகையை ஊதியபடி அவள் புறம் திரும்பி வினவ,

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சார்” என்றாள்.

“இருக்கு” என்றவன் கடலை வெறித்தாலும்

அவள் மனதை சரியாய் கண்டறிந்து கொண்டான்.

அவள் சில நொடிகள் தயங்கிவிட்டு, “தங்கச்சிங்க வீட்டில தனியா இருப்பாங்க… அதான்!” கவலை   தோய்ந்த முகத்தோடு பதிலுரைத்தாள்.

இதனை கேட்ட நொடி எகத்தாளமாய்  பார்த்தவன்,

“அவ்வ்வ்ளோ அக்கறை இருக்கவன்… ஏன் வேலைக்கெல்லாம் வந்துக்கிட்டு… பேசாம தங்கச்சிங்களுக்கு பாடிகாடா  வீட்டிலயே இருக்க வேண்டியதுதானே” சிரித்து கொண்டே சொல்ல, அவளுக்கு கோபம் கனலாய் ஏறியது.

“என் கஷ்டமெல்லாம் உங்களுக்கு சொன்னாலும் புரியாது சார்”

என்ன பேசுகிறோம் என்ற யோசனையில்லாமல்! முகத்திலறைந்தது போல் பதிலுரைத்துவிட்டாள்.

சில விநாடிகளில் தன் தவற்றை உணர்ந்தவள், ‘ஸ்ஸ்ஸ்’ என்றபடி அவள் உதட்டை கடித்து கொள்ள,

சாரதியோ அவள் சொன்னதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அதே நேரம் எந்தவித எதிர்மறையான முகபாவனையும் காட்டவில்லை.

“யூ ஆர் ரைட்… எனக்கு புரியாது… எனக்கு புரியவும் தேவையில்ல” என்றவன் இறுக்கமாய் பதிலளிக்க,

“சாரி சார்… ஏதோ அவசரத்தில அப்படி கேட்டேன்” என்று வீரா தயக்கத்தோடு உரைக்கவும்

சாரதி அவள் புறம் நிதானித்து திரும்பி,

“தட்ஸ் ஓகே… லீவ் இட்” என்றான்.

முனுக்கென்று எல்லாவற்றிற்கும் கோபப்படுபவனும் அதிகாரம் செலுத்துபவனுமான அவனா இவன் என்று வீரா மனதில் எண்ணியபடி அவனை வியப்பாய்  பார்க்க,

அவனோ அழுத்தமான மௌனத்தோடு கடலையே பார்த்து கொண்டிருந்தான்.

எந்தவித உணர்வுகளும் இல்லாமல் அவன் முகம் அத்தனை வெறுமையாய் காட்சியளிக்க, அவன் மனதில் ஏதோ சொல்ல முடியாத ஆழ்ந்த சோகமிருக்கிறதோ என்று மனதில் எண்ணி கொண்டவள்,

அவனிடமே அதை பற்றி கேட்டுவிடவும் துணிந்தாள்.

“நான் ஒரு விஷயம் கேட்டுக்குன்னா நீங்க தப்பா எடுத்துக்க கூடாது சார்” என்றவள் சொல்ல,

“என்ன மேட்டர்?” என்றவன் குழப்பமாய் அவளை நோக்கி புருவத்தை உயர்த்தினான்.

“இல்ல சார்… உங்களுக்கு சொந்த பந்தமெல்லாம் யாரும்” என்று அவள் கேட்க ஆரம்பிக்கும் போதே,

அவன் பார்வை அவளை கூர்மையாய் அளவெடுத்தது.

“சாரி சார்.. சும்மா தெரிஞ்சிக்கலாம்னுதான் கேட்டேன்… நீங்க சொல்லலன்னா பரவாயில்ல” என்றவள் அமைதியாகிட

சாரதி மௌனமாகவே அமர்ந்திருந்தான். அவனிடமிருந்து எதையும் வாங்க முடியாது என்றவள் அவநம்பிக்கை கொண்டு சலிப்பாய் உதட்டை சுழிக்க,

அந்த சமயம் சாரதியே தன் மௌனத்தை கலைத்து அவளிடம், “எனக்கு ரீலேஷன்ஸ் இருக்காங்களான்னு  உனக்கு தெரிஞ்சிக்கனும்… ரைட்” என்று கேட்டான்.

வீரா அவனை ஆச்சர்யமாய் பார்த்து தயக்கமாய் தலையசைத்தாள்.

“எல்லாரும் இருக்காங்க… ஆனா எனக்குன்னு யாரும் இல்ல” என்றவன்  சுருக்கமாய் பதிலளித்துவிட்டு எழுந்து நின்றவன்,

“சரி ரொம்ப டைமாச்சு… சாப்பிடலாம் வா” என்று அழைத்துவிட்டு ரிஸார்ட் நோக்கி அவன் முன்னேறி நடந்தான்.

‘இப்ப இவன் இன்னா சொன்னான்…. இருக்காங்க கிறானா… இல்லங்கிறானா’ என்று யோசனைகுறியோடு வீராவும் எழுந்து அவனை பின்தொடர,

அப்போது இருவரும் ரிஸார்ட்டிற்குள் நுழைந்த மறுகணமே ஒரு பெண்,

“ஹாய் சாரதி” என்றபடி சாரதியிடம் கையசைத்தாள்.

சாரதி குழப்பமாய் அவளை ஏற இறங்க பார்த்து, “நந்து…ரைட்?” என்று சந்தேகமாய் கேட்க,

“மறந்திட்டியா… லாஸ்ட் மந்தானே பார்த்தோம்” என்றுரைத்தவள் அவனை நெருங்கி தோள் மீது தன் கரத்தை வளைத்து கொண்டுவிட,

அவன் முகம் மலர்ந்தது.

“யா டார்லிங்… இந்த ஆங்கில்ல பார்த்தா நல்லா ஞாபகம் இருக்கு” என்றான்

“யூ” என்று தன் ஹேன்ட் பேகை அவன்  மீது அவள் வீச,

“ஓகே ஓகே இங்க எங்க” என்று கேட்டபடி  சாரதியின் கரம் அவள் இடையை வளைத்து கொண்டது.

“ப்ரண்ட் பர்த்டே பார்ட்டி” என்றவள் சொல்ல,

“யாருக்கு?” என்று வினவினான்.

“ப்ச்… அதை விடு…  நாளைக்கு நீ பீஃரீன்னா… லெட்ஸ் ஹவ் அ டேட்” என்றவள் கிசுகிசுப்பாய் கேட்டு நெருக்கமாய் அவனை சீண்டி கொண்டிருந்தாள்.

வீரா இவற்றையெல்லாம் பார்க்க சகியாமல் வேறுபுறம் திரும்பி கொண்டிருக்க,

கடைசியாய் அந்த பெண் கேட்ட கேள்வி அவளுக்கு தூக்கிவாரி போட்டது.

‘அய்யய்யோ! நாளைக்கும் நம்ம வீட்டுக்கு போக முடியாதா… டே முடியாதுன்னு சொல்றா?’ என்றவள் மனதிற்குள் பொறுமி கொண்டிருக்கும் போதே,

“சாரி நந்து… நாளைக்கு வொர்க் இருக்கு… வேணா இன்னைக்கு நைட்” என்றவனின் கரம் அவளை இன்னும் இறுக்கமாய் தழுவி  கொள்ள, வீராவிற்கு எரிச்சலானது.

‘அடப்பாவி டேய்! இப்பதானா ஒரு டிக்கெட்டை பேக் பண்ணி அனுப்பினான்… அதுக்குள்ள இன்னொன்னுக்கு ரூட் போடிறான்’

அதே நேரம் சாரதியின் அணைப்பில் இருந்த அந்த பெண் கோபமாய் அவனை விட்டு பின்வாங்கியபடி,

“நான் உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் நினைக்கிறேன் சாரதி… பட் நீ என் கூட பெட் மட்டும் ஷேர் பண்ணனும்னு நினைக்கிற” என்றாள் கோபமாக!

“பைஃனலி அதானே டார்லிங் நடக்க போகுது”  சொல்லிவிட்டு அவன் கல்மிஷமாய் சிரிக்க,

“அன்னைக்கு நடந்த டீலிங் வேற சாரதி… பட்  இப்போ நான் ஒரு ப்ரொப்போஸலா கேட்கிறேன்… நமக்குள் ஒரு லாங் டைம் ரிலேஷன்ஷிப் பத்தி யோசிக்க கூடாதா?!”

“ஷார்ட் டைம்தான் பெஸ்ட் அன் ஈஸி நந்து” என்றவன் விலகி இருந்தவளை  மீண்டும் இழுத்து அணைத்து கொள்ள,

“விடு சாரதி” என்று சொல்லி தள்ளி நின்றவள்,

“நீ மாறவே மாட்ட” என்று சலிப்போடு சொல்லிவிட்டு விரைவாய் அங்கிருந்து சென்றுவிட அவன் முகம் கோபமாய் மாறியது.

‘புல்ஷிட் !! நான் ஏன் மாறனும்… அன் யாருக்காக மாறனும்’  தனக்குத்தானே கேட்டு கொண்டபடி முன்னேறி நடந்தவன்

விறுவிறுவென தன் அறைகதவை திறந்து உள்ளே நுழைய பார்த்து,

சட்டென்று வீராவின் நினைவுவந்து  திரும்பினான்.

வீரா யோசனையோடு மெதுவாய் நடந்தவள் அவன் அறைக்குள் நுழைவதை பார்த்து தயங்கி நிற்க,

“ஏ வீரா… ஏன் அங்கயே நிற்கிற… வா” என்றழைத்தான் அவன்!

இதுவரையில் இல்லாமல் இப்போது வீராவிற்கு ரொம்பவே அச்சம் தொற்றி கொண்டது.

அவளுக்கு வியர்த்துவடிய,

‘கடவுளே! இவனுக்கு நம்ம பொண்ணுன்னு எந்த ஜென்மத்திலயும் தெரியவே கூடாது’ என்று மானசீகமாய் வேண்டி கொண்டபடி உள்ளே சென்றாள்.

அவளுக்கும் சேர்த்து தன் அறைக்கே அவன் உணவு வரவழைக்க,

வீரா தயக்கத்தோடு மறுதலித்தாள். எப்படியாவது தப்பி கொண்டால் போதுமென்ற மனநிலையில் அவள் இருக்க,

அவன் பிடிவாதமாய் அவளையும் சாப்பிட சொல்லி வற்புறுத்தினான்.

அவளும் வேறுவழியின்றி அவனுடன் இணைந்து உணவருந்த,

அவனோ உணவோடு சேர்த்து போதையும் ஏற்றி கொண்டிருந்தான். அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவளின் உள்ளமெல்லாம் எரிமலையாய் குமறி கொண்டிருக்க,

அவனோ அவள் நிலைமை புரியாமல், “உனக்கும் ஒரு லார்ஜ் சொல்லவா?!” என்று கேட்டு வைக்க,

அவள் முகம் வெளுத்து போனது.

“இல்ல சார்… எனக்கு பழக்கமில்ல…  அந்த வாசனையே எனக்கு குமட்டின்னு வருது” என்றவள் அவசரமாய் உண்டுவிட்டு எழுந்து கை அலம்பி கொண்டு வர,

“நீ ரொம்ப வித்தியாசமா இருக்க வீரா… எனக்கு தெரிஞ்சி உங்க மாறி லோக்கல் ஏரியால இதெல்லாம் சகஜம்தானே”

“அப்படி அல்லாம் இல்ல சார்… லோக்கல்னா… ஒழுக்கமா இருக்க மாட்டாங்களா என்ன?” சற்று கோபமாகவே அவள் கேட்க,

“ஒழுக்கமா இருந்து அப்படியென்ன கிழிக்க போற” என்றான் சாரதி அலட்சிய
புன்னகையோடு!

“இந்த கன்றாவியெல்லாம் குடிச்சா மட்டும்… அப்படி இன்னா சார் கிழிக்க முடியும்” என்றவள் அனல் தெறிக்க பதில் சொல்லவும்

சாரதியின் விழிகள் அழுத்தமாய் அவளை தாக்கி நின்றது.

‘ஏ வீரா…  நீ உன் வாயை வைச்சுக்கன்னு சும்மாவே இருக்க மாட்டியா?’ என்று வீரா தன்னையே கடிந்து கொண்டவள்,

“சாரி சார்… எனக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி… இப்படிதான் ஏதாச்சும் மனசில பட்டதை படக்குன்னு பேசிடுவேன்… தப்பா எடுத்துக்காதீங்க…  நான் பேசாம காராண்ட போறேன்… நீங்க படுத்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு  தப்பி பிழைத்தோம் என அவள் அங்கிருந்து செல்ல பார்த்தாள்.

“ப்ச்… அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… நீ ரூம்லயே படுத்துக்கோ… ஐ டோன்ட் மைன்ட்” என்றவன் படுக்கையில் இருந்த ஓர் தலையணையையும் போர்வையும் தூக்கி போட,

அவள் கலவரமானாள்.

‘இவன் கூட போய் ஒரே ரூம்லயா… சிக்கினா காலி பண்ணிடுவானே’ என்று எண்ணும் போதே அவள் உடலெல்லாம் நடுக்கமுற,

“இல்ல சார்…  நான் கார்லயே” என்றதும் அவன் கோபமாய் முறைத்தான்.

“எது சொன்னாலும் எதிர்த்து எதிர்த்து பேசாதே வீரா… படுன்னா படு” என்றவன் சீற்றமாய் சொல்லிவிட்டு விளக்கை எட்டி அணைக்க,

‘அய்யோ! கடுப்பேத்திறானே… இவனை’ என்றவள் உள்ளூர பொறுமி கொண்டிருந்தாள்.

ஆனால் அவனோ படுக்கையில் சாய்ந்து தன் கரத்தால் முகத்தில் மூடி கொண்டவன்

போதை மயக்கத்தில் சீக்கிரமாகவே உறக்கத்தில் ஆழ்ந்தான்.

அவள் அதுதான் சமயம் என கதவை திறந்து வெளியேறிவிட முயற்சிக்க,

அந்த கதவோ ஆட்டோமெட்டிக் லாக்!

அதனை எப்படி திறப்பது என்று புரியாமல் வெகுநேரம் போராடியவள் ஒரு நிலைக்கு மேல் களைப்புற்று

தரையில் அமர்ந்து கொண்டு அங்கிருந்த டீபாயில் அப்படியே தலையை சாய்த்து  கொண்டாள்.

அவள் பார்வை சாரதியையே குறி வைத்து தாக்க,

‘நீ என்ன மாதிரியான ஆளுடா… பார்க்கதான் ஹீரோ மாறி இருக்கு… செய்றதெல்லாம் வில்லன் வேலை… உன்னான்ட போய் நான் வேலைக்கு சேர்ந்தேன் பாரு… என்னை செருப்பாலயே அடிச்சுக்கனும்’ என்று அவஸ்த்தையாய் புலம்பி கொண்டிருந்தவளுக்கு

அந்த புது இடம்… ஏசி காற்று இவற்றையெல்லாம் தாண்டி அவனிடம் சிக்கிவிட கூடாதே என்ற எச்சிரிக்கை உணர்வால் அவள் வெகுநேரம் உறங்க மனமில்லாமல் அச்சத்தோடு விழித்திருந்தாள்.

ஆனால் ஒரு நிலைக்கு மேல் மெல்ல மெல்ல தன்னையும் மீறி அவளுக்கு விழிகள் சுழற்றி கொண்டு வந்தது.

எப்போது உறங்கினோம் என்று தெரியாமலே உட்கார்ந்த மேனிக்கே அவள் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டிருந்தாள்.

விடிந்து அந்த அறையில் வெளிச்சம் பரவ தொடங்க,

அவளின் உறக்கம் களைந்தது.

முகத்தை அழுந்த துடைத்து கொண்டவள் அறைகுறை தூக்கத்தோடு அந்த அறையை சுற்றி முற்றும் பார்வையிட்டு முதலில் குழம்பினாள்.

பின்னர் இரவு நடந்தவை எல்லாம் அவள் நினைவுக்கு வர,

அந்த நொடியே அவளுக்கு உள்ளம் படபடத்தது.

அவள் பார்வை படுக்கையின் மீது அனிச்சையாய் திரும்ப,

சாரதி அப்போது படுக்கையில் இல்லை.

அவன் எங்கே என்ற யோசனையோடு

அவசரமாய் எழுந்து நின்றவள் தன்

பார்வையை தேடலாய் அலைபாயவிட,

அப்போது அங்கிருந்த ஆளுயுயர கண்ணாடியில் தன் முகத்தை எதேச்சையாய் பார்த்து அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டாள்.

‘அய்யோ மீசை எங்கே போச்சு?’ என்றவள் அவசரமாய் தான் படுத்திருந்த இடத்தை சுற்றி முற்றும் பார்க்க,

அது அவள் கண்களூக்கு புலப்படவேயில்லை.

அந்த சமயம் பார்த்து சாரதி குளியலறை கதவை திறந்து வெளியே வர அவனை பார்க்காதது போல் எதிர்புறம் திரும்பி நின்று கொண்டு பதறியவள்,

‘போச்சு! நான் செத்தேன்’ என்று உரைத்தபடி  தலையிலடித்து கொண்டாள்.