VKV – 9

VKV – 9

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 9

கலெக்டர் ஆஃபிஸ் வரை வந்திருந்தார் இளமாறன். சப் கலெக்டரை சந்திக்குமாறு அழைப்பு வந்ததை குந்தவி கூறவும், அடுத்த நாளே புறப்பட்டு கோயம்புத்தூர் வந்து விட்டார். பிரபாகரனும் ஊரில் இல்லை, தமிழும் ஒரு புது அக்ரிமென்ட்டில் ரொம்பவே பிஸி, அதனால் தானே கிளம்பி வந்திருந்தார்.

விசாலாட்சி I.A.S’, கதவின் மேல் அழகாகப் பொறிக்கப் பட்டிருந்தது. கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றார் மாறன். கம்பீரமாக உட்கார்ந்து இருந்தார் அந்த பெண் சப் கலெக்டர். மத்திய வயதில் இருந்தார். முகம் கொஞ்சம் பரிட்சயமானது போல் இருந்தது மாறனுக்கு.

வணக்கம் மேடம்.”

வணக்கம், உட்காருங்க.”

தாங்க் யூ மேடம்.”

சொல்லுங்க மிஸ்டர் இளமாறன், உங்க மனுவை நான் தான் ஹேன்டில் பண்ணுறேன். எந்த விதத்தில நான் உங்களுக்கு உதவ முடியும்?” 

குரலிலும் ஒரு மிடுக்கு இருந்தது. அழகான இளமஞ்சள் காட்டன் புடவையை நேர்த்தியாக உடுத்தி இருந்தார். நெற்றியில் சின்னதாக ஒரு சிவப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு. ஒற்றைப் பின்னலில் கொஞ்சம் மல்லிகைப்பூ இருந்தது.

மேடம், டை பேக்டரி ஆரம்பிக்கப் போறாங்க. அதுவும் ஏரிக்கு பக்கத்துல. ஊர்ல விளையுற பருத்திக்கு உதவியான விஷயம்தான் இல்லைங்கலை, ஆனா எங்க ஊர் ஏரியோட நிலமை என்ன ஆகும்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க.”

ம்வேலை வாய்ப்பும் கூடுறதுக்கு சான்ஸ் இருக்குதில்லையா மிஸ்டர் இளமாறன்.”

கரெக்ட் மேடம், இல்லைங்கலை. ஆனா ஏரியை விட்டு வைப்பாங்களா? எல்லாருக்கும் ஷோர்ட் டேர்ம் நன்மைகள் மட்டும் தான் கண்ணுக்கு தெரியும். ஆனா எதிர் காலத்தையும் யோசிக்கணும். நமக்குப் பின்னால வர்றவங்களுக்கு என்னத்தை விட்டுட்டு போறோம்னும் கொஞ்சம் சிந்திக்கணும்.”

அந்தப் பெண் கலெக்டர் முகத்தில் லேசான புன்னகை ஒன்று வந்தமர்ந்தது. இளமாறனின் மூளையோ, இந்தப் பெண்ணை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்ற ஆராய்ச்சியில் இறங்கியது.

உங்க தொழிலுக்கு போட்டியா அவங்க வர்றதால நீங்க இதை எதிர்க்கிறீங்கன்னும் நான் யோசிக்கலாம் இல்லையா மிஸ்டர் இளமாறன்?”

தாராளமா மேடம், ஆனா நான் இப்போ இங்க வந்திருக்கிறது நல்லூர் கிராமத்தோட ஒரு பிரதிநிதியா. எங்க கிராமத்தில சேவை அடிப்படையில மட்டு்மே நடக்குற ஒரு ஹாஸ்பிடலோட வளர்ச்சியில, ஆரம்பத்துல இருந்தே கூட இருக்கிற ஒரு தொண்டனா.”

புரியுது, ஆனாஅபிமன்யூ மில்சப்மிட் பண்ணி இருக்கிற அப்ரூவல் ப்ளான்ல எல்லாம் ப்ரொப்பரா இருக்கு மிஸ்டர் இளமாறன்.”

மேடம், தொழில்ல ஆயிரம் பார்த்துட்டோம், இப்படித்தான் ஆரம்பிப்பாங்க. போகப் போக எல்லாம் தலைகீழா மாறிடும். நம்ம ஊர்க்காரங்கன்னா கூட பரவாயில்லை. வெளியூர்க்காரங்க. அந்தளவு பற்றையெல்லாம் எதிர்பார்க்க முடியாது மேடம்.”

நீங்க சொல்லுறதும் சரிதான், நான் இது சம்பந்தப் பட்டவங்ககிட்ட பேசிட்டு உங்களுக்கு தகவல் சொல்லுறேன்.” ஃபைலை மூடி வைத்தவர்,

மிஸ்டர் தமிழ்ச்செல்வன் எப்படி இருக்கார்?” என்றார். மாறனுக்கு ஆச்சரியமாகிப் போனது.

தமிழை உங்களுக்கு தெரியுமா மேடம்?”

கல்யாணத்தை பாதியில விட்டுட்டு ஓடிப்போன பொண்ணைப்பத்தி அக்கறையா அவ தம்பிக்கிட்ட போய் விசாரிச்ச இளமாறனையும் தெரியும்.”

மேடம்!”

விசாலாட்சின்னு கூப்படுங்க மாறன்.” அவர் முகத்தில் அழகானதொரு புன்னகை சதா உட்கார்ந்து இருந்தது.

அதான் முகம் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது மேடம்.”

மேடமில்லை, விசாலாட்சி.”

சொல்லுங்க விசாலாட்சிஆட்சேபனை இல்லைன்னா உங்களைப் பத்தி சொல்லுங்க. வீட்டுக்காரர் என்ன பண்ணுறார்?”

இருந்தாத்தானே மாறன் சொல்ல முடியும். கல்யாணம் பண்ணனும்னு தோணவே இல்லை. கலெக்டர் ஆகணுங்கிறது சின்ன வயசுல இருந்தே பெரிய கனவு. அதை நனவாக்கத்தான் இத்தனை போராட்டமும். அது உங்களையெல்லாம் காயப்படுத்தும்னு அன்னைக்கு தோணலை. ஆம் ரியலி சாரி.”

பரவாயில்லை விடுங்கன்னு சொல்ல மாட்டேன் விசாலாட்சி. குடும்பமே நிலை குலைஞ்சி நின்னுது. நீங்க தமிழ் கிட்ட பேசியிருக்கலாம்.”

முயற்சிக்கலைன்னு நினைக்கிறீங்களா?”

…!”

எந்த வாய்ப்பும் கிடைக்கலை. தம்பியை கூட வீட்டை விட்டு வெளில போக விடல்லை.”

புரியுதுங்க, அதுக்கப்புறம் ஊருக்கே வரல்லையா?”

பேசவே மறுக்கிற பெத்தவங்களை எப்பிடி வந்து பாக்குறது? வெளியூர்லயே காலம் போயிருச்சு. நம்ம ஏரியாவுல வேலை பாக்கணும்னு தோணிச்சு, அதான் சப் கலெக்டர் போஸ்டுன்னாலும் பரவாயில்லைன்னு கிளம்பி வந்துட்டேன்.”

…!” மாறனுக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை

அப்புறம், உங்களுக்கு எத்தனை பசங்க இளமாறன்?” புன்னகை முகத்துடனே கேட்டார் விசாலாட்சி.

நீங்க சொன்ன அதே பதில்தாங்க. தோணலை, அதனால கல்யாணமே பண்ணிக்கலை. உங்களுக்கு உங்க தொழில், எனக்கு என் நண்பர்கள், அவ்வளவுதான் வித்தியாசம்.”

புரியுது இளமாறன்.”

உங்க நேரத்தை நான் வீணாக்க விரும்பலை விசாலாட்சி, எங்களுக்கு சாதகமா உங்க முடிவை நாங்க எதிர்பார்கிறோம்.”

உங்க தரப்புல நியாயம் இருக்கும் பட்சத்துல மட்டும்தான் என் முடிவு உங்களுக்கு சாதகமா இருக்கும் இளமாறன்.” 

தெரியும் மேடம், நம்ம ஊர்க்காரங்க காசுக்கு விலை போக மாட்டாங்க, அதனால நிச்சயமா முடிவு எங்களுக்கு சாதகமாத்தான் முடியும். அதுல எந்த மாற்றமும் இல்லை.” அழகாக கை கூப்பி விடைபெற்றுக் கொண்டார் இளமாறன். விசாலாட்சியின் முகத்தில் வாடாத அந்தப் புன்னகை அப்போதும் இருந்தது.

                                  ———————————————————

ஏரியின் படிக்கட்டில் உட்கார்ந்து கால் நனைத்துக் கொண்டிருந்தாள் உமா. குந்தவி அத்தையை ஹாஸ்பிடலில் பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் இப்படி வந்து உட்கார்வது அவள் வாடிக்கை. மாசு மருவற்று ஓடும் அந்த தெளிந்த நீரோடையை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள்

ஹாய் ப்ரிட்டி வுமன்!” குரல் வந்த திசையில் திரும்பிப் பார்க்க, அந்த பென்ஸ் கார்க்காரன் இவளையே பார்த்தபடி வந்து கொண்டிருந்தான். சட்டென இவள் எழப்போக,

நோநோஸிட்ஸிட்…” என்றான். அவள் அருகே வந்தவன்,

ஐம் அபிஅபிமன்யூ.” என்றான் கையை நீட்டியவாறு. அந்த கையை வெறித்துப் பார்த்தவள் அமைதியாக இருக்க

எம் பி பி எஸ், ஃபைனல் இயர். ஹேன்ட் ஷேக் பண்ண மாட்டிங்களா?” என்றான். அவனை ஆச்சரியமாகப் பார்த்தவள்,

எப்பிடித் தெரியும்?” என்றாள்.

கம் ஆன் உமா, இதென்ன பெரிய விஷயமா?”

நீங்க யாரு? அபின்னாஎந்த ஊருக்கு ராஜா?” என்றாள் கேலிக்குரலில்.

ஹாஹா…” வாய்விட்டுச் சிரித்தான் அந்த வாலிபன். ‘என்னடா இது? அவனை நாம கலாய்ச்சிட்டோம்னு பாத்தா பய புள்ளை ரசிச்சு சிரிக்கிறான்!’ உமா மனதிற்குள் நினைத்தபடி ஆச்சர்யமாக அவனைப் பார்த்தாள்.

யூ நோ வன் திங் உமா? நீங்க சொன்னது ஒரு வகையில சரிதான்.” அவன் சிரித்தபடி சொல்ல, அவனை ஒரு ஏளனப் பார்வை பார்த்தாள் உமா.

நிஜமாத்தான் சொல்லுறேன் உமா.” அவன் பேச்சில் மலையாள வாடை அடிக்கவே,

ஊருக்குப் புதுசா நீங்க? எதுக்கு எங்க ஊருக்கு வந்திருக்கீங்க?” என்றாள்.

இதென்னடா வம்பாப் போச்சு. காரணம் இல்லாம உங்க ஊருக்கு யாரும் வரக்கூடாதா?”

இல்லைஏதோ ஒரு ஊருக்கு ராஜான்னீங்க? அதான் ராஜ்யத்தை எல்லாம் விட்டுட்டு வெட்டியா ஊர் சுத்தமாட்டீங்களேன்னு கேட்டேன்.”

ஹாஹாயூ ஸ்மார்ட்!” என்றான் மீண்டும் சிரித்தபடி.

பிஸினஸ் பேர்பஸ் உமா.” என்றான், ஏதோ பலகாலம் பழகியது போல்.

…! அம்மா, அப்பா எல்லாம்…?”

கூடிய சீக்கிரம் வருவாங்க.”

அப்படியா? கே மிஸ்டர் அபி, நேரமாச்சு பை.” என்றவள், மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். அவளோடு கூட நடந்தவன்,

எனக்கு உங்களை விட கொஞ்சம் யங்கா ஒரு சிஸ்டர் இருக்கா, பேரு ரஞ்சனி. இங்க வரும் போது உங்களுக்கு இன்ட்ரடியூஸ் பண்ணுறேன்.” என்றான்.

அப்படியா, என்ன பண்ணுறாங்க?” என்றாள் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக.

பி கொம் பண்ணிட்டு வீட்டுலதான் இருக்கா. மாப்பிள்ளை பாத்துக்கிட்டு இருக்கோம்.”

கே மிஸ்டர்…” அவளை பாதியிலேயே இடை மறித்தவன்,

இந்த மிஸ்டரை விட்டுடுங்க உமா. ரொம்ப அன்னியமாத் தெரியுது.” அவள் புருவம் நெளித்துப் பார்க்க

நீங்க இப்பிடிப் பாக்குற அளவுக்கு நான் வில்லன் கிடையாது. ஜஸ்ட் ஒரு ஃப்ரெண்டா பேசக்கூடாதா? பாக்க அவ்வளவு மோசமாவா இருக்கேன்?” இதழில் மெல்லிய சிரிப்பு இழையோட அவனைப் பார்த்தாள் உமா.

எனக்குத் தெரிஞ்சு என் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் என்னை ரொம்ப ஸ்மார்டுன்னுதான் சொல்லுவாங்க.”

ம்ஹூம்…?”

சத்தியமா உமா, வேணும்னா நீங்க ரஞ்சனியைக் கேட்டுப் பாருங்க.”

அவ்வளவு க்ளோசா? அண்ணனும், தங்கையும்?”

கண்டிப்பா, ஒன்னு சொன்னா கோபிக்க மாட்டீங்களே?”

என்ன?”

போடும் போது ரொம்ப அழகா இருக்கீங்க.” அவனை முறைத்துப் பார்த்தவள் விடுவிடுவென நடக்க, ஒரு கையால் தலையை கோதியபடி அவளையே பார்த்திருந்தான் அபி.

                                   ——————————————————————-

கட்டிலில் கால் நீட்டி பிரபாகரன் அமர்ந்திருக்க, அருகே மகிழ்ச்சியே உருவாக அமர்ந்திருந்தார் குந்தவி. இரவு உணவை முடித்துவிட்டு இருவரும் தங்கள் பெட்ரூமில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

என்ன ப்ரபா? எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்லி இருக்கேன், நீங்க அமைதியா இருக்கீங்க?”

பிரபாகரன் டெல்லியில் இருந்து வந்ததும் வராததுமாக அத்தனையையும் அவரிடம் கொட்டி இருந்தார் குந்தவி. மௌனமாக அனைத்தையும் கேட்டிருந்தவர் முகத்தில் சிந்தனை ரேகைகளே இருந்தது.

சந்தோஷமா இருக்கு டாலி, ஆனாலும் ரொம்பவே யோசனையாவும் இருக்கு.”

அத்தையை சொல்லுறீங்களா?”

ம்உமாவை அவங்களுக்கு சும்மாவே பிடிக்காது. இப்போ இது வேற தெரிஞ்சா ஆடித் தீத்திடுவாங்க.”

இது சுதாவோட முடிவுங்க, நாம யாரும் திணிக்கலையே?”

ஏத்துக்குவாங்கன்னு நினைக்கிறயாம்மா?”

சத்தியமா இல்லை, ஆனா அதை சுதா தான் டீல் பண்ணனும்.”

ம்எனக்கு இன்னொரு சந்தேகமும் உண்டு குந்தவி.”

என்ன ப்ரபா?”

விஜயாவோட மகளை சுதாக்கு பாக்கணும்னு அவங்களுக்கு ஒரு எண்ணம் இருக்கும் போல.”

சந்தியாவும் நம்ம பொண்ணுதான், சுதாக்கு விருப்பம் இருந்தா தாராளமா பாக்கட்டும்.”

ம்நான் யாருக்குன்னு பேசுவேன். விஜயா மனசுல என்ன எண்ணம் இருக்குன்னு தெரியாதே.”

குந்தவி என்ன நினைத்தாரோ சட்டென்று பேச்சை நிறுத்தியவர், மௌனமாக மறுபக்கம் திரும்பிப் படுத்துவிட்டார். அந்தச் செய்கையில் ஆத்திரம் மட்டுமே தெரிந்தது.

டாலி, என்னை என்னம்மா பண்ணச் சொல்லுற? என் நிலமையில் இருந்து யோசிச்சு பாரு.”

இப்போ எதுவும் பேச வேணாம் ப்ரபா, தூங்குங்க.”

இப்பிடி மூஞ்சைத் திருப்பிக்கிட்டு இருந்தா எனக்கு எப்பிடிம்மா தூக்கம் வரும்?”

இல்லை ப்ரபா, இப்போ பேசுற எதுவும் சரியா இருக்காது. வார்த்தைகள் தவறா வந்து விழுந்திரும்.”

நமக்குள்ள என்னம்மா கோப, தாபம்? என்னைத் திரும்பிப் பாரு குந்தவி.” தன் பக்கமாக மனைவியை வலுக்கட்டாயமாக திருப்பினார் பிரபாகரன்.

டாலி, உன் மனசுல இருக்கிற ஆசை எனக்குத் தெரியாதா? சுதாக்கும் அதே எண்ணம்தான்னா எனக்கும் சந்தோஷம் தான்டா.”

ப்ரபா, யோசிச்சுப் பாருங்க. நம்ம கல்யாணத்துல உங்கம்மா பண்ணாத அழிச்சாட்டியம் இல்லை. நானும் சரி, எங்கப்பாவும் சரி உங்களுக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டோம்.”

இது நீ சொல்லித்தான் எனக்குத் தெரியணுமா டாலி?”

இன்னைக்கு வரைக்கும் அவங்க பேசுற அத்தனையையும் நான் பொறுத்துக்கிட்டு இருக்கேன்னா, அதுக்குக் காரணம் ப்ரபா எங்கிற மனுஷன் மட்டும் தான்.” வருத்தமாக சிரித்த பிரபாகரன் குந்தவியின் கன்னத்தில் முத்தமிட்டார்.

ஆனா அதே பல்லவி என்னோட பிள்ளைகள் விஷயத்திலயும் தொடரும்னா அது நியாயம் இல்லை ப்ரபா.”

புரியுதும்மா.”

அவங்க பெத்ததுக்கும் அவங்களே முடிவெடுத்து, நான் பெத்ததுக்கும் அவங்களே முடிவெடுத்தா, அம்மான்னு எதுக்கு நான் இருக்கேன்? இந்த வீட்டுல நான் யாரு ப்ரபா?”

கண்கலங்க குந்தவி கேட்க, விக்கித்துப் போனார் பிரபாகரன். கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டவர், அப்படியே ஒரு பெருமூச்சோடு குந்தவியை அணைத்தவாறு தூங்கிவிட்டார். மனைவியின் பேச்சில் இருந்த நியாயம் அவரை வாள் கொண்டு அறுத்தது.

                                        —————————————————————

அந்த black Audi ஆனைமலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சுற்றுப்புறம் பச்சைப் பசேலென்று இருந்தது. லேசாக மழைவரும் அறிகுறியும் இருந்ததால் கொஞ்சம் குளு குளு வென்று இருந்தது

காரின் கண்ணாடிகளை சுதாகரன் திறந்துவிட மூலிகை நிறைந்த காட்டு வாசம் நாசியை நிரப்பியது. ஆழ்ந்து சுவாசித்து சுத்தமான அந்தக் காற்றை நுரையீரலுக்குள் அனுப்பினாள் உமா. தூரத்தே தெரிந்த கரிய மலைகள், கடந்து போன மேகங்கள் அனைத்தையும் முத்தமிட்டுக் கொண்டிருந்தது.

ரொம்ப அழகா இருக்குதில்லை அத்தான்?”

ம்…” காரை ஓட்டிக் கொண்டிருந்த சுதாகரன் முகத்தில் அவள் ஆனந்தம் பார்த்து ஒரு மெல்லிய சிரிப்பு வந்தது.

அந்த சரணாலயத்திற்குள் கார் நுழைந்தது. சற்றுத் தொலைவில் நீர் தேங்கி இருந்த ஒரு சின்னக் குட்டையில் நான்கு யானைகள் குளித்துக் கொண்டிருந்தன. தங்கள் தும்பிக் கையால் நீரை உறுஞ்சி மேல் நோக்கிப் பீச்சியடிக்க, பூந்தூறலாய் சிதறியது நீர்.

அப்புறம், முதலாளியம்மா எனக்கு எவ்வளவு சம்பளம் குடுக்கப் போறீங்க?” விளையாட்டாக கேட்டான் சுதாகரன்.

யாரு? நான் முதலாளியம்மாவா?”

பின்ன இல்லையா? நான் உங்கப்பா மில்லுல தானே வேலை பாக்குறேன். இன்னும் ரெண்டு நாள்ல சம்பளமில்லையா? அதான் கேக்குறேன்.”

…! அத்தானோட ஃபர்ஸ்ட் சாலரியா?”

ஆமா, உனக்கு என்ன வேணும் மது?”

ம்எனக்குபுடவை, கேயா அத்தான்?”

டன்!”

உங்க பட்ஜெட் எவ்வளவு அத்தான்?”

வாங்குற சம்பளத்தை அப்பிடியே உங்கிட்ட குடுக்கிறேன். நீ மிச்சம் ஏதாவது இருந்தா எனக்குக் குடு.”

ஐயோ அத்தான்! நீங்க சோ ஸ்வீட்!” அவன் கன்னங்கள் இரண்டையும் பிடித்துக் கிள்ளியவள்,

ஒவ்வொரு மாசமும் இப்பிடியா குடுக்கப் போறீங்க? அதால இந்த சான்ஸை மேக்ஸிமம் யூஸ் பண்ணிக்கறேன்.”

விவரம் தான்டி நீ!”

கார் மெல்லிய நீரோடை ஒன்றைக் கடந்து சென்றது. ஓரடி ஆழத்தில் சல சலவென நீரோட ஆங்காங்கே பாறைகள் இயற்கையாகவே பதிந்திருந்தது. நீரோடையின் இரண்டு பக்கமும் வளர்ந்திருந்த பெரிய மரங்கள் மேல் நோக்கிச் சென்று ஒன்றையொன்று முத்தமிட்டுக் கொண்டிருந்தன.

அத்தான், காரை இங்க கொஞ்சம் நிறுத்துங்களேன்.” 

அவள் சொல்லவும் பின்னால் வரும் வாகனங்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் காரை ஒரு ஓரமாக நிறுத்தினான் சுதாகரன்காரை விட்டு இறங்கியவள் வரிசையாக இருந்த கற்களில் நடக்க ஆரம்பித்தாள்.

மது, கவனம். விழுந்திரப் போறே.” திரும்பி அவனைப் பார்த்து சிரித்தவள்,

நீங்களும் வாங்க அத்தான்.” என்றாள். காரின் கண்ணாடிகளை ஏற்றி லாக் பண்ணியவன், அவள் அமர்ந்திருந்த பாறைக்கு சென்றான். அவன் கை பற்றி தன்னருகே அமர்த்தியவள்,

அத்தான், நெக்ஸ்ட் வீக் ஃபெயாவல் ஃபங்ஷன் இருக்கு. நீங்க வாங்கிக் குடுக்குற சாரியைத் தான் நான் கட்டிக்கப் போறேன்.”

ஃபங்ஷனுக்கு சாரியா மது?”

ம்அப்பதான் கிரான்டா இருக்கும் அத்தான்.”

ஃபங்ஷனுக்கு சுடிதார் நல்லா இருக்குமே மது?”

இல்லை அத்தான், எனக்கு சாரிதான் ரொம்ப அழகா இருக்குன்னு பாட்டி சொன்னாங்க.”

ம்அதனாலதான் சொல்றேன். சாரி வேணாம்டா.” அவனை ஆச்சரியமாக உமா பார்க்க,

கேர்ள்ஸ் மட்டும் வருவாங்கன்னா பரவாயில்லை, போய்ஸும் வருவாங்க. பசங்க பார்வை எப்பிடி இருக்கும்னு உனக்குத் தெரியாது மது.” அவனையே பார்த்திருந்தாள் உமா.

சாரியும், சுடிதாரும் வாங்கலாம். ஃபங்ஷனுக்கு சுடிதார், கே.”

அப்போ சாரி எதுக்கு?”

அதை எப்போ கட்டனும்னு நான் சொல்லுறேன், அப்போ கட்டிக்கோ.”

ம்…” மனமேயில்லாமல் தலையாட்டினாள் உமா. காலை ஓடும் நீரில் நனைத்தபடி உட்கார்ந்திருந்தார்கள் இருவரும். மெல்ல அவனருகே நகர்ந்து அமர்ந்து அவன் தோள்களில் தலை சாய்த்துக் கொண்டவள்,

அத்தான்.” என்றாள்.

ம்…”

நான் ஒன்னு கேக்கட்டுமா?”

கேளு மது.”

நீங்க கோபிக்கக் கூடாது.”

அப்போ என்னமோ வில்லங்கமா கேக்கப் போறே, பரவாயில்லை கேளு

இல்லை அத்தான், உங்க பாட்டியை எப்பிடி சமாளிக்கப் போறீங்க?”

மது, நீங்க எல்லாரும் அவங்களுக்கு ஒரு பார்வைன்னா, நான் அவங்களுக்கு தனிப்பார்வை.”

அப்படீன்னா?”

நான் சொன்னா அவங்க மறுக்க மாட்டாங்க.” அவள் அவனை நிமிர்ந்து நம்பாத பார்வை பார்க்க, அவள் நெற்றியில் முத்தமிட்டவன்,

நீ இருந்து பாரு மது, என்ன நடக்குதுன்னு.”

அவங்களுக்கு என்னைப் பிடிக்காது அத்தான்.”

ஆனா சுதாகரனுக்கு மதுவைப் பிடிக்கும்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும்.”

நிஜமாவா!”

ம்அம்மா விஷயத்துல அவங்க நடந்துக்கிற விதத்தை வெச்சு அப்பா அவங்களை அண்டுறதில்லை. மகேஷைப் பத்தி நான் உனக்கு சொல்ல வேண்டியது இல்லை. அவங்களுக்கு இந்த உலகத்துல இருக்குற ஒரே சந்தோஷம் நான் தான்.” அவள் கலவரமாக அவனை நிமிர்ந்து பார்க்க

எதுக்கு இந்த பயம் மது?” என்றான். அவள் இடம் வலமாகத் தலையாட்ட,

இதைப் பேசத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கோமா மது?” 

இல்லை அத்தான், கேக்கணும் போல தோனிச்சு அதான்…”

எம்மேல நம்பிக்கை இருக்கில்லையா, இந்த விஷயத்தை எங்கிட்ட விட்டுட்டு இப்போ வந்த வேலையை கவனி.” சொன்னவன் அவள் இடையை வளைத்து அணைக்க,

அத்தான், நீங்க பண்ணுற கூத்தையெல்லாம் சொன்னா மகேஷ் நம்ப மாட்டேங்குறான்.” சொன்னவளை முறைத்துப் பார்த்தவன்,

ஏய்! என்னத்தைடி அவங்கிட்ட சொல்லித் தொலைச்ச?” என்றான்.

நீங்க ரொம்பவே ரொமாண்டிக்னு சொன்னேன் அத்தான்.” கிளுக்கிச் சிரித்தாள் உமா.

மது! இதெல்லாம் போய் அவங்கிட்ட பேசுவயா? அவன் என் தம்பிடி. மானத்தை வாங்காத மது, ப்ளீஸ்.”

ம்அந்த பயம் இருக்கனும். இனிமே ஏடா கூடமா நடக்கப்படாது, சரியா அத்தான்.”

உங்கிட்ட ஏடா கூடமா நடக்காம, வேற யாருகிட்ட நடக்க மது?” கேட்டபடி அவன் நெருங்கி அமர,

பாத்தீங்களா, இதுதானே வேணாங்கிறது.”

ஐயோ மது! நாம வந்ததே இதுக்குத் தானேடா.” என்றவனை அவள் செல்லமாகத் தள்ளிவிட, அவளையும் இழுத்துக்கொண்டு தண்ணீரில் இறங்கினான் சுதாகரன். அவர்கள் சிரிப்புச் சத்தம் அந்தக் காற்று வெளியிடையை நிரப்பியது.

error: Content is protected !!