Avalukkenna…!-5

அத்தியாயம்
5

மூன்று நாட்களில் மிகவும் துவண்டிருந்தாள், அகல்யா. தேவகி ‘நான் அகிய நல்லா பாத்துக்கறேன் அனிமா, நீ டூர் போயிட்டு வா’, என தன் தாய் எவ்வளவோ எடுத்து கூறியும், அனன்யா சுற்றுலாவிற்கு செல்லாமல், தோழியுடன் தங்கியிருந்து கவனித்துக் கொண்டாள்.

முற்றிலும் குணமாகும் வரை கண்டிப்பாக மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தது மருத்துவமனை நிர்வாகம்.

அனைத்து டெஸ்ட்களும் எடுக்கப்பட்டு, சாதாரண வைரஸ் சுரமாக இருந்தாலும், சரியான பின் வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறியிருந்தனர். உடல்நலம் பெற்றபின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள், அகல்யா.

வைரஸ் சுரத்திற்கு பின் உடல்நிலையில் தேக்கமடைந்தவளை, மனையியல் துறையைச் சார்ந்தவள் ஆதலால், ஊட்டம் மற்றும் விரைவில் பழையபடி உடல்நிலை தேறும் வகையான உணவு முறைகளைப் பின்பற்றி தோழியைத் தேற்றினாள், அனன்யா.

அடுக்களையில் அனன்யா செய்த அட்டகாசத்தில் பணியாளர்கள் பதறிருந்தனர். அகல்யா தேறும் வரை அனைத்து அடுக்களைப் பணியாளர்களையும், தனது எண்ணம் போல ஆட்டி வைத்திருந்தாள், அனன்யா.

ஆனால் எப்போதும் உணவு பற்றிய எண்ணத்திலேயே இருக்கும் அகல்யாவிற்கு உணவு என்றாலே வேம்பு போல கசப்பாக இருந்தது.

உணவைத் தேடிச் சென்று உண்ணுபவள், உணவு என்றவுடனே காத தூரம் ஓடினாள், அகல்யா.

ஆனாலும் அனன்யா அவளை விடவில்லை. ‘அப்டிதான் இருக்கும்! இத சாப்பிடு…! இந்தா… இத குடி! இப்போ ரெஸ்ட் எடு!, என தோழிக்கு ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்திருந்தாள், அனன்யா.
——————

பல்கலைக்கழகத்தில், குறிப்பாக மனையியல் துறை சார்ந்தவர்கள் மட்டும் சுற்றுலா சென்றிருந்தமையால் இத்துறை மாணவிகளுக்கு மட்டும் விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

வீட்டில் இருந்த அகல்யாவிற்கு முதலில் பொழுதுபோகாமல் மிகவும் சிரமப்பட்டாள். சற்று உடல்நிலை தேறியிருக்க, செமஸ்டர் நெருங்குவதால் அனைத்து பாடங்களையும் ரிவைஸ் செய்து அகல்யா தனது நேரத்தைப் போக்கினாள். அகல்யாவை கண்ணும் கருத்துமாக கவனித்து, அனன்யாவின் நேரம் போனது.
———————————-

பருவத்தேர்வுகள் முடிவுறும் சமயம் அடுத்த ஆண்டுக்கான புரொஜெக்ட் விடயமாக திட்டமிட்டிருந்தார்கள். டயடிடிக்ஸ் சார்ந்த பணிகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டி தனியார் மருத்துவமனைகளில் ட்ரைனியாக இரண்டு மாதங்கள் செல்ல அகி, அனி இருவரும் விண்ணப்பித்தனர்.

இருவருக்கும் வேறு வேறு மருத்துவமனைகளில் அழைப்பு வர, வேறு வழியில்லாமல் கோவையின் இரு வேறு பிரபல மருத்துவமனைகளில் டயட் ட்ரைனியாக செல்ல ஆரம்பித்திருந்தனர்.

அனன்யா செல்லும் மருத்துவமனையில் டயடீசியன் விடுமுறையில் சென்றிருக்க, டயடீசியனின் பணிகளை தற்காலிகமாக பார்க்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்டாள், அனன்யா.

அவளுக்கென வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளின் உணவுமுறைகளை திட்டமிட்டு கொடுப்பது, தினசரி அனன்யாவின் பணியானது. ஆகையால் முதல் முறையாக தனது கவனிப்பின் கீழ் இருந்த நோயாளிகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, சிரத்தையுடன் கவனித்துக் கொண்டாள்.

ஒரு மாத பராமரிப்பிற்குப் பின், அதில் அனைத்து விதமான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பினும், அந்தந்த நோயின் தன்மை அவர்களின் வழக்கமான மாத மருத்துவ அறிக்கையில் சென்ற மாதத்தைவிடக் குறைந்திருந்தது. அதைக் கண்ட மருத்துவர்கள், எப்படி இது சாத்தியமானது என கருத்துப் பரிமாற்ற நிகழ்வை நடத்தினர்.

இறுதியில், உணவு முறைகளில் மட்டுமே புதிய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனைக் கண்ட தலைமை மருத்துவர், அனன்யாவை தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு கூறினார்.

அனன்யாவிற்கு அளிக்கப்பட்ட உத்தரவினை ஏற்று தலைமை மருத்துவரைச் சென்று சந்தித்தாள். அங்கு, அவளிடம் கருத்துகள் பெறப்பட்டது. இறுதியில் உணவை மூலமாகக் கொண்டு, மருந்துகளின் உதவியுடன், சரியான பராமரிப்பு இருந்தால், அதிவிரைவில் நோயாளி தனது நோயிலிருந்து விடுபட இயலும் என்பதை ஆராய்ச்சி நிலையில் இருந்து வந்த செய்தி, அதன்பின் கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

அது மட்டுமன்றி தினசரி, டயடீசியன் வழங்கிய உணவால் நோயாளியின் மனதில் தோன்றும் மனஓட்டங்களையும் பதிவு செய்திருந்ததைப் பகிர்ந்து கொண்டாள், அனன்யா.

ஒரே விதமான உணவாக இல்லாமல், சுவை மற்றும் நோயாளியின் விருப்பம், மனமாறுபாடுகள் இவற்றைக் கருத்தில் கொண்டு உணவுமுறைகள் கடைபிடிக்கப்பட்டதை மறைக்காமல் அனன்யா கூறியிருந்தாள்.

அனன்யாவின் ஈடுபாடுடன் கூடிய பணியை மெச்சிய நிர்வாகம், இறுதியாண்டு கல்லூரிக் கல்வியை நிறைவு செய்தபின், தங்களது மருத்துவமனைக்கே பணிக்கு வருமாறு, அனன்யாவின் வேலைக்கான முன் உத்தரவினை வழங்கியிருந்தது.
—————-
அகல்யாவும், அனன்யாவும் தங்களது பணிக்கு செல்ல வேண்டிய நேர மாறுதலால், தினசரி சந்திக்க இயலாமல் போனது. இருவரும் உட்கார்ந்து பேச நேரமில்லாத காரணத்தினால் இரு மாதங்களில் இருவருக்குள்ளும் இடைவெளி உண்டாகியிருந்தது.

அனன்யாவின் வேலைக்கான உத்தரவைப் பற்றி அறிந்தவளுக்கு, எல்லாம் அவளுக்கு கிடைக்கிறது. தனக்கு அவ்வாறு கிடைக்கவில்லை எனும் தாழ்வு மனப்பான்மை மட்டுமே எழுந்திருந்தது. அது அனன்யாவின், நேர்மையான, ஈடுபாடுடன் கூடிய உழைப்பிற்கு கிடைத்த வெகுமதி என்பதை மறந்திருந்தாள், அகல்யா.

மனக்குறைகள் அதிகமாகும் போது அது மனதிற்குள் நம்மை அறியாமலேயே விசத்தன்மையை மனதிற்குள் விதைத்துவிடுகிறது. அது போல அகல்யாவிற்கும், அனன்யாவைப் பற்றிய மனதில் இருந்த குறை சற்று அதிகமாகத் தொடங்கியிருந்தது.

அனன்யா வழமைபோல இருந்தாள். தேவகியும் இருவரையும் பாராபட்சம் பாராமலேயே நடத்தி வந்தார். ஆனாலும் அகல்யா, அதை கல்லூரியின் தோழமைகளுடனான பேச்சின் போது அசட்டையாக எதற்கெடுத்தாலும் ‘அவளுக்கென்ன…!’, என்ற வார்த்தையை பிரயோகிக்க ஆரம்பித்திருந்தாள்.

மூன்றாம் வருடப் படிப்பு ஆரம்பித்தது போல இருக்க, அதற்குள் ஆட் செமஸ்டர் முடிந்திருந்தது. இனி பைனல் செமஸ்டருடன் கல்லூரியின் ஆட்டம், பாட்டம் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும். ஒரு சிலர் மட்டுமே முதுஅறிவியல் பட்டங்கள் பெற எண்ணுவார்கள்.

கல்லூரியில் நடைபெற்ற சென்ட் ஆஃப் நிகழ்வில், புதிய ஆறு ஒன்றை மடை திறந்து விடும் ஆயத்தத்துடன், கண்களில் நீரைத் தேக்கியிருந்தனர் மாணவியர். பிரிவாற்றாமை காரணமாக அனைவரும் தங்களில் இளம்அறிவியல் கல்வி முடியப் போவதை எண்ணி மிகவும் வருந்தியிருந்தனர்.

ஆனாலும், சிலர் மேற்கல்விக்காக அதே பல்கலைக் கழகத்தில் சந்திக்கலாம் என மனதை தேற்றியிருந்தனர்.
பருவத் தேர்வுகள் ஆரம்பமானது. பருவத் தேர்வுகள் இருவராலும் பக்குவமாக கையாளப்பட்டது. ஏனோதானோ ரகம் இருவரும் அல்ல. ஆகையால் அவரவர் தனது முயற்யில் இறங்கியிருந்தனர்.

இறுதி தேர்வு முடிந்த சூழலில் அனன்யா, தனது பெற்றோரிடம் ‘இரு ஆண்டுகள் அப்பாவின் கம்பெனி நிர்வாகத்தை தந்தையுடன் அறிந்து கொள்ள பிரியப்படுவதாக’க் கூற ஈஸ்வரனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

அனன்யா, கம்பெனி நிர்வாகத்தைக் கற்றுக் கொள்ள கம்பெனிக்கு வரும்முன், தனது கல்லூரித் தோழிகளுடன் ஊட்டி சுற்றுலா சென்று வர ஆசைப்படுவதாக பெற்றோரிடம் அனுமதி கோரினாள்.

ஒரு ஆண்டுக்கு முன் திட்டமிட்டிருந்த சுற்றுலாவிற்கு மகள் செல்லமுடியாமல் போனதை எண்ணி, பெற்றோர் இருவரும் சம்மதித்திருந்தனர். அகல்யாவுடன், கல்லூரியின் நெருக்கமான சில தோழிகளும் உடன் வர, அனன்யா நான்கு நாட்கள் சுற்றுலாவிற்கு ஆனந்தமாக கிளம்பினாள்.
****

கோவையில் இருந்து மிக அருகாமையில் இருக்கும் ஊட்டிக்கு தங்களது கம்பெனி வேனை பயன்படுத்திக் கொள்ள ஈஸ்வரன் சம்மதித்து, அதிலேயே வழியனுப்பி வைத்திருந்தார்.

தோழிகள் தங்களது தேவைக்கு வேண்டிய அனைத்தையும் எடுத்துக் கொண்டு, முன்பதிவு செய்யப்பட்டிருந்த மேட்டுப்பாளையத்தை அடுத்த ‘பிளாக் தண்டரை’ நோக்கி தங்களது பயணத்தை தொடங்கியிருந்தனர்.

பயணத் துவக்கம் அனைவரையும் குதூகலப்படுத்த, பிளாக் தண்டரில் வந்து சேரும் போது சரியாக நண்பகல் பணிரெண்டு மணி எனக் காட்டியது.

பத்து மணிக்கு ஆரம்பித்த ரைட்களில் ரசிகத் தன்மையுடன், தங்களது நேரங்களை செலவிட்ட மனிதர்கள் மகிழ்ச்சியுடனும், குதூகலத்துடனும் திரிய, நண்பகலில் அவ்வாயிலுக்குள் நுழைந்தவர்களையும் அம்மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது.

ஏசியாவின் நம்பர் ஒன் பொழுதுபோக்குக்கான சிறந்த இடமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிளாக் தண்டருக்குள் நுழைந்தவர்களை அங்கிருந்த ரைட்கள் இனிதே வரவேற்றது.

எழுபத்தைந்து ஏக்கர் நிலப்பரப்பில் விசாலமாக வித்தியாசமாக ரசனையுடன் அமைக்கப்பட்டிருந்தது. ஏறத்தாழ நாற்பத்து ஒன்பது ரைட்கள் இருந்தாலும், அதிகபட்சமாக பெண்கள் இலகுவாகப் பங்கேற்கும் வகையினாலானது முப்பது மட்டுமே.

அங்கு இருந்தவர்களின், நேற்றைய துன்பங்களோ நினைவிலிருந்து அழிந்திருக்க, நாளைய நஷ்ட, கஷ்டங்களோ அங்கிருந்த ரைட்களில் ஒளிந்திருக்க, இன்றைய நாள் எனக்கானது, என்னுடையது என்ற எண்ணம் மட்டுமே அங்கிருந்தவர்களின் மனதால் ஒளி பூசிய அவர்களின் வதனத்தில் பிரதிபலிக்க, அதைக் காட்டும் பல விதமான ஒலிகள் என அந்த பகுதியே ஆரவாரத்துடன் அருமையாக பொழுதுபோக்கு இடமாக காட்சியளித்தது.

இவர்களைப் போலவே, அங்கங்கு குழுக்களாக வந்து அந்த நாளை ரம்மியமாக்கி ரசித்திருந்தனர்.

தொந்திரவுகள் என பருவ வயதில் என்னும் பெற்றோரின் அருகாமை இல்லாததால், தொண்டை வறண்டு போகும் அளவிற்கு பேசி சிரித்தனர். கத்தி மகிழ்ந்தனர்.

சிறுபிள்ளைகள் இல்லை என்பதால் விழிப்புணர்வோடு தங்களது அன்றைய நாளை அனுபவித்திருந்தனர். வேண்டியதை உண்டனர். நினைத்ததை செய்தனர்.

பருவ வயதிற்கான பரபரப்பான பார்வைகள் இருந்தது. பார்வையில் படும் படா ஹேண்ட்சம்கள் பார்வையால் ஆராதிக்கப்பட்டனர். தனியாக வந்து மாட்டியவர்களை ‘துண்டைக் காணோம்’ என ஓடுமளவிற்கு விரட்டினர்.

துளித் துளியாக அனைத்தும் ரசிக்கப்பட்டது. ஒரு செகண்டைக் கூட மிஸ் பண்ணாமல் மகிழ்ந்திருந்தனர். ஒவ்வொருவரின் வியூஸ் அங்கு பரிமாறப்பட்டது. பரிமாறப்பட்ட கருத்துகள் பந்தாடப்பட்டது.

மனதைச் சுணக்கும்படி கருத்துகள் இல்லாமல், மகிழ்ச்சிக்கான சுருதி கூட்டும் செயலாக ஒவ்வொன்றையும் அனுசரித்து இன்புற்றிருந்தனர். இளைப்பாறல்கள் கூட இனிமையானதாக இருந்தது.

மாலை ஆறு மணி வரை எதுவும் தோன்றவில்லை. அதற்குமேல் அங்கிருக்க அனுமதியில்லை என்ற நிலையில், தங்களது சாதாரண உடைக்கு மாறி பிளாக் தண்டரிலிருந்து, ஊட்டியை நோக்கி கிளம்பியிருந்தனர், தோழிகள்.

பிளாக் தண்டர் அனைவருடைய ஆவல்களையும், ஆற்றல்களையும் உறிஞ்சிக் கொண்டிருந்ததால், அனைவருக்கும் அதீத பசி.

ஊட்டி வரை யாரும் தாங்க மாட்டார்கள் என புரிய, இரவு உணவை மேட்டுப்பாளையத்தில் உண்ண முடிவு செய்தனர்.

ஒவ்வொருவரும் ஒரு மெனு ஆர்டர் செய்ய, அனைவரும் உண்டு முடித்து அங்கிருந்து கிளம்ப எட்டு மணிக்கு மேலாகியிருந்தது.

கிளம்பிய வேன், அரைமணித்தியாலத்தில் பழுதாகி நின்றிருக்க, பெண்களாக தனியே, அதுவும் இரவில் என மனம் அஞ்சினாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் ஓட்டுநர் பதறியிருந்தார்.

கம்பெனி நிர்வாகத்திற்காக தொடர்ச்சியா பயன்படுத்தப்படும் வேன் அது. இன்று காலையில் வீட்டிற்கு வருமுன்பு சர்வீஸ் செய்து எடுத்து வந்திருந்ததை ஓட்டுநர் கூறினார். சிறு பழுதாக இருக்கும் என எண்ணி அருகில் உள்ள பழுதுநீக்கும் எண்ணுக்கு அழைத்திருந்தார், ஓட்டுநர்.

பழுதுநீக்க, இதோ வருகிறேன் என்றவன், ஒரு மணித் தியாலம் கடந்தும் வரவில்லை. அனன்யா, உடனே தனது தந்தைக்கு அழைத்து விபரம் பகிர்ந்தாள்.

ஈஸ்வரன் தனக்கு தெரிந்த தொழில்சார் மேட்டுப்பாளைய நண்பர் மூலம் உதவி கேட்க உடனே சென்று காணுவதாகக் கூறி வைத்திருந்தார்.

சரியான நேரத்தில், பாதுகாப்பான உதவி கிட்டியதா?
—————————-