Aval throwpathi alla – 5
Aval throwpathi alla – 5
அதிர்ச்சி வைத்தியம்
“Patience for prey, when restraint is needed
Strike in time for the action must be heeded”
நாட்கள் கழிந்து செல்ல, நாராயணசுவாமியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. மருத்துவமும் மருந்தையும் தாண்டி மனைவி மகனின் ஆதரவும் அரவணைப்பும் அவருக்கு புத்துயிர் கொடுத்தது.
அதே நேரம் தொலைக்காட்சிகள் சமூகவளைதளங்கள் எல்லாம் அடுத்தடுத்த பரபரப்பான செய்திகளை தேடி கொண்டு ஓடிவிட்டதால், இவரை பற்றிய வதந்திகள் மெல்ல மறக்கப்பட்டுவிட்டன.
அதன் காரணத்தால் நாரயணசுவாமியின் மனநிலையிலும் சற்று முன்னேற்றம் கண்டிருந்த சமயம் பார்த்து அரவிந்த் சாரதியை சந்தித்து சண்டையிட்ட விஷயம் அவர் காதுக்கு எட்டியிருக்க, அவர் படபடத்து போனார்!
“நீ போய் சாரதியை சந்திச்சா?!” நாராயணசுவாமி மகனிடம் பதட்டமாய் வினவ, “அது” என்று தயக்கத்தோடு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான்.
“வேண்டாம் அரவிந்த்! அவன் நம்ம நினைச்ச மாதிரி இல்ல… ரொம்ப மோசமானவன்… பணத்துக்காக எந்த எல்லைக்கும் போவான்… அவனை மாதிரி ஆளுங்க கிட்ட இருந்து ஒதுங்கியிருக்கிறதுதான் நமக்கு நல்லது!” அவர் அறிவுரை வழங்க அரவிந்த் சீற்றத்தோடு,
“எதுக்கு ஒதுங்கியிருக்கனும்? அவன் என்ன பெரிய இவனா? நம்ம பணத்துக்கும் ஸ்டேட்டஸுக்கும் அவன் எல்லாம் பக்கத்திலயே வர முடியுமா?! அவனுக்கு நம்ம பலத்தை காட்டனும்” அரவிந்த் வெறி கொண்டு பேசவும் நாராயணசுவாமியை கலவரம் தொற்றி கொண்டது.
“முட்டாள் மாதிரி பேசாதே அரவிந்த்! சாக்கடை மேல கல்லெடுத்து எரிஞ்சா அது நம்ம மேலேயேதான் தெறிக்கும்… அவனும் அப்படிதான்… புரிஞ்சிக்கோ?!” என்றவர் அழுத்தமாய் சொல்ல, அரவிந்தால் அதை ஏற்க முடியவில்லை.
நாராயணசுவாமி பின் மகனுக்கு புரியும்படி நிறைய அறிவுரைகளை வழங்க, அவரின் மனஅமைதிக்காக வேண்டி சரி சரி என அவர் சொன்னதுக்கெல்லாம் தலையசைத்து வைத்தான்.
ஆனாலும் அவன் மனதிலிருந்த கோபத்தீ உள்ளூர தணலாய் கனன்று கொண்டிருந்தது.
தான் நேசித்த தன் தந்தையை தானே வெறுத்து ஓதுக்கும்படியாய் அவன் செய்த இழிவான செயலை அவனால் எப்படி மன்னிக்க முடியும்?!
அதற்கான பதிலடியை அவனுக்கு பலமாய் திருப்பி தர வேண்டும் என்று எண்ணியவன் அவன் மீதான வன்மத்தையும் வஞ்சத்தையும் ஆழமாய் தேக்கி வைத்து கொண்டான்.
அவன் சாரதி மீதுகொண்ட வஞ்சம் அப்போதைக்கு மற்றவர் பார்வைக்கு புலப்படவில்லை எனினும் அது ரொம்பவும் ஆழமாய் அவனுக்குள் வேரூன்றி இருந்தது.
அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கும் போது சரியாக பிடித்து கொள்ள காத்திருந்தான்.
‘ஓடுமீன் ஓட உறுமீன் வர வரும்வரைக்கும்
வாடியிருக்குமாம் கொக்கு’
அது போல!
மனதில் கொள்ளும் பழிஉணர்ச்சிகளும் வக்கிரமும்தான் அழிவுகளுக்கு மூலதாரம்!
இத்தகைய பழிவுணர்ச்சியும் கோபம் வஞ்சமெல்லாம் ஒருபுறமிருந்தாலும் வீரா மீதான காதலும் ஏக்கமும் அவன் மனதிற்குள் ஓர் தனிராஜங்கத்தை நடத்தி கொண்டிருந்தது.
அவளை பார்க்காமல் இருக்கலாம். ஆனால் அவளை நினைக்காமல் அவனால் இருக்க முடியவில்லை. அவளை பார்க்க வேண்டும் என உள்ளுர ஏற்பட்டிருந்த ஏக்கத்தை கட்டுப்படுத்தியிருந்தவனுக்கு இன்று அவளை பார்த்தே தீர வேண்டுமென்ற கட்டாயம்!
காதலர் தினமாயிற்றே! அவளை பார்க்காமல் எப்படி?
கையில் ரோஜா பூங்கொத்தோடு அவளை தேடி கொண்டு கல்லூரிக்கு போனவனுக்கு பெருத்த ஏமாற்றம்!
அவள் அன்று கல்லூரிக்கு வரவில்லை. ஆனால் அவளை பார்த்தே தீர வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுத்தவன்,
அவளின் கல்லூரி நண்பர்களின் மூலமாக பிராயத்தனப்பட்டு அவள் விலாசத்தை பெற்றுவிட்டான்.
கடைசியாய் சந்தித்த போது அவள் தன் வீடு பற்றி சொன்னதை அவன் மறக்கவில்லை. அதற்காகவே அவள் வீட்டிற்கே சென்று பார்த்துவிட எண்ணியவன் அவள் வீட்டை கண்டுபிடித்து தெருவில் விளையாடும் சிறுவர்களின் மூலமாக சிற்சில விவரங்களை சேகரித்து கொண்டவன்,
வீராவின் அம்மா சொர்ணம் வெளியே புறப்பட்ட சமயத்தை பயன்படுத்தி கொண்டான்.
வீராவோ அப்போதிருந்த மனநிலையே வேறு!
இரவெல்லாம் தன் அம்மாவின் புலம்பல்களை கேட்டு ரொம்பவும் சோர்ந்து போயிருந்தாள். இம்முறை அது வெறும் புலம்பல்களாக அவளுக்கு கேட்கவில்லை. பெண் பிள்ளையை பெற்ற தாயின் தவிப்பு அது!
அந்தளவுக்கு சொர்ணம் வருத்தமுற்றதற்கு காரணம் கடைசி மகள் அமலா நேற்று மாலை பள்ளியிலிருந்து வந்த நிலையை எண்ணிதான்!
அவள் பூப்பெய்தியிருந்தாள்!
இந்த தகவல் எந்தவிதத்திலும் சொர்ணத்திற்கு இன்பத்தை நல்கவில்லை. மாறாய் அதீத பாரமாய் உணர்ந்தார். அந்த பாரத்தைதான் வீராவின் மீது இறக்கி வைத்தார்.
“இந்த புள்ளயும் வயசுக்கு வந்திடுச்சு… இனிமே எப்படி இந்த சின்ன வீட்டில… உங்க மூணு பேரையும் வைச்சுக்கிட்டு… நினைச்சாலே பயமா இருக்கு வீரா… ஒவ்வொருத்தன் கண்ணும் கொல்லி கண்ணு” மிரட்சியோடு பேசி கொண்டிருந்த தாயின் வலி வீராவின் மனதையும் அழுத்த
அவர் மேலும்,
“உங்க அப்பனுக்கு சுத்தமா பொறுப்பே இல்ல… அந்த ஆள நம்பி ஒரு பிரயோசனமும் இல்ல… ஆனா அதுக்காக எல்லாம் என் வைராக்கியத்தை விட்டிற மாட்டேன்டி… என் உசுரை கொடுத்தாச்சும் உங்களை படிக்க வைச்சி கரை சேர்த்துடவேன்” என்க,
“இன்னம்மா இப்படியெல்லாம் சொல்ற?!” என்று வீரா பதற, சொர்ணம் மனமுடைந்து கண்ணீர் வடித்தார்.
அதுதான் முதல்முறை தன் தாயை அப்படி பார்க்கிறாள். எப்போதும் கோபதாபங்களோடு புலம்புவார்தான். ஆனால் இன்று அவர் வடித்த கண்ணீரில் அதீத வலியிருந்தது!
அதை வீராவும் உணர அதனால் ஏற்பட்ட மனசோர்வு அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரிய,
அதனை உற்று கவனித்து கொண்டிருந்தாள் சின்னவள் அமலா!
அவள் கொலு பொம்மை கணக்காய் அலங்காரங்களோடு வீற்றிருக்க, அவளின் அந்த இளம் கன்னித்தன்மையின் அழகை ரசிக்குமளவுக்கான சூழல் அங்கில்லை.
“ஏன் வீராக்கா இப்படி மூஞ்சி தூக்கி வைச்சிட்டிருக்கு” என்று தன் அருகிலிருந்து நதியாவிடம் அமலா வினவ,
“யாருக்கு தெரியும்?!” என்றாள் அவள்!
“உன் கிட்ட போய் கேட்டேன் பாரு” என்று முகம் சுணங்கியவள் வீராவிடமே நேரடியாய், “அக்கா” என்றழைக்க
சிரத்தையில்லாமல் திரும்பியவள், “என்ன அம்மு?” என்றாள்.
“ஏன்க்கா முஞ்சி தூக்கி வைச்சிட்டிருக்க? அம்மாவும் வேற அப்படிதான் இருக்கு? ஏன்? நான் இப்போ வயசுக்கு வந்திருக்க கூடாதா?!” சிறுபிள்ளைத்தனமாய் அவள் கேட்ட கேள்வி வீராவிற்கு சிரிப்பை வரவழைத்தது.
“இப்ப வராம… கிழவியானதுக்கு அப்புறம் வருவியாக்கும் லூசு” என்க,
“இதுவே லேட்டு” என்று பதிலுக்கு கலாய்த்தாள் நதியா.
“அதெல்லாம் இல்ல… என் ப்ரண்டு அஸ்வினி கூட போன மாசம்தான் வந்தா?!” என்று அமலா சொல்ல,
“ஆமா ரொம்ப முக்கியம்” என்று வீரா சிரிக்க நதியாவும் கூடவே சிரித்து சின்னவளை கடுப்பாக்கினர்.
அவள் முகத்தை தொங்க போட்டு அமர்ந்திருக்க வீரா புன்னகை ததும்ப, “மேடமுக்கு கோபத்தை பார்றா?!” என்று மீண்டும் அவளை வம்புக்கு இழுக்க,
“சும்மா இருக்கா… எனக்கே இதையெல்லாம் போட்டுகிட்டு வியர்த்து வியர்த்து ஊத்துது… முடியல கஷ்டமா இருக்கு” என்று புலம்பினாள்.
“இந்த கஷ்டத்தை எல்லாம் ஏற்கனவே நானும் அக்காவும் அனுபவிச்சிட்டோம்… இது உன்னோட டர்ன் பேபி” என்று நதியா சொல்லவும்,
“வாய மூடு நதி” என்று வீரா நதியாவை மிரட்டிவிட்டு
“இரு அம்மு… அம்மா வந்ததும் கேட்டுட்டு எல்லாத்தையும் கழட்டிக்கலாம்” என்று சொல்லி கொண்டிருக்கும் போது கதவு தட்டும் ஓசை கேட்க,
“அம்மா வந்துட்டாங்க போல” என்று அமலா ஆர்வமானாள்.
அதே நேரம் வீரா சென்று கதவை திறக்க
எதிர்பாராவிதமாய் அரவிந்த் உள்நுழைய
அவள் அதிர்ந்து போனாள்.
சில நாட்களாய் அவனை பார்க்காததில் அவள் நிம்மதியடைந்திருக்க, இப்படி அவன் வீடு தேடி வந்து அதிர்ச்சி வைத்தியம் தருவான் என அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவள் ஸ்தம்பித்து நிற்க வீட்டை ஒருமுறை சுற்றி பார்த்தவன், “ஹாய்” என்று நதியாவையும் அமலாவையும் பார்த்து சொல்ல அவர்களுமே அதிர்ந்த நிலையில்தான் இருந்தனர்.
வீராவுக்கு அதிர்ச்சி இறங்கி பதட்டம் அதிகரிக்க, “முதல்ல வெளியே போ… எங்க அம்மா வந்துட்டா… அப்புறம் அவ்வளவுதான்” என்க,
“நீதானே பேபி… உன் வீட்டை வந்து பார்க்க சொன்ன” என்று அலட்சியமாய் பதிலளித்தான்.
“நான் ஒண்ணுயும் அப்படி சொல்லல” என்றவள் கடுப்பாக,
“நீ எப்படியோ சொன்ன? அதை விடு… நான் இவ்வளவு தூரம் தேடி வந்திருக்கேன்… ஏன் வந்திருக்கேன்னு கேட்கமாட்டியா?!”
“ரொம்ப முக்கியம்… எங்க அம்மா வந்துட்டா உனக்கும் சேர்த்துதான் விளக்குமாத்தால அடி விழும்” என்றாள் பதட்டத்தோடு!
“நம்ம காதலுக்காக நான் எதையும் தாங்குவேன் டார்லிங்”
“நீ வாங்கினதில்ல… அதான் இப்படி பேசிற”
அதற்குள் நதியா இடைபுகுந்து, “யாருக்கா இது?” என்று கேள்வி எழுப்ப,
“நான் உங்க அக்காவோட லவர்” என்று அரவிந்த் பதிலளித்தான்.
“செருப்பு” என்று வீரா எரிச்சலாக,
“என்ன பேபி இப்படி சொல்ற… இன்னைக்கு வேலன்டியன்ஸ் டே?! அதுக்காக உன்னை பார்க்க காலேஜ் வரைக்கும் போய் அங்கே நீயில்லாம செம அப்சட்டாகி… அப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டு உன் அட்ரஸை அலைஞ்சி திரிஞ்சி கண்டுபிடிச்சி… உன்னை பார்க்க வந்திருக்கேன்” என்றவன் மூச்சுவிடாமல் தன் கஷ்டங்களை சொல்ல நதியாவும் அமலாவும் மூச்சு வாங்கி கொண்டனர்.
“லூசய்யா நீ… எதுக்கு இப்போ என்னை தேடிட்டு வந்த?!” என்று வீரா வாசலை எட்டி பார்த்தபடியே கேட்க,
“இதுக்குதான் பேபி” என்று ஒரு காலால் மண்டியிட்டு “ஐ லவ் யூ” என்று பூங்கொத்தை நீட்டினான்.
வீரா அப்படியே சுவற்றில் சாய்ந்து கொண்டு தலையை பிடித்து கொண்டு, “அய்யோ கொல்றானே!” என்று கடுப்பாக,
நதியாவும் அமலாவும் கைதட்டி, “செம ஸீன்… சூப்பர்… கலக்கிறீங்க” என்றனர்.
“உங்க அக்காவுக்கு புரியலயே” என்று அரவிந்த் சொல்ல,
“வேணா… இன்னும் கொஞ்ச நேரம் நீ இங்கிருந்தா பிரச்சனையாயிடும்… போயிரு” என்று வீரா தவிப்புற்றாள்.
“நீ. ரோஸஸ்ஸை வாங்கிக்க… இப்பவே நான் போயிடிறேன்” என்றவன் சொல்ல
அவளுக்கு கோபம் எல்லையை மீறியது.
அவள் கனலேறி விழிகளோடு அவனை கூர்ந்து பார்த்தவள், பளாரென்று அவன் முகத்திலறை அவன் முகம் சிறுத்த போனது.
“இதுக்கு மேல ஒரு நிமிஷம் இங்க நின்ன… நான் மனிஷியா இருக்க மாட்டேன்” என்றவள் எச்சரிக்க,
அரவிந்த் அவளை கோபமாய் முறைத்தவன் பூங்கொத்தை தூக்கி வீசிவிட்டு அவள் கழுத்தை நெறிக்க வர,
“அக்கா” என்று இருதங்கைகளும் அலற அரவிந்த் அப்படியே தயங்கி நின்றான்.
அதற்குள் அவள் அவன் கரத்தை தட்டிவிட்டு, “போடா வெளியே” என்றாள் வீரா!
“இப்ப போறேன்… ஆனா நாளைக்கு நான் காலேஜ் வாசலில் நிற்பேன்… நீ எனக்கு பதில் சொல்லனும்… சொல்ற” என்றவன் சொல்லிய மறுகணம் விறுவிறுவென வீட்டிலிருந்து வெளியேற,
வீரா பெருமூச்சுவிட்டபடி தரையில் அமர்ந்தாள்.
“யாருக்கா அது?” என்று நதியாவும் அமலாவும் கேட்க,
“அதெல்லாம் அப்புறம் சொல்றேன்… அம்மா வந்தா இதை பத்தி மூச்சுவிட கூடாது” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே சொர்ணம் வீட்டிற்குள் நுழைய,
சகோதிரிகளும் மூவரும் அதிர்ச்சியில் ஊமையாய் அமர்ந்திருந்தனர்.
அப்போது வீரா கீழே கிடந்த பூங்கொத்தை பார்த்து நதியாவிடம் கண்காண்பிக்க, அதனை தன் அம்மாவுக்கு தெரியாமல் எடுத்து சின்னவளிடம் கொடுக்க,
அமலா அதனை வாங்கி பின்னோடு ஒலித்து கொண்டாள்.
சொர்ணத்திற்கு அவர்கள்
மூவரின் மௌனத்தை பார்த்து சந்தேகம் எழ மாறி மாறி அவர்களை பார்த்து,
“என்னடி? மூணு பேரும் திருட்டு முழி முழிச்சிட்டிருக்கீங்க?!” என்று கேட்கவும்,
“சேச்சே அப்படியெல்லம் இல்லையே” என்று வீரா சமாளிக்க,
“ஆமா ஒண்ணும் இல்ல” என்று அமலாவும் நதியாவும் ஒத்து ஊதினார்.
“இல்ல… என்னம்மோ இருக்கு” என்று கேட்டு சொர்ணம் அவர்களை கூர்ந்து பார்த்து கொண்டிருக்கும் போது
பக்கத்துவீட்டு கமலம் வந்து, “யாரு சொர்ணம் அந்த பையன்? நல்லா ஓசரமா வாட்டசாட்டமா” என்றதும்,
“யாரு?” என்று புரியாமல் பார்த்தார் சொர்ணம்!
நதியாவும் அமலாவும் கோபமாகி, “அது கண்ணில கொல்லிய வைக்க” என்று கடிந்து கொண்டிருக்கும் போதே
கமலம் சொர்ணத்தை பார்த்து, “உன் வீட்டுக்குதானேடி வந்துட்டு போனான்… பிள்ளைங்க கிட்ட கூட ஏதோ பேசிட்டிருந்தான்… இல்ல வீரா?!” என்றதும் வீரா பதறி கொண்டு,
“இல்ல க்கா… அவர் இங்க வரல… பக்கத்தில வழி கேட்டாரு” என்று தன் அம்மாவின் முகத்தை பார்த்து கொண்டே அவள் பதிலளிக்க, சொர்ணம் மகளை சந்தேகமாய் பார்த்து கொண்டிருந்தார்.
“அப்படியா?!” என்று கமலம் சொல்லிவிட்டு அகன்றுவிட, சொர்ணம் தன் கூர்மையான பார்வையை வீரா மீதிருந்து எடுக்கவேயில்லை.
“அய்யோ போச்சு அக்கா காலி” என்று நதியா முனக, “அந்த கமலத்தோட தலையில இடி விழ” என்று வாயார சபித்து கொண்டிருந்தாள் அமலா!
“யாருடி அந்த பையன்?” வீராவை பார்த்து தீவிரமாய் முறைத்து கொண்டே சொர்ணம் கேட்க,
“எ… ன்ன…க்கு தெரியாதும்மா” வார்த்தைகள் தடுமாற,
சொர்ணம் மற்ற மகள்கள் புறம் திரும்பி,
“யாருடி வந்தது?” என்று மிரட்டலாய் கேள்வி எழுப்பினார்.
“இல்லம்மா… தெரியல” என்று அவர்கள் இருவரும் பதட்டமாய் பதில் சொல்லி கொண்டிருக்கும் போதே,
“அம்மு உன் பின்னாடி என்ன?!” என்று யோசனைகுறியோடு கேட்கவும் அமலாவின் முகம் மாறியது.
அப்போதே அந்த பூங்கொத்தை கையிலெடுத்தார் சொர்ணம்!
வீரா எச்சிலை கூட்டி விழுங்க சொர்ணம் அந்த ரோஜா பூங்கொத்தை சுற்றி சுற்றி பார்த்து, “இது யார் கொடுத்தது?”
இந்த கேள்வி வீராவின் மீது நேரடியாய் பாய,
“என் ப்ரண்ட் சித்ரா கொண்டு வந்தாம்மா” என்று அமலா பதிலளித்தாள்.
“ஆமா ஆமா… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்தா” என்று வீராவும் நதியாவும் சமாளிப்பாய் உரைக்க,
“ஓ!!” என்றபடி வாசலை எட்டி பார்த்த சொர்ணம்,
“மீனா” என்று அந்த இடத்தை கடந்து சென்ற ஒரு சிறு பெண்ணை அழைத்தார்!
வீரா, அமலா, நதியா மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விழிக்க,
மீனா உள்ளே நுழைந்து, “என்ன ஆன்ட்டி?” என்று விசாரிக்க,
சொர்ணம் அவளிடம், “இதுல என்னமோ இங்கிலீசுல எழுதியிருக்கு… என்னத்துன்னு பாரு” என்று பூங்கொத்திலிருந்த அட்டையை காண்பித்து கேட்டார்.
வீராவிற்கு தூக்கிவாரி போட்டது. அந்த பெண்ணிடம் வீரா கண்ணசைக்கும் போதே,
“ஐ லவ் யூ வீரமாக்காளின்னு போட்டிருக்கு ஆன்ட்டி ” என்று சொல்லிவிட்டாள் அந்த சிறுமி!
‘பன்னாடை பரதேசி’ என்று அவன் தன் முழு பெயரை போட்டதிற்காக அவள் வாய்க்குளேயே திட்ட, அதை விட பெரிய பிரச்சனை அப்போது அவளுக்காக காத்திருந்ததே!
சொர்ணம் ரௌத்திரமாய் அவளை பார்த்தபடி நின்றிருந்தாள். அதை போல ஒரு கோபத்தை இதுவரை வீரா பார்த்ததேயில்லை. ஏன் யாருமே அவரை அப்படி பார்த்திருக்க மாட்டார்கள்.