Avalukkenna…!-6

Avalukkenna…!-6

அத்தியாயம்
6

ஈஸ்வரன், அனன்யாவை அவளது தோழிகளுடன் அனுப்பியது தவறோ என எண்ணியபடி, அரைமணிக்கு ஒரு முறை மகளுக்கு அழைத்து, ‘வண்டி பழுது நீக்கப்பட்டதா, யாரும் உதவிக்கு வந்தார்களா?’ எனக் கேட்டபடியே இருந்தார்.

அனன்யா, “அப்பா ஒன்னும் பயப்படாதீங்க. இப்ப வந்துட்டா, சரி பண்ணிட்டு உடனே ஊட்டி கிளம்பிறோம்”
“இல்லனா, மேட்டுப்பாளையம் வந்து தங்கிட்டு, காலைல ஊட்டி போறீங்களாமா!”, பெரியவரது உள்ளம் பதறியது.

“இல்லபா, அங்கயும் அல்ரெடி ரூம் புக் பண்ணியாச்சு, எதுக்கு வெட்டி செலவு, கொஞ்சம் அனுசரிச்சு போயிட்டு நானே உங்கள கூப்பிடறேன்பா!”, சிங்கப் பெண் சிலிர்த்து.

“நீங்க கொஞ்சம் அட்வான்ஸா கிளம்பி ஊட்டி போயிருங்கனு கிளம்பும் போதே சொல்லி தான அப்பா அனுப்பனேன்!”, அனுபவத்தால் மகளிடம் கூறியதை அசட்டை செய்து விட்டு, ஆதரவற்ற நிலையில் சாலையில் நிற்பவளை நினைத்த வருத்தத்தில் கூறினார்.

“எல்லாரும் வந்து கிளம்ப லேட் ஆகிருச்சுப்பா!”, பருவம் பயம் அறியாது. விளையாட்டுத் தனத்தால் வரும் விபரீதங்களை அறிந்திருந்தாலும், அறியாதவள் போல பதில் பேசினாள்.

“சரிமா, நான் அப்றம் கால் பண்றேன்”,என்றபடி வைத்திருந்தார் ஈஸ்வரன்.

அடுத்த அரைமணி தியாலத்தில், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோமொபைல்ஸ் இன்ஜினியரான நவீன், தந்தையின் நண்பர் கேட்டுக் கொண்டதால் அவர் குறிப்பிட்ட இடத்திற்கு, உரிய நபர்களை அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.

சர்வீஸிற்கு வந்தவர்கள் இரவு நேரமாதலால் தங்களது மொபைலின் டார்ச் உதவியுடன் பழுதைக் கண்டறிந்தனர். அதன்பின், பழுதை நீக்க பதினைந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டு குறைகளைச் சரிசெய்திருந்தனர்.

பயத்தில் அதுவரை வேனுக்குள் இருந்த பெண்கள், வாட்டசாட்டமான, கதாநாயகனுக்குரிய அம்சங்களுடன் இரண்டு நபர்களோடு வந்திறங்கியவனை கண்டு பயம் மறந்து, மனதினுள் ‘பருவமே புதிய பாடல் பாடு…’ என சுற்றம் மறந்திருந்தனர்.

அவனது ஒவ்வொரு செயல்களிலும், பெண்கள் அவனை ரசித்ததைக் கவனிக்காமல், தனது பணிகளில் கவனமாக இருந்தான். அவனை ரசித்திருக்க நேரம் போனது தெரியாமல் நவீனயுக கண்ணனனாக பாவித்த பெண்கள், நவீன் கிளம்பியதில் மனம் நைந்திருந்தனர்.

வேன் கிளம்பியதும் தனது தந்தைக்கு அழைத்து பேசி, அனன்யா, வேன் சரிசெய்யப்பட்ட விடயத்தை தந்தையிடம் பகிர்ந்து கொண்டிருந்தாள். ஊட்டி சென்று அவர்களுக்கு என புக் செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதியை அடையும் போது பதினோரு மணி ஆகியிருந்தது.

அடுத்து வந்த மூன்று தினங்களும் அவர்களது மனம் போல மகிழ்ச்சியாகச் செலவளித்திருந்தனர். குடும்பத்துடன் பலமுறை ஊட்டிக்கு வந்திருந்த அனன்யா மற்றும் அகல்யா இருவருக்கும் பழகிய இடமாக இருந்தது. ஆகையால் இருவரும் மற்ற தோழிகளை வழிநடத்தினர்.

குதூகலம் சற்றும் குறையாமல், அனைவரும் திரும்பியிருக்க, அகல்யா… ‘அடுத்து தான் என்ன செய்யலாம்’ என்ற சிந்தனையுடன் வீடு திரும்பினாள்.

வீட்டிற்கு வந்தவுடன், அனன்யாவுடன் தனது மனதைப் பகிர்ந்தாள்.
“அனி, அடுத்து என்ன செய்யறதுனு எனக்கு ஒரே குழப்பமா இருக்கு”, குழப்பத்தை கூட ஷேர் செய்திருந்தாள்.

“அதுல என்ன உனக்கு குழப்பம், ரிசல்ட் வர்ற வர ஃபீரியா இரு. இல்லனா நம்ம யுனிவர்சிட்டிலயே பிஜிக்கு அப்ளை பண்றியா!”, இலகுவாக தனது தோழியைக் கையாண்டாள், அனன்யா.

“அம்மா இதுக்கு அக்சப்ட் பண்ணுவாங்களா!”, தனக்காக அனன்யாவின் பெற்றோர் எந்தளவிற்கு செய்வார்கள் என்ற தயக்கம் காரணமாக கேட்டிருந்தாள்.

“உனக்கு படிக்கணும்னு ஆசைனா சொல்லு அம்மா கண்டிப்பா படிக்க வப்பாங்க, இல்ல வேலைக்கு போறதா இருந்தா போயி ரெஸ்யூம் குடுத்து வையி, அவங்களுக்கு ஆள் தேவைன்னா கூப்டுவாங்க”, அனன்யாவிற்கு தோன்றியதை கூறினாள்.

“இல்ல, எனக்கு தோணுறத சொல்லவா!”, என அகி கேட்க,

“எங்கிட்ட எதுக்கு தயக்கம், சும்மா சொல்லு!”, வில்லங்கம் எதை ஷேர் செய்யப் போகிறதோ என எண்ணிணாலும், எதுவானாலும் சமாளிக்கலாம் என்ற தன்னம்பிக்கையுடன் தோழியை நோக்கி, கூறுமாறு ஊக்குவித்தாள், அனி.

“உனக்கு ட்ரெனிங் பீரியட்ல வர சொல்லி சொன்னாங்கள்ல, அந்த ஹாஸ்பிடல்ல உனக்கு பதிலா என்னைய வேலைக்கு சேத்து விடறியா!”, மறையாது கேட்டிருந்தாள், அகி.

“அது என் டெடிகேசன் பாத்து குடுத்தது, அத நான் உனக்கு எப்டி ரெக்கமண்ட் பண்ண முடியும் அகி!”, தோழிக்கு புரியுமாறு கூறினாள்.

‘அவளுக்கென்ன…’, என மனம் நினைக்க, “நீ எங்கயும் வேலைக்குனு போயி தான் வாழணும்னு இல்ல அனி, ஆனா நான் அப்டி இல்லல!”, என அனன்யாவிடம் தர்க்கத்தை ஆரம்பித்திருந்தாள்.

“அப்டி எல்லாம் இல்ல அகி, எனக்கு அப்பா ஆபீஸ்ல எல்லாம் கத்துக்கிட்டு, அந்த பிஸினெஸ்ஸ நான் பாக்கலாம்னு நினைச்சதால சொன்னேன். இப்ப இங்க உனக்கு எந்த குறையும் இல்ல. பேசாம மாப்பிள்ளை பாக்கச் சொல்லவாடீ”, மாற்று யோசனை கேட்டாள்.

“என்னைய யாரு கல்யாணம் பண்ணிக்குவாங்க!”, கழிவிரக்கம் காரணமாக விரக்தியாக பதில் சொல்லியிருந்தாள்.

“சரினு ஒரு வார்த்த மட்டும் சொல்லு, அம்மாகிட்ட உனக்கு மாப்பிள்ளை பாக்கச் சொல்றேன்”, எதுவாக இருந்தாலும் தங்களால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில், தனது தோழியின் எதிர்காலத்தை திட்டமிட எண்ணி கேட்டிருந்தாள், அனன்யா.

“அதெல்லாம் சரிப்படாது, நான் எதாவது வேலைக்கு போயி அப்றம் கல்யாணம் பண்ணிக்கிறேன்”, திருமணத்திற்கு அவசரமில்லை என்ற எண்ணம் இருக்க அதை கூறியிருந்தாள்.

“ஏண்டி இப்டி பேசற!”, தோழி பின்வாங்குவது எதனால் என புரியாமல் கேட்டாள், அனன்யா.

“வேற என்ன செய்ய நான்!”, அகி

“CDPO எக்ஸாமுக்கு ட்ரை பண்ணு, கொஞ்சம் கான்சன்ரேட் பண்ணி படிச்சா, கண்டிப்பா உனக்கு கிடைச்சிரும்”, தாழ்வு மனப்பான்மை போன்ற தனது தோழியின் பதிலால் மாற்றுவழி கூறினாள்.

“நீயும் போடறியா!”, ஷேரிங்… கேட்கச் சொன்னது.

“சும்மா போட்டு எழுதி வப்பேன்!”, அனி

“ம்… சரி அப்ப அதுக்கு நான் ப்ரிபேர் பண்றேன்”, ஒருவழியாக முடிவுக்கு வந்திருந்தாள், அகி.

அதன்பின் வந்த நாட்களில் அனன்யா, தனது தந்தை ஈஸ்வரனுடன் காலை நேரம் மட்டும் அலுவலகம் சென்றுவிடுவாள். மதிய வேளையில், அகல்யாவுடன் தேர்விற்காக தன்னை தயார் செய்தாள்.

இரண்டு மாதங்களில் வந்திருந்த கால்ஃபரில், அகல்யா, அனன்யா இருவரும் அப்ளை செய்தனர். கடும் பயிற்சிக்குப் பின் இருவரும் தேர்வு எழுதியிருந்தனர்.

காலை, மாலை என இரண்டு தேர்வுகளை எழுதிவிட்டு அகல்யா தேர்வு முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அனன்யா, வழக்கம் போல தந்தையுடன் அலுவலகம் சென்று வந்தாள்.

ஆறு மாதங்கள் கழித்து வந்த தேர்வு முடிவில் இருவருமே தேர்வாகி இருந்தனர். அகல்யாவிற்கு அதே மாவட்டத்தின் ஒரு பிளாக்கில் பணி நியமிக்கப்பட்டிருக்க, மிகவும் மனமகிழ்ச்சி அடைந்திருந்தாள்.

அனன்யாவிற்கு, வெளிமாவட்டத்தில் பணிக்கான உத்தரவு வந்திருந்தது. வெளியூரில் தங்கி பணிபுரிய வீட்டில் மறுப்புத் தெரிவித்திருக்க… அப்பணியையைத் தொடரமுடியாமல் போனது.

அதனால் தந்தையுடனேயே சென்று அலுவலக பணியை மேற்கொண்டாள் அனன்யா. அகல்யா மட்டும் பணியில் சேர ஆயத்தமானாள்.

மேட்டுப்பாளையம் அருகில் இருக்கும் பிளாக்கில் பணியமர்த்தப்பட்டு பணியில் சேர்ந்திருந்தாள், அகல்யா. முதலில் அனன்யாவின் வீட்டில் இருந்து இரண்டு மாதங்கள் பணிக்குச் சென்று வந்தாள்.

அலைச்சல் மட்டும் பணிப்பளு காரணமாக, அதன்பின் பணிபுரியும் பிளாக்கிலேயே வீடு வாடகைக்கு எடுத்து தங்கிவிட்டாள், அகல்யா.

அனன்யாவும் அகல்யாவை வற்புறுத்தவில்லை. அவளின் மனம் போல் எடுத்த முடிவுகள் எதையும் மறுக்கவும் இல்லை. அகல்யா சென்ற ஓரிரு மாதங்களில், தேவகி மகளின் திருமணப் பேச்சை எடுத்திருந்தார்.

பெரியதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அனன்யா, தந்தை, தாயின் முடிவே தன் முடிவு என்று கூறியதோடு, தனது தந்தையின் தொழில்சார் உள்ளூர் நண்பர்களின் குடும்பங்களை விடுத்து வெளியூரில் மாப்பிள்ளை பார்க்குமாறு கூறினாள்.

ஒருபுறம் மகள் திருமணத்திற்கு சம்மதித்தது மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் திருக்குமரன் கேட்டதை மகளிடம் கூறி மறுபரிசீலனை செய்ய கூறினார், ஈஸ்வரன்.

“அப்பா, நான் கிஷோர் அவங்கள அண்ணாணு கூப்டு பழகிட்டேன். அவங்கள போயி எப்டி கல்யாணம் பண்ண முடியும்! அதுவும் அவங்கள நான் சின்ன புள்ளைல பாத்தது!”

“வேணும்னா வீட்டுக்கு வரச் சொல்லி, சொல்லவா, உனக்கு பிடிச்சிருந்தா பாக்குறியா!”

“இல்லப்பா, அண்ணானு சொல்லிட்டு கண்ணானு எல்லாம்… என்னால யோசிக்க முடியாது!”, என்று தனது தந்தையிடமே கூறி சிரித்தவள்,

“அதனால நீங்க வேறவிங்க யாருனாலும் பாருங்க!”, என்று தனது முடிவில் மாறாமல் நின்றுவிட்டாள், அனன்யா.

ஈஸ்வரனுக்கு தனது மகளின் முடிவை திருக்குமரனிடம் தெரிவிக்க சற்று வருத்தமாக இருந்தது.

வருத்தம் இருப்பினும், விடயத்தைக் கூறினால்தான் கிஷோருக்கு அவர்கள் வேறு ஏதேனும் பெண் பார்க்க ஏதுவாக இருக்கும். இல்லையெனில் அனன்யாவை எதிர்பார்த்து கிஷோரின் திருமணம் தாமதமடையும். அதுபோன்ற சூழலை ஏற்படுத்த வேண்டாம், என எண்ணி குமரனை நேரில் சந்தித்து பேசியிருந்தார், ஈஸ்வரன்.

“அனி சின்னப் புள்ளைல… கிஷோர… அண்ணன்னு கூப்டு பேசுனத நினைச்சு… சங்கடப்படுது போல. இதுக்கு மேல… அவள சங்கடப்படுத்த வேணாம், வேற மாப்பிள்ள பாத்துக்கலாம் ஈஸ்வர்”, என திருக்குமரன் பெருந்தன்மையோடு ஒதுங்கிக் கொண்டார்.

“உன்ன என் சம்பந்தியாக்கிரலாம்னு சந்தோசமா இருந்தேன். இப்ப அனி ஒத்துக்காததால அவள மீறி ஒன்னும் செய்ய முடியல. நீ உனக்குத் தெரிஞ்ச இடங்கள்ல நல்ல மாப்பிள்ள இருந்தா சொல்லுப்பா பாப்போம்”, என்று தனது நண்பருடன் சேர்ந்து மகளுக்கு வரன் பார்க்க துவங்கியிருந்தார், ஈஸ்வரன்.

திருக்குமரனும், ஈஸ்வரனுக்கு உதவும் நோக்கில் தனக்கு மிகவும் நம்பிக்கையானவர்களின் பிள்ளைகளை அனன்யாவிற்காக, சிரமங்கள் பல இருந்தாலும், பல இடங்களில் விசாரித்து வரன்களை கொண்டு வந்தார்.

இறுதியாக, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோமொபைல் இன்ஜினியரான நவீனுக்கும், அனன்யாவிற்கும் திருமணம் செய்வதாக முடிவானது.

புகைப்படத்தில் பார்த்தபோதே ஊட்டி சுற்றுலாவின் முதல் நாள் இரவில், வேன் பழுதை நீக்க வந்த கனத்தில் கண்டிருந்த நேரத்தை நினைவு கூர்ந்திருந்தாள், அனன்யா.

காரியத்தில் கண்ணாக இருந்தவனை, நேரில் கண்டிருந்தவளுக்கு, தன்னையே சாட்சியாக கொண்டு, இதற்கு மேல் வேறென்ன விசாரிக்க வேண்டும் என தைரியமாக சரியென்று கூறியிருந்தாள், அனன்யா.

தோழிகளெல்லாம் அன்றைய தினம் இரவு முழுவதும் அவனைப் பற்றி சிலாகித்ததை எண்ணிச் சிரித்து, மனதில் மகிழ்ந்திருந்தாள்.

‘கருமமே கண்ணுணு இருக்குறானே, கண்ணுக்கு அழகழகா பொண்ணுக கண்ணு முன்னாலேயே இருக்குதுகனு சைடு வியூ கூட பாக்கலயே!’, என அன்று ஏங்கிய தோழி ஒருத்தியின் வார்த்தைகளை அசைபோட்டிருந்தாள்.

‘படிப்ஸ்ஸா இருந்து, இப்ப பழமாயிட்டு போல, அதான் கண்டுக்கல நம்ம’, என மற்றொருத்தி கமெண்டியிருந்தாள்.

‘விஸ்வமித்தரனயே வளைச்சவங்கடி… நம்ம இனம், இவனெல்லாம் எம்மாத்திரம்’, என வேறொருத்தி பேசியிருந்தாள்.

‘சிலது… பார்க்காத போது… போது… பாத்தானே ஆணு ஆணுன்னு… இருப்பானுங்கடி… எந்தப் புத்துல எந்தப் பாம்புனு நமக்கு இன்னும் தெரியாம இருந்தா, பச்ச மண்ணுங்க கண்ணுல மண்ணைத் தூவி சைலண்டா சைட் அடிச்சிருவானுங்கடி!’, என இன்னொரு அதிமேதாவி கூற

விடியும் வரை நவீனைப் பற்றிய விவாதங்களை… அந்நாளின் இரவு வேளையில் பேசிக் களைத்து உறங்கியதை அசைபோட்டபடியே… இந்நாளை கழித்திருந்தாள், அனன்யா.

பூ வைக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு, மஹாலில் விழா நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குமுன்பே ஒரு நாள் வீட்டிற்கு பெண் பார்க்க வந்திருந்தான் நவீன்.

இருவரின் கல்லூரிக் கல்வி நிலையங்கள் சார்ந்த விடயங்கள் பரிமாறப்பட்டது. தொழில்முறைகள் பேசினர்.

இருவருக்கும் காதல் என்ற உணர்வு இதுவரை வரவில்லை. ஆகையால், பெற்றோர்களின் சொற்படி திருமணம் நிச்சயிக்கப்பட, ஒருமனதாக மணமுடிக்க மனமுவந்து முடிவு செய்திருந்தனர், இருவரும்.

நவீன் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவன். அவனது கல்வி முழுவதும் கோவையில் இருந்திருந்தது.

அனன்யா கோவையில் பிறந்தவள். கல்வி பயின்றது, வேறு எதற்கும் வெளி ஊர்களுக்கு (மாவட்டங்களுக்கு) செல்லவில்லை என கூறியிருந்தாள்.

திருமண பந்தத்திற்குள் வர இருக்கும், இருவரும் தங்களது சில ஒற்றுமையை எண்ணி சிலாகித்திருந்தனர். திருமணத்திற்குப் பிறகும் இருவரும் கோவையில் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதில் அனன்யாவிற்கு வருத்தமே.

‘இந்த ஊர விட்டு… டூருக்கு மட்டும் தான் வெளியில போற மாதிரி இருக்கு’, என எண்ணியவளுக்கு இதற்கு மேல் பெற்றோரை துன்புறுத்த விருப்பம் இல்லை.

மறுக்கும் அளவிற்கு நவீனுடைய பின்னனி இல்லை. ஈஸ்வரனும் சுற்றிலும் விசாரித்து, அவருக்கு திருப்தி ஏற்பட்ட பிறகே முதல் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

இருவரின் அலைபேசி எண்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டு இருந்தது. நவீனை தனது கணவனாக ஏற்க, மனதை பக்குவப்படுத்த ஆரம்பித்திருந்தாள், அனன்யா.

என்ன பேசுவது என தெரியாமலேயே பேச ஆரம்பித்திருந்தாள். நவீனும் பெரும்பாலும் தொழில் சார்ந்த பணிகளில் இருப்பதால் கேட்ட வினாக்களுக்கு பதில் என்றளவில் இருந்தான்.
—————————

கோமதியும், திருக்குமரனும் விழாவிற்கு முன்பே வீட்டிற்கு வந்திருந்து அனைத்தையும் பொறுப்பாக நின்று செய்தனர். கோமதிக்கு, அனன்யாவை தங்கள் வீட்டு மருமகளாக எண்ணியிருந்ததால் வருத்தம் இருந்தாலும், “மருமகளாக வரவில்லை என்றால் என்ன!, இனிவரும் நாட்களில் மகளாக வீட்டிற்கு வந்து செல்” என்று அன்புக் கட்டளை இட்டிருந்தார்.

அனன்யாவிற்கும் சற்று சங்கடமாகிப் போனது. ‘அண்ணன் என்று அழைத்தோம் என்பது உண்மைதான். ஆனால் முகம் கூட நினைவில் இல்லாத அண்ணனை நம்மைத் தவிர யாரும் இப்படி மணக்க மறுத்திருக்க மாட்டார்களோ!’ என நினைத்திருந்தாள்.

கிஷோர், தனது பெரியம்மா, பெரியப்பாவின் பிள்ளை இல்லை. கோமதியை அத்தை என்றும், குமரனை மாமா என்றும் தானாக அழைத்த குழந்தையான அனன்யா, தன்னைவிட பெரியவனான கிஷோரை அண்ணா என்று அழைத்தது யார் கூறியும் அல்ல. இது யார் செய்த சதி?

விதியா?? இல்லை சதியா???
—————————-
எதையும் யோசிக்க பிரியப்படவில்லை அனன்யா. இன்னும் ஒரிரு மாதங்களில் திருமணம்.

ஆகையால், அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு, தனது திருமண வாழ்விற்கு தன்னை தயார் செய்ய ஆயத்தமாகியிருந்தாள், அனன்யா.
————————————

error: Content is protected !!